நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்


ஒரு தேசத்தின் மொத்தப் பரப்பின் சமுதாயநிலையை அறிய முயலும் அறிஞர்களும் சரி, அதன் பகுதியான ஒரு பகுதியை அறியும் நோக்கம் கொண்ட அறிஞர்களும் சமுதாயத்தின் பேரலகுகளான அரசமைப்பு, அதன் உட்கூறுகளான நிர்வாக அமைப்புக்கூறுகள், சமயம், சாதி, நாகரிகம் என்பன போன்ற அமைப்புமுறைகளை அறியவே முதன்மையாக விரும்புகின்றனர். ஆனால் சமுதாயக் கட்டமைப்புக்குக் காரணமாகவும், அதனை வழி நடத்துவதற்குரிய உந்துசக்தியாகவும், அதன் சாராம்சமாகவும் இருக்கின்ற பொருளாதாரச் செயல்பாடுகளையும் உறவுகளையும் அறிவது முதன்மை தேவையாகும். ஏனெனில் மனிதகுலம் தான் வாழ்வதற்கும், வளர்வதற்கும் உணவு, உடை, உறையுள் எனும் மூன்றையும் அடிப்படைத் தேவைகளாகக் கொண்டு முயன்று வருகிறது.

அதனைத் தேடுவதற்கான முயற்சிகளும், அதனைத் தேடிப் பங்கிட்டுக் கொள்ளப் பயன்படுத்தும் முறைகளுமே பொருளாதாரநிலை எனவும், பொருளாதார உறவுகள் எனவும் பேசப்படும் அடிப்படைகளாக இருக்கின்றன. மொத்தத்தில் சொல்வதானால் மனித சமுதாயத்தின் வரலாற்றில் பொருளாதாரத் தேடலும் உறவுகளுமே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தி என்பது முதன்மையாக உணரப்பட வேண்டும். மனித வாழ்வு என்பது பொருளாதார உறவால் உண்டாக்கப்படும் ஒன்றிணைந்த பண்பேயாகும். சமுதாயத்தில் பொருளாதாரத்திற்குள்ள அடிப்படைப் பண்¢பினை வற்புறுத்துகின்ற சமூகவியலாளர்கள் குறிப்பாகக் கார்ல்மார்க்ஸூம் (Karl Marx), அவருக்குப் பின் வந்த பலரும், சமுதாயத்தின் அடிப்படைக் கட்டுமானம் (Basic Structure), பொருளாதாரமே என்று காட்டுவர்.

இவ்வியல், நாயக்கர் காலத்தில் அமைந்துள்ள பொருளாதார நிலைகளையும் உறவுகளையும் ஆராய்கின்றது. அக்காலத்திய பொருளாதார அமைப்பை ஆராய்வதன் மூலம் அன்றைய சமுதாயம் எவ்வகையான அமைப்பினைக் கொண்டிருந்தது என்பதைக் கணிக்க முடியும்.அப்போதிருந்த உற்பத்தி முறைகளையும் உற்பத்தி உறவுகளையும், உற்பத்திப் பங்கீடுகளையும் ஆராய்வதற்கு நாயக்கர் கால இலக்கியங்கள் தரும் செய்திகள் தரும் புது வெளிச்சம் இவ்வியலின் சுட்டிக் காட்டப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் ஒரு கால கட்டத்துப் பொருளாதார நிலையென்பது, அக்கால கட்டத்தில் அப்பரப்பில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தன்மையைச் சார்ந்ததாகும்; வாழ்க்கைக்குத் தேவையான நுகர்பண்டங்களை உண்டாக்குவதற்குரிய உழைப்பு நடவடிக்கையைக் குறிப்பதாகவும் அமையும். இந்த உற்பத்தி, மக்களின் உழைப்பு அன்றியும் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களையும், உற்பத்திக்குத் துணை செய்கின்ற கருவிகளையும் சார்ந்ததாகும். இவற்றிற்கிடையேயுள்ள உறவுகளை உற்பத்தி உறவுகள் என்பர். இவையனைத்தும் இணைந்த - உற்பத்தி உறவுகளின் ஒட்டு மொத்தமே - பொருளாதார அமைப்பு அல்லது பொருளாதார நிலைகள் எனப்படுகிறது.1

பொருளாதார அமைப்பினைச் சார்ந்த உற்பத்தி உறவுகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற அரசியல் (Politics), சமயம் (Religion), தத்துவம் (Philosaphy), தர்மம் (Ethics), பண்பாடு (Culture), கலை இலக்கியம் (Art and Literature) முதலியவற்றை மேல்கட்டுமானம் (Super Structure) என்றும் அவர்கள் குறிப்பிடுவர். அடித்தளமாகிய பொருளாதார உறவுகளை மையமாகக் கொண்டே அவ்வக்காலச் சமுதாய அமைப்புக்கள் இனங்கண்டு கொள்ளப்படுகின்றன.

புராதனப் பொதுவுடைமைச் சமுதாயம் (Primitive Communism), அடிமையுடைமைச் சமுதாயம் (Slave owning Society), நிலவுடைமைச் சமுதாயம் (Fuedalims), முதலாளித்துவ சமுதாயம் (Capitalism), சமதர்மச் சமுதாயம் (Socialiste), பொதுவுடைமைச் சமுதாயம் (Communist Socity) எனச் சமுதாய அமைப்புக்கள் பொருளாதார அடித்தளத்தின் வழிப் பகுத்துரைக்கப்படுகின்றன. சமுதாய வரலாறு இத்தகைய முறைகளிலேயே அமைகின்றனது என்பது இச்சமூகவியல் அறிஞர்களின் கருத்தாகும்.

நில உறவுகள்:

நாயக்கர் காலத்திய பொருளாதார நிலைகளை வெளிப்படுத்தும் சான்றுகளில் அதிகமானவை நிலத்தை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை உற்பத்தி குறித்தனவே எனலாம். எனவே அக்காலத்திய நில உறவுகளை முதலில் அறிந்து கொள்ளலாம். 

நாயக்கர் காலத்திய நிலவுரிமையைப் பற்றி அறிவதற்கு அக்காலத்திய கல்வெட்டுக்கள் ஒருவழியிலும், இலக்கியங்கள் மற்றொரு வழியிலும் உதவுகின்றன. இவற்றோடு பாளையப்பட்டு வம்சாவளிக் கைபீதுகளும் முக்கியமான சான்றுகள் எனக் கூறலாம்*.இம்மூன்றுவகைச் சான்றுகளின் உதவியால் நிலவுடைமையில் அதனோடு கொண்ட உறவுகளில் நான்குவித நிலைகளைக் காணமுடிகின்றது. அவையாவன:

1. அரசனுக்கும் நிலத்துக்கும் உள்ள உறவு.

2. பாளையக்காரனுக்கும் நிலத்துக்கும் உள்ள உறவு.

3. மானியதாரர்களுக்கும் நிலத்துக்கும் உள்ள உறவு.

4. உழவர்களுக்கும் நிலத்துக்குமுள்ள உறவு.

நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்களாகவும், அதன்பின்னர் ஜமீன்தார்களாகவும் இருந்தவர்களின் வம்சாவளியைத் தெரிவிக்கும் ஏட்டுச் சுவடிகளின் தொகுப்பு.
பாளையப்பட்டுக்களின் வரலாறு என்ற பெயரில் அரசுத் தொல்பொருள் துறையினரால் நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வுறவுகளின் தன்மைகளைப் புரிந்து கொள்ளும்பொழுது, நாயக்கர்கால அடிப்படைப் பொருளாதார அமைப்பைப் புரிந்து கொள்ள முடியும்.

நிலம் - அரசன் உறவு:

இந்தியாவில் மன்னர்களாட்சிக் காலத்தில் நாடு முழுவதும் அரசனுக்கே சொந்தம் எனக் கருதப்பட்டது. ‘அவனி முழுதாண்டான்’, ‘உலகுமுழுதாண்டான்’ எனக் கல்வெட்டுக்களில் அரசர்களுக்கு அளிக்கப்பட்ட அடைமொழிகளுக்குக் காரணம் இதுவே. இந்நிலைக்கு விசயநகர, நாயக்க அரசர்களும், அவர்களுக்கு முன்னர் ஆட்சி செய்த சோழ, பாண்டியர்களும் உட்பட்டவர்களே, ஆனால் அரசர்கள் நிலங்களை நேரடியாக ஆளுகை¢குட்படுத்தியிருந்தார்களா என்ற வினா எழுவது இயல்பே.

விசயநகர, நாயக்க அரசர்களுக்கும் உழவு நிலங்களுக்குமான உறவு என்பது அவர்கள் ஏற்படுத்திய ‘அமரநாயக’ , ‘பாயைக்கார’ முறைகளோடு தொடர்புடையது. அமரநாயக முறையும் அதன்வழித் தோன்றிய நாயக்கர் காலத்துப் பாளையக்கார முறையும் படைமானியத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதே கால கட்டத்தில் இந்தியா முழுவதும் இத்தகைய படைமானியமுறை பின்பற்றப்பட்டுள்ளது. மொகலாய மன்னர்கள் பின்பற்றிய முறைக்கு ‘மன்ஸப்தாரி முறை’ (Mansabdar System) என்று பெயர்.2 இம்முறைகள் எல்லாமே நிலத்தை மானியமாக வழங்கி, அதற்குப் பதிலாகப் படைகளைப் பெற்றுக் கொண்ட அமைப்புக்கள் எனலாம்.

பாளையக்கார முறையும் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட படை மானிய முறையே என்று வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர்.3 இதனை ராமய்யன் அம்மானையும், பாளையக் காரர்களின் வம்சாவளிக் கைபீதுகளும் உறுதி செய்கின்றன. ராமய்யன் அம்மானை, திருமலை நாயக்கரின் தளவாயான ராமய்யனின் ஆணையை ஏற்றுப் படைகொண்டுவந்த பாளையக் காரர்களின் பட்டியல் ஒன்றைத் தருகின்றது. அவர்கள் தளவாயின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்ததாகவும் கூறுகிறது. (பக்.23-26). இவர்களுக்குக் காவல், வரிவசூல், நீர்ப்பாசனம் முதலான பொறுப்புக்கள் இருந்ததாக வம்சாவளிக் கைபீதுகள் தெரிவிக்கின்றன.4

அரசர்களுக்கு, உழவு நிலங்களின் மீது பாளையக்காரர்களின் வழியான உறவு, படை களையும், பாளையக்காரர்களின் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியையும் பெற்றுக் கொள்வதில் தான் காணப்பட்டது. இத்தோடு வேறு வகையான உறவு ஒன்றையும் சில சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. கோயில்கள், அந்தணர்கள், சத்திரங்கள், பூசைகள், போன்ற பொதுநிலை அமைப்புக்களும், சில தனியாட்களும் அரசனிடமிருந்து நேரடியாக நிலங்களை மானியமாகப் பெற்றுள்ளனர்.

