தாய்(க்)கிழவி: கதாபாத்திரங்களால் பின்னப்பட்ட சினிமா.


சினிமாவின் வணிகவெற்றிக்கு உதவுவதில் முதல் இடம் வலுவான திரைக்கதையாக்கம். வலுவான திரைக்கதையாக்கத்தில் நாயகன் Xஎதிர்நாயகன் உருவாக்கப்பட்டு முரண்பாட்டை வளர்த்து உச்சநிலையில் நாயகன் வெற்றி பெற்றான் எனக் கட்டமைக்கப்பட்ட காட்சிகள் இருக்கும். முரண்பாட்டின் வளர்ச்சியை ஒற்றைக்காட்சியாக அமைக்காமல் காதல், காதலுக்கு எதிர்ப்பு, ரத்த உறவுகளிடையே பாசம், அப்பாசத்தில் உண்டாகும் விரிசல், கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தெரியாதவர்களின் தோல்வி, தோல்வியில் துவண்டவர்களுக்கு உதவி மீட்டெடுத்தல், இப்படிப் பல குணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்புக் கொண்ட நாயகப் பாத்திரத்தின் வெற்றி என்பது ஏற்கத்தக்க வெற்றியாகப் பார்க்கப்பட்டு திரளானா பார்வையாளர்களைச் சென்றடைகின்றது. இவ்வகைப்படங்களில் நாயக நடிகர்கள் நடித்து அவ்வெற்றியைத் தங்களின் நடிப்புக்குக் கிடைத்த வெற்றியாக முன்வைக்கின்றனர்.
எதிரெதிர் குணங்களைக் கொண்ட பாத்திர மோதல் மட்டுமே வெற்றிக்கான திரைக்கதை என்பதை நம்பாமல் வேறுவிதமான வெற்றிச் சூத்திரங்களும் தமிழ்ச் சினிமாவில் வெற்றி பெறுகின்றன. நாயக நடிகர்களின் வெற்றி அளவிற்கு இல்லையென்றாலும் அப்படங்களில் தரப்படும் பல்வேறு கருத்துக்களைத் தாங்கிய செய்திகளுக்காகவும் (Messages) அச்செய்திகள் சொல்வதற்காக உருவாக்கப்படும் நிகழ்வுகளுக்காகவும் கவனம் பெறுகின்றன. இத்தகைய படங்களில் நாயக நடிகர்கள் நடிப்பதில்லை. குணச்சித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிப்புக்கலைஞர்கள் பலரும் பங்கேற்று நடித்திருக்கின்றார்கள்.

இத்தகைய படங்களை இயக்குபவர்கள் புதியவர்களாக இருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் தான் வாழ்ந்த கிராமம்/ வட்டாரம்/ சாதி சார்ந்த அடையாளங்கள் சினிமாவில் பதிவாக வேண்டும் என்ற ஆசையும் விருப்பமும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இவர்களுக்குச் சினிமா என்பது காட்சிக்கலை அல்ல; முதன்மையாகக் கதைசொல்லும் வடிவம். சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கியுள்ள தாய்(க்)கிழவி அப்படியொரு சினிமா. தனக்குத் தெரிந்த ஒரு வயதான பெண்ணின் கதையைச் சொல்லியிருக்கின்றார். சினிமாவில் எப்படிக் கதை சொல்லவேண்டும் என்ற உத்திகள் சிலவற்றைக் கையாண்டு சொல்லியிருக்கின்றார் என்பது அதன் சிறப்பு.

மாறுபட்ட திரைக்கதை ஆக்கம்

‘ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாள்’ என்று மரபான கதைசொல்லிகள் சொல்லத்தொடங்குவதுபோலத் தோன்றினாலும், இதன் இயக்குநர் பாத்திரங்களை அதன் குணாம்சத்தோடு அறிமுகம் செய்வதின் வழியாகத் திரைக்கதையாக்கத்தைச் செய்துள்ளார். மையப்பாத்திரமான பவுனுத்தாயை அறிமுகம் செய்து முடித்துவிட்டு இருவகைக் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வதன் மூலம் திரைக்கதையில் ஒரு முடிச்சை – முரண்பாட்டை உருவாக்கியுள்ளார்.

