இருவேறு காரணங்கள்
முன்குறிப்பாகச் சில .. .
இந்தக் கட்டுரையில் அண்மையில் நான் வாசித்த இரண்டு கதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பரிந்துரைக்கான காரணங்கள் இரண்டு கதைகளுக்கும் ஒன்றல்ல என்ற குறிப்போடு பரிந்துரை செய்கிறேன். வாசிக்கும் எல்லாக்கதைகளைப் பற்றியும் விமரிசன/ விவாதக்குறிப்புகளைச் சொல்லியே ஆகவேண்டும் என நினைப்பதில்லை. இந்தக் கதைகளை வாசித்து முடித்தவுடன் உடனே எழுதவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அயல்பயணத் திட்டமிடல்களால் அப்போது எழுத இயலவில்லை. பயணத்திற்குப் பின்னும் எழுதாமல் தவிர்க்க முடியவில்லை. திரும்பவும் அவர்களிடம் கதைகளின் படிகளை வாங்கி வாசித்துவிட்டு எழுதுகிறேன். இதுதான் மனதில் தங்கி விடும் இலக்கியப்பனுவலில் திமிறல். எதையாவது சொல் எனத் திமிறிக்கொண்டே இருக்கும்.
[இரண்டு கதைகளில் முதலில் வாசித்த கதை, இமையம் எழுதி உயிர்மை இதழில் (மே,2023) அச்சிடப்பெற்ற கதை. கதையின் தலைப்பு: எஸ் சார். இரண்டாவது ஹேமி கிருஷ் எழுதி ஆனந்த விகடனில் (மே,11-17) அச்சிடப்பெற்ற கதை. கதையின் தலைப்பு: துணைவரும் நிழல்/ களித்தான்.] இவ்விருவரின் சிறுகதைகள் ஏற்கெனவே எனது வாசிப்புக்குரியனவாக இருந்துள்ளன.
தொடர்ந்து வாசிப்புக்குரிய கதைகளை எழுதும் சிறுகதை ஆசிரியர்கள், கதைகளுக்குத் தரும் தலைப்பு பல நேரங்களில் வாசிக்கத்தூண்டுவனவாக இருப்பதுண்டு. இந்தத் தலைப்பில் எதனைக் கதையாக்கி இருப்பார்; எப்படிக் கதையாக்கியிருப்பார் என்ற ஆர்வம் கதையை வாசிக்கச் செய்யும்.இவ்விரு கதைகளின் தலைப்புகள் அப்படியான ஆர்வத்தைத் தூண்டின. ஆர்வத் தூண்டலின் காரணங்களும் ஒன்றல்ல; வேறுவேறு. இமையம் தனது கதைக்குத் தந்துள்ள ‘எஸ் சார்’ என்ற தலைப்பு வெளிப்படையானது. ஹேமி கிருஷின் கதைத் தலைப்பான ‘களித்தான்’ பூடகமானது.
எஸ் சார் என்ற ஆங்கிலச் சொற்றொடர் முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்து ஏற்பைச் சொல்பவர்கள் பயன்படுத்தும் மரபுத்தொடர். ஆங்கிலத்தில் பயன்படுத்தும் அதே பொருளில் தமிழர்களும் தங்கள் வாழ்வில் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக அதிகாரம் செயல்படும் இடங்களில் எல்லாம் திரும்பத் திரும்பப் பயன்பாட்டில் இருக்கிறது அச்சொற்றொடர். அதிகாரம் வெளிப்படும் இடத்தின் சூழலைக் காட்டுவதோடு, அதிகாரத்துக்குக் கட்டுப்படும் ஒருவரின் பாவனையாகவும் இருக்கிறது. ஆங்கில மொழிக்குள் அச்சொற்றொடர் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பே ராணுவத்தில் புழக்கத்தில் இருந்த சொற்றொடர். நிகழ்காலத்தில் ராணுவம், காவல்துறை போன்ற அதிகாரத்துவப் படிநிலைகள் நிலவும் எல்லா அமைப்புகளிலும் நிலைபெற்றுவிட்டது.
அதிகாரத்தின் மேலடுக்குக் கீழ்ப்படிதலை முதன்மையாக வெளிப்படுத்தும் இத்தொடர் வெறும் குரல்மொழித்தொனியை மட்டும் கொண்டதல்ல. அதற்கெனத் தனித்துவமான உடல்மொழியும் உண்டு. அரசர்கள் காலத்தில் அவருக்குக் கீழிருந்த அமைச்சர் முதல் குடிமக்கள் வரை கீழ்ப்படிதலின் அடையாளமாகத் தங்கள் முதுகை வளைத்து வலது கையால் வாயைப் பொத்திக் கொண்டு, இடதுகையை இடுப்பருகே வைத்துத் தெண்டனிட்டுப் பேசும் பாவனையை வெளிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகள் காட்டியுள்ளன. அவற்றை உள்வாங்கியே வரலாற்றுத்திரைப்படங்களின் நிலைகளும் அசைவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தப் பாவனை நிலப்பிரபுத்துவக் காலத்துப் பாவனை. பண்ணையார்களின் முன்னால் கூலிகளும் அடிமைகளும் அப்படி நிற்பதைக் கிராமியவாழ்வை அறிந்த ஒவ்வொருவரும் பார்த்திருக்கக்கூடும். அதனையே திரைப்படங்களின் காட்சிமொழி உள்வாங்கியிருக்கிறது.
நமது காலம் நிலப்பிரபுத்துவ காலம் அல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தியல் உறுதிசெய்யப்பட்ட காலம். அதனால் இந்த உடல் மொழி அப்படியே தொடரவில்லை. அதேநேரம் இந்தப் பாவனை பெரிய அளவில் மாறவும் இல்லை என்பதே‘எஸ் சார்’ என்ற சொல் பயன்பாட்டின் இருப்பு காட்டுகிறது.
இந்தச் சொற்றொடரைச் சொல்லும்போது உடலை இறுக்கி விரைப்பாக்கி உறைநிலைக்குச் சென்ற நிலையைக் காவல்துறையினரும் ராணுவத்தினரும் வெளிப்படுத்துகிறார்கள். அவ்வெளிப்பாட்டில் குரல் மொழி உச்சத்தில் தொடங்கி மெல்லிதாக முடிவடையும். இதனையும் காவல் நிலையங்களிலும், பொது நிகழ்வுகளில் ராணுவத்தினரும் உடலசைவிலும் பார்த்திருக்கிறோம். இந்த உடல்மொழியின் பயன்பாட்டில் அதிகார வேறுபாடு இல்லை என்பதே நிகழ்கால உண்மை. ஆனால் உடல் மொழியைத் தவிர்த்துவிட்டு அரசின் இதர துறைகளும் தனியார் துறைகளும் பயன்படுத்துகின்றன. அச்சொல்லைத் தமிழில் சொல்லவேண்டும் ‘சரிங்கய்யா’ என்ற சொல்லால் குறிப்பிடலாம்.
அதிகாரத்துவப் படிநிலையில் ஆக உச்சியான இடத்தில் இருப்பதாகத் தோற்றம் தரும் காவல்துறை அதிகாரியை அடிநிலை ஊழியராக நினைத்து அதிகாரம் செலுத்தும் ஓரிடம் இருக்கிறது; அந்த இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களாட்சியில் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தரவேண்டிய அடிப்படை மரியாதையைக் கூடத் தராத அதிகாரத்துவ மையமாக இருக்கிறது என்பதை விமரிசனப்படுத்தும் கதையொன்றை எழுத நினைத்துள்ளார் இமையம் என்பதைக் கதையைத் தொடங்கும் வரிகளிலேயே காட்டியுள்ளார்.
பணியாளர் கதவைத் திறந்துவிட, ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இருந்த பார்வையாளர்கள் காத்திருப்பு அறைக்குள் வந்தார் டி.ஜி.பி. பணியாளர் தண்ணீர் பாட்டில், காபி, ஸ்நாக்ஸ் என்று எடுத்துக்கொண்டு வந்து டீபாயில் வைத்தார். “காபி கலக்கட்டுமா ஐயா?” என்று பணியாளர் கேட்டதற்கு, “வேண்டாம்” என்று சிடுசிடுப்புடன் சொன்னார்.
டிஜிபியின் வருகைக்கு அடுத்துத் தலைமைச்செயலரின் வருகையும் காட்டிவிட்டு அவர்கள் இருவரும் மாநில ஆளுநரைச் சந்தித்து வெளியேறும் காட்சியை கதை முடிவாக வைத்துள்ளார். கதையின் முடிவுச் சொற்றொடர்கள் இவை:
அப்போது நடைபயிற்சிக்காக அழைத்துக்கொண்டு போயிருந்த, கொழுத்த பன்றி போன்றிருந்த உயர் ரக வெளிநாட்டு நாயைக் காவலர் ஒருவர் இழுத்துக்கொண்டு ஆளுநரின் மாளிக்கைக்குள் போவது தெரிந்தது. தலைமைச் செயலாளரும் டி.ஜி.பி.யும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
சைரன் விளக்கு ஒளிர தலைமைச் செயலாளரின் காரும், டி.ஜி.பி.யின் காரும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து வாசலில் நின்றன. இருவரும் அவரவர் காரில் ஏறிக்கொண்டனர்.
