வெளியே x உள்ளே
நிகழ்காலத் தமிழகத்தில்/இந்தியாவில் சிந்தித்துச் செயல்படுகிறவர்களாகக் காட்டிக்கொள்ளும் மனிதர்களின் மூளையை அலைக்கழிக்கும் கருத்துரைகள் பலப்பல. தேசியம், தேசப் பாதுகாப்பு, தேசியப் பெருமிதம், தேசியப்பண்பாடு, சமய நல்லிணக்கம் அல்லது சமயச் சார்பின்மை, பிராமண எதிர்ப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, பெரும்பான்மை வாதம், சிறுபான்மையினர் பாதுகாப்பு, பெண்களின் விடுதலை என்பன அவற்றுள் சில. இந்த வார்த்தைகளை முன்வைத்து, இவற்றின் எதிர்வுகளாக சிலவற்றைக் காட்டிப் பயமுறுத்தி அவற்றில் எதை ஆதரிக்கிற மனிதனாக நீ இருக்கப் போகிறாய்? எனக் கேட்பது நிகழ்கால மனத்தின் புறநிலை. இந்தப் புறநிலை உண்மையிலிருந்து ஒருவரும் தப்பிவிட முடியாது.
அரசியல் தளத்தில் மட்டுமல்ல; எல்லாத்தளங்களிலும் இது செயல்பாட்டில் இருக்கவே செய்கிறது. அரசியலில் வெளிப்படையாக எழுப்பப்படும் இந்தக் குரல்கள் மற்றதுறைகளில் பதுங்கிக் கிடக்கும். தேவைப்பட்டால் கிளர்ந்தெழுந்துவிடும். இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் சௌரவ் கங்குலி இருந்தார். அப்போது ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டுக்காரர் கிரேக் சாப்பல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இருவருக்கும் தொடக்கநிலையில் நல்ல இணக்கம் இருந்தது. ஒரு கட்டத்தில் அணித்தேர்வில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஏற்பட்ட கருத்து வேறுபாடு தகவல் ஊடகங்களில் ஊதிப் பெருக்கப்பட்டது. நீண்ட நாட்களாகத் தான் செய்ய வேண்டிய வேலையைச் சரிவரச் செய்யாத அணியின் தலைவர் சௌரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் அணிகளிலேயே திறமை குறைந்த அணியாகக் கருதப்படும் ஜிம்பாவேக்கு எதிராக ஒரு சதத்தை அடித்துவிட்டு தனக்கு எதிராக நடக்கும் சதியைப் பற்றியும் அதில் அணியின் பயிற்சியாளராக வந்துள்ள கிரேக் சேப்பல் பற்றியும் ஊடகங்களில் வாய் திறந்தார். அந்தத் திறப்பில் கிரேக் சாப்பில் வெளியிலிருந்து வந்துள்ளவர். அவருக்கு இந்திய அணியின் மனநிலையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் x இந்தியாவைச் சேர்ந்த அணியின் தலைவர் என்பதாகச் சொல்லாடல்கள் உருவாக்கப் பட்டன. சௌரவ் கங்கலியின் மாநிலமான வங்காளத்திலும் (சர்வதேச மனிதனைப்பற்றிப் பேசும் கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலம்) அதன் தலைநகரான கல்கத்தாவிலும் சேப்பலுக்கு எதிராகக் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. கங்குலிக்கு ஆதரவாகப் பேரணிகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு சமரசம் ஏற்பட்டு விட்டது என்பது பழைய கதை .
இந்தியப் பணக்காரர்களின் -உயர்சாதிக் குழுக்களின் விளையாட்டான கிரிக்கெட் இன்று வரை அவர்களின் கைகளில் தான் இருக்கிறது. அதில் ஏற்படும் சிக்கல்கள் இந்தியாவிற்கே ஏற்பட்ட சிக்கல்கள் போல ஊடகங்களில் விவாதிக்கப்படும். அந்த விவாதங்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துவிட்டுப் போகட்டும்; நமக்கென்ன வந்தது; நாம் வெறும் பார்வையாளர்கள்; அதிலும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து பார்த்து ரசிக்கும் பார்வையாளர் என்று இருக்கலாம்தான். ஆனால் அப்படி இருக்க முடியாது என்பதுதான் இங்கே சொல்ல நினைப்பது.
