ந.முத்துசாமி-புஞ்சைக்கும் புரிசைக்குமிடையே அலைந்த மனம்
தற்செயலான ஒத்துப்போகும் ஒன்று’ என விட்டுவிடத் தக்கதுதான் என்றாலும் சொல்லவேண்டிய ஒன்று. உறவினர்களின், நண்பர்களின் மரணச்செய்திகள் வருவதற்குச் சற்று முன்போ, வரும் நேரத்திலோ மரணிப்பவர்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருப்பது நடக்கிறது. மரணம் குறித்த மனத்தின் முன்னறிவிப்பில் பெரிதான அமானுஷ்யம் ஒன்றும் இல்லையென்றாலும் முன்னுணர்த்துவது அச்சமூட்டும் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது.
ந.முத்துசாமியின் மரணச்செய்தியைச் சொல்வதற்காக கவி. மனுஷ்யபுத்திரன் தொலைபேசியில் அலைத்தபோது (24,அக்டோபர், பிற்பகல் 12.51) ந.முத்துசாமியின் முதல் நாடகத்தை வெளியிட்ட சி.சு.செல்லப்பாவின் எழுத்துப் பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு குறித்துக் கருத்தரங்கொன்றில் பேசிக்கொண்டிருந்தேன். [ஊடகங்களும் இலக்கியமும் என்னும் தலைப்பில் சாகித்திய அகாதெமி, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக மையத்தோடு இணைந்து நடத்திய கருத்தரங்கில் விடுதலைக்குப் பின்னான இலக்கிய இதழ்கள் என்ற தலைப்பில் எனது உரை] செல்லப்பாவையும் முத்துசாமியையும் நன்கறிந்த பத்திரிகையாளர் மாலன் என் முன்னால் முதல்வரிசையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்.
தமிழ் நவீன அரங்கவியலின் அடையாளமாகத் தன்னை முன்வைத்த ந.முத்துசாமியை நினைத்துக்கொள்ளவும் விரித்துப்பேசவும் கொண்டாடவும் பலப்பல சந்திப்புகளும் மேடையேற்றங்களும் பிரதிகளும் விழாக்களும் உரைகளும் இருக்கின்றன. அவரை முதன்முதலில் சந்தித்துப் பேசிய இடம், நாள் நினைவில் இல்லை. அவரது முதல் நாடகமான காலம் காலமாக என்னும் பிரதியைப் பார்த்ததும் விவாதித்ததும் நினைவில் இருக்கிறது. பட்டப்படிப்புக் காலத்தில் வெங்கட் சாமிநாதனின் விமரிசனக் கட்டுரைகள் வழியாகத் தெரிய வந்த அந்நாடகத்தை முதன் முதலில் பார்த்த இடம் மதுரை காந்தி ம்யூசியத்தின் திறந்த வெளி அரங்கின் பின்புறம். மதுரை நிஜநாடக இயக்கத்தின் நடிகனாகப் பங்கேற்ற நாடகங்கள் பலவற்றையும் விட அவரது காலங்காலமாக நாடகம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அரசியல் சொல்லாடல்களை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் சார்ந்து அரங்கியலுக்குள் வந்த எனக்கு, அவரது நாற்காலிக்காரர் தொகுப்பு எப்போதும் விருப்பத்திற்குரிய ஒன்றாகவே இருந்துள்ளது.