தொடக்கத்திற்கும் முடிவுக்கும் இடையில் விவரிக்கப்படும் காட்சிகள் அப்படியே நிகழ்ந்திருக்கக்கூடிய காட்சிகள் என்பதற்கில்லை. ஆனால் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் கபடி விளையாட்டில் பந்தாடப்படுபவர்கள் அரசு அதிகாரிகளாக இருக்க அதிகமான வாய்ப்புகள் உண்டு.
ஒரு பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்குச் சென்று திரும்பும்போது, தனது பயணத்திட்டத்தில் பாதுகாப்பு சார்ந்து போதுமான நடைமுறை -புரோடோகால் -பின்பற்றப்படவில்லை என்பது ஆளுநரின் தரப்பு. அதற்காக மாநில அரசின் காவல் துறை உயர் அதிகாரியான டி.ஜி.பி.யை அழைத்து விசாரிக்கிறார் ஆளுநர். விசாரணையில் போகும் வழியில், மாடுகள் வந்ததும், மரங்களில் குரங்குகள் தாவித்துக்குதித்ததுத் தொல்லை கொடுத்ததும் ஆளுநரின் காரோட்ட த்தைத் தடை செய்தது என்று கடிந்துகொள்கிறார். இதற்கெல்லாம் ‘ஒன்றும் செய்ய முடியாது’ என்பதைச் சொல்லமுடியாமல், இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்பதைச் சொல்லும்போது உயர்ந்தபட்ச பணிவோடு சொல்லிவிட்டு எஸ்சார் என்பதையும் சொல்கிறார். அதனைத் தொடர்ந்து நடக்கும் உரையாடல் தான் கதைக்குள் அதிகாரத்தின் அபத்தக்காட்சியை நிகழ்த்துகிறது
“ரூட்ட முடிவு செஞ்சது யாரு?
டி.ஜி.பி.யால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி., டி.ஐ.ஜி.யைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்று நினைத்தார். கொஞ்ச நேரம் கழித்து சத்தமில்லாமல் சொன்னார்: “அது கொஞ்சம் ஃபாரஸ்ட் ஏரியா சார்.”
“ஃபாரஸ்ட் ஏரியாவுல யார் யூனிவர்சிட்டியக் கட்டச் சொன்னது?” கோபமாகக் கேட்டார் ஆளுநர்.
டி.ஜி.பி.யால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி., டி.ஐ.ஜி.யைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்று நினைத்தார். கொஞ்ச நேரம் கழித்து சத்தமில்லாமல் சொன்னார்: “அது கொஞ்சம் ஃபாரஸ்ட் ஏரியா சார்.”
“ஃபாரஸ்ட் ஏரியாவுல யார் யூனிவர்சிட்டியக் கட்டச் சொன்னது?” கோபமாகக் கேட்டார் ஆளுநர்.
தன்வசம் அதிகாரம் உள்ளது என்ற நிலையில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையைக் காட்ட இந்த உரையாடல் எழுதப்பட்டுள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தை எங்கே நிறுவது? எப்படிக் கட்டுவது என்பதெல்லாம் காவல்துறையோடு தொடர்புடையதல்ல என்பதை ஆளுநர் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் தனக்கு அதிகாரம் இருக்கிறது என முடிவு செய்துவிட்டால் எல்லாவிதமான அபத்தச் சொற்றொடர்களும் வந்துவிடும். அப்படித்தான் ஆளுநரின் நடவடிக்கை இருக்கிறது. அதே அபத்தமான மனநிலையை தலைமைச்செயலரிடம் காட்டுகிறார் ஆளுநர். அதைக் கதையில் காட்சியாக எழுதவில்லை இமையம். அதற்குப் பதிலாகத் தலைமைச்செயலரும் டி.ஜி.பி.யும் வெளியில் வந்துபேசிக்கொள்ளும் உரையாடலாக எழுதுகிறார்:
“கவர்னர் கேட்டதுக்கு என்ன சொன்னிங்க?”
“கவர்னர் எந்த ரூட்டுல போனாலும், அந்த ரூட்டுல குரங்கு இருந்தாலும், மான் இருந்தாலும் புடிக்கறதுக்கு வளையோட ஒரு போலீஸ் டீமயே போடுறன். ஆடு, மாடு, பன்றி வளர்க்கிறவங்க வீடுகளுக்கு ஒரு போலீஸுனு போட்டு, ஆடு, மாடுகள எதயும் அவிழ்த்துவிடாம பாத்துக்கிறனு சொல்லி அஷ்யூரன்ஸ் கொடுத்திருக்கன்.”
“குட்” தலைமைச் செயலாளர் சொன்னார். அவர் சொன்ன விதம் இதுதான் சரியான சட்ட ரீதியான நடவடிக்கை என்பது போலிருந்தது.
இந்த உரையாடல்களைத் தாண்டி இமையம் தரும் விவரங்களும் மதிப்பீடுகளும் இப்போதுள்ள ஆளுநர், தலைமைச்செயலர், காவல்துறை இயக்குநர் ஆகியோரைப் பற்றிய மதிப்பீடுகளாகவே வாசிப்பில் வெளிப்படுகின்றன. ஆனால் அப்படியொரு எண்ணம் தோன்றிவிடக்கூடாது என்பதைத் தவிர்ப்பதற்காகக் கதைக்குள் ஓர் சொற்றொடரை வைத்துள்ளார். கதையில் இடம் பெறும் ஆளுநர், இரண்டாவது தடவையாக ஆளுநராக நியமனம் பெற்றவர் என்பது போல எழுதி, கடந்தகாலத்து நிகழ்வுகள் என்பதாக எழுதித் தாண்டிச் செல்கிறார். கதையின் நிகழ்வெளி, கதைக்குள் இடம்பெறும் பாத்திரங்கள், காலப்பொருத்தம் என ஒவ்வொன்றிலும் நேரடிப் பார்வை சார்ந்த அனுபவங்களைத் தரும் தன்மையைக் கதை முழுவதும் உருவாக்குகிறார் இமையம். மொத்தக்கதையையும் வாசித்து முடிக்கும்போது கட்டுரையாக எழுதவேண்டிய ஒன்றைத் தனது தேர்ந்த எழுத்தின் வழிப் புனைவுயாக்கியிருக்கிறார் என்பது புரிகிறது. இமையத்தின் பலம் கதைகளுக்குள் இடம்பெறும் பொருத்தமான உரையாடல்கள். அத்தோடு உரையாடல் நிகழும் காட்சியாக்கத்தன்மையும் பாத்திரங்களைப் பற்றிய மதிப்பீடுகளை வைக்கும் வர்ணனையும் இக்கதைக்குள் கச்சிதமாக அமைந்துள்ளன. இம்மூன்றின் ஓர்மையால், சமகால அரசியல் விமரிசனக்கதையொன்றை வாசிக்கும் அனுபவத்தைத் தந்துள்ளார். அதற்கு அவரது கட்சி சார்ந்த பின்புலமும் காரணமாக இருந்துள்ளது.
ஈரடுக்குக் கதைசொல்லல்

‘களித்தான்’ -என்னும் தலைப்பு உடனடியாக நேரடிப்பொருள் எதனையும் சுட்டுவதாக இல்லை. களி என்பது ஒரு வினையடி. அதே நேரம் அது ஒரு பெயர்ச்சொல்லாகவும் இருக்கிறது. கள் என்பது குடிபானம்.அதனைக் குடிப்பவர்கள் அடைவது களிப்பு. களிப்பின் பின் உருவாவது களியாட்ட மனநிலை. களி என்பது ஒருவகை உணவுப்பதார்த்தம். தானியங்களை மாவாக்கிக் களி என்னும் பதார்த்தத்தைத் தமிழர்கள் தயாரித்து உண்கிறார்கள். இவ்விரு சொற்களின் பயன்பாட்டில் கதைக்குள் இடம்பெறுவது களிப்பு சார்ந்த மனநிலை. கதைக்குள் உணவுப்பதார்த்தம் சார்ந்த குறிப்பெதுவும் இல்லை. ஆனால் குடிபானம் சார்ந்த தொடர் குறிப்புகள் உள்ளன.
களி என்ற வினையடிருந்து உருவாக்கப்பட்ட களித்தான் என்னும் வினைமுற்றே கதையின் தலைப்பாக ஆக்கப்பட்டிருக்கிறது என எனது வாசிப்பு மனம் ஏற்றுக் கொண்டது. அப்படியொரு வினைமுற்றை உருவாக்கித் தலைப்பிட்டு எழுதுவதில் ஒரு கூடுதல் மெனக்கிடல் அல்லது உள்ளர்த்தம் இருக்கவேண்டும் என்ற நினைப்பு அந்தக் கதையை வாசிப்புக்குரிய கதையாக மாற்றி வாசிக்கத்தூண்டியது.
