முன்னுரை: தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் பண்பாட்டு நிலவியல் என்னும் புதுவகைக் கோட்பாட்டோடு தொடர்புபடுத்திப் பேசும் இக்கட்டுரையின் முதல்பகுதி பண்பாட்டு நிலவியல் என்னும் மேற்கத்தியப் புதுவகைக் கோட்பாட்டை விளக்குகிறது. தொடர்ந்து தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்வதற்குப் பயன்படும் அகப்பொருள், புறப்பொருள் இலக்கணங்களை இணைத்து உருவாக்கும் பாவியல் அல்லது கவிதைக் கோட்பாடு விளக்கப்படுகிறது. அதன் வழியாக தமிழின் கவிதையியல் கோட்பாடான திணைக்கோட்பாடும் பண்பாட்டு நிலவியல் என்னும் சிந்தனைமுறையும் எந்தெந்த விதங்களில் ஒத்துப்போகின்றன என்பதை இணைத்துக்காட்டுகிறது; விலகல்களையும் சுட்டிக்காட்டுகிறது. தொடர்ந்து இக்கோட்பாட்டைப் பயன்படுத்தித் தமிழியல் ஆய்வு எந்தெந்தப் பரப்பிற்குள் நுழையமுடியும் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.