இது தொடக்கம்



திறப்பு ரகசியத்திற்கான குறியீடுகள் மறந்தால் திரும்பவும் பெறுவதற்குச் சில தகவல்களைப் பதிவு செய்யும் பட்டியலில் கேட்கப்படும் கேள்வியாக இருப்பது உங்கள் பிறந்த நகரம் எது ?நான் நகரத்தில் பிறக்கவில்லை; கிராமத்தில் பிறந்தேன்; அதுவும் எங்கள் வலசலுக்கே பொதுவாக இருக்கும் திண்ணையில் பிறந்தேன் என்றெல்லாம் சொல்லமுடியாது.இணையமும் இணையம் சார்ந்த ரகசியங்களும் நகரவாசிகளுக்கே உரியது என்பதின் அடையாளம் இது. வேறு வழியில்லாமல் இந்தக் கேள்விக்கு மதுரை என்று சொல்லிவைப்பேன். ஆனால் மதுரைக்கும் எனது கிராமத்திற்கும் இடையேயுள்ள தூரம் 36 கல் தொலைவு என்று எனது தாத்தா சொல்வார். ஒரு கல் தொலைவு என்பதை மைல் கணக்காக மாற்றிக்கொண்டிருந்த காலம் முடிந்து இப்போது கிலோமீட்டரில் மாற்றும் காலத்தில் இருக்கிறோம்.

ஒரு தாத்தாவாக எனது முதல் பேரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் இருந்து வந்துள்ளேன். ஏனென்றால் 23 வருடத் திருநெல்வேலி வாழ்க்கையில் 'பிறந்த ஊர் நெல்லை’ எனச் சான்றிதழ் பெற்றவன் (மே 3) அவன் மட்டுமே. மகள் சிநேகலதாவின் மகன் ஹர்ஷித் நந்தன். அவனது தந்தையின் விருப்பமான ஹர்ஷித்தையும் எனது விருப்பமான நந்தனையும் இணைத்து உருவாக்கிய பெயர். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவனோடு இருப்போம். மூன்றாவது பிறந்த நாளில் போலந்து நாட்டு வார்சாவுக்கு வந்தான். அங்கிருந்த இந்திய நண்பர்களோடு சேர்ந்து அவனது பிறந்த நாளைக் கொண்டாடினோம். இது 14 வது பிறந்த நாள். அவனோடு இருக்க முடியவில்லை. ஒருமாதம் தாண்டிவிட்டது. நேரில் பார்த்தும் ஓராண்டு கடந்து விட்டது. அமெரிக்காவில் இருக்கிறார்கள். இப்போது பார்க்க வந்துவிட்டோம்.

டல்லாஸ் நகரின் கொரிந் பகுதியில் சரோன் ஏரிக்கரையில்- லேக்சரோன் - தனித்தனியாக இருக்கும் வரிசை வீடுகளில் மகள் குடும்பம் இருக்கிறது. இதேபோல் பல்வேறு குடியிருப்புகளை உள்ளடக்கியது கொரிந்த். கொரிந்த் என்பதை ஒரு தொகுதி அல்லது வட்டாரத்தின் பெயர் எனச் சொல்லலாம். அது டெண்டன் என்ற கவுண்டிக்குள் இருக்கிறது. கவுண்டி என்பது மாநகராட்சி போல. சென்னை மாநகரத்தில் ஆவடி, தாம்பரம், சென்னை மாநகராட்சிகள் இருப்பது டெண்டன் டல்லாஸ் நகரின் ஒரு மாநகராட்சிப் பகுதி. அதனைக் கல்வி மாவட்டமாகவும் சொல்கிறார்கள்.