அவரது முதல் நாடகமான காலம் காலமாக குறித்து அவரது குருவான சி.சு.செல்லப்பாவோடுவும் விவாதித்திருக்கிறேன். தமிழ்ப் புதுக்கவிதைகளை வாசிக்கும் வித்தையைக் கற்றுத் தந்த பேரா.சி. கனகசபாபதி, சி.சு. செல்லப்பாவின் நண்பர். எழுத்துவில் புதுக்கவிதைகளுக்குள் இருக்கும் மரபு அடையாளங்கள் குறித்து விரிவாக எழுதியவர். அவரைப் பார்க்கவந்த செல்லப்பாவிடம் என்னை அறிமுகம் செய்த சி.க., நவீன இலக்கியத்தில் ஆர்வமுடைய மாணவர் என்று சொன்னதோடு, மு.ராம்சாமியின் நிஜநாடக இயக்கத்திலும் இருக்கிறார் என்றும் சொன்னார். சொன்னவுடன் சி.செல்லப்பா, ந.முத்துசாமியின் நாடகங்களை வாசித்ததுண்டா? என்று கேட்டார். எழுத்துவில்தான் அவரது முதல் நாடகமான காலம் காலமாக அச்சானது என்றும் சொன்னார்.‘ஆமாம். துறையில் இருக்கும் எழுத்து தொகுப்புகள் வாசித்திருக்கிறேன்; கதையாக எழுத வேண்டியதை நாடகமாக எழுதியிருக்கிறார்’ என்று சொன்னேன். “அவன் நல்லா கதைகளும் எழுதுவான்; கதைகளின் மொழி வேறுமாதிரி இருக்கும்” என்று சொன்னார். அதன் பிறகே அவரது கதைகளையும் வாசித்தேன். சி.சு.செல்லப்பாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே நடையை அவரது நண்பர்களோடு சேர்ந்து ந.மு. ஆரம்பித்தார் எனவும் நடையிலும் கசடதபற கதைகளும் நாடகங்களும் எழுதியிருக்கிறார். அவரது நாடகங்களையும் நாடகங்கள் மற்றும் அரங்கவியல் குறித்த கட்டுரைகளையும் எழுபதுகளின் கடைசியிலும் தொண்ணூறுகளின் முற்பகுதியிலும் வந்த யாத்ரா, வைகை போன்ற சிற்றிதழ்களிலும் கணையாழி, சுந்தர ராமசாமியின் காலச்சுவடு, வெளி போன்ற இதழ்களும் வெளியிட்டன. தொடர்ச்சியாக வாசித்து அவரது தெருக்கூத்தின் மீதான ஈடுபாட்டின் பின்னால் இருந்த தமிழ் அடையாள அரங்கை உருவாக்கும் நோக்கம், புரிந்துகொள்ள முயன்றேன்
82 வயதைத் தாண்டிவிட்ட ந.முத்துசாமி (1936,மே 25 –2018, அக்டோபர் 24) , அதில் பாதியை நாடக இலக்கியத்தோடு தொடர்புபடுத்தி வாழ்ந்திருக்கிறார். 2011 வரை அவர் எழுதிய நாடகங்கள் 21. சிறுகதை எழுத்தாளராகத் தொடங்கியவர் முழுநேர நாடகக்காரராக ஆகும்பொருட்டு 1977 இல் கூத்துப்பட்டறை என்னும் அரங்கியல் நிறுவனமொன்றைத் தொடங்கினார். அந்நிறுவனம் அரங்கியல் செயல்பாடுகளுக்காக நிதிவழங்கும் அரசு மற்றும் தனியார் அமைப்புகளிடமிருந்து அவ்வப்போது நிதியுதவி பெற்று அரங்கச் செயல்பாட்டைத் தொடர்ச்சியாகச் செய்துவந்தது. சென்னை மாநகரத்தின் மிகச்சிறிய அசைவுகளில் ஒன்றாக ஆரம்பித்த கூத்துப்பட்டறை தற்போது அதனிடமிருந்து பயிற்சிபெற்றுக் கிளம்பிய நடிகர்களின் மூலம் தமிழ்ச் சினிமாவின் பரப்பிற்குள்ளும் அறியப்படுகிறது.
