ராஜ் கௌதமனின் தன் வரலாற்று நாவல்கள்
573 பக்கங்களில் அச்சிடப்பட்டுள்ள சிலுவை ராஜ் சரித்திரத்தையும், 330 பக்கங்களில் அச்சிடப் பட்டுள்ள காலச்சுமையையும் இரண்டு வெவ்வேறு நாவல்களாக ஒரு வாசகன் வாசித்துக் கொள்வதில் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் நாவலாசிரியர் ராஜ்கௌதமன் இந்த இரண்டு நாவல்களையும் எழுதியதற்கான நோக்கம் ஒன்று இருக்கிறது. அந்நோக்கம் என்ன என்று அறிய விருப்பமிருந்தால் எழுதி அச்சிடப்பட்ட வரிசைப்படி முதலில் சிலுவைராஜ் சரித்திரத்தையும் (2002) இரண்டாவதாகக் காலச்சுமை (2003) யையும் தான் வாசிக்க வேண்டும். இவ்விரண்டு பாகங்களும் சேர்ந்து இன்று நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய விமரிசகராக அறியப்படும் ராஜ்கௌதமனின் வாழ்க்கை வரலாற்றை அவருடைய கோணத்திலிருந்து சொல்லுகின்றன. இவை ஒரு விதத்தில் புனைகதை என்பது போல எழுதப்பட்டாலும் ஒருவனின் வாழ்க்கை வரலாறுதான் என்பதை வாசிப்பவர்கள் மறந்து விடக்கூடாது என்ற அக்கறை கொண்ட எழுத்தாகவும் இருக்கிறது. முதல் பாகத்தில் தரப்பட்டுள்ள புகைப்படங்களின் வரிசைகளும் காலச் சுமையில் இடம் பெற்றுள்ள தகவல்களும் கூட இவற்றை வாழ்க்கை வரலாறாக வாசிக்க வேண்டும் என்பதற்காகத் தரப்பட்டவைதா...