வலிய எழுதப்பட்ட வரலாற்றின் பக்கங்கள்:சு.சமுத்திரத்தின் முகம் தெரியா மனுசி



விளிம்புநிலை வரலாற்று ஆய்வுகள் என அழைக்கப்படும் ஆய்வுகள் பெரும் பாலும் வட்டாரங்களையே தரவுகளுக்கான களன்களாகக் கொள்கின்றன. அவ்வட்டாரத்திலும் கூட முழுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளே வரலாற்றுக்கான தரவுகளாக அமைய முடியும் எனக் கருதாமல் ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவின் அகப் புற மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கும் பிரச்சினைகளைக் கூட விளிம்புநிலை ஆய்வுகள் முக்கியத்துவப் படுத்தி ஆய்வுகளைச் செய்கின்றன.

ஒரு தேசத்தின் வரலாற்றில் மைய நீரோட்டங்கள் மட்டுமே கவனம் பெற்று முக்கிய இடத்தைப் பிடித்துக் கொள்கின்றன. அதற்கு மாறாக தேசத்தின் பெரும்பரப்பின் கவனத்திற்கு வராமல் ஒரு சிறு பரப்பிற்குள் நிகழ்ந்த நிகழ்வுகள் கூட சமூகத்தின் போக்கில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கக் கூடும். அவற்றின் பல பரிமாணங்களையும் தொகுத்து ஆய்வு செய்யும் போது அந்த வரலாறு மைய நீரோட்டத்தின் வரலாற்றோடு ஏதாவது ஓரிடத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொண்டதாக இருக்கும்.

தேசங்களின் எழுதப்பட்ட வரலாறுகளில் சொல்லப்படாத நிகழ்வுகளைத் தேடும் வரலாற்று ஆய்வுகள் -விளிம்புநிலை வரலாற்று ஆய்வுகள் கடந்த கால் நூற்றாண்டுகளாக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. நீண்ட வரலாற்றோடு தொடர்புடைய பெரும் நிகழ்வுகள் மட்டுமின்றிச் சின்னஞ்சிறு நிகழ்வுகளைப் படைப்பாளிகள் எப்போதும் தனக்கான ஒன்றாக வரித்துக் கொண்டு படைப்பாக்குகிறான். வரலாற்று ஆய்வாளனைப் போலத் தரவுகளைத் தொகுத்துப் பகுத்து அடுக்கிக்காட்டி முடிவுகளைச் சொல்வதைத் தனது வேலையாகப் படைப்பாளி கருதுவதில்லை. அதற்கு மாறாகத் தனது படைப்புக் கோணத்தில் அப்பிரச்சினையை அணுகி, படைப்பின் வடிவ எல்லைக்குள் நிறுத்திக் காட்டுவதன் மூலம் நம்பகமான வரலாற்றுப் புனைகதையொன்றைத் தந்துவிடும் ஆச்சரியத்தைச் சிறந்த படைப்பாளிகளால் செய்ய முடிந்திருக்கிறது. அப்படிக் கவனிக்கப்பட்ட தமிழக வரலாற்று நிகழ்வுகள் எல்லாப் பிரதேசங்களிலும் இருக்கவே செய்கின்றன. ஆனால் ஆகச் சிறந்த படைப்பாளிகள் தோன்றிய தென் தமிழ் நாட்டுப் பிரதேசம் அதிகக் கவனத்திற்குரியதாக ஆகி இருப்பது ஆச்சரியமானதல்ல.

இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் இந்திய விடுதலைக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்தது. அப்போது அங்கு வாழ்ந்த நாடார் சமூகம் ஒதுக்கப்பட்ட சமூகமாகக் கருதப்பட்டதோடு, அந்தச் சமூகத்துப் பெண்கள் இடுப்புக்கு மேலே சேலையைச் சுற்றிக் கொள்ளவும், ரவிக்கை அணியவும் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனை மீறும் நபர்களுக்கு வழங்கப் பட்ட தண்டனைகள் அலாதியானவை. இதனைச் சொல்லும் வட்டார வரலாறுகள் இன்றும் நாட்டார் கதைகளாகவும், கதைப் பாடல்களாகவும், கோயில் சடங்குகளாகவும் அந்தப் பகுதியில் கிடைக்கின்றன. அதனையெல்லாம் நேரடியாகச் சென்று சேகரித்துத் தரும் ஆய்வாளனை விடவும், தனது வீரியமிக்க ஒரு சிறுகதை மூலம் வாசகனின் முன்னால் நிகழ்ச்சிகளை அடுக்கிக் காட்டியுள்ளார் எழுத்தாளர் சு.சமுத்திரம்.

