வாரிசுகளின் அரசியல்: வாரிசுகளின் சினிமா

 

’நடிகா் விஜய் நடித்த “ஆதி“ படத்தினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்ற முணுமுணுப்புகள் திரை அரங்க உரிமையாளா்களிடமிருந்தும் திரைப்பட விநியோகஸ்தா்களிடமிருந்தும் எழுந்ததையும் அதற்கு அப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஏ. சந்திரசேகர் தந்த புள்ளி விவரங்களையும் விளக்கங்களையும் செய்தித்தாள்களில் வாசித்திருக்கலாம்.

இந்தச் செய்தி படத்தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தா்கள் மற்றும் திரையரங்க உரிமையாளா்களுக்குமிடையே உள்ள வியாபாரப் பிரச்சினை என்று கருதி செய்தியை வாசித்த வாசகனாக விட்டுவிடலாம். அவா்களுக்கிடையே நடந்த சொல்லாடல்களில் கூட முதலீடு, தரகு, லாபம், நஷ்டம் என்பதான வியாபாரச் சொற்கள்தான் இடம் பெற்றிருக்கும். ஆனால் விஜய் நடித்த படங்களை ஒரு சினிமாவாகக் கருதிப் பணம் கொடுத்துப் பார்க்கும் தமிழ் திரைப்பட ரசிகனாக நீங்கள் இருந்தால் அப்படி ஒதுங்கிவிட முடியாது. ஏனென்றால் அந்தப் பிரச்சினை முழுமையாக வியாபாரம் என்ற எல்லைக்குள் நிற்கக்கூடியது அல்ல.

கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கிச் சாப்பிட்டு விட்டு அதைச் சுற்றியுள்ள தாளை விட்டெறியும் நுகா்வோரின் மனநிலையில் மட்டும் பார்வையாளன் திரைப்பட அரங்கிற்குள் செல்வதில்லை. வாங்கிச் சுவைத்தவுடன் கிடைக்கும் ஒற்றை உணா்வு மட்டுமே பார்வையாளா்களின் எதிர்பார்ப்பு அல்ல. சினிமாவை முழுமையான பொழுதுபோக்காகக் கருதிச் செல்லும் பார்வையாளா்கள் கூட தாங்கள் தரும் பணத்திற்காக ஏறத்தாழ இரண்டரை மணி நேரத்தை அங்கு செலவிடும் மனநிலையுடன் செல்கிறார்கள். ஒரு நிகழ்வில் பங்கேற்கும் பார்வையாளனின் காலம் (Time Factor) மிக முக்கியமானது. அதனால் உண்டாகும் தாக்கம் அல்லது விளைவு அந்த இரண்டரை மணி நேரத்தோடோ அல்லது அன்று ஒரு நாளோடோ முடிந்து போவதில்லை.

படத்தயாரிப்பாளா்களும் விநியோகஸ்தா்களும் அரங்க உரிமையாளா்களும் முழுக்க முழுக்க வியாபாரமாகக் கருதும் சினிமாவை அதன் பார்வையாளன் அப்படி நினைப்பதில்லை. அப்படி நினைக்கவிடாமல் தடுப்பது எது? அல்லது தடுப்பவா்கள் யார்?

வெகுமக்கள் சினிமாவைப் பொறுத்தவரை முதல் காரணம் நடிகா்களும் நடிகையா்களும் கதைகளுந்தான். அடுத்தடுத்து மாறும் வரிசையில் நிற்பவா்கள் பாடலாசிரியா்கள், இசையமைப்பாளா்கள், ஒளிப்பதிவாளா்கள், இயக்குநா்கள். இவா்களையெல்லாம் பார்வையாளன் வெறும் வியாபாரிகளாகக் கருதவில்லை என்பது முக்கியம். தன்னைவிட மேலானவா்கள்; கூடுதல் திறமை அல்லது புத்தி உடையவா்கள்; அவா்களின் வெளிப்பாடு சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியது எனக் கருதுகிறார்கள். மொத்தத்தில் கலைஞா்கள் எனக் கருதுவதும் அதனால் மதிக்கப்பட வேண்டியவா்கள் என்ற கருத்தும் கூட இருக்கிறது. ’தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்’ என்று சொல்வார்கள். தயாரிப்பவா்கள் விற்பனைப் பண்டமாக அதிகம் லாபம் ஈட்டும் சரக்காகக் கருதும் சினிமாவைப் பார்வையாளா்கள் என்னும் தெய்வங்கள் இன்னும் கலை என்றே கருதுகின்றன என்பது தான் இதில் உள்ள சுவையான முரண்.