நாடக எழுத்தோடு எந்தவித உறவும் இல்லாதவை அவரது சிறுகதைகள். தி.ஜானகிராமன் வழியாக அறிமுகமாகியிருந்த காவிரிக்கரைக் கிராமமாக இல்லாமல் உள்ளொடுங்கிய கிராமத்தை முத்துசாமியின் எழுத்து அறிமுகம் செய்தது. கவித்துவமான வர்ணனைகள் வழியாக அவரது சொந்த ஊரான புஞ்சையின் மண்ணையும் நீளும் பாதைகளையும், பிரிந்து கிடக்கும் நிலப்பரப்பையும் கண்முன் விரிப்பனவாக எழுதியிருப்பார். வாய்க்கால்கள், வரப்புகள், வண்டிப்பாதை என விரியும் பரப்பில் கூட்டமாக இல்லாமல் தனித்துத் திரியும் மனிதர்களைப் பற்றிய எழுத்தாகத் தோற்றம் தருபவை.
50 ஆண்டு கால எழுத்து வாழ்க்கையைக் கொண்ட ந.முத்துசாமியின் நாடக எழுத்தின் நுழைவு, நவீனத்துவ ஈர்ப்பு காரணமாகவே நிகழ்ந்துள்ளது. முதல் நாடகமான காலம் காலமாக (1968) தொடங்கிப் பத்தாவது நாடகமான இங்கிலாந்து (1989) வரையிலான நாடகங்களில் நவீனத்துவத்தின் முக்கியக் கூறுகளான அங்கதமும் குறியீட்டுத் தன்மையும் அபத்த நிலைப்பாடும் தூக்கலாக இருக்கின்றன. இவ்விரண்டிற்குமிடையே அவர் எழுதிய அப்பாவும் பிள்ளையும் (1968), நாற்காலிக்காரர்(1971), சுவரொட்டிகள்(1977) உந்திச்சுழி (1978), கட்டியக் காரன்(1979), விறகுவெட்டிகள் (1980),வண்டிச்சோடை(1985) நற்றுணையப்பன் அல்லது கடவுள்(1988) ஆகியனவற்றை எழுதப்பெற்ற காலத்தோடு சேர்ந்து அறிந்துகொள்வது விவாதத்திற்குத் துணை செய்யக்கூடிய ஒன்று. இவைகளை முழுமையாக நவீனத்துவ எழுத்துமுறை வெளிப்படும் நாடகங்கள் எனச் சொல்லலாம்.
சிறுகதைக்காரராக அறியப்பட்டிருந்தாலும், கதை எழுத்திலிருந்து விலகிய தன்மையை அவரது தொடக்ககால நாடகங்கள் கொண்டிருக்கின்றன. நாடகத்தின் வெளியையோ, காலத்தையோ, பாத்திரங்களையோ நேரடியாகக் காட்டி விடாத தன்மையுடன் எழுதப்பட்டவை. முதல் நாடகமான காலம் காலமாகவும் சரி, அதிகம் மேடையேற்றப்பட்ட நாற்காலிக்காரர், சுவரொட்டிகள் போன்ற நாடகங்களும் சரி பாத்திரங்களின் பெயர்களைக் கவனமாகத் தவிர்த்திருந்தன. இரண்டாவது நாடகமான அப்பாவும் பிள்ளையும் நாடகத்தில் பாவாடை, பெரியப்பா எனப் பாத்திரங்களுக்குப் பெயர் வைத்துவிட்டு ராமசாமி 1,2,3 எனப் பெயர் சூட்டியதின் மூலம் அவைகளை அடையாளமற்றவைகளாக ஆக்கியிருப்பார். இந்தத்தன்மையே - குறிப்பான வெளியில், குறிப்பான அடையாளங்கள் கொண்டதாக இல்லாமல் - எழுதப்பட்ட தன்மையே நவீன நாடகத்தின் தொடக்கமாகக் கணிக்கப்பட்டன.பாசிசமாக மாறி வரும் ஜனநாயக அரசியலை விமரிசனம் செய்யும் நவீன நாடகப் பிரதிகள் எப்படி இருக்க முடியும்? என்பதைத் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் ந.முத்துசாமி என்பது எனது கணிப்பு. முதல் தொகுப்பில் உள்ள நாடகங்கள் மட்டுமல்லாமல், சுவரொட்டிகள், நற்றுணையப்பன், இங்கிலாந்து என அவரது நாடகப் பிரதிக்குள் அலையும் மொழியின் குறியீடுகள் எப்போதும் அரசியல் அர்த்தங்களோடு மட்டுமே சரியாகப் பொருந்தக் கூடியவை.
