நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்


தமிழ் இலக்கியங்களின் வரலாறு நீண்ட மரபு கொண்டது. பல்வேறு இலக்கிய வகை களையும் பலவகையான படைப்பாக்க முறைகளையும் தமிழ் இலக்கியம் கண்டுள்ளது, ஒரு மொழியின் இலக்கிய வரலாறு என்பதே ஒவ்வொரு காலத்திலும், இலக்கியங்கள் மாறி வளர்ந்து வருகின்ற தன்மையைப் பொறுத்தது தான். தமிழக வரலாற்றில் பிற்காலச் சோழர் காலத்தில் காணப் பட்ட காப்பியங்களின் எழுச்சி, அதன் பிற்காலத்தில் வீழ்ச்சி பெறுவதைக் காணலாம். அதன் பின்னர் சோழப் பேரரசு போன்ற பெரும் வல்லமை படைத்த அரசு அமைந்திராத நிலையில் இலக்கிய வரலாற்றிலும் மாற்றம் காணப்படுகிறது.

சிற்றிலக்கியங்கள் அதிகமாகத் தோன்றிய காலம் நாயக்கர்களின் காலம் என்பது பலரும் ஒப்புக்கொள்கின்ற செய்தி.. சிற்றிலக்கியங்கள் எத்தன்மையன? அவற்றின் பாடுபொருட்கள் எவை? பாடுபொருட்களுக்கும் வடிவத்திற்கும் இருந்த உறவு எத்தகையது? என்று இலக்கிய ஆராய்ச்சியில் கவனம்¢ செலுத்துவது தனி ஆராய்ச்சி. இங்கு அத்தகைய இலக்கியங்கள் வழியாக, அந்தக் காலத்து அரசியல் பொருளாதார, சமூக வாழ்க்கை ஆராயப்படுகிறது.

தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க வரலாற்றுக் கால கட்டங்களில் நாயக்கர் காலமும் குறிப்பிடத் தகுந்த ஒன்று. அக்கால கட்டத்தைப் பற்றிக் கவனம் செலுத்திய ஆய்வாளர்கள் பல்வேறு தரவுகளைப் பயன்படுத்தி நாயக்கர் கால அரசியல் வரலாற்றை எழுதியுள்ளனர். பலவிதமான தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட அரசியல் வரலாற்றைச் சமுதாய வரலாறாக மாற்ற இலக்கியங்களிலிருந்து கிடைக்கும் சான்றுகள் பலவகையில் உதவ முடியும். ஏனென்றால் இலக்கியங்கள் சமுதாயத்தின் உற்பத்தி என்ற போதிலும் மனச்சாட்சியாகவும் இருப்பவை.

தமிழக வரலாற்றின் காலப்பகுதிகள்:

வரலாறு என்பது தொடர்ச்சியானது. இதனை, ஏதாவது சில அளவுகோல்களின் பின்னணியில் வகைப்படுத்தி உணர்த்துவது வரலாற்றாய்வாளரின் முறையியலாகும். அம்முறை யியலின் படி, “நாயக்கர் காலம்” என்பதை ஒரு வரலாற்றுக் காலப்பகுதியாக ஒத்துக் கொண்டுள்ளனர். தமிழக வரலாற்றில் அதனை ‘பிற்காலம்’ என்று கூறுகின்றனர்.

பொதுவாகத் தமிழகத்தின் சமுதாயம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் முதலான எல்லாவகை வரலாறுகளும் சங்ககாலத்திலிருந்தே தொடங்கப்படுகின்றன. ஆயின், சங்ககாலத்தின் தொடக்கம் எந்த நூற்றாண்டு என்பது இதுகாறும் யாராலும் சரியாக வரையறுத்துக் கூறப்படவில்லை. அதே நேரத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டைச் சங்க காலத்தின் இறுதிக்காலம் என்பதைப் பலரும் ஒப்புக் கொள்கின்றனர்.

சங்ககாலத்தை அடுத்துத் தமிழகத்தில் களப்பிரர்கள் ஆட்சி இருந்தது. அவ்வாட்சிக்காலம் கி.பி.நான்கு, ஐந்தாம் நூற்றாண்டுகள் வரை இருந்துள்ளது. களப்பிரர்களை அடுத்துப் பல்லவ, பாண்டிய அரசுகள் இருந்துள்ளன. சிம்மவர்மன் முதலாகக் கம்பவர்மன் ஈறாக அறியப்படும் பல்லவ அரசர்கள் கி.பி.550 முதல் 912 வரை ஆட்சி செய்துள்ளனர்1. கி.பி.560-இல் கடுங்கோன் பாண்டியனால் தொடங்கி வைக்கப்பட்ட பாண்டியர் ஆட்சி கி.பி.920 வரை நடந்தது. இரண்டாம் மாறவர்மன் இராசசிம்மனின் ஆட்சிக்குப் பிறகு பாண்டியப் பேரரசு முடிவுற்றது.

அடுத்த காலகட்டம் பேரரசுச் சோழர்களின் ஆதிக்கம் தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் பரந்து கிடந்த காலப்பகுதியாகும். கி.பி.850 - இல் விசயாலயனால் தோற்றுவிக்கப்பட்ட பிற்காலச் சோழப் பேரரசு 1279 வரை நீடித்தது.3 சோழர்கள் வலிமையோடு இருந்த இக்கால கட்டத்தில் பாண்டியர்கள், அவர்களின் மேலாண்மையை ஒத்துக் கொண்டு அடங்கியிருந்தனர்; பின்னர் அவர்களின் வலிமை குன்றியபோது பாண்டியர்கள் அவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றனர். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இவனுடைய தம்பியான மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழப் படையைச் சிலவிடங்களில் வென்று மதுரையில் இரண்டாம் பாண்டியப் பேரரசின் வளர்ச்சிக்கு அடிகோலினான்.4 ஆயின், இவ்வாட்சி டெல்லி சுல்தானின் தளபதியான மாலிக்காபூரின் தென்னிந்தியப் படையெடுப்பால் சிதையத் தொடங்கியது. மாலிக்காபூர் இசுலாமிய அரசு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கமில்லாமல் கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்துக் கோயில்களையும் முக்கிய நகரங்களையும் சூறையாடியதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.5

பாண்டியர்களின் வாரிசுரிமைப் போர்களும் அடுத்தடுத்து நடந்த இசுலாமியர் படையெடுப்பும் அரசியலில் நிலையற்ற தன்மையைத் தோற்றுவித்தன. சிலகாலங்களில் பாண்டியர்களும் சில காலங்களில் சுல்தான்களின் பிரதிநிதிகளும் மதுரையில் அதிகாரம் செலுத்தியுள்ளனர். மாலிக்காபூரின் படையெடுப்பு நடந்த கி.பி.1310 முதல் விசயநகர அரசின் பிரதிநிதியான குமாரகம்பணன் மதுரையைக் கைப்பற்றியதுவரை இந்த நிலையே நீடித்ததாக வரலாற்று நூல்களிலிருந்து அறிய முடிகிறது.

விசயநகரப் பேரரசும் நாயக்கர்களின் தோற்றமும்:

‘நாயக்கர்களின் காலம்’ எனத் தமிழக வரலாற்றில் குறிக்கப்படும் காலகட்டம், விசயநகர அரசர்களின் கீழ், பிரதிநிதிகளாக இருந்தவர்கள் பின்னர் சுய உரிமை பெற்று ஆட்சி செய்த காலமாகும். எனவே தமிழக வரலாற்றில் நாயக்கர்களின் ஆட்சிக்காலம் எப்பொழுது தொடங்கியது; எப்படித் தொடங்கியது என்பதற்கு விசயநகரப் பேரரசின் தோற்றத்திலிருந்து அறிவது அவசியம்.

கி.பி.1336 - இல் விசயநகரம் தோற்றுவிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.6 இக்காலகட்டத்தில் இந்தியா முழுவதும் இசுலாமியர்களின் செல்வாக்கு ஓங்கியிருந்தது. டெல்லி சுல்தான்களின் பிரதிநிதிகள் ஆங்காங்கே அதிகாரம் செலுத்துபவர்களாக இருந்தனர். இசுலாமியர்கள் கடைப்பிடித்த ‘இக்தூஸ்’ என்னும் படைமானிய முறையினால் அமைதியோ, முறையான நிர்வாகமோ நடைபெறவில்லை. இந்நிலையில் இசுலாமியர்களிடமிருந்து தக்காண இந்தியாவை மீட்கும் முயற்சி கி.பி.1329 - இல் தொடங்கப்பட்டது. இதன் ஒரு கூறுதான் விசயநகரத்தின் தோற்றம் ஆகும். இதனைத் தலைமையேற்று நடத்திய ஹரிஹரர், புக்கர் என்ற சகோதரர்கள் இருவரில் ஹரிஹரரே விசயநகரின் முதலாம் மன்னராக முடிசூடிக் கொண்டார்.7 துங்கபத்திரா நதியின் தென்கரையில் அமைந்த விசயநகர அரசு கிருஷ்ணா நதியின் தென்பகுதி முழுவதிலும் பரவியிருந்தது. ஹரிஹரருக்குப் பின் தொடர்ந்து அரியணையேறியவர்கள் தென் இந்தியா முழுவதையும் விசயநகர அரசின்கீழ் கொணர்ந்து அதனை இசுலாமியப் பேரரசிற்கு ஈடான ஓர் இந்துப் பேரரசாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வரசு ஏற்படுவதற்கு முன்பு தமிழகத்தில் செல்வாக்கோடு இருந்தவர்கள் சம்புவரையர்களும் மதுரை சுல்தான்களும் ஆவர். படைவீடு வம்சத்தைச் சேர்ந்த சம்புவரையர்கள் தற்போதைய சித்தூர், செங்கல்பட்டு, தென்,வட ஆற்காடு மாவட்டங்களைக் கொண்ட பகுதிகளில் அதிகாரம் செலுத்துபவர் களாக இருந்தனர். சுல்தான்கள் திருச்சிராப்பள்ளியிலிருந்து இராமேஸ்வரம் வரை அதிகாரம் செலுத்தினர்.8 இவ்விரு பகுதிகளில் முதலில் விசயநகர அரசின்கீழ் வந்த பகுதி சம்புவரையர்கள் ஆண்ட பகுதியே. சம்புவரையர்களை வென்ற பின்பே முதலாம் புக்கரின் மகன் குமாரகம்பணன், மதுரைச் சுல்தானை வெற்றி கொண்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இவ்விரு படையெடுப்புகளும் நடந்த வருடங்கள் குறித்து அவர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆயினும் பல கருத்துக்களையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்து ‘விசயநகர அரசின் கீழ் தமிழகம்’ (Tamil Country Under Vijayanagar) என்ற நூலை எழுதியுள்ள வரலாற்றறிஞர் ஏ. கிருஷ்ணசாமி, விசயநகர அரசு சம்புவரையர்களை வென்றது. கி.பி. 1362, எனவும் மதுரை சுல்தானை வென்றடக்கியது கி.பி. 1371 எனவும் கூறுயுள்ளார்.9

