இரட்சிப்பின் உடலாக மாற்றப்படும் சீலியின் சரீரம்


நடப்பு வாழ்க்கை உருவாக்கி அளிக்கும் சிக்கல்களும் முரண்பாடுகளும் கேள்விகளாக நிற்கும்போது விசாரணைகள் தொடங்குகின்றன. அவற்றிற்கான விடைகளைச் சொந்த வாழ்விலிருந்தும், சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலிருந்தும் கண்டடைந்து அவற்றின் போக்கில் விளக்கம் ஒன்றை முன்வைக்கும் கதைகள் அனுபவவாதப் புனைவுகளாக அடையாளம் பெற்றுக்கொள்கின்றன. அதே முரணையும் சிக்கலையும் கொண்ட முடிச்சுகளும் வகைமாதிரிகளும் தொன்மங்களிலும் வரலாற்றிலும் கிடைக்கின்றபோது அதன் சாயலில் புனைவுகள் உருவாக்கப்படுவதும் உண்டு. புனைகதைக்குள் இடம்பெறும் பாத்திரப்பெயரோ, நிகழ்வுப் பெயரோ,அடிக்கருத்தை முன்வைக்கும் சொற்கூட்டமோ, உரையாடலின் வீச்சோ அந்தக் குறிப்பிட்ட தொன்மநிகழ்வையோ, வரலாற்று நிகழ்வையோ நினைவுபடுத்திக் கதையை அதன் போக்கில் வாசிக்கச் செய்துவிடும்.
டி. தர்மராஜ் எழுதியிருக்கும் சீலியின் சரீரம் (கிழக்கு டுடே இணைய இதழ்) கதையின் நேரடி நிகழ்வுகள் நிகழ்காலத்து நிகழ்வுகளாகவே இருக்கின்றன. ஆனால் முழுமையும் கடந்த காலத்திற்குள்ளான பயணத்தையே வாசிக்கத் தருகின்றது. கடந்தகாலத்திற்குள் போனாலும் அது வரலாற்றுக்காலம் அல்ல. கதையின் மையப்பாத்திரமான அருட்பணியாளரின் பள்ளிப்பருவத்து நினைவுகள் வரை பின்னோக்கிப் போயிருக்கிறது. கதைக்குள் இருக்கும் ‘வியாகுல மாதா’ ‘வியாகுலமேரி’ என்ற பெயர்கள் தொன்ம நினைவுகளின் அடுக்குக்குள் நகர்த்தும் வேலையைச் செய்து கதை வாசிப்புக்கு இன்னொரு தளத்தை உருவாக்குகின்றன.

******

அகவுலகத்தைப் புனைதல்

பொதுவெளியில் இயங்குவதற்கும் அந்தரங்கத்தில் இயங்குவதற்குமான வேறுபாடுகள் நிறைய உண்டு. ஒவ்வொரு மனித உயிரியும் அந்தரங்க வெளியின் இயக்கத்தைப் பொதுவெளியில் காட்டிக் கொள்ள நினைப்பதில்லை; மறைக்கப்பட வேண்டிய ரகசியமே அந்தரங்கம் என்ற நம்பிக்கை இப்போதைக்கும் மாறப்போவதுமில்லை. சாதாரணர்களின் வாழ்க்கையையே நானும் வாழ்கிறேன். எனது பணி காரணமாக விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்கிறேன்; கட்டுப்படுகிறேன் என்று காட்டிக்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர்.பொதுவெளியில் வேறுபாடுகள் அதிகமில்லாமல் எல்லோரின் அடையாளங்களும் போலவே என்னுடையதும் இருக்கிறது எனக்காட்டிக்கொள்ளும் ஒவ்வொருவரின் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது. அதில் சாதாரணர்களும் அடங்குவர்.

