சிறை: காவல்துறை சினிமாவின் வகைமாதிரி.

இந்திய சினிமாக்களைத் தொகுத்துத் தரும் இணையச் செயலி ஒன்றின் வழியாகச் சிறை படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பார்ப்பதற்கு முன்பே அந்தப் படத்தைக் குறித்த தகவல்கள் பரவியிருந்த நிலையில் எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்கவில்லை. அதேநேரம் டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இந்தப் படத்திலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார் என்ற தகவல் ஒன்றை உறுதி செய்தது என்பதும் உண்மை.
டாணாக்காரன் படத்தை இயக்கியபோதும் ஜெய்பீம் படத்தில் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்திய உதவி ஆய்வாளராக நடித்தபோதும் தமிழுக்குள் காவல்துறைப் பணிக்கால அனுபவங்களைக் கொண்டவர் என்பதைக் காட்டியிருந்தது. அதனால் சிறை படமும் ‘காவல்துறை சினிமா’ என்ற வகைப்பாட்டிலேயே இருக்கப்போகிறது என்ற முன்முடிவு உருவாகியிருந்தது.

சிறை என்ற படத்தின் தலைப்பின் வழியாகக் கூட இப்படியொரு எண்ணம் தோன்றலாம். அப்படித் தோன்றாமல் போக வாய்ப்பிருக்கிறது என்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த சிறை என்ற படம் காரணமாக இருக்கலாம். ஆர்.சி.சக்தி இயக்கிய அந்தச் சிறை (1984) நேரடிப்பொருளில் காவல் துறையோடு அர்த்தப்படுத்தவில்லை. இந்தியக்குடும்ப அமைப்பைச் சிறையாகவும், பெண்கள் கழுத்தில் கட்டப்படும் தாலியை விலங்காகவும் உருவகப்படுத்திய படம். இந்தப் படம் சிறையை உருவகமாகவோ, படிமமாகவோ, குறியீடாகவோ முன்வைக்காமல் நேர்ப்பொருளிலேயே பார்வையாளர்களுக்குத் தந்துள்ளது.


******

சிறை படத்தின் திரைக்கதையை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியுடன் இணைந்து தமிழ் எழுதியுள்ளார். இணைந்து வேலை செய்ததற்குக் காரணம் அவரது காவல்துறைப்பணி சார்ந்த அனுபவங்களே. ஒருவர் பணியாற்றிய துறை சார்ந்த அனுபவங்களை அப்படியே தொகுத்துத் தரும்போது ஆவணமாகும்; புனைவுப்படமாகாது. கலையின் எல்லைக்குள் நுழையும் வாய்ப்பைத் தவறவிடும். முழுமையான கலைப்படமாக இல்லாமல் வெகுமக்கள் ரசனைக்கும் ஏற்புக்கும் உரிய புனைவுத்தன்மை கொண்ட சினிமாவாக மாற்றுவதற்கு ஒருவரது அனுபவங்களைப் புனைவாக்க வேண்டும். அந்தப் புனைவு முழுமையும் நம்பகத்தன்மையற்ற ஒன்றாக இருந்துவிட்டால் வணிக சினிமாவாக மாறும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். அதைத் தடுப்பதற்காக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணகுமாரி, தமிழோடு இணைந்து திரைக்கதையை உருவாக்கியுள்ளார்.