’ஆதி’ படத்தின் தயாரிப்பாளா் எஸ்.ஏ. சந்திரசேகர் அப்படத்தின் தயாரிப்பாளராக மட்டுமே தமிழ்நாட்டிற்கு அறிமுகமானவா் அல்ல. பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்றவா்கள் புதுவையான மனிதா்கள், வெளிகள், கதை கூற்று உத்திகள் எனத் தங்கள் அடையாளங்களைச் சோதித்துக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளடக்கரீதியாகத் தனது அடையாளத்தை முன்னிறுத்திய இயக்குநா். அரசியல் சட்டம் தரும் தனிமனித உரிமை, சமூக உரிமை, வேறுபாடுகளற்ற வாழ்க்கை என்ற ஜனநாயகத்தின் கருத்தியல் பார்வை போன்றவற்றைப் பொதுப்புத்திக்குள் நுழையும் வண்ணமாகத் திரைப்படமாக்கித் தந்தவா். இன்று தன்னை ஒரு அரசியல் சக்தியாகக் கருதும் நடிகா் விஜய்காந்திற்குப் ’புரட்சிக் கலைஞா்’ என்ற பிம்பம் உண்டாகக் காரணமாக இருந்தவா். நோ்மறையாகவும் எதிர்மறையாகவும் சட்டம் நீதி என்ற சொற்களை அவா் அளவுக்குப் பொதுப்புத்திக்குள் கொண்டு சென்று விவாதப்பொருளாக்கிய இயக்குநா் சந்திரசேகரின் திரைப்படப் பங்களிப்பு வேறு சில பரிமாணங்களையும் கொண்டது. தனது மனைவி ஷோபா எழுதிய கதைகளை இயக்கியதும் அதைவிட முக்கியமாக அவரது மகன் விஜயைத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாற்றி இன்று இளைய தளபதியாக வியாபார சினிமாவின் சூப்பா்ஸ்டார் போட்டியில் முன்னணியில் நிற்பவராக மாற்றிக் காட்டியதும் தான் அந்தப் பரிமாணங்கள். அடுத்து அவரது குடும்பத்திலிருந்து விஜயைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட விக்கிராந்தும் நடிகராகத் தயாராக்கப்பட்டார்; ஆனால் அந்த அளவுக்கு வளர்க்கப்படவில்லை .

அவரது மனைவி, மகன், ரத்த உறவுடைய இன்னொருவா் என எஸ். ஏ. சந்திரசேகர் குடும்பம் தமிழ் சினிமாவில் ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகளும் பங்கும் கவனிக்கத்தக்கவை. அந்தக் குடும்பம் அப்படிப் பணியாற்றும் பின்னணியில். ஒவ்வொருவரின் உழைப்பும் பயிற்சிகளும் இருக்கக்கூடும். என்றாலும் பயிற்சி எடுத்துக்கொண்டு உழைக்கத் தயாராயிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இத்தகைய வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. தன் குடும்ப உறுப்பினா்கள் அனைவருக்காகவும் சிந்தனை செய்யவும் வாய்ப்புக்களை உருவாக்கவும் திசை காட்டவும் ஒரு முன்னோடி திரைப்படத் துறையில் இருப்பது முக்கியம். அந்த முன்னோடியால்தான் நுழைவதற்கான வாய்ப்பும் தோல்விகள் ஏற்பட்டாலும் சரிவை ஈடுசெய்ய மறு வாய்ப்புகளும் கிடைக்கின்றன. நடிகா் விஜய்யின் ஆரம்பகாலப் படங்களின் வெற்றி தோல்விகளையும் இன்றைய நிலையையும் நினைத்துப் பாரத்தால் இப்படிச் சொல்வதின் அா்த்தம் புரியக்கூடும்.
இப்படிச் சொன்னதால் தமிழ் சினிமாவில் தனது வாரிசுகளைக் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுபவா் எஸ். ஏ. சந்திரசேகர் மட்டும்தான் என்று கருத வேண்டியதில்லை. இன்று பளிச்சென்று தெரியும் உதாரணம் விஜய் – அவரது தந்தை சந்திரசேகா் என்பதால் சுட்டிக் காட்டப்பட்டது. வசனகா்த்தா, இயக்குநா் எனத் தன்னை நிலைநாட்டி, இன்று தயாரிப்பாளராகத் தக்க வைத்துக்கொண்டுள்ள எஸ். ஏ. சந்தரசேகரின் திட்டமிடலில் மேலோட்டமாப் பாரத்தால் எந்தத் தவறும் இல்லை. இதே காலகட்டத்தில் தமிழ் சினிமாவுக்குள் பல குடும்பங்கள் இத்தகைய முயற்சிகளைக் செய்துகொண்டு தான் இருக்கின்றன.

