தொலையும் நம்பிக்கைகள்
மொழியும் சமயமும்
பொருளாதார அடித்தளத்தின் மேல் பல்வேறு மேல்கட்டுமானங்கள் இருக்கின்றன. அடித்தளமான பொருளாதார உற்பத்தியும் பங்கீட்டு முறைகளும் மாறும்போது மேல்கட்டுமானங்களும் மாற்றம் அடையும் என்பது மார்க்சிய இயங்கியலின் அடிப்படைப்பாடம். மேல்கட்டுமானங்களில் பேரடையாளமாக இருப்பன சமயம், மொழி, இனம், குடும்ப அமைப்பு போன்றன. சிற்றடையாளமாக இருப்பன பேரடையாளங்களின் சினைக்கூறுகள்.
பொருளாதார அடித்தளத்தின் மேல் பல்வேறு மேல்கட்டுமானங்கள் இருக்கின்றன. அடித்தளமான பொருளாதார உற்பத்தியும் பங்கீட்டு முறைகளும் மாறும்போது மேல்கட்டுமானங்களும் மாற்றம் அடையும் என்பது மார்க்சிய இயங்கியலின் அடிப்படைப்பாடம். மேல்கட்டுமானங்களில் பேரடையாளமாக இருப்பன சமயம், மொழி, இனம், குடும்ப அமைப்பு போன்றன. சிற்றடையாளமாக இருப்பன பேரடையாளங்களின் சினைக்கூறுகள்.
குடும்பம் என்பதைப் பேரடையாளமாகக் கொண்டால் அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சிற்றடையாளங்களை உருவாக்குபவர்கள். அவர்களின் இலக்குகளும் அன்றாட நடவடிக்கைகளும் விருப்பங்களும் சிற்றடையாளமாகவே வெளிப்படும். வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் பேரடையாளம் என்றால், கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது அதற்குள் ஒரு சிற்றடையாளம். கோயிலுக்குப் போகாமலே கடவுளை நினைத்துக் கொள்வதும் சடங்குகளைக் கைவிட்டவராக இருப்பதும் சிற்றடையாளம். பதினாறு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென நினைத்த வாழ்க்கை, பொருளாதார உறவு மாறியபோது இரண்டாகவும் இப்போது ஒன்றாகவும் மாறியிருக்கிறது. இப்படி ஒவ்வொரு பேரடையாளத்திற்குள்ளும் சிற்றடையாளங்கள் இயங்கிக் கொண்டே இருக்கும்.
சமயமும் மொழியும் தனித்தனிப் பேரடையாளம். இரண்டுமே பண்பாட்டு வெளிகளின் பாவனைகள்தான். தமிழ்நாட்டு மக்களை வென்றெடுக்கப் பண்பாட்டு நடவடிக்கைகள் உதவும் என்பது கடந்தகால வரலாறுதான். திராவிட முன்னேற்றக்கழகம் தனது பரப்புரைகளில் மொழியரசியலை முதன்மையாக்கித் தமிழர்களைத் திரட்டியதுபோலவே சமய அரசியலை முன்வைத்துத் தமிழ்நாட்டு மக்களைத் தன்பக்கம் திரட்டிவிட முடியும் என இந்துத்துவப் பெரும்பான்மையை முன்வைக்கும் அமைப்புகள் நினைக்கின்றன. ஆனால் அந்த நினைப்பு அவர்களுக்குக் கைகொடுக்காமல் நழுவிக்கொண்டே இருக்கிறது.
இந்து சமயம் என்பது எப்போதும் ஒற்றைப் பேரடையாளமாக இல்லை. அதற்குள் அகச்சமயங்கள் ஆறும் பேரடையாளங்களாக இருக்கின்றன. புறச்சமயங்களும் தனிப் பேரடையாளங்களாக இருந்துள்ளன. இப்போது புறப்புறச்சமயங்களும் இந்து அடையாளத்தைக் கொண்டு தமிழ் பேசும் திரளை வசப்படுத்தியுள்ளன. அதனால் அதன் உட்கூறுகளான சடங்குகளும் விழாக்களும் பலியிடல்களும் குறியீடுகளும் ஒற்றைப் பேரடையாளத்தை ஏற்க மறுத்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அந்த குறியீடுகளை அன்றாட வாழ்க்கையில் ஏற்றுக் கடந்தும் செல்கின்றன.