தமிழ் இயக்கிய டாணாக்காரன் படத்தின் விவாதக்களம் காவல்துறையின் ஒரு பகுதி. கீழ்மட்டப்பணியான காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்படும் மனிதர்களுக்குத் தரப்படும் பயிற்சிகளுக்குள் ஒரு மனிதனின் தன்னியல்புகள் என்னவாகின்றன? துறையின் எழுதப்பெற்ற விதிகளைத் தாண்டி என்ன அதிகாரத்திற்குக் கட்டுப்படும் மனிதனாக ஆக்கப்படும் நடைமுறைகள் எப்படித் தரப்படுகின்றன? அதற்குள்ளும் ஒரு மனிதன் தன்னியல்பைத் தக்கவைத்தல் நிகழுமா? என்பதைக் கேள்விகளாகவும் காட்சிகளாகவும் தந்த படம். (டாணாக்காரன் வந்தபோது விரிவாக எழுதியுள்ளேன்). இப்போது வந்துள்ள சிறையின் விவாதக்களமும் காவல் துறைதான். அந்தப் படத்தில் காவல்துறையின் பயிற்சிக் காலம் என்பதைத் தனியாகப் பிரித்தெடுத்துக் காட்சிப்படுத்தியது போல, இன்னொரு காலத்தை- விசாரணைக் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று திரும்பும் காலத்தை - தனியாகப் பிரித்தெடுத்துக் காட்சிப்படுத்தி விவாதமாக்கியுள்ளது சிறை.

எஸ்கார்ட் போலீஸ் என அழைக்கப்படும் காவலர்களின் பணி, விசாரணைக்கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதும், நீதிமன்ற விசாரணைக்குப் பின் தரப்படும் வாய்தா அல்லது தீர்ப்புக்கேற்ப நடந்துகொள்வதுமாகும்.நெடுந்தூரத்தில் இருக்கும் நீதிமன்றங்களுக்குக் கைதிகளை அழைத்துச் செல்லப் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் நிலை இப்போது மாறிக் கொண்டிருக்கின்றது என்றாலும், முழுமையும் மாறிவிடவில்லை. இப்போதும் அந்த நிலை உள்ளது. திருமங்கலம் போன்ற சிறுநகரங்களின் பேருந்து நிலையங்களில் கையில் விலங்கிட்டு அழைத்துச் செல்லும் காட்சிகளை இப்போதும் பார்க்கலாம்.

விசாரணைக்கான வாய்ப்பைப் பயன்படுத்தித் தப்பிக்க முயலும் – தப்பிக்க விடும் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது ஊடகங்கள் சொல்கின்றன. நீண்டகாலமாகத் தொடரும் இந்த நடைமுறைக்காலத்தைத் தனித்த ஒன்றாக்கிக் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணகுமாரியும் திரைக்கதையாக்கத்தில் பங்கெடுத்த தமிழும் இணைந்து சிறை படத்தில் இரண்டு விவாதக்களத்தை முன்வைக்கின்றார்கள். அந்த விவாதக்களம் ஏற்கெனவே பொதுத்தளத்தில் மக்களிடையே பரவியுள்ள இரண்டு பொதுக்கருத்தை நினைவுபடுத்த முயன்றுள்ளன. நினைவுபடுத்தும் இரண்டில் ஒன்று மக்களிடையே இருக்கும் பொதுப்புத்தியை மாற்ற நினைக்கின்றது; இன்னொன்று புதிதாக உருவாகிவரும் பொதுக்கருத்தை உறுதிசெய்ய முயல்கின்றது. இதனைச் சுவையான முரண்நகை என்று கூடச் சொல்லலாம். ஆனால் இரண்டையும் சிறையின் கதையமைப்பும் சொல்முறையும் சேர்ந்து சிக்கல் இல்லாமல் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளது. அதுவே இந்த சினிமாவின் வெற்றிச் சூத்திரம் எனலாம்.