தமிழில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் நவீனத்துவம் நேரடித் தன்மையை விலக்கிவிட்டு மறைமுகத்தன்மையை வெளிப்பாட்டு வடிவமாகக் கொள்ளத் தொடங்கியிருந்த காலகட்டம். நடப்பியல் எழுத்து, இருநிலை எதிர்வுகளை முன்வைத்துச் சார்பைக்கோரிய நிலையில், அதனை மறுதலிப்பவர்களாக நவீனத்துவ எழுத்தாளர்கள் தங்களை முன்னிறுத்த விரும்பினார்கள். நம்பிக்கைவைக்க வேண்டியதை முதன்மையாக வலியுறுத்திய சமயநடவடிக்கைகளே நவீனத்துவத்தின் முதன்மையான கேள்விக்குரியாக-கேலிக்குரியதாக இருந்தன.
கடவுளின் இருப்பும், மீட்பும் பற்றிய பேச்சை நம்பிக்கையின்மையோடு அணுகிய நவீனத்துவம், அதன் தொடர்ச்சியாக அரசு, குடும்பம், நிறுவனங்கள், செயல்பாடுகள் என ஒவ்வொன்றையும் நம்பிக்கை யின்மையோடு பார்க்கத் தொடங்கியது. அப்பார்வையைச் சரியாகச் சொல்வதற்கேற்ற முறையாக கேலித்தன்மை கூடிய எழுத்தையும் முடிவை நோக்கி நகர்த்தாத வடிவத்தையும் கைக்கொண்டன நவீனத்துவ எழுத்துகள். ஐரோப்பிய நவீனத்துவத்தின் பின்னணியில் இரண்டு உலகப் போர்களும், மீட்பைத் தருவதாகச்சொல்லிச் சர்வாதிகார ஆட்சிகளைத் தந்த பெருந்தலைவர்களும் இருந்தார்கள். இந்தியச் சூழல் அதிலிருந்து மொத்தமாக விலகியதில்லை என்றாலும், விடுதலை பெற்ற இந்தியா, தருமென நினைத்த வளமான வாழ்க்கை பற்றிய கனவுகளும் பொய்யாகவும் அபத்தமாகவும் தோற்றம் தந்தன.
தமிழ் நவீனத்துவத்தின் தொடக்கம் இன்னும் வித்தியாசமானது. அது இந்தியப் பரப்பில் கவனம் செலுத்தாமல் தமிழகப் பரப்பிற்குள் மட்டுமே நிலை கொண்டது. குறிப்பாக சமயநம்பிக்கை, வைதீக இந்துமதத்தின் ஞானமரபு, உடல் உழைப்பிலிருந்து அந்நியப்பட்ட வாழ்க்கை, கலை, கல்வியறிவு போன்றவற்றைப் பரவலாக்க வேண்டியதில்லை என நம்பும் குடும்பவெளியிலிருந்து - பிராமணக் குடும்பங்களிலிருந்து வந்தவர்களே தமிழின் நவீனத்துவத் தொடக்கநிலையாளர்கள். மணிக்கொடி, எழுத்து, இலக்கியவட்டம், கசடதபற எனப் பத்திரிகைகள் சார்ந்து வெவ்வேறு குழுக்களாக அறியப்பட்ட அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை.
