இல்லாமல் போன 15 மணி நேரம்
சென்னையிலிருந்து கிளம்பிய இண்டிகோ விமானம், கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ‘எடுத்தது கண்டனர்; இட்டது கேட்டார்’ என்ற கம்பனின் வரி நினைவுக்கு வந்தது. மீனம்பாக்கம் விமான தளத்திலிருந்து கிளம்பும்போது நேரம் 04.45. ஒரு விசும்பலுடன் மேலே ஏறியது. அந்த விசும்பல் முடிந்து சின்னதான இடித்தலோடு கோவையில் தரையிறங்கும்போது நேரம் 05.35.
ஏறினோம்; இறங்கினோம் என்பதுபோல. இடையில் வழிமறித்து வரவேற்ற பெண்ணுக்கு வணக்கம் சொன்னோம். ‘வந்துவிட்டது கோவை’ என்று சொல்லி வழியனுப்பிய அதே பெண்ணுக்குத் திரும்பவும் ஒரு புன்னகை. அவ்வளவுதான். நல்லதொரு காபி கபேயில் காபி குடிக்கும் நேரம்தான். பில்டர் காபிக்குச் சொல்லி விட்டு இளையராஜாவின் ‘நீ பார்த்த பார்வைக்கு நன்றி’ என ஹேராம் பாடலைக் கேட்டபடி குடித்தால் அரைமணி நேரம் கடந்துவிடும். அடுத்து ‘பூங்காற்றிலே’ என்று தொடங்கும் உயிரே படப்பாடலோடு, நிதானமாக ஒரு சிகரெட் பற்றவைத்து இழுத்தால் 20 நிமிடம் தாண்டிவிடும். இந்த 50 நிமிட நேரத்தில் சென்னை -கோவை பயணம் முடிந்துவிடுகிறது. த்தாமத த்திற்காக 100 டாலர் திரும்பக் கொடுத்தார்கள்.
திரும்பும் பயணத்திலும் பெங்களூருக்குப் பயணிகள் இல்லை என்பதால் பாரிஸ் – பெங்களூர் விமானம் இல்லை என்று சொன்னார்கள். அதனால் சென்னை போய்க் கோவை செல்லும் விதமாக மாற்றித் தருகிறோம் என்றார்கள். அந்த மாற்றத்தில் ஒரு நாள் தள்ளிக்கிளம்ப வேண்டும் என்பதும் சேர்ந்துகொண்டது. அதனால் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கிளம்பி, செவ்வாய் காலை வந்து சேரும் பயணம் 28 கிளம்பி, 30, புதன்கிழமை வந்து சேர்வதாக மாறிவிட்ட து.
****
இங்கெல்லாம் நேரம் தொலைந்து போவதில்லை. ஆனால் அமெரிக்காவின் டல்லாஸிலிருந்து கிளம்பி கோவை வந்து சேர்ந்தபோது வாழ்நாளில் ஒரு நாள் இல்லாமல் போனது. இதுபோன்ற நீண்ட தூரப்பயணங்களில் ஒருநாள் கூட இல்லாமல் போய்விடும். எப்படித் தொலைகிறது என்றொரு குழப்பமான கணக்குகளையும் அயல்நாட்டுப் பயணங்களில் பயணிகள் கவனிக்க வேண்டிய செய்திகளையும் சொல்கிறேன். கவனித்துப் பின்பற்றுங்கள். பொறுமையிருப்பவர்கள் அடுத்து வரும் இரண்டு பத்திகளைப் படிக்கலாம். இல்லையென்றால் இரண்டையும் தாண்டிவிடலாம்.
