பராசக்தி: நல்லதொரு அரசியல் சினிமா


வணிகப்படத்தின் கட்டமைப்புக்குள் நின்று ஏற்கத்தக்க அரசியல் சினிமாவைத் தந்துள்ள இயக்குநர் சுதா கொங்கரா பாராட்டுக்குரியவர். இந்திய அளவில் நடந்த சுதந்திரப்போராட்டத்தை விடவும் தமிழ்நாட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய போராட்டம் இந்தி எதிர்ப்புப் போராட்டம். அதனைக் குறித்த நல்ல நாவல்களோ, நாடகங்களோ, கவிதைகளோ எழுதப்படவில்லை; நல்லதொரு சினிமா கூட வரவில்லை என்ற கருத்தும் வருத்தங்களும் இருந்தன. அதனை முழுமையாகத் தீர்க்கும் விதமாக வந்துள்ளது பராசக்தி படம்.

இந்தியாவின் பல்வேறு மொழிகளைப் பேசும் பாத்திரங்களை உருவாக்கிக் கொண்டு வெவ்வேறு மாநிலங்களுக்குள் பயணிக்கும் இந்தியத்தன்மை (Pan Indian) சினிமாவுக்கு மாற்றாக ஓர் அசலான இந்திய சினிமாவாகப் பராசக்தியை உருவாக்கிய படக்குழுவினரும் படத்தின் கருத்தியல் தெளிவுகளையும் நிகழ்வுகளையும் தந்த ஆலோசனைக் குழுவும் வசனம் எழுதியவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். சமகால நிகழ்வுகளைக் காட்டியதின் வழியாக நடந்து முடிந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தேவையும் நெருக்கடிகளும் பொருத்தமும் கச்சிதமாக நினைவூட்டப்பட்டுள்ளன. படத்தில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகள் 60 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகள் என்றாலும், இந்த நினைவூட்டல் வெறும் நினைவூட்டலாக இல்லாமல், அத்தகையதொரு அச்சுறுத்தலும் ஆபத்தும் அதிகாரத்துவச் செயல்பாடுகளும் திரும்பவும் வந்துகொண்டிருக்கும் காலத்தில் இருக்கிறோம் என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.

இந்த நினைவூட்டல்கள் தமிழ்நாட்டின் புதிய தலைமுறை மனிதர்களின் அரசியல் நினைவலைகளைத் தட்டியெழுப்புவதின் மூலம் சமகால அரசியலில் அவர்களின் தன்னுணர்வையும் சார்புநிலையையும் உறுதிப்படுத்தும் வாய்ப்புக் கொண்டவை என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலில் உருவாக்கப்படும் எதிர்நிலைகளில் ஒன்றை - தமிழ்நாட்டின் நலன் சார்ந்த அரசியல் தெரிவை நோக்கித் தமிழ் வாக்காளர்களை நகர்த்துவதற்கு இந்தப் படம் உதவும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அந்த நோக்கத்தில் பெரிய வெற்றியை அடையப் போகும் அரசியல் சினிமா இந்தப் பராசக்தி.

பல மொழிகள் பேசும் ஒரு நாட்டிற்குப் பொதுவானதாக ஒரு மொழி உருவாக்கப்படுமானால் அரசும் அரசு நிறுவனங்களும் மக்களோடு தொடர்புகொள்வதும் நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதும் எளிதாக நடக்கும் என்ற நம்பிக்கையில் உருவாக்கப்பட்டது ஆட்சி மொழிச் சட்டம். ஆனால் அந்தச் சட்டம் ஒவ்வொரு மாநிலத்து மக்களின் சிந்திக்கும் திறனைக் காவு வாங்கும் ஒன்று என்பதைச் சரியாக உணர்ந்துகொண்ட மாநிலம் தமிழ்நாடு. அந்தப் புரிதலின் வழியாகவே எப்போதெல்லாம் தாய்மொழிக்கு ஆபத்து என்பது உணரப்படுகின்றதோ அப்போதெல்லாம் தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை வலுவாகக் காட்டியுள்ளனர். வலுவான எதிர்ப்பில் பல உயிர்களைப் பலிகொடுத்த போராட்டத்தின் குறியீட்டு ஆண்டே 1965 இந்தி எதிர்ப்பு.