முதல் நோக்கத்தில் காவல் துறைக்குள்ளிருக்கும் நேர்மையும் மனிதநேயமும் கொண்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதை உணர்த்துவது. அதன் மூலம் குற்றத்தைத் தடுப்பதற்கு உருவான காவல்துறையே முதன்மையான குற்றங்களைச் செய்யும் துறையாக இருக்கின்றது என்ற பொதுப்புத்தியை மாற்ற நினைக்கிறது. இரண்டாவது நோக்கம் இந்திய/ தமிழகக் காவல்துறை அண்மைக் காலத்தில் மதவாதக் கருத்தியலால் பிடிக்கப்பட்டுள்ளது என்ற விமரிசனத்தை முன்வைப்பது. சிறுபான்மை சமயத்தினருக்கெதிரான - முஸ்லீம்களுக்கெதிரான மனநிலை உருவாக்கப்பட்டு விட்டது; உருவாக்கப்பட்ட மனநிலை என்பதை அறியாமலேயே பெரும்பான்மை மதத்தினர் அதனைப் பின்பற்றுபவர்களாக மாறிவிட்டனர். காவல்துறைக்குள் பணியாற்றும் காவலர்களும் அதிகாரிகளும் இதற்கு விலக்கானவர்கள் அல்ல என்று குற்றம் சாட்டுவது. எதிரெதிர் நோக்கங்களாகத் தோற்றம் தரும் இவ்விரண்டும் காவல்துறை என்ற ஒற்றைப்புள்ளியில் சந்திக்கின்ற ஒன்று என்பதால் சிக்கல் அதிகம் தோன்றவில்லை.

இரண்டு நோக்கங்களின் உண்மைத்தன்மையைக் குறித்த விவாதங்கள் சினிமாவுக்கு வெளியே விரிவாக நடத்தப்பட வேண்டியவை என்று தோன்றலாம். அதையே காரணமாக்கிச் சிறை என்ற சினிமாவை ஒருவர் புறங்கையால் ஒதுக்கிவிட்டுப் போகலாம். அப்படிச் செய்பவர் சினிமாவின் -நடப்பியல் சினிமா(Realistic Cinema) வின் சமூகப்பாத்திரத்தை உணராதவர் என்பதைச் சொல்வதிலிருந்து பின்வாங்கவேண்டியதில்லை. ஏனென்றால் நடப்பியல் என்ற கலைப்பார்வை, நிகழ்காலச் சமூகத்தில் உறைந்துபோன கருத்துகளை மாற்ற நினைக்கிறது என்பதோடு அதன் மறுதலையாகப் புதிய கருத்தொன்றை உருவாக்க நினைக்கிறது. அதன் மூலம் கவனிக்கத்தக்க சினிமாவாக மாறுகின்றது.

சிறை, டாணாக்காரன் என்ற இரண்டு சினிமாக்களுக்கும் முன்னோடியாக வந்த ஜெய்பீம் படம் அப்படித்தான் கவனம்பெற்றது. ஆங்கிலேயர்கள் காலத்தில் குற்றப்பரம்பரைச் சாதியினராகப் பட்டியலிடப்பட்ட சாதிகளின் மீதான ஒதுக்குதலும் குற்றம் சுமத்துதலும் இன்னும் தொடர்கின்றது என்ற விமரிசனத்தை முன்வைத்ததே அதன் வெற்றிக்கு முதல் காரணம். பாம்பு பிடிப்பதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் கிடைத்த வேலையைச் செய்து அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து நகர்த்துபவர்களுமாகவும் இருக்கும் இருளர் என்னும் விளிம்புநிலைச் சாதியினர் மீது கருணையற்றுக் காவல்துறை நடந்துகொள்கின்றது என்ற குற்றச்சாட்டை அந்தப் படம் உறுதிபடச்சொன்னது.காட்சிமொழிகளால் அடுக்கிக் காட்டியது. இப்போது அதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