மூன்றுமாதமாக அமெரிக்காவிலும் கனடாவிலும் சுற்றிவிட்டு, அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள டல்லாஸ்- போர்ட்வொர்த் விமான நிலையத்தில் ஏர்-பிரான்ஸ் விமானம் ஏறினோம். அது கிளம்பிய நேரம் 15.40. தேதி ஆகஸ்டு 28. அங்கிருந்து பாரிசுக்குச் செல்ல ஆகாய மார்க்கத்தில் 7950 கிலோமீட்டர். பயண நேரம் .9 மணி 20 நிமிடம். ஆனால் பாரிஸின் சார்லஸ் டி கல்லே என்ற முதன்மை விமான நிலையத்தில் இறங்கியபோது பாரிஸில் நேரம் காலை 8.25, ஆகஸ்டு 29 எனக்காட்டியது.. அங்கு காத்திருப்பும் அடுத்த விமானத்தைப் பிடிக்கவுமான நேரம் 1.55 நிமிடம். திரும்பவும் பாரிஸிலிருந்து கிளம்பும்போது பாரிஸ் நேரம் 10.10. பாரிஸிலிருந்து சென்னைக்கு 8 மணி 5 நிமிடப் பயண நேரம். ஆனால் வந்து சேரும்போது சென்னையில் இரவு 23.35. சென்னையில் கோவை விமானத்திற்காகக் காத்திருந்த நேரம் 5 மணி 20 நிமிடம். கோவைக்கான விமானம் கிளம்பவேண்டிய நேரம் 04.55. கோவையில் இறங்கும்போது நேரம் 06 மணியாக இருக்கும் என்பது பயணச்சீட்டு சொன்ன நேரம். ஆனால் கிளம்பும்போது 10 நிமிடம் முன்னதாக க்கிளம்பி, 15 நிமிடம் முன்னதாகவே தரையில் ஊர்ந்துவிட்டது இண்டிகோ விமானம்.அப்போது தேதி ஆகஸ்டு 30. கிளம்பியது முதல் கோவையில் தரையிறங்கியது வரையில் என்னிடம் இருந்த நேரம். 38 மணிநேரமும் 20 நிமிடங்களும். ஆனால் விமானத்தில் இருந்த நேரம் + இடையில் தங்கிய நேரம் எல்லாம் சேர்த்தால் கிடைக்கும் நேரம் 23 மணி நேரமும் 25 நிமிடங்களும். இருக்கும்போது இல்லாமல் ஆக்கிய நேரம் 14 மணி 55 நிமிடங்கள்.
மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்கு வரும் பயணங்களில் மனிதர்களின் வாழ்நாளில் தொலைந்து போகும் காலத்தைச் சரிசெய்யத் திரும்பவும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்குப் பயணிக்கவேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா எனப் பயணித்தால் தான் இந்தப் பிரச்சினை. அங்கிருந்து பசிபிக் கடலைத் தாண்டி அமெரிக்காவின் மேற்குக் கரையில் தரை இறங்கினால் இந்தச் சிக்கல் இருக்காது. என்றாலும் ஒரு பயணத்தில் கூடுதல் நேரம் கிடைக்கும் அதே ஊரிலிருந்து அதே பாதையில் திரும்பி வந்தால் அந்த நேரம் திரும்பவும் கிடைத்துவிடும். இப்படி இருப்பதைக் கொண்டுதான் உலகம் உருண்டை எனச் சொல்லிக்கொள்கிறோம்.
குழப்பங்கள் ஏற்படலாம்.
நேரம் தொலையும் குழப்பத்தினால் தான் – ஜெட்லாக் என்னும் பறத்தல் அடைப்புகள் ஏற்படுகின்றன. அதனைச் சரிசெய்வது வரை ஒன்றிரண்டு நாள் தூக்கக்கலக்கம் இருக்கம். இதற்கு முன் சென்ற விமானப் பயணங்களில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் என்னை வரவேற்று அழைத்துச் செல்ல வந்தவர்கள் காத்திருக்க நேர்ந்துள்ளது. ஆனால் இந்த முறை ஏற்பட்டவை திசைமாற்றங்கள்.
பெங்களூர் விமான நிலையத்திலிருந்து பன்னாட்டு விமான சேவையைப் பயன்படுத்துவது எனத் திட்டமிட்டு முன்பதிவு செய்திருந்தேன். ஆனால் போகும் போதும் வரும்போதும் பெங்களூரைக் கண்ணில் காட்டாமலேயே செய்துவிட்டன இந்த மாற்றங்கள். அதனால் கூடுதல் நேரம் வானத்தில் இருக்கவேண்டியதாகிவிட்டது. குறைவான நேரத்தில் அடுத்த விமானத்தைப் பிடிக்கும் பரபரப்பு என்று தடுமாற்றங்களும் ஏற்பட்டுவிட்டன.