வெளியே X உள்ளே வகை விவாதங்களில் உண்டாக்கப்படும் எதிர்வுகள் மிக முக்கியம். சேப்பல் அந்நியர்-கங்குலி இந்தியர் என்று எதிர்வு உருவாக்கப் பட்டது கவனிக்க வேண்டிய ஒன்று. வெளியிலிருந்து வந்த சேப்பலால் பிரச்சினை உருவாக்கப்படுகிறது என்பதாக நம்ப வைக்கப்பட்டது. தேச அளவில் நடந்த இந்தச் சொல்லாடலின் சாரம் எல்லா மட்ட விவாதங்களிலும் வெளிப்பட்டது. 1968 இல் ராஜீவ்காந்தியைத் திருமணம் செய்துகொண்டு இந்திராவின் – இந்தியாவின் மருமகளான சோனியாகாந்தி இப்போதும்கூட வெளியாள் என்றே சொல்லப்படுகிறார். அவரது மகன் ராகுல் காந்தியும் கூட முழுமையான இந்தியராக ஏற்கப்பட வேண்டியவரல்ல என்று பொதுப்புத்தியில் திணிக்கப்படுகிறது. தேசபக்தி என்ற சொல்லாடலை முன்வைத்துப் பேசும்போது சோனியாவும் ராகுலும் தேசபக்தி இல்லாதவர்கள் என்று காட்ட, அவர்களின் நாட்டடையாளம் இந்தியா அல்ல என்பதாகக் கட்டமைக்கப்படுகிறது.
இந்தியாவின் அறிவுத்திரட்சி மனிதர்களாகவும் மறைமுக ஆதிக்கத்தைச் செய்பவர்களாகவும் கருதப்படும் பிராமணர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் அல்ல; வந்தேறிகள் என்றொரு கருத்து நீண்ட காலமாக இருக்கிறது. கைபர்- போலன் கணவாய் வழியாக ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியிலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும் கால்நடைகளோடு வந்தவர்கள் ஆரிய இனத்தவர்கள். இங்கு வந்தபின் வடக்கிலிருந்த பூர்வ இனத்தவர்களைத் தெற்கு நோக்கி விரட்டிவிட்டு வட இந்தியாவில் பரவினார்கள் என்று கருத்தோட்டம் அழிந்துபோகாத வந்தேறிக் கருத்தோட்டமாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தக் கருத்தோட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகச் சிலர் ஆய்வு முடிவுகளைத் தந்தபோது – ஐரோப்பியத் தொடர்புக்காக மகிழ்ச்சி அடைந்த ஆரியர்கள் – பிராமணர்கள் – தங்களைத் தொடர்ச்சியாக வந்தேறிகள் என்ற குற்றவுணர்வுக்குள் தள்ளும் பின் விளைவை அப்போது சிந்திக்கவில்லை. ஐரோப்பாவை ஆட்டுவித்த நாஜிகளோடும் ஜெர்மானியர்களோடும் தங்களை இணைவைத்துப் பேசுவதில் ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதும் வரலாறுதான். வெளியிலிருந்து வந்தவர்கள் ஆட்சியதிகாரம் செய்யக்கூடாது என்று கருத்துரு எழுந்து பேயாட்டம் ஆடும் என்பதை அவர்கள் அறிந்தே இருந்தார்கள்
சென்னை ராஜதானியாக இருந்தபோது பிராமணர் – பிராமணரல்லாதார் என்ற எதிர்வுகளின் வழித் திராவிட அடையாளம் உருவாக்கப்பட்டது. அவ்வடையாளத்தில் பிராமணர்கள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள்; திராவிடர்கள் தென்னிந்தியாவின் பூர்வகுடிகள் என்று முன்னிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியே மொழி வாரி மாநிலங்கள் உருவான பின்பு அந்தந்த மாநிலத்தை அந்தந்த மொழி பேசும் ஆளுமைகளே ஆள வேண்டும் என்ற கருத்தோட்டம். அதன் உச்சநிலை வெளிப்பாடு நாம் தமிழர் என்ற அரசியல் கட்சி; சீமானின் ஆவேசப்பேச்சு.
