சரவணன் சந்திரனின் புனைவுகள் -சில குறிப்புகள்


நவீனத்துவத்தைக் கடக்கும் எழுத்துமுறை

மனிதர்களை எழுதுவதை மட்டுமே தனது தீவிரமான வேலை என நினைக்கும் சரவணன் சந்திரனின் கதைக்குள் உருவாக்கப்படும் பாத்திரங்களில் பெரும்பாலோர் நிகழ்காலத்துப் பாத்திரங்கள்தான். அவர்களின் செயல்பாடுகளையும் நகர்வுகளையும் தீர்மானிப்பதில் கடந்த காலத்திற்கும் பெரிய அளவில் பங்கிருப்பதாக அவர் எழுதுவதில்லை. அதன் வழியாக உருவான மரபான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட வேண்டும் என்ற தவிப்போ அல்லது அதையே சரியென ஏற்றுக்கொண்ட மனநிலையோ வெளிப்படவில்லை. நீண்ட காலமாக இருக்கும் அமைப்புகளின் சிற்றலகுகளையும் பேரலகுகளையும் குறித்த விவாதங்களும் இல்லை. அவை தரும் நெருக்கடிகள் குறித்துக்கூடப் பெரிய அக்கறைகள் இல்லை.
மனிதர்களின்/ பாத்திரங்களின் நெளிவுசுழிவுகளையே கதைக்கான விவாத மையமாக்கிக் கதைகள் செய்பவராகச் சரவணன் சந்திரன் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார். உருவாகிவரும் சந்தர்ப்ப சூழலுக்கேற்ப முடிவுகளை எடுத்து நகரும் மனிதர்களின் சாயலில் தனது கதாமாந்தர்களை உருவாக்குவதின் மூலம் அவரது கதைகள் நவீனத்துவத்தைக் கடந்த எழுத்தாக உருவாகி வருவதை வாசிக்க முடிகிறது. எல்லாவற்றையும் தற்காலிக ஏற்பாடுகளாகப் புரிந்துகொண்டு வாழ்வை எதிர்கொள்ளும் மனிதர்களை அவரது புனைவுகளில் வாசிக்கலாம். இம்மாத உயிர்மையில் வந்துள்ள ‘சிப்பாயின் நுனி’யும் கனலியில் வந்துள்ள ‘பொறுப்பு’ கதையும் அந்தத் தொடர்ச்சியில் தான் இருக்கின்றன.
 
சிப்பாயின் நுனியில் எழுதப்பெற்றுள்ள ஆரோக்கியமேரிக்கு மனமொப்பி ஒருவர் சொல்லப்போகும் ‘லவ் யூ’ ஒன்று போதும். மனைவியாக இருப்பதற்கான உடல்வாகு பற்றியெல்லாம் கேள்விகேட்டுக்கொண்டு முடிவெடுக்காமல், அக்கா கேட்டுக்கொண்டால் என்பதற்காகச் சம்மதம் தெரிவிக்கும் தங்கவேலுவின் முடிவுக்குப் பின்னால் பெரிய திட்டமிடல்கள் எல்லாம் இல்லை. அவனால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பரமேஸ்வரனைக் காப்பாற்றவேண்டும் என நினைப்பதற்குப் பின்னால் அறம் சார்ந்த கேள்விகள் எல்லாம் ஆரோக்கியமேரிக்கு இருப்பதாகக் காட்டவில்லை.
பொறுப்பு கதையில் இடம்பெற்றுள்ள விசாகன், சத்தியநாதன், மோசஸ் என ஒவ்வொருவரின் நகர்வுகளும் பெரும் முன்னேற்பாடுகளுடன் - பொறுப்போடு எடுக்கும் முடிவுகளோடு இருப்பதாகத் தோன்றினாலும் எல்லாமே தற்காலிகத்தன்மை கொண்டவைதான். அவரவர்களின் அந்த நேரத்து நியாயங்களே அவர்களை இயக்குகிறது. கணவன் நம்பித் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரும் விசாகனுக்குத் தனது தங்கையைத் திருமணம் செய்து கொடுக்கும் சத்தியநாதனின் மனைவிகூட அப்படித்தான் முடிவெடுக்கிறாள்.

தற்காலிகமான -சூழலில் தன்னை நிறுத்தி முடிவுகளை எடுத்து நகரும் பாத்திரங்களைக் கதைக்குள் அறிமுகப்படுத்தத் தனித்தனியாக நிகழ்வுகளை உருவாக்கிக் கதைசொல்கிறார். அதற்காக அவர் கதைக்குள் உருவாக்கும் புனைவு வெளிகளும் புனைவுக்காலமும் முக்கியமானவைகளாக இருப்பதில்லை. நிகழ்வும் பாத்திரங்களும் மட்டுமே முதன்மையானவை என்ற நம்பிக்கையோடு எழுதுகிறார். இது அவரது தனித்தன்மையாக இருக்கிறது. அந்தத் தனித்தன்மையை வளர்த்தெடுத்துக் கொண்டே இருக்கிறார் சரவணன் சந்திரன். அந்த வளர்ச்சியை இந்த இரண்டு கதைகளிலும் முழுமையாகக் காணமுடிகிறது.

