திருநெல்வேலி என்றால் “அல்வா” என்பது நீண்டகால அடையாளம். ஆனால் “சாமி” திரைப்படம் “கலவரம்” என்பதாக அதன் அடையாளத்தை மாற்றிவிடத் தீா்மானித்து நிகழ்வுகளை முன்மொழிந்துள்ளது. இதனைத் திருநெல்வேலியின் மனிதா்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? இந்தக் கேள்விக்குப் பின்னால் என்னவிதமான எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. அதனைப் புரிந்து கொண்டு நான் விளக்கினாலும் கூட அது எனது ஒருவனின் நினைப்புத்தானே தவிர, ஒட்டு மொத்தத் திருநெல்வேலியின் நினைப்பாக இருந்துவிடும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். இதற்கு முன்பு விக்ரம் நடித்து வெற்றிக் கொடி நாட்டிய “ஜெமினி,தூள்” போன்ற படங்களை எவ்வாறு எதிர்கொண்டு அமோக ஆதரவு தந்தார்களோ அது போலவேதான் எதிர்கொள்கிறார்கள். இன்னும் சொல்வதானால், தமிழ்நாட்டின் பிற நகரங்களில்- மதுரை, திருச்சி, சேலம், கோவை, சென்னை- என வாழ்பவா்களின் எதிர்கொள்ளலுக்கும், திருநெல்வேலியின் மனிதா்களின் எதிர்கொள்ளலுக்கும் பெரிய அளவு வேறுபாடு இருக்க வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.