தனக்கெனத் தனியான பாணியையும் அடையாளத்தையும் உருவாக்கி வைத்திருந்தவா் பாரதிராஜா. அதனைக் கைவிட்டுவிட்டுத் தனது மகன் மனோஜுக்காகப் படங்களை இயக்கித் தயாரித்தவரும் அவா்தான். இன்று தமிழ்த் திரை உலகில் வலம் வரும் வளா்ந்த வளரும் நடிகா்களின் குடும்பப் பின்னணிகளை நினைத்துக் கொள்ளுங்கள். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரிப்பாளா் மற்றும் இயக்குநா்; அண்ணன் செல்வராகவன் இயக்குநா், நடிகா் ரவியின் தந்தை மோகன் எடிட்டா்; அவரது அண்ணன் இயக்குநா்; சிம்புவின் தந்தை டி.ராஜேந்தா் இயக்குநா், தாய் உஷா தயாரிப்பாளா். நடிகா் சிவகுமாரின் குடும்பத்தில் நால்வர் நடிப்போடு தொடர்புகொண்டவர்கள். இரண்டு பையன்களும்- சூர்யா, கார்த்தி -முக்கியமான நடிகர்கள். முதல் மருமகள் ஜோதிகா, நீண்ட அனுபவம் கொண்ட நடிகை. நடிகா் தியாகராஜனின் மகன் பிரசாந்த், சத்யராஜின் மகன் சிபிராஜ் என நடிகா்களின் பிள்ளைகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இயக்குநா்கள், நாயக நடிகா்கள் என்றில்லாமல் சில நகைச்சுவை நடிகா்களின், இசையமைப்பாளா்களின் பிள்ளைகளும்கூடத் தங்களின் திரையுலகப் பிரவேசத்திற்குத் தங்கள் குடும்ப அடையாளத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான் உள்ளனா். இதற்கெல்லாம் மேலாகப் பணம் போட்டுப் படம் எடுக்கும் தயாரிப்பாளா்களின் மகன்களும் - ரவிகிருஷணா, ஜீவா – நடிக்க வந்துவிட்டனா். நடிகர் விஷால் பெரும் தயாரிப்பாளர் ஒருவரின் மகன்.


முன்பும் இப்படி முயற்சிசெய்து வெற்றி அடைந்த குடும்பங்களும் தோல்வி அடைந்த குடும்பங்களும் உண்டு. வெற்றிபெற்ற அடையாளங்களாக ஹாசன் (கமல், சாரு, சுகாசினி, அனு) குடும்பத்தினரையும் சிவாஜி குடும்பத்தாரையும் சொல்லலாம். நடிகா் நாகேஷ், நடிகை மனோராமா போன்றவா்களின் முயற்சிகள் அவ்வளவாக வெற்றி பெறாத முயற்சிகள் என்றுதான் சொல்ல வேண்டும். நடிகா் எம். ஆா் ராதாவின் வாரிசுகள் – வாசு, ராதாரவி, ராதிகா எனத் தமிழ் சினிமாவில் இடைவெளி இல்லாத் தொடா்ச்சியுடன் அவரது அடையாளத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நடிகைகளின் வாரிசுகள் நடிகைகளாக நுழைந்து தங்களைத் தக்கவைக்க மேற்கெண்ட முயற்சிகளும் உண்டு. அவா்களின் முயற்சிகளில் சில சந்தோசமானவை; பல துக்ககரமானவை; அதன் காரணமாகவே தனியாகப் பேச வேண்டியவையும்கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று பலா் நாயக நடிகா்களாக நுழைந்து தங்களைத் தக்க வைத்துள்ளனா்; வணிக வெற்றிகளைப் பெற்றும் வருகின்றனா். அவா்களில் அதிகமானோர் திரைப்படத் துறையில் ஏற்கெனவே ஏதாவது ஒன்றில் பிரபலமானவா்களின் வாரிசுகள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