மதுரையை ஆண்ட வீரப்பநாய்க்கன் முதலானோர் கோயில் பணிக்கு உதவியதாக மதுரைத் திருப்பணி மாலைச் செய்யுள்கள் கூறுகின்றன (24-25). திருமலை நாயக்கர் அழகர் கோயிலுக்கு நாற்பத்தி நான்காயிரம் பொன் வருவாயுள்ள சீமையும், கோயில் அன்ன சத்திரத்துக்காக சர்வமானியக் கிராமங்களும், அபிஷேக நைவேத்தியத்துக்கு ஆயிரம் பொன்னும் அளித்ததாக மதுரைத் தலவரலாறு கூறுகிறது (ப.5). அரசர்களால் கோயிலுக்கு வழங்கப் பெற்ற நிலங்கள் சர்வமானியமாக வழங்கப்பட்டன; அவை, நிர்வாகக் கிராமம், அர்ச்சனாக்கிராமம், அறைக் கட்டளைக் கிராமம் என்று பெயரிடப்பட்டிருந்தன (மு.நூ.ப. 6).

அரசர்கள் கோயில்களுக்கு மட்டுமல்லாமல் அந்தணர்களுக்கும் நிலங்களை மானியமாக வழங்கியுள்ளனர்.5 அந்தணர்களுக்கு மானியங்கள் வழங்குவது அரசர்களின் கடமையாக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. திருவிளையாடற்புராணம்,

“கற்றுஅறி அந்தணாளர்

விருத்திகள், கடவுள் தானத்து

அற்றம்இல் பூசைச் செல்வம்

அறப்புறம் நடக்கை.....”

என அந்தணர்களைக் காப்பது அரசனின் கடமை என்று கூறுவது இந்நோக்கிலேயே எனலாம். (மதுரை.571). அதுபோலவே சமுத்திரவிலாசம் அரசர்கள் ஆதரவிலேயே அந்தணர்கள் வாழவேண்டும் எனக் கூறுகிறது (2, 3-16).

கோயில்கள், அந்தணர்கள் தவிர தனியாட்கள் சிலரும் அரசனிடம் நேரடியாக மானியம் பெற்றுள்ளனர். தன்னைக் கொல்லவந்த புலியைக் கொன்ற வீரனுக்குத் திருமலைநாயக்கர் ஐந்து கிராமங்களை மானியமாக்கிய செய்தியைத் தருகிறது பொருப்பு மேட்டுப்பட்டிப் பட்டயம்.6 இவ்வாறு பாளையக்காரர் தவிர, அரசர்களிடம் நேரடியாக மானியம் பெற்றவர்களாகக் கோயில்கள், சத்திரங்கள், பூசைகள் போன்ற சமூக நிறுவனங்களையும், அந்தணர்களையும் சில வீரமிக்கத் தனியாட்களையும் காணமுடிகின்றது.

அரசர்கள் நேரடியாக மானியங்கள் வழங்குவதுகூட ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாகவே இருந்தது எனலாம். மதுரை நாயக்கரின் ஆளுகைக்கு என்று ஒருபகுதி (territory) ,இருந்து, அதை மானியமாக வழங்கியிருக்கக் கூடும் என்றும், மையப்படுத்தப்படாத பாளைய முறையில் (Decentralised Palayam System) இத்தகைய தன்மை இருந்ததிருக்க வாய்ப்புண்டு எனக் கருத இடமுண்டு. ஆயினும் இதை உறுதியாகக் கூறுவதற்கு அனைத்துக் கல்வெட்டுக்களைப் பரிசோதித்து அறிய வேண்டியது அவசியம். இது இங்கு நோக்கமன்று.

நிலம்- பாளையக்காரர் உறவு:


படைமானிய அடிப்படையில் அமைக்கப்பெறும் பாளையக்கார முறையின்படி, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பொறுப்புடையவனாகப் பாளையக்காரன் நியமிக்கப்படுகிறான். அந்நியமனம் அரசனின் ஒப்புதலோடு என்ற அடிப்படையில் அப்பகுதி முழுமைக்கும் அவனே தலைவன். அந்த வகையில் அப்பகுதி நிலம் முழுமைக்கும் உரியவன் அவனே. அத்தோடு பாளையக்காரன் தன்பகுதியில் அரசனைப் போலவே அதிகாரம் பெற்றுச் செயல்பட்டுள்ளான். தன்பகுதி முழுமைக்கும் உரிமையுடையவன் என்ற வகையில் தன்பகுதி வேளாண்மை நிலங்களை மானியமாக வழங்கும் உரிமையும் பாளையக்காரனுக்கு உண்டு. சான்றாகப் பழனிப் பகுதித்தலைவன் அந்தணர்களுக்கு நூறு கிராமங்களை மானியமாக்கிய செய்தியைப் பழநித் தலபுராணம் கூறுகிறது (நகர் செய்சருக்கம் 9). வட்டாரத் தலைவர்களான பாளையக்காரர்கள் கோயில் பணிகளில் ஈடுபட்ட செய்திகளைப் பல இலக்கியங்களில் காணமுடிகின்றது.

திருப்புல்லாணிக் கோயில் திருப்பணிக்கு ரகுநாத சேதுபதி உதவியதாகப் பாடியுள்ளார் மிதிலைப்பட்டிக் கவிராயர்.7 வடகரை நாட்டுப் பாளையக்காரனான சின்னணஞ்சாத்தேவனும் அவனது சந்ததியாரும் உறவினர்களும் கோயில்களுக்கு நிலங்களையும் பொன்னையும் மானியமாக வழங்கிய செய்திகளைத் திருமலை முருகன் பள்ளு (26), திருக்குற்றாலமாலை (கண்.145-147), சவ்வாதுவிடுதூது (வட.ஆதி.சரி.பக்.9:1-10-9), பட்பிரபந்தம் (24) முதலான நூல்கள் கூறுகின்றன. கோயில் நடைமுறைக்கு நூறு ஊர்களைப் பழனிப்பகுதித் தலைவன் வழங்கியதாகப் பழனிப்பிள்ளைத்தமிழ் பாடுகிறது (30:1-8). இவ்வாறு நிலங்களைத்தாமே நேரடியாக மானியமாக வழங்கப் பாளையக்காரர்கள் அதிகாரம் பெற்றிருந்தனர் என்பதனை இலக்கியங்களின்வழி அறியலாம்.

இந்த அடிப்படையில் பாளையக்காரனின் நிர்வாக அமைப்பையும், அவனுடைய உரிமை களையும் கடமைகளையும் மனதில்கொண்டு, பாளையக்காரனுக்கு நிலத்தின் மீதிருந்த உரிமை களாகப் பின்வருவனவற்றைக் கொள்ளலாம்.

தன் அதிகாரத்துக்குட்பட்ட தன்பகுதி நிலத்தைத் தனக்குப் பணிந்து நடப்பவர்களுக்கும், கோயில், அந்தணர், கவிஞர்கள், கலைஞர்கள், தேவரடியார் போன்ற பலதரப்பட்டவர்களுக்கும் மானியமாக வழங்கும் உரிமை இருந்தது. மானியமாக வழங்கும்

உரிமையோடு, அந்நிலங்களிலிருந்து விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்று, அரசனுக்கும் தனக்கும் பயன் படுத்திக் கொள்ளும் உரிமையும் இருந்தது.

இந்தக் கருதுகோள்களை நிரூபணமாக்குவதற்கு நிலத்திற்கும் மானியதாரர்களுக்கும் உள்ள உறவும், நிலத்திற்கும் உழவர்களுக்கும் உள்ள உறவும் பற்றிய ஆய்வு ஓரளவு உதவி புரிகின்றது.

நிலம் - மானியதாரர் உறவு:

அரசனிடமிருந்து நேரடியாகவும் பாளையக்காரர்கள் மூலமாகவும் நிலங்களைப் பெற்றுக் கொள்வோரை மானியதாரர்கள் எனக் குறிப்பிடலாம். நாயக்கர் காலத்தில் கோயில்கள், மடங்கள் போன்ற சமய நிறுவனங்களும், அந்தணர்கள், கலைஞர்கள், தேவரடியார்கள் போன்ற பொதுநிலைத் தனியாட்களும், அணைகள், சத்திரங்கள் போன்ற சமூகநலத்திட்டங்களும், போர்க்காலத்தில் அரசனுக்கு உதவியவர்களும், அதிகாரிகளும், படைவீரர்களும் மானியதாரர்களாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அரசனுக்கு நிர்வாகத்தில் உதவிபுரிந்த அதிகாரிகளுக்கும், கிராம நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும் நிலங்கள் மானியங்களாக்கப்பட்டுள்ளன. பொது நிறுவனங்களும் தனியாட்களும் மட்டுமின்றிச் சில சாதிக்குழுக்களும் தங்களுக்கெனப் பொதுநிலங்களைப் பராமரித்துள்ளன.

மானியதாரர்களின் நில உறவில் இரண்டு நிலைகளைக் காணமுடிகின்றது. மானியம் வழங்கும் நிலையிலிருந்த அரசன், பாளையக்காரன் முதலானவர்களிடமிருந்து நிலங்களை மானிய மாகப் பெறுவது ஒருநிலை. இன்னொரு நிலை தங்களின் மானியப் பகுதியிலிருந்த வருமானத்தில் தங்களின் தேவைகளுக்குப் போக மீதியிருந்த பொருள் வளத்தினாலும், அக்காலத்திய சமூக நடைமுறைகளினாலும் கோயில்களுக்கும், பூசைகளுக்கும், அந்தணர்களுக்கும் தானமாக வழங்கினர் எனக் கூறலாம்.

இப்படி, தங்களிடமிருந்த நிலங்களைத் தானமாக வழங்கியவர்களாக பிராமணர்கள், அதிகாரிகள், தேவரடியார்கள் முதலானோரைக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.

ரகுநாத ஐயன் என்னும் பிராமணன் வீரராகவப்பெருமாள் கோயிலுக்குச் சிக்கமாயபுரம், வீரராகவபுரம் என்னும் கிராமங்களில் மானியம் வழங்கியுள்ளான்.8 இதே கோயிலுக்குச் சடகோப ஜீயர் என்பார் பூசை நைவேத்தியத்துக்காகவும், நித்த நிவந்தத்துக்காகவும் வெங்கத்தார் கிராமத்தை வழங்கியுள்ளார்.9

ஸ்தானிகன் பண்டாரம் என்னும் கோயில் அதிகாரி, நாயகம் என்னும் அரசு அலுவலர் (குற். குற.131:9.4) தளவாய் அரியநாயகமுதலி (திருவால.மாலை.50), பிரதானி தாண்டவராய பிள்ளை (மான்விடு.155-163) மந்திரி பெரியசுவாமி (வட. ஆதி. சரி. பக்.26:1) முதலிய அதிகாரிகள் கோயில் களுக்கு மானியம் வழங்கியதை அறிய முடிகின்றது.