தமிழகப் பகுதிகளை வென்ற குமாரகம்பணன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு விசயநகர அரசின் பிரதிநிதியாக ஆட்சி செலுத்தி வந்தான். இந்தப் பிரதிநிதித்துவ ஆட்சிமுறை கி.பி. 1529 வரை நடைபெற்றுள்ளது. இது, விசயநகர அரசின் மேலாண்மையை முழுவதும் ஏற்றுக் கொண்டு செயல்பட்ட ஆட்சிமுறை ஆகும். இந்தப் பிரதிநிதிகளுக்கு மண்டலேஸ்வரர் என்றும் மகாமண்டலேஸ்வரர் என்றும் பெயர். பின்னர் விசயநகர அரசின் பகுதிகள் நிர்வாக வசதிக்காகப் பல பகுதிகள் ஆக்கப்பட்டன. இப்பகுதிகளுக்குப் பொறுப்புத் தரப்பட்டவர்கள் ‘நாயக்’ (Nayak) அல்லது ‘அமரநாயக்’ என்றழைக்கப்பட்டனர். அவர்கள் பேரரசுக்குக் கட்டுப்பட்டுத் தங்கள் பகுதியில் பாசனம், விவசாயம், காடுகள் முதலானவற்றிக்குப் பொறுப்பாக இருப்பர். தங்கள் பகுதி முழுமைக்கும் முழுப் பொறுப்பு வாய்ந்தவர்கள் இந்த அமரநாயக்கர்களே. இவர்களே பின்னர் ‘நாயக்கர்கள்’ என்ற பெயருடன் முழு அதிகாரம் படைத்தவர்களாக மாறினர். அதாவது, இவர்களே அரசர்களாக மாறினர். இந்தக் குறிப்புக்களைக் கல்வெட்டுக்களில் இருந்தும், பயஸ் (Pages)நூனிஷ் (Nuniz) போன்ற வெளிநாட்டினர் குறிப்புக் களிலிருந்தும் உணர முடிகின்றனது.10

தமிழகத்தில் மகாமண்டலலேஸ்வரர்களின் கையிலிருந்த ‘ராஜ்ஜியம்’ என்ற பகுதி மூன்று அமரநாயகங்களாக மாறியது. விசயநகரத்தைக் கிருஷ்ணதேவராயர் ஆட்சி செய்யும் பொழுது தமிழகத்தில் இருந்த அமரநாயக்கர்கள் சுயஅதிகாரம் பெற்றவர்களாக மாறினர். முதலில், கி.பி. 1529 - இல் கிருஷ்ண தேவராயரிடம் செல்வாக்குப் பெற்றிருந்த விசுவநாதன், மதுரை நாயக்கனாக சுய அதிகாரத்துடன் பதவியேற்றான். இந்த முதல் ‘நாயக்க’ ஆட்சி வலிமையுடன் நடந்து நிலைபெற உதவியவர் அவனுடைய திறமைமிக்க தளவாய், அரியநாயக முதலி என்பவர் ஆவர். இவரின் துணையுடன் நாட்டில் பாளையக்கார முறை புகுத்தப்பட்டது. கி.பி. 1535 - ஆம் ஆண்டிற்குள் பாண்டியமண்டலம் முழுவதையும் பாளையக்கார முறையின் கீழ் கொண்டு வந்தனர். தற்போதுள்ள (பிரிக்கப்படாத நிலையில்) மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களும் திருவிதாங்கூர்ப் பகுதியும் விசுவநாத நாயக்கனின் ஆளுகையின் கீழ் இருந்தன.11 கி.பி. 1529-இல் விசுவநாதனால் தோற்றுவிக்கப் பட்ட மதுரை நாயக்க அரசு கி.பி. 1736 - இல் அரசு மீனாட்சி இறந்த போது முடிவுக்கு வந்தது.

தஞ்சாவூர் இன்னொரு நாயக்கமாகும். கி.பி. 1530 - இல் சேவப்பன் என்பவர் இப்பகுதியில் முதல் நாயக்கராகப் பட்டம் பெற்றவர்.அதுவரை விசுவநாதனின் ஆளுகையின் கீழிருந்த சோழமண்டலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வல்லம் பகுதி தஞ்சாவூரோடு சேர்க்கப் பெற்றது. திருச்சி, மதுரையின் கீழ் இருந்தது. தஞ்சையில், நாயக்கர் ஆட்சி கி.பி. 1673-இல் விசயராகவ நாயக்கரோடு முடிவுற்றது.12

மற்றொரு நாயக்கமான செஞ்சியில் நாயக்கர் ஆட்சி முறை எப்பொழுது தோன்றியது என்பதை அறியப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. ஆயினும் “1526 முதல் வையப்பநாயக்கர் ஆட்சி செலுத்தினார் என்று கல்வெட்டுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. ஆகவே நாயக்கர் முறையானது இவ்வாண்டில் தான் ஆரம்பமானது என்று நாம் கருத வேண்டும்” என்று கூறுகிறர். ராஜய்யன்.13 கி.பி.1649 - இல் பிஜப்பூர் சுல்தான்களிடம் தோல்வியுற்றதோடு செஞ்சியில் நாயக்கர் ஆட்சி முடிவுற்றது.

கி.பி.1565 வரை தமிழக நாயக்கர்கள் மூவரிடையேயும் சீரான உறவுநிலைகள் நிலவின. கி.பி.1565 - இல் பாமினி சுல்தான்களுக்கும் விசயநகர அரசுக்குமிடையே நடந்த தலைக்கோட்டைப் போரின் விளைவுகள் தமிழக நாயக்கர்களிடையே ஒரு மோதல் நிலைமையைத் தோற்றுவித்தன. தலைக்கோட்டைப் போரில் விசயநகரம் தோல்வியுற்றதோடு பட்ட உரிமைப்போர்களையும் எதிர் கொண்டது. இப்பட்டப் போரில் செஞ்சி நாயக்கரும் மதுரை நாயக்கரும் ஒரே அணியில் நின்றனர். தஞ்சாவூர் நாயக்கர்கள் ஆதரித்த அணி தோல்வியைத் தழுவியது. தமிழக நாயக்கர்களிடையே முரண்பாடுகளும் தோன்றின.

தமிழகத்திலிருந்த மூன்று நாயக்கங்களில் மதுரை நாயக்கமே வலிமையும் புகழும் பெற்றிருந்தது. ஏறக்குறைய 200 ஆண்டுக்காலம் தமிழகப் பகுதிகளில் ஆட்சி செய்த மதுரை நாயக்கர்கள் இருமுறை தலைநகரை மாற்றினர். வீரப்ப நாயக்கன் காலத்தில் (1609 - 23) மதுரையிலிருந்து திருச்சிக்கு மாறியது. திருமலை நாயக்கர் காலத்தில் (1623 - 59) மீண்டும் தலைநகரம் மதுரைக்கு வந்தது. திரும்பவும் 1665 - இல் சொக்கநாதநாயக்கர் காலத்தில் திருச்சி தலைநகராயிற்று.

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி தோன்றிய காலத்தில் மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்து கொண்டிருந்த பாண்டியர்களின் வாரிசுகளில் சிலர் தென்தமிழ் நாட்டில் சிலபகுதிகளில் ஆட்சியதிகாரம் செலுத்துபவர்களாக இருந்தனர். திருநெல்வேலிக்கு அருகிலுள்ள தென்காசியைத் தலைநகராகக் கொண்ட இவர்கள் ‘தென்காசிப் பாண்டியர்கள்’ என அழைக்கப்பட்டனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வரகுணராம பாண்டியன், அதிவீரராமபாண்டியன் முதலியவர்கள் ஆவர். நாயக்கர்கள் தமிழகத்தை ஆண்ட காலப்பகுதியில்தான் மறவர் சீமை என் அழைக்கப்பட்ட ராமநாதபுரம் பகுதியில் சேதுபதிகள் ஆட்சி செலுத்தினர். இவர்கள் பல சமயங்களில் நாயக்கர்களுக்கு அடங்கியும் சிலபோது அடங்க மறுத்தும் கிளர்ச்சி செய்துள்ளனர்.

தமிழகத்தில் நிலவிய நாயக்கங்களை ஆட்சி செய்த நாயக்கர்களின் வம்சாவளிப் பட்டியல்களைப் (Chronology) பின்வருமாறு தரலாம்.