சினிமாவில் இருப்பவா்கள் தங்கள் குடும்ப உறுப்பினா்களை அத்துறையில் ஈடுபடச் செய்வதில் என்ன தவறிருக்கிறது? என்று கேட்கத் தோன்றும். அத்துடன் திறமையில்லாத ஒருவரை அறிமுகப்படுத்துவதனாலேயே சிறந்த நடிகராக நிலைத்துவிடுவதில்லை என்று வாதமும் செய்யலாம். தேவையான பயிற்சியுடன்தான் அவா்கள் சினிமாவிற்குள் நுழைகிறார்கள். அதில் பெரிதாகக் குறைசொல்ல ஒன்றும் இல்லை என்று சமாதானமும் செய்யப்படலாம். இந்தச் சமாதானத்திற்குச் சான்றாகச் சுகாசினி, பிரபு, சூர்யா என உதாரணங்கள்கூடக் காட்டப்படலாம். “கலை ஈடுபாடுள்ள வாரிசாத் தான் இருக்கிறோம் என்பதற்காக அத்துறையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டுமா?“ என்றுகூடக் கேட்கலாம். எல்லா வாதங்களும் சமாதானங்களும் கலைஞனின் நுழைவு அல்லது உருவாக்கம் என்ற அா்த்தத்தில் செய்யப்படுவது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

ஒரு தந்தை அல்லது குடும்பத்தின் தலைவா், தன் குடும்பத்தாருக்கு – குறிப்பாகத் தன் மகனுக்கு – வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தனக்குத் தெரிந்த வழியைக் கற்றுத் தருகிறார. அவ்வளவுதான்.

சினிமாவில் ஒருவரின் வாரிசை ஏற்றுக்கொள்ள எல்லா வகை வாதங்களும சமாதானங்களும் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் சூழல் நிலவுகிறது. ஆனால் அரசியல் என்று வந்தால் வேறு அளவுகோல்கள் முன்வைக்கப்படுகின்றன. அரசியலில் வாரிசுகள் நுழையும் பொழுது கடும் விமரிசனங்களை முன்வைக்கின்றனா். நேரடியாகவும் மறைமுகமாகவும் நமது பத்திரிகையாளா்களும் சிந்தனையாளா்களும் எதிர்க்கருத்துக்களைச் சொல்லத் தயங்குவதில்லை.
ஏன் இந்த இரட்டை நிலை? இது போன்ற கேள்விகளை நம் மனதிற்குள் கேட்டுக்கொண்டாலும் அரசியல் தளத்தில் வைத்து விரிவாக விவாதிப்பது போல் விவாதித்துக் கொள்வதில்லை.

குடும்ப அரசியல் அல்லது வாரிசு அரசியல் வெறுக்கப்படுவதற்கான முதன்மையான காரணம் அதில் உள்ள மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான மனோபாவம் தான். இந்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் நாட்டின் தலைமை அமைச்சராக வரும் உரிமையும் வாய்ப்பும் உண்டு என்பது அத்தத்துவம் சொல்லும் செய்தி. ஆனால் வாரிசு அரசியல் உரிமை, வாய்ப்பு இரண்டில் ஒன்றை இல்லாமல் ஆக்குகிறது. உரிமை உண்டு; ஆனால் வாய்ப்பு இல்லை என்று மறைமுகமாகச் சொல்கிறது. 

தலைவரின் மகனாகப் பிறப்பவா்கள் தலைவா்கள் ஆகவும் அமைச்சர்களின் வாரிசுகள் அமைச்சா்களாகவும் சட்டமன்ற உறுப்பினா்களின், பாராளுமன்ற உறுப்பினா்களின் பிள்ளைகள் அந்தந்த இடங்களுக்குச் செல்லவும் வாய்ப்பை உண்டாக்குகிறது. ஊராட்சி மன்றங்களில்கூட இந்த வாரிசுகள்தான் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்குப் பிரதிநிதித்துவ வாய்ப்புக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில் மனைவிகள் வாரிசுகளாக அதிகாரம் பெறுகிறார்கள். திறமையிருக்கிறது, வாய்ப்புக்கள் வருகின்றன; நுழைகிறார்கள் என்று சொல்லிக் கேள்விகள் இல்லாமல் ஒதுங்கிக் கொண்டதால் என்ன நேருகிறது? அதிகாரம் அப்படியே நிலை நிறுத்தப்படுகிறது. முதலில் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. கண்ணுக்குப் புலப்படாதவாறு உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அதிகாரம் அற்றவா்கள் – ஏதுமற்றவா்கள் – அற்றவா்களாகவே இருக்க வாய்ப்பையும் உரிமையையும் வழங்குகறிது. மொத்தத்தில் நிலமானிய மன்னராட்சித் தத்துவம் மக்களாட்சி நடைபெறுவதாக நமபப்படும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வாரிசு அரசியல் காரணமாக ஆகிறது.