அறம் வளர்த்த நாச்சியார் என்னும் தேவரடியார் குழந்தை ஆண்டார் மடம் என்னும் கிராமத்தைத் திருவக்கிநீசுவரசுவாமிக்கு வழங்கியதையும்10 மாணிக்கமாலை என்பாள் மாணிக்கம் பட்டி என்னும் கிராமத்தை வழங்கியதையும் (திருவால.மாலை.15, 16) சாசனங்களும் இலக்கியங்களும் தருகின்றன.

நிலத்தை மானியமாகப் பெற்று, அதனை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்திய அந்தணர், அதிகாரிகள், தேவரடியார்கள்தவிர நிலத்தின் விளைச்சலில் பங்குபெறும் உரிமைபெற்ற நிறுவனங்களையும் தனியாட்களையும் பல இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கோயிலில் பூசைகள் நடைபெற மானியங்கள் இருந்தன என்பதைக் குற்றாலகுறவஞ்சி (131:5,7), சந்திரகலாமஞ்சரி (வட. ஆதி. சரி.ப. 22:5-10), திருமலையாண்டவர் குறவஞ்சி (73:3-10) ஆகியன தெரிவிக்கின்றன. மான்விடுதூது நூல் ஆசிரியடர் தினக்கட்டளை, த்வாதசிக்கட்டளை, தைப்பூசக்கட்டளை என விழாக்கால மானியங்களைக் குறிப்பிடுகின்றார். (கண்.148-153). முக்கூடற்பள்ளு விழாக்களுக்கான நெல், விளைச்சலிலிருந்து தரப்பட்டதைத் தெரிவிக்கின்றது (139, 142-142, 147). இவைதவிர மண்டபம் அமைத்தல், அம்பலம் கட்டுதல், கோபுரம் எழுப்புதல், மதில் அமைத்தல், தேரோட்டம் நடத்துதல், வனங்கள் பராமரிப்பு, விழா ஏற்பாடு முதலானவற்றிற்கும் தனித்தனி மானியங்கள் விடப்பட்ட செய்திகளைச் சங்கரலிங்க உலா கூறுகிறது (கண். 289-301). மானியப் பொருள்களாக வயல், தோட்டம், வீடு, விளக்கு போன்றனவும் இருந்தன என்கிறது புலவராற்றுப்படை (533-539).

கோயில்களுக்கும் பூசைகளுக்கும் வழங்கப்பெற்ற மானியங்கள் பற்றிய செய்திகளோடு அவற்றுக்குச் சொந்தமான நிலங்களின் பட்டியலையும் இலக்கியங்கள் தருகின்றன. குறவஞ்சி நூல்களில் குறவன், குறத்தியைத் தேடியலைந்த இடங்கள் எவையெவையெனக் கூறும்போது இத்தகைய பட்டியல்கள் இடம் பெறுகின்றன. (கும்.குற.87, 89, 91, 93, 95).

நிலத்தை மானியமாகப் பெறும் நிலையிலும் தங்கள் விருப்பம்போல் பிறருக்குத் தானம் வழங்கும் நிலையிலுமிருந்த மானியதாரர்களுக்கும் நிலத்திற்குமிருந்த உறவினை மேலும் புரிந்து கொள்வதற்கு, நிலத்திற்கும் உழவர்களுக்கும் உள்ள உறவுநிலையின் தன்மைகளும், உழவர்கள் உற்பத்தி செய்த வேளாண்மைப்பொருள்கள் பங்கிடப்பட்ட முறையும் அறியப்பட வேண்டியது அவசியம், ஏனெனில் இம்மானியதாரர்களே நேரடியாக நிலங்களைப் பயிரிட்டதற்கு வலுவான சான்றுகள் இல்லை. அதற்கு மாறாகப் பண்ணை முறையில் நிலங்கள் பயிர் செய்யப்பட்டதற்கான சான்றுகளே கிடைக்கின்றன. இந்நிலையில் மானியதாரர்களும் அரசன், பாளையக்காரன் போலவே நிலத்தின் விளைச்சலில் ஒரு பகுதியைப் பெறுபவர்களாகவே இருந்தனர் எனக் கூறத் தோன்றுகிறது. அதற்கு முன்பாக, இதுவரை கண்ட மானியமுறை என்பதைத் தொகுத்துப் பின்வருமாறு அமைத்துக் கொள்ளலாம்:

மானியம் வழங்கும் உரிமையுடையவர்கள்


1. அரசன்

2. பாளையக்காரன்

மானியம் பெறுவோர்

1. அரசு அதிகாரிகள்

2. சமய நிறுவனங்கள் - சமயஞ் சார்ந்த தனியாட்கள் (மானியதாரர்கள்)

3. பொதுநலத் திட்டங்கள்

மானியம் வழங்குவதற்குரிய நோக்கங்கள்

1. படையுதவி பெறுதல்

2. வட்டார நிர்வாகம்

3. அதிகாரிகளுக்குச் சம்பளம்

4. சமயப் பாதுகாப்பு

5. பொதுநலம் பேணல் - வேளாண்மை உற்பத்திக்கு உதவுதல்

6. கலைகள், கலைஞர் பாதுகாப்பு.


மானியமாக வழங்கப்பெற்றவை


1. பெரும்பாலும் நிலங்கள்

2. பொன்

3. விளைபொருட்கள்

4. அணிகலன்கள்

இதையே ஒரு வரைபடம் மூலமும் காட்டலாம். (காண்க ப.33)

நிலம் - உழவர்கள் உறவு:

நிலத்திற்கும் அதில் உழைத்து உற்பத்தி செய்யும் உழவர்களுக்கும் உள்ள உறவு, நிலம் - அரசன், நிலம் - பாளையக்காரன், நிலம் - மானியதாரர் ஆகிய உறவுகளுக்கு அடிப்படையானதாக இருந்துள்ளது. நாயக்கர் காலத்தில் வேளாண்மை உற்பத்தியில் நிலங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாக - உழவுமுதல் அறுவடை வரை அனைத்து வேலைகளையும் செய்தவர்களாகப் பள்ளர்கள் குறிக்கப்படுகின்றனர். பள்ளர் குலப் பெண்களும் உழவுத்தொழிலோடு சம்பந்தப்பட்டவர்களாகவே இலக்கியங்களில் சித்தரிக்கப்படுகின்றனர். அவர்கள், உழத்தியர், அடிச்சியர், கடைசியர், பள்ளியர் போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர். (பள்ளு நூல்கள். கம.சிற.86, அரிச்சந்திர.நாட்டு, பல பாடல்கள்). மேலும், இப்பள்ளர் குலப்பெண்களும் ஆண்களும் ‘அடிமைகள்’ ‘கொத்தடிமைகள்’ எனவும் குறிக்கப்படுகின்றனர் (திரு.முரு.பள்.13:1-6). ஏராளமான சாதிகள் நிலவிய நிலையில், நாட்டின் முக்கிய தொழிலான வேளாண்மையில் ஒரு சாதியினர் மட்டுமே ஈடுபட்டனர் என்ற செய்தி ஆய்வுக்குரியது (காண்க: சாதிகளும் சாதிப் பாகுபாடுகளும் எனும் இயல்).

அரசன்

பாளையக்காரர்கள்

மானியதாரர்கள்
தனிப்பட்ட சமய நிறுவனங்கள் பொதுநலத்திட்டங்கள்

ஆட்கள் 


கலைஞர்கள் அந்தணர் அதிகாரிகள், கோயில்கள், பூஜைகள்

வீரர்கள்,

பிறவும்


வேளாண்மையில் ஈடுபட்ட பள்ளர்களுக்குக் கூலியாக எதுவும் தரப்பட்டதாகக் குறிப்புக்கள் இல்லை. ஒவ்வொரு பள்ளர் குடும்பமும் ஏதாவதொரு பண்ணையோடு சேர்ந்தே பிழைத்திருக்கும் எனக் கூறுவதற்குச் சான்றுகள் உள்ளன. விளைச்சலில் அவர்களுடைய வாழ்க்கைத் தேவைக்கெனக் குடிச் சுதந்திரம், பிள்ளையாரடி,அரிநெல் போன்றன கிடைத்தன என இலக்கியங்கள் தெரிவிக் கின்றன (வை.பள். 203-204; திரு.முரு.பள்.158; மா.பள்.89). ஆனால் இவை மட்டுமே உழவர்களான பள்ளர்களின் வாழ்க்கைத் தேவை முழுவதையும் பூர்த்தி செய்தன என்று கூறுவதற்கில்லை. சிலபகுதிகளில் பண்ணை வயல்களில் உழைப்பதற்கான கூலியைத் தமக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களை விளைவித்தும் பெற்றுக் கொண்டுள்ளனர் (மு.பள்.67; பட்.பிர.821).

ஆயின், கூலியைப் பெறுவதற்கெனத் தனியாக நிலங்கள் தரப்பட்டிருந்தாலும், அந்நிலங்களிலிருந்து வரும் விளைச்சல் பள்ளர்களது தேவையைப் பூர்த்தி செய்யவில்லையென்றே பள்ளுநூல்கள் கூறுகின்றன. முக்கூடற்பள்ளில் வரும் பள்ளன்,

“பழகி னீர்அறி வீரென் சமர்த்துப்

பயிரி டாக்கள்ளப் பள்ளல்லவேநான்

உழவு தானொரு பன்றி உழுந்தரை

ஒன்றல்லாமல் இரண்டெனக் கில்லை

அழகர் ஏவலினாலே இலங்கை

அழித்து மீளுங் குரங்குள்ள மட்டும்

கிழமைதோறும் கதிர்முளைத் தாலும்

கிடக்கவே யொட்டுமோ பண்ணையாண்டே”

எனத் தன் கூலிக்கென ஒதுக்கப்பட்ட நிலம், ஒரு பன்றி, தன் மூக்கினால் நாள் முழுவதும் கிளறும் அளவினது; அதில் ஒவ்வொரு நாளும் பயிர் முளைக்காமல், கதிராக முளைத்தாலும் தனக்குப் போதாது எனக் கூறி வருந்துகிறான் (67). பட்பிரபந்தத்தில் வரும் பள்ளனோ, தனக்கு அளிக்கப்பட்ட நிலம், நீண்ட கால்களைக் கொண்ட மாடன் என்பவன் ஒரே அடியால் அளந்துவிடும் அளவினது என்கிறான். அந்நிலத்தை உழுவதற்கான கலப்பை, மாடு, விதை முதலியன தன்னிடம் இல்லை என்றும் கூறி வருந்துகிறான் (82). நேரடியாக இது உழைப்பில் ஈடுபட்டவர்களின் பொருளாதார நிலையினை உணர்த்தும்.