பெரியார் ஈ.வே.ரா. பயன்படுத்திய கருவியைத் திருப்பிப்போட்டுப் பயன்படுத்துகிறார் என்பது மட்டுமே வேறுபாடு. பிராமணர்களைத் தமிழர்கள் என ஏற்றுக்கொண்டு, ஈ வே ரா வைத் தெலுங்கராகச் சித்திரித்து அவர் வழி வந்த திராவிட இயக்கமும் அதன் கருத்தியலும் தமிழர்களுக்கு எதிரான கருத்தியல் – வெளியார் ஆதிக்கத்தை ஏற்கும் கருத்தியல் என்று வாதிடுகிறார் என்கிறபோது அவருக்கு நோக்கங்கள் மறைமுக நோக்கங்கள் – உள் நோக்கங்கள் கொண்டன என விமரிசனத்தைச் சந்திக்கின்றன.நாம் தமிழர் கட்சியும் அதன் தலைவர் சீமானும் தமிழ்நாட்டுத் தமிழர்களை விடவும் முதன்மையாகக் கருதுவது ஈழத்தமிழர் விடுதலையைத் தான். 30 ஆண்டுகாலப் போராட்டத்தாலும் ஆயுதப் போராட்டத்தாலும் ஈழத்தமிழர்கள் கிழக்கே ஆஸ்திரேலியா தொடங்கி மேற்கே கனடாவரை புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். முதலில் அகதிகளாக ஏற்றுக்கொண்ட பல நாடுகள் இப்போது குடியுரிமை வழங்கவும் தொடங்கி விட்டன. அவர்கள் எல்லாம் திரும்பவும் தாய்மண்ணான ஈழத்திற்குத் திரும்புவார்களா? என்பதே கேள்விக்குறி. அதே நேரத்தில் வந்தேறிகளால் நாடு சிக்கல்களை சந்திக்கின்றன என்று குரல் எழுப்பும் புதிய நாஜிக்குரல்களை ஐரோப்பிய நாடுகளில் கேட்கவும் முடிகிறது. உலகம் முழுவதும் காலனியாதிக்கத்தை ஏற்படுத்திய ஐக்கிய ராஜ்ஜியத்தின் வெள்ளையர்களைப் போல வந்தார்கள்; வென்றார்கள்; சென்றார்கள் என்று உலகத்தின் கதை முடிந்துவிடுவதில்லை.
இனங்களின் தோற்றமும் மொழிகளின் தோற்றமும் பற்றிய உலக அளவிலான ஆய்வுகள் எந்தவொரு இனமும் மொழியும் தோன்றிய நிலப் பரப்பிற்குள்ளேயே நின்றுவிட்டவை அல்ல. வெவ்வேறு காரணங்களால் பரவியுள்ளன என்கின்றன. தாவரங்களின் விதைகள் தானாகப் பரவி வெவ்வேறு நிலப்பரப்பில் விழுந்தாலும் அந்த நிலம், விழும் விதைகள் எல்லாவற்றையும் முளைக்கச் செய்வதில்லை. முளைத்த பயிர்களும் செடிகளும் வளர்ச்சி அடைந்து பலன் தருவதுமில்லை. அதனைத் தீர்மானிக்கும் சக்திகளாக மண்ணின் இயல்பும், மழை, வெயில், பனி, காற்று போன்ற குளிர்மையும் வெப்பமுமான சூழலும் காரணங்களாக இருக்கின்றன. மனிதப்பரவலுக்குக் காரணமாக உணவு தேடும் உந்துதலில் வேட்டைச் சமுதாய மனிதர்கள் நகர்ந்துகொண்டே இருந்தார்கள். நிலவுடைமை ஆட்சிக்காலத்தில் நாடு பிடித்துப் பேரரசுக் கனவுகளை நிறைவேற்றும் பெரும்போர்கள் காரணங்களாக இருந்தன. வணிக வல்லாதிக்கக் காலமான முதலாளித்துவ காலத்தில் தேவைக்கதிமாக உற்பத்தி செய்யும் பொருட்களுக்காகவும் உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காகவும் இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் இருக்கின்றன.
