பழக்கவழக்கம் என்று சொல்லி
‘இருபது வயதில் எழுதிப் பழகு ; நாற்பது வயதில் நடந்து பழகு'
ஔவையாரின் ஆத்திச்சூடி அல்ல இது. கொன்றை வேந்தனிலும் கூட இப்படிச் சொல்லப்படவில்லை. நாம் பின்பற்ற வேண்டிய நடைமுறையைப் புலவர் ஒருவர் சொல்லித்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமா என்ன..?
நம் முன்னோர் சொன்ன வழிகளையும் விதிகளையும் மட்டும்தான்
பின்பற்ற வேண்டும் என்பதில்லை. அதுபோல் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டார்கள் என்பதற்காகப்
பின்பற்றியே ஆகவேண்டும் என்பதும் இல்லை.‘’ நான் என் வாழ்க்கையில் பின்பற்றுவதற்காக
இதை முன் மொழிந்து கொண்டிருக்கிறேன்; எனது உடலுக்கும் மனதிற்கும் உவப்பானதாக
இது இருக்கிறது; உங்களுக்க்கும் இது பொருந்துமா என்று
யோசித்துப் பாருங்கள்; பொருந்தினால் பின்பற்றுங்கள்; பொருந்தவில்லையா தூக்கித்
தூரப் போட்டுவிடுங்கள்’ இப்படி யோசிப்பதும் நடந்து கொள்வதும் ஜனநாயக நடைமுறைகள். இப்படித்தான்
நான் நடந்து கொண்டிருக்கிறேன்.
ஜனநாயக நடையாக நான் நடக்கத்தொடங்கி ஆண்டுகள் பல இருக்கும். தினசரி காலையில் ஒருமணிநேரம் நடந்துவிடுவது என்று உறுதியுடன் நடந்து வருகிறேன். மெதுவாக ஆரம்பித்து, வேகம் பிடித்து நடந்து, கைகால்களை ஆட்டி, உட்கார்ந்து எழுந்து, குனிந்து, நிமிர்ந்து பயிற்சிகள் செய்துவிட்டால் அன்றைய பொழுது நன்றாகத்தான் இருக்கும். காலையில் நடக்கவில்லையென்றால், மாலையில் நடந்து விடுவேன். ஆனால் இப்பொழுதெல்லாம் மாலையில் நடக்க நேரமே இருப்பதில்லை. பல்கலைக் கழகத்திலிருந்து வீடுவந்து சேரவே இருட்டத்தொடங்கி விடுகிறது. அயற்சியும் சோர்வும் நிரம்பிய உடல் நடைக்கும் பயிற்சிகளுக்கும் தயாரில்லை என்று மறுத்து விடுகின்றது. எனவே தான் காலை நடை கட்டாயம் என்று ஆக்கிக் கொண்டு விட்டேன்.
எனது வாக்கிங் பழக்கத்தின் வரலாறை எழுதினால் அது ஒரு
வேளை எனது 'சுமோக்கிங்" பழக்கத்தின் மறுதலையாக இருக்கக்கூடும் இவ்விரு பழக்கங்களில்
காலத்தால் முந்தியது புகைப்பிடி பழக்கம்தான். கல்லூரி மாணவனாக இருந்ததற்கும் முன்பு பள்ளியில் படித்த போதே ஏற்பட்டுவிட்டது. கண்டிப்பதற்கு யாரும் இல்லாத விடுதி வாழ்க்கையில்
தொடங்கிய பழக்கம். கையில் காசு இருந்தால் பிடிப்பதும்,
இல்லையென்றால் விடுவதுமாகத்
தொடர்ந்தது. ஆனால் ஆய்வு மாணவனாக ஆனபிறகு விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டது. ‘இரவு
கண்விழித்துப் படிப்பதற்கு உதவுவதாகவும்,
சிந்தனையைத் தூண்டுகிறேன்
பேர்வழி’ என்று நம்பச் செய்தும் என்னுடன் நட்பாகிவிட்ட அந்த வெண்குழல் நண்பன் மிகநீண்டகாலம்
வேண்டப்பட்ட விருந்தாளியாகவே இருந்தான். இந்த வேண்டப்பட்ட விருந்தாளியை வேண்டாத விருந்தாளியாக
ஆக்க வந்தன சளியும் இருமலும்.
