இருவகைக் கவிதையாக்கம் - திட்டமிடலும் இன்மையும்

எழுத்தின் இயக்கம் இப்படிப்பட்டதுதான் என உறுதியாகச் சொல்லமுடியாது. கதைப் பின்னல் கொண்ட புனைகதை, நாடகம் போன்றனவற்றை முன் திட்டமிடலின்றி எழுதிவிட இயலாது. ஆனால் கவிதைக்குப் பெரிய அளவு முன் திட்டமிடல் தேவைப்படுவதில்லை. ஆனால் திட்டமிடாமல் எழுதிய கவிதைகளைப் பின்னர் ஒழுங்குபடுத்தும்போது ஒருவகைத் திட்டமிடல் அமையவே செய்யும். அண்மையில் முன்னுரைகள் எழுதுவதற்காக வாசித்த இவ்விரு பெண்கவிகளின் தொகுதிக்குள் ஒன்று முழுமையும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தன்மையைக் காணமுடிந்தது. இன்னொன்றில் பெரிய திட்டமிடல்கள் இன்றிய அன்றாட நிகழ்வுகளுக்குள் உணர்வுகளைத் தேக்கிவைக்கும் இயல்பைக் காணமுடிந்தது. அன்றாடங்களைக் கவிதையாக்கும் அனுபவம் வாசிக்கும் ஒருவரின் ‘தன்’னிலையையும் சூழலையும் பனுவலுக்குள் உருவாக்கி அவரோடு உரையாடவும் உறவாடவும் செய்யும் பனுவல்கள் வாசிப்பவருக்கு நெருக்கமான ஒன்றாக மாறிவிடும் என்பது நீண்டகாலப் புரிதல். இவரின் கவிதை அல்லது கதை எனக்கு நெருக்கமாக இருக்கிறது என்று ஒரு வாசகர் சொல்கிறார் என்றால் அந்த எழுத்துக்குள் அவர் இருப்பதாக உணர்கிறார் என்பது பொருள். இதன் தொடர்ச்சியில் தான் மட்டும் தான் இருக்கிறேனா? தன்...