வையாபுரிப்பள்ளு, திருமலைமுருகன் பள்ளு, மாந்தைப்பள் முதலானவைகளும் பள்ளர் களுக்குத் தரப்பட்டனவாகக் கூறும் ‘குடிச்சுதந்திரம்’, ‘பிள்ளையாரடி’, ‘அரிநெல்’ முதலான வைகளையும் முறையாகப் பள்ளர்களுக்கு வழங்கவில்லை என்றே கூறுகின்றன. பள்ளர்களுக்குத் தரவேண்டிய நெல்லைக் கொடுப்பதற்கு வையாபுரிப் பண்ணைக்காரனின் கை நடுங்கியதாக வையாபுரிப் பள்ளில் வரும்

- நின்ற

முறை நெல்லும் பிள்ளையார்

அடி நெல்லையும்

சொந்தமென்று வாரியவள்

கூடையிலிட்டாள் - என்றன்

சுவந்தர நெற்கொடுக்க

கைநடுங்குதே’

என்ற வரியின் மூலம் உணரலாம் (203).

பள்ளன் தனக்கென ஒதுக்கப்பட்ட நிலத்திலிருந்தும், பிள்ளையாரடி முதலியனவற்றிலிருந்தும் கிடைத்த நெல்லைத் தன் இருமனைவிகளுக்கும் பங்கிட்டுக் கொடுக்கம்பொழுது முக்குறுனி, எட்டுமரக்கால் என்ற அளவிலேயே கொடுத்துள்ளான். இந்த அளவு, விளைச்சலில் பங்கு பெறும் பிற நிறுவனங்களோடும், தனி ஆட்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது மிகவும் சிறிய அளவினது என்பது வெளிப்படுகிறது. (காண்.அட்டவணைகள்.மி- பக்.58-62).

பண்ணைமுறை (Farm Structure):


இதுகாறும் கண்டவை நிலம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, அதனோடு அரசர், பாளையக்காரர், மானியதாரர், உழவர் ஆகியவர்களுக்குள்ள உறவுநிலைகளைக் குறிப்பிடுபவை. இவற்றைக்கொண்டு நடைபெறுகிற வேளாண்மை முறைக்குரிய உற்பத்தி முறைக்கு அடிப்படையாக அமைவது பண்ணை அமைப்பாகும். இப் பண்ணை அமைப்பு முறையினை, ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட நான்கு கூறுகளாகப் (Units) பகுக்கலாம். இவ்வமைப்புக்குரியவர்கள்:

1. நிலவுரிமையாளன்

2. மேற்பார்வையாளனான பண்ணை விசாரிப்பான்

3. கணக்கு வைக்கும் அதிகாரியான கணக்குப்பிள்ளை

4. உழைக்கும் உழவர்களான பள்ளர்கள்

இத்தகைய பண்ணைமுறை, தமிழகத்தின் பலபகுதிகளிலும் ஒன்றுபோல இருந்துள்ளது என்று கருத இடமுண்டு. மேற்கூறிய நான்கு கூறுகளுள் நிலஉரிமையாளன் (மானியதாரர்) பண்ணையோடு நேரடியாக உறவுடையவன் அல்லன். பண்ணை விசாரிப்பான் இடைநிலைச் சக்தியாக (Agential Force) இருக்கிறான்.

மானியதாரர் ஆளுகை, நேரடியாக அமையப்பெறவில்லையாதலின் இலக்கியங்கள் அவர்கள் பற்றி அதிகம் பேசவில்லை. தமிழிலக்கியங்கள், பண்ணை அமைப்பில் பண்ணை விசாரிப்பான்கள், முறையம்பிள்ளைகள், பள்ளர்கள் ஆகிய மூவரைப்பற்றியே அதிகம் கூறுகின்றன.

தமிழகத்தில் பல பகுதிகளைக் களனாகக் கொண்டு தோன்றிய பள்ளு நூல்களில் மானியதாரர்கள் பற்றிய குறிப்புக்கள் அதிகம் இல்லையென்றாலும், ஒவ்வொரு பகுதியிலும் இவர்கள் மாறியுள்ளனர். இதனை, விளைச்சலில் பங்கு பெறும் உரிமையுடையவர்களைக் கொண்டு உணர முடிகின்றது. (காண்க. இவ்வியலின் உட்தலைப்பு; உற்பத்திப் பங்கீடு). ஆனால், பண்ணை விசாரிப்பான்களும், பள்ளர்களும் எல்லாப் பள்ளு நூல்களிலும் இடம் பெறுகின்றனர். அதேபோல் எல்லாப் பள்ளு நூல்களிலும் இடம்பெறும் கணக்கு வைக்கும் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு பகுதியிலும் வேறுவேறு பெயர்கள் இருந்துள்ளன. காட்டாகக் குருகூர்ப் பள்ளு (22-24), ‘முறையம்பிள்ளை’ எனவும், வையாபுரிப்பள்ளு (200), ‘கணக்குப்பிள்ளை’ எனவும், மாந்தைப்பள் (91) ‘கணக்கர்’ எனவும், பட்பிரபந்தம் (139) ‘மணியம்’ எனவும் கூறுகின்றன. இவர்களின் பெயர் வேறுபட்டாலும், பண்ணை அமைப்பில் அவர்களது பொறுப்பு ஒன்றுபோலவே இருந்துள்ளது என்பதைப் பின்வரும் பாடல் வரிகளின் வழி அறிய முடிகின்றது.

‘மற்ற நெல்லின் செலவையெல்லாம்

வகைதொகை விவரமாகக்

கற்றுணர்ந்த நம்மள் பண்ணைக்

கணக்குப்பிள்ளை யெழுது (வார்)’

என்பதும் (வை.பள்.200)

‘கணக்கரளவில் கோடிக்கலநெல் வரவென்றார்’

என்பதும் (மா.பள்.91),

‘மணியம்புன்னைவனபூபதி வார்த்தைப்படி தப்பாமற்

றணியாமல் மரக்காலக்கைத் தாங்கித்தானே அளந்தேன்’

நாட்டுக்கெல்லாம் சம்பிரதி நடத்தும் புனைவனம்பிள்ளை

சீட்டுப்படி ராணுவுக்குச் சிறிதுநெல்லை யளந்தேன்’

என்பனவும் அவ்வரிகள் (பட்.பிர.139:5-6).

வேளாண்மை வேலைகளான உழவு, நடவு, களை எடுப்பு, உரமிடுதல், அறுவடை முதலானவற்றை மேற்பார்வையிடும் பண்ணை விசாரிப்பான்களை எல்லாப் பள்ளு நூல்களிலும் காணமுடிகின்றது. பண்ணை விசாரிப்பான், காரியக்காரன், பண்ணைக்ககாரன் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இவர்கள் பண்ணை நிர்வாகத்தை - உழவர்களை - மேற்பார்வையிடும் அதிகாரிகள் போலவே சித்திரிக்கப்படுகின்றனர்.

உழைக்கும் உழவர்களோடு நேரடித் தொடர்பு கொண்டவன் - அவர்களுக்கு அதிகாரியாக இருப்பவன் - பண்ணை விசாரிப்பான் ஆவான். பண்ணை விசாரிப்பானைப்,‘பள்ளர்களை ஆள்பவன்’ என்கிறது மாந்தைப்பள் (60). ‘நாக மலையரசன் சொல்படியிந் நாட்டிலேயுள்ள நஞ்சை மணியங்கள் ஏகமாய் இங்கே ஏற்று வந்தவர்’ என்கிறது செங்கோட்டுப்பள்ளு 10.அ. , வேளாண்மைத் தொழிலை மேற்பார்வையிடும் பண்ணைக்காரர்களின் அதிகாரம் முறையாகப் பயன்படுத்தப்படாமல், தவறான வழிகளிலும் பயன்படுத்தப்பட்டதாகப் பள்ளுநூல்கள் தெரிவிக்கின்றன. அவனைத் திருட்டுக்காரன், காரியக்காரன், வம்புக்காரன், கைக்கூலிக்கிணங்கும் வலுக்காரன் எனச் சித்திரிக்கிறது. திருமலை முருகன் பள்ளு (112). மேலும் அவனுக்குப் பத்தஞ்சு கொடுத்தால் போதும் தண்டனை தரமாட்டான் எனவும் கூறுகிறது. அத்தோடு இவர்கள் தங்களுக்கிருந்த அதிகாரமிகுதியினால் பள்ளர் குலப் பெண்களைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்தும் நிலையைக் கூடக் காண முடிகின்றது. (மு.பள்.53-54, பட்.பிர.65, 105).

பள்ளுநூல்கள் பண்ணை விசாரிப்பான்களைக் கேலியாகச் சித்திரித்தாலும், பண்ணை முழுவதிற்கும் பொறுப்புடையவன் அவனே என்பதையும் அவை வெளிப்படுத்துகின்றன.

‘மேட்டிமைசேர் பண்ணைவயல் விசாரிப்பான்’11

‘தன்பகுதித் தலைவன் சொற்படி பண்ணைகளைப்

பார்த்துக் கொள்பவர்கள்’ (பட்.பிர. 64)

‘கலப்பை, ஏர் முதலியவற்றிற்கு ஏற்பாடு செய்து,

பண்ணையில் விவசாயம் நடக்க உதவுபவர்கள்’ (முந்நூல்.65)

என்றெல்லாம் பள்ளுநூல்கள் அவர்களது முக்கியத்துவத்தைக் கூறுகின்றன. எனவே அக்காலப் பண்ணை வேளாண்மையுற்பத்தியின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக இருப்பவர்கள் இப்பண்ணை விசாரிப்பான்களே எனலாம்.

வேளாண்மை நிலத்தில் பங்குபெறும் உரிமை பெற்றிருந்த அரசன், பாளையக்காரன், மானியதாரர் முதலானவர்களுக்கு வேளாண்மையில் ஈடுபட்ட உழவர்களோடு நேரடி உறவுகள் காணப்படவில்லை. நேரடி உறவு கொண்டவர்கள் பண்ணை விசாரிப்பான்களும் கணக்கு வைக்கும் அதிகாரிகளுமே ஆவர். பள்ளு நூல்கள் இவ்வாறுதான் காட்டுகின்றன. உழைப்பில் ஈடுபடாமல் உற்பத்தியில் பங்குபெறும் நபர்களைப் பொதுவாக நிலச்சுவான்தார்கள் அல்லது நிலப்பிரப்புகள் (Land - Lords) என இக்காலத்தில் ஆய்வாளர்கள் குறிப்பர். அவ்வாறாயின் அக்கால மானிய முறையின் காரணமாக விளைச்சலில் பங்குபெற்ற அரசன், பாளையக்காரன், மானியதாரர் முதலானவர்களை அக்காலத்திய நிலப்பிரபுக்கள் எனக் கொள்ள வாய்ப்புண்டு. அக்காலப் பண்ணை அமைப்பின் காரணமாக இவர்கள் வெளிப்பட வாரா நிலப்பிரப்புக்களாக (Absentee Landlords) இருந்துள்ளனர் எனக் கூறலாம்.