மேற்கின் மேற்கான அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குச் செல்ல நேரடி விமான சேவைகள் இப்போது வந்துவிட்டன. ஆனால் இந்தியாவின் சில விமான நிலையங்களில் இருந்து கிளம்பி அங்கிருக்கும் சில பெருநகரங்களுக்குத் தான் நேரடியாகப் போய் இறங்கமுடியும். பன்னாட்டு விமானநிலையமாகவே இருந்தாலும் பெரிய விமானங்கள் தரையிறங்காத மதுரை, கோவை போன்ற ஊர்களிலிருந்து நேரடி விமானங்களைப் பிடிக்கமுடியாது. ஆனால் டெல்லி, மும்பை, பெங்களூர் சென்னை போன்ற நகரங்களின் பன்னாட்டு விமான முனையங்களிலிருந்து நியூயார்க் போகமுடியும். இப்படிப் பெருநகரங்களோடு நேரடி விமான சேவைகளைத் தருகின்றன விமானக்குழுமங்கள்.
கோயம்புத்தூரிலிருந்தோ, மதுரையிலிருந்தோ போகவேண்டுமென்றால் இந்தியாவுக்குள் ஒரு பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சென்று அங்கிருந்துதான் போகமுடியும். அதேபோல் அமெரிக்காவிலும் எல்லா ஊர்களுக்கும் இங்கிருந்து நேரடியாகப் போய் இறங்க முடியாது. இப்படி மாறும்போது நாம் கொண்டுபோகும் பெட்டிகளை ஒப்படைத்தல், திரும்ப எடுத்தல் போன்றவற்றிலும் நுழைவு, வெளியேற்ற அனுமதிகள் வாங்குவதிலும் சிக்கல்கள் உள்ளன. இத்தகைய சிக்கல்களில் குறைவானது எது என்று பார்த்து முன்பதிவுகள் செய்யவேண்டும்.
இப்போது பன்னாட்டு விமான சேவைகள் இந்தியாவின் இண்டிகோ, ஸ்பைஸிஜெட் போன்ற விமானக் குழுமங்களுடன் ஒப்பந்தம் செய்து ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்யும் வாய்ப்பை வழங்குகின்றன. அதனால் நமது பெரும்பொதிகளை -செக்கின் லக்கேஜ் - இங்கே ஒப்படைத்துவிட்டு கடைசி இடத்தில் போய் எடுத்துக்கொள்ளலாம். இப்படியொரு ஒப்பந்தத்தை ஏர்- பிரான்ஸ் குழுமங்கொண்டிருக்கிறது என்பதாலும், பார்க்க விரும்பும் நகரங்களில் ஒன்றாகப் பிரான்சின் தலைநகர் பாரிஸ் இருக்கிறது என்பதாலும் இந்தப் பயணத்திற்கு ஏர்-பிரான்ஸைத் தெரிவுசெய்து கடந்த பிப்ரவரி மாதமே முன்பதிவு செய்தேன்.
அப்போது வழங்கிய பயணச்சீட்டில் கோயம்புத்தூர் – பெங்களூர் இண்டிகோவில் 50 நிமிடப் பயணம். அங்கே நாலு மணி நேரக்காத்திருப்பு. தொடர்ந்து பெங்களூர் – பாரிஸ் ஏர் பிரான்ஸில் பத்தரை மணிப் பயணம். அங்கே இரண்டரை மணி நேரக் காத்திருப்பில் அடுத்த விமானத்தைப் பிடித்து, பாரிஸ் – டல்லாஸ் நகருக்கு 9 மணி 20 நிமிடப் பயணம் எனக் குறித்துத் தந்தது. அதே அளவு நேரமே திரும்புதலுக்கும் எனச் சொல்லியிருந்தது. இதில் போகும்போது கோவை – பெங்களூர் என இருந்ததை மாற்றிக் கோவை- மும்பை எனத் திருப்பினார்கள். அதனால் கோவையிலிருந்து மும்பை செல்லும் பயண நேரம் கூடியது. அடுத்த விமானத்தைப் பிடிக்கக் கிடைத்த நேரம் மும்பையில் இரண்டு மணி நேரத்துக்கும் குறைவானதாகிவிட்டது. பதற்றமாகிவிட்டது. ஏனென்றால் ஒரு பன்னாட்டு விமான நிலையத்தில் நாம் எடுத்துப் போகும் பொருட்களைக் குறித்து அறிக்கை அளித்துக் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் வாங்க வேண்டும். நேரம் போதாமல் போய்விடுமோ என்ற அச்சம். ஓட்டமும் நடையுமாக மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் சுற்றினோம். ஒரு வழியாகக்கடைசி 20 நிமிடத்திற்கு முன்னதாக ஏர்பிரான்ஸ் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய வாசலில் நின்று நுழைந்தோம். அதன் பிறகு சிக்கல் இல்லை. பாரிஸில் இறங்கினோம்; திரும்பவும் அடுத்த விமானத்தில் ஏறினோம். ஆனால் டல்லாஸுக்கு வந்து சேரவேண்டிய நான்கு சாமான் பொதிகளில் ஒன்று வரவில்லை. மூன்று பெட்டிகளைப் பெற்றுக்கொண்டு ஒன்று வரவில்லை எனப் புகார் அளித்தோம். விரைவில் கொண்டுவருவோம் எனச் சொல்லி நீங்கள் உடனடித்தேவைக்கான பொருட்கள் வாங்கிக் கொள்ள 100 டாலர் அனுமதிப்பதாகச் சொன்னார்கள். அடுத்த நாள் கொண்டு வந்து கொடுத்தார்கள். அந்தத் தாமதத்திற்காக 100 டாலர் திரும்பக் கொடுத்தார்கள்.
