காட்சிகள் நகர்கின்றன
ஒரு சினிமா வெளிவந்து முதல் காட்சி முடிவதற்கு முன்பே சில நூறு விமரிசனக் குறிப்புகள் வந்துவிழும் காலத்தில் இருக்கிறோம். சமூக ஊடகங்களின் வரவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தில் தமிழ்ச் சினிமா உலகம் -சினிமாவைத் தொழிலாக நம்பியிருக்கும் தொழிலாளர்களும் வணிகர்களும் பெரிதாகப் பாதிக்கப்படுகிறார்கள் எனப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் சமூக ஊடகங்களின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டது சினிமா உலகம் அல்ல; பத்திரிகை உலகம் என்றே சொல்வேன். குறிப்பாகத் தினசரிகளிலும் வார இதழ்களிலும் சினிமா விமரிசனங்களை எழுதிவந்த பத்திரிகையாளர்கள் தான் முதன்மையான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார்கள். பல இதழ்கள் அவை வெளியிடும் சினிமா விமரிசனங்களுக்கு எந்தப் பொருத்தமும் பலனும் இல்லையென்று தெரிந்து அவற்றை வெளியிடுவதை நிறுத்திவிட்டன. அப்படி நிறுத்தாத பத்திரிகைகளின் விமரிசனங்களை வாசித்துவிட்டுத் திரையரங்கிற்குப் போவதா? அல்லது போகாமல் தவிர்ப்பதா? என்று முடிவெடுத்த காலமெல்லாம் இப்போது இல்லையென்று தெரிந்தபோதிலும் பழக்கத்தை நிறுத்த முடியாத மனநிலையில் சினிமா விமரிசனங்களை வெளியிடுகின்றன.