மதுரை நாயக்கர்கள்: (கி.பி. 1529 - 1736) 14

விசுவநாத நாயக்கர் (1529 - ‘64)

கிருஷ்ணப்பநாயக்கர் (1564 - ‘72)

வீரப்ப நாயக்கர் (1572 - ‘95)

இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் விசுவப்ப நாயக்கர் கஸ்தூரி ரங்கப்பநாயக்கர் (1595 - 1601)

முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609)

முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் (1609 - 23) திருமலை நாயக்கர் (1623 -59) குமார முத்து நாயக்கர்

இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் ( - 1659)

சொக்க நாத நாயக்கர் (1659 - 82) மங்கம்மாள்

மூன்றாம் முத்துவீரப்ப நாயக்கர் (1682 - 89)

முத்தம்மாள் மங்கம்மாள் (1689 - 1706)

விசயரங்க சொக்கநாதநாயக்கர் (1706 - 32)
 
மீனாட்சி அரசி (1732 - ‘36) (விசயரங்கரின் மனைவி)

தஞ்சாவூர் நாயக்கர்கள் (1532 - 1673) 15

கேசவப்ப நாயக்கர் (1532)

கௌப்ப நாயக்கர் (1541 - 80)

அச்சுதப்ப நாயக்கர் (1580 - 1600)

இரகுநாத நாயக்கர் (1600 - 1634)

விசயரகு நாயக்கர் (1633 - 1673)


செஞ்சி நாயக்கர்கள்:


செஞ்சி நாயக்கர்களின் வம்சாவளிப் பட்டியல் முறையாகக் கிடைக்கவில்லை. கு. ராஜய்யன் துல்லியமான ஆண்டுகள் இல்லாமல் செஞ்சியின் மன்னர்களைக் கூறுகின்றார். செஞ்சியில் ஆட்சி செய்தவர்களாக வையப்ப நாயக்கர், துபாக்கிக் கிருஷ்ணப்ப நாயக்கர், இராமச்சந்திர நாயக்கர், முத்தையா நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர் என்றழைக்கப்பட்ட இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர், வரதப்ப நாயக்கர், ஐயப்ப நாயக்கர் ஆகியோரைக் குறிக்கின்றார். 16

வரலாற்றிய ஆய்வு:

வரலாற்றுக் காலகட்டங்களைப் பகுத்தாராய்ந்து, வரலாற்றுச் செய்திகளை ஆராய்வதற்கு, வரலாற்றிஞர்கள் கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், ஆவணங்கள் முதலியவற்றையே முதன்மைச் சான்றுகளாகக் கொள்வர். இலக்கியங்களைப் பலரும் தவிர்ப்பது வழக்கம். ஆயின் இந்த ஆய்வு இவ்வகை வரலாற்றுச் சான்றுகளோடு இலக்கியங்கள் வழியாகவும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து ஆய்வை நடத்த வேண்டும் என்னும் கருத்தை முன் வைக்கிறது. அவ்வாறு செய்யப்படும் ஆய்வு வெறும் அரசியல் வரலாறாக இல்லாமல் பொருளாதாரம், சமுக அமைப்புகள், மக்கள் வாழ்நிலை ஆகியவற்றை உள்ளடக்கிய சமுதாய வரலாறாக அமையும் என்றும் வலியுறுத்துகிறது. அந்த அடிப்படையில் தான் நாயக்கர் காலச் சமுதாய வாழ்வானது அக்காலகட்டத்துத் தமிழ் இலக்கியங்களின் துணையோடு ஆராயப்படுகிறது. எனவே இலக்கியங்களே இங்கு முதன்மைச் சான்றுகளாக அமைகின்றன. இலக்கியங்கள், வரலாற்றுச் சான்றுகளாக அமைவதை, இலக்கிய அறிஞர்கள் தெயின், ரெனிவெல்லக், ரீமாக் போன்றவர்கள் வரலாற்றியல் ஆய்வு என்று சொல்வார்கள். இலக்கியங்களை வரலாற்றுச் சான்றுகளாக ஏற்றுக் கொள்வதற்கு உரிய சாத்தியப்பாடுகளையும் வகுத்துத் தந்துள்ளனர். இதற்குத் துணை செய்யும் விதமாக, முதலில் வரலாறு, சமுதாய வரலாறு என்பனவற்றை அறிந்து கொள்வது அவசியம்.

“மாற்றமில்லாத இறந்தகால நிகழ்ச்சிகளின் தொகுப்பே வரலாறு” 17 என அரிஸ்டாடில் தந்த வரையறையிலிருந்து, “சரித்திரம் என்பது மாறாவிதியாக வகுக்கப்பட்டுள்ள வழியில் நிகழும் மாந்திரீகமான இயக்கம் அல்ல; இடைவிடாமல் பாடுபட்டுக் கொண்டிருப்பவனும் சரித்திரத்திற்குரியவனுமான மனிதன் என்ற முழுமூடன் கைகளில் நிரம்பி வடியும் நீருருளை மாதிரியானது சரித்திரம்”18 என்பதுவரை, வரலாறு என்றால் என்ன என்பதற்கான வரையறைகள் பற்பலவிதமாகச் சொல்லப்பட்டுள்ளன. அரசமரபினரின் வாழ்க்கை, பரம்பரை, போர்கள் பற்றியவையே வரலாறு என்று கருதப்பட்ட நிலை மாறிப், பரந்துபட்ட மக்களின் வாழ்க்கைக் கூறுகளை உள்ளடக்கிய சமுதாய வரலாறே ஒரு நாட்டின் முறையான வரலாறாக இருக்கும் என்ற கருத்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் தோன்றியது. ஆட்சியாளர்கள் எப்படி ஆண்டார்கள் என்பது மட்டுமல்லாமல், மக்கள் அவர்களது ஆட்சி முறையை எப்படி எதிர் கொண்டார்கள் என்பதும் வரலாற்றில் அவசியம் இடம் பெறுதல் வேண்டும் என்ற கருத்து இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றது. இத்தகைய போக்கின் சிறப்பான பிரதிநிதியாக ஆங்கில நாட்டு வரலாற்று ஆசிரியர் ஜார்ஜ் மெக்காலே டிரெவெல்யன் (G.M. Trevelyan) குறிப்பிடப் படுகிறார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற டிரினிட்டிக் கல்லூரிப் பேராசிரியராய் இருந்த டிரெவெல்யான், தம்முடைய ‘ஆங்கிலேயரின் சமுதாய வரலாறு’ (Social History of England) என்ற நூலின் முன்னுரையில் வரலாறு என்பது பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். “எவ்வாறு அரசியல் நிகழ்ச்சிகளைச் சமுதாயச் சூழ்நிலை உருவாக்குகின்றதோ அவ்வாறே சமுதாயச் சூழ்நிலை, பொருளாதாரநிலையின் அடிப்படையிலிருந்தே உருவாகின்றது. சமுதாய வரலாற்றைக் கொண்டிராத பொருளாதார வரலாறு சுவையற்றதாக இருக்கும்; அதே போல் சமுதாய வரலாற்றைக் கொண்டிராத அரசியல் வரலாறு எளிதில் விளங்கக் கூடியதாக இருக்காது. சமுதாய வரலாறு பொருளாதார வரலாற்றையும் அரசியல் வரலாற்யையும் இணைக்க உதவ தோடல்லாமல் நல்ல பயனுடையதாகவும் விளங்குகிறது”19வரலாறு என்பது பற்றி இத்தகையதொரு அணுகுமுறை கருத்துலகில் செல்வாக்குப் பெறக் கார்ல்மார்க்சும், பிரெடெரிக் ஏங்கெல்¢சும் இணைந்து வெளியிட்ட ‘கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை’ ஒரு காரணமாக இருந்தது எனலாம். அதில், “இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” 20 என வரலாற்றுக்குப் புதிய விளக்கம் ஒன்றை அவர்கள் அளித்திருந்தனர்.

வரலாற்றுச் சான்றுகளும் இலக்கியமும்:

வரலாறு என்பதற்கான வரையறைகள் பற்றிப் புதிய கண்ணோட்டங்கள் ஏற்பட்ட நிலையில் வரலாற்றை எழுத உதவும் சான்றுகளை மறுபரிசீலனை செய்வதும், மரபுநிலையில் பயன்படுத்தும் சான்றுகள் போதாமல் போகின்ற நிலையில், புதிய சான்றுகளைத் தேடுவதும் தவிர்க்க முடியாதனவாகின்றன. இந்திய வரலாற்றாசிரியர்கள் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், நாணயங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புக்கள் போன்றவற்றையே சான்றுகளாகப் பெரிதும் கொண்டிருந்தனர். அண்மைக்கால வரலாற்றை அறிய அரசுத் தரப்பிலான அலுவலகக் குறிப்புக்கள், அரசு ஆவணங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் முதலியனவற்றைச் சான்றுகளாகக் கொள்கின்றனர். இலக்கியங்களும் வரலாற்றுச் சான்றுகளாகக் குறிக்கப் பட்டாலும் மேற்கூறப்பட்ட சான்றுகள் கிடைக்கின்ற போது இலக்கியச் சான்றுகள் அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை. இவற்றை ஒதுக்கும் போக்குதான் அதிகம் காணப்படுகிறது. பிறசான்றுகள் எதுவும் கிடைக்காத நிலையில் மட்டுமே இலக்கியச் சான்றுகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. தமிழக வரலாறு பற்றிய நூல்களில் இப்போக்கு அதிகம் காணப்படுகிறது. சங்க கால வரலாறு எழுதுவதற்குப் பலரும் இலக்கியங்களையே பெரிதும் ஆதாரமாகக் கொள்கின்றனர் என்பதை நினைவு படுத்திக் கொண்டால் இந்த உண்மை விளங்கலாம்.

