அது நடந்தது எட்டாண்டுகளுக்கு முன்னாள் ஒரு குடியரசு தினத்தன்று. குடியரசு தினம், சுதந்திர தினம் என்றால் நமது தொலைக்காட்சிகள் தேசப்பற்று வெளிப்படும் படங்களை ஒளிபரப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன என்பதை அனைவரும் அறிவோம். பெரும்பாலும் மணிரத்னத்தின் ரோஜா, உயிரே, பம்பாய் போன்ற படங்கள் அடிக்கடி திரும்பத் திரும்ப ஒளிபரப்புப் பெற்று தேசப்பற்று வளர்ப்பதை இன்றும் நமது தொலைக் காட்சிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. ஆனால் அன்று மணிரத்னத்தின் மனைவி சுகாசினி இயக்கிய,'இந்திரா’ படத்தைப் பிற்பகல் ஒளிபரப்பாக ஒரு தொலைக்காட்சி காட்டத் தொடங்கியதும் குட்டித் தூக்கத்திற்காகப் போய்விட்டேன். ஏற்கெனவே சிலதடவை பார்த்த படம். தூக்கம் கலைந்து திரும்பவும் வந்த போது படம் இன்னும் முடியவில்லை. முடியும் கட்டத்தில் இருந்தது. மனைவி விஜயா, மகள் சிநேகா, மகன் ராகுலன் ஆகியோர் மட்டுமல்ல, பக்கத்து வீட்டுச் சிறுமியும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.