நாவல் எழுத்து: பெருவெளியும் சிறுவெளியும்
“ஸ்காலாப் விழுந்தது, கும்பகோணம் தீ விபத்து, சுனாமிப்பேரழிவு, ஜோதி என்ற பெண் உடல் மீது செலுத்தப் பெற்ற வன்முறை, வீரப்பன் கொலை தொடங்கி, பாப்ரி மஜ்ஜித் இடிப்பு, மும்பையில் தாஜ் விடுதிமீதும், இந்தியப்பாராளுமன்றத்தின் மீதும் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் என நகர்ந்து, உலக அளவில் நடந்த இரட்டைக் கோபுரத் தகர்ப்பு, பின்லாடன் மரணம்,” எனப் பெரும் நிகழ்வுகளைப் பட்டியலிட்டதோடு சிலர் அவரவர் ஊரிலும் குடும்பத்திலும் நிகழ்ந்த சொந்தக் கதைகளையும் சொன்னார்கள். ஒருவர் கூட ஈழத்தில் தமிழர்கள் 30 ஆண்டுகளாக நடத்திய அலைக்கழிப்பையும் அலைந்துழல்வையும் சொல்லவில்லை. சட்ட எல்லைக்குள் நடந்த போராட்டங்கள், அகதி வாழ்வு, கொத்துக் கொத்தான மரணங்கள், சொந்த நாட்டு அரசப் படைகளோடும் பிறநாட்டுப் படைகளோடும் நடத்திய நேரடிப் போர்கள், மறைமுகப் போர்கள், பெருங்கொலைக்களமாக மாறிய முள்ளிவாய்க்கால் படுகொலை, அவர்களின் வழிகாட்டியாக இருந்து மரணித்துப் போன பிரபாகரனின் இன்மை என எதுவுமே அவர்கள் நினைவுக்கு வரவே இல்லை. நம் காலத்தில் தானே அந்த ஊழி நிகழ்ந்தது என நான் சொன்ன போது பெரும் மௌனம் நிலவியது.“உங்கள் வாழ்நாளில் உங்களைப் பாதித்த பெரும் அல்லது நினைவில் இருக்கக்கூடிய நிகழ்வு அல்லது ஆளுமையைப் பற்றிச் சொல்லுங்கள். அரசியல் அல்லது சினிமா சார்ந்த ஆளுமைகளையோ, அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளாக இருக்கக்கூடாது” இப்படியொரு தூண்டுகோலை முன்வைத்து அந்த வகுப்பைத் தொடங்கினேன். பல்கலைக்கழக மானியக்குழுவின் புத்தொளிப்பயிற்சி வகுப்பு அது. நடத்தியது ஒரு பல்கலைக்கழகத்தின் ஆசிரிய மேம்பாட்டிற்கான இயக்குநரகம் என்றாலும் இந்தியாவின் எந்தப் பல்கலைக்கழக எல்லைக்குள் இருந்தும் வந்து கலந்து கொள்ளலாம். ஒரேயொரு வரையறை, அவர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரியின் தமிழ் ஆசிரியராக இருக்கவேண்டும்; அவர்களுக்கான பணியிடைப் பயிற்சி அது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் டெல்லி, கேரளம், ஆந்திரம் முதலான மாநிலங்களின் கல்லூரிகளிலிருந்தும் மொத்தம் 48 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
மௌனம்; ஆம் அந்த மௌனம் ஏற்றுக்கொள்ளுதலின் மௌனம் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஈழமும் ஈழத்தமிழர்களின் போராட்டமும் இந்தியத் தமிழர்களின் பேச்சாக இருந்தன; இப்போதும் இருக்கிறது. ஆனால் ஆழ்மனதில் உறையும் நினைவாக இல்லை. இப்படி ஆனதற்கும் ஆக்கப்பட்டதற்கும் காரணங்கள் என்னவாக இருக்கமுடியும்? என்னை நானே கேட்டுக்கொண்டு, ‘ஆசிரியர்களின் மௌன’த்தைக் கலைத்துவிட்டு எனது இலக்கிய உருவாக்கம் பற்றிய வகுப்பைத் தொடர்ந்தேன்.