யாழினி சிகிச்சை அறையிலிருந்து வரும் தனது அப்பாவின் முகத்தை பாராமலே "போலாமா?" எனக் கேட்டாள்.மூர்த்தி பதிலேதும் சொல்லவில்லை. நிதானமாய் நடந்து வந்தவரின் தோள்களை தாங்கிப் பிடித்துக் கொண்டு மருத்துவமனையின் வெளியே வந்தாள்.
என்று தொடங்கும் கதையில் அப்பாவின் முகத்தைப் பாராமலேயே பேசுவதற்குக் காரணம் அவரது குடி. குடி என்றால் சாதாரணக்குடியல்ல. குடிக்கு அடிமையாகிக் கல்லீரல் கெட்டுப்போன நிலை. அவர் படும் துயரம்; அவரது துயரத்தால் – மருத்துவமனை அலைச்சலால் அவரது மனைவியும் மகள் யாழினியும் படும் துயரங்களையும் நிரல்படுத்தி வாசித்து முடித்தால் கிடைப்பது ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்னும் நீதியை- போதனையைச் சொல்லும் கதையாக அமைந்துவிடும் வாய்ப்பே அதிகம். அந்த வாய்ப்பைத் தடுத்துக் கதைக்கு இன்னொரு வாசிப்புத் தளத்தை உருவாக்கியுள்ளதே இந்தக் கதையின் கட்டமைப்புச் சிறப்பு.
குடிக்கு அடிமையாகிவிட்டபோதிலும், தந்தைக்குச் செய்யவேண்டிய கடமை தனக்கிருப்பதாக நினைக்கும் மகளின் -யாழினியின் பாசத்தையும் பொறுப்புணர்வையும் நிதானமாகச் சொல்லிச் செல்லும் நிகழ்வுகள் தான் கதையின் உள்கட்டுமானம். தன்னைப் படிக்கவைத்து, வேலைக்கு அனுப்பித் திருமணம் செய்து வைத்துள்ள பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் அவள் எதிர்கொள்ளும் புகுந்த வீட்டு உதாசீனங்களை லாவகமாகச் சமாளிக்கும் புத்திசாலித்தனத்தை மிகையுணர்ச்சியில்லாமல் நகர்த்தியுள்ளது கதை. கணவனோடு(இனியன்) கூட்டுக் கணக்காக இருக்கும் வங்கிக்கணக்கிலிருந்து பெருந்தொகையை எடுப்பதற்குச் சொன்ன இந்தப் பொய் நம்பத்தக்க பொய்.
"உங்கப்பா குடிச்சுட்டு குடலை கெடுத்துட்டு திமிருக்குன்னு இருப்பாரு. அதுக்கு நாம செலவு செய்யனுமா?" எனக் கேட்ட கணவனிடம், அவரது சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டை அடமானத்திலிருந்து திருப்புவதற்காக, " இந்த வீடு என் அப்பாவுக்கு அப்புறம் எனக்குதான். மெயின் ஏரியா. இடமே கோடிக்கு வரும். அப்பாக்கு இப்பவே அந்த வீட்டை எனக்கு எழுதித் தரனும்னு ஆசை. அடமானத்தில இருக்கறப்போ உயில் எழுத முடியாது. அதோட மீட்டாம போயிட்டோம்னா வீடும் கைவிட்டுப் போயிடும். அதனால வீட்டை மீட்டு எம்பேர்ல எழுத ஏற்பாடு பண்ணப் போறேன்னு”
இந்தப் பொய்யில் வெளிப்படுவது யாழினியின் புத்திசாலித்தனம் மட்டுமல்ல; கணவனிடம் அவளுக்குக் கிடைக்கப்போகும் சொத்தின் மீதான விருப்பமும் இருக்கிறது என்பதையும் காட்டிவிடுகிறது. மரபான குடும்ப அமைப்புக்குள் கணவன், மாமியார், நாத்தனார் என்ற உறவுகளை ஏற்றுச் சமாளிக்கும் யாழினிக்குத் திருமணத்திற்கு முன்னால் ஒரு காதல் (பிரபு) இருந்தது என்ற இழையைக் கதைக்குள் கொண்டு வருகிறார் ஹேமி கிருஷ். அந்த காதலன் இப்போதையே நெருக்கடியான சூழலில் பலவிதமான உதவிகளைச் செய்கிறான் என்பதையும் இணைநிலையாகக்காட்டிக் கொண்டே வருகிறார். அந்த இணைநிலைக் கதைப்போக்கு ஒரு விலகலையும் அதற்கெதிர் நிலையில் ஈர்ப்பு நிலையும் உருவாவதையும் நகர்த்திக்கொண்டே வருகிறது.
மருத்துவமனை சார்ந்த உதவிகளைச் செய்தபோதிலும் பிரபு, அவளது தந்தையைப் பார்க்கத் தயங்குகிறான். அந்த த்தயக்கத்தின் பின்னால் இருப்பது எந்த நிலையிலும் அவருக்கு மன உளைச்சலைத் தரும் விதமாகவோ, குற்றவுணர்வைத் தூண்டுவிடும் வாய்ப்பை உருவாக்கும் விதமாகவோ நடந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை அவனிடம் செயல்படுகிறது.
தனது தந்தையின் மருத்துவச் செலவுக்குக் கணக்குப் பார்க்கும் கணவன் இனியனிடம் யாழினிக்கு தோன்றும் விலகலான மனநிலைக்கான காரணங்களை அடுக்கும்போதே அவளது முன்னால் காதலன் பிரபு மீது ஓர் ஈர்ப்பான மனநிலை உருவாகிறது. விலகலுக்கும் ஈர்ப்புக்கும் மையமாக இருப்பது தந்தை மூர்த்தியின் இப்போதைய நிலைதான். அவளுக்குப் பெரும் சொத்து ஒன்று வரப்போகிறது என்பதால் பணம் எடுக்கச் சம்மதிக்கும் கணவன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவும் காதலன் என்ற எதிர்வில், பிரபுவோடு தனக்கிருந்த காதலை மறுதலித்து ஏற்றுக்கொள்ளாமல் இப்போதுள்ள திருமண உறவை ஏற்படுத்தியவர் இதே தந்தை என்ற கசப்பும் அவளுக்குள் இருக்கிறது. அந்தக் கசப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தும் விதமாகப் பிரபுவின் பெருந்தன்மையையும், செய்யும் உதவிகளையும் தனது அப்பாவுக்குப் புரியவிக்கிறாள் யாழினி. தந்தையின் அடமான வீட்டை மீட்டு அவரது வீட்டில் இருக்க வைத்துக் களிப்பூட்டிப் பார்த்த யாழினி, அந்த களிப்பூட்டுதலில் பிரபுவுக்கும் பங்கிருப்பதைச் சொல்லமுடியாமல் நினைத்துக்கொள்கிறாள்.
களித்தான் என்ற தலைப்பின் பின்னே குடித்துக்களித்து அடிமையாகி மீண்ட யாழினியின் தந்தை என்ற பாத்திரத்தையும், தனது வாழ்க்கைக்குள் வரமுடியாத நிலையிலும் அவளுக்கு உதவுவதில் முழுமனசுடன் இருந்து களித்த காதலன் பிரபுவையும் நிறுத்தி, ஈரடுக்குக் கதையொன்றைத் தந்துள்ளார் ஹேமிகிருஷ்.
------------------------------------------------------------------------------------------------------------------
[ துணைவரும் நிழல் என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில் அச்சான கதை/ மே.11-17]
யாழினி சிகிச்சை
அறையிலிருந்து வரும் தனது
அப்பாவின் முகத்தை பாராமலே "
போலாமா?" எனக் கேட்டாள்.
மூர்த்தி பதிலேதும் சொல்லவில்லை. நிதானமாய் நடந்து வந்தவரின் தோள்களை
தாங்கிப் பிடித்துக் கொண்டு மருத்துவமனையின் வெளியே வந்தாள். வாசலில் காரருகே காத்திருந்த
பிரபு வேகமாய் முன்வந்து மூர்த்தியை
தாங்கலாக பிடித்துக் கொண்டான்.
முன்பு கால் டாக்ஸியை வைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு
ட்ரிப்புக்கும் ஐந்தாயிரம்.செலவுகள்
ஒவ்வொன்றையும் கணக்குப் பார்த்தால், மனது அடித்துக் கொள்ளும். பிரபு அவளிடம் வந்து தானே மருத்துவமனைக்கு அழைத்து
போவதாக சொன்னான். முன்பென்றால் வேண்டாம் என்று சொல்லியிருப்பாள். இப்போது ஒவ்வொரு ரூபாயையும்
இழுத்து பிடிக்க வேண்டியதாகிறது. மருத்துவமனைக்கு
செல்ல வேண்டியிருக்கும் நாட்களில் பிரபு
சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு வருகிறான். ஈரோட்டிலிருந்து கோவை கூட்டிச்
செல்கிறான். சிகிச்சை முடிந்ததும் ஈரோட்டில் விட்டுவிட்டு சேலம் செல்கிறான். அவன்
வேலைப்பளுவிற்கிடையில் இவளுக்காக வந்து செய்வது அசாதரணம்.