2023-09-13

***************
எழுதப்படும் உரிப்பொருள் (theme) அல்லது பொருண்மை ஒன்றுதான். அதை முன்வைக்க நினைக்கும் எழுத்தாளரின் பார்வைக்கோணமும், புனைவைப் பற்றிய புரிதலும் வேறுவேறு பனுவல்களாக மாறுகின்றன. உரிப்பொருள் ஒன்றாக இருந்தாலும் வெளிப்படுத்த நினைக்கும் நோக்கமே கதையின் வடிவத்தைத் தீர்மானிக்கின்றன. அண்மையில் சரவணன் சந்திரனின் ஜிலேபி (யாவரும்.காம் /ஏப்ரல், 2023) சு.வேணுகோபாலின் மோகப்புயல் (வல்லினம், மே,2023) கதையையும் அடுத்தடுத்து வாசித்தேன். இரண்டு சிறுகதைகளின் உரிப்பொருளும் காமம் என்ற பொருண்மைக்குள் அடங்கக்கூடிய ஒன்றுதான். உணர்வு சார்ந்து எழுத்தாளர்கள் காமத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் கதைகளின் தலைப்பும், அத்தலைப்பு கதைக்குள் உருவாக்கும் உணர்வும் ஓரளவு வெளிப்படுத்துகின்றன.

காமத்தை மோகம் என உருவகித்துக்கொள்ளும் சு.வேணுகோபால் அதனோடு புயல் என்னும் படிமத்தை இணைக்கிறார். காமத்தை மோகமாக நினைக்கையில் அது ஒரு தற்காலிகத் தன்மை கொண்ட உணர்வுக் குவியல் என்ற நிலையை வாசிப்பவர்களுக்குத் தருகிறது கதை. அத்தோடு அதற்கொரு பிடிவாதத்தன்மையும் இருக்கும்; புறச்சூழல் உருவாக்கும் நெருக்கடிகளுக்கு ஒத்துப்போகாது என்பதையும் அதனோடு சேர்த்துக்கொள்ளலாம். இதை வெளிப்படுத்த நினைக்கும் எழுத்தாளர், மோகத்தால் திசைமாறும் பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களையோ, செயல்பாடுகளையோ விரிவாகத் தராமல், அவர்கள் எடுக்கும் முடிவுகளை மட்டுமே கதைக்கூறாக்கி இறுதி நிகழ்வை ஒரு நல்திற நாடகத்தின் உச்சநிலைக்காட்சிபோல நிகழ்த்திக் காட்டுகிறார். ஆனால் மோகம் என்னவெல்லாம் செய்யும் என்பதைப் பாத்திரங்களோடு நேரடித்தொடர்பில்லாத பல காட்சிகளாக அடுக்கிக் கொண்டே போகிறார். அதன் வழியாகக் கதைக்கான புனைவுவெளி - களன் உருவாகிக்கொண்டே போகிறது. அத்தோடு மோகம் உருவாகித் திளைக்கும் காலச்சூழல்களையும் - சிறுபொழுதாகவும் தனிமையாகவும் - எழுதிக்காட்டுகிறார். இந்தத் தன்மை அவரது பெரும்பாலான கதைகளில் உள்ளது. இதனை அவரது தனி அடையாளமாகச் சொல்லலாம். பலவீனமான கதை வடிவம் என்றும் நினைக்கலாம்

சிறுகதையின் வடிவம் இதுதான் எனத் தொடக்க நிலையில் சொல்லப்பட்ட வடிவத்தைப் பின்பற்றாமல் உரிப்பொருளை முன்வைக்க நினைக்கும் நீண்ட அகப்பாடல் (பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு) வடிவத்தைக் கொண்ட சிறுகதையாக அது நீள்கிறது. கி.ராஜநாராயணனின் சிறுகதைகளிலும் இத்தகைய விவரிப்புகள் இருக்கும். கிராமம் சார்ந்த எல்லாத்தரவுகளையும் கதைக்குள் சொல்லிவிட நினைக்கிறார். அவை கதையின் ஓர்மையைக் குலைக்கக் கூடியன என்ற விமரிசனத்தை அவர் சந்தித்திருக்கிறார். தமிழ் இலக்கிய மரபை அறியாதவர்களுக்கு இந்தக் கதைசொல்லும் முறை அலுப்பூட்டலாம். அண்மையில் கூடச் சாருநிவேதிதா சு.வேணுகோபாலின் ஒரு கதையை (உள்ளிருந்து உடற்றும் பசி) அதன் சொல்முறைக்காகப் பகடியாகச் சொல்லியிருந்தார்.