தமிழின் நவீனத்துவ எழுத்தாளர்களின் முன்னால் இந்துசமயம் உண்டாக்கிய படிநிலை வேறுபாடுகளும், சடங்குகள் சார்ந்த தினசரி வாழ்க்கையும், சமத்துவத்தும் இன்மையைப் பேணிய தேசப்பெருவெளியும் கேலிக்குரியனவாகவும் கேள்வி கேட்கப்பட வேண்டியனவாகவும் இருந்தன என்பதை அறிந்திருந்தார்கள். ஆனால், அவர்களைவிடவும் அதிதீவிரமாக இவற்றின் மீது விமரிசனங்களை வைத்த பகுத்தறிவுவாதத்தையும் தமிழ்ச் சமூகத்திற்குள் அதன் பரப்பாளர் ஈ வே. ராமசாமியையையும் அவரது பின்னோடிகளான திராவிட இயக்கத்தையும் எவ்வாறு எதிர்கொள்வது என்ற கடும் நெருக்கடியையும் சந்தித்தார்கள். ஈ. வே. ராமசாமி, பிராமணர் x பிராமணரல்லாதார் என்ற எளிதான எதிர்நிலையை உண்டாக்கிக் கடும் பிரசாரத்தை நடத்திக் கொண்டிருந்தார். இப்படியானதொரு எளிமையான எதிர்வின் மீது இயங்குவது நவீனத்துவத்திற்கு உவப்பானதல்ல. அது எல்லாவற்றையும் பரப்பி வைத்து விட்டு முடிவை முன்வைக்காத நிலையை மேற்கொள்ளும் கலைக் கோட்பாட்டில் இயங்கக் கூடியது. ஐரோப்பிய நவீனத்துவம் அப்படித்தான் இயங்கியது. அதற்கு நடப்பியல் எழுத்தின்மீது விமரிசனங்கள் உண்டேயொழிய எதிர்நிலைப்பாடு கிடையாது.தமிழில் இது தலைகீழாக நடந்தது. நவீனத்துவ எழுத்தாளர்கள் பகுத்தறிவு இயக்கத்தை எதிர் இயக்கமாகவும் எதிர்வுகளை முன்வைத்த நடப்பியல் பாணியை எதிர்க் கலைக்கோட்பாடுகளாகவும் கணித்தன. தமிழின் நவீனத்துவத்திற்கு இன்றளவும் திராவிட இயக்க எழுத்துகளின் மீதும் இடதுசாரி எழுத்துகளின் மீதும் இருக்கும் எதிர்மனநிலையைப் புரிந்துகொள்ள இந்தப்பின்னணி அவசியமானது.பிராமணர்களை நேரடியாகக் குற்றவாளிக் கூண்டிற்குள் நிறுத்திய திராவிட இயக்கத்தோடு இணைந்து செயல்பட முடியாத போதும் அதனை எதிர்நிலையில் வைத்துப் பார்த்திருக்கவேண்டிய தேவையில்லை என்பதை நவீனத்துவ எழுத்தாளர்கள் உணரவில்லை. உணரவிடாமல் தடுத்தது இந்தியக்குடும்ப அமைப்பும் சாதி அமைப்பும் அவை தரும் பாதுகாப்பும் என்று சொல்வதில் பிழையில்லை.
நவீனத்துவம் முன்வைத்த ஐயப்பாடு, அபத்தம், இருப்பின் மீதான கேள்வி, அங்கதம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்களைப் பகுத்தறிவு வாதத்தை உள்வாங்கியதாக அறியப்பட்ட திராவிட இயக்கத்தின் அரசியல் கருத்துகளோடு இணையவிடாமல் தடுத்த ஆளுமை பெரியார் ஈ. வே.ரா. என்பதையும், அவரது பரப்புரைகளில் வெளிப்பட்ட இரட்டை எதிர்வை மையப்படுத்திய தாக்குதல் மொழியும் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியதில்லை. இவைகளே தமிழ் நவீனத்துவத்தின் மைய விவாதத்தை இந்தியச் சமூகம், இந்திய அரசியல், இந்து மதச்சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் என்பதை நோக்கி நகர்த்தாமல் திராவிட இயக்க அரசியல், மொழிப்பற்று, பொற்காலப்பெருமை பேசும் அபத்தம், பொதுவெளி வாழ்க்கைக்கும் தனிமனித வாழ்க்கைக்கு மிடையே இருக்கும் பாரதூரமான வேறுபாடு என்பனவற்றைக் கவனப்படுத்தும் ஒன்றாக மாற்றியது. இதனைத் தமிழின் தொடக்கநிலை நவீனத்துவக் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என ஒவ்வொன்றிலும் விரிவாகக் காணமுடியும். நவீன நாடகப் பிரதியில் தொடங்கி வைத்தவர் ந.முத்துசாமி; தொடர்ந்தவர் இந்திரா பார்த்தசாரதி. நாடகப் பிரதிகளிலிருந்து எடுத்துக்காட்டுத் தந்து விவாதிக்கும் நேரம் இதுவல்ல.
