குடும்பச்சுமைகள்


அந்த விமானப் பயணத்தில் முதல் வரிசையில் இடம் கிடைத்தது. ஒருவரிசைக்குப் பத்துப் பேர் வீதம் அமரும் அகலமான விமானம். அதேபோல் 100 க்கும் அதிகமான வரிசைகள் இருந்தன. சாதாரணக்கட்டண இருக்கையில் முதல் வரிசை. எனக்கும் மனைவிக்கும் வலது ஓரத்தில் இரண்டு இடங்கள்.அந்த இடங்களுக்கான குறிப்பெண். 15/I,15/J.

நாங்கள் உட்காரும் வரிசைக்கு முன்னால் ஒரு தடுப்புச்சுவர் உண்டு. அதற்கு முன்னால் இருக்கும் வரிசை இருக்கைகள் இரண்டு இரண்டுபேராக அமரும் வசதியான இருக்கைகள் (எக்ஸிகியூட்டிவ் வகுப்பு). அந்த இருக்கைகளுக்கான கட்டணமும் அதிகமும் அதற்கேற்ப சொகுகளும் உண்டு . நல்ல அகலமும் படுக்கை போலச் சாய்ந்துகொள்ளும் விதமாக மாற்றிக்கொள்ளலாம். உட்காரும் இடம், சாயும் இடம் என எல்லாமே மென்மையாகவும் உடல்பதியும் விதமாகவும் இருக்கும் ஒருமுறை கூட அதில் அமர்ந்து பயணம் செய்யும் வாய்ப்புகள் ஏற்படவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்னால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல்லிக்குப் போய்விட்டு வரும்போது தெரிந்த அரசியல்வாதி அமர்ந்து வந்தார். அவருக்குப் பக்கத்து இருக்கை காலியாக இருந்ததால், சில மணித்துளிகள் அதில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்ததுண்டு. அப்போது உட்கார்ந்து பார்த்திருக்கிறென்

*****

சாதாரணக்கட்டணத்தில் முதல் வரிசைகளில் கைக்குழந்தைகளோடு வருபவர்களுக்கும் வயதில் மூத்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். எனது வயது கருதி அப்படிக் கிடைத்திருக்கிறது. அந்த வரிசையில் கால்களை நீட்டி மடக்கி உட்காரலாம். நினைத்த நேரத்தில் எழுந்து கழிப்பறைக்குச் செல்லலாம். ஏழெட்டு மணிப் பயணங்களில் சும்மா கூட விமானத்தின் கடைசிப் பகுதி வரைக்கும் நடந்து போய்விட்டுத் திரும்ப வேண்டியதிருக்கும். அதனால் முன் வரிசை கிடைத்த மகிழ்ச்சி இருந்தது. மூன்றாவது இருக்கைக்கு ஒரு பெண் வந்த தால் நான் சாளரத்தின் பக்கம் இடமாறிக்கொண்டு நடுவில் மனைவி அமர்ந்துகொண்டார். அந்தப் பெண் வாசித்த புத்தகத்தை வைத்துப் பிரெஞ்சுக்காரி எனப் புரிந்து கொண்டேன். எங்களுக்கு அடுத்து நடைபாதை. அதற்கடுத்து நான்கு இருக்கைகள். அவற்றின் முன்னே குழந்தைகளைப் படுக்க வைத்துக்கொள்ள தொட்டிலைக் கொண்டு வந்து கொடுத்து இணைத்து விட்டுப் போனார் விமானப்பணிப் பெண். 

இரண்டு தொட்டில்களிலும் படுக்க வைத்த குழந்தைகளின் நிறம், பெற்றோர்களின் நிறம் போன்றவற்றை மட்டும் கணக்கில் கொண்டார்கள் நால்வருமே வெள்ளையர்கள் தான். ஆனால் ஒரு குழந்தையின் பெற்றோர் இசுலாமிய அடையாளத்தோடு இருந்தார்கள். உடுத்திய ஆடைகளிலும் ஆடவரின் தாடியின் அளவும் அந்த அடையாளத்தை உருவாக்கியிருந்தன. இன்னொரு தம்பதியினரை இப்போது வெள்ளையர்கள் எனச் சொல்வதில் சிக்கல் இல்லை. அவர்கள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றையோ, அமெரிக்கக் கண்டத்து நாடுகள் ஒன்றிலோ இருக்கலாம். நான்கு இருக்கைக்கு அடுத்து நடைபாதை. அதற்கடுத்து இருக்கும் மூன்று இருக்கைகளில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரும் வெள்ளையர் தான். அவருக்குக் கடைசி இருக்கை. இரண்டு இருக்கைகள் காலியாக இருந்தன.

