தமிழ்ச் சினிமாவும் தமிழக வரலாறும்

ஒரு கதை ======= மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் மகாத்மா காந்தியைப் பாடமாகப் படித்ததற்கு முன்பே எனக்குக் காந்தியாரைத் தெரியும் . இத்தனைக்கும் நான் , இந்திய விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவன் . எனக்குத் தெரிந்த காந்தியார் , தச்சபட்டியென்னும் எனது கிராமத்தோடு ஐந்து கிராமங்களை அடக்கிய பஞ்சாயத்தின் தலைவர் . அவரது உண்மையான பெயரை , எனது மூத்த அண்ணனின் திருமணப்பத்திரிகையில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் . அதிலும்கூட காந்தியார் என்ற ‘............’, அவர்களது தலைமையில் என்று அச்சிடப்பட்டிருந்தது . அச்சிடப்பட்ட அந்த உண்மைப்பெயரும் அன்றோடு மறந்துவிட்டது . அதற்கு முன்பும் பின்பும் எனது நினைவில் இருக்கும் பெயர் காந்தியார் தான் .