இங்கு இப்போது கோடை காலம். சூரியன் நேரம் 16 மணி நேரத்திற்கும் அதிகமாகவே இருக்கிறது. எப்போதும் காலை ஐந்தரை மணிக்கு எழுந்து பழக்கப்பட்ட எனக்கு இங்கும் அதே பழக்கம் தொடர்கிறது. விழித்துப் பார்த்தால் நம்மூரில் ஆறரை மணி போல் வெளிச்சம் இருக்கிறது. 7 மணிக்கெல்லாம் வெள்ளை வெயில் கண்களைக் கூசச்செய்கிறது. 30 செல்சியல் வெப்பநிலைக்குக் கீழே இருக்கிறது. ஆனால் வியர்வை இல்லை. முன்னிரவு 21.00 மணி வரை சூரியனின் கதிர்கள் தெரிகின்றன. இரண்டாவது நாள் தொடங்கி இரண்டு நாட்கள் நள்ளிரவில் இடியுடன் கூடிய மழை .

காலையில் மழை பெய்த அடையாளங்கள் இல்லை. சாலைகளில் வேகமாக கார்கள் ஓடுகின்றன. எட்டு மணிக்கெல்லாம் பணியிடங்களுக்குச் செல்லும் பரபரப்பு. முதலிரண்டு நாட்கள் காலக் குழப்பத்தில் தூங்கி வழிந்தோம். அமெரிக்காவின் கோடை காலத்திற்கான ஆடைகள் வாங்க பேரங்காடி வளாகத்திற்குள்ளும் போய்வந்தாயிற்று. சுத்தமான சுற்றுச்சூழல். மாசுபடாத காற்று. நீர்நிலைகள் கொண்ட குடியிருப்பு வளாகங்கள். எதிரே வருபவர்களுக்குப் புன்னகையோடு கூடிய வணக்கங்கள் என அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள என்னவெல்லாம் இருக்கின்றன என்று கவனித்துப் பதிவுசெய்துகொள்கிறேன்.

நகர் மையத்தின் அடையாளங்களாகக் கோபுரத்தன்மை கொண்ட கட்டடம் ஒன்றிருக்கிறது. அதனைச் சுற்றிப் புல்தரைகள், இருக்கைகள் போடப்பட்டுள்ளன. நான்குபுறங்களிலும் வீதிகளில் வெவ்வேறு விதமான அங்காடிகள். திரையரங்குகள், கலை இலக்கியக்கூடங்கள், புத்தகச்சாலைகள், விளையாட்டு மைதானங்கள் எல்லாம் இருக்கின்றன. ஒரு வாரக்கடைசியில் அந்நகர் மையம் போய்வந்தோம்.125 ஆண்டுகளைக் கடந்த (1886) தாண்டிய அந்தக் கட்டடம் பழைமை மாறாத புதுமையோடு நிற்கிற, அந்தக் கட்டடத்தின் முன்னால் ஓர் இசைக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாகத் தரையிலும் கையோடு கொண்டுவந்த இருக்கைகளிலும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டே இசைக்கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள், சிறார்கள் ஒரு பக்கம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். யேசுவைக் குறித்த பதாகையோடு வலம் வந்த ஓரிளைஞர் என்னோடு படம் எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். அந்தப் பதாகையின் வாசகங்கள், விடுதலை இறையியலை முன்வைக்கும் வாசகங்கள். பக்கத்தில் ஒரு பழைய புத்தகக்கடை இருக்கிறது. அதைப் பற்றித் தனியே சொல்ல வேண்டும்.

ஒரு பழைய புத்தகக்கடை

டல்லாஸின் டெண்டென் நகர்மையத்தில் பார்த்த அந்தப் பழைய புத்தகக் கடை, பழைய நினைவுகளைக் கொண்டு வந்துவிட்டது. இதனைப் பழைய புத்தகக்கடை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. பழைய கலைப் பொருட்கள், குறுவட்டுகள், கணினிப்பதிவு நாடாக்கள் எல்லாம் அடுக்கப்பட்டுள்ள தொன்மக்கூடம் அது. பழைய புத்தகங்களில் எல்லாவகைப் புத்தகங்களும் வகைவகையாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. புனைவுகள், கவிதைகள், நாடகங்கள் என்ற வகைப்பாடுகளைத் தாண்டி அழகியல், கலையியல், மொழியியல், மானிடவியல் நூல்கள் பக்கம் நின்று பார்த்துக் கொண்டே போனேன். உலக அறிவை வளப்படுத்திய பேரறிஞர்களின் நூல் தொகுப்புகள், வாழ்க்கை வரலாறுகள் போன்றன வைக்கப்பட்டுள்ள விதம் வாங்க நினைப்பவர்களுக்கு உதவும் விதமாக உள்ளன. ஆனந்த குமாரசாமியின் சிவநடனம் ( டான்ஸ் ஆப் சிவா) நூலின் விலை 4 டாலர் தான். அந்நூல் என்னிடம் இருக்கிறது என்பதால் வாங்கவில்லை. சோழர்கள் காலம் பற்றிய நூல்கள் சில இருக்கின்றன.