உசிலம்பட்டி வட்டாரத்தில் இருக்கும் காடுபட்டி கிராமத்தில் ஒரு வயதான கிழவி இருந்தாள்; அவள் பெயர் பவுனுத்தாயி; கந்து வட்டிக்குக் கடன் கொடுத்து கறாராக வட்டி வசூலித்துச் சிக்கனமாகக் குடும்பம் நடத்தும் கறார்ப் பேர்வழி; அவள் கறார்ப் பேர்வழி மட்டுமல்ல அதிரடியாக நடவடிக்கையில் இறங்கும் அடாவடிப் பேர்வழியும் என்று சொல்கதையாகச் சொல்வதுபோல மையப் பாத்திர அறிமுகம் துண்டுதுண்டாகக் காட்சிப்படுத்தப்படுகின்றது. அந்தக் காட்சிகளின் வழியாக ஊர்ச்சனங்களின் அறிமுகமும், அந்த ஊர்ச் சனங்களோடு அவளுக்கு இருக்கும் உறவுநிலையும் நகர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தில் இரண்டு வகையான பாத்திரங்கள் அறிமுகமாகின்றார்கள். ஒருவகையினர் பவுனுத்தாயின் வாழ்க்கையோடு நேரடியாகத் தொடர்புடையவர்கள்; உறவினர்களும் கூட. ஆனால் அவள் இருக்கும் ஊரில் இருப்பவர்கள் அல்ல; அந்த வட்டாரத்தில் இருப்பவர்கள். இன்னொரு வகையினர் நேரடியாகத் தொடர்பில்லாதவர்கள். அந்த வட்டாரத்துக்கு வெளியில் இருப்பவர்கள்.

உறவினர்களில் முதல் அறிமுகம் பவுனுத்தாயின் மகள் வயிற்றுப்பேரனும் அவளோடு தங்கியிருக்கும் மகள் சுருளியும் (ரேச்சல்) அறிமுகம் ஆகின்றார்கள். கல்யாணத்தில் போடுவதாகச் சொன்ன 25 பவுன் நகையில் மூன்று பவுனைப் போடாததால் புருசனைப் பிரிந்து வாழாவெட்டியாக வந்து அம்மாவோடு இருக்கிறாள் சுருளி. இருவரின் அறிமுகத்தைத் தொடர்ந்து அறிமுகமாகும் பாத்திரம் பென்னிகுயிக் (மூனீஸ்காந்த்). நாற்பது வயதாகியும் பெண் கிடைக்காமல் ‘மணமகள் தேவை’ யையும் தரகர்களையும் நாடிக்கொண்டிருப்பவன். அவனை அடுத்து, வேலை வெட்டிக்குப் போகாமல் சாராயத்தைக் குடித்துவிட்டுக் கருப்பசாமி கோயில் மரத்தடியில் கால்மேல் கால் போட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் சோம்பேறி எனக் குறிப்பான சில பாத்திரங்களும் அறிமுகமாகின்றன. கல்யாணப்பத்திரிகை வைப்பவர்களின் வழியாக அறிமுகமாகும் ஊரும் பவுனுத்தாயையும் பென்னிகுயிக்கும் கதையைக் கடைசிவரை நகர்த்தப் போகின்றவர்கள்.

காடுபட்டியைத் தாண்டிக் கருமாத்தூர், செக்கானூரணி, உசிலம்பட்டி என ஊர்ப்பெயர்களையும் பேருந்துநிலையங்களையும் காட்டும்போது கூடுதலாக மூன்று பாத்திரங்களும் அவர்களின் அன்றாடப்பிழைப்பும் அறிமுகமாகின்றன. கருமாத்தூரில் இருப்பவன் நல்லது கெட்டதுக்குப் பாட்டுப்போடும் உப்பிலியான் சவுண்டு சர்வீஸ்காரன்; (சிங்கம்புலி) கமல்ஹாசன் பாடல்கள் விரும்பி. செக்கானூரணி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் விஜயன்(அருள்தாஸ்) ; மனைவி நகையை அடகுவைத்து ஆட்டோ வாங்கி ஓட்டும் வாழ்க்கை அவனுடையது. உசிலம்பட்டியில் இருப்பவன் பூக்கட்டத் தெரியாமலேயே பூக்கடை போட்டுப் பிழைப்பு நடத்தும் செல்வன்(பாலசரவணன்). இவர்களைத் தவிர அவரின் குணவியல்போடு அறிமுகமாகும் பாத்திரம் இரண்டு இட்லி (முத்துக்குமார்) எனப் பட்டப்பெயரோடு வரும் ஜவஹர்லால் நேருவும் அவரது மகன் ராஜீவ்காந்தியும். (இந்தப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள நடிப்புக்கலைஞர்கள் இயக்குநரின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றும் விதமாக நடித்துள்ளார்கள்)