நிகழ்வும் புனைவும்
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் வாழும் மனிதர்களின் – அல்லது குறிப்பான மொழி பேசும் மனிதர்களின் கவனத்தை ஈர்த்த பெரும் நிகழ்வுகள், ஊடகங்களுக்குச் செய்திகளாக ஆகின்றன. எழுத்தாளர்கள் அந்தச் செய்திகளை வெறும் தகவல்களாக் கருதாமல் அவற்றின் மீது தங்கள் பார்வைகளை முன்வைக்க நினைக்கிறார்கள். பார்வையிலும்கூட ஒற்றைப் பார்வையாக முன்வைத்துக் கட்டுரை எழுதி விடுவது கட்டுரையாளர்களின் வேலையாக இருக்கிறது. கவிதையிலும் கூட அந்த ஒற்றைப்பார்வை தூக்கலாக வெளிப்படவே வாய்ப்பதிகம். அதே நேரம், புனைவு எழுத்தாளர்கள் ஒற்றைப் பார்வையை உருவாக்கிவிடக் கூடாது என்று கருதுகிறார்கள். அதனால் அந்நிகழ்வின் காட்சிகளையும் மோதிக்கொண்ட மனிதர்களின் சாயலும் கொண்ட பாத்திரங்களையும் உருவாக்கிப் புனைவுகளாக்கு கிறார்கள். அப்புனைவில் உண்மை நிகழ்வு நடந்த காலம் பெரிதும் மாற்றப்படுவதில்லை. வெளியும் கூட அதே பெயரில் இல்லாமல் அதனை நினைவுபடுத்தும் குறியீடாகப் பெயரிடப்படுவதுண்டு. சில புனைகதை எழுத்தாளர்கள் வெளி, காலம், பாத்திரங்கள் என மூன்று அடிப்படைக் கூறுகளிலும் புனைவுத்தன்மையைக் உருவாக்கிக் கதைசொல் முறையில் அப்பெருநிகழ்வை நினைவூட்டுவதும் உண்டு.
தமிழ்ப் புனைகதை ஆசிரியர்களின் எழுத்துப்பரப்புக்குள் தாக்கம் பெற்றுப் புனைவான பெருநிகழ்வுகளில் முதன்மையானது கீழ்வெண்மணி நிகழ்வுதான். 1968 இல் கீழ்த்தஞ்சை மாவட்டத்தின் கீழ்வெண்மணியில் 42 கூலித் தொழிலாளர்கள் அவர்களின் குடியிருப்புகளோடு எரித்துக் கொல்லப்பட்டது நடந்த நிகழ்வு. அது செய்தியாகி, சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டும், நீதிமன்றத்தில் விசாரணைக்குட்பட்டும் தொடர் விவாதங்களாக இருந்தன. பின்னர் படுகொலைக்குக் காரணமான நிலாக்கிழாரும் அவரது ஆட்களும் சந்தேகத்தின் பலனைப் பெற்று விடுதலை ஆனார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் கோபத்தீயிக்குத் தப்பாமல் கொலையானார்கள்.
இந்த உண்மை நிகழ்வைத் தனது உளவியல் பார்வைக்கோணத்தில் புனைவாக எழுதியவர் இந்திரா பார்த்தசாரதி; அவர் எழுதிய நாவல் குருதிப்புனல். அந்நாவல் மட்டுமல்லாமல் கு.சின்னப்ப பாரதியின் ‘தாகம்’, சோலை சுந்தரபெருமாளின் ‘செந்நெல்’ போன்றனவும் கீழ்வெண்மணி நிகழ்வை நினைவூட்டும் புனைகதைகளே. இந்நாவல்கள் தவிரக் கீழ்வெண்மணிக் கொலைகளை நினைவூட்டும் விதமாக கவிதைகள்,நாடகங்கள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள், ஓவியத்தொகுப்புகள் எனப் பலவிதமான பதிவுகளும் கிடைக்கின்றன. அந்நிகழ்வுக்கிணையாக இன்னொரு நிகழ்வு தமிழ்ப்புனைவுப்பரப்பில் இடம்பெறவில்லை என்றே சொல்லலாம்.
