ஈழப்போர்க்கால நாவல்களில் பயங்கரவாதியின் இடம்

1983 ஜூலை 23 இல் நிகழ்ந்த கறுப்பு ஜூலை எனக் குறிக்கப்படும் பெருநிகழ்வு ஈழப்போராட்டத்தில் ஒரு தொடக்கம். அந்த நிகழ்வே ஆயுதப் போராட்டத்தை தனி ஈழத்துக்கான பாதை என்பதாக அறிவிக்கச் செய்தது. அந்தத் தொடக்கத்திற்கு வயது 40. ஆனால் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்கால் பேரழிவோடு நிறைவுபெற்றது. தனித்தமிழ் ஈழத்துக்கான ஆயுதப் போராட்டத்தைக் கடைசிவரை நடத்திய விடுதலைப்புலிகள், ஆயுதங்களை மௌனித்துக் கொள்வதாக அறிவித்த நிகழ்வு முள்ளிவாய்க்கால் பேரழிவாகச் சுட்டப்படுகிறது. அந்த நாள் மே,18. 2009.
 40 ஆண்டு கால வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளை வரலாற்றாய்வாளர் ஒருவர் தேட நினைத்தால் எல்லாத்தரப்புப் பார்வைகளுக்குமான சான்றுகள் கிடைக்காது.ஒரு பக்கச் சான்றுகளே -அரசின் ஆவணங்களே கிடைக்கும். அரசின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்புகள் முழுமையான சான்றுகளாக ஆகமுடியாது எனக் கருதும் ஆய்வாளருக்குப் பெரிய அளவுக்கு எதிர்த்தரப்பு ஆவணங்களும் பதிவுகளும் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், எல்லா சான்றுகளும் அழிக்கப்பட்டு விட்டன. நான் இரண்டு முறை இலங்கையில் தமிழ் பேசும் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன். 2016 இல் தமிழர்கள் வாழும் பெருநகரங்களுக்கும் போய் இருக்கிறேன். மட்டக்களப்பிலும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் சென்றதுண்டு. விடுதலைப்புலிகள் வசம் இருந்த கிராமங்கள், பயிற்சி முகாம்கள் போன்றனவற்றைப் பார்த்திருக்கிறேன். கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் சில நாட்களைச் செலவிட்டிருக்கிறேன். போரில் பங்கேற்றவர்களோடும் பாதிக்கப்பட்டவர்களோடும் உரையாடியிருக்கிறேன்.2019-ல் கொழும்பு தொடங்கி, கண்டி, மலையகம், சப்ரகமுவ, திரிகோணமலை, மட்டக்களப்பு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா எனப் பயணித்த நாட்கள் 20. இம்முறை அதிகமாகக் கிராமப்பகுதிகளைப் பார்த்தேன். திருகோணமலைப் பகுதியிலும் யாழ்ப்பாணப்பகுதியிலும் பயணம் இருந்தது. முதலாவது பயணத்தில் நான் பார்த்த அழிவுகளும் சிதிலங்களும் இரண்டாவது பயணத்தில் பார்க்கக் கிடைக்கவில்லை. குறிப்பாகப் புலிகளின் அரசாங்கம் செயல்பட்ட கிளிநொச்சிப் பகுதி முழுமையாக மாறியிருக்கிறது. இலங்கை அரசு மறுசீரமைப்பு, பொருளாதார உதவிகள் என்ற பெயரில் போர்க்காலச் சான்றுகள் எதுவும் இல்லாமல் அழித்திருக்கிறது. இதைச் சொல்லும்போது நான் இரண்டு ஆண்டுகள் (2011-2013) தங்கியிருந்த வார்சாவில் இரண்டாம் உலகப்போரின் அழிவுகளும் சிதிலங்களும் அப்படியே அழிக்கப்படாமல் இருப்பதைப் பார்த்தேன் என்பதை நினைவுபடுத்திக் கொள்கிறேன். ஐரோப்பாவின் பல நகரங்களில் இரண்டு உலகப்போர்களில் ஏற்பட்ட அழிவுகள் வரலாற்றுச் சான்றுகளாக அருங்காட்சியகங்களில் இருக்கின்றன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