உரிப்பொருள் சார்ந்து கதைகவெளிப்பாடு பாத்திரங்களின் மனவுணர்வுகளின் அலைவுகளாலும் அதனால் உருவாக்கப்படும் நிகழ்வுத் தொடர்ச்சிகளாலும் வெளிப்பட வேண்டும் என நினைப்பவர் சரவணன் சந்திரன். அவரது பெரும்பாலான கதைகளின் வடிவம் அப்படிப்பட்டதே. ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு பாத்திரத்தின் மன அலைவை - எண்ண ஓட்டத்தின் குவிப்பாக எழுதுகிறார். அந்த உணர்வை அடுத்த நிகழ்வின் பாத்திர மையத்தோடு தொடர்புபடுத்துகிறார். இதன் வழியாக உணர்வுத்தொகுதிகளும் அவற்றின் வழியாக உருவாகும் மனிதர்களும் கதையின் கடைசிவரை அழைத்துவரப்படுகிறார்கள். அங்கே அவர் நினைக்கும் முடிவு கதையின் முடிவாக வைக்கப்படுகிறது. இந்த முடிவுக்கான ஒரு குறிப்பைக் கதையின் தொடக்கத்தில் எங்காவது வைத்துவிடுகிறார். இப்படி எழுதுவது ஒரு சிறுகதையின் தொடக்கமும் முடிவும் பொருந்தி நிற்கும் ஓர்மையான வடிவத்தில் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடின் வெளிப்பாடு.

ஒரு சினிமாவில் இடம்பெறும் முதலிரவுக் காட்சியில் இடம் பெறும் ஜிலேபி உண்டாக்குவது கிளர்ச்சி. அந்தக் கிளர்ச்சியைத் தரும் பெண்களைத் தொடர்ச்சியாகத் தேடித்தேடித் தோல்வியடையும் மனம் சந்திக்கும் பெண்கள் வழியாகப் பல நிகழ்வுகள் கதையின் தொடர்நிகழ்வுகளாக நகர்கின்றன. கதையின் முடிவில் ஜிலேபி கிளர்ச்சி தரும் என்பது திரைப்படம் உருவாக்கும் ஒரு புனைவு. காமம் உருவாக்கும் கிளர்ச்சி அது போன்றதல்ல; காட்சிப்படுத்தமுடியாது; உடல் உணரும் தரும் என்பதாக உணர்த்தப்படுகிறது.

கதைகளை வாசிப்பது என்பது அவை முன்வைக்கும் நீதி அல்லது கருத்து அல்லது போதனைக்காக மட்டுமாக இருக்க வேண்டியதில்லை. கதையை உருவாக்கும் எழுத்தாளரின் இலக்கிய ஆக்கமுறைமைக்குமாக இருக்கலாம். அப்படி வாசித்தால் தான் எழுத்தாளரைக் கொண்டாடமுடியும். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளமுடியும்.

2023 -05-26

***************

அவரது கதைககளுக்குள் பெரும்பாலும் தன்னை ஒரு பாத்திரமாக்கி – கதைசொல்லும் இடத்தில் நிறுத்திக்கொண்டு சொல்கிறார். இந்தச் சொல்முறையில் கதைக்கு உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் கிடைக்கும் என்றாலும் புனைவுத்தன்மை குறைவு. எழுதுபவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும்போது புனைவுத்தன்மை குறைந்து கட்டுரையை நெருங்கிவிடும். இதனை முன்பே சில தடவைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். என்றாலும் அந்த சொல்முறை அவருக்கு உவப்பானதாகவும் நெருக்கமானதாகவும் இருப்பதாக நினைத்திருக்கலாம்.

தொடர்ச்சியாக அவர் எழுதும் கட்டுரைகளையும் புனைவுகளையும் வாசிக்கிறவன் என்ற நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டேன் என்றாலும், அவரது விருப்பமான சொல்முறையில் வாசிப்பவரோ, விமரிசனக்குறிப்பு எழுதுபவரோ தலையிட முடியாது. அண்மையில் சரவணன் சந்திரன் எழுதிய இரண்டு கதைகளை ஒருவார இடைவெளியில் படிக்க வாய்த்தது. இரண்டு கதைகளில் ஒன்று இணைய இதழ் ஒன்றிலும் (தமிழினி) இன்னொன்று அச்சிதழிலும் (உயிர்மை- பிப்ரவரி,23) வாசித்தவை.தொடர்ந்து எழுதும் நிலையில் தமிழின் முதன்மையான புனைவெழுத்தாளராக விரைவில் அறியப்படுவார் சரவணன் சந்திரன்.

யாதவப்பிரகாசர்: குருவை மிஞ்சுதல்

இசைக்கலைஞர் எம்.டி. ராமனாதனைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை அவரது பேத்தி சௌதாமினி தயாரித்தார். 33 ஆண்டுகளுக்கு முன்னால் தயாரிக்கப்பட்ட ஆவணப் படத்தில் மதுரை நிஜநாடக இயக்கத்தின் நடிகர்களில் பெரும்பாலோர் பங்கேற்றோம். பெரும் மணல் திட்டுகளும் ஆழமான பள்ளங்களும் நிரம்பிய சென்னை சோழ மண்டலக்கரையோரம் படப்பிடிப்பு நடந்தது. நடிகர்களுக்கான அடிப்படைப் பயிற்சிகளைச் செய்வதுதான் பெரும்பாலும் எடுக்கப்பட்ட காட்சிகள்.