தனது படத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு இரண்டு நோக்கங்களைக் கடத்த வேண்டும் எனத் திட்டமிட்ட இயக்குநர் அதற்கேற்பத் தனது சொல்முறைகளை (Narratives) உருவாக்கியுள்ளார். முதல் நோக்கத்தை உணர்த்த நேர்நோக்கு(direct)க் காட்சிகளைப் பயன்படுத்துகின்றார். இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்றப் பின்னோக்கு(Flashback)க் காட்சிகளை -திருப்புக் காட்சிகளைச் சொல்நிகழ்வுகளாக்கியுள்ளார். நேர்நிலைக் காட்சியாக கதிரவன் (விக்ரம் பிரபு) என்ற தலைமைக்காவலர் சந்திக்கும் விசாரணையும், அந்த விசாரணைக்குக் காரணமான துப்பாக்கி சூடும் அமைந்துள்ளது. விசாரணையைத் தொடர்ந்து கிடைத்த தண்டனைக்காலப் பணியில் -காவலர் பயிற்சிப்பள்ளி ஆசிரியர் பணியில் - அவர் எடுத்துக் காட்டும் ஒரு வழக்கு திருப்புக்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு தேர்வுகளையும் இணைநிலையாக நகர்த்துவதன் மூலம் இயக்குநரின் இரண்டு நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்காகப் பின்னப்பட்ட காட்சிகள் முழுமையும் நம்பத்தக்க காட்சிகளாக இல்லை எனத் தோன்றுவதை மறுப்பதற்கில்லை. தனது நேர்மையான அணுகுமுறையைத் தொடர்ந்து தக்கவைப்பதற்காக மேலதிகாரிகளையும் விசாரணை நடைமுறைகளையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கும் கதிரவன் பாத்திரம் முழுமையான நடப்பியல் பாத்திரமாக இல்லை என்று ஒருவர் சொல்லலாம். சிக்கலான நேரத்தில் எல்லாம் தனது காதல் மனைவி மரியத்திடம் ஆலோசித்து முடிவு எடுக்கும் அன்பான புருசன் என்பதும் கூட இயல்பை மீறிய ஒன்று என்றே தோன்றும். அதேபோல், தீவிரமான காரணம் எதுவுமில்லாமல் தன்னை நேசித்த முஸ்லீம் இளைஞனுக்காகக் காத்திருக்கும் இந்துப் பெண் என்பதும் கூட வலுக்கட்டாயமாக உருவாக்கிய புனைவு என்றே தோன்றுகின்றது என்று சொல்லலாம்.

நம் காலத்தில் உருவாகிவரும் பெரும்பான்மை சமயவாதத்தைக் கேள்விக்குள்ளாக்கி, சிறுபான்மையினரின் ஆதரவாளராகக் காட்டுவதின் மூலம் இந்தப் படத்தை முற்போக்குப் படமாகக் காட்ட நினைத்தவர்கள் உருவாக்கிய போய்யான புனைவு எனச் சொல்ல அதிக வாய்ப்புண்டு. அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் நடப்பியல் என்ற என்ற கலையியல் பார்வையே இதற்கும் பதிலைச் சொல்கின்றது. கதிரவன்,மரியம் பாத்திரங்களும், அப்துல் (அக்சய்குமார்), அவனது காதலி(அனுஷ்மா) பாத்திரங்களும் ஒருவிதத்தில் தமிழ்ச் சமூகத்தில் இருக்கக்கூடிய வகைமைப்பாத்திரங்களே (Typed Characters). வகைமைப்பாத்திரங்களால் உருவாக்கப்படும் நடப்பியல் சினிமா என்பது சாதாரணமாக இயங்கும் பாத்திரங்கள் அல்ல. சாதாரணங்களுக்குள் தெரிவு செய்து காட்டப்படும் வகைமையின் குறியீடு. அதே வேளை புனைவே என்றாலும் இவையெல்லாம் நடப்பில் இல்லவே இல்லாத -நடக்கவே நடக்காத செயல்களோ- நடப்புகளோ அல்ல.