********
போகும்போது ஏற்பட்ட அதே சிக்கலைத் திரும்பும் பயணத்திலும் ஏற்படுத்தியது ஏர்-பிரான்ஸ். பெங்களூருக்குப் பயணிகள் அதிகம் இல்லை என்பதால் பாரிஸ் – பெங்களூர் விமானம் இல்லை என்று சொன்னார்கள். அதனால் சென்னை போய்க் கோவை செல்லும் விதமாக மாற்றித் தருகிறோம் என்றார்கள். அந்த மாற்றத்தில் கிளம்பவேண்டிய நாளும் ஒரு நாள் தள்ளிப் போனது. அதற்கும் நாம் தங்கவேண்டிய இடங்களைக் குறிப்பிட்டுப் புகார் அளித்தால் பணம் தரவேண்டும். ஆனால் நான் அதைச் செய்யவில்லை. மகள் வீட்டில் தங்கியதால் அதைச் செய்யவில்லை அதனால் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கிளம்பி, செவ்வாய் காலை வந்து சேரும் பயணம் 28 கிளம்பி, 30, புதன்கிழமை வந்து சேர்வதாக மாறிவிட்ட து.
கட்டுப்பாடுகளும் சோதனைகளும்
பன்னாட்டு விமான நிலையங்கள் வழியாக ஒரே பயணமாகவும் இடையில் மாறிச் செல்லும் பயணங்களாகவும் இருக்கும்போது கவனிக்க வேண்டிய அடிப்படையான சில செய்திகளை இங்கே சொல்லலாம் என்று தோன்றுகிறது. நம்மிடம் நமக்கேயான கடவுச்சீட்டு- பாஸ்போர்ட்- இருக்கவேண்டும். அதுதான் நமது அடையாளம். அதைத் தவறவிட்டால் விளையும் விளைவுகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இப்படிப்பட்டவை தான் என்று சொல்ல முடியாது. இந்தியாவில் ஒருவருக்கு முதல் வாய்ப்பில் கடவுச்சீட்டு 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த வாய்ப்புகளில் ஐந்து ஐந்து ஆண்டுகளும் புதுப்பிக்கப்படுகிறது. முதலில் கவனிக்க வேண்டியது கடவுச்சீட்டு - நமது முகவரியில் இருக்கும் கடவுச்சீட்டு காலாவதியாகாமல் இருக்கிறதா? என்று பார்த்துக்கொண்டே வெளிநாட்டுப் பயணங்களைத் திட்டமிட வேண்டும். நமது பயணக்காலம் வரையில் அதற்கு மதிப்பு இருக்க வேண்டும். இல்லையென்றால் அதனைப் புதுப்பித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
பயணச்சீட்டோடு உள்நுழைவு அனுமதிக்குப் பணம் கட்டி -விசா வாங்க வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் விசாக்கட்டணம் மாறும். இந்தியர்களுக்கு கிளம்பியவுடன் விசா வழங்கும் – ஆன் அரைவல் - நாடுகள் சில உள்ளன. இலங்கை, வங்காளதேசம் போன்ற சார்க் நாடுகளுக்கு அப்படிப்போகலாம். ஒவ்வொரு நாடும் என்னவகையான அனுமதிகளை வழங்குகின்றன என்று பார்த்து அதற்கேற்பத் திட்டமிடலாம். சில நாடுகளில் இந்தியக் கடவுச்சீட்டு இருந்தாலே போதும் என்ற நிலையும் உள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் ஒரே நேரத்தில் 10 ஆண்டுகளுக்குச் சுற்றுலா அனுமதியை வழங்குகின்றன. ஐரோப்பாவிற்குச் செல்பவர்கள் ஏதாவதொரு நாட்டிற்கு அனுமதி பெற்றால் போதும். அங்கே நுழைந்து ஐரோப்பாவைச் சுற்றிப்பார்த்துவிட்டு இறங்கிய நாட்டிலிருந்து வெளியேறும்படி அனுமதி வழங்கும் நிலை உண்டு. அவ்விசாவிற்குச் ‘செங்கண் விசா’ என்று பெயர். அதைக்குறிப்பிட்டு வாங்கவேண்டும். அதே நேரம் பிரிட்டன் நாடு ஐரோப்பாவில் இருந்தாலும் அதற்குத் தனி விசா தேவை. உலக நாடுகள் பலவற்றில் பயணம் செய்ய அமெரிக்கக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நுழைவு அனுமதி இல்லாமல் பயணம் செய்யலாம்.