என்னைச் சிந்தனை உள்ள ஜந்துவாக ஆக்கியவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தியே ஆகவேண்டும் என்றால் முதன்மையாகச் செலுத்தப்பட வேண்டிய கடன் இந்தச் சளிக்கும் இருமலுக்கும் தான். இவைதான் எனக்கு ‘உடல் வேறு; மனம் வேறு‘ என்ற அடிப்படைப் புரிதலை முதன்முதலில் உணர்த்தின. எனது மனதின் விருப்பமோ வகை வகையான சிகரெட்டுகள். ஆனால் உடலோ சளியோடும் இருமலோடும் கூடிப்புணர்ந்தது. மனம் சிகரெட்டிடமிருந்து விடுதலை பெற்றால், உடலை விவாகரத்து செய்துவிட சளியும் இருமலும் தயாராக இருந்தன. இரண்டும் விட்டுக் கொடுக்காமல் சண்டித்தனம் செய்தன.ஒரு வழியாக மனம் வெண் குழல் வேந்தனை விலக்கிவிட்டு நடையில் கவனம் செலுத்தியது.என்றாலும் ஒரேயடியாக விலகிப் போய்விட்டது என்று சொல்ல முடியாதபடி வருவதும் போவதுமாக இருப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது வார்சா வாழ்க்கை. போன முதல்வாரத்திலேயே அங்கு கிடைத்த சிகரெட்டின் காரமும் எரிச்சலும் சேர்ந்து பெரும் அவதியாகிவிட்டது. அத்தோடு பல்கலைக்கழக வளாகத்தில் எல்லா இடத்திலேயும் புகை பிடிக்கமுடியாது. அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்குப் போய்தான் பிடிக்கவேண்டும். அங்கே போனால் என் வகுப்பில் படிக்கும் மாணவிகளும் மாணவர்களும் நின்று புகையை ஊதிக்கொண்டிருந்தார்கள். அப்போது விட்ட புகைப்பழக்கம் அங்கேயே போய்விட்டது.
*********
புகைக்கும் பழக்கும் நின்றுபோய்விட்டது. ஆனால் நடைப்பழக்கம் தங்கி விட்டது; அதை நிறுத்தவே கூடாது என்று மருத்துவர்களும் சொல்லிவிட்டார்கள் இப்போது. கிராமத்தில் என்றால் தோட்டத்திற்குப் போய் குளித்துவிட்டு வந்தாலே போதும். ஆனால் நகரங்களில் தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதாக இருக்கிறது. காலை அல்லது மாலையில் ஒருமணி நேரம் நடைக்கும் உடற்பயிற்சிக்கும் ஒதுக்குவது என்ற பழக்கம் ஏற்பட்ட காலமும் ஆய்வாளராக இருந்த காலத்தில்தான். நடக்கும் வெளிகள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக இருந்துள்ளன. மதுரைப் பல்கலைக்கழக ஆய்வாளர் குடியிருப்புக் காலத்தில் நாகமலை அடிவாரத்து மண்சாலையில் தொடங்கி தார்ச்சாலையில் ஓடுவோம். ஆம் அப்போதெல்லாம் நடைப்பயிற்சி அல்ல. மென்வேக ஓட்டப்பயிற்சி. அதற்கான வெள்ளை வண்ணப் பாதணியுடனும் உடலை இறுக்கிய ஆடையுடன் ஓடிவிட்டு வந்து வியர்வை போகும் வரை தினசரியில் மூழ்குவதும் பழக்கமும் வழக்கமுமாக இருந்தது.அமெரிக்கன் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தபோது கே.கே.நகரில் வாசம். அதனால் வண்டியூர் கண்மாய்க்கரையில் போடப்பட்டிருந்த நீள் பூங்கா நடைப்பயிற்சிக்காகவே போடப்பட்ட பூங்கா..