இவர்கள் எல்லாம் பவுனுத்தாயின் மகன்களும் மருமகனும் என்ற பின்னணியை அவிழ்க்கக் காரணம், பவுனுத்தாயிக்கு வந்த அந்த நோய்; பெருஞ்சுமைகளைச் சுமந்துசுமந்து வேலை செய்ததால் கழுத்து நரம்பு சுருண்டதால் உருவான பக்கவாத நோய். பக்கவாதத்தில் விழுந்தவள் பிழைக்கமாட்டாள் என்ற முடிவில் அவளிடமுள்ள சொத்துக்களுக்காக ஒன்று சேரும் மகன்களும் மருமகன்களும் எடுக்கும் முடிவுகள் திரையின் திருப்பமாக அமைந்து நிற்கின்றது. அந்தத்திருப்பத்தை மேலும் நகர்த்துவதற்குப் புதுப்புதுக் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கின்றார் இயக்குநர். அவர்கள் எல்லாம் பவுனுத்தாயோடு நேரடியாகத் தொடர்பில்லாத – உசிலம்பட்டி வட்டாரத்தைத் தாண்டிய பகுதியிலிருந்து வருகின்றவர்களாக இருக்கின்றார்கள். அப்படி அறிமுகமாகும் பாத்திரங்களில் கோல்டுகுமார் (இளவரசு) தொலைக்காட்சியில் காதுகேளாதவர்களுக்குச் செய்தி வாசிப்பவராக வருபவர் ( ஜார்ஜ் மரியான்) முக்கியமானவர்களாகச் சொல்ல வேண்டும். மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் துணை மருத்துவர்களும். அங்கு பணியாற்றும் செவிலியர்களும் கூட பல படங்களில் காட்டப்படுவதுபோல வந்து போகும் பாத்திரங்கள் அல்ல. இவர்களைத் தாண்டி மையக் கதைக்கே தொடர்பில்லாத நிகழ்வில் இடம்பெறும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், அந்த ஆம்புலன்ஸில் ‘நல்ல நேரத்தில்’ கொல்லப்படும் பெரியவரும்கூட முக்கியமான பாத்திரங்களாகவே படத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் பாத்திரங்கள் ஒவ்வொன்றின் வழியாகவும் படத்தில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களின் மனநிலை மாற்றத்தைச் செய்வதோடு, பார்வையாளர்களுக்கும் தான் சொல்ல நினைத்த செய்திகளையும் உணர்வுகளையும் திரட்டித் தருகின்றார்.

******

தனது நகைக்கடையில் சிறுகச்சிறுகச் சீட்டுப்போட்டு 160 சவரன் நகையைச் சில நாட்களுக்கு முன்புதான் வாங்கிவந்தார் பவுனுத்தாயி என்று சொல்லும் கோல்டுகுமாரின் கூற்று பென்னிகுயிக் வழியாக மகன்களுக்கும் மருமகனுக்கும் கடத்தப்படும்போது, மொத்தமும் எதிர்நிலைப்பயணமாக மாறிவிடுகின்றது. கோல்டுகுமார் சொன்னதை முதல் தகவலாக அறிந்து பென்னிகுயிக்கின் ஆலோசனைப்படி ஒவ்வொன்றாக நடக்கின்றது. ஆனால் அவை எதுவும் தர்க்கப்படி நடக்கக்கூடிய நிகழ்வுகளாக இல்லை. அந்த நகையை அடைவதற்காக மகன்களும் அவரது மனைவிகளும், மருமகனும் எனப் பவுனுத்தாயின் உறவினர்களிடம் இருக்கும் பணத்தாசையையும் முட்டாள் தனத்தையும் காட்டுவதாக நினைத்துப் பொருத்தமற்ற நகைச்சுவைக்காட்சிகளை அடுக்கடுக்காக வைத்துச் சலிப்பூட்டுகின்றார் இயக்குநர். தொலைக்காட்சியில் காதுகேளாதவர்களுக்குச் செய்தி வாசிப்பவரை (ஜார்ஜ் மரியான்) அழைத்து வருவது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று.