விளிம்பு நிலை மனிதர்களான அலிகள் பற்றிய நாவலான வாடாமல்லிக்காகச் சாகித்திய அகாடெமி விருது பெற்ற சு.சமுத்திரம் நெல்லை மாவட்டத்துக் கிராமம் ஒன்றில் பிறந்தவர். அவரது நாவல்களும் சிறுகதைகளும் தமிழ்நாட்டின் வறண்ட கிராமங்களில் வெக்கையைக் கக்கும் மண்ணில் வாழும் மனிதர்களின் பேச்சு மொழியோடு உறவு கொண்டவை. முன் திட்டமில்லாமல் வாழும் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதில் அதிக அக்கறைகள் காட்டிய சு.சமுத்திரம், அதிலிருந்து விலகி ஒரு சமூகம் நடத்திய போராட்டத்தைப் புனைவாக்கியுள்ளார் இந்தச் சிறுகதையில். சமூகத்தின் போராட்டத்தில் ஒரு தனி மனுசியின் நுழைவைச் சொல்லும் இந்தக் கதை அவரது கதைகளில் ஆகச் சிறந்த கதையாக எனக்குப் படுகிறது.

வரலாற்றுப் புனைவு என்பது பெரும்பாலும் நாவல் என்னும் புனைகதை வடிவத்திற்கு ஏற்ற ஒன்று. சிறுகதை என்னும் வடிவம் பெரும்பாலும் நிகழ்காலத்தை நேராக நின்று பார்த்துச் சொல்லும் தன்மை கொண்டது. அத்துடன் குறுகிய காலத்தை- நாட்கணக்கில் அல்லது மணிக்கணக்கில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகளையே தனது படைப்பாக்கத்திற்குரியதாகக் கருதும் வடிவம். ஆனால் வரலாறு என்பது நீண்ட காலப் பரப்பின் தொகுதி. இந்த முரண்பாடு இருந்த போதிலும், தனது எழுத்துத் திறமையால் சிறுகதை ஒன்றில் -ஒரு நாள் நிகழ்வுக்குள் - வரலாற்றைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் என்பதே இந்தக் கதையின் சிறப்பு.. இனிக் கதையின் பகுதிக்குள் செல்லலாம்:

தண்டோராக்காரன் தான் செல்வதற்கு அந்தக் குக்கிராம குடிசை மண்டிக்குத் தகுதியில்லை என்று கருதியது போல், ஊருக்குப் புறம்பாக உள்ள மயானத்தில் நின்று நெளிந்தபடி டும்.. டும். ஒலிகளோடு திருவாங்கூர் சமஸ்தான அரச அறிவிப்பை வெளியிட்டான் என்று தொடங்கி நீளும் சு. சமுத்திரத்தின் முகம் தெரியா மனுசி என்ற கதை முடியும் போது “ நடைபெற்ற எளிய பெண்களின் தோள்சீலை உரிமைப் போரில், முகம் தெரியா மனுசியாய் ராசம்மா சங்கமிக்கிறாள்.” தலைப்பைப் பொறுத்திக் காட்டி முடிகிறது. இடையில் சு.சமுத்திரம் எழுதிக் காட்டுவது ஒரே நாளில் நடந்த நிகழ்வுகளின் தொகுதி என்றாலும், அந்நிகழ்வுகளின் பின்னணியில் சில பத்தாண்டுகளின் வரலாறும், சில பத்தாயிரம் பேரின் மனக்குமுறல்களும், ஒரு சமூகத்தின் ஆற்றாமை கலந்த போராட்டமும் இருக்கிறது. அந்தக் கதை வரலாற்றைத் தொட்டு வளரப் போகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்புடன் கதை நிகழ்வுகள் தொடங்குகின்றன.