வாதி:பெரும்பரப்பில் ஒரு நாவல்
கீழ்வெண்மணி நிகழ்வைவிடவும் கூடுதல் கவனம் பெற்ற ஒரு நிகழ்வு தர்மபுரிப் படுகொலைகள். 1970 - களின் பிற்பாதியில் எழுந்த நக்சலைட் இயக்கம், அடிப்படையில் அழித்தொழிப்பைக் கொள்கையாக ஏற்றுக்கொண்ட இயக்கம். சமூக முரண்பாடுகளில் ஆதிக்க சக்தியாக விளங்கும் நிலச்சுவான்தார் களையும் பண்ணையார்களையும் ஆயுதம் தாங்கி அழித்தொழிப்பதின் வழியாகவே அடிமைப்பட்ட உழைக்கும் மக்களைக் காப்பாற்ற முடியும்; அடிமைத்தளையிலிருந்து மீட்க முடியும் என்று நம்பி, அழித்தொழிப்புக்கான அமைப்புகளையும் ஆயுதப்போராட்டங்களையும் முன்வைத்த இயக்கம். இவ்வியக்கத்தின் தொடக்கம் வங்காளத்தின் நக்சல்பாரி என்னும் இடத்தில் நிகழ்ந்தது என்பதால் அப்பெயர் பெற்றது. அதன் தாக்கத்தில் உந்துதல் பெற்ற இடதுசாரி அரசியலாளர்கள் ஆந்திரம், பீகார், கேரளம் எனப் பல மாநிலங்களிலும் இயக்கங்களைக் கட்டினார்கள். தமிழ்நாட்டிலும் இயக்கங்களும் அமைப்புகளும் உருவாயின. தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் அதன் செயல்பாட்டாளர்கள் இருந்தார்கள் என்றாலும் ஆந்திரத்தையொட்டிய மாவட்டமான தர்மபுரியே அதிகச் செயல்பாடுகள் நடந்த மாவட்டம் ஆகும். அதன் பின்னணியில் அப்பு, பாலன் என்ற போராளிகள் இருந்தார்கள் என்பது வரலாறு.
நக்சலைட் இயக்கச் செயல்பாட்டாளர்களால் செல்வந்தர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன; பண்ணையார்களின் மீது அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அரசு நிர்வாகமும் மிரட்டப்பட்டன. ஆங்காங்கே மக்கள் போராட்டங்களாகவும் இயக்கங்களாகவும் மாறிய நிலையில் அரசின் கவனத்தை ஈர்த்தன. பயங்கரவாதப் போராட்ட நிலையைத் தொடரவிடக்கூடாது எனத் திட்டமிட்ட தமிழக அரசின் காவல் துறை சிறப்புப் படைப்பிரிவை உருவாக்கித் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலை உருவாக்கியது. நக்சலைட் இயக்கத்தின் உறுப்பினர்கள்யும் ஆதரவாளர்களையும் சுட்டுக்கொன்றது. இந்நிகழ்வுகளின் கால அளவு இரண்டு (1977-79) ஆண்டுகள்.