மொழி என்னும் பேரடையாளம் அப்படிப்பட்டதல்ல. தமிழ்நாட்டின் வட்டாரமொழி வேறுபாடுகூடப் பண்பாட்டுத் தனி அடையாளங்களைக் கொண்டதாக இல்லை. அதனை முன்வைத்துப்பேசாமல் அதற்கு எதிரான சம்ஸ்க்ருத முதன்மையை முன்மொழியும் இந்துசமயப் பெரும்பான்மையைத் தமிழர்கள் ஏற்காமல் மறுப்பதின் பின்னணியை விளங்கிக் கொள்ளவேண்டும். இந்துசமய வழிபாடுகளும் பூசைகளும் பலியிடல்களும் சம்ஸ்க்ருத அடையாளத்தோடு நெருங்கியன. அத்தோடு நிர்வாக மொழியாக இந்தியை வலியுறுத்தும் - திணிக்கும் போக்கின் உச்சமாக மத்திய அரசின் ஓர் அமைப்பு - ஆயுஷ் என்னும் உள்நாட்டு மருத்துவத்துறையை மேம்பாடடையச் செய்யும் முயற்சியில் இருக்கும் ஓர் அமைப்பு, ஒற்றை மொழியில் மட்டுமே பேசும் என்று சொல்கிறது. நாட்டின் நிர்வாக மொழியாக இந்தியை வலியுறுத்துவதால் - திணிப்பதால் நாட்டில் ஏற்படப்போகும் ஆபத்துகளை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டின் மொழி அரசியல், வெறும் பண்பாட்டு அரசியலாக மட்டுமே இருந்ததில்லை. அடித்தளமான பொருளாதார உற்பத்தியோடு தொடர்பு கொண்டு தமிழ் முதலாளிகளை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தது. நீதிக்கட்சி தொடங்கி இன்று ஆட்சியிலிருக்கும் அ இ அதிமுக வரை சில ஆயிரம் கோடீஸ்வரர்களையும் சிலநூறு தொழில் அதிபர்களையும் பத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு முதலாளிகளையும் உருவாக்கி யிருக்கின்றன. ஆனால் இந்துசமயம் பண்பாட்டு வெளியில் கவனம் செலுத்துவதோடு தமிழரல்லாத தேசிய முதலாளிகளையும் பன்னாட்டு முதலாளிகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பொருளாதார அடித்தளத்தில் தமிழர்களின் மூலதனத்தையும் வேலை வாய்ப்பைகளையும் குறைக்கும் சமய அரசியல் தமிழ் நிலப்பரப்பிற்குள் எதிர்மறைத்தன்மை கொண்டதாகவே பார்க்கப்படும். சுப்பிரமணிய வழிபாடு.
விநாயக சதுர்த்தி என்ற சொல்லாடல்களைத் தமிழ் மனம் முருகனுக்குக் காவடி எடுத்தல், ஆலடிப்பிள்ளையார் என்ற சொல்லாடலால் கடந்துபோகும்.
அடித்தளம் - மேல்கட்டுமானம் என்ற மார்க்சியக் கலைச்சொற்களைக் கொண்டு விளக்கியதின் தொடர்ச்சியாகத் தமிழர்களை வென்றெடுக்கச் சமய அரசியல் உதவாது என்பதைச் சொல்வதோடு . குறியீடுகளால் வென்றெடுக்க நினைக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதாகவே முடியும் என்பதையும் சொல்ல நினைக்கிறது.
அடித்தளம் - மேல்கட்டுமானம் என்ற மார்க்சியக் கலைச்சொற்களைக் கொண்டு விளக்கியதின் தொடர்ச்சியாகத் தமிழர்களை வென்றெடுக்கச் சமய அரசியல் உதவாது என்பதைச் சொல்வதோடு . குறியீடுகளால் வென்றெடுக்க நினைக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதாகவே முடியும் என்பதையும் சொல்ல நினைக்கிறது.