இன்னும் சில நடைமுறைகள்
பன்னாட்டு விமானம் ஒன்றில் பயணம் செய்து ஒரு நாட்டுக்குச் செல்லும் பயணி சந்திக்கும் நடைமுறைகளையும் தெரிந்து கொள்வது நல்லது. எனது அனுபவங்களிலிருந்தே இதனைச் சொல்கிறேன். விமான நிலையத்தின் உள்ளரங்கிற்குள் நுழையும் முன் அங்கே இருக்கும் காவலரிடம் நமது பயணச் சீட்டையும் கடவுச்சீட்டையும் காண்பித்தால் உள்ளே அனுமதிப்பார். அதற்குப் பிறகு நம்மை வழியனுப்ப வந்த நண்பர்கள், உறவினர்கள் உள்ளே வர அனுமதி இல்லை. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் இவ்வளவு கெடுபிடிகள் இல்லை.
விமானப்பயணத்தில், பயணிகள் இரண்டுவிதமான பொதிகளைக் கொண்டு போகலாம். ஒன்று கைப்பொதி; இன்னொன்று விமானப் பொருட்கள் அறைவழியாக வரும் பொதிகள்-செக்கின் லக்கேஜ். இவற்றிலும் ஒவ்வொரு விமானக்குழுமத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. அதைத் தெரிந்து கொண்டு பயணச்சீட்டு வாங்கவேண்டும். அதிகம் பொருட்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அதற்கேற்ற விமான சேவையைத் தேடவேண்டும்.
விமான நிலைய வாசலில் காவலர் அனுமதிக்குப்பின் நமது உடைமைகளை நாமே தள்ளிக்கொண்டு போகவேண்டும். இப்போது அனுமதி பெற்ற உதவியாளர்கள் கிடைக்கிறார்கள்.அவர்களின் உதவியை முறையாகப் பணம் கட்டிப் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் வயதானவர்கள், உடல் குறை உள்ளவர்களுக்குச் சக்கர நாற்காலி உதவுகளும் உண்டு. அதற்கும் தனியாகப் பணம் கட்ட வேண்டும். இவர்கள் நமது பெரும்பொதிகளை விமானக் குழுமத்தின் பொதியைப் பெறும் இடத்திற்குக் கொண்டுபோய் எடைபோட்டு அனுப்ப உதவுவார்கள். அங்குதான் போர்டிங் பாஸ் எனும் பயண அனுமதி அட்டை கிடைக்கும். அதுவரை பயன்பட்ட பயணச் சீட்டுக்கு அதன் பிறகு மதிப்பு இல்லை. அடுத்து எல்லாமே போர்டிங் பாஸ் தான். அதில் நமது பொதிகளின் விவரங்கள் குறியீடுகளாக அச்சிட்டுத் தரப்படும். அதில் நமது பயணத்திற்கான விமானம் எந்த வாசல் அருகில் இருக்கும்; நாம் அமரவேண்டிய இருக்கை எண் எது என்ற விவரங்கள் அச்சிடப் பெற்றிருக்கும். இவற்றையெல்லாம் இப்போது இணையம் வழியாகவே பதிவுசெய்து அலைபேசியில் வைத்துக் கொள்ளலாம். அதைக் காண்பித்துப் பொதிகளை அனுப்பிவிட்டு உள்ளே நுழையலாம். அலைபேசியைத் திறக்க இணைய வசதி வேண்டும் என்பதால் அச்சிட்ட தாள்கள் கையில் இருப்பது நல்லது. மதுரை விமான நிலையத்தில் இலங்கைக்குப் போகவேண்டிய பயணத்தில் ஒருமுறை இணையம் திறக்காமல் சிக்கல் ஏற்பட்ட அனுபவம் எனக்குண்டு உண்டு.