“ --------- . அதோடு சாதீய அனுஷ்டானங்களைக் கடைபிடிக்காத தாழ்ந்த சாதியினரைப் பற்றி மேல் அதிகாரிகளுக்குப் பார்த்தவர்கள், கேட்டவர்கள், விசாரிப்பு மூலம் தெரிந்தவர்கள் உடனடியாகத் தகவல் கொடுக்க வேண்டும். இவற்றை மீறும் பட்சத்தில், இந்தத் தகவல்கள் சொல்லாதவர்களூக்கும் சிரச் சேதம் உட்பட எந்தவிதமான தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஊழியம் என்றால் கூலி இல்லாத வேலைகள். முகாமிடும் மன்னரின் யானைகளுக்கு தென்னை ஓலைகளை வெட்டி, கட்டுக்கட்டாகச் சுமந்து செல்ல வேண்டும். ஆங்காங்கே உள்ள நதி சுருங்கிய காயல்கள் எனப்படும் குளங்களைத் தூர் வார வேண்டும். மன்னரின் பரிவாரங்களுக்குத் தேங்காய்கள், நுங்குகள், பனங்கிழங்குகள், பயிர் வகைகள் முதலியவற்றைக் காணிக்கையாக்க வேண்டும். உப்பளங்களில் இருந்து உப்பு மூட்டைகளைச் சுமந்து போக வேண்டும். குடியான்கள் வண்டி வாகனங்களையும் உழவு மாடுகளையும் அதிகார கச்சேரியில் ஒப்படைக்க வேண்டும்.

அந்தத்தெருவில் ஆங்காங்கே பேசிக் கொண்டும், திருவுரலில் கேழ்வரகு அரைத்துக் கொண்டும், உரலில் சோளத்தை உலக்கையால் இடித்துக் கொண்டும், ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே வேலையாற்றிய பெண்கள், பணிக் ருவிகளைக் கைவிட்டு விட்டு, ஒன்று திரண்டார்கள்.

அந்தத்தண்டோராவிற்கு முன்பு வரை, அந்த ரவிக்கைக்கார இளம்பெண்ணைச் சுபதேவதையாய் அதிசயித்துப் பார்த்த பெண்கள் இப்போது கோபம், கோபமாய்ப் பார்த்தார்கள். .. சாதிப் பழக்கத்துக்குத் தகாதபடி உடுப்புப் போட்ட இவளும் ஒரு பொம்பளையா? இந்த ஊருக்கே பெரிய அவமானம் இவள விடப்படாது.

********************
“ தண்டோராச் சத்தம் வயசான ஒனக்கு கேக்கும்போது, எங்களுக்குக் கேக்காதா? சாதி அனுஷ்டானத்த விட்டோமுன்னா மாறுகால் மாறு கை வாங்கிடுவாவ.. பேசாம உன் மருமவள எங்கள மாதிரி மேல்துணி இல்லாம நிக்கச் சொல்லு. கச்சேரியில போயி நாங்களே சொல்லும்படியா வச்சுப்புடாத..”

ரவிக்கைக்காரி, அவர்களைச் சுட்டெரித்துப் பார்த்த பொழுது, பூமாரி கிழவி மன்றாடினாள்.

காலங்காலமா இந்த மாதிரி சட்ட போட்டிருக்காளாம். இப்படி போடுறது அவ ஊரு பழக்கமாம். உங்கச் சீலைய களைஞ்சா எப்படி ஒங்களுக்கு இருக்குமோ, அப்படி மேல்சட்டைய கழுட்டுனா, அவளுக்கு இருக்குமாம். அத கழட்டுறதுக்குக் கூச்சப்படுறா.