ஏறத்தாழ விமானம் நிரம்பி முடியும்போது நான்குபேர் வந்தார்கள். இருவர் இளையோர். ஆணும் பெண்ணுமாக. இருவருக்கும் வயது 20 க்குள் இருக்கலாம். பெண் பெரியவளா? ஆண் பெரியவனா? என்று சொல்ல முடியாத அளவு உயரம் எல்லாம் இருந்தது. அவர்களோடு வந்தவர்கள் அவர்களின் பெற்றோராகவே இருக்க வேண்டும். 60 வயதைத் தாண்டிய முதியவர்கள் என்று சொல்ல முடியாது. இந்தியர்கள்; தென்னிந்தியர்கள். தமிழ் முகங்களாகவே இருந்தன. ஆனால் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டார்கள். பிள்ளைகள் இருவரும் பின் வரிசை ஒன்றில் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததைத் தேடிப் போய் உட்கார்ந்து கொண்டார்கள். ஆனால் அந்தப் பெற்றோர் இருவரும் முதல் வரிசையில் உட்காராமல் தவித்துக்கொண்டிருந்தார்கள்.

விமானப்பணியாளர்கள் வந்து இடுப்புப் பட்டைகளை இறுக்கிப் போடும்படி சொல்லிவிட்டுப் போனார்கள். விமானம் ஓடும்போது கவனிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்கிக் கொண்டிருந்தார்கள். அந்த அம்மையாருக்குப் பிள்ளைகள் இருவரையும் தனியாக உட்காரவைத்துவிட்டுத் தாங்கள் இருவரும் தனியாக உட்கார்வது உவப்பானதாகத் தோன்றவில்லை. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார் அம்மா.

விமானம் ஓட த்தொடங்கிவிட்ட து. வேகம் பிடித்து மேலேறும்போது இவர்கள் இருவரும் முகச்சலனத்தோடு பேசிக்கொண்டார்கள். திரும்பிப் பார்ப்பதும் கையைக் காட்டிப் பேசுவதும் தொடர்ந்த து. ஒருவிதப் பதற்றம். ஆகாயத்தில் மிதக்கத் தொடங்கிய பிறகு நிலைகொண்ட து விமானம். அம்மையார் எழுந்து பிள்ளைகளிடம் போய்ப் பேசினார். அவர்கள் அவரைத் திரும்பி அனுப்பிவிட்டார்கள். நாங்கள் தனியாக அமர்ந்துகொள்கிறோம் என்று சொல்லியிருக்க வேண்டும். திரும்ப வந்தார். அவர் அமர்ந்துகொண்டு கணவரை அனுப்பினார். அவர் போய் பிள்ளைகளிடம் பேசியிருக்கவேண்டும். மகனை அம்மாவிடம் அனுப்பிவிட்டு மகளோடு தந்தை அமர்ந்துகொண்டார். இப்போது அம்மாவிற்கு முகத்தில் சலனம் இல்லை. தன் பாதுகாப்பில் மகனும், அப்பாவின் பாதுகாப்பில் மகளும் இருப்பதாகத் தோன்றியிருக்கவேண்டும். அல்லது தாங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் இருப்பதாகக் கூட நினைத்திருக்கலாம்.

பதின் வயதைத் தாண்டிய மகனைத் தனது மடியில் சாய்த்துக் கொண்டு தாலாட்டுவதுபோல தடவிக்கொண்டிருந்தார். ஆனால் அவன் தூங்குவதற்கு முன்பே அந்த அம்மையார் தூங்கத் தொடங்கினார். நிம்மதியான தூக்கம். பாதுகாப்பு உணர்வு உண்டாக்கிய தூக்கம். இந்தியப்பெற்றோர்கள் பாதுகாப்பின்மையை தாங்கள் உணர்கிறார்களா? தங்களின் பாதுகாப்பில் தான் பிள்ளைகள் இருக்கவேண்டும் என நினைக்கிறார்களா? என்று தெரியவில்லை. பாதுகாப்பு அல்லது சார்ந்திருத்தல் என்பதை இந்திய மனம் எப்படி உள்வாங்கியிருக்கிறது என்பது புரியாத புதிர்.

*********************

அவர்கள் தூங்கிப் போன பிறகு தொட்டியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் எழுந்துகொண்டன. முதலில் அழுது துளும்பிய குழந்தையைத் தூக்கிக் கொண்டவர் அந்த முஸ்லீம் அம்மா.குழந்தை எழப்போகிறது என்ற குறிப்புக் காட்டியதோடு கணவரின் வேலை முடிந்துவிட்டது. தயாராக வைத்திருந்த பால்புட்டியைக் கையில் எடுத்துக் கொண்டார். குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு கொடுக்கத் தொடங்கினார். அந்தக் குழந்தையின் அழுகையைத் தொடர்ந்து அடுத்த குழந்தையும் கைகால்களை ஆட்டி எழும் முயற்சியில் இறங்கியது.

