ஒரு கதையும் ஒரு கவிதைத் தொகுப்பும்


உலகத்துச் சிறுகதை

கதைக்குள் நிகழும் உரையாடல்கள் அந்தக்கதையைக் கொங்குவட்டாரக்கதையாக முன்வைக்கிறது. ஆனால் அதன் உரிப்பொருள் - முதுமையில் தனித்திருக்க நேர்வது- என்ற உரிப்பொருள் சார்ந்து நில எல்லைகளைத் தாண்டி உலகக் கதையாக நகர்த்தப்பட்டுள்ளது. அப்படி நகர்த்துவதற்குத் தனது சொல்முறையைக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார் ஷான் கருப்பசாமி.
தனது பணியிட த்துக்கு காரில் செல்லும் பள்ளி முதல்வர் ராதிகாவின் பயணத்தைக் குலைத்துவிடும் கண்ணாடிப்பாட்டியுடன் ஏற்படும் மோதல் வழியான அறிமுகம் அடுத்தடுத்த நிகழ்வுகள் வழியாக அவரது மொத்த வாழ்க்கையும் வாசிப்பவர்களுக்கு விரித்துக்காட்டப்படுகிறது. அந்த விவரிப்பில் கண்ணாடிப்பாட்டியின் வாழ்க்கை மட்டுமல்லாது, அவரது அன்றாட வாழ்வில் வந்துபோகும் தேநீர்க்கடை ஆறுமுகம், உறவுக்காரரான தங்கராசு ஆகியோரின் இயல்பான குணங்களும் சொல்லப்படுகின்றன. அதேபோல் ராதிகாவின் ஓட்டுநர் அன்வரின் குணமும் கூட அதன் இருப்பிலேயே காட்டப்படுகின்றன.

கதாபாத்திரங்களின் வார்ப்பை அதனதன் இயல்பில் எழுதுவது என்ற நிலையில் விலகாமல் எழுதுவதின் வழியாக நிகழ்கால வாழ்க்கைச் சூழலில் முதியவர்களின் அந்திமக்கால வாழ்க்கையில் ஏற்படும் தனிமை தவிர்க்கமுடியாத து என்பதைப் புரியவைக்கிறார் ஷான் கருப்பசாமி. தனிமையே ஏற்றுக்கொண்ட முதியவர்களுக்கு எதிர்பாராத விதமாகக்கிடைக்கும் ஏதோவொரு உறைவைக் கைப்பற்றிக் கொள்ளும்போது கிடைக்கும் ஆறுதல் வாழ்வின் அற்புதக்கணங்களாகி விடுகின்றன. அற்புதக் கணங்களைப் பெறும் நிலையில் இருக்கும் கண்ணாடிப்பாட்டியையும், அதனைத் தரும் ராதிகாவையும் கதைக்குள் உருவாக்கி அந்த உறவை நீட்டிக்கும் வழியாக இந்தச் சிறுகதையை உலகச் சிறுகதையின் எல்லைகளுக்குள் விரிக்கிறார்.

முதுமை, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிமை வாழ்க்கையின் காரணிகள் அவரவர் குடும்பத்து உறுப்பினர்கள் அல்ல; நம்காலத்து உலகமயச் சூழல். கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திப் பணியிட எல்லைகளை விரித்துக்கொள்வதும், தேசங்களைக் கடந்து பயணிக்க நேர்வதும் , அங்கேயே தங்கிவிடுவதும் தவிர்க்க முடியாத வாழ்க்கையின் கண்ணிகள். இப்படியான வாழ்க்கையில் அடுத்த தலைமுறைக்கொரு குற்றவுணர்வு இருந்தபோதிலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. இதனைச் சிந்தனை பூர்வமாக யோசித்தெல்லாம் முடிவெடுக்காமல், அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு, தனது இருப்பிட த்திலேயே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கடக்கும் கண்ணாடிப் பாட்டியின் பாத்திரம் நிகழ்காலத்தைப் புரிந்துகொண்டதொரு பாத்திரம்.

கதையின் தலைப்பான கண்ணாட்டி என்ற சொல்லிலிருந்து ஓரெழுத்தை உருவிய கண்ணாடி என்பதைக் கதையின் நகர்வுக்கான ஒரு பொருளாகப் பயன்படுத்தியுள்ளார். அதன் பிறகு இவ்விரு சொற்களும் பயன்படுத்தும் ஒரு பொருளாகவும், வெளிப்படுத்தும் ஓர் உணர்வாகவும் கதை முழுக்கப் பரவி நிற்கின்றன. கண்ணாடிப்பாட்டியின் மரணத்தின் காட்சிகளும் மரணத்திற்குப் பின்னான அவரது மகன்/மருமகள் வருகையும், ராதிகாவோடு அவர்களின் சந்திப்பும் துன்பியல் நிகழ்வின் அத்தனை சாரங்களையும் கொண்டதாக இருக்கிறது. நல்ல பயிற்சியோடு கூடிய நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட குறும்பட த்தின் காட்சிகளாக விரிக்கப்பட்டுள்ளது கண்ணாட்டி கதை