நகைச்சுவைக்காட்சிகளை முடிவுக்குக் கொண்டுவந்து தீவிரத்தன்மைக்குத் திரும்பும் நிகழ்வாக அமைவது ஆம்புலன்ஸ் காட்சி. ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னர் பிணமாகக் கொண்டு செல்ல வேண்டும் என நினைக்கும் உறவினர் மனநிலை பவுனுத்தாயின் கடைசி மகனிடம் ஏற்படுத்தும் மனமாற்றத்தின் காரணமாக பவுனுத்தாய் நலம் பெற்றுத் திரும்புகின்றார். 160 சவரன் நகை வாங்கி வந்தாள் பவுனுத்தாயி என்று சொல்லும் கோல்டுகுமார் ஒரு கேதவீட்டுப் பைத்தியம் என்று சொல்லும்போது மொத்தமும் அபத்தமாகவும் அதிர்ச்சியாகவும் நிற்கின்றது. அதுவே உண்மை என்பதாகவும் அந்த வீடும் கொஞ்சம் பணமும் நகையும் மட்டுமே அவளிடம் இருந்தன என்று முடித்திருந்தால் கூடச் சரியாகவே இருந்திருக்கும்.

கைவசம் இருக்கும் சொத்தை மகன்களுக்குத் தராமல், மருமகள்களுக்குத் தருவதற்கு முன்னால் பெண்கள் அவரவர் காலில் நின்று பணம் சம்பாதிக்க வேண்டியதின் முக்கியத்துவத்தையும் படிக்க வேண்டியதின் அவசியத்தையும் விரிவாக எடுத்துச் சொல்லிப் புரியவைக்கின்றாள். பேசியபடி மூன்று சவரன் நகைக்காகத் தன் மகளை வைத்து வாழாத மருமகனிடமிருந்து மகளைப் பிரித்து பென்னிகுயிக்கு மறுமணம் செய்து வைக்கின்றாள். இந்தப் போதனைகளைச் சொல்லும் தன்னிலை கொண்டவளாக அந்தப் பாத்திரம் முதலில் உருவாக்கப்படவில்லை. எல்லாவற்றையும் ‘தான்’ என்ற தன்முனைப்பில் செய்யும் ஒரு பாத்திரத்திற்குள் இத்தகைய சீரிய எண்ணங்கள் இருந்தன என்பதற்கான ஒரு காட்சியைக் கூட இயக்குநர் வைக்கவில்லை. ஊரார் ஒவ்வொருவரிடமும் அவள் காட்டியது அடாவடித்தனமும் அதிகாரமும் மிரட்டலும் தான். திரும்பி வந்த பவுனுத்தாய் சொல்லும் பழைய கதையும் நிகழ்வுகளும் படத்தின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பவுனுத்தாயோடு பொருந்தாமல் இருக்கின்றன. கந்து வட்டிக்குப் பணம் கொடுத்துச் சேர்த்த பணத்தில் வாங்கிய 300 சவரன் நகைகள் என்று காட்டவேண்டிய தேவை இல்லை. அந்தப் பாத்திர உருவாக்கத்தில் ஓர்மையும் பொருத்தமும் இல்லை என்றாலும், அவள் வாயிலிருந்து வரும் நம்பிக்கையூட்டும் சொற்களும் போதனைகளும் கிராமப்புறப் பெண்களுக்குத் தேவையானவை என்பதையும் மறுக்க முடியாது. எந்தத் தர்க்கமும் இல்லையென்ற போதிலும் அந்தப் பாத்திரத்தை மனம் ஏற்றுக்கொள்ளவே செய்தது. அத்தோடு எனது ஏற்பில் இன்னொரு காரணமும் இருக்கின்றது.