நீண்ட காலமாக ஆட்சியிலிருந்த காங்கிரஸின் ஆட்சி முடிந்து திரு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாகட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 இல் பலருக்குப் பலவிதமான நம்பிக்கைகள் இருந்தன. மேற்குலகின் பிடியிலிருந்து நகர்ந்து இந்தியத்தன்மை கொண்ட தற்சார்புப் பொருளாதாரம், பல்சமய, பல்மொழிச் சமூகங்களின் வளர்ச்சி, நவீன வாழ்க்கை கற்றுத்தந்துள்ள உள்வாங்கும் அரசியல் போன்றவற்றை நோக்கி நாடு நகரும் என்று நம்பினார்கள். தொழில் தொடங்கவும், நிறுவனங்களைக் கட்டியெழுப்பவும் அரசின் கட்டுப்பாடுகள் குறையும் என்று எதிர்பார்த்தார்கள். அதேபோல இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் சமத்துவமான பங்களிப்பைக் கொண்ட தேசியப்பார்வை உருவாகும்; அவை வளரும்; இலக்கியங்கள் உருவாகும் என்பதும் இன்னொரு எதிர்பார்ப்பு. இவையெல்லாவற்றையும் ஒரு ஐந்தாண்டுக்குள் நிறைவேற்ற இயலாது என்பதாலேயே திரும்பவும் அந்த ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதிக எண்ணிக்கையுடன் அதிக சக்தியுடன். ஆனால் இப்போது நடக்கின்ற ஒவ்வொன்றும் எதிர்த்திசையில் பயணிக்கின்றன.
மக்களாட்சி முறைமையின் தர்க்கங்களைச் சரியாகப் பயன்படுத்தும் திறமையற்ற அரசமைப்பைக் கொண்டிருக்கிறது இந்தியா. இதனைத் தேர்தல் காலங்கள் மட்டுமே புலப்படுத்தி வந்ததைத் தாண்டி தேர்தலுக்குப் பின்னான நிகழ்வுகளும் புலப்படுத்துகின்றன.அரசியல் சொல்லாடல்களில் இந்தியர்களாகிய நாம் அல்லது வாக்களிக்கும் பெரும்பான்மையர்களாகிய இந்தியர்கள் எங்கே இருக்கிறோம் ?. மரபுக்குள்ளா? நவீனத்திலா...?, பின் நவீனத்துவ விளையாட்டிலா..? அரசர்களின் காலத்திலா..? சமத்துவத்தையும் உரிமைகளையும் பெறமுடியும்: பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை முன்வைக்கும் மக்களாட்சி முறைக்குள்ளா? எந்தப் பொறுப்பும் எமக்கில்லை என்று கைகழுவிவிட்டுக் களியாட்டங்களிலும் கடும் துயரங்களிலும் மாட்டிக்கொள்ளும் வாழ்க்கை நடப்பிலா? பதில்கள் நம்மிடம் இல்லை.
பொறுப்பிலிருக்கும் அரசுக்கு வாக்களித்தவர்கள் அனைவரும் அகண்ட பாரதத்தை முன்மொழிந்த மரபின் பிடிமானத்தை ஆதரித்தார்களா? பெருந்தேசத்தைக் கட்டியெழுப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை கொண்ட நவீனத்துவ நகர்வை விரும்புகிறார்களா? இவ்விரண்டின் கலவையான பின் - நவீன வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா? இதையெல்லாம் தெரியாமலேயே எனது வாக்கின் விலை இவ்வளவுதான் எனக் கையளிப்பு செய்துவிட்ட இந்தியனின் அடுத்த நான்காண்டுக்காலம் என்னவாக இருக்கப் போகிறது?.
