சொற்களும் வகைகளும். ஒரு மொழியை வளப்படுத்துவதற்கு மொழிபெயர்ப்புகள் தேவை. இச்சொல்லுக்கே மொழிபெயர்ப்பு, மொழிமாற்றம், மொழி ஆக்கம் எனச் சில சொற்கள் வழக்கில் இருக்கின்றன. மொழிபெயர்ப்பை விவாதிக்க வேண்டுமானால் திரும்பவும் இலக்கணத்திற்குள் செல்ல வேண்டும். சொற்களின் வகைகள் பற்றி விவாதிக்கவேண்டும். மொழிமாற்றம் செய்ய என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு இலக்கணம் சொல்லப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்ளவேண்டும். அதுமட்டுமே போதாது என்ற நிலையில் கூடுதலாகச் சிந்திக்கலாம் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம், சொற்களை வகைப்படுத்தும் பகுதியில் தமிழில் உள்ள சொற்களை இயற்சொல், வடசொல், திசைச்சொல், திரிசொல் என நான்காகவும், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்காகவும் வெவ்வேறு இடங்களில் பேசுகிறது. முதல் நான்கில் இயற்சொல்லையும் திரிசொல்லையும் மாற்ற வேண்டிய தேவையில்லை. அவை தமிழின் வேர்களைக் கொண்டவை. ஆனால் வடசொல்லும் திசைச்சொல்லும் தமிழ் வேர்கள் கொண்டவை அல்ல. அதனால் அதனை ஏற்காமல் தமிழ்ப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம். அந்தக் காலத்தில் தமிழுக்குள் வந்தவை வடசொற்கள் மட்டுமே. சம்ஸ்க்ருத வேர்கள் கொண்ட வடசொற்...