தர்மபுரிப் படுகொலைகள் அல்லது ஆயுதம் தாங்கிய போராட்ட நிகழ்வுகள் எண்பதுகளில் தொடர்செய்திகளாக இருந்தவை. கொல்லப்பட்டவர்களை ஆதரித்தும் காவல் துறையின் நீதியற்ற கொலைகளைக் கண்டித்தும் மனித உரிமை அமைப்புகள் போராடின. 2000 வரை கூட அதன் தாக்கம் கொண்ட எழுத்துகளும் விவாதங்களும் இருந்தன. அவையெல்லாம் பெரும்பாலும் கவிதைகளாகவும்ம் கட்டுரைகளாகவும் மட்டுமே இருந்தன. சில சிறுகதைகள் அச்சில் வந்தன. இப்போதைய வட மாவட்டங்கள் சிலவற்றை உள்ளடக்கிய பெரும்பரப்புக்குள் நிகழ்ந்த தொடர் நிகழ்வுகளை விரிவாக முன்வைத்த நாவல் ஒன்றும் அப்போது எழுதப்பெறவில்லை.
அண்மையில் தர்மபுரி எதிரொலிகளின் பின்னணியில் ஒரு நாவல் வந்துள்ளது. நாராயணி கண்ணகி என்பவரால் ‘வாதி’ என்று தலைப்பிட்டு எழுதப்பெற்றுள்ள அந்நாவல் (எழுத்து /2021) ஜீரோ டிகிரி& தமிழரசி அறக்கட்டளை நடத்திய நாவல் போட்டியில் மூன்றாம் பரிசினைப் பெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை ரயில் பாதை, ஏலகிரி மலைப்பகுதி நாவலின் புனைவு வெளியாக விரித்துள்ளது நாவல். பசித்திருக்கும் மக்களுக்கு உணவு கொடுப்பதற்காக ரயில் கொள்ளையைச் செய்யும் சாகச மனிதனை மையப்படுத்தித் தொடங்கும் நாவல், அப்பகுதியில் இருந்த சில கிராமங்களையும் ஜமீன் தார் ஒருவரின் ஆதிக்க மனோபாவம், ஆடம்பர வாழ்க்கைப் பின்னணி என நகரும்போது அரசியல் விவாத நாவலாக மாறுகிறது.
நாவலில் இடம் பெறும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக உருவாக்கித் தரும் நாவலாசிரியர் பண்ணையார் சார்ந்த நிகழ்வுகளில் ஒரு முழுமையை உருவாக்கி வாசிப்பு ஈர்ப்பை உருவாக்குகிறார். குடும்ப எல்லையைத் தாண்டிப் பண்ணையாருக்கு உள்ள பெண்களின் உறவை விவரிக்கும் நிகழ்வாக இருந்தாலும்சரி, அரசு அதிகாரிகளுக்குத் தரும் சலுகைகள், உதவிகள் போன்றவற்றை விவரிக்கும் காட்சிகளாயினும் சரி அவற்றிலெல்லாம் ஓர் ஆரம்பம், அவரது திட்டமிடல் வழியாகத் தனது அதிகாரத்தை நிலைநாட்டுதல், அது இயலாதபோது ஏற்படும் ஆவேசம், வெறுப்பு, தாக்குதல் போன்றவற்றின் மூலம் தனது பண்ணையார் தனத்தை நிறுவுகிறார் என்பதைக் கச்சிதமாக எழுதுகிறார். ஆனால் அவரை எதிர்த்து அரசியல் இயக்கம் கட்ட நினைக்கும் மனிதர்களுக்கான அடையாளத்தை உருவாக்குவதில் இந்தக் கவனம் இல்லை.