சாதாரணர்களுக்குப் பொதுவெளியில் சிக்கல் இல்லை என நினைப்பதின் இன்னொரு வடிவமே அந்தரங்க வெளியில் எந்த நிர்ப்பந்தங்களும் இல்லை என நம்புவதும் ஆகும். அந்தரங்கத்தை வெளிப்படையாக ஆக்காதவரை கட்டுப்பாடுகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு கணமும் வேறுவேறு வெளிப்பாடுகளில் இருந்து பார்க்கும் ஆசையை நிறைவேற்றிக்கொள்ளத் துடிக்கிறது. இப்படித் துடிப்பது மனதா? உடலா? என்பது விடைதெரியாத குழப்பம்.

ஒருவரது இயக்கம் என்பதைத் தீர்மானிப்பதில் அவரது உடல் உருவாக்கும் எல்லா வகை மொழிகளுக்கும் -பேச்சுமொழி, எழுத்துமொழி, உடல்மொழி என எல்லாவற்றிற்கும் பெரும்பங்குண்டு. மொழியையே பயன்படுத்தாத அன்றாடக் கடமைகளும்கூட ஒருவரது இயக்கம்தான். உணவுப்பழக்கம், உடுத்தும் ஆடைகளின் தெரிவு, வாழும் இடத்தின் அமைப்புகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் என எல்லாம் இணைந்ததுதான் ஒருவரின் இயக்கம். பொதுவெளியில் ஒருவர் தன்னடையாளமாக -இயக்கமாகக் காட்டிக்கொள்ளும் செயல்களையே அவரது இயல்பாக நாம் நம்புகிறோம். மதிக்கிறோம்; கொண்டாடுகிறோம். ஆனால் பொதுவெளியைத் தாண்டி அந்தரங்க வெளியில் அவரது தன்னிலை வேறாக இருக்கும் என்பதை உளவியல் அறிவின் கண்டுபிடிப்பாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உளவியல் அறிவின் விவரிப்புகளும் விளக்கங்களும் அறியாதவர்களுக்கும் தெரியும். அவர்களின் அந்தரங்கச் செயல்பாடுகளும் வெளிப்பாடுகளும் பொதுவில் இருப்பதைப் போல இருப்பதில்லை; வேறொன்றாக இருக்கின்றன என்பது. ஆனால் அதைச் சொல்லிக்கொள்ள நினைப்பதில்லை.

பொதுவெளியும் அந்தரங்கமும் வேறல்ல; இரண்டும் ஒன்றே எனக் காட்டிக் கொள்ள விரும்பும் மனம் தொடர்ந்து தற்சோதனைச் செய்கிறது. அந்தரங்கத்தின் செயல்களைப் பாவமாகக் கருதும் நிலையில் அதிலிருந்து மீள்வதற்காகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள நினைக்கிறது. குறிப்பாகத் தனது உடலைக் கட்டுப்படுத்திக்கொள்ள நினைக்கிறது. காந்தியின் தற்சோதனைகள் இங்கே நினைக்கப்படவேண்டியவை. கட்டுப்படுத்த முடியாத உடலின் தேவைகளே பாவச்செயல்கள் எனச் சொல்லப்பட்ட -கற்பிக்கப்பட்ட போதனைகள் காரணமாக உடலின் இரண்டக நிலையின் மீது அசூயையும் வெறுப்பும் கொள்கின்றது மனம். அத்தகைய பாவச்செயல்களில் முதன்மையானதாகச் சமயங்கள் முன்வைப்பது காம வெளிப்பாடு. எதிர்பாலின உடலின் மீது கொள்ளும் இச்சையும் அதனை அடைய எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் முதல் பாவங்கள்.