அவளுக்கு சங்கடமாய் இருந்தாலும் வேறு வழியில்லை.
காரின் பின்னிருக்கையில் மூர்த்தியை அமர வைத்தார்கள். நன்றாக இருந்த காலத்தில் ஓட்டுனரருகே முன்னிருக்கையில்தான் அமர்ந்து
கொண்டு வருவார். ஜன்னற்கண்ணாடியை
திறந்து வைத்துக் கொண்டு இறங்கும் வரை
சிகரெட் புகைத்துக்கொண்டே வருவார்.
இப்போது பின்னிருக்கையில் கண்மூடி தலை சாய்ந்தபடி வந்தார்.
பிரபு வீடு வரை விட்டுவிட்டு கிளம்பிவிட்டான்.யாழினி வீட்டிற்குள்
அப்பாவை படுக்கையில் படுக்க வைத்தபோது அப்பாவின் முகத்தை ஏதேச்சையாய்
பார்த்துவிட்டாள்.
வலி நிரம்பிக் கிடந்தது . ஏண்டா பார்த்தோமென்றிருந்தது. சில வருடங்கள் முன்பு யாழினியின்
மாமனார் இறந்த போது, மூர்த்தி
காரிலிருந்து இறங்கினார், கேசம் கலைந்து, முகச்சவரம் செய்யப்படாமல், கீழே விழுந்து மாவுக்கட்டு
போட்டிருந்த காலை ஊன்றி ஊன்றி
நடந்து வந்தது யாழினி கண் முன் வந்து போனது.
அவளது கணவனின் சுற்றங்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஏளனமாகவோ அல்லது எப்படி இருந்தவர் இப்படியாகிவிட்டாரோ என்றோ, வேறேப்படியோ
நினைத்துக் கொண்டே பார்த்திருக்கக் கூடும்.
ஒரு காலத்தில் தினமும் தலை குளித்து, பரபரவென தலைதுவட்டி காய்ந்த பின் எண்ணெய்
வைத்து, படிய வாரி நெற்றியில் திருநீறு வைத்த பின்னே வெளியே வருபவர், இப்படி
அலங்கோலமாக வந்ததைப் பார்த்து யாழினிக்கு
கோபம். "இப்படியா வர்றது? கொஞ்சம் தலை முடியையாவது சரி செஞ்சுட்டு வரலாம்ல?
"என யாருக்கும் கேட்காதபடி அவரை கடிந்து கொண்டாள். அவரின் மூச்சுக்காற்றில்
கலந்திருந்த குடியின் வீச்சம் இன்னும் கோபத்தை தூண்டியது.
யாழினி திட்டிய போது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது
அவரின் வயிற்று உட்பகுதியில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது,
அவருக்கே தெரியாது. ஆனால் வலித்திருக்கமல்லவா. அதையும் சொல்லவில்லை. ஊமை வலியை சுமந்து கொண்டிருந்தவருக்கு
இன்னும் வலித்திருக்கும். இன்று
அவளுடைய அப்பாவின் முகம்
பார்க்கும் போதெல்லாம் அந்நிக்ழ்வும் சேர்ந்து வந்து ஒட்டிக் கொள்கிறது. அதன் கூர்மையைத் தாங்காது அவரை
கூடுமானவரை பார்ப்பதை தவிர்ப்பாள்.
போட்டு வைத்திருந்த பயித்தம்பருப்பு கஞ்சியை யாழினியின் அம்மா
லட்சுமி கொண்டு வந்தாள். மூர்த்தி வேண்டாமென்று அரற்றியும், அவர் தலையை, தன்
மடியில் கிடத்தி, " கொஞ்சம் குடிங்க.. வயிறு எரியும். லோ பிபி
ஆயிடும்பா" என லட்சுமி குழந்தைக்கு புகட்டுவது போல் கஞ்சியை அளித்தாள்.
தினமும் நடக்கும் கூத்துதான்.... குடி, நோய், வாதையின் கூத்து.
யாழினி பள்ளி
கிளம்ப ஆயுத்தமானாள். ' அம்மா.. பாத்துக்குவில்ல. நான் கிளம்பறேன்... அவசரம்னா
கால் பண்ணு " என சொன்னாள்.
அவளுடைய அம்மா காதில் விழவேயில்லை. மூர்த்திக்கு உணவளிப்பதில்
மூழ்கியிருந்தாள். இவள் வீட்டை வெறுமனே சாத்திவிட்டு வெளியே வந்தாள். மனது
சரியில்லை. பள்ளி செல்லும் மன நிலை கூட இல்லை. எத்தனை விடுப்பு எடுத்தாயிற்று.
இனியும் எடுக்க வேண்டும். நிர்பந்தமாய் கிளம்பினாள்.
விரித்த கம்பளம் போல் மஞ்சளேயென
வெயில் ஊரைப் போர்த்தியிருந்தது.
பன்னீர் செல்வம் பார்க் அருகே எங்கும் மனிதர் கூட்டம். வண்டியை ஊன்றிக்கொண்டேதான் செலுத்தவேண்டியதிருந்தது. கால் வைக்கும் இடங்களில் கூட கடைகள் பரந்திருந்தன. பெரிய மாரியம்மன்
கோவிலை தாண்டியதும் காற்று மெதுவாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
யாழினிக்கு வெளியுலகில் மனம் லயிக்கவில்லை. வழியறிந்த கிடைகள் தானே கூடடைவது போல் அவளுடைய வண்டி அதுவாகவே போய்க்
கொண்டிருந்தது.அவளுடைய சிந்தனை முழுக்க அப்பாவைப் பற்றியே இருந்தது. நல்லவேளை சரியான சமயத்தில்
ஈரோட்டுக்கு மாற்றல் கிடைத்தது. இல்லையெனில் அம்மா ஒண்டியாய் திண்டாடிக்
கொண்டிருந்திருப்பாள். "
அதெப்படி மெட்ராஸ்ல இருந்து ஈரோட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கும்?" என இனியன் கேட்டுக் கொண்டேதானிருந்தான்.
அவன் யூகம் சரிதான். அவள்
அப்பாவிற்கு உடல் நலம் அடிக்கடி குன்றிப் போனவுடன் , இனியனுக்குத் தெரியாமல்
யாழினி ஈரோட்டிற்கு மாற்றல் கேட்டு
விண்ணப்பித்தாள். இவ்வளவு
விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும்
சற்றும் பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழியில்லை. திராட்சை சுளையாய் கிடைக்கும்
சம்பளத்திற்காக வழியனுப்பி வைத்தார்கள்.
ஈரோட்டில் தற்போதைய அன்றாட
வீட்டுச் செலவுக்கு அவள் சம்பளத்திலிருந்துதான் செலவு செய்தாள். இன்னும் இனியனுக்கு
தெரியாது. இப்போதைக்கு அவசியமில்லை.
" உங்கப்பா குடிச்சுட்டு குடலை கெடுத்துட்டு திமிருக்குன்னு
இருப்பாரு. அதுக்கு நாம செலவு செய்யனுமா?" என முதன் முறை பணம் தந்தபோது
கேட்டான்.
" அதெப்படி உங்க சம்பாத்தியம் உங்க
பணம். என் சம்பாத்தியம் மட்டும் நம்ம பணம்? எனக்
கேட்டதற்கு இரு நாட்கள் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான். யாழினி இதுபோன்ற சமயத்தில்
பாழும் ஈகோவை தாக்குப் பிடிப்பதற்குத் திண்டாடினாள்.
இந்த படிப்பு, இந்த அரசு ஆசிரியர் வேலை எல்லாம் தன் அப்பாவினால்தானே
வந்தது. அவருக்கு தரக் கூடாதாம். நல்லவேளை சம்பாதிக்கிறோம். இல்லையெனில் நிலைமையை
நினைக்கவே பயங்கரமாயிருந்தது. என்ன செய்திருப்பாள் அம்மா? இதற்கும் தன்
அப்பாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள். என்னவோ இனியனிடம் உரிமையாக எதையும் கோர
முடிவதில்லை. அவளுக்கு அவ்வளவே இடம்
கொடுத்திருக்கிறான். எதுவுமே அவரவர் நடந்து கொள்ளும் அளவில்தானே விலக்கமும்,
நெருக்கமும். அவளுக்கு இப்போதிருக்கும் கவலை
அப்பாவிற்கு சரியாகிவிடாதா? இன்னும் ஐந்து வருடங்கள்
வேண்டாம்பின்னோக்கி சென்று எல்லாமே மாற்றிவிட முடியாதா? என்பது மட்டுமே.