அறிந்த மனிதர்களின் சாயல்கள்

படத்தின் காமிரா வழியாக அறிமுகமாகும் இந்தக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ள நடிகர்களின் முகம் காட்டுவதைவிட, அவர்களுக்குச் சிவகுமார் முருகேசன் எழுதி தந்துள்ள வசனங்களும், அவற்றை அவர்கள் பேசுகின்ற முறையும்தான் அவர்களின் பாத்திரவார்ப்பை உருவாக்குபவை. சகமனிதர்களோடு உரையாடும்போது நேரடியாகக் கண்களைப் பார்த்துப் பேசாத உடல்மொழி. அதன் மூலம் எதிரில் இருப்பவரைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்ற மனநிலை வெளிப்பாடு. அதன் மூலம் உருவாவது தெனாவெட்டும் நக்கலும். எதிரில் இருப்பவர்களின் மறுமொழிக்கு உடனடியாக உணர்ச்சி வசப்பட்ட சொற்களால் தரும் பதில்கள். அதில் வெளிப்படும் உயர்த்தப்பட்ட குரலும் அதனால் அதிரும் உடலும் என்பது இன்னொரு வெளிப்பாடு. இந்த வெளிப்பாடுகளோடு கூடிய கதாமாந்தர்களால் நிரம்பியுள்ளது தாய்க்கிழவி. ஒரு சினிமாவில் உருவாக்கப்படும் பாத்திரங்களின் ஒவ்வொரு வெளிப்பாடும் நகர்வுகளும் அவர்கள் இயங்கும் வெளி சார்ந்தும் (இடம்) படத்திற்குள் காட்டப்படும் காலம் சார்ந்தும் ஓர்மையுடன் இருக்கவேண்டும். பாத்திரங்களை அறிமுகம் செய்யும்போது கடைப்பிடித்த அந்த ஓர்மையைப் பெரும்பாலான பாத்திரங்களில் சரியாகவே செய்துள்ளார். ஆனால் முதன்மைப்பாத்திரமான தாய்கிழவியை உருவாக்குதில் தவறவிட்டுள்ளார் இயக்குநர். இந்தப் பாத்திரங்களின் சாயலில் உள்ள மனிதர்களை மட்டுமல்ல; அவர்கள் உலவும் இடங்கலையும் நான் அறிவேன்.