உடல் எப்போதும் பொதுவெளிக்கானதல்ல; அந்தரங்க வெளிக்கானது என்ற நம்பிக்கையை -கட்டுப்பாட்டை– ஒழுக்கத்தைச் சமயவிதிகள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. ஒழுங்குபடுத்தப்பட்ட காமத்தின் அடையாளமாக இருப்பது குடும்பம். குடும்ப அமைப்பை உருவாக்கி அதன் வழியாகக் காமத்தைத் தணித்துக்கொள்ள அனுமதிக்கும் சமயங்கள், அதனையும் கூட வெளிப்படையானதாக அங்கீகரிக்காமல், அந்தரங்கச் செயல்பாடாகவே அங்கீகரிக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட குடும்ப அமைப்புக்குள் இருக்கும் கணவன் – மனைவி என்ற பாத்திரங்களும் பொதுவெளியில் தங்கள் உடலைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவே வலியுறுத்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு அதிகம் வலியுறுத்துகின்றன. அவற்றின் வெளிப்பாடுகளே மரபான திருவிழாக்கள் தொடங்கி நவீனவாழ்க்கைக்குள் வந்துள்ள திரையரங்குகள், ரயில், பேருந்து போன்ற பொதுப்போக்குவரத்து களிலும் பெண்களுக்கெனத் தனி இருக்கைகள் அடையாளம் காட்டப்படுகின்றன; தெய்வத்தின் முன்னாலும் தனி வரிசைகள், தனி இருக்கைகள். இவற்றின் பருண்மையான வெளிப்பாடாக முழு உடலை மறைக்கும் முக்காடு, பர்தா போன்ற ஆடைக்கட்டுப்பாடுகள் வரை நீள்கின்றன.

குடும்ப உறவுக்குள் நுழையத் தடை செய்யப்பட்ட/ தடை செய்துகொள்ளும் தவசிகள், துறவிகள், சாமியார்கள்,பாதிரிகள், போதகர்கள் தொடர்ந்து தங்களைத் தாங்களே கண்காணித்துக் கொள்கிறார்கள், அது ஒருவிதத்தில் சமூகத்தின் கண்காணிப்பிலிருந்து தப்பிப்பதற்காகச் செய்வதாகத் தோன்றக்கூடியன. மறைக்கப்படாத எதிர்ப்பால் உடல்கள் காமமென்னும் பாவச் செயலைத் தூண்டுபவை என்ற அடிப்படையில் எழுதப்பெற்ற கதைகள் எல்லாக்காலங்களிலும் இருந்துள்ளன. புராணங்களாகவும் காப்பியங்களாகவும் எழுதப்பெற்று நீதிபோதனைகளாக ஆக்கப்பட்ட கதைகளை, நவீன இலக்கியம் உளவியல் சிக்கலாக முன்வைக்கிறது. சமய நம்பிக்கைகளும் போதனைகளும் பாவமாகவும் தண்டனைக்குரிய குற்றமாகவும் முன்வைத்த காமத்தையும் காமஞ்சார்ந்த மீறலையும் இயல்பான உடலின் தேவைகள் என முன்வைக்கின்றன. இத்தகையதொரு சொல்லாடல் நகர்வுக்குள் விவாதிக்கவேண்டிய கதையாக டி.தர்மராஜின் சீலியின் சரீரம் கதையை வாசிக்கத்தூண்டுகிறது அவரது சொல்முறை.


****************************

சீலியின் சரீரம்-  கட்டமைப்பு

சீலியின் சரீரம் எனத் தலைப்பிடப்பட்டுள்ள கதையின் ஒற்றை நிகழ்வு மன்றாட்டு. மன்னிக்கத்தக்க செயல்களையே தான் செய்துள்ளதாக நம்பும் பாதிரியார் பாக்கியராஜின் மன்றாட்டே கதையின் ஒற்றை நிகழ்வு. அந்நிகழ்வினூடாக வந்து போகும் முன் நிகழ்வுகளும் இப்போதைய இருப்பும் அவரது தன்வரலாறுபோல விவரிக்கப்படுகின்றன. கதை இப்படித் தொடங்குகிறது:



