மகளிர் நிலை, பெண்கள் பங்களிப்பு எனப் பேசிக்கொண்டிருந்த காலகட்டம் தாண்டிப் பெண் இருப்பு, பெண் தன்னிலை உணர்தல், பெண் சமத்துவம் கோருதல், பெண்களின் தனித்துவமான உரிமைகள், பெண் தலைமை தாங்குதல் போன்ற கலைச்சொற்கள் விவாதச் சொல்லாடல்களாக நுழைந்ததுடன் பெண்ணியத்தின் வருகையின் அடையாளங்கள் உருவாகின. அந்தச் சொல்லாடல்கள் அதிகமும் வரலாற்றுக் காரணங்களையும் சமூகவியல் காரணங்களையும், பொருளியல் உறவுகளையுமே முதன்மைப்படுத்தி விவாதித்தன; விவாதிக்கின்றன. அவ்விவாதங்கள் ஒவ்வொன்றும் சமூக நகர்வின் காரணங்களைத் தர்க்கரீதியாக முன்வைக்கின்றன. அப்படி முன்வைக்கும்போது இயல்பாகவே பாலின எதிர்வுகளும் வந்துவிடும்.