வரலாற்று ஆசிரியர்கள் இலக்கியங்களைச் சான்றுகளாகப் பயன்படுத்தத் தயங்குவதற்குப் பொதுவாகச் சில

காரணங்கள் கூறப்படுகின்றன. இலக்கியங்கள், இலக்கண வரன்முறைக்கேற்பச் செய்யப் பட்டவை என்பதும், படைப்பாளியின் கற்பனையையும் உணர்ச்சியையும் உள்ளடக்கியது என்பதும், அதீதமான குறிக்கோள் தன்மை கொண்டவை என்பதும் அத்தகைய காரணங்களுள் முக்கியமானவை. இவையல்லாமல் இடைக்காலத் தமிழ் இலக்கியங்கள் குறித்து மேலும் சில காரணங்கள் கூறப்படுகின்றன.

1. ஏராளமாகக் கிடைக்கின்ற போதிலும் அவை ஒன்றைப் போலவே எழுதப்பட்டு உள்ளன.

2. பெரும் பாலான நூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை.

3. பெரும்பாலும் பொதுமக்கள் பற்றியனவாக அவை இல்லை.

எஸ்.ஜெயப்பிரகாசம் தொகுத்துத்தரும் 21 இக்காரணங்களில் உண்மையில்லாமல் இல்லை. ஆயினும் இவற்றிற்காக இலக்கியங்கள் வரலாறு கூறுவதிலிருந்து ஒதுக்கப்பட வேண்டியவையா என்பது சிந்தனைக்குரியது. மேலும் ‘இலக்கியம் சமுதாயவியல் துறைக்கோ, அரசியல் துறைக்கோ மாற்றுத் துறை அல்ல; அதற்கெனத் தனியான நியாயங்கள் உண்டு” என்று இலக்கியத்தின் தன்மை பற்றிக் கூறுவர்22. எனவே இலக்கியங்களிலிருந்து அவற்றிற்குரிய நியாயங்களின் பின்னணியில் வரலாற்றிற்குரிய சாராம்சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்துவதற்கு முன்பு இலக்கியத்தில் இடம் பெறும் சமூகநிகழ்வின் நம்பகத் தன்மையைச் சோதித்து அறிய வேண்டும். பிறசான்றுகளோடு பொருந்தத் தக்க விதத்தில் உள்ளவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

இலக்கியத்தின் நம்பகத்தன்மை:

சமுதாயத்தில் உறுப்பினனாக வாழ்கின்ற மனிதனால், அந்தச் சமுதாயத்தின் பின்னணியில் தோற்றுவிக்கப்படுவது இலக்கியம். எனவே அடிப்படையில் அது, வாழ்க்கை அனுவங்களை ஒரு கலைப்படைப்பாக வெளிப்படுத்துகிறது.சமுதாயத்தின் அடித்தளமாகக் கருதப்படுகின்ற பொருளாதார உற்பத்தி முறையின் தன்மைகளையும் தாக்கத்தினையும் இலக்கியம் பல வழிகளில் பிரதிபலிக்கிறது. அதனால் தான் இலக்கியத்தைக் காலக்கண்ணாடி என்றும், சமுதாயத்தைக் காட்டுவது என்றும், சமுதாயத்தை விமரிசிக்கிறது என்றும், அனுபவ வெளிப்பாடு என்றும் பலரும் விளக்கிக் கூறுகின்றனர். அவ்வாறாயின் அத்தகைய இலக்கியத்திலிருந்து அந்தச் சமுதாய வாழ்க்கை அனுபவங்களை வடித் தெடுத்துத் தரமுடியும் என்று கருதலாம்.

இலக்கியத்தில் அதன் வடிவத்தின் தன்மைக்கேற்ப கற்பனையும், கவிஞனின் உணர்ச்சிகளும் இடம்பெறும். இந்தக் கற்பனையும் உணர்ச்சியும் கவிஞனின் அல்லது படைப்பாளியின் நேரடி அனுபவத்தையோ அல்லது விருப்பவுணர்வுகளையோ வெளிப்படுத்தும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. ஆனால் விருப்பவுணர்வு என்பது ஒன்றுமேயில்லாத வெறுமையிலிருந்து தோன்றுவது அல்ல; தான் காணுகின்ற ஒன்றின் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை அதில் இருக்கும். இந்தக் கற்பனை சமூக நிகழ்வோடு ஒன்றுபட்டோ அல்லது முரண்பட்டோ நிற்கும். அதனை அறியும் பொழுது கற்பனையின் அளவினையும் ஓரளவு அறிய முடியும்.

இலக்கியத்தை வரலாற்றை அறிதற்குரிய நம்பகமான சான்றாதாரங்களில் ஒன்றாகக் கொள்ளும் போதும், மேற்கூறியவாறு அதன் கற்பனை, உணர்வு முதலியனவற்றைச் சந்திக்கும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எனவே அத்தகைய ஆய்வுகளில் ஈடுபடுகின்றவன் இலக்கியம் என்ற கலையுருவாக்கத்தைப் புரிந்து கொண்டவனாகவும் அதனைத் திறனாய்ந்து மதிப்பிடத் தெரிந்தவனாகவும் இருத்தல் வேண்டும் என்று இலக்கிய அறிஞர் ரெனேவெல்லக் (Rene’ Welleck) கூறுகின்றார். மேலும் இலக்கியத்தில் காணப்படும் இலக்கிய மற்றும் சமூகமதிப்புக்கள், அவ்வாராய்ச்சியாளனுக்¢கு ஒரு பிரத்தி யேகமான பிரச்சினை என்றும் இலக்கியம் என்பது இத்தகைய மதிப்புக்களைக் கொண்டது மட்டுமல்ல; அதுவே மதிப்புக்களின் அமைப்புமாகும் என்றும் அவர் கூறுகிறார்.23 எனவே, இலக்கியத்தின் நம்பகத் தன்மை என்பது, இலக்கியத்திலுள்ள மதிப்புக்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு, திறனாய்ந்து மதிப்பிடுவதன் மூலம் அமையக்கூடும் என்று கருதலாம். இதனை உள்வாங்கியே இந்த ஆய்வில், இலக்கியம் கூறும் உண்மைகள், குறிப்பிட்ட காலத்தின் அழகியல் பூர்வமான மதிப்பீடுகள் என்ற முறையில் திறனாய்ந்து முன்வைக்கப்படுகின்றன.

இலக்கியமும் சமகாலமும்:

மனிதனின் தேவை கருதி உற்பத்தி செய்யப்படும் பலவகைப்பட்ட பண்டங்களைப் போலவே இலக்கியமும் ஓர் உற்பத்திப் பொருளே என்று சிலர் கூறுவர். ஆயின் அது உபயோகிப்பாளனிடம் மறு உற்பத்தி செய்யும் தன்மையும் கொண்டது. இதன் காரணமாக, அது தன்னை உருவாக்கிய - நுகர்கின்ற - ஒரு சமூகத்தின் வெளிப்பாடாகவும் அங்கமாகவும் விளங்கும். ஒரு குறிப்பிட்ட வகையான சமூக அமைப்பு, ஒரு குறிப்பிட்ட வகையான இலக்கியத்தையே உருவாக்கும். அத்தோடு காலத்தின் தேவை, விருப்பம் என்ற இரண்டின் காரணமாக இலக்கியம் தனது சமகாலத்தைக் கூர்ந்து கவனிக்கவும், விமரிசிக்கவும் செய்யும்; அக்கால மக்களுக்கான போதனைகளை உள்ளடக்கியும் இருக்கும். அதனால் இலக்கியப் படைப்புக்களில் அதன் சமகால நிகழ்ச்சிகள், கருத்துக்கள், சமூக மதிப்புக்கள், மாற்றங்கள் போன்றன இடம் பெற்றுவிடுதல் தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் இலக்கியம் சமூக மதிப்புக்களை அப்படியே கண்ணாடி போலப் பிரதிபலிக்கின்றது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. இலக்கியம், குறிப்பிட்ட கவிஞனால் அல்லது எழுத்தாளனால் உருவாக்கப்பெறுவது. இலக்கியப் படைப்பாளி ஒவ்வொருவனுக்கும் தனித்தனியான சார்பு நிலைகள் அல்லது நோக்கங்கள் இருக்கலாம். அந்த நோக்கத்தின் அளவினதாகவே சமுதாயப் பிரதிபலிப்பை அவனது படைப்பில் காணமுடியும். சில நேரங்களில் படைப்பாளியின் நோக்கத்தையும் மீறிச் சில நிகழ்வுகள் அவனது படைப்பில் இடம் பெற்று விடுதல் உண்டு. அது அந்தச் சமூகநிகழ்வின் வீரியத்தைப் பொறுத்து அமையக் கூடியது.

இலக்கியத்துக்கும் சமுதாய நிகழ்ச்சிகளுக்குமான உறவுகளைப் பொதுவாக அறிந்து கொண்ட நிலையில் கி.பி.16 முதல் 18 - ஆம் நூற்றாண்டின் முற்பகுதி முடியவுள்ள தமிழ் இலக்கியங்களைத் தமிழக வரலாற்றுக்குப் பயன்படுத்துவதற்கு- கையாள்வதற்கு- இவ்வாய்வில் கையாண்டுள்ள- முறைகளை இனிக் காணலாம்.

அணுகுமுறைகள்:

இலக்கியங்களை வரலாற்றுச் சான்றுகளாகப் பயன்படுத்துவதற்கு, முதலில் முறையான இலக்கிய வரலாறு ஒன்று அவசியம். சில அடிப்படைகளைப் பின்பற்றி நாயக்கர்கால இலக்கியங்களின் பட்டியல்கள் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன. அவற்றை வரலாற்றுச் சான்றுகளாகப் பயன்படுத்த முனையும் போது சில அடிப்படை அணுகுமுறைகளை - அல்லது நிபந்தனைகளை உறுதி செய்து கொண்டுள்ளது இந்த ஆய்வு. அவை பின் வரும் ஐந்தாகப் பகுக்கப்பட்டுள்ளது.

1. புதிய இலக்கிய வடிவங்கள், வகைகள் தோன்றுவதன் காரணங்களை அறிதல்.