இப்போது அந்தக் குழந்தையைத் தூக்காமல் தட்டிக்கொடுக்கும் முயற்சியில் இறங்கியவர் குழந்தையின் அப்பா. தன் மனைவியை – குழந்தையின் அம்மாவை எழப்பவே இல்லை. அரைத்தூக்கத்தில் இருப்பதுபோல் தான் இருந்தது. ஆனாலும் அவர் எழுந்து குழந்தையை ஆற்றுப்படுத்தும் வேலையில் இறங்கவில்லை. எல்லாவற்றையும் கணவர் பார்த்துக்கொள்வார் என்று நம்பியது தெரிந்தது. அவர் குழந்தையின் இடையில் சுற்றியிருக்கும் ஈரத்தை உறிஞ்சும் இடுப்பாடையைத் தொட்டுபார்த்தார். ஈரமாக இருந்திருக்கவேண்டும். உடனடியாக ஒரு துவாலையால் அந்தக் குழந்தையின் உடலை மூடிக்கொண்டு ஏற்கெனவே இருந்த ஆடையை நீக்கிவிட்டுப் புதிதாக ஒன்றை அணிவித்தார். திரும்பவும் படுக்கவைத்துப் பால் புட்டிகள் இருக்கும் பொதி ஒன்றைத் திறந்து எடுத்துப் புகட்டினார். அதிகம் ஆட்ட முடியாத அந்த த்தொட்டிலை மேலும் கீழுமாக ஆட்டித்தூங்கவைத்தார். பிள்ளையைக் கையில் தூக்கவே இல்லை.

இப்போதும் முஸ்லீம் பெண்மணி தனது குழந்தையைக் கையில் தான் வைத்திருந்தார். அந்தப் பயணம் முழுவதும் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அம்மாவுடையது என்பதாகவே இருந்தது. அவரது கணவர் கொஞ்சமும் அதில் சிரத்தைக் காட்டவில்லை அதற்கு மாறாகத் தனது பிள்ளைக்கான எல்லாப் பொறுப்பையும் கணவரிடம் விட்டுவிட்டுத் தன் போக்கில் இருக்கவில்லை அந்த வெள்ளைப்பெண்மணி. குழந்தைக்கான பொருட்கள், உடைகள், எங்கே இருக்கின்றன என்பதை நினைவூட்டிவிட்டுத் தனது தூக்கத்தை தொடர்ந்துகொண்டிருந்தார்.

சமயங்களின் வழியாக உருவாக்கப்படும் பண்பாட்டு நடைமுறைகளும் பழக்க வழக்கங்களும் நாட்டுப் பின்னணிகளும் வாழ்வியல் நடைமுறைகளும் எங்கெங்கே வேறுபடுகின்றன என்பதை அந்த விமானப் பயணத்தில் நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள கடமைகள், குடும்பப் பொறுப்புகள் என்பனவற்றைப் புரிந்துகொள்வதிலும் பின்பற்றுவதிலும் எது சரியாக இருக்கமுடியும் என்ற கேள்விகள் எனக்குள் எழுந்துகொண்டே இருந்தன.

எனது திருமண வாழ்விற்குப் பின்னர் குழந்தைகளை வளர்ப்பதில் பெரிய பங்கு எனக்கு இருந்ததாக நினைத்தில்லை. குடும்பச் செலவிற்குத் தேவையான பொருளீட்டும் வேலையைச் செய்வதையே பெரிதான ஒன்றாக நினைத்திருந்தவன் தான். ஆனால் பிள்ளைகள் உயர்கல்விக்குள் நுழைந்தபோது அவர்களின் எதிர்காலத்தை – படிப்பைத் தேர்வு செய்வதில் தலையிட்ட தில்லை. என்னைச் சார்ந்தவர்களாக – குடும்பத்தின் முடிவுகள் என்பதாக எதையும் திணிக்க வேண்டுமென நான் நினைத்த தில்லை. அவர்கள் தெரிவுசெய்த பணிகள் சார்ந்து என்னுடைய தலையீடென்று எதுவும் இருக்கவில்லை.

குடும்ப அமைப்புகளில் எது மேலானது? எது சரியானது? இந்தக் கேள்விக்கு இதை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு பதிலை உருவாக்கிக் கொள்ளலாம்தான். ஆனால் நினைத்தவுடன் பிரிந்து வாழத்தொடங்கிவிடும் மேற்கின் குடும்ப உறவுகள் குறித்த அச்சம் மேற்கு மனிதர்களுக்கே இருக்கிறது. மொத்தச் சுமையையும் ஏன் பெற்றோர்கள் சுமக்கிறார்கள் என்ற குழப்பம் கிழக்கின் இளையவர்களிடத்தில் இருக்கிறது. கிழக்கும் மேற்கும் சந்தித்துக் கொள்வதில்லை தானே..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்