முடியுமா? காரியக்கார ஆளுக வந்தா நம்ம முதுகுலயு கல்லேறுமே.. .. கண்ணால கண்டத சொல்லணுமுன்னு தமுக்குக்காரன் சொல்லிட்டுப் போயிருக்கானே.
******************

“ ஏய் கிழவி! நீ குப்பாச்சா கட்டல, பனையிரை கட்டல, ஏணிப்பாணம் கொடுக்கல. ஒன் மனசுல என்னழா நினைச்சுக்கிட்டே?”

“ ஏமானே” இன்னைக்குக் கருப்பெட்டி வித்துட்டா வரிக்காசு முழுசும் சேர்ந்துரும். நாளிக்கு அதிகார கச்சேரில வந்து கட்டிடுவேன் ஏமானே”
“ ஒன் புருஷன் இசக்கி மாடன ஊழியம் செய்ய வரச்சொல்லு. கிழட்டுப்பய எங்கழா போயிட்டான்?”
*****************

“ எசமானரே! இந்தக் கள்ளச்செறுக்கி.. பசுமாடு வச்சிருக்கா, ஈனசாதிக, பசுமாடு வளர்க்கப்படாதுன்னு தெரிஞ்சும், இந்தக் கிழட்டு முண்ட நல்ல பசுவா.. காராமணி பசுவா வச்சிருக்கா பாருங்க..”

மணியம் கச்சேரிக்கும், வலிய கணக்கிற்கும் கண்கள் சிவந்தன. பற்கள் கடித்தன. கிழவி பசுமாடு வளர்க்கிறாள் என்பதை விட, அவள் தங்களை முட்டாளாக்கி விட்டாள் என்கிற கோபம்... பூமாரி சுருண்டு வீழ்ந்தாள். அம்மா என்று அழப்போனவளின் வாயில் ஒரு குத்து.

எதிர்ப்பக்ககுடிசையின் பனம்பலகை கதவு வாசலைப் பிய்த்துக் கொண்டு மல்லாக்க விழுந்தது. ரவிக்கைக்காரி ஆங்காரியாய் வெளிப்பட்டாள். தன் தகுதியை உதறி விட்டு அவளிடம் நேரிடையாகக் கேட்டார் வலிய கணக்கெழுத்து.

“ நீ என்ன சாதியிழா?” “ கீழ கிடக்காவளே எங்க மாமியார்.. அவங்க சாதிதான்..”

” அப்படியா சேதி.. ரவிக்கை, தோள்சீலை போடுற அளவுக்கு ஈனச்சாதியான உனக்கு அவ்வளவு திமிரு உண்டாயிட்டா?

****************
“ உன் பேரு என்னழா?” “ ராசம்மா”

“ நீ பேருக்கு ஏத்தபடிதான் இருக்கே. ஆனாலும், இளப்ப சாதிக்கு இந்த மாதிரி பேரெல்லாம் வெக்கப்படாது. பேசாம நீசம்மான்னு வச்சுக்க. வலிய கணக்கு ஏவலாளிகளுக்கு உத்தரவிட்டார். “ இவளோட மேல்சட்டையையும், தோள்சீலையையும் அவுத்துப் போடுங்கடா.. சேலையில.. பாதியைக் கிழிச்சி எறியுங்கடா..”

“வேண்டாங்கய்யா.. ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் கூட, அது மறவாத்தான் இருக்குது. மனுஷங்களுக்கு அப்படித்தானய்யா இருக்கணும்? ஒங்க பெண்டு பிள்ளங்கள இப்படி செய்தா நீங்க பொறுப்பியளா?”

‘ படுகளத்துள ஒப்பாரிய கேட்கப்படாதுடா.. இவா.. இந்தப் பக்கத்த நாற வக்க வந்தவ. எளப்ப சாதிகள தூண்டி விடுறவ.. இவள.. முளையிலேயே கிள்ளி எறியணும். அவள அம்மணமாக்குங்குடா’

