நாடகம் என்றால் என்ன? “ராமசாமி கந்தசாமியாக நடிப்பதை முத்துசாமி பார்த்துக் கொண்டிருப்பது தான் நாடகம். நாடகத்தை அதன் மற்ற அலங்காரங்களையெல்லாம் களைந்துவிட்டு சாராம்சமான விஷயம் எது என்று பார்த்தால் இது தான் நாடகம்“ நான் வாசித்த நோ்காணல் ஒன்றின் முதல் கேள்வியும் அதற்கான பதிலின் தொடக்கமும் இது. (நோ்காணல் செய்யப்பட்டவர்; கே. எஸ். ராஜேந்திரன், டெல்லி, தேசிய நாடகப் பள்ளியின் முன்னாள் மாணவா், இந்நாள் ஆசிரியா். நோ்காணல் செய்தவா்; சி. அண்ணாமலை, பத்திரிகையாளா்) இதில் பதிலை விடவும் கேள்வியை முக்கியமானதாகக் கருதவேண்டியுள்ளது. இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் பல நூறாண்டு வரலாறுகள் கொண்ட தமிழா்களுக்கு அடிப்படைகள் குறித்த வினாக்கள் இன்னும் இருக்கின்றன. நாடகவியலில் மட்டுமே இந்த நிலை என்று எண்ணிவிட வேண்டாம். இசை என்றால் என்ன? இலக்கியம் என்றால் என்ன? அதற்குள் கவிதை என்றால் என்ன? என்ற கேள்விகள் மறுபடியும் கேட்கப்படுகின்றன. அக்கேள்விகளுக்குப் பழைய பதில்களுக்குப் புதிய பதில்களும் சொல்லப்படுகின்றன. இத்தகைய கேள்விகள் கேட்கப்படுவதும், விடைகள் சொல்லப்படுவதும் அரிச்சுவடியாக அல்லது அபத்தமாகப் பலருக்கு தோன்றலாம்.