இத்தகைய நிலப்பரப்பு ஒருவனின் நிலம் மட்டுமே, ஒரு பண்ணையில் இருந்தது என்றும் கூறிவிட முடியாது. கி.பி.16,17,18 - ஆம் நூற்றாண்டுக்கால அளவில் கிடைக்கின்ற பள்ளு நூல்களின் வழி அக்காலப் பண்ணைகளை,

1. கோயில் சார்ந்த பண்ணைகள்

2. அரசோடு - பாளையக்காரரோடு - தொடர்புடைய தனியார்களின் பண்ணைகள்,

3. மொத்தமாக ஒரு குழுவிற்கு வழங்கப்பட்ட பண்ணைகள் எனப் பகுத்துக் கூற முடிகிறது.

தில்லைப்பள்ளு, கோட்டூர்ப்பள்ளு, சிவசயிலப்பள்ளு, திருமலை முருகன் பள்ளு, வையாபுரிப் பள்ளு, குருகூர்ப்பள்ளு, முக்கூடற்பள்ளு முதலியன கோயில் சார்ந்த பண்ணைகளைப் பற்றிய சித்திரங்களைத் தருகின்றன.

செண்பகராமன் பள்ளு, பட்பிரபந்தம், தண்டிகைக் கனகராயன் பள்ளு, கங்கநாயகர் பள்ளு, தென்காசைப் பள்ளு முதலியன தனியாருக்குச் சொந்தமான பண்ணைகளைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன.

கைக்தொழில் குழுக்களான விசுவகன்மர்களின் மானியமாக மாந்தைப் பள்ளியில் இடம்பெறும் பண்ணையும், வணிகர்களுக்குச் சொந்தமான பண்ணையாக, வைசியப் பள்ளுவில் இடம்பெறும் பண்ணையும் உள்ளன. 12

பண்ணைகளை இத்தகைய பகுப்புகளாகக் கூறமுடியும் என்றாலும், இவையனைத்திற்கும் பொதுவான கூறு ஒன்றைக் கூறலாம்: அதாவது, இப்பண்ணைகளில் வருமானம் முழுவதும் நிலத்தின் உரிமையாளனுக்கும், உழைப்பவனுக்கும் மட்டுமே சென்றது என்ற நிலை இல்லை; அதற்குப் பதிலாகப் பலரும் பங்குபெறும் நிலை இருந்துள்ளது. இதனை பின்வரும் அட்டவணைகள் வெளிப்படுத்தும் (அட்டவணைகள் மி - க்ஷி). இவ்வாறு உற்பத்தி பங்கிடப்பட்ட முறைகளின் அடிப்படையில் அக்காலப் பண்ணைகளை ஒரு விதக் கூட்டுப்பண்ணைகள் என்று கூடக் கூறலாம்.

அட்டவணை - 1

வையாபுரிப்பண்ணை - கோயில் சார்ந்தது.

வ.எண்/       விளைச்சலில் பங்கு /பங்கின் அளவு /பெறுவோர்/    (நெல்)

1. சிவகிரியான் 1000 சலகை

2. கோவில் 500 சலகை

3. எட்டுச்சத்திரம் 800 சலகை

4. சுப்பிரமணியர் 300 சலகை

5. பாவலர் பருக்கடி நெல்

6. கடைச்செலவு கருக்காய் நெல்

7. வேலச்சின்னவோன் பூசைக்கனகசபாபதி 50 சலகை

8. கனகன் கண்ணப்பன் பூசித்த காளத்தியீச்சரன் 50 சலகை

9. கவிராசபண்டிதர் 500 சலுகை

10. கந்தப்பையன் கமுகடிநெல் முழுவதும்

11. சமூகளித்துவான் 500 சலகை

12. நல்லய்யங்கார் பூசைப்பட்டிச்சம்பா

13. வேதியர் வேயடியின் நெல்லெல்லாம் (வை.பள்.88, 91, 117, 191 - 198, 203 - 204)



அட்டவணை - 2

முக்கூடற்பண்ணை - கோயில் சார்ந்தது. 

வ.எண் /விளைச்சலில் பங்கு /பங்கின் அளவு /பெறுவோர் (நெல்)

1. ஆடித்திருநாள் 6000 கோட்டை

2. பங்குனித்திருநாள் 1000 கோட்டை

3. மண்டகப்படிச்சாத்து 1000 கோட்டை

4. நாவாணர், மறையோர் 4000 கோட்டை

5. அணைக்கட்டு 1000 கோட்டை

6. தினப்பூசை 8000 கோட்டை

7. தினச்சத்திரம் அளவு குறிக்கப்படவில்லை

8. பெரியநம்பி திருமாளிகை ’’

9. ஏழுதிருப்பதிக் கட்டளை ’’

10. பெருமாள் கட்டளை ’’

11. செண்டலங்காரர் தோப்பு ’’

12. திருமலையாழ்வான் ’’

13. தேவதாசி ’’

(மு.பள். 68, 139, 142 - 147)

அட்டவணை - 3

வடகரைப்பண்ணை - 
பாளையக்காரன் - தனியார்ப் பண்ணை விளைச்சலில்

வ.எண் /பங்கு பெறுவோர் /பங்கின் அளவு (நெல்)

1. ‘ராணுவு’ (ராணுவம்) ‘சிறுநெல்’

2. அருனாசலம் பிள்ளைக் கணக்கு வகைவகையாய்

3. ராசுசெட்டி சொற்படிக்கு சிறுகோட்டை

4. அன்னதானச்சத்திரம் 6000 கோட்டை

5. வடிவேலர் திட்டக்கட்டளை 1000 கோட்டை

6. புலவோர், பலவாச்சியம் , புகல்வோர் 10000 கோட்டை (பட்.பிர. 139, )

அட்டவணை - 4

சென்பகராமன் பண்ணை - தனியார்ப் பண்ணை

வ.எண்/           விளைச்சலில் பங்கு /பங்கின் அளவு/பெறுவோர் (நெல்)



1. தச்சர் 800 கோட்டை

2. சி லுவை அமைக்க 300 கோட்டை

3. திருப்பணிக்கு 200 கோட்டை

4. கெட்டுப்போனது 1000 கோட்டை

5. சென்பகராமன் மூத்தமகன்சோறுபோட்டது 600 கோட்டை

6. நெய்ப்பணியாரம் செய்ய 100 கோட்டை

7. இளையமகன் திருமணம் 800 கோட்டை

8. மாபபிள்ளைச் சோற்றுக்கு 80 கோட்டை

9. கூலியாட்களுக்கு 700 கோட்டை

10. கணக்கன் தன் சோற்றுக்கு 50 கோட்டை

(செண்பகராமன் பள்ளு, மேற்கோள் ந.வீ. செயராமன், பள்ளு இலக்கியம், பக். 185 - 186)


அட்டவணை - 5

மாந்தைப்பண்ணை - குழுவிற்குரியது

வ.எண் /விளைச்சலில் பங்கு /பங்கின் அளவு/பெறுவோர் (நெல்)


1. சிதம்பரம், வேளுர்க் கோயில் 4000 கலம்

2. சண்பைநகர், மாயூரம் 1000 கோட்டை

3. ஆரூர், குடந்தை, இடமருதூர்,திருக்கடவூர் கோயில்கள் 1000 கோட்டை

4. பேரூர், திருப்புகலூர், கண்ணபுரம் 700 கோட்டை

5. செங்கட்டாங்குடி அழுது படையல் 1000 கலம்

6. மதுராபுரிச் சொக்கலிங்கர் 1000 பொதி

7. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருநெல்வேலி, குற்றாலம் - சேர்

8. ராமேசுவரம், திருப்பதி, பாவநாசம் மகிமைக்கட்டளை

9. அன்னாபிடேகம், சமையர்மடம் 1000 கோட்டை

10. கருவை நகர் தேவாலயம் - சேர் (மா.பள்.88)

வேளாண்மை நிலத்தில் பங்குபெறும் உரிமை பெற்றிருந்த அரசன், பாளையக்காரன், மானியதாரர் முதலானவர்களுக்கு வேளாண்மையில் ஈடுபட்ட உழவர்களோடு நேரடி உறவுகள் காணப்படவில்லை. நேரடி உறவு கொண்டவர்கள் பண்ணை விசாரிப்பான்களும் கணக்கு வைக்கும் அதிகாரிகளுமே ஆவர். பள்ளு நூல்கள் இவ்வாறுதான் காட்டுகின்றன. உழைப்பில் ஈடுபடாமல் உற்பத்தியில் பங்குபெறும் நபர்களைப் பொதுவாக நிலச்சுவான் தார்கள் அல்லது நிலப்பிரப்புகள் (Land Lords) என இக்காலத்தில் ஆய்வாளர்கள் குறிப்பர். அவ்வாறாயின் அக்கால மானிய முறையின் காரணமாக விளைச்சலில் பங்குபெற்ற அரசன், பாளையக்காரன், மானியதாரர் முதலானவர்களை அக்காலத்திய நிலப்பிரபுக்கள் எனக் கொள்ள வாய்ப்புண்டு. அக்காலப் பண்ணை அமைப்பின் காரணமாக இவர்கள் வெளிப்பட வாரா நிலப் பிரப்புக்களாக (Absentee Landlords) இருந்துள்ளனர் எனக் கூறலாம்.

இத்தகைய நிலப்பரப்பு ஒருவனின் நிலம் மட்டுமே, ஒரு பண்ணையில் இருந்தது என்றும் கூறிவிட முடியாது. கி.பி.16,17,18 - ஆம் நூற்றாண்டுக்கால அளவில் கிடைக்கின்ற பள்ளுநூல்களின் வழி அக்காலப் பண்ணைகளை,

1. கோயில் சார்ந்த பண்ணைகள்

2. அரசோடு - பாளையக்காரரோடு - தொடர்புடைய தனியார்களின் பண்ணைகள்,

3. மொத்தமாக ஒரு குழுவிற்கு வழங்கப்பட்ட பண்ணைகள்

எனப் பகுத்துக் கூற முடிகிறது.தில்லைப்பள்ளு, கோட்டூர்ப்பள்ளு, சிவசயிலப்பள்ளு, திருமலை முருகன் பள்ளு, வையாபுரிப்பள்ளு, குருகூர்ப்பள்ளு, முக்கூடற்பள்ளு முதலியன கோயில் சார்ந்த பண்ணைகளைப் பற்றிய சித்திரங்களைத் தருகின்றன. செண்பகராமன் பள்ளு, பட்பிரபந்தம், தண்டிகைக் கனகராயன் பள்ளு, கங்கநாயகர் பள்ளு, தென்காசைப் பள்ளு முதலியன தனியாருக்குச் சொந்தமான பண்ணைகளைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன. கைக்தொழில் குழுக்களான விசுவகன்மர்களின் மானியமாக மாந்தைப் பள்ளியில் இடம்பெறும் பண்ணையும், வணிகர்களுக்குச் சொந்தமான பண்ணையாக, வைசியப் பள்ளுவில் இடம்பெறும் பண்ணையும் உள்ளன. 12

பண்ணைகளை இத்தகைய பகுப்புகளாகக் கூறமுடியும் என்றாலும், இவையனைத்திற்கும் பொதுவான கூறு ஒன்றைக் கூறலாம்: அதாவது, இப்பண்ணைகளில் வருமானம் முழுவதும் நிலத்தின் உரிமையாளனுக்கும், உழைப்பவனுக்கும் மட்டுமே சென்றது என்ற நிலை இல்லை; அதற்குப் பதிலாகப் பலரும் பங்குபெறும் நிலை இருந்துள்ளது. இதனை பின்வரும் அட்டவணைகள் வெளிப்படுத்தும் (அட்டவணைகள் 1 - 5). இவ்வாறு உற்பத்தி பங்கிடப்பட்ட முறைகளின் அடிப்படையில் அக்காலப் பண்ணைகளை ஒரு விதக் கூட்டுப்பண்ணைகள் என்று கூடக் கூறலாம்.

