தங்கர் பச்சானின் சொல்முறையும் கருமேகங்கள் கலைகின்றன என்ற அண்மை சினிமாவும்
தங்கரின் எல்லா சினிமாக்களையும் பார்த்திருக்கிறேன். அம்மாவின் கைபேசியையும் களவாடிய பொழுதுகளையும் ஏன் பார்க்க நினைத்தோம் என்று நினைத்ததுண்டு. இவ்விரண்டு படங்களிலும் அவரது சொல்முறையை விட்டு விலகியதே காரணம் எனச் சமாதானம் செய்துகொண்டதுண்டு. அவருக்குக் கைவராத சொல்முறையொன்றை முயற்சி செய்த அவ்விரு படங்களும் அவருக்கு எந்தவிதத்திலும் பெயர் வாங்கித்தரவும் இல்லை. வசுல் அளவிலும் அவரைக் காப்பாற்றவுமில்லை.
அவரது அடையாளமாக நான் நினைப்பது அவரது சொல்முறையைத்தான். தனது பார்வையாளர்களுக்கு நேர்கோட்டில் கதை சொல்ல வேண்டும் என்று எப்போதும் விருப்பம் கொண்டவர்;நினைப்பவர் தங்கர்பச்சான். அவரது முதல் மூன்று படங்களிலும் - அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல் ஆகிய மூன்று படங்களிலும் இந்த எச்சரிக்கை உணர்வு பளிச்சென்று வெளிப்பட்டிருந்தது. காலத்தொடர்ச்சியில் முன்னும்பின்னுமாகக் காட்சிகளை நகர்த்தும்போது பார்வையாளர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டு விலகும் வாய்ப்பு உண்டு என்பதற்காகத் தொடர்ச்சியைக் கொண்டுவரவேண்டும் என நினைத்தே காட்சிகளை அமைத்திருப்பார். அப்படி அமைப்பதற்கு அவர் தேர்வுசெய்த கதைகளின் வெளிகள் பொருத்தமாக உதவியிருந்தன. வெவ்வேறு இடப்பின்னணி, காலப்பின்னணி மாற்றங்களைக் காட்டி - எழுத்தால் எழுதிக்காட்டி கதையை நகர்த்திப்போவார். அந்தத் தன்மையை அவரது நாவலான ஒன்பது ரூபாய் நோட்டைப் படமாக்கியபோது கொஞ்சம் தவற விட்டிருந்தார். என்றாலும் பார்வையாளர்களுக்குப் புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படவில்லை. முதன்மைக் கதாபாத்திரங்களுக்குத் தேர்வு செய்த சத்யராஜ், அர்ச்சனா, நாசர்,ரோகினி ஆகியோரைத் தவிர மற்றவர்களின் நடிப்புப்போதாமையில் அந்தப் படம் சொதப்பலாக மாறிவிட்டது.
சினிமாவில் எளிமையாகக் கதை சொல்லல் என்பதற்குக் காலவரிசையும் வெளி சார்ந்த அடையாளங்களும் முக்கியம். இவ்விரண்டையும் திரும்பவும் கைக்கொண்ட படமாகக் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தை உருவாக்கியிருக்கிறார். அந்தப் படம் திரையரங்குகளுக்கு வந்து ஒருசில நாட்களிலேயே தூக்கப்பட்டு விட்டதால் அப்போது பார்க்கவில்லை. இன்று பிரைம் தளத்தில் பார்க்கமுடிந்தது.
குற்றமனம் கொண்ட பெரியவர் ஒருவரையும், குற்றமனமற்ற இளைஞன் ஒருத்தனையும் ஒரே புள்ளியில் சந்தித்திக்க வைத்து அவர்களுக்கான முடிவுகளை நோக்கிக் கதையை நகர்த்தியுள்ளார் தங்கர் பச்சான். வழக்கறிஞர் தொழிலில் இருந்தபோது தன்னிடம் வழக்குக்காக வந்த பெண்ணைத் தனது தனது காம இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டதால் உண்டான குற்றமனத்தின் துரத்தலைத் தனது தவிக்கும் மெய்ப்பாடுகளால் கொண்டுவந்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அதேபோல் தனது தவறான காதலால் ஏற்படும் பெரும்பெரும் சிக்கல்களை அதன் போக்கில் ஏற்றுக் கடக்கும் பாத்திரமொன்றில் நடித்துள்ள நடிகை மஹானாவும், அவருக்கு உதவும் குற்றமனமே இல்லாத இளைஞராக யோகிபாவும் பாத்திரங்களுக்கான நடிப்பைத் தந்துள்ளனர். இம்மூவரின் நடிப்பிலும் மஹானாவின் நடிப்பே முதன்மையான பொருத்தம் கொண்ட து. இவரைப் போன்ற நடிகைகளே நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கான தேவை.
