எழுத்தில் வரையப்பட்ட சித்திரங்கள்
கலை இலக்கியங்களின் முதன்மை வெளிப்பாடு ‘போலச்செய்தல்’ என்னும் பிரதியாக்கத்தை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அவற்றின் நோக்கத்திற்கும் அடிப்படைக்கூறுகளின் கலவைக்கும் ஏற்பக் கலை, இலக்கிய வடிவங்களும் வகைகளும் மாறுபடுகின்றன. எழுத்துக்கலைகளைத் தனது வெளிப்பாட்டுக்கருவியாகக் கைக்கொள்ளும் ஒருவர் அவரது எழுத்தில் மனிதர்களைப் பிரதியாக்கம் செய்வதை முதன்மை நோக்கமாக கொள்கிறார் என்றாலும், எல்லா வடிவத்திலும் அதுதான் முதன்மையாக இருப்பதில்லை.
கவிதையில் மனித உணர்வுகளையும் நாடகத்தில் மனிதர்களின் முரண்நிலையையும் கதைகளில் நேரடியாக மனிதர்களின் மொத்த அடையாளங்களையும் காட்டிவிட முடிகிறது. கதைகளிலும் கூட, எந்த உணர்வுகளைத் தூக்கலாக நிறுத்திக்காட்டலாம் என்பதன் வழியாகவும், வாசிப்பவர்களிடம் எதனைக் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்று தீர்மானிப்பதன் மூலமும் கதைகளின் வகைப்பாடுகளைச் சுட்ட முடியும்.
பொதுவாகக் கதைவடிவம் போலச்செய்தலென்னும் பிரதியாக்கத்தை முழுமையாக்க முயற்சிக்கும் எழுத்து வடிவம் என்பதால், அதற்குள் உலவும் மனிதர்கள் நடப்பியல் மனிதர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. என்றாலும் தனது கதையை முழுமையும் புனைவாக்க வேண்டுமா? கூடுதல் நம்ப்கத்தன்மை வழியாக இவை நடந்த நிகழ்வுகளின் மறுவார்ப்பு எனக் காட்டவேண்டுமா? என்பதைத் தீர்மானித்துக்கொண்டு புனைவுக்கூறுகளில் கூடுதல் – குறைவைச் செய்கிறார்கள் எழுத்தாளர்கள்.
முழுமையும் புனைவாக்க நினைக்கும் ஒருவர் கதைக்குள் இடம் பெறும் காலம், வெளி(இடம்) என்ற இரண்டு கூறுகளிலும் புனைவுத்தன்மையைக் கூட்டுவதன் மூலம் கதைக்குள் உலவும் பாத்திரங்களைப் புனைவுப்பாத்திரங்களாக்கித் தன்னை நிகழ்வுகளிலிருந்து விலக்கி வைத்துக்கொள்கிறார். அப்படி உருவாகும் புனைகதைகளுக்குள் உலவும் மனிதர்கள் நடைமுறை வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களின் பாவனையில் இருப்பார்களே தவிர உறுதியான – நம்பகமான ஆட்களாக அறியப்பட மாட்டார்கள். இந்தப் போக்கிலிருந்து மாறுபட்ட கதைகளை – கதைகளுக்குள் உலவும் மனிதர்களை உண்மையான மனிதர்களின் சாயலில் தர நினைக்கும் எழுத்தாளர்கள் காலத்தையும் இடத்தையும் முழுமையும் புனைவாக ஆக்குவதில்லை. குறிப்பான காலப்பின்னணி, குறிப்பான வெளி அடையாளம் ஆகியவற்றைத் தனது எழுத்தின் வழியாக சித்திரித்துக்காட்டுவதின் மூலம் புனைவை, நடப்பின் அருகில் கொண்டுவந்து நிறுத்திவிடுவார்கள். கிராமத்து மனிதர்கள் என்ற தலைப்பில் தொகுப்பாக்கப்பட்டுள்ள முப்பது பனுவல்களிலும் இ.இராஜேஸ்கண்ணன் முழுமையான புனைவாக்கத்தில் ஈடுபடாமல், வாசிப்பவர்கள் வசிக்கும் வெளியில் சந்தித்திருக்கக் கூடிய மனிதர்களின் மாதிரிகளை எழுதிக்காட்டும் புதுவகைப் புனைவைக் கொடுத்துள்ளார்.