பண்ணை உற்பத்தி பங்கிடப் பட்ட முறை:

பண்ணை விளைச்சலிலிருந்து பங்கு பெற்றவர்களை இந்தப் பட்டியல்கள் வெளிப் படுத்துகின்றன. அதே நேரத்தில் அப்பட்டியல்கள், எல்லா இடங்களிலும், எல்லாப் பண்ணைகளிலும் ஒன்று போல் இருந்ததில்லை என்பதையும் தெரியப் படுத்துகின்றன. பண்ணை விளைச்சலிலிருந்து விழாக்கள், சத்திரங்கள், அணைகள், அந்தணர்கள், வித்துவான்கள், கவிஞர்கள், கைத்தொழிலாளர்கள், தோப்புக்கள், தேவதாசிகள், வட்டாரத் தலைவர்கள் உள்பட ஊரில் பல உறுப்புக்களும் பங்கு பெற்றதாகப் பள்ளு நூல்கள் கூறுகின்றன. இப்படிப் பங்களிக்கப்படுவதற்கு அடிப்படையாக இருந்தவை அவர்களின் தேவையே என்று கூறமுடியாது. மாறாக அவர்களது சமூகத்தகுதியும் சமூகத் தேவையுமே அடிப்படையாக இருந்தன என்று கருத இடமுண்டு.

மேலும் இந்தப் பங்கீட்டுமுறை, எல்லாப் பண்ணைகளிலும் ஒன்று போல இருந்தது இல்லை. கோயில் சார்ந்த பண்ணைகளுக்கும் தனியார்ப் பண்ணைகளுக்கும் இம்முறையில் வேறுபாடுகளைக் காண முடிகின்றது. கோயில் சார்ந்த பண்ணைகள் அதிகப்படியான உறுப்பினர்களுக்கும், தனியார்ப் பண்ணைகள் குறைவான உறுப்பினர்களுக்கும் விளைச்சலைப் பங்கிட்டுள்ளன. அத்தோடு தனியார்ப் பண்ணைகளில் பங்கு பெறுவோரில் தனியாட்களை அதிகம் காணமுடிகிறது. ஆனால் கோயில் சார்ந்த பண்ணைகளில் வருமானங்களில் சமூகப் பொதுநிலை நிறுவனங்களும் பொது நிலை ஆட்களும் பங்குகள் பெற்றதை அதிகம் காணமுடிகின்றது. அட்டவணை 1, 2, க்கும் 3, 4 க்கும் உள்ள வேறுபாடுகள் வழியாக நாம் உணரலாம்.

வையாபுரிப்பண்ணை, முக்கூடற்பண்ணை என்ற இரண்டு கோயில் சார்ந்த பண்ணை களையும் வடகரைப்பண்ணை, செண்பகராமன் பண்ணை என்ற இரண்டு தனியார்ப் பண்ணை களையும் ஒப்பிட்டுக் காண்பதன் மூலம் இந்த வேறுபாடுகளை உணரலாம். வையாபுரிப் பண்ணை யிலிருந்த சிவகிரியான் என்ற வட்டாரத் தலைவனும், கோவில், சத்திரம், பாலய்யர் மடம், சுப்பிரமணியர், பாவலர், கவிராச பண்டிதர், கந்தப்பையன், நல்லய்யங்கார், வேதியர் முதலான சமூகப் பொதுநிலை ஆட்களும் பங்கு பெற்றதாகக் குறிப்புகள் உள்ளன (அட்டவணை - 1 ). இதேபோல் முக்கூடற்பண்ணையிலிருந்தும் விழாக்கள் (ஆடி, பங்குனி), பூசைகள், அணைக்கட்டு, தினச்சத்திரம், தோப்பு முதலான பொதுநிலைகளும், நாவாணர், மறையோர், தேவதாசிகள் முதலான பொதுநிலை ஆட்களும் பங்கு பெற்றதாகக் குறிப்புக்கள் உள்ளன. (அட்டவணை - 2). இப்பண்ணையிலிருந்து தனியார்கள் எவரும் பங்கு பெற்றதாகச் செய்திகள் இல்லை. இதற்கு மாறாகப், பட்பிரபந்தத்தில் இடம் பெறும் வடகரைப்பண்ணையின் உற்பத்தியில் ராணுவு, சத்திரம், கோயில் கட்டளைகள், புலவர்கள், கவிஞர்கள், கணக்குப் பிள்ளை, வியாபாரிகள் முதலானோர் பங்கு பெற்றதாக உள்ளது (அட்டவணை -3).

செண்பகராமன் பண்ணையின் உற்பத்தியிலோ செண்பகராமன் குடும்பச் செலவு, கணக்கனின் கூலி, பண்ணையாட்களின் கூலி, கோயில் பலி, தச்சர் எனப் பிரித்துப் பங்கிடப்பட்டுள்ளது. (அட்டவணை - 4). உற்பத்தி பங்கிடப்பட்ட முறையில் இன்னொரு செய்தியும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட பங்கினைப்பற்றிச் சொல்லும் பொழுது வயலின் பெயரொன்றைக் குறிப்பிட்டு, அதனோடு அங்கு விளைந்த நெல் முழுவதும் அந்தணர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.கவிராச பண்டிதருக்கு 500 சலுகை, சமூக வித்துவானுக்கு 500 சலுகை நெல் அளந்ததாகக் கூறும் வையாபுரிப்பண்ணைப் பள்ளன், கந்தப்பையனுக்கு ‘கமுகடியின் நெல்லெல்லாம்’ அளந்ததாகவும் கூறுகிறான். எனவே அந்தணர்களுக்கு இறையிலியாக நிலங்கள் மானியமாக்கப்பட்டு அதில் வரும் விளைச்சல் முழுவதும் அவர்களையே சேரும் எனக் கூறப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இம்முறை பிற்காலச் சோழர் காலத்திலேயே இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுவர். அவர்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்கள் பிரமதேயம், சதுர்வேதி மங்கலம் என வழங்கப்பட்டன. 13

ஒரு குழுவிற்கென வழங்கப்பட்ட மானிய நிலங்கள் கொண்ட பண்ணையின் உற்பத்திப் பங்கீடு, முந்தைய முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. அதில் எந்தவிதத் தனி ஆட்களும் பங்கு பெறுவதாகக் குறிப்புக்கள் இல்லை. மடங்கள் போன்றவற்றிற்கு அன்னதானம் வழங்கவும்: கோயில் பூசைகள் செய்யவும் மட்டுமே அப்பண்ணைகளின் உற்பத்தி பங்கிடப் பட்டதாகத் தெரிகிறது. கைத்தொழில் குழுக்களான விசுவகன்மர்களின் பண்ணையைப் பற்றிக் கூறும் மாந்தைப்பள், பண்ணையிலிருந்து சிதம்பரம், வேளுர், சண்பைநகர், மாயூரம், ஆரூர், குடந்தை, திருவிடமருதூர், திருக்கடவூர், பேரூர், திருப்புகலூர், கண்ணபுரம், மதுராபுரிச் சொக்கர், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருநெல்வேலி, குற்றாலம், ராமேசுரம், திருப்பதி, பாபநாசம், முதலான ஊர்களில் உள்ள கோயில்களுக்கு நெல் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது (88). இது தவிர செங்கட்டாங்குடியில் அமுதுபடைக்கவும், சபையர் மடத்தில் அன்னாபிடேகம் செய்யவும் முறையே ஆயிரம் கலம், ஆயிரம் சேர் நெல் அளந்ததாகவும் கூறுகிறது.

கம்மியர், தச்சர், மனுவர், கொல்லர், தட்டார் என அழைக்கப்பட்டு அனைவரையும் இணைத்து விசுவகன்மர் என்ற குழுவை உண்டாக்கி, அவர்களுக்குரிய பண்ணை அமைத்ததாகக் கூறும் மாந்தைப் பள் அவர்கள் தங்களுக்குரிய பங்காக விளைச்சலில் எதையும் பெற்றுக் கொண்டதாகக் கூடக் கூறவில்லை. இத்தகைய குழுப்பண்ணைகளில் விளைச்சல், சமூகநலத் திட்டங்கள், கோயில்கள் முதலியவற்றிற்குப் போக, எஞ்சியன பொதுநிலையில் சேமிக்கப்படவும், அரசனுக்குரிய - பாளையக்காரனுக்குரிய பங்கினைச் செலுத்தவும் பயன்பட்டிருக்கக் கூடும் எனக் கூறலாம்.

இதுவரை வேளாண்மை உற்பத்திக்கு அடிப்படைத் தேவையான நிலத்தின் மீதுள்ள உரிமைபற்றியும், நிலத்தின் வருவாய் பங்கிடப்பட்ட முறை பற்றியும் கூறப்பட்டது. இனி, அந்நிலப்பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட விதம் பற்றிக் காணலாம்.

நாயக்கர் காலப் பண்ணைகளில் அமைப்பினைத் தருகின்ற பள்ளு நூல்களே, அக்கால வேளாண்மை முறைகளையும் அறிந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன. வேளாண்மை உற்பத்தியின் முக்கியப் பணிகளான உழவு, நாற்றுநடுதல், அறுவடை செய்தல் போன்றவற்றையும், அக்கால வேளாண்மைக் கருவிகளையும், பயிர்கள் பற்றிய செய்திகளையும் அவை விரிவாகப் பேசுகின்றன.
பயிரிடுதல்:

ஓர் ஆண்டில் எத்தனை போகம் பயிரிடப்பட்டது என்று துல்லியமாக அறிதற்குரிய குறிப்புகள் இலக்கியங்களில் கிடைக்கவில்லை. ஆனால் ஆடி மாதக்கடைசியில் ஒரு முறையும் (வை.பள்.136), தை மாதத்தில் ஒரு முறையும் பயிர் செய்யும் வேலை தொடங்கியுள்ளது (மு.பள்.133) என்பதற்குரிய குறிப்புக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் ஆண்டிற்கு இரண்டு முறை என்ற கால அடிப்படை தெரிய வருகின்றது.

