தமிழ் என்பது நபர்கள் அல்ல
வெற்றித்தமிழர் பேரவை - அண்மையில் (நவம்பர்,11) உத்தர்கண்ட் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் என்பவருக்குச் சென்னையில் பாராட்டுவிழா ஒன்றை நடத்திய அமைப்பு அல்லது அறக்கட்டளை. இவ்வமைப்பு கவி வைரமுத்துவின் தமிழ்ப் பணியோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒன்று. இலக்கிய அமைப்புகள் பலவிதமானவை;அவற்றின் செயல்களுக்குப் பல நோக்கங்கள் இருக்கின்றன. நிதானமாக யோசித்துப் பார்த்தால், தீர்மானிக்கப்பெற்ற இலக்கிய முன் முடிவுகளுக்காகவே அவை செயல்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியும். சாகித்ய அகாடெமி போன்ற அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளும் நோக்கங்களும் ஒருவிதமானவை என்றால், அரசியல் அல்லது சமூக இயக்கங்களின் சார்பு அமைப்புகளாகச் செயல்படும் கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் போன்றவற்றின் நோக்கங்களும் செயல்பாடுகளும் இன்னொருவிதமானவை. இலக்கியத்தின் விதிகளை மட்டுமே முழுமையாகக் கடைப்பிடித்து ஒவ்வொருவரும் பங்கேற்றும் விவாதித்தும் உடன்பட்டும் செயல்படும் அமைப்புகளின் தேவை தொடர்ந்து கனவு காணப்பட்டாலும் எப்போதும் கானல் நீராகத் தூரதூரமாக விலகிக் கொண்டே தான் இருக்கி