யாழினி பிறந்த போது வந்த குடிப்பழக்கமென அவளுடைய அம்மா லட்சுமி
சொல்லிக் கொண்டிருப்பாள். முப்பது வருடங்களாக குடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்
புகைப்பழக்கம் வேறு. ஆனாலும் அவர் உடல் திடமாகத்தானிருந்தது. அந்தக் கால உடல்.
அறுபது வயது வரை சிறு தலை வலி, காய்ச்சலென்று கூட படுத்ததில்லை.
நெடுஞ்சாலைத்துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர். ஓய்வுக்குப் பின்
வேறு மாதிரியாகிவிட்டது. மூர்த்தியின்
மனதிற்குள் என்னென்னவோ கவலைகள். ஐந்து வ்யதிலேயே தன்னுடைய அம்மாவை இழந்த வலியோ,
விருப்பமில்லாத யாழினிக்கு கட்டாய மணம் செய்துவிட்டோமே என்பதா? வயோதீகமா? நேற்று வரை இருந்த அதிகாரப் பணி
இன்று இல்லை என்பதா? எதுவென்றே சொல்லமாட்டார். அதனை மூடி வைக்கத்தான்
இக்குடி..குடித்தால் வாசற்படியிலமர்ந்து
பழைய சிவாஜி பாடல்களை பாட ஆரம்பிப்பார். பின் தன்னிலை மறந்து அழ
ஆரம்பித்துவிடுவார். லட்சுமிதான் வலுக்கட்டாயமாக அவரை வீட்டிற்குள்ளே இழுப்பாள்.
மறு நாள் இதைப்பற்றிக் கேட்டால், அப்படியொன்று நடக்கவேயில்லையென மறுப்பார்.
சென்னையிலிருந்த யாழினிக்கு
லட்சுமி போன் செய்து அழுவாள்.
" உங்கப்பாவ என்னன்னு கேளுடி. இப்பல்லாம் பகல்லையும் குடிச்சிடு
வர்றார். வண்டி சாவிய ஒளிச்சு வச்சா, ஆட்டோ வரவச்சு போறார். போக விடாம வீட்டை பூட்டி வச்சா,
கத்தி கலாட்டா பண்றார். அக்கம்பக்கம் எல்லாம் அசிங்கமா நினைக்க மாட்டாங்களா?
"
இவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. எத்தனை அறிவுரை
வழங்கியாயிற்று. பயனில்லை. அமைதியே உருகொண்டிருந்தவர் கேவலம் குடிக்காக
தாண்டவமிட்டார். லட்சுமிக்கும் வயதாகிவிட்டது. அவளால் ஏதும் செய்ய முடியவில்லை.
தினமும் இப்படி அட்டூழியம் செய்ய, ஒரு நாள் திடீரன மயக்கம் போட்டுவிட்டார்.
லட்சுமிவுக்கு என்ன செய்வதென தோன்றாமல் கூப்பாடு போட்டாள். அக்கம்பக்கத்தினர் உதவியுடன்
மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
நாடி குறைந்து அபாயகர நிலையிலிருந்தார். ரத்தம் ஏற்றப்பட்டது. யாழினி
அவளது கணவன் இனியன் மற்றும் சுற்றம் சூழ மருத்துவமனையில் இருந்தபோது பிழைக்க
மாட்டார் எனப்பட்டவர், இரு
நாட்களில் ஜம்மென எழுந்து கொண்டார். எல்லா பரிசோதனைகளும்
இயல்பு நிலையில் இருந்தது.
இனி குடிக்க கூடாது என்ற
எச்சரிக்கையுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். ஒருமுறை மரணம் தொட்டதும்
அவருக்கு எங்கிருந்தோ தைரியம் வந்துவிட்டது. முன்பைவிட அதிகம் குடிக்க
ஆரம்பித்தார். மறுபடியும் அதே மயக்கம், அதே மருத்துவம்.
எதற்கும் இருக்கட்டுமென கோவை சென்று
தீவிரப் பரிசோதனைகள் செய்த போது, கல்லீரலிலிருந்து ரத்தம் கசிவது
தெரிந்தது. வருடக்கணக்காய் கசிந்து கொண்டிருந்திருக்கிறது. கசியும் ரத்தத்தை நிறுத்த ஒரு
ஊசியின் விலை இருபதாயிரம். அதையும் போட்டு சரி செய்த பின் வீட்டுக்கு வந்ததால்
மீண்டும் குடி, மீண்டும் ரத்தக் கசிவு, மீண்டும்
ஊசி, மீண்டும் செலவு எல்லாமே
மீண்டும் மீண்டும் மீண்டும்... ஒரே இடத்திலேயே சுழன்று கொண்டிருந்தது வாழ்வு.
வயிறு வீங்கி, புடைக்க ஆரம்பித்தது. சிரோஸிஸ் என்றார்கள். வயிற்றில்
தேங்கும் திரவத்தை வெளியேற்ற பதினைந்து நாட்களுக்கொருமுறை
காரில் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மூர்த்தியின் உயிரைத் தக்க
வைக்க, திண்டலருகே இருந்த நிலங்களை
விற்றார்கள். நகைகள் அடமானத்திற்கு போயின. மூர்த்தியின் பென்ஷன் மீது கூட லோன் வாங்கியாயிற்று. அப்படி
இப்படியென சமாளித்துக் கொண்டிருந்த தனது அம்மாவை இதற்கு மேலும் தவிக்க வைக்காமல்,
யாழினி மாற்றல் வாங்கி சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு வந்தாள்.
லட்சுமி திடமாய் சொன்னாள் " இங்க இருக்கற ஒவ்வொரு காசும் உங்க
அப்பா சம்பாசித்தது. எல்லாமே போனாலும்
சரி .. அவர் உயிரோடு இருந்தாவே போதும்".
" இந்த வியாக்கனம் எல்லாம் அவர் ஆரம்பத்துல குடிக்கிறப்ப வந்திருக்கனும்...
எல்லாமே போனதுக்கப்புறம் எதை வச்சு அப்பாவை காப்பாத்துவ?
" ஊசி குத்தற மாதிரி பேசாதடி.
சொன்னா கேக்கற பழக்கமா இது. உன் அப்பா ஒரு பக்கம் நீ ஒரு பக்கம்.
என்னை என்னதான் பண்ணச் சொல்ற. சாகட்டும்னு விட்ருவியா?
உன் அப்பா இருக்கறவரைக்கும் நான் பாத்துக்கறேன். முடியலைனா நீ
கிளம்பு உன்னை யாரும் கைபுடிச்சு வச்சுக்கல.."
அவள் சொன்னதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது. குடி
ஒரு மாயச்சுழல், அதில் சிக்கி வெளிவருவது அவ்வளவு எளிதல்ல.
அவளுக்கு தனது அப்பாவிற்கு செலவு ஆவதை விட ஊசி, ட்ரிப்ஸ் என உடல் ரணமாவதுதான்
நிம்மதியை இழக்கச் செய்தது. சிகரெட் இல்லாமல் குடியில்லாமல் இப்படி அப்பாவை
பார்ப்பது நினைவு தெரிந்த நாளிலிருந்து இதுவே முதன் முறை. நல்ல போஷாக்கான உடல்
உருகி மென்மையாகியிருந்தது.
மூர்த்தியை கோவை மருத்துவமனையில் சேர்த்தபோதுதான், பல வருடங்களுக்குப்
பிறகு பிரபுவை பார்த்தாள். நலம் விசாரிக்க வந்தவன், மூர்த்தியை பாராமல்
மருத்துவமனையின் வரவேற்பறையிலேயே நின்று கொண்டான்.
" அப்பாவை மேலே வந்து பாரு பிரபு" என யாழினி கேட்டதற்கு
" வேணாம்.. அவர் என்ன பாத்தா கில்டியா ஃபீல் பன்னுவாரோ, இல்ல கோபப்படுவாரோ.
இந்த நிலைமைல எதுக்கு அவர வருத்தப்பட வைக்கனும்?"
" நீ அவரை ஃபர்ஸ்ட் டைம்
மீட் பண்ண வந்தப்போ அவர் உன் முகத்தை ஏறெடுத்து கூட பார்க்கலை
.எனக்கு நல்லா தெரியும். அவருக்கு அப்போ கோபம்லாம் என் மேலதான் .. அவர் லவ்வுங்கற
வார்த்தைக்கே எதிரி. அப்றம்தான் பையனோட ஊரு, பேருல்லாம் ..வா. அதெல்லாம் எதும்
நினைக்க மாட்டாரு" என சொன்னபிறகே அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருக்கிறான்.
பள்ளி வந்தடைந்த போது யாழினிக்கு
மூச்சு இறுக்கிபிடித்தது. காற்றை ஆழ்ந்து இழுத்து நிரப்பிக்
கொண்டாள். காலையில் மருத்துவரை பார்த்தபோது " அவர் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்"
எனச் சொன்னார். இதை எப்படி தனது அம்மாவிடம் சொல்லப் போகிறோம் எனத் தெரியவில்லை. .