கார்த்திகைச் சம்பா, சித்திரைச்சம்பா என மாதங்களின் பெயர்கள் கொண்டு நெல்வகைகள் சில அழைக்கப்படுகின்றன. மேலும் கோடைப்பயிர், காலப்பயி£பற்றிய குறிப்புக்களும் கிடைக்கின்றன. இதன்மூலம் குறிப்பிட்ட காலத்திற்கேற்பச் சில பயிர்கள் பயிர் செய்யப்பட்டன என்பதை உணர முடிகின்றது. இக்கால கட்டத்தில் சுமார் 150 - க்கும் அதிகமான நெல்வகைகள் இருந்ததாகப் பள்ளு நூல்களின் துணை கொண்டு ந.வீ. செயராமன் குறிப்பிடுகின்றார். 14

பயிர் செய்வதற்கேற்ப நிலத்தின் தன்மைகளை அக்காலத்தவர் அறிந்து வகைப்படுத்தியுள்ளனர். அரசாங்கமும் வரி விதிப்பதற்கு வசதியாகக் காடுமேடு நஞ்சை புஞ்சை எனத் தரம்பிரித்திருந்தது.15 நிலங்கள் பருக்கடி, முருக்கடி, பனையடி, ஆலடி, வேலடி, கமுகடி, வயல் , கழனி, உறிஞ்சு நிலம், கட்டை நிலம் எனப் பெயரிட்டுக் குறிப்பிடப்பட்டுள்ளன (வை.பள்.119,120). அத்தோடு மரம் வளர்ப்பதற்கென்று தனி நிலங்களும், தோப்பு நிலங்களும் இருந்ததை வம்சாவளியில் வரும் ‘மாவடை மரவடை தோப்பு துரவு’ என்ற சொற்கள் வெளிப்படுத்துகின்றன.16

வேளாண்மைக் கலைச் சொற்களைத் தொகுத்துப் பார்க்கும் நிலையில்17 நாற்றங்கால், நாளேரிடல், தொளி கலக்குதல், பரம்படித்தல், கங்களவு நீர் பாய்ச்சுதல், வெட்டிவிட்டுச் சரித்தல், வேலி பிரித்தல் முதலியன நாற்று தயார் செய்தலின் சொற்களாகக் கிடைத்துள்ளன. வேளாண்மையின் முதற்படியான நாற்று தயார் செய்தலுக்கு நாள், நேரம் கணித்துக் செயல்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. நாற்றங்கால் தயார் செய்ய நாள், நிமித்தம் பார்த்த செய்தியைப் பள்ளு நூல்கள் பலவற்றிலும் காணமுடிகின்றது.

நாற்று தயார் செய்த நிலையில் நடவுத்தொழில் தொடங்கியுள்ளது. முதல்விதை விதைப்பதற்கு நாள், கிழமை, பார்க்கப்பட்டது போலவே, நடவு செய்வதற்கும் நல்ல நேரம் பார்க்கப் பட்டுள்ளது. நடவு செய்யத் தொடங்குமுன் நிலம் நன்கு உழவு செய்யப்பட்டது. உழவு செய்யப்பட்ட நிலம் ஏற்படுத்தும் பொருட்டுப் பரம்படிக்கப்பட்டது. உழவும் பரம்பும் அடுத்தடுத்து அடிக்கப்படுகிறது. நான்குமுறை உழவும் மூன்று முறை பரம்பும் அடிக்கப் பட்டதாகத் தெரிகிறது. முதல் உழவு தரிசடி எனவும், இரண்டாவது இரட்டிப்பு எனவும், மூன்றாவது முச்சடிப்பு எனவும், நான்காவது நாலுழவு எனவும் கூறப்பட்டுள்ளன.18

ஏர் பூட்டிய மாடுகளால் நிலம் உழப்பட்ட செய்திகளைப் பல இலக்கியங்கள் கூறுகின்றன (அரிச். நாட்டு.31,36, பழ.பிள்.24). உழவிற்குப்பின் நிலம் எருவினாலும் இலை, தழைகளினாலும் உரமேற்றப் பட்டுள்ளது. நிலத்தில் உழுவதற்காக மாடுகள் வளர்க்கப் பட்டன. அத்தோடு உரமிடும் பொருட்டும் ஏராளமான மாடுகள் பண்ணையில் இருந்தன. உரமிடுதல் பற்றிப் பள்ளு நூல்கள் தவறாது குறிப்பிடு கின்றன. வையாபுரிப் பண்ணையில் ஐயாயிரம் மாடுகளும் (வை.பள்.150:6), சின்னணஞ்சாத் தேவன் பண்ணையில் பதினாயிரம் மாடுகளும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளன (பட்.பிர.108:3-4). இவ்வெண்ணிக்கை உண்மை இல்லாமல் போனாலும் மாடுகள் கிடைபோடும் பொருட்டு நிறைய வளர்க்கப் பட்டன என்பதனை மறுக்க முடியாது. மாட்டுச்சாணம் தவிர ஆட்டுச்சாணமும் எருவாகப் பயன் படுத்தப ¢பட்டது (மா.பள்.56). சில பண்ணைகளில் சொந்தமாகக் கால்நடைகள் இருந்தன. கிடைகள் போடப் பட்டன.மேலும், தொழில் முறையில் கிடை போடுவதற்கென்றே இடையர்களின் கால்நடைகளும் இருந்ததாகப் பள்ளுநூல்களில் குறிப்புகள் உள்ளன. தன்னை அதட்டி விசாரிக்கும் பண்ணை விசாரிப்பானிடம், கிடை போடும் பொருட்டு இப்பொழுது தான் இடையர்களைப் பார்த்து வந்ததாகக் கூறும் பள்ளனைப் பள்ளுநூல்களில் காண்கிறோம்.மாட்டுச்சாணம், ஆட்டுச்சாணம் தவிர இலைகளும் தழைகளும் உரமாகப் பயன்பட்டுள்ளன. இவற்றை உரமாகப் போட்டு மிதித்த செய்தி பள்ளு நூலொன்றில் குறிப்பிடப் படுகின்றது (மா.பள்.56 -57).

உழுது உரமேற்றப்பட்ட வயல், நாற்று நடவு செய்வதற்கு முன்பு சமப்படுத்தப் படுகிறது. அதற்குப் பயன்படும் கருவி ‘பரம்பு’ எனப்பட்டது. பின்னர் நாற்றங்காலிலிருந்து நாற்றுக் கிளைக்கப் பட்டு நடவு செய்யப் படுகிறது. ‘பந்திபடுத்தி’ என்ற சொல்லாட்சி வரிசையாக நின்று பெண்கள் நடவு செய்வதைக் குறிக்கிறது (அரிச்.நாட்டு.33, பழ.பிள்.9). குரவையிட்டு நடவு தொடங்கப்படுகிறது (முந்நூல்கள் 36, 24). நடவு செய்தலும் நாற்றங்கால் பிரிப்பதும் பயிரோடு வளரும் களைகளைப் பிடுங்குவதும் பெரும்பாலும் பெண்களுக்குரிய வேலைகளாகவே குறிக்கப்பட்டுள்ளன.வேளாண்மை வேலைகள் நடவு, உரமிடுதல், களை எடுத்தல் போன்ற செய்திகள் பேசப்படுவது போலவே அறுவடை செய்து விளைச்சலைக் காண்பதும் விரிவாகவே இலக்கியங்களில் பேசப்படுகின்றன.

அறுவடை என்பது கதிர்களை அரிதல். களஞ்சேர்த்தல், களத்தில் அவற்றை அடித்து மிதித்துப் பிரித்தல் ஆகியனவற்றைக் குறிக்கும். பொன்னிறமாக விளைந்த கதிரை அரிவாள் கொண்டு அரிஅரியாக அரிந்து காய வைத்துக் களத்தில் சேர்ப்பர் (பழ.பின்.16). களத்தில் கதிர்களை அடித்தும் மிதித்தும் நெல்லைப் பிரிப்பர். வைக்கோலையும் நெல்லையும் பிரிப்பதற்கு எருமை மாடுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பின்னர் காற்றில் தூற்றப்பட்டுப் ‘பதடி’ எனவும் ‘நல்ல நெல்’ எனவும் பிரிக்கப்படும். நல்ல நெல் களத்து மேட்டிலேயே சுமைகளாகக் கட்டப்பட்டு எடுத்துச் செல்லப் படுகிறது (கம. சிற. 86., அரிச். நாட்டு.87).பிரிக்கப்பட்ட வைக்கோல் படப்பாக இடப்பட்டு கால்நடைகளின் உணவாகப் பயன்பட்டது (பட்.பிர.108). கதிர் அறுப்பு, நெல் பிரிப்பு முதலான அறுவடை வேலைகளை ஆண், பெண் இருபாலாரும் இணைந்தே செய்தனர்.

வேளாண்மைக் கருவிகள்:


நாயக்கர் காலத்திய இலக்கியங்களில் கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் வேளாண்மைக்குத் துணையாக இருந்த கருவிகளாகக் குறிப்பிடப்படுபவை: மாடு, கலப்பை, ஏர், மண்வெட்டி (மா.பள்.31), கூடை, முறம், (வை.பள்.203), அரிவாள்,பரம்பு (கம.சிற.86) முதலானவைகளாகும். நிலத்தை உழுவதற்குப் பயன் படுத்தப்பட்ட கருவி கலப்பையாகும். இதில் பகடு எனப்படும் இரும்பு பொருத்தப் பட்டுள்ள பகுதியும், ஏர்க்காலும் வடக் கயிற்றினால் இணைக்கப்பட்டிருந்தது (பட்.பிர.71). பகடு, கொழு எனவும் கூறப்பட்டுள்ளது. ஏர்க்கருவியான கலப்பையின் உறுப்புக்களின் தனித்தனியாக பெயர்களாகப் படைவாள், மேழி, நுகம், கொழு, விட்டகயிறு, கால், உழவுகோல் போன்றன கூறப்படுகின்றன (திருவா.பள்.50).

பயிர்கள்:

உழவு, அறுவடை, விவசாயக்கருவிகள் பற்றிய தகவல்களைத் தரும் இலக்கியங்கள் பெரும்பாலும் நெற்பயிர் பற்றியனவாகவே உள்ளன. தவிர, தோட்டப் பயிரான கரும்பு பயிரிடப்பட்டுச் சாறு வடிக்கப் பட்டுள்ள செய்தி, ஓரிடத்தில் குறிக்கப்படுகின்றது. (அர்ச் . நாட்டு. 33). ஆனால் புஞ்சைப்பயிர்களான வரகு, திணை, கேழ்வரகு, பயறு வகைகள் போன்றவை பற்றிய செய்திகள் இவ்விலக்கியங்களில் குறிப்பிடப் படவில்லை. ஆயினும் இக்காலகட்டத்திற்கு முன்பே அவை விளைவிக்கப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.19 எனவே இப்பயிர்கள் இக்காலத்திலும் விளைந்திருக்கக்கூடும். புலவர்களின் கவனத்தை அவை பெறவில்லை போலும்.