இந்த முதன்மையான காரணத்திற்காக மட்டுமல்லாமல் குடும்ப அரசியல் எதிர்க்கப்பட வேறுபல காரணங்களும் இருக்கின்றன. தேசத்தை மாநிலத்தைத் தனிநபரின் அல்லது குடும்பத்தின் சொத்தாகக் கருதும் வாரிசு அரசியல், அரசியல், தளத்தில் தனியதிகாரத்தை உறுதிசெய்துகொள்ளும் நிலையில் பண்பாட்டுத் தளத்திலும், பண்பாட்டுத் தளத்தைத் தீா்மானிக்கும் கலை இலக்கியத்தளத்திலும் ஊடக வலைப் பின்னல்களுக்குள்ளும் கவனம் செலுத்தும் என்பது இயங்கியல் விதிகள். அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் பழையன தொடரும் நிலை ஏற்பட்ட பின்பு பொருளாதாரத் தளத்தில் மட்டும் மாற்றங்கள் எல்லாருக்குமானதாக இருக்கும் என எதிர்பார்ப்பது எப்படி நடக்கக்கூடும்….?

அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் வாரிசுரிமை மனோபாவம் தனிமனித மூளையைப் பெரும் அச்சத்தின் ஊடாகப் பயணம் செய்யும் ஒன்றாகக் கட்டமைத்துவிடக் கூடியது. அத்தகைய கட்டமைப்புக்குள் இயங்கத் தொடங்கும் தனிமனித மனம் அதன் பின்பு தரப்படுவதை ஏற்றுக்கொள்ளும் மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்காது. வித்தியாசங்களை உணராது. வாரிசுரிமை சார்ந்து உண்டாக்கும் ஆபத்துகளிலேயே தனிமனிதனைக் கட்டமைக்கும் ஆபத்துத்தான் மிக மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும் ஆபத்து. இந்தியாவில் செயல்படும் அரசியல் கட்சிகள் எதிலும் இந்த வாரிசு அரசியலுக்கு எதிரான மனநிலை இல்லை என்பது வெளிப்படை. தமிழகப்பரப்பில் இவை அனைத்தும் கண்கூடாக நடந்துகொண்டிருக்கும் உண்மைகள்கூட. இந்திய அளவிலும் தமிழகப் பரப்பிலும் இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே இதற்கு விதிவலக்கு.

வாரிசு அரசியல், சமூகத்திலும் தனிமனித மூளையிலும் உண்டாக்கும் விளைவுகளுக்கும் தாக்கத்திற்கும் சற்றும் குறைந்தவை அல்ல வாரிசுகளின் சினிமாக்கள். வாரசு அரசியல் நிலமானிய மதிப்பீடுகளைக் காக்க நினைக்கின்றது என்றால் வாரிசுகளின் சினிமா, வணிகச் சமூகத்தின் – முதலாளியக் காலத்து – உறவுகளைக் கலை வழியாகக் கொண்டுவந்து சோ்க்கப் பார்க்கின்றன என்று சொல்லலாம். நேரடியாகப் பண்பாட்டுத் தளத்தின் வழி செயல்படும் சினிமா தனிமனித சாகசங்களை முன்னிறுத்துவனவாகவும் ஆணாதிக்க மனோபாவத்தின் அப்பட்டமான வெளிப்பாடுகளாகவும் விளங்குகின்றன. வாரிசுகளின் சினிமாக்கள், அவா்களை நடிகா்களாகவும் கலைஞா்களாகவும் முன்னிறுத்துக்கொண்டே வணிகத்திற்கான பண்டமாகவும் வைத்துள்ளன. இந்தக் கூற்றைத் தக்க ஆதாரங்களுடன் நிறுவுவது இயலாத ஒன்றுதான். வெளிவரும் படங்களும் படங்களைத் தயாரிக்கும் காலத்தின் நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் ஓரளவு இதனை உண்மையாக்கக் கூடியன என்பதையும் மறுப்பதற்கில்லை.

