சரவணகார்த்திகேயனின் கதையாக்கம் – வாசித்த சில கதைகளை முன்வைத்து

சரவண கார்த்திகேயனின் அண்மைக்காலச் சிறுகதைகளை அவ்வப்போது வாசித்த நிலையில் அவரது எழுத்துகள் பற்றிய சித்திரம் ஒன்று எனக்குள் உருவாகியிருக்கிறது. அச்சித்திரம் பத்தாண்டுகளுக்கு முன்பு வாசித்த, அவரது தொடக்கக்காலச் சிறுகதைகள் வழி உருவான சித்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கடந்த சில ஆண்டுகளில் அவர் எழுதிய கதைகள் உடல், மனம் என்ற இணைவையும் விலகலையும் முதன்மையான சொல்லாடலாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. அண்மைக்கால நிகழ்வுகள், ஆளுமைகளைப் புனைவுகளாக்குவதும் அவரது கதைகளின் தன்மைகள். உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த விடுதலைப்புலி திலீபனை பாத்திரமாக்கி எழுதிய கதை அண்மையில் எழுதப்பெற்ற நல்ல கதை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப்பரப்புக்குக் கொண்டு போகவேண்டிய கதை கல்லளை எனப் பரிந்துரை செய்துள்ளேன் . திலீபன்: தொன்மமாக்கும் புனைவு சரவண கார்த்திகேயனின் அந்தக் கதை அவரது வலைப்பக்கத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2/2023 இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கதையின் தலைப்பு: கல்லளை. உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட விடுதலைப்புலி, திலீபனைத் தமிழின் தொன்மக்கதாபாத்திரமாக முன்வைத்துள்ள கதை அது. கவனிக்கவும...