அப்பா இப்படி வலியால் வதைபடுவதைக் காட்டிலும் மரணம் மேல் என பலமுறை
நினைத்திருக்கிறாள். ஆனால் மருத்துவர் அறிவித்தபின் அவளுக்குள் எதோ ஒன்று
உடைந்தது.
பள்ளியில் வகுப்புப் பாடம், மாணவர்கள் என சுழன்றதால் யாழினியின் மனது
சற்று தேவலாமென்றது. காலையிலிருந்த
அழுத்தம், மாலையில் இல்லை. வீட்டிற்குள் நுழைந்ததும் அப்பாவின் அறைக்கு சென்று
பார்த்தாள். மெல்லிய விளக்கெரிய அமைதியாக படுத்துக் கொண்டிருந்தார். இவள்
சத்தமிடாமல் வெளிவரும்போது, "அம்மா" என அழைத்தார். பிறகு ஜன்னலைப் பார்த்தார்.
ஜன்னல் கதவை திறந்து வைக்கச் சொல்கிறார்.
வாடகை வீட்டிற்கு குடி வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ரயில்வே காலனி அருகே இருந்த
சொந்த வீடு அடமானத்தில் இருக்கிறது. வட்டி கட்ட அதனை
வாடகைக்கு விட்டுவிட்டு, இந்த சிறிய வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.
இது புறாக்கூடு போலிருந்தாலும்
இதுவே போதுமானதுதான். ஆனால் அது முப்பது வருடங்கள் புழங்கிய வீடு.
மூர்த்தியின் சிறுதுளியில் பெரு வெள்ளமாய் மாறிய வீடு.
பொட்டளவுகூட விரிசல் கிடையாது.
ஒருமுறை வெளியிலிருக்கும் சிட்
அவுட்டின் கைப்பிடி சுவரை மாற்றிக் கட்ட,
இடிக்கும் போது எளிதில்
உடைபடவில்லை. இடிக்க வந்த கூலியாட்கள் "
யாருங்க இஞ்சினியர்? என வியந்து
கேட்டபோது மூர்த்தி " இஞ்சினியர்லாம்
ஏது? மேஸ்திரி வச்சுதான் கட்டுனேன். நேரங்காலம் பாக்காம, நானே வந்து வந்து தண்ணி விடுவேன். சிமெண்ட்லாம்
இறுகி கருங்கல் மாதிரி ஆயிடுச்சு " என பெருமை பொங்க சொன்னார். அந்த வீட்டை அத்தனை எளிதாக விட்டு வந்திருக்க மாட்டார். மனதிற்குள்
அழுது கொண்டுதானிருப்பார் என யாழினிக்குத் தெரியும்.
மத்திய அரசு வேலை, கைகொள்ளா பென்ஷன், பிக்கல் பிடுங்கலில்ல்லை.
ஆனாலும் வெட்கக்கேடு பென்ஷன், வீடு நகை எல்லாமே
அடமானம். ஆஹா அற்புதம் எங்கேனும் நடக்குமா?
பொறிக்கபடவேண்டிய வார்த்தை குடி குடியைக் கெடுக்கும். பொறித்தாலும் குடிப்பவர்களுக்கு புரியவா போகிறது. வேதனையாக சிரித்தாள் யாழினி.
" அம்மா வெள்ளிக்கிழம மத்தியானம் சென்னை கிளம்பறேன். சனிக்கிழமை பேங்க் வேலை இருக்கு.
முடிச்சுட்டு சண்டே வந்துடறேன்" என்று அம்மாவிடம் சொன்னாள். அவள் வழக்கமாய்
போவதுதான். வாரவாரம் போனவள் இப்போது இரு வாரத்திற்கு ஒருமுறை போகிறாள்.
சொன்னது போலவே வெள்ளியன்று கிளம்பினாள். ரயிலின் ஜன்னலோரத்தில்
யாழினி அமர்ந்திருந்தாள். நல்ல உச்சி வெயில். எதிர் இருக்கையில் கால் நீட்டி
ஒருக்களித்து ஒரு பெண்மணி தூங்கிக் கொண்டிருந்தார். கோவையில் ஏறியிருக்கக்கூடும்.
யாழினிக்கு மனம் முழுக்க தவிப்பிருந்தது.
வீட்டை அப்பா உயிருடன் இருக்கும்போதே மீட்டுவிட வேண்டும். பத்து
லட்சம் கட்டினால் மீட்டு விடலாம். அவளுடைய
சேமிப்பில் தேறும். ஆனால் சிக்கல் என்னவெனில் இனியனுடன் கூட்டுக் கணக்கில்
பணமிருந்தது. அவனில்லாமல் பணம் எடுக்க இயலாது.
அங்கு போய் என்ன சொல்லக் காத்திருக்கிறார்களோ எனக் குழப்பமாகவும் இருந்தது.
சென்னையில் இருக்கும்போது, அலைபேசியில்
இரு நிமிடம் சேர்ந்தாற்போல் தனது அம்மாவிடம் பேசினால் போதும் இனியன்
அம்மா ஆரம்பித்துவிடுவார். " புருஷன் வீட்ல, தெரியாத
பங்காளி செத்தா கூட ஒரு
வருஷம் விலக்கு இருக்கு, இதே நம்ம பொறந்த வீட்ல அம்மா, அப்பாவே போனாலும் மூணு
நாள்தான் தீட்டு. அவ்ளோதான்
பந்தம். " என அவளுக்கும் பிறந்த வீட்டிற்கும் இருக்கும் பிணைப்பை அறுப்பது
போல் அடிக்கடி சொல்லி காண்பிக்கும்போது, இந்தக் காதிரண்டும் கேட்காமலிருந்தால் எவ்வளவு
ஆனந்தமாக இருக்கும் என நினைத்திருக்கிறாள்.
போதாதற்கு அவளுடைய அப்பாவுடைய குடிப்பழக்கம் தெரிந்த நாளிலிருந்து,
மூர்த்தியின் பெயரைச் சொன்னாலே, அருவெறுப்பாய் ஏதோ பூச்சியை பார்ப்பது போலத்தான்
முகத்தை வைத்துக் கொண்டாள்.
எல்லாம் தெரிந்துதான் ஊருக்கு கிளம்பினாள்.
ரயில் அடுத்த ஒரு மணி நேரத்தில் சேலம் வந்தடைந்தது. ஒன்றிரண்டு பேர் இறங்க
எழுந்தார்கள். எதிர் இருக்கைலிருந்த அந்தப்
பெண் இன்னும் எழவில்லை. கழுத்து மடிப்பில்
வியர்வை வரியாய் தங்கியிருந்தது.
நல்ல அசதி போலிருக்கிறது.
ரயில் நிலையத்தில் பிரபு
முன்னதாகவே காத்துக் கொண்டிருந்தான் . கையில் தண்ணீர் பாட்டிலும், இரு வாழைப் பழங்களும் இருந்தன.
யாழினியை பார்த்ததும் வெளியிலிருந்தே ஜன்னல் வழியாக இரண்டையும் கொடுத்தான்.
அவனுக்கும் ஜன்னலுக்கும் குறுக்கே ஒரு வெள்ளரிக்காரம்மா "வெள்ரீக்கா" என
கூவிக் கொண்டு அவனை பொருட்படுத்தாமல் சென்றார்.
வெள்ளரிக்கா வேணுமா என சைகையில் பிரபு கேட்டான். இவள் வேண்டாமென தலையாட்டினாள்.
யாழினி பாட்டிலை திறந்து
மடமடவென நீரைக் குடித்தாள். அவளிடமும் நீர் பாட்டிலிருந்தது.
"எப்ப திரும்பி வர்ற?"
" ஞாயித்துக் கிழமை . நாளைக்கு அரை நாள் பேங்க் இருக்கும்ல
அதான் போய் வேலைய முடிச்சுட்டு வரலாம்னு"
" உன் வீட்டுக்காரர்ட்ட சொல்லியாச்சா?"
" சொல்லிட்டேன். ஆனா
உண்மைய வேற மாதிரி சொன்னேன். ஒத்துகிட்டார்" என சிரித்தாள்.
" என்ன சொன்ன?"
" இந்த வீடு என் அப்பாவுக்கு அப்புறம் எனக்குதான். மெயின்
ஏரியா. இடமே கோடிக்கு வரும். அப்பாக்கு
இப்பவே அந்த வீட்டை எனக்கு எழுதித் தரனும்னு ஆசை. அடமானத்தில இருக்கறப்போ உயில்
எழுத முடியாது. அதோட மீட்டாம போயிட்டோம்னா
வீடும் கைவிட்டுப் போயிடும். அதனால வீட்டை மீட்டு எம்பேர்ல எழுத ஏற்பாடு பண்ணப்
போறேன்னு சொன்னேன். அப்றம் ரெண்டு நாள் யோசிச்சுட்டு சரின்னுட்டார். "
பிரபு ஜன்னல் கம்பிகளின் நீலப் பூச்சை
கை நகத்தால் சுரண்டினான். யாழினியின் கண்கள் அவனுடைய விரல்களுக்கு
தாவியது. அவனுக்கு நீள விரல்கள்.