மொத்தப்பரப்பு ஒரு ஏக்கர் அளவாவது இருக்கும். மைதானப்பரப்புபோல இரண்டு பெரிய விராந்தைகள், சின்னச்சின்ன அறைகளாகப் பத்துக்கு மேற்பட்ட அறைகள், தரைத்தளத்திற்கும் மேல முதல் தளத்தில் ஓர் பெரிய விராந்தை என நூல்கள் வரிசைகட்டி நிற்கின்றன. நூல் வகைகளாக மட்டுமல்லாமல் நிலவியல் பிரிவுகளாகவும் நூல்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. ஆசிய எழுத்துகளில் சைனா, ஜப்பான், இந்தியா என மூன்று நாடுகளின் வரலாறு, கலை, அழகியல் நூல்கள் ஓரிடத்தில் இருக்கின்றன. புத்தகங்கள் இருக்கும் எண்ணிக்கைக்குக் கூடுதலாக எண்ணிமத் தொகுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. கணினிக்காலத்தில் அச்சு வாசிப்பைக் கடந்துவிட்ட தலைமுறையினர் டிஜிட்டல் தொகுப்புகளை வாங்கிப் போகிறார்கள்.

*****

எனது வாசிப்பில் புத்தகக்கடைகளின் இடம் முக்கியமானது. மதுரையில் படித்த காலத்தில் மீனாட்சி அம்மன் கோயில் தென்மேற்கு மூலையில் இருந்த புத்தகக்கடையில் வாங்கிய நூல்கள் இன்னும் இருக்கின்றன. போகும்போதெல்லாம் ஒன்றிரண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டு வருவேன். அதில் மட்டுமல்லாமல் அங்கிருந்து திண்டுக்கல் சாலையில் வீதியோரம் பரப்பிக்கிடக்கும் மாதநாவல்கள் எல்லாம் வாங்கி வாசித்துவிட்டு எடைக்குப் போட்டுவிடுவேன். சினிமாப்பாட்டுப் புத்தகங்கள், திரைக்கதை வசனங்கள் எல்லாம் அங்கே வாங்கியதுதான். ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைக்கதை வசனம் மட்டும் இப்போதும் கைவசம்.

புதுச்சேரிக்குப்போனபோது முதல் அறிமுகமே ஒரு பழைய புத்தகக்கடைதான். அங்காளம்மன் நகர் வீட்டிலிருந்து புதுச்சேரியின் மையப்பகுதிக்குள் நுழையும் இடத்தில் - காந்தி வீதியின் வலது பக்கம் அந்தப் பழைய புத்தகக்கடை இருந்தது. இலக்கியவாதிகள் பலருக்கும் நண்பர் அவர். பழைய புத்தகங்களோடு இலக்கியப் பத்திரிகைகள், நூல்கள் எல்லாம் வைத்திருப்பார். ஆனால் ஞாயிற்றுக்கிழமைச் சந்தையில் பழையபுத்தகங்கள் குவிந்து கிடக்கும். நேருவீதியிலிருந்து காந்திவீதிக்குள் வடக்கே திரும்பினால் ஓரிடத்தில் புதிய புத்தகங்களே இரண்டாவது விற்பனைக்கு வந்து கிடக்கும். அதற்குப் பதிலாக தெற்கே திரும்பி கிழமேற்காக ஓடும் சாக்கடை ஓடையொன்றின் மேல் கட்டப்பட்ட பாலத்திலும் அதன் ஓரங்களில் கிடைக்கும் நூல்கள் ரொம்பப்பழையனவாக இருக்கும். விலை குறைக்கமாட்டார்கள். சென்னைப் பயணங்களின் போது திருவல்லிக்கேணி -கடற்கரைப் பேருந்து நிறுத்தப்பகுதி பழைய புத்தகக்கடைகளும் தேடுவோருக்குப் புதையலைத் தரும் இடங்கள். போகும் ஊர்களில் நூல் நிலையங்கள், சினிமா அரங்குகள், நாடக நிகழ்வுகளைத் தேடும் நான் பழைய புத்தகக்கடைகளையும் தேடிய நாட்கள் மறக்கமுடியாதவை.