தேசிய நாடகத்தை உருவாக்கும் இளைய அரங்க இயக்குநர் திட்ட த்திற்காக நாடகங்கள் எழுதிய பலரும் அவர்களிடம் வெளிப்பட்ட நவீனத்துவ மனநிலையைக் கைவிட்டனர். அத்திட்டத்தில் இணைந்து கூத்துப்பட்டறை பல நாடகங்களைத் தயாரித்தது. அத்தயாரிப்புகளுக்காகவே 1990- களுக்குப் பிந்திய நாடகங்களை எழுதியதாக ந.முத்துசாமியே தனது நாடகப் பெருந்தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்திய அளவில் அறிமுகமான ராமாயணக் கதைகள், பாரதத்தின் கிளைக்கதைகள், தெனாலிராமன் கதை, விக்கிரமாதித்தியன் கதை, பரமார்த்த குருகதை போன்றவற்றைச் சொல்பிரதிகளாக்கிய நாடகங்கள் அவை என்பதைத் தலைப்பை வாசித்தாலே தெரிந்துவிடும். ந.முத்துசாமியென்னும் அரங்கப் பெருவெளிக் கலைஞனின் எழுத்துப் பிரதிகளைக் கூத்துப்பட்டறையோடு இணைந்து செயல்பட்ட தமிழக இயக்குநர்களான கே.எஸ். ராஜேந்திரன், பேரா.சே.ராமானுஜம், வ.ஆறுமுகமும், ப்ரசன்னா ராமசாமி, பிரளயன் ஆகியோர் மட்டுமல்லாமல், இந்திய அளவு இயக்குநர்களும் அன்மோல் வெலானி போன்ற வெளிநாட்டு இயக்குநர்களும் இயக்கியிருக்கிறார்கள்.
தெருக்கூத்து என்னும் தமிழ் மரபுக்கலை வடிவத்தை புத்துருவாக்கம் செய்யவும், அதன் கூறுகளை நவீன நாடகங்களின் நடிப்புப்பாணிகளில் இணைக்கவும் தொடர்ச்சியாக முயற்சி செய்தது அவரது தலைமையில் செயல்பட்ட கூத்துப்பட்டறை. பொதுநிலையில் தெருக்கூத்துவைக் காப்பாற்றிவிட வேண்டுமென முயல்வது தனியொரு நிறுவனத்தின் சாத்தியங்களுக்குள் இல்லை என்பதை உணர்ந்து, புரிசை கண்ணப்பத் தம்பிரான் அவர்களின் தெருக்கூத்துக் குழுவை மட்டும் தேர்வுசெய்து தொடர்ச்சியாக ஆய்வுக்கண்ணோட்டத்தோடும் பயிற்சிக்குரிய கூறுகளைத் தேடும் நோக்கத்தோடும் செயல்பட்டது. கூத்துப்பட்டறையின் முன்னெடுப்பினால் உலக அளவில் அறியப்பெற்ற தமிழ் மரபு அரங்காக் கூத்து மாறியிருக்கிறது. அதன் உள்கட்டமைப்பையும் வெளிப்பாட்டு முறையையும் உள்வாங்கியதோடு அதன் வழியாக ஐரோப்பிய மற்றும் தென்னாப்பிரிக்கக் கதைகளையும் நாடகப் பிரதிகளையும் அரங்கேற்ற முடியும் என்பதையும் கூத்துப்பட்டறை செய்துகாட்டியிருக்கிறது. இதற்கான முழுக்காரணியும் ந.முத்துசாமி என்ற ஆளுமைதான் என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று.