மையக் கதாபாத்திரங்களாக இருக்கும் கண்ணப்பன், நடராஜி அண்ணன் போன்றவர்களை எழுதிய அளவுக்கு இயக்கம் சார்ந்த பாத்திரங்களை விரிவாக எழுதவில்லை. அவர்கள் பேசும் அரசியல் சார்பு, விவாதங்கள், முன்வைத்து உருவாக்க நினைக்கும் அரசியல் உணர்வு அல்லது செயல்பாடுகள் போன்றவற்றில் அவர்களுக்குத் தெளிவு எதுவும் இல்லை என்பதாகக் காட்டுகிறார். குறிப்பான திட்டங்கள் இல்லாமல் சந்திக்கிறார்கள்; பேசுகிறார்கள்; கலைகிறார்கள் என்பதுபோலவே அவர்கள் தொடர்பான காட்சிகளின் சித்திரம் அமைந்துள்ளது. இதனை நாவலாசிரியர் விமரிசனமாக வைத்தது போலத் தெரியவில்லை. அவருக்கே அந்த அரசியல் மீதான ஆழமான புரிதல் இல்லையென்றே வெளிப்பட்டுள்ளது. நாவலாசிரியரின் இருப்பிடம் சார்ந்து நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளில் தொடர்புள்ள இடங்களும் பங்கேற்ற மனிதர்களும், அவர்களின் சந்ததியினரும் அவருக்கு அறிமுகம் ஆகியிருக்கலாம். அவர்களைச் சந்தித்துக் கள நிலவரத்தை அறிந்தவராக அவர் வெளிப்பட்டிருக்கிறார். ஆனால் அவரது சார்புநிலை எது என்பது எங்கும் வெளிப்படவில்லை.
நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் சிலரைத் தேடப்படும் கைதிகளாகப் பட்டியல் ஒன்றை வைத்துக் கொண்டு விசாரணை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் காவல்துறை என்று நாவலின் தொடக்கத்தில் வருகிறது. அந்தப் போக்கின் செயல்பாடுகள் அர்த்தமற்ற அபத்தங்களைக் கொண்டது என்பதை நாவலின் முடிவிலும் காட்டுகிறார். அதேநேரம் அரசியல் இயக்கத்தினரின் செயல்பாடுகளையும் விவாதங்களையும் அதன் உள்ளார்ந்த கவனத்துடன் வைக்காமல் மேம்போக்காக எழுதிக் கடந்துள்ளார். ஒருவேளை அவர்களின் அழித்தொழிப்புக் கொள்கை மீது அவருக்கு விமரிசனங்களும் ஏற்பின்மையும் இருக்கலாம். அப்படி இருக்கும் நிலையில் அந்த விமரிசனத்தை நாவலில் வெளிப்படுத்தியிருக்கவேண்டும். அதனைச் செய்யாமல் கடக்கும் நிலையில் நக்சலைட் இயக்கத்தின் மீதான பார்வையும் புரிதலும் நாவலாசிரியருக்கு இல்லையோ என்ற ஐயத்தையே நாவல் எழுப்புகிறது. தனது வாழிடம் சார்ந்த வட்டாரப்பரப்பொன்றில் அண்மைக்காலத்தில் நடந்த பெருநிகழ்வின் நினைவுகளை எழுதிக்காட்டினாலே நல்ல நாவல் உருவாகிவிடும் என்று நினைத்திருக்கக் கூடும். ஆனால் அதனைச் செய்யத்தவறிய ஒன்றாகவே வாதி முடிந்திருக்கிறது. ஏனென்றால் நாவலாசிரியர் யாருடைய வாதியாகவும் தன்னைக் காட்டிக்கொள்ளவில்லை.
பண்ணையில் ஒரு மிருகம்: சிறுபரப்பில் பெரும் விவாதம்
இறந்து ஆவியாக வரும் பெண்ணின் சாதிய அடையாளமாகத் தலித் அடையாளத்தைத் தருவதின் மூலம் இந்தியச் சாதியின் மீதான விமரிசனத்தை உருவாக்கியுள்ளார் நாவலாசிரியர். ஓராண்டுக் கால அளவு என்பதைத் தீர்மானித்துக் கொண்டு பண்ணைக்குள் நடக்கும் அத்துமீறல்களையும் அப்பண்ணைக்கு வேலைக்காக வரும் பக்கத்துக் கிராமத்து மனிதர்களின் வறுமை, சாதியப்பாகுபாடுகள், அறியாமை, சுகாதாரமற்ற வாழ்க்கை என ஒவ்வொன்றையும் விமரிசிப்பதற்கான காட்சிகளுக்குள் –நிகழ்வுகளுக்குள் விலங்கு மருத்துவரின் நுழைவு உருவாக்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கான மருத்துவராக இருந்தபோதிலும் அவர்களுக்கான அடிப்படை மருத்துவ உதவிகளைச் செய்யும்போது ஏழ்மையான வாழ்க்கைக்குள் இருக்கும் கிராமத்து மனிதர்களின் அன்பான உறவுகளையும் நேசிப்பையும் பெற்றுக் கொண்டு திரும்பியதை நாவல் விவரித்துள்ளது.