பாவமன்னிப்புக் கூண்டின் ‘பாதிரியார் இருக்கையில்’ சங்கோஜத்துடன் உட்கார்ந்திருந்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அலெக்ஸ் மாதாபிள்ளை. தங்கச் சிலுவை பொறித்த மஞ்சள் நிற வஸ்திரப்பட்டி அவர் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கூண்டுக்கு வெளியே, பாவமன்னிப்பு கேட்கிறவர்களின் இடத்தில், பாதிரியார் முழங்காலிட்டு அமர்ந்திருந்தார். இதை யார் பார்த்தலும் நிச்சயம் அதிர்ச்சி அடைவார்கள். நல்லவேளையாக, அந்த நேரத்தில் இறைமக்களில் யாரும் கோவிலுக்குள் இல்லை. இனிமேலும் வந்து விடாதபடிக்கு எல்லாக் கதவுகளும் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தன.

இது கதையின் தொடக்கம். தொடக்க நிகழ்வில் இடம்பெறும் பாத்திரங்கள் இரண்டு பேர். ஒருவர் பாதிரியார் பாக்கியராஜ். இன்னொருவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அலெக்ஸ் மாதாபிள்ளை. இருவரும் இடம் மாறியிருக்கிறார்கள். வழக்கமாகப் பாவமன்னிப்பு வழங்கும் இடத்தில் இருக்கவேண்டிய பாதர் பாக்கியராஜ் மன்னிப்பு வேண்டும் இடத்தில் இருக்கிறார். அவரது இடம் அலெக்ஸ் மாதா பிள்ளைக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று கதை தொடங்குகிறது. ஆலயத்தின் கதவுகள் எல்லாம் மூடியிருக்கின்றன. கதையின் முடிவு கதவுகள் திறக்கப்பட்டு ஊரே திரண்டு நிற்பதாகச் சித்திரிக்கிறது.

மன்னிப்பு வழங்கும் இடத்தில் இருக்கும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் அலெக்ஸ் அந்த வேலையைச் செய்யவில்லை. அந்தப்பொறுப்பைத் தேவாலயப்பணியாளர் சின்னப்பனின் மனைவி சீலியிடம் ஒப்படைக்கிறார். அவள் மன்னிப்புக்குப் பதிலாகக் காமத்தின் உச்ச வெளிப்பாடான பற்கடியை அடையாளமாக்குகிறாள். அந்நிகழ்வை விவரிக்கும் கதைமுடிவு இப்படி முடிகிறது. அத்தோடு கடைசியாக ஒற்றைச் சொற்றோடரில் ஒரு குறிபையும் தருகிறது.

ஆங்காரத்துடன் பாக்கியராஜைத் தள்ளிவிட்டாள் சீலி. அருட்தந்தையைக் கைத்தாங்கலாய் சிலர் அழைத்துச் சென்றனர். பின், சீலி சின்னப்பனை இழுத்து அவர் தோற்பட்டையிலும் தடம் விழக் கடித்தாள். அவரையும் ‘போ’ என்று தள்ளி விட்டாள். அவரும் விலகியதும், ஊரிலுள்ள அத்தனை ஆண்களும் வரிசையில் நின்று சீலியிடம் கடி வாங்கிக் கொண்டனர்.

அக்கடிதடம் மறையவே இல்லை.

அது மன்னிப்பா? தன் மீது அவர் செலுத்திய ஆதிக்கத்தை நினைவூட்டும் அடையாளமா? என்பது கதை எழுப்பும் விசாரணை.

