தொலையும் நம்பிக்கைகள்
நீண்ட காலமாக ஆட்சியிலிருந்த காங்கிரஸின் ஆட்சி முடிந்து திரு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாகட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 இல் பலருக்குப் பலவிதமான நம்பிக்கைகள் இருந்தன. மேற்குலகின் பிடியிலிருந்து நகர்ந்து இந்தியத்தன்மை கொண்ட தற்சார்புப் பொருளாதாரம், பல்சமய, பல்மொழிச் சமூகங்களின் வளர்ச்சி, நவீன வாழ்க்கை கற்றுத்தந்துள்ள உள்வாங்கும் அரசியல் போன்றவற்றை நோக்கி நாடு நகரும் என்று நம்பினார்கள். தொழில் தொடங்கவும், நிறுவனங்களைக் கட்டியெழுப்பவும் அரசின் கட்டுப்பாடுகள் குறையும் என்று எதிர்பார்த்தார்கள். அதேபோல இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் சமத்துவமான பங்களிப்பைக் கொண்ட தேசியப்பார்வை உருவாகும்; அவை வளரும்; இலக்கியங்கள் உருவாகும் என்பதும் இன்னொரு எதிர்பார்ப்பு. இவையெல்லாவற்றையும் ஒரு ஐந்தாண்டுக்குள் நிறைவேற்ற இயலாது என்பதாலேயே திரும்பவும் அந்த ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதிக எண்ணிக்கையுடன் அதிக சக்தியுடன். ஆனால் இப்போது நடக்கின்ற ஒவ்வொன்றும் எதிர்த்திசையில் பயணிக்கின்றன.