இயற்பண்பியல் எழுத்தின் நேர்மறை -அபிமானியின் மனசுக்காரன்
சமகாலத்தமிழ் இலக்கியப்பரப்பில் கடந்த அறுபதாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தும் இலக்கிய வடிமம் நாவல். குறைவான நேரத்தில் ஒன்றை வெளிப்படுத்திவிட முடியும் என்ற நோக்கத்தில் கவிதை வடிவத்தைத் தேர்வு செய்பவரும், சிறுகதை வடிவத்தில் எழுதிப்பார்ப்பவரும் நாவல் எழுதிப்பார்க்க வேண்டும் என்று ஆசையுடையவர்களாக இருக்கிறார்கள். பாரதியைத் தமிழின் சமகால இலக்கியத்தின் தொடக்கம் எனக் கொண்டால், அவரே தனது கவிதை வடிவத்தோடு கட்டுரைகள், புனைகதைகள் என நகர்ந்து, சந்திரிகையின் கதையென நாவல் முயற்சியில் இறங்கியபின்னரே முடிந்திருக்கிறார். தமிழ்ச் சிறுகதையின் சாதனையாளர்களில் ஒருவரான புதுமைப்பித்தனுக்கும் நாவல் எழுதும் ஆசை இருந்ததின் வெளிப்பாடே அவரது சிற்றன்னை. கவியாக வெளிப்பட்டு முடிந்த அப்துல்ரகுமான் போல, நாடக ஆசிரியராக மட்டுமே வெளிப்பட்டு முடிந்த கோமல் சுவாமிநாதன் போல, சிறுகதை ஆசிரியராக மட்டுமே தனது புனைவு எழுத்துகளைத் தந்த அம்பையைப் போல விதிவிலக்கான எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்கக்கூடும். அதனால் நாவல் இலக்கியமும் நாவலாசிரியர்களுமே நவீன எழுத்தின் அடையாளங்கள் என்பது மாறாது.