300 ஆண்டுகளுக்கு முந்திய மரபான வாழ்க்கையின் எச்சங்களை நடைமுறைப்படுத்தும் அரசை அமைப்பதையே இந்திய மக்கள் விரும்பினார்கள் என்பது உறுதிப் படுத்தப்படுகிறது. வேகமாக நாம் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். 1950 -க்குப் பின் ஒவ்வொரு அடியாக முன்வைத்து நடந்து நடந்து அடைந்த இலக்குகள் ஒவ்வொன்றும் சிதறடிக்கப்படுகின்றன. அதைக்கண்டு ஒவ்வொருவரும் விடும் பெருமூச்சின் அனலும் வெக்கையின் சூடும் தகிக்கிறது. மரபை விரும்பினாலும் நவீன வாழ்க்கையை நேசித்தாலும் பின் நவீன வாழ்முறையிலிருந்து எவரொருவரும் தப்பிவிட முடியாது. ஏனென்றால், நமது காலம் பின் நவீனத்துவக் காலம்.
தேசம், மொழி, மதம், போன்ற பேரலகுகளின் அடையாளங்கள் கற்பனைகளாக ஆக்கப்பட்டுள்ள காலம். பருண்மையான எல்லைகளைச் சொல்லி இவற்றை அடையாளப்படுத்திவிட முடியாது.பொருளியல் நிலைபாட்டிலும் கூட தேசிய முதலாளிகள் என்ற வரையறைகளும் முடிந்துவிட்டன. திருநெல்வேலி நகரத்தின் சுற்றுச் சாலைக்குப் பக்கத்தில் காற்றுப்புகாத -குளிரூட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் தான்சானியாவிற்கான புள்ளியியல் தரவுகளை அடுக்கி, கொண்டாட்ட நிகழ்வுகளின் காட்சிப் பதுமைகள் உருவாக்கப்படுகின்றன. உருவாக்கும் குழுவில் தான்சானியக் காட்சி ஊடக வல்லுநனரோடு சீனப் பெண்ணும் தமிழ்ச் சைவ இளைஞனும் கொரியாவின் நடுத்தர வயதுக்காரும் சேர்ந்து வேலை செய்கிறார்கள்.
பெருமுதலாளிகளும் பெரும் வணிகளும் ஒரு மாதம் தாக்குப் பிடிக்கும் மாவடுவை இரண்டாண்டு தாக்குப் பிடிக்கும் டப்பாக்களில் அடைத்துக் காப்பது எப்படி என்று ஆய்வுக்கு உதவுகிறார்கள். பல்கலைக்கழக ஆய்வுக்கூடங்கள் பன்னாட்டு நிதியங்களின் உதவியோடு ஆய்வுத்திட்டங்களை மேற்கொள் கின்றன. அதற்குத் தேவையில்லாத - தயாரில்லாத - ஒத்துப் போகாத சமூகவியல் புலங்களும் மொழிசார் துறைகளும் மூடப்படுவதைப் பற்றிக் கவலைப்பட யாருமில்லை.
பின் - நவீனத்துவம் கருத்தியல் ரீதியாகச் சிற்றலகுகளை உருவாக்கும்; கொண்டாடும். ஆனால் இந்தியாவில் முற்றிலும் எதிர்நிலையில் இருக்கிறது.
மரபைக் கைவிடாமல் நவீனத்துவத்திற்குள் நுழைந்த இந்தியப் பரப்பு அதே கோலத்தோடு பின் நவீனத்துவக் கட்டமைப்பையும் உள்வாங்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் உருவாகும் பெரும்பாலான சிற்றலகுகள் நவீனத்துவத்தை மறுக்கும் மரபு அமைப்புகளாக இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் உருவாகும் சிற்றலகுகளை- சிற்றலைக் கதையாடல்களாகக் (LITTLE NARRATION ) கருதமுடியவில்லை. இந்தியச் சூழலில் தோன்றும் அல்லது தோற்றுவிக்கப்படும் சிற்றலைக் கதையாடல்கள் ஒருவிதமான தொங்குதசைகளாக மாறி, தாங்கும் உடலுக்கு நோய்மைகளையே உண்டாக்குகின்றன.