2. பழைய இலக்கிய வடிவம், புதிய உள்ளடக்கத்தை ஏற்றலுக்கான காரணங்களைக்காணுதல்.

3. படைப்பின் சார்பு நிலையும் புலவனின் வரலாறும் உதவும் நிலை.

4. இலக்கிய மரபினை அறுதியிடுதலும்,கற்பனையின் பங்கைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுதலும்.

5. உள்ளடக்கத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிச் சான்றுகளைப் பயன்படுத்துதல்.


புதிய இலக்கிய வகைகள் தோன்றுவதன் காரணங்கள்:

இலக்கிய வகைமை வளர்ச்சி பற்றிக்கூறும் இலக்கியத் திறனாய்வாளர்கள், “இலக்கியத் திற்கும் அரசியல் நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இலக்கிய உருவாக்கம் அரசியல் உருவாக்கத்தில் இருந்து பிரிக்க இயலாதது. அவ்வக்கால அரசுருவாக்கத்தின் வெளிப் பாடாகவே தோன்றுகின்றன”. என்று கூறியுள்ளதோடு, அரசின் தோற்றத் தோடு சங்க கால வீரயுகக் கவிகளும் அதிகாரம் முழுமை பெற்ற பேரரசுக் காலத்தில் பெருங்காப்பியங்களும் பேரரசுகள் சிதைவுற்று எண்ணற்ற சிற்றரசுகளாகச் சிதைந்த போது குறுநில மன்னர் களையும் சிறுதெய்வங்களையும் பாடிய சிற்றிலக்கியங்களும் தோன்றின” என விளக்கவும் செய்துள்ளனர்.24

கி.பி.16 முதல் 18 - ஆம் நூற்றாண்டின் முற்பகுதி முடிய உள்ள காலப் பகுதியில் புதிய இலக்கிய வகைகளாகப் பள்ளு, குறவஞ்சி போன்றன தோன்றியுள்ளன. இவற்றின் தோற்றக் காரணத்தை அறிய அதன் பாடுபொருளையும், அதன் போதனையையும், அதற்கு அவ்விலக்கிய வகை வரித்துக்கொண்ட பாத்திரங் களையும் அறிதல் வேண்டும். அதன் முடிவில் அதற்கான காரணம் எதுவாக இருக்கும் என்ற ஊகத்தைப் பிற வரலாற்றுச் சான்றுகளோடு ஒப்பிடும் போது, அக்காலகட்டத்தில் நிகழ்ந்த சமூக மாற்றத்தை உணர முடியும்.புதிதாகத் தோன்றிய இலக்கிய வகைகள் இரண்டும் மரபுவழியாகப் பாடுபொருளில் தலைமையிடத்தை வகித்து வந்த கடவுள், அரசன், என்ற இருவருக்கும் பதிலாகச் சாதாரண மனிதர்களுக்குப் பாடுபொருளில் தலைமையிடத்தைக் கொடுத்து, பாத்திரங்களாக்கிவிட்டன. மேலும் பாத்திர வார்ப்பு என்ற புதுமை மூலம் இந்நூல்கள் போதித்த போதனை - சைவ, வைணவ சமய வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும். இறைவன் அனைவருக்கும் அருள்செய்யும் தன்மையுடையவன் என்பதாகவே பெரும்பாலும் இருக்கின்றது. இதன் அடிப்படையில் அக்காலப் புலவர்களுக்கு அரசர்களுக்கெதிரான மனநிலை இருந்தது என்றும், நாட்டுப்புறத் தெய்வங்களை வழிபடும் நாட்டுப்புற மக்கள் வைதீக இந்து சமயத்தின் பெரும்பிரிவுகளான சைவ, வைணவத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் இருந்தது என்றும் ஊகிக்க இடமுண்டு. மொழி அடிப்படையில் வேற்று அரசர்களான நாயக்க அரசர்கள் மேலாண்மை செய்த நிலையிலும் அந்நிய மதங்களான இசுலாமிய, கிறித்துவ மதப் பரவல்கள் வலுப்பட்ட நிலையிலும் அவ்வூகத்தில் உள்ள உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இவ்வுண்மைக்கு மேலும் வலுவூட்டும் நிலையில், இப்புதிய இலக்கிய வகைகள் சாதாரண மக்களையும் சென்று அடையும் நிலையில், வட்டார மொழிகளையும் நிகழ்த்துக்கலை வடிவத்தையும் உள்ளடக்கிய தன்மையோடு இருப்பதையும் காணலாம்.

பழைய இலக்கிய வடிவம் புதிய உள்ளடக்கத்தை ஏற்றலுக்கான காரணங்கள்:

இலக்கண வரன்முறைக்கேற்ப மாறாத வடிவத்தோடு இலக்கியம் செய்யப்படுகின்றது என்பது உண்மையேயாயினும், அதன் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாகச் சமகாலத்தின் சூழலே அமைகிறது. ஒரு வடிவம் ஒரு காலகட்டத்தில் ஏற்றிருந்த உள்ளடக்கத்தை மாற்றிக் கொண்டு, இன்னொரு உள்ளடக்த்திற்கு மாறுகின்ற நிலையைச் சமுதாய மாறுதலினால் ஏற்பட்ட விளைவாகக் கொள்ளலாம்.

தமிழ் இலக்கியங்களில் இத்தகைய மாற்றங்களைக் காலந்தோறும் காண முடிகின்றது. கி.பி.16 முதல் 18- ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான தமிழ் இலக்கியங்களில் இப்போக்கு மிகுதியாக இருக்கிறது. காட்டாக, உலா, தலபுராணம், பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, தூது, அந்தாதி, போன்றன தாம் தோன்றிய காலத்தில் பேரரசனையும் பெருந் தெய்வங்களையும் தத்துவத்தையும் பாடின. பின்னர், பேரரசு என்ற தன்மை மாறி வட்டாரத் தலைவனே அரசனாகக் கருதப்பட்ட பாளையக்கார முறையின் காரணமாகத் தலமூர்த்திகளையும் குறுநிலத் தலைவர்களையும் பாடும் தன்மை பெற்றனவாக மாறியுள்ளன. இத்தகைய நிலை இலக்கியத்திற்குரிய சூழலை உணர்த்தக் கூடியதாகும்.

படைப்பின் சார்புநிலையும் புலவனின் வரலாறும்:


ஒரு புலவனின் படைப்பில் அவன் சார்ந்த குழுவின் நலன்களுக்காகப் பரிந்து பேசும் தன்மையைக் காணமுடியும். அப்படியான சார்பின்¢ பொழுது தம் நலனுக்கு எதிரானவர்களையும் முரண்பட்ட கருத்துக் களையும் மறைமுகமாக மறுத்துப் பேசுவதும் காணப்படும். படைப்பின் இந்தத் தன்மையை அறிந்து கொள்ளப் படைப்பாளியின் - புலவனின் சார்புநிலையை அறிவது அவசியம். நமது காலத்திற்கு முந்திய இலக்கியங்களின் சார்புநிலையை அறிவது சற்றுக் கடினமான செயலே. இதற்குப் புலவனின் வரலாறு பற்றிய அறிவும் தேவை. அது இல்லாத நிலையில் அவனது படைப்பின் சார்பு நிலையைக் காண்பது கடினமானது.

புலவனின் வரலாறு பற்றிய சான்றுகள் தெரிந்த நிலையில் அவனது படைப்பின் சார்புநிலையை அறிய முடியும். எடுத்துக்காட்டாகக், கலம்பகம், பிள்ளைத்தமிழ், குறம், அந்தாதி, மாலை என அக்கால இலக்கிய வகைகள் ஒவ்வொன்றையும் பாடியுள்ள குமரகுருபரரிடம் ஒரு போக்குக் காணப்படுகிறது; அக்கால அரசர்களையோ, அதிகாரிகளையோ பாராட்டிப் பாடாத போக்குத் தான் அது. ஆயினும் எதிர்ப்பாகவும் அவை இல்லை என்பதும் உண்மையே. தமிழ் பற்றியும், தமிழ் வேந்தர்கள் பற்றியும் தமிழ் வளர்த்த மதுரை பற்றியும், அக்காலத்தில் சைவம் வளர்க்கப்பட்ட நிலை பற்றியுமே பாடியுள்ளார். அரசர் என்ற நிலையில் சேர, சோழ, பாண்டியரையே அவர் தமிழ் வேந்தர் எனக் குறிக்கின்றாரே தவிர, அக்காலத்திய நாயக்க மன்னர்களை எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. இந்தப் போக்கைச் சைவஞ் சார்ந்த புலவர்கள் பலரிடமும் காணமுடிகின்றது. இவர்கள் தம் காலத்திற்கு முந்திய பழம்பெருமையை நினைவு கூர்வதாகவே பாடியுள்ளனர்.

தமது காலத்திய அரசர்களையும், அவர்களின் பெருமைகளையும் போற்றிப் பாராட்டாத நிலையில், அவர்களுக்குகந்த தமிழ், சைவம் முதலியவை. நாயக்கர்களின் ஆதரவைப் பெற்றிருக்க வில்லை என்பதனை ஊகிக்கலாம். இந்த ஆதரவற்ற தன்மையே பழம்பெருமையை நினைக்கத் தூண்டுகிறது எனலாம். இந்த முடிவோடு பிற சான்றுகளின் உதவியால் கிட்டும் நாயக்க அரசர்களின் இலக்கியப் பணியையும், தெலுங்கு மொழிக்கு அவர்கள் உதவிய நிலையையும், வைணவக் கோயில்களுக்கு அளித்த ஆதரவையும் ஒப்பிடும் நிலையில் சைவ- வைணவ சமயங் களிடையே அரசர்களின் ஆதரவு எதற்கு இருந்தது என்பதும் புலப்படும்.