பவுனுத்தாயியின் புகுந்த வீட்டுக்கிராமமாகச் சொல்லப்படும் காடுபட்டிக்குப் பக்கத்திலிருக்கும் உசிலம்பட்டியிலிருந்து 12 மைல்தூரத்தில் இருக்கின்றது நான் பிறந்த கிராமம். இப்போது குடியிருக்கும் திருமங்கலத்திலிருந்து 10 கிமீ. தூரத்தில் இருக்கின்றன கருமாத்தூரும், செக்கானூரணியும். இந்த ஊர்களுக்குப் போகும் சாலைகளில் தான் எனது பள்ளிக்கால, கல்லூரிக்காலப் பயணங்கள் எல்லாம் இருந்தன. இப்போதும் அந்தச் சாலைகளில் உள்ள கிராமங்கள் வழியாகவே மிதிவண்டி ஓட்டுகின்றேன்; உடல் பயிற்சிக்காக நடக்கின்றேன். அந்தக் கிராமங்களிலிருந்து வரும் காய்கறிகளை வாங்கிக் கொள்கின்றேன். இந்தக் கிராமங்களிலிருந்து திருமங்கலத்தில் குடியேறிவிட்ட பெண்களும் ஆண்களும் தான். மீன், கோழி, ஆட்டுக்கறி என வெட்டித்தருகின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இதே உச்சரிப்புடன் பேசிடும் மனிசிகளும் பையன்களுமே. சின்னதும் பெரியதுமான அந்தக் கடைகளின் உரிமையாளர்களில் பெண்களே அதிகம். அவற்றின் அருகிலேயே தள்ளுவண்டிக் கடைகளாக நிற்கும் இட்லிக்கடைகளிலும் பணியாரக்கடைகளிலும் நடக்கும் வியாபாரம் பெண்களின் ஆளுமை வெளிப்பாடு. முறுக்கு, அதிரசம், அச்சுமுறுக்கு, மிக்சர், சேவு என அங்கேயே தயாரித்துப் பொட்டணம் போட்டுத் தரும் கடைகளையும் பார்க்க விரும்பினால் திருமங்கலத்திற்கு வரலாம். அந்தக் கடைகளுக்குக் கடன் தந்து வட்டி வாங்க வரும் பவுனுத்தாயிகளையும் கூடச் சந்திக்கலாம்.
***** 
நானறிந்த வெளிகளில், எனக்குத் தெரிந்த மனிதர்களின் சாயலில் உருவான பாத்திரங்களோடு கூடிய இந்தப் படத்தை  வட்டார சினிமா என்ற வகைப்பாட்டிற்குள் வைத்துப் பேசலாம். அதே நேரம்  சில கேள்விகளும் எழுகின்றன. 
ஒரு கிராமம் அல்லது ஒரு வட்டாரம் அல்லது ஒரு சாதிக்குள் நடக்கும் நிகழ்வுகளைச் சினிமாவாக்க நினைத்து இயக்குநர்கள் அந்த சினிமாவைத் தமிழ்நிலப்பரப்பின் பொதுத்தளத்திற்கு நகர்த்துவதற்கு முயற்சி ஏன்  செய்வதில்லை. ஏதாவதொரு பாத்திரத்திற்குள் இருக்கும் பொருட்படுத்தத்தக்க குணத்தை முன்வைத்து அந்தப் பாத்திரத்தைக் கொண்டாடத்தக்க பாத்திரமாகவும் பண்பாட்டு அடையாளமாகவும்  காட்டி முடித்துக் கொள்கின்றார்கள். அதை முழுமையான நகைச்சுவைக் காட்சிகளுக்குள் வைக்கவேண்டுமெனத் தோன்றுவது ஏனென்று தெரியவில்லை.

 தேனி மாவட்டக் கிராமம் ஒன்றின் பின்னணியில் எடுக்கப்பட்ட 'தண்டட்டி' படமும் இந்த வகையான படம் தான். ரோகிணி -பசுபதி நடிப்பில் வந்த அந்தப் படமும்   நகைச்சுவைக் காட்சிகள் என்ற வெளிப்பாட்டு முறையால் தீவிரமான படமாக ஆகாமல் போனது.  அந்தப் படத்தை இயக்கிய சங்கையாவும் அதில் அறிமுக இயக்குநர் தான்.  

 

 பின் குறிப்பாக ஒரு தகவல்
 
தமிழ்நாவல்கள் பற்றி நாவல் என்னும் பெருங்களம் என்றொரு பத்தித்தொடரைத் தீராநதி இதழில் எழுதினேன். அந்தத்தொடரில் கி.ராஜநாராயணனின் கோபல்லகிராமம் நாவல் பற்றி எழுதிய கட்டுரைக்கு வைத்த தலைப்பு - நான் அறிந்த மனிதர்களும் எனக்குத் தெரிந்த கதைகளும். அந்த நாவலில் கி.ரா. எழுதிக்காட்டிய மனிதர்களும் அவர்களைப் பற்றிய கதைகளும் நாவலை வாசிப்பதற்கு முன்பே கேட்ட கதைகள்; பார்த்த மனிதர்கள். அதேபோல் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கியிருக்கும், தாய்க்கிழவி படத்தில் வரும் பாத்திரங்களும் அவர்களின் இயல்பும் நான் பார்த்த மனிதர்களின் சாயலில் இருக்கின்றன. அதனால் இந்தப் படத்திற்கு எழுதும் இந்தக் கட்டுரைக்கும் அந்தத் தலைப்பே முற்றிலும் பொருத்தமானது என்று தோன்றுகின்றது. படத்தின் கட்டமைப்பும் கூடக் கோபல்லகிராமம் நாவலின் நெகிழ்ச்சியான கட்டமைப்பை ஒத்ததாகவே இருக்கின்றது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்