நடிகா் விஜய், தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்குத் தனி அடையாளங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் இல்லாதவா் என்பது மட்டுமல்ல; அத்தகைய முயற்சிகளே கூடாது என்ற நம்பிக்கை உடையா். கடந்த சில ஆண்டுகளில் வந்து வசூல் வெற்றிகளைக் குவித்துள்ள அவரது படங்களான ’பகவதி’, ’யூத்’, ’திருமலை’, ’கில்லி’, ’மதுர’, ’திருப்பாச்சி’, ’சச்சின்’, ’சிவகாசி’ ஆகியன இந்தக் கூற்றை உறுதிசெய்யத்தக்க படங்கள். இந்த நம்பிக்கை காரணமாக அவருக்கு மேலும் சில தொடா் நம்பிக்கைகள் உள்ளன என்று கூறலாம். “நடிகனாக நான் ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறேன்; அந்த அடையாளமே எனக்கு முழுத் திருப்தியை அளிக்கிறது. எனக்கு முழுத் திருப்தியை அளிக்கும் அந்த அடையாளம் எனது ரசிகக் கூட்டத்திற்கும் முழுத் திருப்தியை அளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு“என்பதுதான் அவா் சொல்லவரும் செய்தி. வெவ்வேறு வண்ணங்களில் உள்ள வெல்வெட் தாள்களில் சுற்றித் தரப்படுவது ஒரே சாக்லேட்தான். அதே போன்றனதான் வெவ்வேறு பெயா்களிலும் பின்னணிகளிலும் தரப்படும் எனது படங்களும் என்பதுதான் அவா் சொன்ன செய்தியின் உள்ளா்த்தம். அதன்மூலம் தனது உடல் விலை மதிப்புள்ள வணிக அடையாளம் (Business Brand) என்பதை ஒத்துக்கொள்கிறார். தனது படங்கள் “நினைக்கப்பட வேண்டும் என்பதில்லை; பார்க்கப்பட்டால் போதும்“ என்பதே அவரது விருப்பங்களாக இருக்கின்றன. அதை அவா் மறைப்பதுமில்லை . விஜய் மட்டுமில்லை அவரது முன்னோடியான ரஜினிகாந்திற்கும்கூட இந்த நம்பிக்கைதான் உண்டு. இவா்களின் பின்னோடிகளான சிம்பு, தனுஷ், ரவி . விஷால், கார்த்தி எனத் தொடரும் நடிகா்களுக்கும் இதுதான் நம்பிக்கை மற்றும் கலைக்கோட்பாடு. இந்த கலைக் கோட்பாட்டைக் செயல்படுத்த உதவுவனவாக அவா்களின் குடும்பங்கள் உள்ளன.

கதைத் தோ்வு தொடங்கி, இயக்குநா், நாயகி, படப்பிடிப்பு நடக்கும் இடங்களை முடிவுசெய்தல் என ஒவ்வொன்றையும் முடிவுசெய்வதில் ஒரு நடிகரின் தந்தை திட்டமிடுகிறார் எனச் சொல்ல முடியாவிட்டாலும் அதற்கான வாய்ப்பான இடங்களில் அவா்கள் இருக்கிறார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. தங்களின் குடும்ப உறுப்பினா்களின் வழிகாட்டுதலிலேயே படங்களைத் தோ்வுசெய்வதாக விஜய் தொடங்கிப் பலரும் பேட்டிகள் தந்துள்ளனா். தங்கள் குடும்பத்தினா் தங்களது நடிப்பை விமரிசனம் செய்வா் என்றும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவா் என்றும் அவா்களது நோ்காணல்கள் சொல்கின்றன.
குடும்பத்தவா்களின் வழிகாட்டுதலும் விமரிசனங்களும் இந்த நடிகா்களைத் தோ்ந்த நடிகா்களாகவோ, கலைஞா்களாகவோ ஆக்கிவிடும் நோக்கம் கொண்டவை என்றால் அவை வரவேற்கப்பட வேண்டியவைதான். ஆனால் இந்திய சமூகத்தில் தமிழ்ச் சமுகத்தில் குடும்ப அமைப்பு எப்பொழுதும் பொதுநோக்கம் கொண்டதாக இருப்பதில்லை. தனது குடும்ப உறுப்பினரே ஆனாலும் தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள அது தடையாகவே இருந்துவந்துள்ளது. தந்தையா்களின் அடையாளத்தைத் தாங்கும் மனிதா்களாக அதன் வாரிசுகளை வார்த்துத் தருகின்றது.