நீதிபதி பாரதிராஜா, பரோட்டா மாஸ்டர் யோகிபாபு ஆகியோரைச் சமநிலைத்தன்மை கொண்ட மையப்பாத்திரங்களாக்கித் திரைக்கதையை உருவாக்கியுள்ள தங்கர் பச்சான், இருவருக்குமான பின்னணிக்கதையை நகர்த்துவதற்கு அவர்களின் இடம் சார்ந்த பின்னணிகளைப் பயன்படுத்தியுள்ளார். கும்பகோணம்,மானாமதுரை, ஒட்டன் சத்திரம், ராமேஸ்வரம் எனக் கதைக்கான வெளிகள் சென்னையின் நகரவாழ்க்கையிலிருந்து நகர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நகர்வு காரணமாகப் பல்வேறு பாத்திரங்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அதனதன் அளவில் முழுமையான பாத்திரங்களாகவே அமைந்துள்ளன. பாடல்களும் கூடக் கதைப்போக்கில் தேவையாக சேர்க்கப்பட்டுள்ளன.
வழக்கு, நீதி போன்றவற்றில் அப்பாவின் போக்கிற்கு மாறான பார்வை கொண்ட மகன் பாத்திரத்தில் - குற்றவியல் வழக்குரைஞர் பாத்திரம் ஏற்று நடிக்கும் கௌதம்வாசுதேவ் மேனன் பாத்திரத்திற்கு முழுமையான கதை இருப்பதைப் போல, அவரால் கைவிடப்பெற்ற அமுதவல்லியின் பெண்ணான கண்மணிக்கும் ஒரு முழுமையான பின்னணிக்கதையை உருவாக்கியிருக்கிறார். அதேபோல் பரோட்டா மாஸ்டரால் காப்பாற்றப்படும் பெண்ணைக் காதலித்து ஏமாற்றும் பாத்திரத்திற்கும், குடும்பப் பின்னணியோடு கூடிய கதையைக் கச்சிதமாகத் தந்துள்ளார். அவனது செயல்களை ஏற்காத தங்கை பாத்திரத்தில் செம்மலர் அன்னம் நடித்திருக்கிறார். இயக்குநர் பாரதிராஜா மட்டுமல்லாமல் அவரது நண்பர்களாக வரும் சந்திரசேகர், டெல்லி கணேஷ் போன்றவர்களுக்கும் அடையாளம் நிரம்பிய பாத்திரங்களைத் தரவேண்டும் என நினைத்துள்ளார். அதேபோல் அரசியல்வாதி பாத்திரத்தை ஏற்ற பிரமிட் நடராஜன் என ஒவ்வொருவரும் பொருத்தமான நடிப்பைத் தந்துள்ளனர்.
சட்டப்படியான தண்டனையை வழங்க வேண்டுமென நினைத்து நீதிபதி பதவியின் கௌரவத்தைக் காப்பாற்றியவர், வழக்குரைஞராக இருந்தபோது செய்த தவறுக்கான தண்டனை என்ன? யார் அந்த த் தண்டனையை வழங்குவார்கள் என்று அவரை ஏற்க மறுத்த காதலியின் மகளின் ஆவேசமான சொற்களை ஏற்றுக் கடலை நோக்கிச் சென்றவரைக் கடற்கரையில் நிறுத்திக் காட்டிக் கதையை முடித்துள்ளார் தங்கர். ராமேஸ்வரம் கடலும் அலைகளும் இறுதிச் சடங்குகளுக்கான முடிவிடம் என்பது பொது நம்பிக்கை. அதைக் குறிப்பாக க்காட்டுவதோடு படம் முடிந்துள்ளது.
நிதானமான ஓட்டமும் திருப்பங்களும் கொண்ட கதையொன்றைச் சினிமாவாகப் பார்க்க நினைப்பவர்கள் அமேசான் பிரைமில் இருக்கும் தங்கரின் பட த்தைப் பார்க்கலாம்.
கருத்துகள்