இந்திய மனிதர்களைத் தனித்தனிக் கூட்டமாக உருவாக்கி அவற்றுக்கிடையே மேல் – கீழ் அடுக்குகளை உருவாக்கி வைத்துள்ளன சமய நம்பிக்கைகளும் அவற்றுக்குக் கோட்பாட்டாக்கம் செய்த ஸ்மிருதிகளும். கோட்பாட்டாக்கத்தில் செயல்பட்ட ஓரம்சம் தீண்டாமை. ஒதுக்குதலும் ஒதுங்குதலும் என்னும் அடிப்படை காரணமாக விலகலை மேற்கொள்ளும் சாதிய குழுக்களுக்கிடையே பொருளாதார நிலையிலும் வாழ்வியல் சூழலிலும் பெரிய வேறுபாடுகள் இல்லாத போதிலும் ஒவ்வொரு குழுவும் இன்னொரு குழுவை எதிர்மையாகப் பார்க்கும் நிலையைக் கொண்டிருக்கின்றன. பஞ்சமர்களாக வகைப்படுத்தப்பட்ட தலித்துகளைவிட மேலானவர்கள் எனச் சூத்திர இடைநிலைச் சாதி மனிதர்கள் (நான்காம் வருணத்தினர்) நினைக்கிறார்கள். அதேபோலான நினைப்பு வணிகக்குழுக்களுக்கும் (மூன்றாம் வர்ணம்) சத்திரியக்குழுக்களுக்கும் (இரண்டாம் வர்ணம்) இருக்கின்றன. இவர்கள் அனைவரிலும் உயர்வானவர்கள் என்ற எண்ணம் பிராமணர்களுக்கு இருக்கிறது. இந்த எண்ணங்களே இந்தியச் சாதியமைப்பின் குரூரமான உண்மைகள்.
ஒரு விவசாயப்பண்ணை என்னும் சிறிய வெளியை வைத்துக்கொண்டு தீண்டாமையின் இயக்கம் மற்றும் நடைமுறை உண்மை ஆகியவற்றைக் காட்சிப்படுத்துகிறது நோயல் நடேசனின் எழுத்து. அதன் வழியாக இந்தியச் சாதியத்தின் மீது குறுக்குவெட்டான தோற்றத்தை – ஒரு வெளியாளின் பார்வையில் முன்வைத்துள்ளது. இந்தியாவில் பிறந்த ஒருவரால் இப்படியான வெளியாள் பார்வையைத் தருவது இயலாது. இயல்பாகவே நாவலை எழுதுபவரின் தன்னிலை ஆதிக்க சாதிகளின் தன்னிலைக்குள்ளோ, அடக்கப்படும் சாதிகளின் இயலாமைக்குள்ளோ நுழைந்துவிடும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும். இந்தியாவைப் போன்றதொரு சாதிய வேறுபாடுகள் கொண்ட இலங்கை தேசத்து மனிதராக இருந்தபோதிலும் தன்னை அதற்குள் நிறுத்திக்கொள்ளவில்லை. அதிலிருந்து விலகி அயலாளின் பார்வைக் கோணத்தைத் தந்துள்ளார். அந்த மாற்றம், அவரது மற்றைய எழுத்துகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது பண்ணையில் ஒரு மிருகம் என்று காட்டியுள்ளது. இந்தக் கோணத்தில் இது விவாதிக்கப்பட வேண்டிய எழுத்து.
கருத்துகள்