இந்த அடிப்படையில் புலவனின் குடிப்பிறப்பு, கல்வி, அவனது வாழ்க்கைத் தத்துவம், அவனது வாழ்க்கைத் தேவை பூர்த்தியான விதம் போன்ற தகவல்கள் கிடைக்கின்ற போது, இன்னும் அதிகப் படியாக அவனது படைப்புகளிலிருந்து சமுதாய நிறுவனங்களின் மீதான சார்பு நிலையையும் எதிர்நிலையையும் கண்டு அறியலாம். ஆனால், இத்தகைய தகவல்கள் ஓரளவே கிடைக்கும்;அதிகம் கிடைக்குமா என்பது சிந்தனைக்குரியதே.

இலக்கிய மரபினை அறுதியிடுதலும், கற்பனையின் பங்கைக் கணக்கிலெடுத்துக் கொள்ளுதலும்:


இலக்கியங்களில் காணப்படுகின்ற பொதுவான பண்புகளாகத் தொடர்ந்து வரும் போக்குகளை இலக்கிய மரபு எனலாம். தனிப்பட்ட புலவன் என்ற தன்மையை மீறி ஒரு மரபு அமையக்கூடும். அதன் காரணமாக ஒரே மாதிரியான போக்கு தொடர்ந்து பல இலக்கியங்களில் காணப்படலாம். காட்டாக, உலா என்றால், இவ்வாறு தான் பாட வேண்டும் என்பது ஒரு மரபாகத் தோன்றிய நிலையில் உலாவிற்கென்று ஒரு பொதுவான கட்டமைப்பு ஏற்பட்டு விடுகின்றது. உலாவில் தலைவனுடைய பெருமையைப் பேசுவது என்பது அவனைக் கண்டு எல்லா மகளிரும் காமுற்றனர் என்பதாகும். இது தான், அதன் மரபு என்பது போலாகிவிட்டது.

இலக்கியத்தை சமுதாய வரலாற்றுச் சான்றாகக் கொள்ளும் போது பொதுவாகவுள்ள இத்தகைய மறித்து வரல் கூறுகள் (Recurrences) குறுக்கே நிற்காமல் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. மரபைப் புரிந்து கொள்ளும் பொழுது இத்தகைய போக்குகளைக் குறிப்பிட்ட விகிதத்தில் ஒதுக்குவதில் சிரமம் இருக்காது. உருவம், உத்தி, உள்ளடக்கம் என்ற எல்லாவற்றிலுமே இம்மரபு காணப்படக்கூடும். குறிப்பாக கற்பனை என்பது வரலாற்று ஆய்வாளனின் தேடுதலில் ஒரு தடைக்கல்லேயாகும். ஆனால் இக்கற்பனை இலக்கியத்தில் எவ்வெவ்வகையில் இடம்பெறும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அழகியல் என்ற அடிப்படையிலேயே உவமம், உருவகம், படிமம், குறியீடு முதலியவை இலக்கியத்தில் அமைகின்றன. இவையும் தொடர்ந்து மரபுவழியில் மறித்துவரல் தன்மையைப் பெற்றவையேயாகும்.

ஒரு தலைவனை எல்லா ஆற்றல்களும் உடையவனாகப் பாடுவது மரபு வழியிலான ஒரு கற்பனை. இதே மாதிரியான கற்பனையோடு கூடிய இலக்கியத்தை இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது அதன் திரும்பவரல் தன்மையை நீக்கி விட்டுத் தனிச் சிறப்பான - வித்தியாசமான - கூறுகளை மட்டும் கணக்கில் கொள்வது உதவியாக இருக்கும்.

உள்ளடக்கத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிச் சான்றுகளைத் தேடுதல்:


இலக்கியப் படைப்பின் உள்ளடக்கத்தில் அரசர் பெயர்கள், அரசு அதிகாரிகளின் பெயர்கள், அவர்களது கடமைகள், படைப்பிரிவுகள், படை நடத்தும் முறைகள், போன்ற அரசியல் பொருளாதாரம் பற்றிய சான்றுகளும், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், ஆடை அணிகலன்கள் போன்ற பண்பாடு பற்றிய சான்றுகளும், சமுதாய மதிப்புக்கள், சமுதாயப் படிநிலைகள் போன்றவற்றைப் பற்றிய விமரிசனங்களும் இடம் பெற்றிருக்கும். ஆனால் இதனை அப்படியே அக்காலகட்டத்துக்கு£¤யது எனக் கொள்ள முடியாது. ஏனெனில் இலக்கியத்தில் சமகாலச் செய்திகளோடு பழமையை நினைவு கூர்வதும், போற்றுவதும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையும் கூட இடம் பெற்றிருக்கும். எனவே அதனையும் வரலாற்றுக்கான பிற சான்றுகளோடு ஒப்பிட்டே அதன் நம்பகத் தன்மையைக் காணவேண்டும்.

இலக்கியங்களை வரலாற்றுச் சான்றுகளாகப் பயன்படுத்தும் பொழுது பின்பற்ற வேண்டியவை எனக் கூறப்பட்ட இவ்வைந்து அணுகுமுறைகளில் இது ஒன்றே - உள்ளடக்கத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிச் சான்றுகளைப் பயன்படுத்துதல் - என்ற முறை மட்டுமே பெரும்பாலும் வரலாற்று ஆசிரியர்களால் பின்பற்றப்பட்டு உள்ளது.’தமிழ் இலக்கியங்களை வரலாற்றுச் சான்றுகளாகப் பயன்படுத்தும் விதம்’ பற்றி எழுதியுள்ள வரலாற்றறிஞர் கே.கே. பிள்ளை, உள்பட இவ்வொருமுறையே மட்டுமே கையாண்டு உள்ளனர்25.

நாயக்கர்கள் காலத்து இலக்கிய வடிவங்களான உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், பரணி, கோவை, அந்தாதி, தூது, தலபுராணம், சதகம், பள்ளு, குறவஞ்சி போன்றன இலக்கண வரன்முறைக்கேற்ப ஒன்று போலச் செய்யப்பட்டது என்றாலும், அதன் அமைப்பில் வேறுபடுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன.எடுத்துக் காட்டாக, உலாவில் தலைவனை ஏழுபருவ மகளிர் கண்டு காமுறுவது என்பது பொதுவானதாக உள்ளது. ஆனால் ஏனைய சில பகுதிகள் வேறுபட்டு உள்ளன. வட்டாரத் தலைவன் உலா வரும் பொழுது அவனுடைய பரிவாரங்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. தலமூர்த்திகள் உலா வரும் போது அன்றையச் சமுதாயத்தில் இருந்த சாதிப்பிரிவுகள், அவற்றிற்குள்ள சமூகக் கடமைகள் போன்றன கூறப்படுகின்றன. இதுபோலவே கலம்பகம், தூது, பிள்ளைத்தமிழ், பரணி, கோவை, அந்தாதி, தலபுராணம் போன்றவற்றிலும் பாட்டுடைத்தலைவனின் மாறுபாட்டினாலும், பாடப்படும் இடத்தின் - களனின் - மாறுபாட்டினாலும் சமுதாய வரலாற்றுக்கான பல சான்றுகளைப் பெற முடியும்.

வேளாண்மை உற்பத்தி முறையின் அனைத்துச் செய்திகளையும் கொண்டனவாகப் பள்ளு நூல்களும், வேளாண்மை உற்பத்தியின் மூலதனமான நிலத்தின் உரிமையாளர்களான வேளாளர்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டனவாகச் சதகங்களும் உள்ளன. இக்கால கட்டத்தில் தோன்றிய புதிய இலக்கிய வகையான குறவஞ்சி இரண்டு பகுதிகளைக் கொண்டது. குறுத்தி, தலைவிக்குக் குறி சொல்லும் பகுதி ஒன்று. இது சமயம் சார்ந்தது. புலவன் சார்ந்த சமயத்தின் கடவுள் அங்கு பாராட்டப்படுகின்றார். இரண்டாவது பகுதி குறவனும் குறத்தியும் சந்தித்துக் கொள்வது. இப்பகுதியில் தான் சமுதாயவியல் செய்திகள் அதிகம் உள்ளன. நில உரிமை, நிலங்களின் தன்மை, ஆடை அணிகலன்கள் பற்றிய குறிப்புக்கள், நாட்டுப் பிரிவுகள், அவற்றின் தலைவர்கள் பற்றிய குறிப்புக்கள் முதலியன அதில் இடம் பெறுகின்றன.இவற்றைத் தேடிப் பிற சான்றுகளுடன் ஒப்பிடும் நிலையில் அவை சமுதாய இயல் ஆய்வுக்கு மிகுந்த பயனளிப்பனவாக அமையும்.

நாயக்கர் காலத் தமிழ் இலக்கியங்கள்:

தமிழக வரலாற்றில் நாயக்கர்களின் மேலாண்மை நிலவிய காலத்தையும், இலக்கியங்கள் வரலாற்றுச் சான்றுகளாகும் முறைகளையும் அறிந்த நிலையில் அக்காலகட்டத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்களைப் பகுத்துக் காண்பது இங்கு அவசியமாகும்; ஏனெனில் இவ்வாராய்ச்சியின் முதன்மைச் சான்றாதாரங்கள் அவையே. அக்காலத்திய புலவர்களின் சமயச் சார்பு, புரவலர் ஆதரவு, இடப் பின்னணி முதலியன அக்காலச் சமுதாய ஆய்வில் பயன்படக் கூடியனவாகலின் இத்தகைய விவரங்களுடன் கூடிய புலவர் அகர வரிசைப்பட்டியல் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது. (பின்னிணைப்பு எண்: 1 - 3) இப்புலவர்களின் காலங்களைக் குறிப்பிடுவதற்கு அவர்தம் நூல்களைப் பிற்காலத்தில் பதிப்பித்தவர்களின் குறிப்புரைகளும் இலக்கிய வரலாறுகளும் ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளன.