இவ்விசாரணையை வாசகர்களே எழுப்பிக்கொள்ளும் விதமாகக் கதையின் சொல்முறை நகர்த்தப்பட்டுள்ளது. பின்னோக்கிய நகர்வுகளாக – வரலாறாக கதைக்குள் இரண்டு நகர்வுகள் இருக்கின்றன. தென் தமிழகத்தில் கிறித்தவ மதம் கால்கொண்ட வரலாறு ஒன்று. இன்னொன்று பாக்கியராஜின் அக நினைவுகள் சார்ந்த தன்னிலை முன்வைப்பு வரலாறு. பொருளாதார நிலையிலும் சமூகத்தகுதி நிலையிலும் இடைநிலைச்சாதிகளாக இருந்தவர்களின் சமய ஏற்புகளின் அலைவும், விளிம்புநிலையில் இருந்தவர்களின் கிறித்தவத்திற்குள்ளான இருப்புமெனப் பதிவுசெய்த வரலாற்றிலும் சாதிய முரண்களும் கோபமும் சொல்லப்பட்டுள்ளன.

தனது பதின் பருவத்தில் இருந்த உடலின்பத்தூண்டலின் நீட்சியாகவும் அதன் வடிகாலாகத் தான் மேற்கொண்ட உடல்காட்சியின் நுகர்வாகவுமே பாக்கியராஜ் தனது பாவமன்னிப்புக் கதையை வடிமைத்து முன்வைக்கிறார். அரைநிர்வாணப்படங்களால் நிரப்பப்படும் டெபோனர் இதழுக்குள் இருந்த கன்னி மரியாள் படம் விடுதிக்காப்பாளரின் விசாரணையிலிருந்து தப்பித்தலுக்கான உத்தியாக இருந்து, பின்னர் அதுவே பாலியல் வடிகாலின் காரணியாக மாறிவிட்டது என்பதாகப் பாக்கியராஜ் சொல்கிறார். படமாக டெபோனருக்குள் இருந்த அந்தச் சின்னத் தெய்வத்தின் சாயலில் தன் முன்னால் அலைந்து கொண்டிருந்த சீலியைத் தேடித்தேடிக் கண்டடைந்தாகச் சொல்கிறார் பாக்கியராஜ். பாவமன்னிப்புக்காக வடிவமைத்துக் கொண்ட தன்னிலை முன்வைப்புக் கூற்று முறையில் , ‘சீலியின் உடலை நுகரவில்லை; தன் மனத்திற்குள் இருந்த அந்தச் சின்னத் தெய்வம் – வியாகுலமாதாவையே எனக்குள் ஏற்றுக்கொண்டேன்’ என்பதான தொனி வெளிப்படுகிறது. எதனையும் மறைக்காமல் சொல்லும்போது வெளிப்படும் அந்தத் தொனியும் கூற்று முறையும் பாதிரியார் பாக்கியராஜ் பாலியல் அத்துமீறல் செய்தவராக முன்வைக்காமல், தெய்வத்தைத் தனதாக்கி கொண்டவராக முன்வைக்கிறது.

சீலியின் முகம் ஏன் என்னை நினைவில்லையா என்று கேட்க வேண்டும்? அவளை இதற்கு முன் நான் எங்கே பார்த்திருக்கிறேன். என் பால்ய நினைவுகளிலிருந்து அவள் வருவது எப்படி? யோசிக்க, யோசிக்க, அந்த முகம் எனக்கு நன்கு பரிச்சயமான முகம் என்பதை நான் நம்ப ஆரம்பித்தேன்.

என்பது கதைக்குள் – பாவமன்னிப்புக்கேட்கும் உரையின் பகுதி. தெய்வத்தோடு மனிதர்களுக்குள்ள உறவில் இந்திய மதங்களின் நிலைபாடு வேறானது என்பது பாக்கியராஜுக்கு முன்பே தெரியும்.