குடியிருப்புகளும் நீர் நிலைகளும்

அமெரிக்கக் கிராமப்புறங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் நகரங்களையும் பெருநகரங்களையும் பார்த்திருக்கிறேன். பல்வேறு தரத்தினதாக - நிலையினதாகக் குடியிருப்புகள் உள்ளன. நான் பார்த்த இந்தியப் பெருநகரங்களில் மும்பை, பெங்களூர், டெல்லி, சென்னை, கோவை போன்ற பெருநகரங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளால் மூச்சுவிட முடியாமல் தவிக்கின்றன. ஆனால் அமெரிக்கப் பெருநகரங்களில் அந்த அளவுக்கு அடுக்குமாடிக்குடியிருப்புகள் இல்லை. அலுவலகங்களும் பேரங்காடிகளும் அருங்காட்சியகங்களும் பல்லடுக்குகள் கொண்ட கட்டடங்களாக இருக்கின்றன. ஆனால் குடியிருப்புகள் அப்படி இல்லை என்பதாகச் சொல்லத்தோன்றுகிறது.

அடுக்குமாடிகளுக்குப் பதிலாக நகர்வீடுகள் என்றொரு வகைப்பாட்டில் மூன்று அல்லது நான்கு மாடி அளவுக்கு உயரம் கொண்ட வீடுகள் தொகுப்பாக இருக்கும் பகுதிகள் உள்ளன. அவற்றை விடவும் இரண்டு மாடிகளுக்குள் அடங்கிவிடும் தனிக்குடும்ப வீடுகளே அதிகம் எனலாம். முன்னும் பின்னும் புல்வெளிகளோடு கூடிய தனிக்குடும்ப வீடுகளை உயர்நடுத்தர வர்க்க வீடுகள் என்ற வகைப்பாட்டில் சேர்க்கலாம். கார்கள் நிறுத்துவதற்கும் புல்தரையில் இருக்கைகள். ஊஞ்சல்கள் போட்டு அமரும் விதமாக இருக்கும் இவ்வீடுகளுக்கு அடுத்து இருப்பவை வீட்டுக்குப் பின்னால் நீச்சல்குளம், விருந்து நடத்த வசதியான இருக்கைகளோடு இருக்கும் பெரியவீடுகள். வீட்டின் முன்னால் கூடைப்பந்து கோபுரங்கள் நிற்கின்றன. இரண்டு மூன்று கார்கள் நிறுத்தும் வாகனக் கூடத்தோடு கூடிய வீடுகள் அவை. எல்லாவகை குடியிருப்புகளிலும் இயற்கையாகவோ, செயற்கையாகவோ ஒரு குளம் அல்லது ஏரி இருக்கிறது. அதனைச் சுற்றி நடப்பதற்குப் பாதைகள் போடப்பட்டுள்ளன.