இவ்விலக்கியங்கள் பற்றிய கால ஆராய்ச்சி, இங்கு மேற்கொள்ளப்படவில்லை. ஏனெனில், அதுவே, தனி ஆராய்ச்சிக்குரிய பொருளாகும். இலக்கிய வரலாற்றாசிரியர்கள் பலரும் ஒத்துக் கொள்கின்ற காலம் இங்கு ஏற்புடையதாகக் கருதப்படுகிறது.அவற்றுள் பெரும் முரண்பாடு இல்லை என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது.தமிழிலுள்ள இலக்கிய வரலாறுகள் நாயக்கர்களின் காலத்தைப் பொதுவாகச் சிற்றிலக்கியங்கள் காலம் என்று கருதுகின்றன. தமிழிலுள்ள ‘96 வகைப் பிரபந்தங்கள்’ பற்றிய வழக்காறுகளும் விளக்கங்களும் இக்கால கட்டத்திலும், இதற்குச் சற்று முன்னும் பின்னும் தோன்றிய பாட்டியல் இலக்கணங்களிலேயே உள்ளன.

நாயக்கர் காலத்திய பெரும்பான்மை இலக்கியங்களான சிற்றிலக்கியங்களில் மூன்று வகையான போக்குகள் நோக்கத்தக்கன. அவை:

1. முன்பே இருந்த பழைய வடிவத்தில் புதிய உள்ளடக்கத்தைத் தருதல்.

2. முன்பு உட்கூறுகளாக இருந்தவை புதிய வடிவமாக மாற்றம் பெறுதல்.

3. புதிய வடிவம் புதிய உள்ளடக்கத்தோடு புதிய இலக்கியமாகத் தோன்றுதல்.

முன்பே இருந்த பழைய வடிவம், புதிய உள்ளடக்கம் பெற்றனவாகப் புராணம், உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, சதகம் ஆகியனவற்றைக் கூறலாம். முன்பேயிருந்த சிறு உட்கூறுகள் புதிய வடிவம் பெற்ற போக்குக்குத் தூது, மாலை, காதல் யமகம், திரிபு, அந்தாதி, ஊசல் முதலியவற்றைக் கூறலாம்.புதிய வடிவமும் புதிய உள்ளடக்கமும் பெற்றனவாகப் பள்ளு, குறவஞ்சி என்ற இரண்டையும் கூறலாம். இவ்விரண்டும் நாயக்கர் காலத்தில் கி.பி.17 - ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கிய வடிவங்கள் ஆகும். இனி, இம்மூன்று போக்குகளையும் விரிவாகக் காணலாம்.

பழைய வடிவம், புதிய உள்ளடக்கம்:


வேதங்களிலும் இதிகாசங்களிலும் இருந்த கதைக் கூறுகளை விதந்தோதுவது புராணம் என்னும் இலக்கியவகை, இவ்வகையில் தமிழில் முதல் நூல்கள் புராண சாகரமும் சாந்தி புராணமும் ஆகும். இதனை யாப்பருங்கல விருத்தி மூலம் அறிய முடிகின்றது. அடுத்து, கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அஷ்டாதசபுராணம், கன்னிவன புராணம் என்ற இரண்டு பற்றிச் சாசனங்கள் கூறுகின்றன. 26 கி.பி. 15 -ஆம் நூற்றாண்டுவரை இத்தகைய புராணங்கள் தோன்றிய நிலையைக் காணலாம். அதன் பின் ஊரையும் அவ்வூரில் உள்ள கோயிலையும், அக்கோயிலில் எழுந்தருளியுள்ள தலமூர்த்தியையும் பாடும் தலபுரணமாக இது மாற்றம் பெற்றது. கி.பி. 16 - 18 ஆம் நூற்றாண்டளவில் நூற்றுக்கணக்கான தலபுராணங்கள் தோன்றியுள்ளன. அதிவீரராம பாண்டியன், வரதுங்கராம பாண்டியன், வடமலையப்பபிள்ளை, மறைஞானசம்பந்தர், சைவ எல்லப்ப நாவலர், சிவப்பிரகாச சுவாமிகள், கருணைப் பிரகாசர், பரஞ்சோதி முனிவர், அந்தகக் கவி வீரராகவ முதலியார் முதலானோர் தலபுராணம் பாடியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

‘ஆதியுலா’ என அழைக்கப்படும் திருக்கைலாய ஞானவுலா, இறைவனின் உலாச் சிறப்பைப் பாடுவது. அவ்வடிவம், பின்னர் பேரரசுச் சோழர்கள் காலத்தில் ‘மூவருலா’ க்களாக மாற்றம் பெற்று அப்பேரரசர்களின் உலாச்சிறப்பைப் பாடுவதாக ஆகியது. பின்னர் நாயக்கர் காலத்தில் வட்டாரத் தலைவர்களையும் தலமூர்த்திகளையும் பாடும் உலாக்களாக வடிவம் பெற்றது. படிக்காசுப்புலவர், சேறைக் கவிராச பிள்ளை, அந்தகக்கவி வீரராகவ முதலியார். திரிகூடராசப்பக் கவிராயர் முதலி யோர் இக்காலகட்டத்தில் பல உலாக்களைப் பாடியுள்ளனர்.

‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்ற தொல்காப்பியக் குறிப்பு பேரரசுச் சோழர்கள் காலத்தில் பேரரசனைப் பாடும் பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆக (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்) - வடிவம் கொண்டது. நாயக்கர் காலத்தில் வட்டார உணர்வையும் இறைவனின் தலப்பெருமை யையும் உள்ளடக்கிக் கொண்டு பல பிள்ளைத்தமிழ்கள் எழுந்தன. குமரகுருபரர், சேறைக்கவிராச பிள்ளை, கமலை வைத்தியநாத தேசிகர் முதலானவர்கள் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

தமிழில் முதலில் தோன்றிய நந்திக் கலம்பகம், பல்லவ மன்னனின் புகழ் பாடுவது, இவ்வடிவம் நாயக்கர் காலத்தில் தலப்பெருமைகளையும் தலமூர்த்திகளையும் பாடும் வடிவமான உருக்கொண்டது. படிக்காசுப்புலவர், குமரகுருபரர், பிள்ளைப்பெருமாள் அய்யங்கார், சிவப்பிரகாச சுவாமிகள் போன்றோர் முக்கியமான கலம்பகப் புலவர்கள் எனலாம்.

பாண்டிய மன்னனைத் தலைவனாகக் கொண்டது பாண்டிக்கோவை. இதன் முன்னோடியான மணிவாசகரின் திருக்கோவையார் சிவனின் புகழைப் பாடுகிறது. நாயக்கர் காலத்தில் தோன்றிய கோவைகளோ காலச் சூழலுக்கேற்பத் தல மூர்த்திகளன்றியும் வட்டாரத் தலைவர்களையும் பாடியுள்ளன.

தமிழில் நூறு பாடல்கள் கொண்ட இலக்கிய வடிவமாகப் பதிற்றுப்பத்து முதலில் நிற்கிறது. இந்த நூறு என்ற எண்ணிக்கை, சமஸ்கிருதத் தாக்கத்தினால் சதம் - சதகம் என்ற பெயருடன் மணிவாசகரிடம் திருச்சதகமாகவடிவம் கொண்டது. திருச்சதகம் முழுமையும் சிவனின் அற்புதங்களையும் பெருமைகளையும் பாடும் நூல். இவ்வடிவம் நாயக்கர் காலத்தில் ‘நூறு’ என்ற எண்ணிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளடக்கத்தில் பெரும் மாற்றத்தை அடைந்தது. இவ்வகையில் அக்காலத்தில் தோன்றிய பல மண்டல சதகங்களும் மற்றும் தண்டலையார் சதகம், குமரேச சதகம், அறப்பளீசுர சதகம், கயிலாசநாதர் சதகம் முதலியனவும் குறிப்பிடத்தக்கன. அவை, வட்டாரத் தலைவர்களைப் பற்றியும், அக்காலத்திய அறங்களை - சமூக நீதிகளைப் - பேசுவனவாகவும் எழுந்தன.அறக்கருத்துக்களைக் கூறும் வடிவமாகச் சதகம் என்ற இத்தகைய இலக்கிய வடிவம் கி.பி. 16 - ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தெலுங்கு மொழியில் காணப் படுகிறது.27 தெலுங்கர்களான நாயக்கர்களின் வருகையோடு இத்தகைய உள்ளடக்கம் தமிழில் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.

முன்பே இருந்த சிறுகூறுகள் புதிய வடிவம் கொள்ளுதல்:

இலக்கிய வடிவத்தின் உட்கூறுகளாக இருந்து வந்த பகுதிகள் சில, முழுமையான வடிவமாக உருப் பெற்றதொரு போக்கு, இக்காலப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இவையும் அக்காலச் சூழலுக் கேற்ப வட்டாரத் தலைவர்களைப் பாடுவது, தலப் பெருமைகளைப் பாடுவது, தலமூர்த்திகளின் சிறப்பைப் பாடுவது என்ற உள்ளடக்கங்களைத் தாங்கி வெளிவந்தன.