முன்னெப்போதோ, இருவரும் கைகோர்த்துப்
பேசுகையில் அவனது உள்ளங்கையிலேயே அவளது மொத்த கையும் அடங்கிவிடும். தனிச்சையாக தன்
உள்ளங்கையை தடவிக் கொண்டாள்.
" ஏன் உண்மைய சொல்லலாம்ல" அவளுடைய நினைவுகளைக் கலைத்தான்.
" வீட்ட மீக்க பணம் வேணும்னு
சொன்னேன்னு வச்சுக்கேயேன்..அவங்க அம்மாவோ அக்காவோ என்
அப்பாக்கு கால் பண்ணி. "உங்க பொண்ண வச்சு எம்பையன்ட்ட பணத்தை
கறக்க பாக்கறீங்களா"ன்னு கேப்பாங்க..அவங்களுக்கு என் அப்பா எந்த நிலையில
இருந்தாலும் அக்கறையில்லை. ஆனா எனக்கு இருக்கு பிரபு" சில நொடிகள் ஆழ்ந்து
மூச்சுவிட்டு,
"இப்போதைக்கு எனக்கு சண்டை போடவும் தெம்பு இல்லை . எல்லாம்
சுமூகமா முடியட்டும். அப்றம் பாத்துக்கலாம்.
எதை பாக்குறது சொல்லு ஒரு பக்கம் ஸ்கூல், ஒரு பக்கம் கடன், இன்னொரு
பக்கம் அப்பா, இதெல்லாம் போதாதுன்னு இனியன் வீட்ல ஒரு பக்கம்... எல்லாத்துக்கும் முட்டிட்டு
நின்னா நமக்குதான் மண்டை
வீங்குது." சிரித்தாள்.
"உறவுகள் தொடர்கதை! உணர்வுகள் சிறுகதை" என்ற பார்வையற்றவரின் வசீகரக்
குரல் ஒன்று பெட்டிக்குள் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள். யாழினியின் கண்களில்
தானாகவே ஈரம் படர்ந்தது. அவருக்கு காசைக் கொடுத்துவிட்டு கண்ணிமைகளைத் துடைத்துக்
கொண்டாள். பிரபு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளாகவே மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.
" டெனன்ட்கிட்ட அப்பாவோட நிலைமைய சொன்னேன். கடைசி காலத்துல
அப்பா இந்த வீட்ல இருக்கனும்னு சொன்னதும் வீட்டை காலி பண்றதா சொல்லிட்டாங்க."
"ஏன் எல்லாத்துக்கும் அவசரப்படற.
அவங்களும் போயிட்டா இன்ட்ரெஸ்ட் எப்படி கட்டுவே? அப்றம் பெரிய தலைவலி
ஆகிடும்"
" இல்ல பிரபு முடிவோடதா போறேன். பணமில்லாம திரும்ப மாட்டேன்.
அது நான் சம்பாதிச்ச பணம். எனக்கு எடுக்க உரிமை இல்லைனா. ரிடிகுலஸ்."
எரிச்சலோடு சொன்னாள்.
" புரிஞ்சுது"
" இதுவரைக்கும் இவரு அவங்க
வீட்ல இருக்கறவங்களுக்கு செய்யறப்போ,
மனசாரக் கூட ஏன் செய்யறாருன்னு நினைச்சதில்லை. அவரும் அப்படித்தானே என் விஷயத்துல
இருக்கனும்? இவங்களுக்கு என்னைத் தவிர வேற யார் இருக்கா?" கோபத்திலும்
ஆதங்கத்திலும் முகம் சிவந்தது.
" சரி பொறுமையா டீல் பண்ணு. தரலைன்னா சொல்லு, அதான் நான் லோன்
போட்டு தர்றேன்னு சொன்னான்ல. நீதான் வேண்டாங்கிற"
" எல்லாமே நீ பண்றதுக்கு உன்னையா நான் கல்யாணம் பண்ணிருக்கேன்
?"" சட்டென வெளிபட்ட வார்த்தைக்கு அவசரமாய் தன்னை கடிந்து கொண்டாள்.
பிரபு முகம் மாறியது. ரயில் பெட்டிக்குள் இருப்பவர்கள் தன்னை
கவனிக்கிறார்களா என பார்த்தாள்.
ரயில் சங்கு ஊதியது. நடைபாதையில்
சாகவாசமாய் சிக்ரெட் குடித்தவர்கள் அவசரமாய் அணைத்துவிட்டு ஏறத் தொடங்கினார்கள்.
வழியனுப்ப வந்தவர்கள் ரயிலிலிருந்து இறங்கினார்கள். மெதுவாய் வண்டி
நகரத்தொடங்கியதும், அவன் கையசைத்து "பத்திரம்" என்றான். வெயிலில்
அவனுடைய நெற்றி மினுமினுத்தது.
அப்போதுதான் யாழினிக்கு இத்தனை
நேரம் வெயிலில் நிற்க வைத்து பேசினோமோ என்று உறைத்தது.. அவசரமாய் மன்னிப்பு
குறுசஞ்செய்தி அனுப்பினாள். அவனிடமிருந்து சிரிப்பு பதிலாக வந்தது.
சென்னை வீட்டை அடைந்த போது இனியன் மட்டும்தானிருந்தான். அவனுடைய அம்மா இனியனின் அக்கா
வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஒவ்வொருமுறையும் நடப்பதுதான். அவரை யாழினியே தேடிச்
சென்று அங்கு போய் பார்க்க வேண்டும். அது பரவாயில்லை.
வந்தபின் இனியன் பணத்திற்கு ஏதேனும் மறுப்பு
சொல்வானோ என பயந்தாள் மாறாக
அவன் உற்சாகமாய் ஒத்துக் கொண்டது யாழினிக்கு கூடுதல் நிம்மதியை தந்தது.
மறுநாள் வங்கிக்கு சென்று பணத்தை யாழினியின்
வங்கி சம்பள கணக்கில் மாற்றிக் கொண்டார்கள். அவள் மாமியாரைச் சென்று
பார்த்துவிட்டு , வீட்டில் சமைத்து உண்டு மறுநாள் கிளம்பும் வரை எல்லாமே இயந்திரத்தனமாய் நடந்தது. ஒருபோதும் அனுசரணை, பரிவு, தோள்
தராத ஏன் இரக்கம் காட்டாத அன்பு என்று உண்டா? அப்படியொன்றைதான் இனியன்
அன்பென்கிறான் காதல் என்கிறான். அந்த அன்பு அவளிடம் கண்ணாமூச்சிதான் காட்டுகிறது.
கையில் அகப்பட்டதேயில்லை. எங்கு குறை, எதை சரி செய்ய வேண்டும் எனத் திக்கு
தெரியாமல் ஐந்து வருட மண வாழ்க்கையில் திண்டாடினாள்.
"போனதும் முத வேலையா ரெஜிஸ்ட்ரேஷன் பண்ற வழியப்பாரு.
உங்கொப்பாக்கு அப்படியாச்சு, நொப்படியாச்சுன்னு கதைலாம் சொல்லிட்டு இருக்காத.
உனக்காகத்தான் என் வேலையில்லாம விட்டுட்டு பேங்க் வந்தேன். " என அவள்
ரயில் ஏறும் வரை சொல்லிக் கொண்டேயிருந்தான்.
ரயிலில் அமர்ந்ததும் அசதியில் உறங்கிப் போனாள். மழை பெய்த ஓரிடத்தில்
விழித்துக் கொண்டாள். நல்ல மழை. . பருவம் தப்பி வரும் மழை. சோவென பெய்து, சடாரென நின்று ,
மீண்டும் தபதபவென பெய்யத் தொடங்கியது. தன்னியல்பை தொலைத்த மழை. ஏனைய பயணிகள்
மழையையே பார்த்தபடி வந்தார்கள். அவரவருக்கென நினைவுகள்.
ரயில் சேலத்தில் நின்றபோது ஜன்னலுக்கு வெளியே பிரபுவின் முகத்தை
தேடினாள். மெல்ல இருட்டியிருந்தது.
இரவில் யாழினி வீடு வந்து சேர்ந்ததும்,
மூர்த்தி தானே எழுந்து தானே நடக்க ஆரம்பித்ததாக லட்சுமி மகிழ்ச்சியாக
சொன்னாள். "போதும் இப்படி நடமாடற அளவுக்கு இருந்தாவே போதும். உங்கப்பாவை நானே
பாத்துக்குவேன். பாவம் மனுஷன். வீட்ல ஒரு நிமிஷம் தங்காம அங்க இங்கன்னு போயிட்டு
இருந்தவரு. " என கண்கலங்க சொல்லிக்கொண்டிருந்தாள்.
படுக்கையில் சாய்ந்தமர்ந்திருந்த தனது அப்பாவை சென்றுப் பார்த்தாள்.