மொழி தான் ஒரு கூட்டத்தின் சிந்திக்கும் கருவி; அதனிடமிருந்து அவர்களைப் பிரித்துவிட்டால் அடிமைப்படுத்துவது எளிது 1965 இல் வந்த ஆட்சிமொழிச் சட்டம் என்பதில் இருந்தது ஒரேயொரு ஆபத்து. ஆனால் இப்போது தென்படும் ஆபத்துகளோ உணவு, பண்பாடு, வேலைகளைத் தட்டிப் பறித்தல் எனப் பல தளங்களில் நடக்கும் ஊடுருவல் என்பதைப் பாத்திரங்களின் உரையாடல்கள் போகின்ற போக்கில் சொல்லிச் சொல்கின்றன. படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தமிழ்நாட்டு அரசியலில் தலை தூக்கும் பிற மாநில மொழிகளுக்கும், மாநில மக்களுக்கும் எதிரான போக்கையும் கவனத்தில் கொண்டு மொழிப் போராட்டத்தில் தமிழர்களோடு கன்னடம், மராத்தி, மலையாளம், பெங்காலி போன்ற இந்தி பேசாத மாநிலத்து மக்களும் இணைந்திருந்தார்கள் என்பதையும் காட்சிப்படுத்திக் காட்டியுள்ளது. வலுவான தெலுங்கு மொழிக்கதாபாத்திரங்களை உருவாக்கியதின் மூலம் கூடுதல் அழுத்தத்தைத் தந்துள்ளது.

வணிக வெற்றியை நோக்கமாகக் கொண்ட இயக்குநர்கள் உருவாக்கும் நாயகப்பாத்திரம் X எதிர்நிலைப் பாத்திரம் என்ற மோதலின் பின்னணியில் தாயின் பாசம், உழைத்து வாழவேண்டும் என்ற விருப்பம், சகோதரனின் படிப்பு, பக்கத்துவீட்டுப் பெண்ணின் காதல், நண்பர்களின் உதவி போன்றன பொருத்தமாகப் புனையப்பட்டால் ஒரு வெற்றிப்படம் உருவாகிவிடும். கலையகம் தயாரித்து ரெட் ஜெயண்ட் வழியாகத் திரையரங்குகளுக்கு வந்துள்ள பராசக்தியில் இந்த முடிச்சுகளும் முடிச்சைச் சுற்றிய புனைவுகளும் உள்ளன.

பாத்திரங்கள் சார்ந்த கதையோட்டத்தை விடவும் கதைக்கான காலப் பின்னணியைச் சரியாகத் தருவதின் மூலம் நல்லதொரு அரசியல் சினிமாவை உருவாக்க முடியும் என்பதை இயக்குநர் நிரூபித்துள்ளார். தமிழ் நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் குறிப்பான காலப்பின்னணில் - 1965 இல் வைத்துப் பேசியதோடு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின், முக்கியமான நிகழ்வுகள் நடந்த இடங்களை - சென்னை பச்சையப்பன் கல்லூரி, மதுரை மேலமாசி வீதி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலான இடங்கள் காட்டப்பட்டுள்ளன. உச்சநிலைக் காட்சியாகப் பலரது மரணத்துக்குக் காரணமாக பொள்ளாச்சித் துப்பாக்கி சூடும் கொலைகளும் படத்தில் சரியாக வைக்கப்பட்டுள்ளது. காலப் பின்னணித் தேர்வும் இடப்பின்னணிகளும் போகின்ற போக்கில் சொல்லப்படாமல் நம்பத்தகுந்த விதத்தில் தரப்பட்டுள்ளன. அந்தக் காலகட்டத்தில் தெருக்கள், இடங்கள், கட்டடங்கள் வடிவமைப்பு, வண்ணம், மனிதர்களின் உடைகள், உடல் மொழி, பேச்சுமொழி எனக் கவனத்துடன் தரப்பட்டு நம்பகத்தன்மை உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் மையப்பாத்திரமும் (செழியனாக வரும் சிவகார்த்திகேயன்) , எதிர்நிலைப்பாத்திரமும் (ஒன்றிய அரசின் சிறப்புக்காவல் துறை அதிகாரியாக வரும் ரவி மோகன்) உருவாக்கும் மோதலை வழக்கமான நாயகன் X வில்லனாகப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் அலுப்பூட்டாத விறுவிறுப்பான காட்சிகளைக் கொண்ட சினிமாகவும் பராசக்தியைப் பார்த்து ரசிக்க முடியும். பாடல்காட்சிகளும் நளினமான ஆட்டக் கோர்வைகளும் உறுத்தாமல் படமாக்கப்பட்டுள்ளன. நடிப்புக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் வரலாற்றுப் பாத்திரங்கள் என்பதை உணர்ந்தவர்களாக மட்டுமல்லாமல், படத்தின் திரைக்கதையில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் உரிய பாத்திரவார்ப்புகளை உள்வாங்கி நடித்துள்ளனர்.