தனி ஈழத்துக்கான போராட்டங்கள், போர் நிகழ்வுகள் சார்ந்த சுவடுகளும், பதிவுகளும் அழிக்கப்பட்ட நிலையில் அந்த வரலாற்றை எழுதுவது எப்படி? இந்த பெரும்நிகழ்வை எப்படி மீளுருவாக்கம் செய்வது? அதற்கு முதன்மையான சான்றுகளாக இருக்கக்கூடியவை பேச்சுகளும் எழுத்துகளும்தான். போர்க்காலத்தில் – போர்க்களத்தில் வாழ்ந்தவர்களின் நினைவுகளைப் பதிவுசெய்து தொகுத்துக் கொண்டு ஒரு வகை வரலாற்றை -வாய்மொழிசார் வரலாற்றை உருவாக்கலாம். அத்தோடு திரள் மக்களின் வாய்மொழிப்பாடல்கள், கதைகள், நிகழ்த்துக்கலைகளுக்கான கதைப்பாடல்கள் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.இவையெல்லாம் சொல்பவர்களின் கோணத்தை மட்டுமே தரக்கூடியன என்பதை மனதில் கொள்ளவேண்டும். அவற்றைத் தாண்டிப் போர்க்காலத்தை எழுதிக் காட்டிய இலக்கியப்பனுவல்கள் முதன்மையான சான்றுகளாக இருக்கமுடியும். அதிலும் குறிப்பாக நாவல் இலக்கியங்கள் விரிவான பார்வைகளையும் தரவுகளையும் தரக்கூடிய வடிவம். ஏனென்றால் நாவல் என்பது ஒரு பெரிய இலக்கிய வடிவம். காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றிலும் அளவில், எண்ணிக்கையில் பெரியதைக் கோரும் வடிவம். ஒரு கவிதை ஒரு மனித உயிரியின் உணர்ச்சி வெளிப்பாட்டை மட்டும் தான் காட்டும். சிறுகதைகள் சின்னச் சின்ன நிகழ்வுகளை மட்டும் தான் சொல்லி இருக்கும். அந்நிகழ்வுக்கான காலம், வெளி ஆகியவற்றில் பெரிய கவனத்தைச் செலுத்தியிருக்காது. ஆனால் வரலாறு காலத்தை நிகழ்வு வெளிகளின் – பரப்பின் பின்புலத்தோடு விவரிப்பது. அதற்குப் பயன்படக்கூடியது நாவல் வடிவமே.

இரண்டு உலகப்போர்களின் சூழலை விவரிக்கப் பல நாவல்கள் பயன்பட்டுள்ளன. சோவியத் யூனியனில் நடந்த புரட்சியை பேசுவதற்கு ரஷிய நாவல்கள் பயன்பட்டுள்ளன. அதேபோல் பல நாடுகளில் பெரும் நிகழ்வுகளை- குறிப்பாக யுத்தம் சார்ந்த பெரும் நிகழ்வுகளை -அதில் ஈடுபட்ட -பாதிக்கப்பட்ட மனிதர்களின் எண்ணங்களை நாவல்களின் பாத்திரங்கள் தந்துள்ளன,அப்படி பதிவு செய்கிற நாவல்களை வைத்துக்கொண்டு வரலாற்றை கட்டமைக்க முடியும். தமிழ் நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கே வெவ்வேறு காலகட்டத்து இலக்கியங்கள் பயன்பட்ட தைக் காண்கிறோம். சங்க கால வரலாறு செவ்வியல் கவிதைகள் வழியாகவே கண்டறியப்பட்டது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

போர்க்கால நாவலாசிரியர்கள்

2016 இல் கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தில்“ ஈழம்: போரும் போருக்குப்பின்னும்- அண்மைப்புனைகதைகளை முன்வைத்து” என்றொரு கட்டுரை எழுதினேன். அதற்காகப் பின்வரும் நாவல்களை வாசித்தேன்.

1. விமல் குழந்தைவேல்-கசகறணம்(2011)

            2. சயந்தன் - ஆறாம்வடு (2012), ஆதிரை (2015)

            3. தமிழ்க்கவி - ஊழிக்காலம் (2013)

            4. ஸர்மிளா ஸெய்யித் - உம்மத், (2013, 2015)

            5. குணா கவியழகன்-நஞ்சுண்ட காடு (2014),  விடமேறிய கனவு.  
                          (2015)அப்பால் ஒரு நிலம் (2016 

            6. தேவகாந்தன் -கனவுச்சிறை (2014)

           7. சாத்திரி - ஆயுத எழுத்து (2015)

           8.   சோபா சக்தி - Box கதைப்புத்தகம் (2015)

          9. சேனன் - லண்டன்காரர் (2015)
  