பாண்டிச்சேரியில் முதல் நான்காண்டுகள் குடியிருந்தது அங்காளம்மன் நகர். கருவடிக்குப்பம், வைத்திக்குப்பம் என நீளும் மீனவக் குப்பங்களையொட்டிய பகுதி. வாரவிடுமுறை நாட்களில் குப்பத்து மணலில் கால் புதைய நடந்துவிட்டு மீன்கள் வாங்கிவருவேன். ஆனால் வேலை நாட்களில் புதுவையின் அழகிய கடற்கரைச் சாலையில் தான் மெல்லோட்டம். வீட்டிலிருந்து மிதிவண்டியில் போய் வடக்கோரம் நிறுத்தி விட்டு தூப்ளே சிலை வரைக்கும் இரண்டுதடவை போய்வந்து விட்டுத் திரும்புவேன். இந்திரா பார்த்தசாரதியும் அங்கே மென்னடைக்காக வருவார். அங்கிருந்து லாஸ்பேட்டைக்குப் போனபிறகு வீட்டிலிருந்தே தொடங்கும் நடை விமானநிலைய வாசலைத் தொட்டுத் திரும்புவதாக மாறியது. இடையில் ரவிக்குமார் வீடு, கி.ரா. வீடு, பஞ்சாங்கம் வீடு என யாராவது ஒருவரைப் பார்த்தால் நின்று தொடரும் நடைப்பயணம்.
நெல்லைக்கு வந்தபிறகு பெரும்பாலான நடைவெளிகள் விளையாட்டு மைதானங்களாக மாறின. தொடக்க ஆண்டில் மருத்துவக்கல்லூரி மைதானம், அடுத்த சில ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் அண்ணா விளையாட்டு அரங்கம். அண்ணா விளையாட்டரங்கம் வரை வாடகைவீடுகளும் மெல்லோட்டங்களுமாக இருந்த வாழ்க்கை இப்போதிருக்கும் கட்டபொம்மன் நகருக்கு வந்தபோது முடிந்துபோனது. கட்டபொம்மன் நகர் புதிதுபுதிதாக வீடுகள் கட்டி மனிதர்கள் குடியேறிக் கொண்டிருக்கும் துணைநகரப்பகுதி அது. நடக்கும்பாதையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் உண்டு. ஆம் வீடுகள் தான்.பங்களாக்களோ, குடிசைகளோ இப்பகுதியில் வர வாய்ப்புகள் குறைவு. எல்லாமே நடுத்தரவர்க்கத்தின் கனவு இல்லங்கள். வங்கிக் கடனில் உருவாகும் கனவு இல்லங்களில் அதிக பட்ச வசதி என்னவாக இருந்துவிடப் போகிறது. இரண்டு குளியலறைகளுடன் கூடிய படுக்கையறைகளும் வாங்கி விடுவோம் என்ற நம்பிக்கையில் கார்நிறுத்தும் போர்டிகோவும்; மண்தொட்டிகளில் ரோஜாச் செடிகளும் வண்ண வண்ண இலைகளுடன் கூடிய குரோட்டன்களும் கூடச் சிரிக்கலாம். மாதத் தவணைக்குப் போக மீதியில் குடும்பம் நடத்தத் தயாராகும் நடுத்தர வர்க்கத்திற்கு நடைப்பழக்கம் மருத்துவச் செலவைக் குறைக்கும் ஒருவழி
***********
நடைபழக்க நண்பர்கள் பட்டியலே நிறைய உண்டு. என்றாலும் அவர்களோடு சேர்ந்து நடக்கும் பழக்கம் எப்போதும் எனக்கில்லை. நின்று பேசிவிட்டு எதிர்த்திசையில்தான் எனத் நடை இருக்கும். நடையில் சந்தித்த இரண்டு நிகழ்வுகள் இப்போதும் நினைவில் இருக்கிறது. ஒன்று சாதியின் இருப்பை உணர்த்திய நிகழ்வு. இன்று சமயத்தின் இருப்பை உணர்த்திய நிகழ்வு.முதலில் சாதியின் இருப்பு.
