வடிவங்களும் வாசிப்பும் இலக்கியப்பனுவல்கள் அதனதன் உள்கட்டமைப்பின் வழியாக இலக்கிய வாசகர்களைத் தேடுகின்றன. ஒவ்வொரு இலக்கிய வடிவத்தின் உள்கட்டமைப்பைப் புரிந்து கொண்டவர்களே கவிதை, புனைகதை, நாடகம் என்பதான இலக்கிய வடிவங்களின் வாசகர்களாக இருக்கமுடியும். அப்படியல்லாதவர்கள் பொதுநிலையாக வாசகர்கள் எனத் தங்களை அழைத்துக்கொள்வதில் சிக்கல் எதுவுமில்லை. ஆனால் நாடகத்தின் வாசகர் எனச் சொல்லிக்கொள்ள விரும்பினால், அவ்வடிவத்தின் அக, புறக் கட்டமைப்புகள் குறித்த அறிதல் இருக்கவேண்டும். நாடகப்பனுவலுக்குள் உருவாக்கப்படும் முரண்நிலைப் பாத்திரங்களின் நகர்வுகள் வழியாகவே நாடகப்பனுவலின் வாசிப்பு நிகழும்; நிகழவேண்டும் என்பதைத் தனது கவிதையியலில் விவரிக்கிறார் அரிஸ்டாடில். அதில் விளக்கப்பெற்றுள்ள உள்கட்டமைப்பில் இருக்கும் தொடக்கம், முரண்நிலை வெளிப்பாடு, சிக்கல் மலர்ச்சி, உச்சநிலைக் கூர்மை, பின்விளைவுகள் வழியான முடிவு என்பதான நல்திறக் கட்டமைப்புப்பனுவல்களுக்கு உலக நாடக இலக்கியத்தில் நீண்ட வரலாறு உண்டு.