அதற்குப் பின்னும் பலரது நாவல்களை வாசித்துள்ளேன்; இப்போதும்வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் பலவும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்களாக இருக்கின்றன. தமிழ்க்கவி, வெற்றி செல்வி, தமிழ்நதி, தமிழினி, தீபச்செல்வன், ஈழவாணி, தாமரைச்செல்வி, நோயல் நடேசன், ஆ.சி.கந்தராஜா, வாசு.முருகவேல்,விஜிதரன், ரவி, மாஜிதா,  சித்தார்த்தன் என நீளும் பட்டியலில் தமிழ்க்கவி, வெற்றிச்செல்வி,தமிழினி போன்ற ஒன்றிரண்டு பேர்களே புலம்பெயராது ஈழப்பகுதியிலே இருப்பவர்கள். இருந்தவர்கள்.

எனது பார்வைக்கு வராத நாவலாசிரியர்களின் நாவல்களும் இருக்கக்கூடும் இந்த நாவல்களை வாசித்தால், போர்க்காலத்தைப் பற்றிய நினைவுகளுக்குள் அமிழ்ந்து போகும் மனிதர்களைச் சந்திக்க முடியும். அவர்களின் இடப்பெயர்வு களையும் வலிகளையும் மரண ஓலங்களையும் கையறு நிலையையும் அறியமுடியும். ஆனால் வரலாற்றை எழுத வேண்டும் என்கிற நோக்கத்தோடு வாசிக்கும் ஆய்வாளர் இவ்வகை உணர்ச்சிகளை வாசிப்பதோடு, எழுதிய நபருடைய நோக்கம் என்ன? அவருக்குள் வெளிப்படும் சார்பு என்ன? எவ்வகையான நிகழ்வுகளைக் கவனப்படுத்துகிறார்? எவ்வகையான மனிதர்களைத் தேர்வு செய்து எழுதுகிறார் என்று கவனித்து வாசிக்கவேண்டும்.

இந்த நாவல்களை வாசிக்கும் ஒருவருக்கும் ஈழப்போர் சார்ந்து வேறுவேறு கோணங்கள் இருந்தன; அவரவர் கோணத்தில் நாவல்கள் எழுதப்பெற்றன என்பது புரியவரலாம். போரையும் போர்க்காலத்தையும் எழுதியுள்ள தன்மையை முன்வைத்து நாவலாசிரியர்களையும் நாவல்களையும் வகைப்படுத்தலாம்.

1. போர்க்காலத்தில் நிலத்தில் இருந்து போரில் பங்கேற்று நேரடி அனுபவம் பெற்றவர்களின் நாவல்கள். இந்நாவல்களில் சொல்முறைமையில் ஒருவிதத்தன்மை கூற்று முறை வெளிப்பட்டுள்ளன .

2. போரையும் போர்க்காலத்தையும் அண்மையிலிருந்து பார்த்து அல்லது பங்கேற்று விலகிவந்து தொடரும் நினைவுகளை முன்வைக்கும் மொழிதல் தன்மையில் எழுதப்பெற்ற நாவல்கள். இவ்வகை நாவல்களின் சொல்முறைமையில் முன்னிலைக்கூற்றும் படர்க்கை கூற்று முறைமையும் கலந்து காணப்படுகின்றன.

3 மூன்றாவது வகையான முழுமையும் போரைப் படர்க்கை நிலையில் விவரித்துச் சொல்லும் விலகல் தன்மை கொண்ட நாவல்கள்.

4. ஆயுதப்போர் ஆதரவு நிலைபாட்டில் முழுமையாக விடுதலைப் புலிகளின் சார்பாக நின்று பேசும் நாவல்கள் என்பன நான்காவது வகை.
**********
எழுத்து வெளிப்பாடு என்பது எப்போதும் ஒருவிதச் சார்போடுதான் இருக்கும். சிலரது எழுத்தில் வெளிப்படையான சார்பும், சிலரது எழுத்துகளில் மறைமுகமான சார்பும் இருக்கும். தீபச்செல்வனின் கவிதைகள் பெரும்பாலும் ஆயுதப்போரைத் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே முன்வைத்துள்ளன. ஈழத்தமிழர்கள் மேல் ஆயுதப்போர் திணிக்கப்பட்ட ஒன்று என்ற நிலைபாட்டில் நின்று எழுதியவர். அதே நிலைபாட்டையே அவரது புனைகதைகளிலும் வாசிக்க முடிகிறது. அத்தோடு போரை முன்னின்று நடத்தும் வல்லமையும் திறனும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மட்டுமே இருந்தது என்ற நம்பிக்கை கொண்டவராக வெளிப்பட்டுள்ளார். 

