இதுதான் முதல் தடவை. கடந்த 15 ஆண்டுகளில் பல தடவை உள்நாட்டு விமானப் பயணங்களும் வெளிநாட்டுப் பயணங்களும் செய்துள்ளேன். விமானத்திற்குள் ஏற்றி உட்காரவைத்த பின் இறக்கிவிட்டது இதுதான் முதல்தடவை.
பல்கலைக்கழக வேலைகள், கல்விசார்ந்த பயணங்கள் என்றால் தனியாகவே பயணம் செய்வேன். அதிலும் தமிழக/ இந்திய பயணங்களில் எப்போதும் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்துக்கொள்வதில்லை. குறிப்பிட்ட பயணங்களோடு குடும்ப நிகழ்வுகள் அடுத்தோ, தொடர்ந்தோ வரும் சூழ்நிலையில் நானும் மனைவியும் சேர்ந்து போய்விட்டுப் பணி நேரத்தில் பிரிந்துவிடுவோம். ஆனால் வெளிநாட்டுப் பயணங்களில் அப்படி இருக்க நினைப்பதில்லை.
எனது அயல் பயணங்கள் என்பன பெரும்பாலும் கல்விப்பயணங்கள் தான். உலகத்தமிழ் மாநாட்டிற்காக மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்வது மூன்றாவது அயல்நாட்டுப் பயணம். 2011 இல் பல்கலைக் கழகத்தில் தொலைதூர மையங்களைச் சௌதி அரேபியாவின் தம்மாமிலும் ரியாத்திலும் ஆரம்பிக்க அனுமதிக்கலாமா என்று பார்க்கச் சென்ற ஒருநபர் குழுவுப் பயணம்தான் எனது முதல் வெளிநாட்டுப் பயணம்.