உடல், குரல், மன ஓர்மம் என விரியும் நடிப்புப்பயிற்சிகளை முன்னரே மதுரையில் ஒத்திகை பார்த்தபின்னர், அதே பயிற்சிகளைக் கடற்கரை மணற்பரப்பில் செய்தபோது தன்னியல்பான மாற்றங்களும் களைப்பும் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. எல்லாவற்றையும் காமிரா படம் பிடித்துக் கொண்டே இருந்தது. இடையிடையே இயக்குநர் எம்.டி.ராமனாதனின் கற்பித்தல் முறையை விளக்கினார்.

எம்.டி.ராமனாதனின் கற்பித்தல் முறை என்பது பெரும்பாலும் போலச்செய்யத்தூண்டும் முறை. அவர் பங்கெடுக்கும் இசைக்கச்சேரிகளுக்கான தயாரிப்புகளின் போதும், கச்சேரி மேடை நிகழ்வுகளின் போதும் தனது சீடர்கள் கவனித்து உள்வாங்கிக் கொள்ளும் முறையையே கற்பித்தல் முறையாகக் கொண்டிருந்தார். அது ஒருவிதத்தில் நாடகப்பயிற்சிகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளும் முறையைப் போன்றதுதான். ஆனால் கிடைக்கும் இடச் சூழல், கால நெருக்கடி போன்றவற்றின் வழியாக புத்தாக்கமும் கண்டுபிடிப்புகளும் நடக்கும் என்பது அதன் பின்னுள்ள தத்துவம்.

தமிழினி இணைய இதழில் வந்துள்ள சரவணன் சந்திரனின் யாதவப்பிரகாசர் கதையை வாசித்து முடித்தவுடன் அந்தப் படப்பிடிப்பும் இயக்குநரின் விளக்கங்களும் நினைவுக்கு வந்தன.

போலச்செய்தல் - கற்றலில் அடிப்படை. போலச்செய்தலே போதுமென நினைக்கும் ஆசிரியன் புத்தாக்கத்தின் எதிரி. போலச்செய்தலிலிருந்து நகரும் நுட்பங்களைக் கண்டறிதல் கலை, இலக்கியப் பயிற்சிகளின் தேடல். தனது மாணாக்கரின் புத்தாக்கத்தைத் தனது பயிற்சியின் நீட்சியாக நினைக்கும் ஆசிரியனுக்கு உண்டாக்கும் மகிழ்ச்சியும் பெருமிதமும் சட்டென்று வெளிப்பட்டுவிடுவதில்லை. அதே நேரம் தடுத்து நிறுத்தும் எத்தணிப்பும் நடப்பதில்லை.

கலை, இலக்கியத்துறை சார்ந்த கற்றல் -கற்பித்தல்/ குரு- சீடன் உறவில் அரிதாகக் காணப்படும் அந்தக்கணம் விளையாட்டுப்பயிற்சியிலும் இருப்பதைக் கதையாக்கியிருக்கிறார் சரவணன் சந்திரன். இந்த வகையில் கவனிக்கத்தக்க கதை. அத்தோடு விளையாட்டில் செய்யும் பயிற்சியொன்றை மரக்கிளையில் அமர்ந்து கிளம்பும் பறவையொன்றின் படிமத்தோடு இணைக்கும் பகுதி இந்தக் கதையில் முக்கியமான இடம்.

இதை விளக்கிச் சொல்வதுபோல அமைந்துள்ள பின்குறிப்பு – யாதவப் பிரகாசர் , ராமானுஜர் உறவைச் சொல்லும் பின்குறிப்பு தேவையில்லை என்றே தோன்றுகிறது. அதே போல் கதைக்குள், கதைசொல்லியாக வரும் மாணவனுக்குப் புனைவான ஒரு பெயர் சூட்டலைத் தவிர்த்தது ஏனென்பது தெரியவில்லை. ஒரு புனைவுப்பெயர் கொண்ட பாத்திரம் கதைசொல்வதாக- படர்க்கை நிலைக் கூற்றாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், சரவணன் சந்திரனே ஒரு விளையாட்டு வீரர் என்ற தகவல் தெரிந்தவர்களுக்குக் கதையை வாசிக்கும்போது, கட்டுரையை வாசிக்கும் தொனி உருவாகும் வாய்ப்புகள் உண்டு .

கூப்பு யானை : போதைகளின் சாயல்

கூப்புயானை - இம்மாத உயிர்மையில் வந்துள்ள சிறுகதை. ஏதாவதொரு நிகழ்வின் நினைவுகள் மனிதர்களுக்குள் தங்கிவிடும்போது அதைப்போன்ற இன்னொன்றைப் பார்க்கும்போது - பார்க்காமலேயே நினைவில் தோன்றும்போது அவர்களைத் தடுமாறச் செய்துவிடும். அத்தடுமாற்றம் உண்டாக்கும் பதற்றத்தைத் தவிர்க்க அல்லது தக்கவைக்க நினைக்கும் மனிதர்கள் ஏதோவொருவித போதைக்குள் நுழைகிறார்கள்.