தீபச்செல்வனின் நிலைபாட்டையொத்த பார்வையோடு புனைகதைகளில் – நாவலில் இயங்கியவர்களாக சிலரை அடையாளப்படுத்த முடியும். குணா கவியழகன், வெற்றிச்செல்வி, தமிழ்நதி, தமிழ்க்கவி, தமிழினி என நீண்டு தீபச்செல்வன் வரை வருகிறது. இவர்களின் புனைவுக்குள் கிடைக்கும் ஈழ யுத்தம், அதனுடைய தேவை, தனி நாடு, அதற்கான நெருக்கடி, ஒரு மொழியின் பெயரால், இனத்தின் பெயரால், ஒரு பெரும்பான்மை அரசு நடத்திய கொடூரம் என எழுதும்போது ஒருவித ஆவணத்தன்மையைக் கொடுக்கிறார்கள்.

ஈழப்போரில் முள்ளிவாய்க்கால் என்கிற பேரவலம் 2009இல் நடந்து முடிகிறது. தீபச்செல்வனுடைய இரண்டாவது நாவலான பயங்கரவாதி. முள்ளிவாய்க்காலில் பெரும் கூட்டமாக கொலைகள் நடக்கின்றன; அதே நேரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் என்னவெல்லாம் நடந்தன என இரண்டையும் இணையாக வைத்துப் பேசுவதோடு முடிகிறது. நாவலின் தொடக்கம் அங்கிருந்து 4 ஆண்டுகள் முன்னே நகர்ந்து செல்கிறது. 2005 லிருந்து 2009 வரைக்கும் ஈழ யுத்தத்தினுடைய ஒருவித சாட்சியமாக நாவல் வடிவம் கொண்டுள்ளது.

நாவல் என்பது எப்போதுமே நேரடியாக எல்லா உண்மைகளையும் சொல்வதல்ல. அது ஒருவிதப் புனைவுக்கலை. அதே நேரம் மொத்தமும் புனைவாகவும் இருந்துவிடுவதில்லை. உண்மையையும் புனைவையும் கலப்பது தான் நாவலாசிரியரின் வித்தை. அந்த வித்தையைத் தீபச்செல்வன் எப்படி செய்து இருக்கிறார்? என்பதைக் கவனித்துச் சொல்வதே எனது முதன்மையான நோக்கம். அவரது அரசியல் சார்பும் நிலைப்பாடுகளும் சரியா? என்ற விவாதங்களுக்குள் செல்லப்போவதில்லை. இலக்கிய ஆய்வில் அது தேவையற்றதும் கூட. எழுத நினைத்த கோணத்தையும் ஆதரவையும் கலையியல் சார்ந்து தருவதில் ஒரு புனைகதை ஆசிரியர் சரியாகச் செய்கிறாரா? என்பதைச் சொல்வதே இலக்கியத்திறனாய்வின் பணி என நினைக்கிறேன்.
 
ஆவணப்புனைவு

ஆங்கிலத்தில் Docu-fiction என்றொரு கலைச்சொல் உண்டு. தமிழில் ஆவணப்புனைவு எனச் சொல்லலாம். இதற்குள் ஆவணத்தின் கூறுகளும் இருக்கின்றன; புனைவுத்தன்மையும் இருக்கிறது என்பதைக் குறிக்கும் கலைச்சொல். இதனைக் கொண்டுவருவதிற்குத் தீபச்செல்வன் கையாண்டுள்ள உத்தி முக்கியமான ஒன்று, நாவலின் நிகழ்வு வெளியாக இருப்பது யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம். அதில் நாவலின் காலமான 2005 முதல் 2009 வரை மாணவர்களின் செயல்பாடுகள் குறித்த ஆவணங்கள் இருக்கும். இப்போதும் போய் பார்க்கலாம், அங்கு நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய குறிப்புகள் எல்லாம் பல்கலைக்கழக ஆவணங்களில் இருக்கும். அதனை யாரும் மாற்றியிருக்க வாய்ப்பில்லை; அங்கு நடந்த மாணவர் தேர்தல், கலைநிகழ்ச்சிகள், சட்ட எல்லைக்குள் நடந்த போராட்டங்கள், உண்ணா நோன்புகள், ராணுவத்தின் நுழைவு, துணைவேந்தரின் அதிகாரம் சார்ந்து எடுத்த முடிவுகள் என அவற்றை இப்போதும் பெற்றுக்கொள்ள முடியும். அந்த ஆதாரங்களை நேரடிக் காட்சியாக மையப்பாத்திரமான மாறனின் பார்வையில் தருகிறார்.