தன்னிலையின் அலைவுகள்
கவிதைகளுக்குள் அலையும் தனிக்குரலின் - உடலின் வெளிப்பாடுகள்- திரும்பத்திரும்ப இதழின் புன்னகை, விடுதலையின் அசைவுகள், தனித்திருத்தலின் அழுத்தங்கள், எதிர்பாலின கருத்துகளுக்கான முணுமுணுப்புகள் -தடுக்கும் சுவர்கள் என வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவையெல்லாம் சேர்ந்து எல்லாக்கவிதைகளிலும் இருப்பது ஒரு பெண்ணின் இருப்பும் முணுமுணுப்புகளும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அந்த ஒற்றைப் பெண், கவிதையை எழுதும் கவியாக இல்லாமல், தனித்திருக்கும் பெண்களின் வகைமாதிரிகளாக வெளிப்பட்டுள்ளன என்பது இத்தொகுப்பின் சிறப்பு..
கவிதை வடிவம் பொதுவாகக் கவிதை சொல்லி என்னும் தன்னிலையை உருவாக்குவதற்கிணையாகவே கேட்கும் முன்னிலைகளையும் அடையாளப்படுத்தும்போது தீர்க்கமான உரையாடலைச் செய்வதாக மாறிவிடும். அத்தோடு அவ்விரு பிம்பங்களும் உலவும் வெளிகள் எவையென அடையாளங்காட்டும்போது அக்கவிதைச்சம்பவங்கள் எத்தளங்களை நோக்கிப் பேசுகின்றன என்பதும் உணர்த்தப்படும். [ரூஹின் சிறகுகள் முஜமாலா, ரூஹின் சிறகுகள், கடல் பதிப்பகம்] என்ற தொகுப்பில் உள்ள 45 கவிதைகளிலும் சொல்லும் தன்னிலை மட்டுமே முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளன. முன்னிலைப்பாத்திரங்களும் வெளிகளும் உறுதியாக அறிய முடியாதனவாக இருக்கின்றன. அதனால் சிறகடித்துப் பறக்க நினைக்கும் ஒரு பறவையாக ரூஹை வாசிக்க முடிகிறது. அதன் பயணங்கள் அலையடிக்கும் கடலோரத்திலும் ஈரம் நிறைந்த தோட்டக்காடுகளிலும் மழைநாளின் பொழுதுகளிலும் விரிகின்றன. அப்படிப் பறக்க நினைக்கும்போது தன்னிடம் உள்ள சிறகுகளைப் பயன்படுத்த முடியும் நம்பிக்கைகொண்ட வெளிப்பாடுகளைக் கவிதைகளுக்குள் வாசிக்க முடிகிறது. தொகுப்பை வாசித்துப் பாருங்கள் . இரண்டு கவிதைகள் மட்டும் வாசிக்கத்தருகிறேன்.
-----------------------
மழைக்கு
முகவரியெழுதியது யார்?
சாக்கடையில் விழுந்ததால்
அது சகதியென்றும்
நதியில் கைகோர்த்ததால்
அது கங்கையென்றும்
பூவிதழ் கடத்திச்செல்ல
அடைக்கலமானது தேன் துளியெனவும்
இப்படியே விழுந்த
இடங்கள்தான்
நிறைவளிக்கும் பதமென
அர்த்தங்கள் வரைந்துவிட
வழிதெரியாமல்
தொலைத்துவிட்டு
தோற்றழுத பருவம் அதில்
இயல்புநிலை மீறாமல்
நீண்டு
அடங்கி மகிழ்வித்த
அதன்
முகமறியாச் சேதியை
யாரறிவார்?
============= முகவரியெழுதியது.
உண்மைகளை
வேண்டுமென்றே காணாமலாக்கும்
உறவின்
நிலைமாற்றங்களை என்னவென்பது?
உரத்துப் பேசவோ
பிரிந்து போகவோ மனமின்றி
அவ்வப்போது
அழுது துடைக்கும் ஆத்மா
கடக்க முனைகையில்
சொட்டு நின்று
தொட்டுக்காட்டிக் கேட்கிறது
இந்தஏமாற்றத்தின்
விலாசங்களின்னும் நீளுமாவென
நான் மட்டும்
எப்படி
உறுதிபடக்கூற


சுருக்குக் கயிறுகளும்
எச்சரிக்கைக் கழுத்தும்
திடுக்கிடும்
திடீர் திருப்பங்களோடு
தினமொரு வியப்பளிக்கையில்
============ நான் மட்டும் எப்படி




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்