உடலைப் போதைக்குள் தள்ளும் மதுபானங்கள், புகையிலை, கஞ்சா என அறியப்பட்ட போதைகளைத் தாண்டிப் பலருக்கும் பலவிதமான போதைகள் இருக்கின்றன. காதலித்தவர்களை நினைத்துக்கொள்வதும், அவர்களோடு தனித்திருப்பதாகக் கனவுகாண்பதும் ஒருவிதமான போதை என்றால், அதனைக் கவிதையாக்குவதும் ,கதையாக்குவதுமான போதைகள் உடலைத் தாண்டி மனதைக் கவிழ்த்துப்போட்டுவிடக்கூடும். எழுத்தைப்போலவே எல்லாக் கலைவடிவங்களிலும் போதையோடு ஈடுபடுபவர்களைப் பார்க்கமுடியும்.

தனிமையான பயணங்கள், கடுமையான உடல் உழைப்பு, தொடர் வாசிப்பு எனப் போதைக்கான வஸ்துக்கள் அரூபமாகவோ, ரூபமாகவோ இருக்கின்றன. அவ்வகையான போதைகள் உருவாக்கும் படிமங்களின் சாயலைக் காரணகாரியங்களால் விளக்கிவிடமுடிவதில்லை. காமத்தின் தத்தளிப்பை அள்ளித்தருவதில் தீராத ஆசை கொண்ட பெண்களின் உடல்கூடப் போதையின் படிமம்தான்.

கூப்புயானையின் சாயலில் தனது படிமத்தை உருவகித்துக்கொள்ளும் ஜெப்ரியின் வீழ்ச்சியின் தொடக்கம் போதையா? போதையால் தன்னைக் கூப்புயானையாக வரித்துக்கொண்டு தனித்து அலைய நினைக்கின்றானா? ஜெப்ரியைப் போலப் பலரை ஒவ்வொருவரும் தாண்டியிருக்கக்கூடும்; ஆணாக மட்டுமில்லை; ஜெப்ரியின் சாயல் கொண்ட பெண்களையும். அவ்வளவு எளிதாகக் கடக்க முடியாதுதான். போதையைக் கைவிட முடிந்த நிலையில் கடந்துவிட முடியும். இதுவரை நான் வாசித்த சரவணன் சந்திரனின் கதைகளில் ஆகச்சிறந்த கதையாக கூப்புயானையை நினைக்கிறேன்.

 மானு மோராஸ்:  காமம் சார்ந்த குற்றமனம் :

 குற்றம் என உணர்ந்தபின்னும் அதைச் செய்யத் தூண்டும் நரம்புகள் உடலில் மறைந்து கிடக்கும் இடங்களைத் திட்டவட்டமாக அறிந்துகொள்ளும் ஆர்வம் இன்னும் உண்டாகவில்லை. அப்படியொரு ஆர்வத்தை ஆராய்ச்சிக்கான கருதுகோளாகக் கொள்ளும் ஆய்வை எந்தப் புலத்து ஆய்வு என வரையறை செய்வதும் தீர்மானிக்க முடியாத ஒன்றுதான். கண்டுபிடித்துக் கொடுப்பதோடு தனது வேலையை நிறுத்திக்கொள்ளும் அறிவியல் புலம், அதன் பயன்பாட்டை, மனிதர்களின் நடத்தையைத் தீர்மானிக்கும் உளவியலுக்கு வழங்கிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும். உளவியல் தீர்மானமாக முடிவுகளை எடுப்பதில்லை.

காமம், பாலியல் உறவுகள் போன்றனவற்றைக் குற்றம் என்றுகூடத் தீர்மானிப்பதில்லை உளவியல். வயிற்றுப் பசியைப் போல இன்னொருவகையான பசி எனப் புரிந்துகொள்ளச் சொல்லும் உளவியல், அடிப்படைத் தேவையாகத் தீர்மானித்துக் கொண்டு விளக்கங்களைத் தந்து மனிதர்களைக் குற்றமனத்திலிருந்து விடுவிக்கும் வழியைக் காட்டித் தப்பிக்க உதவும் அறிவுப்புலம். இதே போன்று மானிடவியலும் கூட ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒவ்வொருவகையான சமூக நடத்தைகளும் பண்புகளும் இருக்கின்றன என்பதை முன்வைக்கின்றது.