ஒரு நாவலுக்கு முதன்மையான மூன்று கூறுகள் உண்டு காலம், வெளி, பாத்திரங்கள் என்பன. இம்மூன்றில் காலத்தை உண்மைக்காலமாக்கும்போது நாவலின் நிகழ்வுகளுக்கு ஒருவித நம்பகத்தன்மையைத் தரவேண்டிய நெருக்கடி நாவலாசிரியருக்கு ஏற்படும். அதேபோல் நாவலுக்குள் உருவாக்கப்படும் வெளியை இருக்கும் வெளியாகச் சித்திரித்துவிட்டால், அந்த நம்பகத்தன்மை இன்னும் கூடுதல் அர்த்தம் கொண்டதாக மாறிவிடும். அதே நேரம் பாத்திரங்களை உண்மைப் பாத்திரங்களாக எழுதினால் அந்நாவல் தன்வரலாற்று நாவல் அல்லது வரலாற்று நாவலாகக் கருதப்படும் வாய்ப்பு ஏற்படும். அதைப் பெரும்பாலான சமூகப் புனைகதை எழுத்தாளர்கள் செய்வதில்லை. தீபச்செல்வனும் அதைச் செய்யவில்லை. பாத்திரங்களைப் புனைவுப்பாத்திரங்களாகவே உருவாக்கியிருக்கிறார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற உண்மையான வெளியைக் கொண்ட பயங்கரவாதி நாவலின் காலமான நான்காண்டுகள் ஒருவருடைய பட்டப் படிப்புக் காலம். இந்த நாலாண்டுகளில் இந்த வளாகத்தில் என்ன நடந்தது? வளாகத்தில் தங்களுடைய உரிமைகளுக்காக போராடிய மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து இயங்கிய ராணுவ அதிகாரிகள் ‘பயங்கரவாதிகள்’ என்று சொன்னார்கள். ஆனால் மாணவர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக போராடினார்கள்; அவர்களுடைய வளாக எல்லைக்குள் இருந்து போராடினார்கள் என வளாக நிகழ்வுகளையும், மாணவர்களாகவே யாழ் நகருக்குள் செயல்பட்ட விதத்தையும் விவரித்துக் காட்டுகிறது.

உண்மை வெளியான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடந்த அதே காலகட்டத்தில் இயக்கம்(விடுதலைப்புலிகள்) கிளிநொச்சிப் பகுதியில் போராடிக் கொண்டிருந்தார்கள்; அரசாங்கத்தைக் கட்டியெழுப்பினார்கள்; நிர்வாகம் செய்தார்கள்; இலங்கை அரசுக்கு வேறுநாடுகளின் உதவிகள் கிடைத்த நிலையில் இறுதிப்போரில் பின்வாங்கினார்கள் என்பதை இணையாக வைக்கிறது நாவல்.நேரடி காட்சிகளாக இருப்பது முழுவதும் யாழ்ப்பாண பல்கலைகழக வளாகம்தான், இதுவே நாவலுக்கான இடப்பின்புலம், ஆனால் அந்தப் பின்புலத்தில் வரக்கூடிய மனிதர்கள்/ கதாபாத்திரங்கள் எல்லாம் தேர்வுசெய்த பாத்திரங்கள். அந்தப் பாத்திரத்தேர்வைத் தீபச்செல்வன் எப்படிச் செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