அறியப்படாத மனிதர்களின் உள்ளுணர்வு நடவடிக்கைகளுக்குப் பதிலாக அறியப்பெற்ற பாத்திரங்களைத் தனது எழுத்தின் வழியாக முன்வைக்க நினைத்துள்ள இ.இராஜேஸ்கண்ணன், ஒவ்வொரு முன்வைப்பிலும் ஒரு மனித உயிரியின் உடலியல், சமூகவியல், உளவியல் என்னும் முப்பரிமாணத் தன்மையைக் கொண்டுவருவதற்கான முனைப்பைக் காட்டியுள்ளார். அதற்கு அவர் கையாண்டுள்ள உத்திகள் எளிமையானவை; வாசிப்பவர்களை நேரடியாகச் சந்தித்து விவரிக்கும் தன்மைகொண்டவையாக இருக்கின்றன.
இதனை அவர் ஒவ்வொன்றுக்கும் தலைப்பிடுதலிலேயே தொடங்கிவிடுகிறார். ஒவ்வொரு தலைப்பும் ஒரு பெயரைத் தான் சொல்கிறது என்றாலும், ஒரு அடைமொழியோடு சொல்கிறது. பெண்டுகள் கந்தியான், குத்தூசிக்குமாரு, நாய்வேட்டை நாகன், வட்டவிதானையார் வலம்புரிநாதன், சவம் காத்த சண்டியன் சண்முகத்தான், வீணாய்ப் போன விண்ணாணக் குஞ்சி என்பன சில உதாரணங்கள். இப்படித் தலைப்பிடும்போதே இப்படியான மனிதர் ஒருவரைப் பற்றிச் சொல்லப்போகிறேன் என்று கதைக்கூற்று முறையில் நேரடித் தன்மையை காட்டிவிடுகிறார். அத்தோடு அவற்றிற்குத் தரும் அடைமொழிகள் பெரும்பாலானவை அப்பாத்திரங்களின் தொழில் சார்ந்த அடையாளமாகவும், கருவிகளைக் கையாளும் தனித்திறன் சார்ந்ததாகவும், மனிதர்களோடு கொள்ளும் உறவுநிலை சார்ந்த பண்புகளாகவும் வெளிப்பட்டுள்ளன. இந்த வெளிப்பாட்டைத் தாண்டி அவை, அந்தப் பெயருக்கொரு அங்கதத் தொனியும் சேர்க்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
தலைப்பில் தொடங்கும் இந்த அங்கதத்தையும் எள்ளலையும் பாத்திரங்களின் உடல் மற்றும் நடவடிக்கைகளை விவரிக்கும்போதும் தொடர்கிறார் இராஜேஸ் கண்ணன். அதன் மூலம் அந்தப் பாத்திரங்களின் மீதான கவனக்குவிப்பை வாசிப்பவர்களிடம் கடத்துகிறார். ஆனால் அந்தப் பாத்திரங்கள் உலவும் கிராமத்து வெளிகளையும் இயற்கை வளங்களையும் சொல்லும்போது அங்கதமோ, எள்ளலோ வெளிப்படாத நடப்பை விவரிக்கும் சொற்சித்திரங்களால் எழுதிக்காட்டுகிறார். இவ்வெழுத்துமுறை என்பது மொழியின் பயன்பாட்டையும் அதன் வழியே வெளிப்பட வேண்டிய உணர்வுகளையும் உணர்ந்த ஒருவரின் தேர்ச்சியின் அடையாளம். எடுத்துக்காட்டாக குத்தூசிக் குமாரு என்ற பனுவலின் ஒரு பத்தியைப் பார்க்கலாம்:
இந்தப் பத்தியில் குமாரும் குத்தூசியும் இணைவைத்துப் பேசப்படும்போது குத்தூசியில் இயல்பில் கூடுதல் -குறைவு இல்லாமல் அதன் இயல்பு சித்திரிக்கப்படுகிறது. ஆனால் அதனைக் கையாளும் குமாரின் செயல்பாடுகளும் உடல் அடையாளங்களும் நகைச்சுவையுணர்வு தோன்றும் விதமாகக் கூடுதல் சொற்களால் விதந்துரைக்கப்படுகிறது. இவ்வகையான எழுத்துமுறையை அவரது ஒவ்வொரு கட்டுரையிலும் பின்பற்றுவதன் வழியாக ஒவ்வொரு கட்டுரைக்கும் நகைச்சுவையின் கூறுகளான எள்ளல், பேதமை, அங்கதம் போன்றனவற்றை உருவாக்கி வாசிப்புத் திளைப்பை உருவாக்கியுள்ளார்.குத்தூசி என்பது நாங்கள் சட்டைப் பொத்தான்களைக் கைகளால் தைக்கப் பயன்படுத்தும் தையல் ஊசியின் விசுவரூபம். ஒன்றிரண்டு அடிவரை நீளமான இரும்பினாலான கம்பியொன்றின் முனை அம்பு நுனிபோல் தட்டைப்படுத்திக் கூர்மையாக்கப்பட்டு தட்டைப்படுத்தப்பட்ட பகுதியில் கயிறு நுழையக்கூடியவாறு துழையிடப்பட்டு மறு முனையில் கம்பியை இரும்பினாலான சிறிய வளையமாக வளைத்து செய்யப்பட்ட பொருள். கிடுகு வேலி, பனையோலை வேலி அடைப்பதற்குப் பயன்படும் முதன்மையான கருவி. குமாருவும் குத்தூசி போல ஒல்லியர்; கறள்படிந்த இரும்புக்கு எண்ணை தடவிய கறுப்பர்; குமாருவுக்கு குத்தூசிக் குமாரு என்ற பெயர் நிலைக்க அவர் குத்தூசி போல ஒல்லியாக இருந்ததும் குத்தூசி ஒருபோதும் அவரை விட்டுப் பிரியாதிருந்ததும் காரணமானது.