படம் முழுவதும் வரும் நாயகப்பாத்திரத்தை ஏற்றுள்ள சிவகார்த்திகேயனின் நடிப்பு அமரன் படத்தைக் காட்டிலும் மெருகேறியதாக இருப்பதை உடலின் இயக்கத்தின் வழியாகக் காட்டியுள்ளார். இதுவரை ஏற்று நடித்த பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் ரவிமோகன் பொருந்தியுள்ளார். அதர்வா தான் ஏற்றுள்ள பாத்திரத்திற்கு- லட்சியங்கள் கொண்ட கல்லூரி மாணவப்பாத்திரத்திற்கு மாறியிருக்கின்றார். நாயகியாக வரும் லீலாவின் பேச்சும், நளினமும் வழக்கமான வணிக சினிமாவில் வந்து போகும் நாயகியாக இல்லாமல் மொழிப்போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல் பாட்டி, மாணவர் கூட்டம், பொள்ளாச்சியில் போராட்டக்காரர்களுக்கு உதவுபவர், கலைஞராக வரும் குரு சோமசுந்தரம், அண்ணாவாகத்தோன்றும் சேத்தன், தமிழ்ப் பேராசிரியராக வரும் இரா.பிரபாகர் எனப்பலரும் விலகலான நடிப்பைத் தராமல் ஒன்றிய தன்மையில் வெளிப்பட்டுள்ளனர்.

2026 இல் - அமெரிக்காவின் டல்லஸ் நகரில் பார்த்த பராசக்தி நிறைவானதொரு சினிமாவாக - காலத்திற்குத் தேவையான அரசியல் சினிமாவாக இருந்தது என்பதைச் சொல்வதில் மகிழ்ச்சி.
*************************************  

டல்லஸ் நகரில் பராசக்தி

நடுத்தரவர்க்கத்தின் வாரக்கடைசிப் பொழுதுபோக்குகளில் ஒன்று சினிமா. புதிய சினிமா வரும் வாரக்கடைசிகளைக் கூடுதல் கொண்டாட்டமாக்கிவிடுவது இந்திய நடுத்தரவர்க்கத்தின் ஏற்புநிலை. தமிழ்நாட்டுத் தமிழர்களோடு உலகத்தமிழர்களும் 'சினிமாவுக்குப் போகும்' பண்பாட்டில் இணைந்துகொள்ளவே செய்கின்றார்கள். இப்போது நான் இருக்கும் டல்லஸ் நகரத்தில் ஒன்பது திரையரங்குகளில் பராசக்தி பார்க்கக் கிடைக்கின்றது. ஒரே நாளில் 44 காட்சிகள். லூயிஸ்வில்லி சினிமார்க் அரங்கில் மட்டும் 18 காட்சிகள்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மணிரத்னத்தின் அரசியல்: விமரிசனமும் மாற்று அரசியலும்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்