காவல் துறைக்குள் சேர்ந்து அதிகாரிகள் தரும் அத்துமீறிய உத்தரவுகளை ஏற்க முடியாமல் வெளியேறிய நபர்கள் இருக்கவே செய்கின்றார்கள். காவல் துறை என்றில்லாமல் எல்லாவிதமான அரசுத்துறைகளிலும் மனச்சாட்சியோடு செயல்படும் மனிதர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இல்லாமல் போய்விடவில்லை. சாதியைக் கடந்த – மதத்தைக் கடந்த காதலைக் கல்யாண வாழ்க்கையாக மாற்றியவர்கள் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் சந்தித்த இடர்ப்பாடுகளைச் சாட்சியங்களாகச் சொல்லவும் செய்கின்றார்கள்.





சாதாரணமானவர்களிடம் தனித்துவமாக இருப்பதின் நேர்மறை அல்லது எதிர்மறைக் கூறுகளை முன்வைப்பதின் மூலம் அவர்களது இருப்பை – தன்னியல்பை மறுபரிசீலனை செய்யத் தூண்ட முடியும். நேர்மறை இயல்பைப் பாராட்டுவதின் மூலம் எதிர்மறை மனநிலையை மாற்ற முடியும். பெரும் திரளைப் பார்வையாளர்களாகக் கொண்டிருக்கும் சினிமா போன்ற வெகுமக்கள் கலையில் இத்தகைய பணியைச் செய்யும் இயக்குநர்கள் கவனிக்கப்படும் கலைஞர்களாக ஆகிவிடுகின்றார்கள். சிறையின் இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் இந்தப் படத்தைப் பார்வையாளர்கள் முன் விரித்துள்ள காட்சிகளுக்காகவும் சொல்லும் முறைக்காகவும், பாத்திரங்கள் பேசும் உரையாடல்களுக்காகவும் கவனம் பெற்றவர்களாக மாறியுள்ளார்கள்.

********

தனிமனிதர்களின் வாசிப்புக்கும் பார்வைக்கும் உரிய எழுத்து, ஓவியம் போன்றவற்றில் கவனிக்கப்படுவதும் கொண்டாடப்படுவதும் மெதுவாகவே நடக்கும். ஆனால் திரைப்படக்கலைஞர்களுக்கு விரைவாக நடக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனின் சினிமாவின் பார்வையாளர்கள் பெரும் திரளானவர்கள்; சாதாரணமான வாழ்நிலைக்குள் தங்களைப் பொருத்திக் கொண்டு நகர்ந்துகொண்டிருப்பவர்கள். அவர்களின் கவனத்தைக் கவரும் ஒன்றைக் கொண்டாடுவதற்கும் தயங்க மாட்டார்கள். உடனடி நிகழ்வாக நடக்கும் கவனப்படுத்துதல், அவர்களைக் கலைப்பார்வையிலிருந்து விலக்கி முழுக்கவும் வணிக நோக்குடையவர்களாக மாற்றும் ஆபத்தையும் கொண்டிருக்கின்றது. தமிழ்ச் சினிமாவுக்குள் அப்படி மாறிப்போன பல நடிகர்களும் இயக்குநர்களும் இருக்கவே செய்கின்றனர். சிறையின் இயக்குநர் அப்படி மாறமாட்டார் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

பொதுக்கருத்திலிருந்து விலகி, மாற்று மனிதர்களை அடையாளங்காட்டுவது கலையின் வேலையாக இருக்கின்றது. மாற்று மனிதர்கள் என்பதில் நல்ல மனிதர்கள் மட்டுமே இருக்கின்றார்கள் என்பதில்லை. கெட்ட மனிதர்களும் இருக்கவே செய்வார்கள். சாதாரணமான வாழ்க்கையில் நல்ல மனிதர்களாக விளங்கும் தருணங்கள் எப்படி உருவாகின்றன என்பதைக் கண்டுபிடித்துச் சொல்வதைப் போலவே, கெட்ட மனிதர்களாக மாறும் தருணம் எப்படி வாய்த்து விடுகின்றது என்பதைச் சொல்வதும் கலையின் வேலைதான்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரங்கியல் அறிவோம் -2 / ஆற்றுகை (Direction)

குடும்பச் சுமைகள்

பறக்குங்காலை...