அவர் என்னைவிட இருபது வயது மூத்தவர் என்றாலும் என்னிலும் சுறுசுறுப்பானவர் என்றுதான் சொல்ல வேண்டும். அரசுத்துறை ஒன்றில் திருப்தி தரும் பதவிவரை ஏறி அதிகாரம் செலுத்திவிட்டு, பதவியில் இருக்கும் போது சொந்தவீடு கட்டிக்கொள்ளாமல் ஓய்வு பெற்றபின் கட்டியவீட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்.உறவினர்கள் கூட்டம் அவரது மகிழ்ச்சியான வாழ்வைக் காட்டுவனவாக இருக்கும். நான் பஸ்ஸைப் பிடிக்கப் போகும் பாதையில் தான் அவரது வீடு. அவர் காலை நடைக்கு என் வீட்டைத்தாண்டித் தான் செல்வார். காலை ஐந்தரை மணிக்கெல்லாம் நடக்கத்தொடங்கி விடும் அவரைப் பெரும்பாலும் சந்திப்பது அந்த மண்சாலையில் தான்.நேருக்கு நேராகச் சந்தித்துக் கொள்ளும்பொழுது புன்முறுவல் செய்வார்; செய்வேன். அன்று பேசவேண்டும் என்று அழைத்துப் பேசினார். கடந்த ஆறுமாதங்களாக என்னோடு பேசவேண்டும் என்று நினைக்காதவரை என்னோடு பேச வேண்டும் எனத் தூண்டியது எது என யோசித்துப் பார்த்தேன்.
பேரா. அ.ராமசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் -இந்தத் தகவல் பலகையைத் தொங்கவிட்டதுதான் என்பது பின்னர்
தெரிந்தது. பல்கலைக்கழகங்களில் பணியாற்றுபவர் ஒருவர் அறிமுகமானவராக இருப்பதில் சில
அனுகூலங்கள் உண்டு. தெரிந்த நபருக்கோ, உறவினர் களுக்கோ அதன் மூலம் உதவி
செய்யலாம். கல்லூரிகளில் அட்மிஷன் வாங்க அந்தப் பழக்கம் பயன்படலாம். பல்கலைக்கழகத்தேர்வு
முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். தனக்குத் தெரிந்த நபரின் விசயத்தில் அந்த
நபரோ பல்கலைக்கழகமோ செய்யும் குளறுபடிகளை- சிக்கலின் முடிச்சை அவிழ்ப்பதற்கு அந்தப்
பெயர் பயன்படலாம். வெளிப்படையான இந்தப் பயன்பாடுகள் தவிர மறைமுகப் பயன்பாடுகள் கூட
உண்டு. எல்லா அரசுத்துறைகளிலும் நடக்கும் அல்லோலோ கல்லோலோங்கள் பல்கலைக்கழகங்களுக்கு
மட்டும் பொருந்தாமல் போய்விடுமா .. என்ன ?
என்ன பயன் கருதி என்னிடம்
பேச நினைத்தார் என்று என்னால் இப்பொழுதும் உறுதியாகக் கூற முடியாது. காரணம் ஒருநாள்
பேச்சோடு அந்த உறவு முறிந்து போனது தான்.
என்னோடு பேசுவதற்காகவே காத்திருந்தவர் போல நின்றிருந்தார்.
எனக்கு முன்பாக நடக்கத் தொடங்கி என்னுடன் சேர்ந்து கொண்டார்.
‘சார்.. நீங்க பல்கலைக்கழகத்தில…
‘
‘பேராசிரியரா இருக்கேன்..’
‘அப்ப ரிசல்ட்டெல்லாம் போடுறது நீங்க இல்லையா..?
‘ அதுவேற பிரிவு.. நான்
வந்து.. ஆசிரியர்; பேராசிரியர்.’
‘ அப்போ காலேஜ்ல இருக்கிறவங்க’
‘அவங்களும் ஆசிரியர்கள்
தான்..’
‘என்ன பாடம் நடத்துவீங்க..’
‘தமிழ் இலக்கியம்.. மொழி
‘
‘இல்ல பி.ஏ. , பி.எஸ்சி.யின்னு சொல்றாங்களே..
அந்த மாதிரியா..’
‘ யுனிவர்சிற்றியில பி.ஏ., பி.எஸ்சி யெல்லாம் கிடையாதுங்க..
எம்.ஏ. எம்.எஸ்சி தான் உண்டு அப்புறம் எம்பில்,
பிஎச்.டி. இந்தமாதிரி
ஆய்வு பண்றவங்களும் படிப்பாங்க’
‘ அப்போ ..பேராசிரியர்களுக்கெல்லாம்
பேராசிரியர்ன்னு சொல்லுங்க..’