********************
ராசம்மா, விறைத்துக் கிடந்த மாமியாரைப் பார்த்தாள். வெறித்துப் பார்த்தாள். வெறியோடு பார்த்தாள்.... அந்த இடைவேளையில், கீழே குனிந்து கொதித்துக் கொண்டிருந்த கூப்பனிப் பானையைக் கைச்சூட்டோடு எடுத்தபடியே, மேலே நிமிர்ந்து நிமிர்ந்து ஆவேசியானாள். .. அவர்கள் தலையில் கூப்பனி திரண்டு கண்களுக்குள் நீர்வீழ்ச்சியாக விழுந்து கொண்டிருந்தது. அந்த அதிகாரிகளும், ஏவல் பூதங்களாக வந்தவர்களும், வெட்கத்தை விட்டு “ அய்யோ.. அம்மா..” என்று கதறினார்கள். வலி பொறுக்க முடியாமல் அங்குமிங்குமாய் துள்ளினார்கள். அதே சமயம் ‘ அவளைப்பிடிங்க பிடிங்க’ என்று ஓலமிட்டார்கள். ஓலமிட்ட வாய்க்குள் கூப்பனி கூழ் ஊடுருவி, நாக்குகளைச் சுட்டெரித்ததுதான் மிச்சம்.

ஊருக்கு வெளியே வந்து குதிகால் பாய்ச்சலில் ஓடி,காலங்காலமாய் ஓடிக் கொண்டிருக்கும் பழையாற்றுக்குள் ராசம்மா இறங்கினாள். ராசம்மா, நதியோர தாழை மடல்களுக்குள் தவழ்ந்து, தவழ்ந்து, நாணற்செடிகளின் நடுவே பாய்ந்து, ஓணான் செடி குவியல்களுக்குள் உட்புகுந்து, பூணிக்குருவிகளும் வால் குருவிகளும் பயந்து பறக்க, காட்டுப் பூனைகள் மரங்களுக்குள் தாவ, பத்து பன்னிரண்டு மைல் தூரம் ஆமையாகவும், முயலாகவும், அணில் பாய்ச்சலாகவும், நகர்ந்தும், தவழ்ந்தும், தாவியும் போய்க் கொண்டிருந்தவள், களைப்பு மேலிட்டு மூச்சு முட்டியபோது ஓரிடத்தில் கரையேறினாள்.

எந்தத்திசையும் விளங்காமல், எதிர்திசையில், அவள் நடந்தாள்.திக்கற்ற நடை.. ராசம்மாவை, அவள் கால்கள், கோட்டாறு சந்தைப் பக்கமாக இழுத்துக் கொண்டு வந்தன. அந்த சந்தைக்குள் நடந்த அடிதடிகள் அவளை நின்ற இடத்திலேயே நிற்க வைத்தன.

வெள்ளையும் சொள்ளையுமான மனிதர்கள் ஒரு பக்கமும், தோள்சீலை பெண்களோடு நின்ற அழுக்குத்துணிக்காரர்கள் இன்னொரு பக்கமுமாய் அணி வகுத்து ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள். கல்லெறியும் சொல்லெறியும் ஒருங்கே நடைபெறுகின்றன.

இந்தப் பின்னணியில் வெள்ளையும் சொள்ளையுமான ஒரு தடியன் குப்பாயம் போட்ட ஒரு இளம் பெண்ணை இரு பக்கமும் கைகளை விரித்துப் போட்டு துரத்துகிறான்.

யந்திரமயமாய் நின்ற ராசம்மா மனிதமயமாகிறாள். கீழே குனிகிறாள். அவளுக்கென்றே தரையில் ஒரு கூர்மையான பாறாங்கல் காத்துக் கிடக்கிறது.


வரலாற்றைக் கதையாக்கும் நிலையில் அதற்கான மொழியைத் தேர்வு செய்து கொண்டு கச்சிதமான வடிவ எல்லைக்குள் நிறுத்தி எழுதப்பட்ட இந்தக் கதையை வரலாற்று ஆய்வாளன் கதை என்றே கொள்ள மாட்டான். வரலாற்றின் சுவடுகள் என்றே தனது தரவுக் குறிப்பேட்டில் எழுதிக் கொள்வான்
.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

பெரியார்மண்ணும் பிராமணியத்தின் இயக்கமும்.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்