பேரடையாளங்களான இனம், நிறம், மொழி ஆகியவற்றால் மட்டுமே உள்ளே x வெளியே சொல்லாடல்கள் உருவாகும் என்று நினைக்கவேண்டியதில்லை. ஜனநாயக முறையின் அடித்தளம் என்று கிராமப் பஞ்சாயத்து முறையைக் கருதும் இந்திய அரசு தமிழ் நாட்டில் நான்கு பஞ்சாயத்துக்களில்- பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டாக் கச்சியேந்தல்- தேர்தலை நடத்த முடியாமல் இருந்தது . தமிழ் நாட்டில் நடக்கும் அரசாங்கம் தன் அரசியல் அமைப்புக் கடமையை நிறைவேற்ற விரும்பாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தது. அப்போது அதைப் பற்றிப் பேசிய பலரும் பெரும்பான்மைக்கெதிராக சிறுபான்மையை நிறுத்துவது சரியல்ல என்பது போலப் பேசினார்கள். அந்தக் கிராமத்தவர்கள் தந்த பேட்டிகளில் வெளிப்பட்டது ஜனநாயக நடைமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளாத அப்பாவித்தனம் மட்டுமல்ல; பிரச்சினைகளை உருவாக்குபவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் தான் என்பதாகவும் இருந்தன.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் போன்ற பஞ்சாயத்துக்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், தலித்துக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தும் போராட்டக்காரர்களும், ஜனநாயகவாதிகளும், ஊடகங்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றே கணிக்கப்பட்டனர். வெளியில் இருந்து வருபவர்கள் பிரச்சினைகள் உருவாக்குபவர்கள் என்று நம்புவதும், உள்ளே இருப்பவர்கள் சமரசமும் சகிப்பும் மனிதாபிமானமும் கொண்டவர்கள் என்று நம்பச் செய்யவும் முயற்சிகள் எப்போதும் தொடர்ந்து நடக்கின்றன.
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பிருந்த குருகுலக் கல்வி உயர்வானது என்றும் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த கல்வி முறை- மெக்காலே கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி முறை என்று பேசுவது கூட ஒர் அப்பாவித்தனம்தான். ஆனால் அதற்குள் அனைவருக்கும் கல்வி அளிக்கும் திட்டம் இருந்தது என்பதை மறைக்கின்றனர் என்பதை உணர்ந்தாக வேண்டும். அப்பாவித்தனம் ஏற்கத்தக்கதல்ல; அப்பாவித்தனத்தின் பின்னால் தான் தோன்றித்தனமும் பொதுச்சிவில் சட்டத்திற்கு ஒத்துப் போகாத சாதி ஆதிக்க மனோபாவமும் இருந்தன என்பதற்கு அந்த நான்கு கிராமங்களின் பஞ்சாயத்துத் தேர்தல்கள் தள்ளிப்போனது உதாரணங்களாக இருந்தன. சாதிச் சுவர் எழுப்பிய உத்தப்புரத்தில் கூட வெளியில் இருந்து வந்தவர்களே சிக்கல்களை வளர்க்கிறார்கள் என்று அந்தக் காலகட்டத்தில் பேசப்பட்டன.
கட்சிகள், இயக்கங்கள், தலைமைகள் போன்றவற்றை முன்வைத்து மட்டும்தான் உள்ளே x வெளியே என்ற சொல்லாடல்கள் உருவாக்கப்படும் என்பதில்லை. இலக்கியத்திறனாய்வுத் தளத்தில் கோட்பாடுகளை முன்வைத்துப் பிரதிகளைத் திறனாய்வு செய்யும்போது இவையெதுவும் இந்திய மண்ணில் வேர்கொண்டு உருவானவை அல்ல என்று புறங்கையால் ஒதுக்குவிட்டு, எழுத்தாளரின் உள்ளுணர்வை மட்டுமே பார்க்க வேண்டும் என்று வாதிப்பவர்களிடம் செயல்படுவதும் அதே சொல்லாடல்கள் தான். உள்ளுணர்வு என்பது மனிதர்களைப் புறநிலையாகப் பார்க்கக் கூடாது; அகநிலையாக மட்டுமே கணித்துப் பேசவேண்டும் எனக் கோருவதாகும். இந்து சமயத்தத்துவங்கள் மனிதர்களை ஜீவாத்மாவாக கணித்துக் கொண்டு, பரமாத்மாவை அடையச் செய்யும் முயற்சிகளே வாழ்க்கை எனப் பேசும் சொல்லாடல்களின் விரிவுகளே. கோட்பாட்டுத் திறனாய்வுகளை உருவாக்கிய மேற்கத்தியத் தத்துவங்களான மார்க்சியம், ப்ராய்டியம், அமைப்பியம், பெண்ணியம், பின் நவீனத்துவம் என எல்லாவற்றையும் வெளியிலிருந்து வந்தவை என்று ஒதுக்கிவிட்டு ‘இந்திய’ சொல்லாடல்களை ஏற்கும் மனோபாவம் கடைசியில் தேர்தல் முறையையும் அதன் வழியாக உருவாகும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மக்களாட்சி முறையையும்கூட வெளியிலிருந்து வந்த கருத்தியல் என்றே வாதிடத் தொடங்கிவிடும். பொதுப்புத்தி வழியாக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட மனம் அதை மட்டுமா தள்ளிவிடப்போகிறது.
கருத்துகள்