தமிழினியில் பதிவேற்றம்பெற்றுள்ள சரவணன் சந்திரனின் - மானு மோராஸ் - கதை இப்படியானதொரு உரிப்பொருளை விவாதப்படுத்தியுள்ளது. தனது பணிச்சூழல் காரணமாக பாலியல் ஈடுபாடுகளில் கறார்த்தன்மையைக் கடைப்பிடிக்காத ஒருவனின் மனதிற்குள் எழும் மூர்க்கம் எப்படிச் செயல்படுகிறது என்பதைக் காட்சிப்படுத்துகிறது. குற்றச் செயல் எனச் சொல்லிக்கொண்டே அதனோடு பயணித்துக் குற்றத்தை நிறைவேற்றித் தீர்த்துக்கொள்ளவும் -திருப்திப்பட்டுக்கொள்ளவும் - செய்கிறது. அந்தப் பசி தீர்ந்ததாக நினைக்கும் அடுத்த கணம் குற்றத்திலிருந்து தப்பிக்கவும், குற்றமனத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ளவும் வழி தேடுவதும் தொடர்விளைவுகளாக மாறுகின்றன. விடுதலையைத் தேடும் பொறுப்பை எடுத்துக்கொள்கிறது மனம்.

சமூக நடைமுறைகள் ஒத்துக்கொள்ளாத பாலியல் நிகழ்வுகளைக் கடந்துபோகத் தேவை ஒரு காரணம்; அந்தக் காரணத்தின் தொடர்ச்சியாக ஒரு சமாதானம். பல நேரங்களில் சூழலைக் காரணமாக்கிச் சமாதானம் அடைந்துகொள்கிறது மனம். குறிப்பான சூழலில் அந்தத்தவறு நடந்துவிட்டது என்றாலும் துரத்திக் கொண்டிருக்கிறது அந்த நிகழ்வு என்று பல கதைகள் எழுதப்பெற்றுள்ளன. சரவணனின் சந்திரனின் இந்தக் கதை அவற்றிலிருந்து விலகி, துரத்தும் குற்றவுணர்வை ஒரேயடியாக நிறுத்தி விட்டுத் தப்பிக்கும் காரணம் ஒன்றைக் காட்டுகிறது.

ஆணின் காம நிறைவேற்றத்திற்கும் குற்றமனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கும் இனக்குழுப்பண்பாட்டைக் காரணமாக்குகிறது கதை. மலையிலிருந்து யாரையும் பசியோடு கீழிறங்க நாங்கள் அனுமதிப்பதில்லை. என்ற கதையின் கடைசி வரியின் வழியாக குற்றமனம் தப்பித்துக்கொள்கிறது.


ஐந்து முதலைகளின் கதை.

காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்று அடிப்படைகளிலுமே நேரடியாகத் தோன்றுவனவும் நினைக்கப்படுவனவும் என இருநிலைகள் உள்ளன. குறிப்பான ஒருவெளியை நேரடி வெளியாகக் கொண்ட ஒருநாவல் மிகக்குறுகிய காலத்தையும், எண்ணிக்கையில் மிகக்குறைவான பாத்திரங்களை மட்டுமே கொண்டதாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்தப் பாத்திரங்களின் நினைவுகள் மூலம் காலப்பரப்பையும் நிலப்பரப்பையும் பெரும்பரப்பாக ஆக்கிவிடும் வாய்ப்பு நாவல் இலக்கியத்தில் உண்டு.
அண்மையில் வந்துள்ள சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை (உயிர்மை, அக்டோபர், 2015) நாவலை வாசித்தபோது குறுகிய காலப்பரப்பில் பெருவெளிப்பரப்பு தரும் புதிய அனுபவங்கள் கிடைத்தன. தமிழில் நாவல் வாசிக்கும் விருப்பம் கொண்டவர்கள் சரவணன் சந்திரன் விரிக்கும் அனுபவங்கள் விரிவானவை என்பதோடு புத்தம் புதியன என்பதையும் உணரமுடியும் நான் அப்படி உணர்ந்தேன்.

நாவலுக்குள் சரவணன் விரிக்கும் அனுபவங்கள் தமிழகப் பரப்பிற்குள் கிடைக்காத அனுபவங்கள். உலகமயத்தின் வரவுக்குப்பின் அதன் பகுதியாக நினைக்கும் தனிமனிதர்களுக்குக் கிடைக்கக்கூடிய பன்னாட்டு அடையாளம், கட்டுப்பாடற்ற வியாபாரமும் வாழ்க்கையும், தரகாகக்கிடைக்கும் பெரும்பணம், கொண்டாட்டங்களும் களியாட்டங்களுமென விரியும் கனவின் ருசியை அனுபவித்துவிடக் கிளம்பியவர்களின் அனுபவங்களாக விரிந்துள்ளது. அந்த அனுபவங்களைப் பெற்ற இந்தியத்தமிழ் இளைஞன் ஒருவனின் கதையாக விரியும் நாவல், நவீன முதலாளியத்தின் விதிகள் எதையும் கற்றுக்கொள்ளாமல் முன்னுணர்வின் வழி இன்னொரு நாட்டிற்குள் நுழைந்து தோல்வியுடன் திரும்பியவனின் கதையாகவும் இருக்கிறது. கதையென்றவுடன் ஒருவனின் வாழ்க்கை வரலாறு என்று நினைக்கவேண்டியதில்லை. அதிகம் போனால் ஓராண்டிற்குள் நிகழ்ந்த சில சந்திப்புகளின் தொகுப்புகளே அவை. நாவல் வெளியான காலத்தின் முக்கிய நிகழ்வுகளான ’செம்மரக்கட்டைக்கொலைகள், நூடுல்ஸ்தடை’ போன்ற தகவல்களை எல்லாம் போகின்ற போக்கில் பேசும் சமகால எழுத்தாக வந்துள்ள சரவணனின் நாவல் இப்படித்தொடங்குகிறது.