அரங்கியலாளர் ந.முத்துசாமியை நமது மைய, மாநில அரசுகள் விருதுகளும் பரிசுகளும் வழங்கிக் கவனிப்புக்குள்ளாக்கியிருக்கின்றன. நாடகத்துக்காக வழங்கும் சங்கீத் நாடக் அகாடெமி விருதும், பத்மஸ்ரீ விருதும் மைய அரசிடமிருந்து கிடைத்ததைப் போலவே மாநில அரசிடமிருந்து கலைமாமணி, கலைஞர் பொற்கிழி போன்றனவும் கிடைத்துள்ளன. இவ்வளவு கவனத்தையும் பெற்ற ஒரு நாடக ஆளுமை தமிழ்ச் சமூகத்தின் வெகுமக்கள் பரப்பிற்குள் நுழையவில்லையென்றாலும், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் போன்ற அறிவுசார் பரப்பிற்குள்ளாவது நுழைந்திருக்கவேண்டும். தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்படியான தாக்கம் நிகழாமல் போவதின் காரணங்கள் எவையென்பதை யோசிக்கவேண்டிய நெருக்கடி இருக்கிறது. ந.முத்துசாமி என்றில்லை. அவரைப்போல ஒவ்வொரு துறையிலும் ஆகப்பெரும் ஆளுமைகளாக இயங்கிய பலரைத் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பரப்பு பெயரளவில் கூட அறியாமல் தான் இருக்கிறது. இதுபற்றிப் பேச ந.முத்துசாமியின் நாடகப்பிரதிகளும் கூத்துப் பட்டறையின் தொடர் செயல்பாடுகளும் காரணங்களாக இருந்தன.
நாடக எழுத்தாளராகத்தனது பங்கிற்கு எழுத வேண்டிய நாடகப் பிரதிகளை எழுதித் தந்த முத்துசாமி, அரங்கியல் செயலாளியாக எப்போதும் அலுப்பையே தந்தார். அவர் பொறுப்பேற்று நடத்திய கூத்துப் பட்டறையின் தயாரிப்புகளும் சரி, அவரது இயக்கத்தில் மேடையேறிய நாடகங்களும் சரி பார்வையாளனுடன் உரையாடுவதைத் தடை செய்யும் கூறுகளையே அதிகம் கொண்டிருந்தனஎன்பது நான் தொடர்ச்சியாக வைத்து வந்த விமரிசனம். தொடர்ச்சியான சோதனை முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கூத்துப் பட்டறை தமிழ் அரங்கியலுக்கும் திரைப்படத்துறைக்கும் பயிற்சி பெற்ற நடிகர்களை அளித்திருக்கிறது என்பது உண்மை தான். அதே நேரத்தில் பார்வையாளர்களுக்குத் தர வேண்டிய அரங்கியல் அனுபவம், திளைப்பு, கருத்தாடல் போன்றவற்றில் போதிய கவனம் செலுத்தியதில்லை என்பதும் உண்மைதான்.
நாடக ஆசிரியராக மட்டும் அல்லாமல் அவரது தோற்றம், கிராமம் சார்ந்த வாழ்க்கை மீதான இயல்பான ஈடுபாடு, தமிழில் பேசுவதில் அவர் காட்டும் குறிப்பான கவனம், அங்கீகாரம் கிடைக்காத போது அங்கலாய்க்காமலும், கிடைத்த போது அலட்டிக் கொள்ளாமலும் பயணிக்கும் வாழ்க்கை முறை என ந.முத்துசாமி எப்போதும் சூழலைப் பாதிக்கிறவராகவே இருந்துள்ளார். என்னையும் பெரிதும் பாதித்த ஆளுமையாக நினைவில் இருப்பார்.
கருத்துகள்