நள்ளிரவுக் கொடுங்கனவுகள்: கரோனாவின் அலைகளைக் கடந்து...
2020/ மார்ச் 15/ ================ நெருங்குகிறது கொரானா ========================= சென்னையில் அது நடுத்தரமான தங்கும் விடுதி. நான்கு நாட்களாக இங்கேதான் இருக்கிறேன். பகலில் அதிகம் கூட்டம் இருக்காது. இரவிலும் கூடத் தாமதமாகவே ஆட்கள் நடமாட்டம் தெரியும். ஆனால் காலையில் எல்லா அறைகளின் முன்னாலும் ஆட்கள் நிற்பார்கள். விடுதியில் தங்குபவர்களுக்குக் காலை உணவு வழங்கும் இடத்தில் 10 மணி வரை ஆட்களின் பேச்சொலி கேட்கும். பெரும்பாலும் சினிமாவோடு தொடர்புடையவர்களும், தொலைக்காட்சி தொடர்பானவர்களும் அதிகம் தங்குவார்கள்.