“எல்லோருடைய தாத்தாக்களையும் போலவே அந்தச் சிறுவனுக்கு அவனது தாத்தாவும் ஒரு கதை சொன்னார். சூரியன் எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் அதைத் தொடர்ந்து போகச்சொன்னார். தாத்தாக்களைப் பைத்தியக்காரர்களாகப் பார்க்கும் குலவழக்கம் இல்லாத அந்தச் சிறுவனும் தாத்தாவின் சொல்படியே நடந்தான்.(15)


அந்த இளைஞன் போன நாடு தைமூர். இந்தியத் தலைநகர் டில்லியின் பெயரையே தனது தலைநகருக்கும் பெயராகக் கொண்ட அந்நாடு. சூரியன் உதிக்கும் நாடுகளில் ஒன்று. கிழக்காசியப் பகுதிக்குள் இருக்கும் சின்னஞ்சிறிய நாடு. வேளாண்மை மற்றும் கானகப் பொருட்களுக்காக இந்தியா உள்ளிட்ட கீழ்த்திசை நாடுகளுக்கு 17-ஆம் நூற்றாண்டில் வந்திறங்கிய ஐரோப்பியக் காலனியாதிக்கவாதிகளைப் போலல்லாமல், வியாபாரத்தின் வழியாகப் பெரும்பணமுதலையாகிவிடலாம் என்ற நம்பிக்கையில் அந்நாட்டிற்குள் நுழைந்தவன் அவன்.

தைமூர் நாட்டின் தேசிய லட்சிணையான முதலை நாவல் முழுக்க பல்வேறு குறியீடாக ஆக்கியுள்ளார் சரவணன். கடல் அட்டைகள், காபி லூவாக் என்னும் புனுகுபூனைக் கழிவு, வனவளம், தனித்த ருசிகொண்ட மீன்கள், இவற்றைச் சேகரித்துத் தரத் தயாரான கடின உழைப்பாளிகளான மனிதவளம் என அத்தேசத்தின் வளத்தை வணிகப்பொருளாக்கிக் கொழுத்துவிட வந்த மலேசியாக்காரன், சிங்கப்பூர்த் தமிழன், இலங்கைச் சிங்களன், தாய்லாந்துக்காரன் ஆகியோருடன் இணைந்தும் விலகியும் நகரும் தமிழ்நாட்டு இளைஞனின் வீழ்ச்சி என முதலைகளின் கதை விரிகிறது.

‘திரைகடலோடித் திரவியம்தேடு’ என்ற பழஞ்சொற்றோடரை உலக மயப் பொருளாதாரம் புதிய அர்த்தத்தோடு உருவாக்கி வளர்க்கிறது. விதிகள், அறங்கள், மனித உறவுகள் என எவையும் பின்பற்றப்படவேண்டியன அல்ல; எல்லாம் மீறப்படவேண்டியன என்பதை முன்வைத்து நகரும் நவீன வியாபாரம், அசையாச் சொத்து களுக்கு இருக்கும் மதிப்பைவிட அசையும் சொத்தான பணத்திற்கே அதிக மதிப்பெனவும் சொல்கிறது. அதை முழுமையாக நம்பிய அவன், தாத்தாவின் வழிகாட்டல் என்று சொல்லிக் கொண்டு நிகழ்காலப் பொருளியலின் லாபவேட்டைக்குள் இறங்குவதற்காகத் தன் வீட்டை - டாலராக மாற்றிக் கொண்டு கிளம்பும்போது எதுவும் புரியாமல் வாழ்த்தி அனுப்புபவர்கள் இரண்டுபேர். ஒருத்தி நண்பன் ராஜாவின் அக்கா, அவனைத் தன் தம்பியாகவே நினைப்பவள். அவள் சொன்ன வார்த்தைகள்:

‘ இது பாண்டி அய்யா காலடி மண். போகிற இடத்தில் இதை வைத்து ஒருசெங்கல்லை வைத்தாவது கும்பிடு. பாண்டி அய்யா எப்போதும் என் தம்பியுடன் இருப்பார். (44)
இன்னொருவர் அவன் வேலைபார்த்த கம்பெனியின் உயரதிகாரி மேனன். அவர்,
சூதாட்டம் என்பதற்கு அதிர்ஷ்டம் தேவை. ஆனால் இங்கு ஆட்டத் திறமைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒரு வணிகத்தைப் பங்குச் சந்தையை அணுகுகிறமாதிரி முன்னெடுக்கப்போகிறோமா என்பதுதான் கேள்வி. (44)
என்றொரு கேள்வியை முன்வைத்து அனுப்புகிறார். இந்தக் காட்சிகளெல்லாம் அவனின் நினைவாக வருபவை. நாவலின் நேரடிக்காட்சிகள் எல்லாம் தைமூரில் நடப்பவையே. நம்பிக்கையின்மை, அதன்பேரில் உருவாகும் போட்டி, போட்டியில் மறைக்கப்படும் ஏமாற்றுவேலைகள், அதனால் உருவாகும் வன்மம், வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் தீர்வாக நினைக்கும் குடியும் காமமும் எனப் பலவிதமான நினைவுகளை நாவல் விரித்துக் கொண்டே போகிறது. பணம் சார்ந்த வாழ்க்கையில் மாறிவிட்ட பாலியல் உறவுகளைப் புரிந்துகொண்ட மனநிலையைச் சரவணன் தடையற்ற எழுத்தாகத் தருகிறார். கட்டுப்பாடுகள் அதிகமில்லாத ஒரு தேசத்தில் கொஞ்சம் குற்றவுணர்வோடு அந்நியதேசத்துப் பெண்களைக் கவனிக்கும் மனநிலையைச் சரவணனிடம் காணமுடிகிறது.

உரிப்பொருள் (theme) சார்ந்து கவனிக்கத்தக்க நாவல்களாக எழுதப்பட்ட பலவற்றில் இருக்கும் முக்கியமான குறைபாடுகள் சரவணன் சந்திரனின் நாவலிலும் உள்ளன. அதேநேரத்தில், நாவல் நிகழும் காலம் மற்றும் நிலப்பின்னணியென்னும் முதல்பொருளால் தமிழில் இதுவரை எழுதப்படாத ஒருநாவலாக வந்துள்ளது. புனைகதையின் ஒருவடிவமான சிறுகதையில் எழுதிப் பழகிய கைகளால் கவனிக்கத்தக்க முதல்நாவலை எழுதியவர்கள் உண்டு. ஆனால் நேரடியாக நாவல் எழுதவந்து தனது முதல் நாவலைக் கவனிக்கத்தக்க நாவலாக ஆக்கியவர்கள் மிகக்குறைவு. மிகப்பெரிய ஆச்சரியம் எழுத்தாளர் இமையம். கோவேறு கழுதைகள் வந்தபோது அதற்குமுன் இமையம் என்பது எந்தவிதத்திலும் கேள்விப்படாத பெயர். ஆனால் சரவணன் சந்திரன் பத்திரிகையாளராகவும், ஊடகக்காரராகவும் அனுபவம் பெற்றபின் தனது முதல் நாவலை எழுதியிருக்கிறார். இவ்விரண்டிற்காகவும் யோசிக்கும் - எழுதும் மனநிலை அவருக்கு ஏற்கெனவே வாய்க்கப்பெற்ற ஒன்று. இவ்விரண்டின் தன்மைகளும் நாவல் முழுக்க வெளிப்பட்டுள்ளது. செய்திக்கட்டுரை எழுதும் பத்திரிகையாளனின் மொழியும் விவரிப்பும் பல இடங்களில் வெளிப்பட்டுள்ளன. அது சில நேரங்களில் பயணக்கட்டுரையாகிவிடும் தன்மைக்குள் நெருங்கிவிட்டு விலகியுள்ளது. சந்திப்புகளை நிகழ்வுகளாக முன்வைக்கும் காட்சிகள் காட்சி ஊடகத்திற்காக நிறுத்திவிட்டுப் பேசும் தன்மையில் வெளிப்பட்டுள்ளன. அவைகளைக் கதைசொல்லி நினைவலைகளுக்குள் நகர்த்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போதே நாவலின் மொழியாக மாறும். அப்படி மாறும்போது கதைசொல்லியின் இருப்பு, தான் எதிர்கொள்ளும் மனிதர்களின் நியாயங்களை மட்டுமே பேசாமல், தனது நிலைப்பாடுகள் குறித்தும் விசாரனைக்குள் இறங்கியிருக்கும். அந்த வாய்ப்புகளைச் சரவணன் தவறவிட்டுள்ளார். அதற்கான காரணம் நாவலுக்குத் தேவையான வடிவமும் சொல்முறையும் இதுதான் என உறுதியாக வரையறுத்துக் கொள்ளாததே எனத்தோன்றுகிறது. பொதுவான வெளியிலும் காலத்திலும் வைத்தே மனிதர்களின் நினைப்புகளையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் சரவணன், அவர்கள் குறிப்பான வெளியையும் காலத்தையும் எதிர்கொள்ளும்போது என்ன நினைத்துக் கொள்வார்கள் என எழுதாமல் விட்டுவிடுகிறார். தன்னையும் பாத்திரமாக்கிக் கதைசொல்லும் தன்மைக் கூற்றுக் கதைசொல்லலில் இத்தகைய குறைகள் தவிர்க்கமுடியாதவை.

*************** 2015-11- 09

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றல், கற்பித்தல், திட்டமிடுதல்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்