வகைமாதிரிப்பாத்திரங்கள்

புனைகதைகளில் உருவாக்கப்படும் பாத்திரங்களை நான்கு வகையான பாத்திரங்களாகச் சொல்லுவார்கள். நடப்பியல் (Realistic)பாத்திரம், குறியீட்டுப் (Symbolic) பாத்திரம், வகைமாதிரிப்பாத்திரம் (typed character), பிரதிநிதித்துவப் (Representative)பாத்திரம் என்பன அவை. இந்நான்கு வகைப்பாத்திர உருவாக்கத்திற்கும் புனைகதை ஆசிரியர்களுக்குத் தனித்தனி நோக்கங்கள் உண்டு. எழுத்தாளர் உருவாக்கும் புனைவுக்குள் இருக்கும் சமூகத்தில் இருக்கக்கூடிய வெவ்வேறு விதமான மனிதர்களுடைய போக்குகளுடைய வகைமையில் -சாயலில் அந்தப் பாத்திரங்கள் இருக்கும். இந்நான்கு வகையான பாத்திரங்களில் தீபச்செல்வனின் நாவலில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் வகைமாதிரிப் பாத்திரங்களாக இருக்கின்றன. நாவலில் வெவ்வேறு வகையான வகைமாதிரிகளை அவர் உருவாக்கியுள்ளதை இங்கே சுட்டிக்காட்டலாம்.

மாணவர்கள்- போராட்ட உணர்வுடைய மாணவர்கள், அவருடைய வகை மாதிரி மாறன். தலைமை தாங்கக்கூடிய, தன்னுடைய விஷயங்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்காத ஒரு மாணவன். அவனைப் போலவே அவனது காதலி மலரினியும் ஒரு வகைமாதிரியே. அந்தக் கம்பஸில் இருக்கிற எல்லாரையும் அவர் எழுதவில்லை. அவரோடு இணைந்து வேலை செய்கிறவர்களுக்குள் வெவ்வேறு சித்தாந்தத்தில் -ஐடியாலஜியில்- இருக்கக்கூடிய மாணவர்களுடைய வகைமாதிரிகளைக் கொண்டுவந்துள்ளார். அவர்களுடைய குடும்பப் பின்னணியைச் சொல்லும்போது ஈழத்தமிழ்ப் பகுதியின் வெவ்வேறு நிலப்பின்னணியையும் சமூகப்பின்னணியையும் தருகிறார். இப்படித்தருவது வகைமாதிரிகளை உருவாக்குவதில் இருக்கும் கவனத்தைக் காட்டியுள்ளது.

மாணவர்களுக்கு எதிராக இருக்கக்கூடிய மாணவர்களின் வகைமாதிரியையும் உருவாக்கியுள்ளார் நிரோஜன் கதாபாத்திரம் தமிழ் அரசியலில் ஈடுபாடில்லாத நிலையில் மாணவர் தலைவராக ஆக முடியவில்லை என்பதில் தொடங்கி, சிங்கள ராணுவத்துக்கு ஆதரவான துரோகியாக மாறி, கடைசியில் அவர்களாலேயே விரட்டப்படுகிற ஒருத்தராய் அந்த வகை மாதிரியை நாவலுக்குள் கொண்டு வருகிறார். இதன் மூலம் காம்பஸுக்குள்ளேயே ஆதரவான குழுவும் எதிரான குழுவும் என்று வகைமாதிரிகளை உருவாக்குகிறார். இதைத் தாண்டி அங்கு நடந்த பெரும் பெரும் நிகழ்வுகள் வருகின்றன. பொங்குதமிழ் போன்ற நிகழ்வுகள் யாழ்நகரிலும் சுற்றுவட்டாரச் சிறுநகரங்களிலும் நடந்த நிகழ்வுகள். அவையெல்லாம் நாவலில் வரும் நிகழ்வுகள் நடந்த நிகழ்வுகள் என்ற உண்மைத்தன்மையை உண்டாக்குகின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக நிகழ்வுகளைச் சொல்லும் முறையிலிருந்து மாறிக் கிளிநொச்சியில் நடக்கும் தமிழீழ அரசாங்கம் குறித்த தகவல் தரப்ப்பட்டுள்ளன. அந்த அரசாங்கம் எப்படி நடந்தது என்பதைச் சிறுசிறு அலகுகள் வழியாகக் காட்டுகிறார். அந்நிகழ்வுகள் உருவாக்கப்படும் பாத்திரங்கள் கூட வகை மாதிரிப்பாத்திரங்களே. மருத்துவத்துறையில் என்ன செய்தது? கல்விக்கு என்ன செஞ்சது? தலைவருடைய பார்வையில் நடந்ததா? அவற்றில் அவருடைய ஈடுபாடு என்ன? என்பதையெல்லாம் எழுதும்போது, விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்குப் பின்னால் என்னென்ன விதமான சந்தேகங்களும் ஐயங்களும் எழுப்பப்பட்டதோ அதற்கெல்லாம் பதில் சொல்லுகிற மாதிரி வகை மாதிரி கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்.