இவற்றிற்கு அடுத்து சில ஏக்கர் அளவில் நிலத்திற்குள் கட்டப்பட்டிருக்கும் பெரும் வீடுகள். அதற்குள் குதிரைகள் வளர்க்கிறார்கள்.மாடுகளும் திரிகின்றன. கார்களில் இழுத்துச் செல்லும் படகுவீடுகள் நிற்கின்றன. மேன்சன் ஹவுஸ்கள் என்று அழைக்கப்படும் தோட்ட வீடுகளிலேயே பெருந்தோட்ட வீடுகளும் இருக்கின்றன. தோட்டமாகவும் காடாகவும் குளமாகவும் அவ்வீடுகளின் சூழல் இருக்கிறது. 50 முதல் 100 ஏக்கர் வரை விரியும் பண்ணைவீடுகள் அவை.இரண்டு வாரமாக இவ்வகை வீடுகளை நடையின் போதும் வாகனப்பயணத்தின் போதும் பார்த்த பின்பு இன்று செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆற்றோரக்குடியிருப்புப்பகுதி ஒன்றில் மாலை நடையை மேற்கொண்டோம். ஒன்றரை மைல் நீளத்திற்குள் ஓடும் ஒரு செயற்கை ஆறு. சில இடங்களில் குளமாக இருக்கிறது. இடையிடையே அருவியாகக் கொட்டுகிறது. ஒன்றிரண்டு இடங்களில் நீரூற்றுக் காட்சியைத் தருகின்றது. ஆற்றுக்கு நடுவே ஒரு தீவுபோல தேவாலயம். மாலை நேரம் திறந்திருக்க்கும் கேளிக்கை விடுதி. அங்கே பாடகர்கள் நின்று நீருக்கும் நிலத்திற்கும் மனிதர்களுக்கும் எனப்பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

உணவுப்பொருள் அங்காடிகள்

முதலில் போனது குரோகர் (KROGER ) உண்பதற்கும் தின்பதற்கு குடிப்பதற்கான பண்டங்கள் நிரம்பிய பல் பொருள் அங்காடி. அங்கு முழுமையாக அமெரிக்கப் பண்டங்கள் தான் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. உண்பது, தின்பது, குடிப்பது என்ற மூன்று நிலைகளுக்குமான பண்டங்கள் சம அளவில் அங்காடிக்குள் இடம்பிடித்துள்ளன. தானியப்பொருட் களுக்குத் தரப்பட்டுள்ள இடத்தின் அளவுக்குக் குறையாமல் இறைச்சிப் பொருட்களுக்கான இடமும் குடிக்கும் பானங்களுக்கான இடமும் உள்ளன.

மக்காச்சோளத்தை மூலப்பொருளாகக் கொண்ட மாவுப் பண்டங்களே அமெரிக்க உணவாக இருக்கின்றன. அடுத்து இருப்பன கோதுமை மாவால் ஆனவை. காய்கறிகள், பழங்கள், விதைகள், பருப்புகள் எனப் பலவும் வெவ்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுப் பொதிகளாக்கி அடுக்கப்பட்டுள்ளன. வேளாண்மை வழியாகக் கிடைக்கும் தாவரங்களுக்கு இணையாகவே இறைச்சி வகைகளின் அடுக்குகளும் இடம்பெற்றுள்ளன. விலங்குகள், மீன்கள், பறவைகளின் இறைச்சிகள் விதம்விதமாக வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. மொத்தமாகவும் தனித்தனி உறுப்புகளாகவும் கிடைக்கின்றன. குடிப்பதற்காகக் கிடைக்கும் பானங்களின் வரிசையில் பால், தண்ணீர், மென்பானங்கள், வன்பானங்கள் என எல்லாமே அங்கே கிடைக்கின்றன. மூன்று டாலர் விலை தொடங்கி 300 டாலர் விலையில் விற்கப்படும் போதையூட்டும் வன்பானங்கள் அடுக்கப்பட்ட பகுதிகள் அமெரிக்க, ஐரோப்பிய அங்காடிகளின் ஒருபகுதிதான். அதற்கெனத் தனிக்கடைகள் இருந்தபோதிலும் குடிபானங்கள் உணவின் ஒருபகுதி என்பதின் அடையாளமாகப் பல்பொருள் அங்காடிகளிலும் மதுக்குடுவைகள் நிற்கின்றன. வீட்டிற்குத் தேவை உணவுப் பொருட்களோடு அவற்றையும் சேர்த்தே வாங்கிக் கொண்டுபோய் அடுக்கிக்கொள்கிறார்கள்

அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்கள் அமெரிக்கப் பண்டங்களைத் தின்பவர்களாக இருந்தாலும் இந்திய ருசியைத் தேடுபவர்களாகவும் இருக்கிறார்கள். நமது பண்பாடு, நமது பெருமை, நமது உணவு எனத்தேடித் தின்னவைக்கும் வாய்ப்பை வழங்கும் இந்தியக்கடைகள் மேற்கே ஒவ்வொரு பெருநகரங்களில் இருக்கவே செய்கின்றன. டல்லாஸ் நகரில் கோப்பில் பகுதியில் இருக்கும் அந்தக் கடையின் பெயர் படேல் சகோதரர்கள் (PATEL BROTHERS). அந்தக் கடைக்குள் நுழைந்து உணவுப்பண்டங்களை எடுத்துக் கொள்ளும்போதே இந்தியர்களின் பண்பாடு ஒன்று அல்ல என்பதை அவை உணர்த்துகின்றன. மலையாளிகளின் பண்டங்களுக்கான மூலப்பொருட்கள் தனியாக இருக்கின்றன. குஜராத்தி, வாங்காள இனிப்புக்களும் தமிழ்நாட்டுக் கார வகைகளும் அடுக்கப்பட்டு அந்தந்த மொழியில் எழுதப்பட்டுள்ளன.

இந்தியத் துணைக்கண்டம் மொழியாலும் பண்பாட்டாலும் வேறுபட்டது என்பதை இந்தியக் கடைகளில் அடுக்கப்பட்டுள்ள விதமே காட்டுகின்றன. தானியங்களின் வகைகளும் மிளகாய்ப்பொடிகளின் பெயர்களும் வேறுபடுகின்றன. பருப்புகளும் விதைகளும் வெங்காயங்களின் அளவும் தோலின் நிறமும் சொல்கின்றன. அரிசி வகைகளும் பழங்களோடு சேர்த்துச் சொல்லப்படும் பெயர்களும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.படேல் சகோதரர்கள் நுழைவாசலில் பிள்ளையார் சிலையைச் சுற்றிக் காய்கறிகள் வரிசையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தியர்களின் உணவில் இறைச்சிக்கும் மீன்களுக்கும் இடமில்லை என்பதுபோல அவை மட்டுமே விரிகின்றன. அதேபோல் திரவப்பொருட்களின் அடுக்குகளில் பால்புட்டிகளும் நீர்க்குடுவைகளும் தயிர்ப்பொதிகளும் மட்டுமே இடம் பிடித்துள்ளன.குடிபானங்களைத் தவிர்த்துவிட்டவர்கள் இந்தியர்கள் என்கிற பாவனையும் உருவாக்கப்பட்டுள்ளது.

திரைகடல் தாண்டித் திரவியங்கள் தேடும் இந்தியர்கள், இந்திய மனத்தோடு இரட்டை வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இரண்டு அங்காடிகளிலும் நுழைந்து வெளியேறுகிறார்கள். அமெரிக்க அங்காடியில் மென்னடை போடும் இந்திய முகங்கள், இந்தியக் கடையில் வேகநடைபோட்டு, வேலையை முடித்து வெளியேறுவதில் அவசரம் காட்டுகின்றார்கள். இரண்டிற்கும் இடையில் இன்னொரு வேறுபாடையும் கண்டேன். சுத்தமான கழிப்பறைகளோடு இருக்கின்றன அமெரிக்கக் கடைகள். எந்த மூலையிலும் அதனை உருவாக்கவே இல்லை இந்தியக் கடையில்

உழவர் சந்தை என்னும் தற்காலிகம்

ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி முதல் 12 மணி வரை மட்டுமே கூடும் அந்தச் சந்தைக்குச் சமூக அங்காடி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். தோட்டங்களிலிருந்து நேரடியாக உழவர்களே கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதிகமும் உணவு தயாரிப்புக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், விதைகள், கொட்டைகள் விற்கும் கடைகள். சில கடைகளில் சிறுதொழில் தயாரிப்புக்களான கைப்பைகள், திறவுகோல் கொத்துகள், நார்களால் செய்யப்பட்ட சுவரோவியங்கள் விற்கும் அங்காடிகளும் இருக்கின்றன.