தமிழ்நாட்டுத் தேர்தலில் நடந்த அணிச் சேர்க்கைகளைத் திருப்பிப் பாருங்கள். இருபெரும் அணிகளிலும் வட்டார, சாதி, மத அடையாளங்களோடு கூடிய அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. அமைப்புகளே இல்லையென்றாலும் தனிநபர்களான கல்வித் தந்தைகள், ஊடக முதலாளிகள் இடம்பெற்றுவிட முடிகிறது. இது தான் பின் நவீனத்துவ நெருக்கடி. ஒவ்வொரு அமைப்பும் நபர்களும் தங்களின் இருப்பைத் தக்கவைக்கப் பேரமைப்புகளைச் சார்ந்திருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிறு நிகழ்வைக்கூடப் பெருநிகழ்வாக மாற்றி, அதன் காரணிகளை அல்லது காரணமான நபர்களைக் கொண்டாடும் நிலைபாட்டை எடுக்கிறார்கள்.
எல்லா நிலைபாடுகளும் செயல்பாடுகளும் தங்களுக் கீழ் உள்ள கூட்டத்தை வழிநடத்த மட்டுமே என்பதில் தொடங்கி, தமிழ்/இந்திய நிலப்பரப்பின் வெகுமக்களுக்கான கருத்தியலாக மாறிவிடுகிறது. அப்படி மாற்றிவிடுவதில் பெருகிவழியும் செய்தி அலைவரிசைகள் முக்கியப்பங்காற்றுகின்றன. மரபிலிருந்து நவீனத்துவத்தை நோக்கி இந்தியச் சமூகத்தை நகர்த்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டிய ஊடகங்கள் எதிர்நவீனத்துவத்திற்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் குற்றச்செயல்கள் விரிவான கதைகளாகச் சொல்லப்படுகின்றன. கண்காணிப்புக் காமிராக்களின் பங்களிப்பும் விரிக்கப்படுகின்றன. நித்தியானந்தாக்களின் - மௌல்விகளின் - பாதிரிமார்களின் பாலியல் விருப்பங்களும் விவாதிக்கப்படுகின்றன. ஈஷா யோகா தொடங்கி அத்திவரதர் வரை காட்சி இன்பத்தை அளிக்கின்றன. அரசியல் அமைப்பு உருவாக்கிக் கொடுத்த நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றன பேச்சுக்கச்சேரிகளின் இடத்தைப் பிடிக்கின்றன. அங்கே விவாதிக்கப்படுபவை வெறும் விவாதங்களுக்கானவை மட்டுமே. மாற்றுக் கருத்துகள் சொல்லப்படலாம்; ஏற்கப்படப் போவதில்லை. நடந்துமுடிந்த முதல் கூட்டம் இதனை உறுதிசெய்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தொடங்கிக் கீழமைநீதிமன்றம் வரையிலும் நீதிக்கான குரல்கள் இல்லை. அமலாக்கத்துறை, புலனாய்வுத் துறை தொடங்கிக் காவல்நிலையம் வரை காவல்பணிகளுக்காக இல்லை. உச்சநிலைத் தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளூர் தேர்தல் அதிகாரிவரை அச்சத்தின் பிடியில் இருப்பதாக நினைக்கிறார்கள். ஒவ்வொருவர் முன்னாலும் கண்ணுக்குப் புலப்படாத குரூர அரங்கின் காட்சிகள் நடிக்கப்படுகின்றன. வாக்காளர்கள் இப்போது பார்வையாளர்களாக மாறிப்போனார்கள். பார்த்துவிட்டுப் போய்க் கோயில் திருவிழாவிலோ குடிப்பதிலோ திளைப்பார்கள்
அடிப்படைவாதச் சிற்றலகுகளோடு ஒத்துப்போகும் கருத்தியலை விமரிசனமின்றி ஏற்று நகரும் ஊடகங்களின் இந்தப் போக்கு, அவற்றின் பொருளாதார அடித்தளமான பன்னாட்டு முதலீட்டியத்தையே காவுவாங்கும். இதைப் புரிந்துகொள்ள ஊடகங்களும் ஊடகப் பேரமைப்புகளும் இன்னும்சில ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். நிகழுகின்றன காலம் நம்பிக்கைகள் தொலையும் காலமாகிக் கொண்டிருக்கிறது
கருத்துகள்