பிப்ரவரி 11, 2015

கடைசி வாய்ப்பைத் தெரிந்தே தவறவிட்டேன்.


தமிழ்மொழியைச் செம்மொழியாக்கிடும் முயற்சிக்குப் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்டது. செம்மொழித் தமிழுக்கான நிறுவனம் தொடங்கப்பட்டும் 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. எட்டாண்டுகளாகவே அதற்கெனத் தனியாக நியமிக்கப்பட வேண்டிய தலைமை நிர்வாகி - இயக்குநர் - பதவி நிரப்பப்படாமலேயே இருக்கிறது. இந்தப் பதவிக்கு நான் ஏற்கெனவே இரண்டுமுறை விண்ணப்பம் செய்தேன். இரண்டு முறையும் எனது பெயர் பரிசீலனை செய்யப்பட்டதா என்பதை நானறியேன். அப்படிப் பரிசீலனை செய்யப்படாமல் போவதற்கு விதிப்படியும் நடைமுறைகளின்படியும் சிலபல காரணங்கள் இருந்திருக்கலாம். அதனால் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை.

பிப்ரவரி 09, 2015

மணவிழா என்னும் நாடகம்

[ 2007 இல் எனது மகளின் திருமணத்தைச் சமஸ்கிருத வார்த்தைகளின்றி நடத்திட நினைத்தேன். அந்நிகழ்வை ஒரு நாடகப்பிரதியை எழுதுவதுபோல எழுதித்திருத்தினேன். நண்பர் முருகேச பாண்டியன் தான் கட்டியங்காரனைப் போலக் காட்சிகளை நடத்திக்காட்டினார். அந்தப் பிரதியை வேண்டிப் பின்னர் சிலர் அவ்வப்போது தொடர்பு கொண்டார்கள். அவர்கள் அந்தப் பிரதியைக் கொண்டு அவர்களின் நாடகத்தை எப்படி மேடையேற்றினார்களோ எனக்குத் தெரியாது. இன்று காலை ஒரு நண்பர் இந்தப் பிரதி வேண்டும் என்றார். எதிர்வரும் 15 ஆம் தேதி மேடையேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாம். அவரது நெறியாள்கையின்படி நடக்கும் அந்த நாடகத்தின் பிரதி மட்டும் என்னுடையது. நாடகங்கள் இன்பியலாகவும் துன்பியலாகவும் அமைவதைப் போல திருமணங்களும் அதனதன் போக்கில் முடியக்கூடும். அதற்குப் பொறுப்பு நெறியாளர் மட்டுமே. பிரதியை எழுதியவன் அல்ல]
==========================================================================