இதற்குப் பிறகு பயணிகள் சந்திக்கும் இடம் பாதுகாப்புச் சோதனைகள். கைப்பொதியை உள்நுணரிப்பதிவுக் கருவி மூலம் ஸ்கேன் செய்து அனுப்புவார்கள். அதில் கத்திரி, பிளேடு போன்ற கருவிகளுக்கு அனுமதி இல்லை. அவற்றை ஆயுதங்களாகக் கருதுகிறார்கள். அதேபோல் தண்ணீர் பற்பசை போன்ற திரவப்பொருட்களுக்கும் கூட அனுமதி இல்லை. அவற்றில் நச்சுப்பொருட்கள் இருக்கலாம் என்ற எண்ணம். முன்பெல்லாம் உணவுப்பொருட்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்ட து. கோவிட் நோய்க்காலத்திற்குப் பிறகு நீர், உணவுப்பொருட்களை அனுமதிக்கிறார்கள். ஆனால் அதனைப் பாதுகாப்புச் சோதனையில் அனுமதிக்க வேண்டும். இப்போதும் நீரை அனுமதிப்பதில்லை.
உடல் பரிசோதனையில் சத்தம் எழுப்பும் ஸ்கேனர்கள் வழியாக நுழையவேண்டும். தேவைப்பட்டால் தனியிடத்திற்கு அழைத்துத் தடவிப்பார்க்கவும் வாய்ப்புண்டு. கைகளை உயரே தூக்க வேண்டும். இடையில் இருக்கும் கச்சை, காலில் போட்டிருக்கும் முழுக்கால் செருப்பு, நகைகள், போன்றவற்றைக் கழற்றிக் காட்ட வேண்டும். கணினி, அலைபேசி போன்ற மின்னணுக்கருவிகளைத் தனியாகப் பதிவு செய்வார்கள். பாதுகாப்புச் சோதனை ஒவ்வொரு விமானத்திற்குள் நுழைவதற்கும் உண்டு. அதில் அனுமதிக்காத பொருட்களைப் பெரும்பொதிகளில் போட்டு அனுப்பலாம். அதிலும் சில தடைகள் உண்டு. விதைகள், செடிகள், காய்கறிகள், பழங்கள் போன்றனவற்றை அனுப்ப முடியாது. தானியங்களில் சிலவற்றிற்கு சில நாடுகளில் அனுமதி உண்டு; சில நாடுகளில் அனுமதி கிடையாது. நமது நாட்டுக்கும் நாம் செல்லும் நாட்டிற்கும் இடையே இருக்கும் வணிக நிலையோடு தொடர்புடையன அவை. இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டே பொதிகளைக் கட்டவேண்டும்.
பாதுகாப்புச் சோதனை முடிந்து உள்ளே போய் நமது விமானத்திற்குரிய அழைப்பு வாசல் எதுவெனத் தெரிந்துகொண்டு அதன் அருகில் அமர்ந்துகொள்ளலாம். பொதுவாக விமானம் கிளம்புவதற்கு 15 நிமிடம் வரை உள்ளே அனுமதிப்பார்கள். அங்கேயும் கடவுச்சீட்டு, போர்டிங் பாஸ் சோதனையிடப்படும். பாதுகாப்புச் சோதனைக்குப் பின் வெளியே வரமுடியாது. நேரம் இருந்தால் உள்ளேயே சுற்றிப் பார்க்கலாம். அங்கு விற்கும் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிட வேண்டும். வெளியே ஒரு வடை 10 ரூபாய் என்றால் உள்ளே மூன்று மடங்கு இருக்கும்.ஆனால் மதுபானங்கள் விலைகுறைவாக இருக்கும். அரசுகளுக்குச் செலுத்த வேண்டிய வரிகள் இல்லை என்பதால் அந்த விலைக்குறைப்பு.