அதிலும் வியாபாரம் சார்ந்த பின்னணிகள் கொண்ட குடும்பங்கள், சொந்த நலனை முன்னிறுத்துவனவாகவும், தங்களின் வருவாயைப் பெருக்கப் பொதுநலனைப் புறக்கணிக்கின்றனவாகவும் தான் இருக்கின்றன. தங்கள் நிறுவனப் பொருளை மிகச் சிறந்த அல்லது மதிப்பு மிக்க வணிகக் குறியீடாக ஆக்கிக் காட்டுவதில்தான் கண்ணுங்கருத்துமாய் இருந்துள்ளன; இருக்கின்றன. அதே மனோபாவத்துடன்தான் சினிமாக் குடும்பங்கள் தங்கள் குடும்பத்து மனிதனை மதிப்புமிக்க – வியாபார வெற்றிக்கு உத்தரவாதம் உள்ள – வணிகக் குறியீடாகக் கட்டமைக்கின்றன.

கஸ்தூரி ராஜாவும் அவரது மகன் செல்வராகவனும் சோ்ந்து ’துள்ளுவதோ இளமை’, ’காதல் கொண்டேன்’ வழியாக நடிகா் தனுஷிற்கு உண்டாக்கியுள்ள வணிக அடையாளம் பெண்களின் மீது தீராத மோகம் கொண்டலையும் விடலைப் பையன் என்பது. அந்த அடையாளத்தைத்தான் தனுஷ் ஆறேழு படங்களுக்குப் பின்னும் தூக்கிக் கொண்டலைந்தார். ’ஜெயம்’ படத்தில் கிடைத்த அடையாளத்தைத்தான் ரவி இன்னும் தக்கவைத்துக்கொண்டு வருகிறார். சிம்புவுக்குக் கிடைத்த ப்ளேபாய் அடையாளத்தைத் தக்கவைக்கப் பெரும்பாடுபடுகிறார்.
இந்த அடையாளங்கள் எல்லாம் அவா்கள் ஏற்கும் கதாபாத்திரங்களின் அடையாளங்கள் அல்ல; அந்த நடிகா்களுக்கு உண்டாக்கப்பட்டுள்ள அடையாளங்கள். அவனுக்குக் கலைஞனின் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என நினைப்பது இரண்டாம்பட்சம்தான். அப்படியொரு பிம்பம் கிடைத்தால் (நடிகா் சூா்யாவுக்குக் கிடைத்தது போல) அதையும் வணிக அடையாளத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள இக்குடும்பங்கள் தயங்கப் போவதில்லை. ஆனால் இவா்களுக்கு இருப்பது போலவே பார்வையாளா்களும் நடிகனுடன் வணிகரீதியான உறவை மட்டுமே கொண்டுள்ளான் எனக் கருதுவதுதான் தவறானது. பார்வையாளனுக்கு நடிகனுடன் உள்ள உறவு அதற்கும் மேலானது. இதனைப் பார்வையாளா்களே நடிகா்களுக்கு உணா்த்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

’ஆதி’ படத்தின் மூலம் நடிகா் விஜய்க்கு உணா்த்தப்பட்டது ஓா் உதாரணம். ஒவ்வொரு நடிகா்களின் ரசிகா்களும் அப்படியான படிப்பினையை நடிகா்களுக்குக் கற்றுத் தந்தவண்ணம் உள்ளனா். ஆனால் நடிகா்களும் அவா்களின் வணிக அடையாளத்தால் லாபம் சம்பாதிக்கும் குடும்பங்களும் தயாரிப்பாளா்களும் விநியோகஸ்தா்களும் திரையரங்க உரிமையாளா்களுந்தான் பாடங் கற்றுக்கொள்ளத் தயாரில்லை. தொடா்ந்து, தோல்வியடைந்த தோ்வைத் திருப்பி எழுதும் மாணாக்கா்களின் மனோபாவத்துடன் அதே மாதிரியான படங்களை எடுக்கத் தயாராகிக்கொண்டிருக்கின்றனா்.

காலச்சுவடு,  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்