‘அப்படியெல்லாம் ஒன்னும்
இல்ல¦ங்க.. ,பேராசிரியர் அவ்வளவு தான் ..’
கொஞ்சம் வேகமாக நடக்கத்தொடங்கியபோது அவர் நின்றுவிட்டார்.
நான் வழக்கமாக நடக்கும் தூரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய போது ஆச்சரியம். அவர் அந்த
இடத்திலிருந்து விலகி ஓரத்தில் இருந்த சிமெண்ட் மேடையில் உட்கார்ந்திருந்தார். நான்
வருவது தெரிந்து எழுவது தெரிந்தது. அவருக்கு என்னிடம் பேச இன்னும் விசயம் உள்ளது என்பது
தெரிந்தது. நானும் அவரருகில் வந்ததும் தயங்கி நின்றேன். பேச்சு திரும்பவும் தொடர்ந்தது; மெதுநடையுடன்.
-சொன்னேன்.
‘பசங்க என்ன செய்றாங்க.?
சொன்னோன்
‘ சொந்த வீடு கட்டிக்கிறதுக்கு
முன்னே எங்கே இருந்தீங்க..?
-சொன்னேன்.
‘நீங்களா நின்னு கட்டுனீங்களா..? காண்டராக்ட்காரங்க கிட்ட
விட்டீங்களா..?
-சொன்னேன்.
‘ஐயா ..நம்மெ வர்ணம்..?
‘சொல்லவில்லை; வர்ணமின்னா..? கேட்டேன்.
‘வர்ணமுன்னா தெரியாதுங்களா..
என்ன சாதின்னு கேட்டேன்’
‘ அதெத் தெரிஞ்சு என்ன
செய்யப் போறீங்க..’
‘சும்மா தெரிஞ்சுக்கிடலாம்னுதான்.’
‘அதான் கேட்கிறென்; தெரிஞ்சு
என்ன செய்யப் போறீங்க’
‘தெரிஞ்சுக்கிட்டா
.. நாமெ.. நல்லா பழகலாம் இல்லையா..’
‘தெரிஞ்சுக்கிட்டெ
பிறகுதான் நல்லா பழகுவீங்கன்னா.. உங்க பழக்கம் எனக்கு வேணாமே..?’
‘ எதையும்
தெரிஞ்சுக்கிட்டுப் பழகுறது வழக்கம் தானுங்களே..’
‘தெரிஞ்சப்
பிறகு நீங்க பழக மாட்டீங்க என்பது தானே உண்மை.’
‘இல்லை..
அது வந்து.. ‘ இழுத்தார்.
‘ஐயா.., ஒங்க பழக்கம் ஒங்க கிட்டேயே இருக்கட்டும்; எனது வழக்கம் எங்கிட்டேயே இருக்கட்டும்’
பலமுறை என் எதிரில் நடந்து போகிறார். புன்முறுவல்கூட இல்லை; பழக்கமும்
வழக்கமும் எதுவெனச் சொல்ல.
பல வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. பாண்டிச்சேரியில் இருந்தபோது. அது பழக்கமா..? வழக்கமா.? எதுவெனத்தெரியவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த
என் மகன் கேட்டான்;
அப்போ அவனுக்கு வயது ஐந்து.
‘ ஏண்டா எதுக்குக் கேட்கிற ..?’
‘ டீச்சர் கேட்டுட்டு வரச் சொன்னாங்க’
‘அரிசன் சாதியின்னா.. இலவசமா நோட்டுப் புத்தகமெல்லாம் தருவாங்களாம்..’
‘நமக்கு அது வேண்டாம் என்றோ.. கிடைக்காது என்றோ சொல்லியிருக்கலாம். நான் அப்படிச் சொல்லவில்லை.சாதி என்றால் என்ன..? அதன் பிரிவுகள் எப்படி வந்தது..? எவையெல்லாம்
உயர்ந்த சாதிகள்;
எது எதுவெல்லாம் தாழ்ந்த சாதிகள் என்று விலாவரியாகப் பாடம் நடத்திவிட்டு, ‘நாமெ அரிசன்
இல்லை; அதனால் இலவசப் புத்தகம் நமக்குத் தரமாட்டாங்க ‘ என்று பெருமை பொங்க சொல்லி அனுப்பினேன்.