இவை எல்லாமே உண்மை கதாபாத்திரங்கள் இல்லை, இப்படித்தான் இருந்தது, இப்படியான மனிதர்களால் பின்னப்பட்ட ஒரு போராட்ட வரலாறு கொண்ட இயக்கம் எத்தகைய வாழ்க்கையைத் தரும் கனவுகளைக் கொண்டிருந்தது என்பதை முன்வைக்கிறார். அவர்களின் வெற்றியை மட்டுமே சொல்லாமல், இப்படி இருந்த இயக்கம் ஏன் பின் வாங்கியது? அதன் காரணிகள் யார்?யார்? என்பதை விரிவாக எழுதாமல் குறிப்பாகச் சுட்டிச் செல்கிறார். விரிவாக எழுதாமல் போனதற்குப் பல்கலைக்கழக வளாகம் போன்ற நேரடிச் சித்திரிப்புகளுக்குக் கிடைத்த நேரடிப் பங்கேற்பு இல்லாதது காரணமாக இருக்கலாம்.

நாவலின் தொடக்கத்தில் இயக்க ஆதரவு கொண்ட பாத்திரங்களாக மாறனையோ, அவனது நண்பர்களையோ அடையாளப்படுத்தியுள்ள நாவல், மெல்லமெல்லச் சூழலால் அவர்கள் இயக்க ஆதரவுக் கருத்தியலாளர்களாக ஆகிறார்கள் என்றே காட்சிப்படுத்தியுள்ளார். பள்ளிப்படிப்புக்குப் பின் பல்கலைக்கழக வளாகத்திற்கு வரும் இளையோர்களின் மனநிலையில் மாறனும் மலரினியும் இருக்கிறார்கள். பெண் தன் அருகில் உக்காரும் நிலையில், பார்த்ததும் விருப்பப்படுகிற, காதல் கொள்ளுகிற, எல்லாவிதமான இளம்பருவத்து மனநிலையோடு இருக்கும் ஒருவனாகவே மாறன் அறிமுகம் ஆகின்றான்.

நாவலில் இடம்பெற்றுள்ள ஒரு பெரிய நிகழ்வு முகமாலை. மாணவர்கள் கம்பஸுக்கு வர முடியாமல் தவித்த கால கட்டத்து நிகழ்வு. கிளிநொச்சியில் இருந்து ஒரு மணி நேரத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்து சேரலாம். ஆனால் மூன்று நாட்கள் கடல் வழியாகத் திரிகோணமலை போய், அங்கே நின்று வந்த பெரிய துயரப் பயணம். எனது பயணத்தின் போது பலரும் சொன்ன நிகழ்வு அது. ஒரு மணிநேர பயணத்தை மூன்று நாட்கள் சாப்பிடாமல், கடல் பயணம் பிடிக்காமல் செய்த பயணத்தில் பிணப்பொதிகளைத் தூக்கிக் கொண்டு போன பயணங்கள். இந்தப் பயண நிகழ்வில். இன்னொரு வகை மாதிரிப் பாத்திரத்தை உருவாக்கி விடுதலைப்புலிகள் மீது வைக்கப்பட்ட விமரிசனம் ஒன்றுக்குப் பதில் தருகிறார் தீபச்செல்வன். யாழ்ப்பாணப் பகுதியிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லீம்களின் குரலுக்குச் செவி மடுத்துக் காரணம் சொல்வதும், அவரது நிலைபாட்டைப் புரிந்துகொள்வதுமான அரசியல் சொல்லாடலுக்கு அதனைப் பயன்படுத்தியுள்ளார். அன்வர் என்கிற கதாபாத்திரம், மாறனோடு திரிகோணமலைக்கு போகும்போது பயணம் செய்கிறது. போகும்போது ரெண்டு பெரும் அந்த விஷயங்கள் பற்றி பேசுகிறார்கள். இலாமியர்கள் தரப்பில் என்ன தப்பு நடந்தது? இந்த காட்டிக் கொடுக்கிற வேலையை அவர்கள் மட்டும்தான் செய்கிறார்களா? இங்கேயும் செய்கிறார்களே? என்று அந்த உரையாடல் வழியாக மொத்தத்தையும் ஒரு பக்கச் சார்பாக நின்று பேசாமல், இரண்டு பக்கமும் அதைப்பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டதாக மாற்றியுள்ளார்.