விமானம் கிளம்புவதற்கு முன்பு வாசலில் ஒருதடவை கடவுச்சீட்டையும் பயண அனுமதிச்சீட்டையும் சோதிப்பார்கள். விசா இல்லாமல் பயணிகளை அனுமதித்தால் தவறு. இதனையெல்லாம் தாண்டி விமானத்தின் உள்ளே நுழைந்து நமக்கான இருக்கையில் அமர்ந்தவுடன் பயணிகள் கவனிக்க வேண்டிய நடைமுறைகள், ஆபத்து நடவடிக்கைகள், தப்பிக்கும் முறைகள் எல்லாம் சொல்லிப் பயமுறுத்துவார்கள். ஒரு தடவை கவனித்திருந்தால், அடுத்த முறை கவனிக்கத் தோன்றாது. உள்ளிருந்து வரும் குரலுக்கேற்ப தங்கள் கைகளை அசைத்து நடித்துக் காட்டும் பணியாளர்களின் அசைவுகளையே நான் பெரும்பாலும் கவனித்துக்கொண்டிருப்பேன். அதிகமும் பணிப் பெண்களையே விமானக்குழுமங்கள் இதற்குப் பணிக்கின்றன.
நாம் செல்லும் விமானப் பயணத்தின் பயண நேரத்திற்கேற்ப விமானக்குழுமங்கள் உணவுப் பொருட்களைத் தருகின்றன. அதிலும் நாம் இறைச்சி உணவு, மரக்கறி உணவு எனத் தெரிவு செய்யலாம். பானங்களும் வழங்கப்படும். தேநீர், காபி போன்றனவும் பழரசங்களும் சிலவகை மதுபானங்களும் கிடைக்கும். ஒயின், பியர் போன்ற மென் பானங்கள் தான் கிடைக்கும். இவையும் விமானக் குழுமங்களின் நிலைபாட்டிற்கேற்ப மாறும்
சுற்றுலாவாகச் செல்லும் பயணிகள் நேரடியாக ஒரே விமானத்தில் ஏறிப் போக வேண்டிய நாட்டுக்குப் போய்விட்டால் அங்கேயும் சில நடைமுறைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். விமானத்திலிருந்து இறங்கியவுடன் உள்நுழைவு அல்லது குடிவரவு எனப்படும் இமிக்ரேசன் சோதனைகள் நடக்கும். நமது கடவுச்சீட்டு, விசா போன்றனவற்றின் உண்மைத்தன்மை விவரங்கள் சரி பார்க்கப்படும். அடுத்துப் பொருட்கள் பரிசோதனைகள் நடக்கும். அந்நாட்டிற்குள் அனுமதிக்கப்படாத பொருட்களை எடுத்துக்கொள்வார்கள். அல்லது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் வாய்ப்புண்டு.
நாம் செல்லும் நாட்டிலிருந்து உறவினர்/ நண்பர்/ அலுவலகம் சார்ந்த அழைப்புப் பெற்றுச் சென்றால் நடைமுறைகள் வேறு. அதற்கான கடிதத்தைக் காட்டினால் போதும். அப்படி இல்லாமல் நாமே தனியாகப் போகும் சுற்றுலாப் பயணம் என்றால் எவ்வளவு நாட்கள் அந்த நாட்டில் இருப்பீர்கள்; எங்கெங்கு தங்குவீர்கள், எங்கெல்லாம் போவீர்கள் என்று விவரத்தைத் தேதியிட்டுச் சொல்லவேண்டும். தங்குமிடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்குரிய பணம் இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும். பொதுவாக அமெரிக்கப் பணமான டாலரில் வைத்திருப்பது நல்லது. அல்லது பன்னாட்டு வங்கிப்பரிவர்த்தனை வசதியோடு கூடிய அட்டைகள் இருந்தால் காட்டலாம். இவையெல்லாம் முடிந்து வெளியேறி அந்த நாட்டின் மண்ணை மிதிக்கலாம்; காற்றைச் சுவாசிக்கலாம். சுற்றித்திரியலாம். அனுமதிக்கப்பட்ட நாட்கள் வரை இருக்கலாம். விசா காலம் முடிவதற்குள் கிளம்பிவிடவேண்டும்.
கருத்துகள்