நான் மட்டும் தான் அப்படிச் சொல்லியிருப்பேனா..? எல்லாக் குழந்தைகளின் அப்பாக்களும்
அப்படிச் சொல்லிருப்பார்களா..?
அப்படிச் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டு வகுப்புக்குப் போன
பிள்ளைகளின் அனுபவங்களின் என்னவாக இருந்திருக்கும்.?
இதையெல்லாம் அப்பொழுது யோசிக்கவில்லை. என்மகனிடம் கேட்கவுமில்லை; அவனும் சொல்லவுமில்ல.சொல்ல வேண்டிய அவசியம் அவனுக்கு நேரவில்லை. நான் ஏன் கேட்கவில்லை; என்னை யோசிக்கவிடாமல் செய்தது எது? இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன்.
தலித்தாக இருக்கும் ஒருவர் என்னைப் போல யோசிக்காமலும் கேட்காமலும் இருந்திருக்க
முடியுமா..? நிச்சயம் முடியாது. அவரது மகனோ,
மகளோ அன்று வகுப்பில் நடந்ததைச் சொல்லாமல் இருந்திருப்பார்களா..? தனியாகப்
பிரிக்கப்பட்டு,
காக்கவைத்து,
கடனே என்று வழங்கும் ஆசிரியர்களிடமிருந்து இலவசப் புத்தகங்களைப் பெற்று வரும் அவர்களின் மனநிலை
என்னவாக இருக்கும்..?
தனக்கு மட்டும் கிடைக்கிறதே என்ற பெருமிதமா..? வாங்காத
மாணாக்கர்களின் மனநிலை வெளிப்பாடு ஆதங்கமா..?
கிடைக்கவில்லையே என்ற வருத்தமா..? அதை வாங்க
வேண்டிய சாதியில் நான் பிறக்கவில்லை என்கிற பெருமையா..?
வலியை உணர்ந்து தான் பேச வேண்டும். சொல்லாடல்கள் உணரப்பட வேண்டாதவை. ஆனால் சொல்லாடல்களே
பழக்கமாகவும் வழக்கமாகவும் ஆகிவிடும் ஆபத்துக்கள் கொண்டவை,
பல்கலைக்கழக வளாகங்களில் குட் மார்னிங் சொல்பவர்களுக்குத் திருப்பிக் குட்மார்னிங் சொல்வதுபோல, காலை வணக்கம் சொல்பவர்களுக்குத் திருப்பிக் காலை வணக்கம் சொல்வதுபோல சலாம் மட்டுமே சொல்வதுண்டு. கையை நீட்டிக் குலுக்க நினைத்தால் கையை நீட்டிக் குலுக்குவேன். கையை குவித்து வணக்கம் சொல்பவர்களுக்குத் திருப்பிக் கைவித்து வணக்கம் சொல்வதற்கு மனம் எப்போதும் தடைபோடும். ஒரு புன்சிரிப்பைக் காட்டி வணக்கத்தோடு நிறுத்திக்கொள்வேன். குறிப்பாகப் பெண்கள் வணக்கம் சொல்லும்போது புன்சிரிப்பு ஆழமானதாக வெளிப்படும். அந்த ஆழம் கைகுவித்து வணங்கவில்லை என்பதை மறக்கடிக்கும் உத்தி.கைகுவித்து வணங்குவதோ, சிலுவைக்குறியிட்டுக் காட்டுவதோ, வாய்வரைக் கை உயர்த்தி சலாம் சொல்வதோ என்னுடைய பழக்கம் இல்லை என்று என் உடல் சொல்கிறது.
பழக்கமும் வழக்கமும் மண்மூடிப் போவதாக என்று சொன்னால் எங்கள் மனதைப் புண்படுத்திவிட்டாய் என்று கூக்குரல் எழுப்பும் கூட்டங்களும் அதிகரித்துவிட்டன..
========================================================================
மே,2003 இல் புதிய கோடாங்கியில் எழுதுதிய கட்டுரையின் இற்றைப்படுத்திய வடிவம்
கருத்துகள்