முழுமையான புனைவாகவும் கதையாகவும் சொல்லாமல் ஒரு குறிப்பிட்ட கிராம எல்லைக்குள் நிறுத்திக்காட்டப்படும் இம்மனிதர்கள் அந்தக் கிராமத்திற்குள் மட்டும் இருப்பவர்கள் அல்ல. இலங்கைத் தமிழ்க்கிராமங்களிலும் இந்தியத் தமிழ்க் கிராமங்களிலும் காணப்படும் வகைமாதிரி மனிதர்கள். அவர்களின் தினசரிச் செயல்பாடுகளை விவரிப்பதில் தொடங்கி, ஏற்றுக்கொண்ட தொழில்களில் காட்டும் அக்கறை, அதில் கடைப்பிடிக்கவேண்டைய கறார்த்தன்மை அல்லது நேக்குப்போக்கு, அதில் தொடர்புடைய மனிதர்களின் சமூக அடுக்குநிலைக்கேற்பக் கொள்ளவேண்டிய உறவுகள், அதில் செயல்பட்ட ஆதிக்க மனத்தோடு கூடிய உள்வாங்கும் பாங்கு போன்றவற்றைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறார். அந்தத் துல்லியம் இந்தப் பனுவல்களுக்குக் கள ஆய்வு சார்ந்த ஆவணத்தன்மையை உண்டாக்கியிருக்கிறது.
உணவு, தொழில், நம்பிக்கைகள், தெய்வங்கள், பிறப்பு முதல் இறப்புவரையிலான சடங்குகள் எனக் கிராமத்து நடவடிக்கைகளை ஆவணப்படுத்தியுள்ள இ.இராஜேஸ்கண்ணனின் இந்தப் பிரதிகள் தமிழ்க்கிராமங்கள் முன்பு எப்படி இருந்தன என்பதை முன்வைப்பதோடு, அங்கே ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களையும் பதிவுசெய்து தந்துள்ளன. தான் எழுதப்போகும் இந்தப் பனுவலில் முன்வைக்கப்படும் மனிதரும், அவரது செயல்பாடுகளும் அப்படியே தொடர்கின்றன என்பதாகச் சொல்லமுடியாது என்று தோன்றும்போது நடப்பில் இருக்கும் நிலையை முதலில் சொல்லிவிட்டு, அந்தக் கூறும் அதனைக் கைக்கொண்ட மனிதர்களும் கொஞ்சம் முந்திய காலத்து இருப்புகள் என்பதாக விவரிப்பைப் பரப்புகிறார். மருத்துவம், இறப்புச் சடங்கும், பெண்களின் கல்வியும் உடைகளும் போன்றன பெருமளவு மாற்றத்தைக் கண்டுவிட்டன என்பதை உணர்ந்த ஒருவரின் பார்வை இது. இந்தப் பார்வையை அவருக்கு வழங்குவது அவர் பணியாற்றும் கல்விப்புல அறிவின் விளைவுகள்.
கல்விப்புலப்பார்வையையும் புனைவின் கூறுகளையும் செம்பாதியாகக் கலந்து எழுதப்பெற்ற இவ்வகைப் புனைவுகளைத் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பலரின் எழுத்து முறையாக வாசித்திருக்கிறேன். குறிப்பாகக் கி.ராஜநாராயணனின் கரிசல் காட்டுக் கடுதாசியிலும், ஜெயகாந்தனின் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள், இவர்கள் வெளியே இருக்கிறார்கள் போன்ற புனைவல்லா எழுத்துகள் அப்படியானவை. யாழ்ப்பாண வட்டாரக் கிராமத்து மனிதர்களின் சித்திரத்தை உயிர்ப்பிக்கும் இ.இராஜேஸ்வரனின் இவ்வகை எழுத்துகள் அந்த வரிசையில் வைக்கவேண்டியன என்பதைச் சொல்லி வாழ்த்துகிறேன்.
கருத்துகள்