ஓரிடத்தில் பதப்படுத்தப்பட்ட வண்டினங்கள், பூச்சிகள், பறவைகள் போன்றன காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. சுவர்களிலும் அலங்காரமாக வீடுகளில் அடுக்கப்பட்டிருக்கும் வரிசையிலும் , எழுது மேசைகளிலும் வைப்பதற்கான காட்சிப்பொருட்கள் அலங்காரப் படங்கள். பளிச்சென்ற வெண்மைக்குள் உயிருள்ளவை போல அவை காட்சியாக இருக்கின்றன. அங்கு அந்த வகையான பொருட்களை உருவாக்கும் பயிற்சி வழங்கும் பயிலரங்குகளை நடத்தும் குறிப்பும் இருந்தது.

வால்மார்ட், காஸ்ட்கோ போன்ற பேரங்காடிகளில் இருக்கும் கூட்டத்தோடு ஒப்பிடச் சமூக அங்காடி வளாகத்தில் திரியும் கூட்டம் குறைவுதான். ஆனால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களோடு ஒப்பிட இந்தக் கூட்டம் போதுமானது. ஒவ்வொரு அங்காடியின் முன்னாலும் தனியாகவும் இணைகளாகவும் நின்று வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். பேரம்பேசும் வேலை இல்லை. எல்லாம் விலைகுறித்து வைக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக் கொண்டால் ரசீதுபோட்டுத் தரும் கருவிகள் இருக்கின்றன.

மக்கள் வந்துபோகும் சந்தைகள், உணவுக்கூடங்கள் பூங்காங்கள், ஆற்றங்கரைகள் போன்றவற்றில் பாடும் கலைஞர்களும் ஆடும் கலைஞர்களும் தங்களை வெளிப்படுத்துகிறாரக்ள். விருப்பமானவர்கள் நின்று பார்க்கிறார்கள்; கேட்கிறார்கள். அங்கு வைக்கப்பட்டிருக்கும் நன்கொடைக் குப்பிகளில் பணம்செலுத்துகிறார்கள். விற்பனைக்கான கலையைப் பொதுவில் வைப்பதற்குத் தயங்காத மனத்தின் பார்வை அது.

தற்காலிகமாக கூடும் உழவர் சந்தைக்குப் பக்கத்தில் நிரந்தரமாக இருக்கும் ஒரு வரலாற்றுக் காட்சியகம் இருக்கிறது. எந்தவொரு காட்சிக்கூடங்களும் அருங்காட்சியகங்களும் தனியாக இருப்பதில்லை. கலைக்கூடமாயினும் பொழுதுபோக்கு இடங்களாயினும் தற்காலிக நுகர்வுச் சந்தையோடு இணைக்கப்படுவது மேற்கின் வெளிப்பாடாக இருக்கிறது. வணிகமும் நுகர்வும் ஒதுக்கப்பட வேண்டியதில்லை என்பதின் நிலைப்பாடு. இந்த மனநிலையில் நவீன இந்திய மனநிலை வேறாக இருக்கிறது. எல்லா நேரமும் வணிகநோக்கத்தையும் நுகர்வுப் பண்பாட்டையும் எதிர்மறை மனநிலையில் விசாரணை செய்துகொண்டே அதன் மீது தீராத மோகமும் விருப்பமும் கொண்டவர்களாக இருக்கிறது. எல்லாவற்றையும் நுகர்ந்துகொண்டே அவற்றிற்கெதிரான சொல்லாடல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது இந்திய நடுத்தரவர்க்கம். விருப்பமானதைச் செய்வதிலும் சொல்வதிலும் இரட்டைநிலையைத் தொலைக்கும்போது ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பது மாறி, ஓரடி பின்னால் ஈரடி முன்னால் என்பதாக மாறும்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்