எடுத்துக் காட்டாகத் தமிழில் ஆதியிலக்கியங்களாகக் கருதப்படும் சங்கப்பாடல்களான தொகை நூல்களில் அகப்பாடல்களிலும் புறப்பாடல்களிலும் தூது என்பது ஓர் இலக்கியக் கூறாக உள்ளது. இப்போக்கினைக் காவியங்கள் வரை காணலாம். ஆனால் நாயக்கர் காலத்தில் அது தனி இலக்கிய வடிவமாக மாற்றம் பெற்றுள்ளது. முதல் தூது நூல் எதுவென முடிவாகக் கூற முடிய வில்லை என்றாலும், தனி வடிம் பெற்றமை இக்காலகட்டத்தில் தான் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

இத்தூது நூல்களுக்குள்ளேயும் விறலிவிடுதூது என்ற ஒரு தனிவகையும் பிற தூதுக்கள் என்ற தனிவகையும் என இரண்டு வடிவங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ‘விறலிவிடுதூது’ க்கள் வட்டாரத் தலைவர்களின் புகழ் பாடுவனவாக அமைகின்றன. கூளப்பநாயக்கன் என்பவரின் மேல் கூளப்பநாயக்கன் விறலிவிடு தூதும், வடமலையப்பன் பேரில் விறலிவிடுதூதும்,மூவரையன் விறலிவிடுதூதும் விறலிவிடு தூதுக்களில் குறிப்பிடத்தக்கன. ஏனைய தூது நூல்களில் பணவிடுதூது, மான்விடுதூது போன்றனவும், தலமூர்த்திகளின் மேல் நெஞ்சுவிடுதூதுக்களும், சண்பகநல்லூர் சிவன் வண்டுவிடுதூது, அழகர் கிள்ளை விடுதூது, பத்மகிரி நாதர் தென்றல்விடுதூது போன்றனவும் எழுந்தன.

இவ்வாறே அக இலக்கியக் கூறான காதல் என்ற உணர்வு தனி இலக்கிய வடிவமாக ஆகியுள்ளது. ஆனால் இங்குள்ள ‘காதல்’ காம உணர்வோடு கூடியதேயன்றிச் சங்கக்காதல் ஆகாது. எனினும் சொல்லளவில் மட்டுமே ஒற்றுமை இருக்கிறது. இவ்வகையில் கூளப்பநாயக்கன் காதல், கந்தசாமிக்காதல் ஆகியன குறிப்பிடத் தக்கனவையாகும். இனிப் பிள்ளைத்தமிழில் பத்துப் பருவங்களில் ஒன்றான ஊசல், ஊசல் இலக்கியமாகி சீரங்கநாயகர் ஊசலாகவும், கலம்பக உறுப்புக்களில் ஒன்றான மாலை, தனி வடிவம் பெற்று மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை, சிதம்பரநாதர் மும்மணிமாலை எனவும் நாயக்கர் காலத்தில் எழுந்தன.

அந்தாதி என்பது யாப்பு வகைகளுள் ஒன்று. இது நாயக்கர் காலத்தில் தனி இலக்கிய வகையாக வளர்ச்சி பெற்றுள்ளது. தலமூர்த்திகளின் பெருமை பேசும் இவ்வந்தாதி வடிவத்திலேயே நூறு பாடல்கள் பாடுவது ‘நூற்றந்தாதி’ எனவும், ‘பதிற்றுப்பத்தந்தாதி’ எனவும் பெயர் பெற்றது. இவ்வாறே செய்யுள் அமைப்பிற்கு முக்கியத்துவம் தரும் யமகம், திரிபு போன்ற வடிவங்களும் இக்காலகட்டத்தில் தோன்றின. ஆயின் எழுத்துக்களையும் சொற்களையும் வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டும் வடிவங்களாக இருந்தனவே யன்றிச் சரியான இலக்கியச் தகுதியை இவற்றால் அடைய முடியவில்லை.

புதிய வடிவம் புதிய உள்ளடக்கம்:

கி.பி. 16 - ஆம் நூற்றாண்டிற்குப்பின் (அதற்கு முன்னில்லாத) புதிய உள்ளடக்கமும் புதிய வடிவமும் கொண்டு, பள்ளு, குறவஞ்சி என்ற இரண்டும் தோன்றின. இதற்கு முன்பிருந்த உழத்திப்பாட்டே பள்ளு நூலாகவும், குறம் என்ற கலம்பக உறுப்பிலே குறவஞ்சியாகவும் வெளிவந்தன எனக் கூறுவது மரபு; ஆயின் உழத்தி, குறத்தி எனும் சொற்கள் அன்றி, இவற்றுள் வேறு ஒற்றுமைகள் இல்லை. உழத்திகள் கூடியிருந்து பாடுகின்றவை உழத்திப் பாடல்கள்; பள்ளு நூல்களின் அமைப்பு இதன் போக்கிலிருந்து முழுக்க வேறுபட்டது. அதுபோலவே, குறம் என்பது குறி சொல்வதை மட்டுமே குறிக்கக் , குறவஞ்சி அதனுடன் குறவன் - குறத்தி வாழ்க்கையையும், குறவன் - குறத்தி உரையாடல்களையும் கூறுவதாக அமைகின்றது.

கி.பி. 17, 18 - ஆம் நூற்றாண்டளவில் பல பள்ளு நூல்கள் எழுந்துள்ளன. திருவாரூர்ப் பள்ளு, முக்கூடற் பள்ளு, குருகூர்ப் பள்ளு, மன்னார் மோகனப் பள்ளு, சீர்காழிப் பள்ளு, செண்பகராமன் பள்ளு வையாபுரிப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, மாந்தைப்பள் (‘பள்ளு’ என்றில்லாமல் ‘பள்’ என்றே இந்நூற்பெயர் அமைந்துள்ளது). பட்பிரபந்தம் (வடகரைப்பாளையக்காரனைப் பாடும் இந்நூல் பிரபந்தம் என்ற சொல்லைக் கொண்டிருப்பினும் ஏனைய பள்ளு நூல்களின் வடிவிலேயே உள்ளது) முதலியன குறிப்பிடத்தக்கன. குறவஞ்சி நூல்களுள் முதலில் தோன்றியது குற்றாலக் குறவஞ்சி. இது நாயக்க மன்னர்களின் கடைசிக் காலமான கி.பி.1700- க்குப்பின், விசயரங்க சொக்கநாதன் காலத்தில் தோன்றிய நூல். இதனையொட்டியே தோன்றிய பிற குறவஞ்சிகள் கும்பேசர் குறவஞ்சி, தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி முதலியனவாகும்.

தனிப்பாடல்கள்:

நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் மேற்காட்டிய சிற்றிலக்கிய வடிவங்கள் தவிரப்பல தனிப் பாடல்களும் தோன்றியுள்ளன. புரவலர்களைப் புகழ்ந்து மிகவும் அருகியே உள்ள தனிப் பாடல் களின் போக்கு, இங்கு மேற்கொள்ளப் பெறும் சமுதாய ஆய்வுக்கு மிகவும் துணையான ஒன்றாகும். வட்டாரத் தலைவர்களையும் தலமூர்த்திகளையும் பாடியுள்ள புலவர்களே கூடத் தனிப் பாடல்களில் சமூக உண்மைகளை நடுநிலையில் நின்ற விமரிசிப்பவர்களாக உள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட புலவர்களின் தனிப்பாடல்கள் இக்காலத்தனவாகக் காணப்படுகின்றன. அத்துடன் கி.பி.16 - 18 - ஆம் நூற்றாண்டளவில் இருந்த அரசர்களையும், அதிகாரிகளையும் வட்டாரத் தலைவர்களையும் மையப் படுத்தி சில நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் தமிழில் தோன்றியுள்ளன. அவற்றுள் நாயக்கர்கால அரசியல் சமூக நிகழ்ச்சிகளை உள்ளடக்கியன இவ்வாய்வுக்குரிய தரவுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்புக்கள்

1. K.A. Neelakanta Sastri, ‘A History of South India. p.174.

2. Ibid., p.172

3. தி.வை. சதாசிவ பண்டாரத்தார், ‘பிற்காலச் சோழர் சரித்திரம்’ . ப. 12.

4. K.A. Neelakanta Sastri, op.cit., pp.211 - 212.

5. கே.கே.பிள்ளை, ‘தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்’, பக். 386 - 388.

6. A. Krishnaswami, ‘The Tamil Country under Vijayanagar’, p.1.

7. K.A. Neelakanta Sastri, op.cit., p.239.

8.A. Krishnaswami, op.cit., pp. 1 - 2

9. Ibid., pp.17-19 and pp.29-34.

10. Ibid., pp. 177- 180; கு. ராஜய்யன், ‘தமிழக வரலாறு 1565 - 1967’, ப. 7.

11. R. sathyanatha Aiyar, ‘History of the Nayaks of Madura’, p.39.

12.Ibid., p.37.

13.கு. ராஜய்யன், முந்நூல், ப.9.

14.R. Sathyanatha Aiyar, op.cit., p.V

15. அ.கி. பரந்தாமனார், மதுரை நாயக்கர் வரலாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பட்டியல்

16.கு. ராஜய்யன், முந்நூல், பக். 9 - 10, & 13 - 16.

17.Aristotle, (Quoted by) N. Subramanian, ‘Histriography’, p.4

18.எv.ஏ. டாங்கே, ‘பண்டைக்கால இந்தியா’, ப. 31.

19. ஜி.எம்.டிரெவெல்யான், ‘ஆங்கிலேயரின் சமுதாய வரலாறு - I பக். IV - V.

20. மார்க்ஸ், ஏங்கல்ஸ், ‘தேர்வு நூல்கள் - I , ப. 190.

21. S. Jeyaprakasam, ‘Social Life of Tamils c.A.D.846- A.D. 1279, pp. 6 - 7

22. Austin Warren and Rene Wellock, ‘Theory of Literature, p.106, (Quoted by) M.E. Manickavasagom pillay, Culture of the Ancient Cheras, p.1.

23. Rene Wellock, David Lodge, (Ed.) 20th Century Literary Criticism - A Reader’ p.553.

24. கா. சிவத்தம்பி, (மேற்கோள்), அ.மார்க்ஸ், சிற்றிலக்கியங்கள் சில குறிப்புக்கள், ப.8

25.K.K. Pillay, Studies in the History of India with Special references to Tamil Nadu (Ref: First Chapter).

26.வே. கிருஷ்ணசாமி, தலபுராண இலக்கியம், ப.12

27. ச.வே. சுப்பிரமணியன், ‘திராவிட மொழி இலக்கியங்கள், ப.196.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தமிழில் நடப்பியல் இலக்கியப் போக்குகள்