நாடகக் கலையைக் கற்பிக்கும் நாடகப்பள்ளிகள் இப்போதெல்லாம் நடிகர்களின் பேச்சுமொழியையும் மனதின் நினைப்பையும் இயைந்து போகும் விதமாக உடல்மொழியை வயப்படுத்துவதற்கு வட்டாரக் கலைகளையும், நாட்டார் ஆட்டங்களையும் கூத்துகளையும் கற்றுத்தரும் பயிற்சிகளை அளிக்கின்றன. நான் பணியாற்றிய புதுவை நாடகப் பள்ளியில் முதன்முதலாகத் தெருக்கூத்துப் பயிற்சியொன்றை வழங்கும் நோக்கத்தோடு பயிற்சிமுகாம் ஒன்றை நடத்தினோம். முகாமின் வெளிப்பாட்டை மேடையேற்றிப் பார்க்கவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில், திரௌபதி வஸ்திராபஹரணம் என்னும் கூத்தை நிகழ்த்தப் பயிற்சிகளை வழங்கினார்கள் புரிசை கண்ணப்பத் தம்பிரானும் அவரது மகன் சம்பந்தனும் . அந்தப் பயிற்சி முகாமில் நாடகப்பள்ளியின் மாணவிகளும் பங்கேற்றார்கள். அவர்களுக்கு ஆட்டப்பயிற்சியையோ நிகழ்த்துதல் பயிற்சியையோ வழங்காமல் குரல்பயிற்சியாக – பின்பாட்டுப் பயிற்சியில் மட்டும் சேர்த்துக்கொண்டார்கள் கூத்துக்கலைஞர்கள். ஆனால் மாணவிகளில் ஒருத்தி தானும் கதாபாத்திரமேற்று தெருக்கூத்து ஆடவேண்டும் என்று விரும்பினார்.