கலங்காதே பாக்கி!’ என்றார். காமம், சரீரத்தின் இயல்பான வெளிப்பாடு என்று தொடங்கியவர், இந்திய ஆன்மீக மரபில் காமம் எவ்வாறு வழிபாட்டு முறையாக இருந்திருக்கிறது என்பதை விளக்க ஆரம்பித்தார். தாகினி பற்றி குறிப்பிட்டார். இந்துக்களின் சின்ன தெய்வங்களை விவரித்தார். அவற்றிற்கு செய்யப்படும் தாந்திரீக வழிபாடுகளை சொல்ல ஆரம்பித்தார். அவர் அன்றைக்கு பேசிய நிறைய விஷயங்கள் எனக்கு இன்று வரையிலும் விளங்கவில்லை. ஆனால், ஒன்று மட்டும் விளங்கியது. எனக்குள் நிகழ்வது சாத்தானின் வேலை அல்ல; இந்திய கிறிஸ்தவத்தில் இதுவும் ஒரு வழிபாட்டு முறையாக இருக்க முடியும். நான் கன்னிமேரியீன் மீது கொள்ளும் கிளர்ச்சியை இன்னமும் காமம் என்று சொல்லி மருகத் தேவையில்லை. அது பாவமும் அல்ல.

தெய்வத்தைக் காதலனாக – கணவனாக வரித்துக்கொண்ட பெண்கள் குறித்த தொன்மங்கள் இந்தியப் புராணங்களிலும் இலக்கியப்பனுவல்களிலும் இருப்பது அவருக்கு முன்பே கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த நினைவுகளோடு – இந்திய ஆன்மீக நினைவுகளோடு அலையும் பாக்கியராஜ் பாதிரியாரோடு இணையும் சீலியின் சரீரம் உண்மையில் அவளுடையதல்ல. பாக்கியராஜின் மனதிற்குள் நிரம்பியிருக்கும் சின்னத் தெய்வம் மாதாவின் சரீரம். அந்த சரீரத்தின் முலைக்காம்புகளையே அவர் சுவைக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட மாதா -கன்னிமரியே- அவரை ரட்சித்து ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகத் தோளில் கடிதடங்களை உருவாக்குகிறாள். கோயிலின் துப்புரவுப் பணியாளரின் மனைவியான சீலி, சின்னத்தெய்வமாக மாறும் நிலையில், அவளோடு கொண்ட பாலியல் வல்லுறவு, தெய்வத்தோடு கொண்ட ஆன்மீகத் தேடலாக மாறிவிடுகிறது. சீலியின் உடல் ரட்சிப்பை வழங்கும் மாதாவின் உடலாக மாறிய/ மாற்றிக்கொண்ட நிலையிலேயே அங்கிருந்த ஆண்கள் ஒவ்வொருவரும் அவள் தரும் கடிக்கு – மறையாத கடிதடத்திற்கு வரிசை கட்டி நின்று பெற்றுக்கொண்டு நகர்கின்றனர்.

********

புனித வெளியாகவும், பக்தி வெளிப்பாட்டின் இடமாகவும் அறியப்படும் கோயில்களில் -தேவாலயங்களில் - நடக்கும் பாலியல் மீறல்கள் விவாதப்படும் சூழலில், அப்படியொரு நேரடி நிகழ்வை முன்வைக்கும் கதையாக தர்மராஜின் கதையை வாசிக்கலாம். நேரடியான அரசியல் வாசிப்பாக இருக்கும் வாய்ப்பைக் கதை தரவே செய்துள்ளது. தேவாலயத்தின் அதிகார உச்சியில் இருக்கும் பாதிரியாரின் ஆசைக்கு இணங்காமல் தவிர்க்கும் வாய்ப்பு இல்லாத நிலையில் அக்கோயில் படிநிலையில் அடித்தளத்தில் இருக்கும் சீலியின் உடல் அதனை மறுதலிக்காமல் ஏற்றுக்கொண்டது. அதிகார உடலுக்கு அடங்கிப்போகும் அடிமை மனம் எனக் கதையை வாசிக்கலாம். இந்த வாசிப்பைத் தவிர்க்க வேண்டும் என்று தர்மராஜ் நினைக்கவில்லை. கிறித்தவ சமயப்பரவல், தலித் கிறித்தவர்களின் போராட்ட மனம், அதனால் தேவாலயத்திற்கு பாதிரியாராக வரத்தயங்கும் ஆதிக்கசாதிப் பாதிரிகளின் அச்சம் போன்ற குறிப்புகளையும் கதைக்குள் தந்துள்ளார்.

