இன்னொரு தேசத்தில்: இருப்பும் இயக்கமும்
போலந்துக்கு வந்து சேர்ந்த முதல் மாதத்திலேயே தெரிந்து கொள்ள வேண்டிய பல விசயங்களைப் பத்து மாதங்களுக்குப் பின்னர் தெரிந்து கொள்ளத் தொடங்கினேன். ஓராண்டு முடியப் போகும்போது நான் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகளை மற்றவர்கள் உடனடியாக எதிர்கொள்ள வேண்டி யதிருக்கும். எவர் ஒருவரும் இன்னொரு நாட்டிற்குப் போய் நீண்டகாலம் தங்க நேரிடும் போது சந்திக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் இவை என்பதால் கொஞ்சம் கூடுதலாக அவற்றை விளக்கலாம் என நினைக்கிறேன். இதனை இருப்பும் இயக்கமும் சார்ந்த பிரச்சினைகள் எனச் சுருக்கிச் சொல்லலாம். மனிதன் வாழ்கிறான் என்றால் ஓரிடத்தில்இருக்கிறான் என்பதும் அங்கிருந்து இயங்குகிறான் என்பதும் தானே பொருள்.