பல நாட்கள் கழித்து உற்று நேருக்கு நேராய் பார்த்தாள். இரும்பு போலிருந்த மனிதரை
புழு போல் மாற்றிருந்தது குடி. கன்னம் ஒடுங்கி கண்கள் மட்டும் பிதுங்கி தெரிந்தது.
உள்ளே என்னென்னமோ வதைக்கிறது என யாழினியால் புரிந்து கொள்ள முடிந்தது. வாதையின்
வீச்சில் குரல் உடைந்து பிசிறி வெளிப்பட்டது. மூச்சின் ஒலி ஓங்கியிருந்தது. ஆனால்
லட்சுமி புரிந்து கொள்ளாமல் முன்னேறிக்கொண்டு வருகிறார் என்கிறாள்.
குடியை நீக்கி விட்டுப் பார்த்தால் மூர்த்தியிடம் எந்த குறையும்
சொல்லமுடியாது. அத்தகையவர் அவள் காதலுக்கு எதிர்ப்பு சொல்வாரென அவள் நினைத்தே
பார்க்கவில்லை. எவர் தூற்றினாலும மறு வார்த்தை
பேசாமல் வந்துவிடுவார். ஏதோ
ஒரு மனஸ்தாபத்தில் அவருடைய உடன் பிறந்த அக்கா, " உன்
பொண்ணு எவனையோ இழுத்துட்டு போவா பாத்துட்டே இரு" என்று சாபமிட்டிருக்கிறார். அந்த சாபம் மட்டும் பலித்திடக்
கூடாதென்பதில் தீவிரம் காட்டினார். அப்போது யாழினி தோற்றுப் போனாள்.
" ஆடும் வரைக்கும் ஆடியிருப்போம் தங்கமே ஞானத்தங்கமே! ஆட்டம் முடிந்தால் ஓட்டம்
எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே" என எங்கோ
பாடல் ஒன்று ஒலித்தது. எழுந்துச் சென்று வெளிக்கதவைச் சாத்தினாள். இப்போது கேட்கவில்லை.
அகச்சூழலுக்கேற்றார் போல் புறத்தில் இப்படி
பாடல்களோ, தத்துவார்த்த பிரசங்கங்களோ கேட்பது அவளுக்கு பல முறை
நிகழ்ந்தேறியிருக்கிறது. அவளுக்கு இன்னோர் நிகழ்வுக்கும் அப்போது நினைவுக்கு
வந்தது
அவளுக்கு திருமணம் முடிந்த அன்று
மண்டபத்திலிருந்து தனிப்பேருந்தில் கணவன் வீட்டாரோடு புகுந்த
வீட்டிற்கு புறப்பட்டபோது,
" நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டுவிட்டு அரளிப் பூச்சூடி அழுதபடி போற
புள்ள" என்ற பாடல் அருகிலிருந்த ஒரு பேக்கரி ஸ்பீக்கரில் ஒலித்துக்
கொண்டிருந்த போது, அவளை மீறியும் அழுகை பீறிட்டு வந்தது. பிறந்த வீட்டையெண்ணி
அழுகிறாளென உள்ளிருந்தவர்கள் நினைத்துக் கொண்டார்கள். சற்று தூரம் கடந்ததும்,
அப்பாடலின் பல்லவியை கேட்க காதை கூர்தீட்டினாள். "ராசாத்தி என் உசுரு
என்னுதில்ல" என எங்கோ
ஒரு பிரிவின் ஒலம் மனதிற்குள் சன்னமாக கேட்டபடியே இருந்தது. இன்னுமிருக்கிறது.
மறுநாள் காலையிலிருந்தே எப்போது
பத்திரப்பதிவு என இனியன் கேட்கத் தொடங்கிவிட்டான். எரிச்சலில் அவனுடைய அழைப்பை
நிராகரிக்கத் தொடங்கினாள். துரிதமாய் அடுத்தடுத்த நாட்களில் வங்கியின் லோன் பணத்தை
அடைப்பதற்கான எல்லா வழிமுறைகளையும் செய்தாள். அந்த வார இறுதியில் மீண்டும் அவளுடைய
அப்பாவை கோவைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதிருந்தது. டாக்ஸியில்தான் அழைத்துச்
சென்றாள். வழக்கமாக செல்லும் மருத்துவமனை.
அங்கு வருபவர்கள் பலரும் குடிப்பழக்கத்தால் கல்லீரலை தொலைத்தவர்கள். தேங்காய் உடைபடுவது போல் ஒவ்வொரு
உயிரும் அடுத்தடுத்து இறந்ததை அவள் கண்ணெதிரே பார்த்திருக்கிறாள்.. அனைவரும் வயது
முப்பது முப்பத்தைந்தையே தொட்டிருப்பார்கள். ஆனால் குடும்பத்திற்கு ஏகக் கடனை
விட்டுச் சென்றிருப்பார்கள். குடி என்ற வார்த்தையே அவளுக்குள் பெரும் அசூயை உண்டு
பண்ணியிருந்தது.
மூர்த்திக்கு வயிற்றிலிருந்த திரவத்தை வெளியேற்றியதும் கொஞ்சம் ஆசுவாசமாகியிருந்தது.
வீட்டிலிருந்தே கஞ்சி செய்து கொண்டு வந்திருந்தாள். வெளி உணவு சாப்பிட்டால் உடனே
தொற்று ஏற்பட்டுவிடும். கொஞ்சம் தெம்பாக பேசினார். மீண்டும் ஈரோட்டுக்கு
கிளம்பினார்கள்.
மணி நேரத்தில் ஈரோட்டை அடைந்த வண்டி, தற்சமயம் குடியிருந்த இடத்தைத்
தாண்டி ரயில்வே காலனி நோக்கிச் சென்றது.
மூர்த்தி கண்மூடிப் படுத்திருந்தார். வண்டி நின்றதும் மூர்த்தியை
எழுப்பினாள். எழுந்தவர் புரியாமல் யாழினியைப் பார்த்தார். அவருடைய சொந்த வீடருகே
வண்டி நின்றுகொண்டிருந்தது.
" என்ன பாக்கறீங்க. உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கனும்னுதான்
சொல்லல. வீட்டை மீட்டுட்டோம். இனிமே இங்கதான் இருப்போம். " என்றாள். லட்சுமி
அவரைக் கண்டதும் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர்
விட்டாள். " இந்த கழுத நம்மகிட்ட கூட சொல்லாம என்ன பண்ணிருக்கா பாத்தீங்களா? எனக்கே இப்பதாங்க தெரியும். நீங்க கிளம்பினதும் வீட்டை காலி
பண்ண பிரபுவும் ஆளுங்களும் வந்து நிக்கறாங்க. இவளுக்கு போன் பண்ணிக் கேட்டா,
சிரிச்சுட்டு உண்மைய சொல்றா "
என மகிழ்வில் திணறினாள்.
அவரை இருவரும்
கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார்கள். மூர்த்திக்கு சில்லென்ற மார்பிள் தரையில்
பாதம் பட்டவுடன் மகிழ்ச்சியில் கை கால்கள் நடுங்கின.
அவருடைய படுக்கையறையில் சாய்ந்து படுக்க வைத்தாள்.
எப்படிம்மா? என உடைந்த குரலில் கேட்டார். அதற்கு மேல் பேச குரலுக்கு
வலுவற்று போயிருந்தது .
" என்னோட சேவிங்க் பணம்தான் பா.. முன்னாடியே சொல்லியிருப்பேன்.
ஆனா உங்கள சந்தோஷத்துல திக்குமுக்காட வைக்கனும்னு நினைச்சேன். அதான் இந்த சர்ப்ரைஸ். நாம ஹாஸ்பிடல்ல இருந்தப்ப, வீடு
காலி பண்ணி இங்க செட் பண்ண பிரபு ஹெல்ப் செஞ்சிட்டு போனான். " என சொன்னதும்,
அவளுடைய கைகளை நடுங்கியபடி பிடித்தார். கண்களிலிருந்து கண்ணீர்
வந்துகொண்டேயிருந்தது. உதட்டில்
சிரிப்பும் தவழ்ந்தது. அவருடைய
வலி தாண்டி மின்னல் கீற்று போல் ஒரு மகிழ்ச்சியை யாழினி பார்த்தாள். இது
போதுமென்றிருந்தது. யாழினி ஜன்னல் கதவை திறந்தது வைத்தாள். எட்டு மணி ரயிலோசை
தூரத்தில் கேட்டது. மழை
ஈரத்தில் ஊறிய மரங்களின் வாசனை
மெல்ல வீட்டிற்குள் நுழைந்தது. அது எல்லா வலிகளையும் சாந்தமாக்கி, வீடெங்கும் ஓர் அமைதியை பரத்திக்
கொண்டிருந்தது. இந்த கணத்தில் எவரோ, எங்கோ
தனக்கே தனக்காய் ஒரு பாடல் தந்தால் தேவலாமென்றிருந்தது யாழினிக்கு.
கருத்துகள்