அண்மையில் வாசித்த இந்தக் கதை ஒற்றை வாசிப்போடு நிறுத்திவிடாமல், பல வாசிப்புகளை கோரிய கதை. ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய எண்ணவோட்டங்களையும் நிகழ்வுகளையும் கொண்டுவந்து நிறுத்திய கதையாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அதன் நோக்கம் இதுவாக இருக்குமா? அதுவா இருக்குமா? எனக் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தது. அந்த வகையில் வாசிப்புத்திளைப்பைத் தந்த கதை. பாலியல் அத்துமீறல் என்ற ஒற்றைத் தளத்தில் வாசிக்காமல் வேறு தளங்களிலும் வாசிக்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளையும் கதைக்குள் இடம்பெறச் செய்யும் விதம் பொருத்தமாக இல்லை என்பதுபோலத் தோன்றியது. அதே நேரம் பல தளவாசிப்பை உருவாக்க நினைப்பவர்கள் அதைச் செய்துதான் ஆகவேண்டும் என்பதும் ஏற்கவேண்டிய ஒன்று. இந்தத் தன்மையால் அந்தக் கதைகளுக்கு உணர்வுத்தளம் குறைந்து, அறிவுத்தளம் கூடிவிடும் ஆபத்தும் நிகழ்கிறது. 
இந்தக் கதையின் ஒரு தளம் ‘பாவமன்னிப்பு’ என்னும் சமய நிகழ்வுக்குள் இருக்கும் நிலைநிறுத்தலைக் கேள்விக்குள்ளாக்கும் நோக்கத்தோடு இருப்பதாக நான் வாசித்தேன். அதற்காகவே கிறித்தவச் சமயப்பரவலும் அதற்குள் தொடரும் சாதிய முரண்களும் இடம்பெற்றுள்ளன எனத் தோன்றியது. ஆணாகவோ, சமூக அடுக்கில் உயர் வர்க்கமாகவோ/ சாதியாகவோ தங்களைக் கருதிக்கொள்ளும் மனிதர்கள் தங்களின் குற்றங்களுக்கான உறுதியான தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளப் பாவமன்னிப்பின் துணையை நாடுகிறார்கள் என்ற விமரிசனத்தைக் கதைக்குள் வைத்துள்ளார் தர்மராஜ். சொல்லாடல் வளம் கொண்டவர்களால் பாவமன்னிப்பு உரையைக் கட்டமைக்க முடியும். பாக்கியராஜ் பாதிரியார் போலத் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். வரலாற்றில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன; நிகழ்காலத்திலும் நடக்கின்றன. கோயில் குருக்கள்/ தேவாலயப்பாதிரிகள் என்ற இடத்தில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், நெறியாளர்கள், உறவினர்கள், பாதுகாவலர்கள் என எவரையும் நிறுத்தி நிலைப்படுத்திக் கொள்ளமுடியும். பாதிக்கப்பட்டவர்கள் சீலியைப் போலக் கடிதடங்களை வழங்கும்‘சிறுதெய்வங்கள்’ ஆவார்கள். வெறியாடிக் களிப்பார்கள். அச்சிறுதெய்வங்களைக் குலதெய்வமாக வணங்குபவர்கள் தொடர்ந்து தங்கள் உடலைக் காணிக்கையாக்கி ரட்சிப்பின் வடிவமாக – சகிப்பின் அடையாளமாக நகர்வார்கள். இந்தியாவில் சிறுதெய்வங்களாக ஆக்கப்பட்ட பெண்களின் பின்னணிகள் சீலியின் சரீரம் போன்றவைகளே.

https://kizhakkutoday.in/yathum-kaade-yavarum-mirugam-09/



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்