இந்த நாவல் விடுதலைப்புலிகளின் ஆதரவு நாவல் என்ற விமரிசனத்தைத் தவிர்க்கும் விதமாக அமைவது தீபச்செல்வன் உருவாக்கியுள்ள வகைமாதிரிப் பாத்திரங்களே. முஸ்லீம் பாத்திரங்களைப் போலவே சிங்களப் பாத்திரங்களிலும் அந்த வகைமாதிரியைக் கொண்டு வந்துள்ளார். முழுவதும் வன்மத்தோடு இருக்கும் பந்துலவின் பக்கத்தில் தான் சங்கமவும் இருக்கிறான். சங்கம, மனித நேயம் கொண்ட ராணுவ வீரனின் வகைமாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறை உடைப்பு போராட்டத்தில், கொழும்பில் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக தயாரான ஒருவருடைய மகன் அவன். “நான் உயிர்களை கொள்வதற்காக ராணுவத்திற்கு வரவில்லை; என்னால் முடிந்தவரை நான் எங்க அப்பா செஞ்ச மாதிரி மனித உயிர்களை காப்பாற்றவே வந்துள்ளேன்” என்கிறான். “ராணுவம் என்பது வெறும் வன்முறைக்கானதோ, கொலை செய்வதற்கானதோ மட்டுமல்ல; உயிர்களைக் காப்பாற்றும் வேலையும் அதற்கு உண்டு; அதற்காகவே நான் ராணுவத்திற்கு வந்தேன்” என்பது அவன் நிலைப்பாடு. அவன்தான் நிறைய இடங்களில் மாறனைத் தப்பிக்க வைக்கிறான். அந்த வகையில் அதுவும் ஒரு வகைமாதிரி. புலிகளின் மருத்துவப் பிரிவு பற்றிய சித்திரம், அவர்களின் மனிதாபிமான வெளிப்பாட்டைக் காட்டுவதற்கான வகைமாதிரியாக அமைந்துள்ளது. உதயங்க என்ற சிங்கள ராணுவ சிப்பாய்க்கு மருத்துவம் பார்த்து அனுப்பும் நிகழ்ச்சி அது. இவ்வகையான குறிப்புகளைப் பின்னர் தங்களது டைரி குறிப்பாகவே சிங்கள ராணுவ வீரர்கள் எழுதியுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் என்னும் நடப்பில் இருக்கும் வெளியின் நிகழ்வுகளைக் குறிப்பான நான்காண்டுக் காலத்தில் நிகழ்ந்தனவாக எழுதிக்காட்டியுள்ள நாவல், கிளிநொச்சிப் பகுதியையொரு ஒரு புனைவு வெளியாக – கோட்டுச் சித்திரமாக எழுதிக்காட்டியுள்ளது. அந்தப் புனைவு இப்படியொரு அரசாங்கம் அமைந்திருந்தால் – தொடர் நிகழ்வாக நீண்டிருந்தால் எப்படி இருக்கும் என்ற கனவாகவும் இருக்கலாம். அந்த கனவை உள்ளே வைத்து நாவல் வாசகர்களுக்கு வாசிக்கத் தந்துள்ளது. நாவல் என்கிற கட்டமைப்பில் குறிப்பான காலம், குறிப்பான வெளி என்பதைக் கைக்கொண்டு புனைவுக் கதாபாத்திரங்களை வகைமாதிரிப் பாத்திரங்களாக்கி எழுதியுள்ள பயங்கரவாதி நாவல், தமிழ் வாசகர்களுக்காக மட்டும் எழுதப்பட்டது என்று நினைத்துவிடத் தேவையில்லை. இது மொழிபெயர்க்கப்பட வேண்டும். இந்நாவல் மட்டுமல்ல; எல்லாப் போர்க்கால நாவல்களும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் மொழிபெயர்க்கப்படும் நாவல்கள் ஊர்வலமாகச் சென்று உலக அரங்குகளில் மனுக்கொடுக்கும் போராட்டம் ஏற்படுத்தும் தாக்கத்தைவிடக் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும். எழுத்தாளர்கள்/கலைஞர்கள் தான் நம்பிய போராட்ட வாழ்க்கைக்கு அதன் காலத்தில் மட்டுமே வேலை செய்வார்கள் என்பதில்லை. போராட்டத்துக்குப் பின்னாலும் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருப்பார்கள், அந்த வேலையை தீபச்செல்வன் இந்த நாவலில் செய்திருக்கிறார்.
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சர்கார்: கலைத்துவம் கலைக்கும் அலை

தமிழில் நவீன நாடகங்கள்

நவீனத்துவமும் பாரதியும்