உணவுப்பயிர்கள் தவிர வணிகப்பயிர்கள் (Commercial Crops) சிலவும் அக்காலத்தில் பயிரிடப் பட்டுள்ளன. நிலங்களுக்கு வழங்கப்படுகின்ற பெயர்களைக் கொண்டு இந்த முடிவுக்கு வரமுடிகிறது. வெற்றிலை பயிர் செய்த இடம் ‘கொடிக்காலடி’ எனக் குறிக்கப் பட்டுள்ளது. அதே போல் புளியடி, மாவடி என்ற சொற்களைக் கொண்டு (வை.பள்.119, 120) புளியந்தோப்பும் மாந்தோப்பும் இருந்தன எனக் கூறலாம். இவை தவிர வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் போன்றனவும் பயிரிடப் பட்டிருக்க வேண்டும். தனிப்பாடல் ஒன்றில் இவை பற்றிய குறிப்புக்கள் உள்ளன (த.தி.காசு.பதி.ப.269).

பொதுவாக எல்லாப் பள்ளுநூல்களும் நெல் பயிரிடும் பண்ணைகளைப் பற்றிய செய்திகளை மட்டுமே தருகின்றன. மாறாகத் திருமலை முருகன் பள்ளு மட்டும் பருத்தி, மிளகு, கடுகு, முந்திரி, கத்திரி, கேப்பை, வெற்றிலை போன்றன பயிரிடப்படும் நிலங்களின் பெயர்களையும் தருகின்றது (67).பெரும் விருந்தொன்றைக் குறிப்பிடும் கந்தசாமிக்காதல் அதில் துவரம்பருப்பு, முள்ளங்கி, பாகல், கத்திரிக்காய், கதலிக்காய், கருணைக்கிழங்கு, சக்கரை வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், மாங்காய், புடலங்காய் முதலான காய்கறிகள் பரிமாறப்பட்டதாகக் கூறுகிறது. (கண். 166 - 184). எனவே இவையும் பயிரிடப்பட்டன எனக்கூறலாம். விளைபொருட்களை அளப்பதற்குரிய அளவைகளின் பெயர்களாக மரக்கால், சேர், பதக்கு, பொதி, கலம், கோட்டை, சலகை முதலியனவும் இலக்கியங்களில் கிடைக்கின்றன (பட்.பிர.139, மா.பள்.88, மு.பள்.68, வை.பள்.191).

இலக்கியங்கள் தவிர, பிற வரலாற்றைச் சான்றுகளைக் கொண்டு விசயநகர, நாயக்க அரசர்களின் வரலாற்றை ஆய்வு செய்துள்ள எம்.சிவானந்தம், பருத்தித் தொழிலும், எண்ணெய் எடுத்தலும் அக்காலத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். எனவே பருத்தியும் எண்ணெய் வித்துக்களும் பயிரிடப் பட்டன எனக் கருதலாம்.20

நீர்ப்பாசனம்:

வேளாண்மையின் ஒரு பகுதி நீர்ப்பாசனம். நீர்ப்பாசன முறைகளின் வளர்ச்சியைக் கொண்டே ஒரு நாட்டின் வேளாண்மைப் பெருக்கம் அமையும். இதனை வலியுறுத்தும் வகையில் ‘நீருயர நெல்லுயரும்’ என்ற பழஞ்சொல் வழக்கில் உண்டு. நாயக்கர் காலத்தில் இருந்த நீர்ப்பாசன முறைகளில் ஆற்றுநீர்ப் பாசனத்தையும் குளத்துநீர்ப் பாசனத்தையும் சிறப்பாகக் குறிப்பிடலாம். கிணற்றுப் பாசன முறையில் வேளாண்மை செய்யப்பட்டதற்கான இலக்கியச்சான்றுகள் கிடைக்கவில்லை. ஆற்றில் பெருக்கெடுத்து வரும் நீரைக் கால்வாய்கள் மூலம் பாசனத்திற்குப் பயன்படுத்தும் முறை ஆற்றுநீர்ப்பாசனம் எனப்படும். இதனை நேரடியாக நிலத்தில் பாய்ச்சுவது, குளங்களில் தேக்கிவைத்து உபயோகிப்பது என்று இரண்டு வகையாகப் பகுத்துக் கொள்ளலாம். ஆண்டு முழுவதும் வற்றாத நதிகள் அரிதாக உள்ள நிலையில் தேக்கிவைத்து உபயோகிப்பதே அதிகம் பயன் தரக்கூடியது. அக்கால மக்கள் இம்முறையைப் பின்பற்றியதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. கால்வாய்களை அக்கால இலக்கியங்கள் ‘அணைகால்’ என்று குறிப்பிடுகின்றன. அணைகாலிலிருந்து குளத்திற்கு நீர் பாய்ந்தது. அதிலிருந்து தேவையானபோது வயலுக்குத் திருப்பி விடப்பட்டது. அணைகாலை மேற்பார்வையிட்டுத் திருக்குளத்தை நிரப்பி வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகிறது மாந்தைப்பள் (56 - 57).

நீரைத் தேக்கி வைக்கும் முறையை அறிந்திருந்ததோடு, மிகுந்த பொறுப்போடு அதனைப் பாதுகாக்கவும் செய்தனர். மிகுந்த மழையின் காரணமாக நீர்த்தேக்கம் உடைப்பு எடுக்கும் போது, அதனைப் பாதுகாக்கும் பொருட்டு மண்வெட்டி, கூடை முதலான கருவிகளுடன் எண்ணெய்ப்பந்தம், சூந்துக்கம்புத் தீபம் முதலானவற்றோடு மக்கள் இரவோடு இரவாகச் சென்றனர். அப்படிச் செல்லும் போது மழையில் நனையாமல் இருக்க ‘கொங்காணியும் உடன் கொண்டு போயினர் (முந்நூல். 31) என்ற குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

பெரும் ஆறுகள் இல்லாத பகுதிகளில் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை ஆங்காங்கே கண்மாய்கள் வெட்டித் தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்திய குறிப்பும் கிடைக்கின்றது. ஆயின், பிற்காலச் சோழர்கள் காலத்தில் அணைகள் கட்டியதாகச் செய்திகள் காணப்படுவது போன்று21, நாயக்கர் காலத்தில் குறிப்புக்கள் கிடைக்கவில்லை. ஆனால் அதற்குப்பதிலாக ஏராளமான குளங்கள் வெட்டிய தற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. பாளையப்பட்டுக்களின் வரலாற்றைத் தரும் வம்சாவளிக் கைபீதுகள் அவர்களின் கடமைகளுள் குளம் வெட்டுதலையும் கால்வாய் வெட்டுதலையும் முக்கியமானவைகளாகக் குறிப்பிடுகின்றன. இலக்கியங்களிலும் கூடப் பாளையக்காரர்கள் குளம் வெட்டியதற்கான குறிப்புகள் உள்ளன. சிவகங்கைப் பகுதித் தலைவனான வடுகநாத துரையின் காலத்தில் ‘ஏரி, குளம் போன்றவற்றை உண்டாக்கி, காட்டை வெட்டி நாடாக்கிப் புல்லரிம்பு சோலை புதுக்கி’ நிர்வாகம் நடத்தினான் என மான்விடுதூது கூறுகின்றது (153 - 163). அவன் பெயராலேயே ‘வடுகநாத சமுத்திரம்’ என்ற குளமும் ‘பொய்கைக்கரை’யும் ஏற்படுத்தப்பட்டது எனவும் அந்நூல் கூறுகிறது. 

எல்லாப் பள்ளுநூல்களுமே மழைக்குறி பார்த்தல், மழைக்காக வேண்டல், ஆற்று நீரை வரவேற்றல் போன்றவற்றைப் பேசுகின்றதைப் பார்க்கலாம். மழையைப் பெரிதும் எதிர்பார்த்து - அதனைச் சார்ந்து இருந்த நிலையை இக்குறிப்புக்கள் புலப் படுத்துகின்றன எனலாம்.

நீர்ப்பாசனமும் அரசும்:

நாயக்கர் காலத்தில் வேளாண் பொருளாதாரத்தில் அரசின் உறவு பற்றிக் காணும் போது சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முறை இருந்ததை இங்குக் குறிப்பிட வேண்டும். முதலாவது:நேரடியான வேளாண்மை உற்பத்தியில் அரசு தலையிடவில்லை;விலகியே இருந்தது என்பது. இரண்டாவது இதற்கு மாறாக உற்பத்திக்குத் துணையாக இருக்கக்கூடிய நீர்ப்பாசனம், அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்பதாகும்.இங்கு அரசு என்பது பாளையக்காரர்களையும் சேர்த்தே குறிக்கும். எனவே இதனை இருநிலைப்போக்கு எனலாம். இதனோடு தொடர்புடையது பங்கீடு. இப்பங்கீடு மேலோட்டமான முறையில் - பரவலான சமூகப் பங்கீடாகவே காணப்படுகிறது.

அடுத்து, நிலத்தின் உரிமை அல்லது உடைமை, மானியங்கள் என்ற அடிப்படையிலேயே இருந்தது மானியங்கள் தன்மை பற்றி முன்பே விளக்கப்பட்டுள்ளது.அடுத்து வரிவிதிப்பு, இறுக்கமான முறையில் அமைக்கப் பெற்றிருந்ததும் முக்கியமானதாகும் இதனை அடுத்துவரும் அரசியல் அமைப்பு என்ற பகுதியில் விரிவாகக் காணலாம்.மேற்கூறிய ஐந்தும் நாயக்கர்காலச் சமுதாயத்தின் பொருளாதார அமைப்பில் அடிப்படைக் கூறுகளாகும் .

நாயக்கர் காலத்தில் நீர்ப்பாசனத்திட்டங்கள் பாளையக்காரர்களின் பொறுப்பிலேயே பெரிதும் இருந்தன. வேளாண்மை வரியில் மூன்றில் ஒரு பகுதியின் மூலம் நீர்ப்பாசனம், காவல், படை பராமரிப்பு போன்ற காரியங்களைப் பாளையக்கார்கள் மேற்கொண்டனர் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.22 அத்தோடு கிராம நிர்வாக முறையான ஆயங்கார முறையில் நீர்ப்பாசனத்தைக் கவனித்துக்கொள்ள ஓர் உறுப்பினர் இருந்ததாக ஏ.கிருஷ்ணசாமி எழுதுகின்றார். நீர்கண்டி (Watermen)அல்லது மடையன் என்ற உறுப்பினன் கிராமத்தின் நீர்ப்பாசனப் பொறுப்பைக் கவனித்துக் கொள்பவனாக இருந்துள்ளான் என்பார் அவர்.23 பாளையக்கார்களிடம் நீர்ப்பாசனப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது என்பதற்கான சான்றுகள் வம்சாவளியிலும் காணப்படுகின்றன.பாளையப்பட்டின் ஒவ்வொரு ‘பட்டக்காரனும்’ செய்த பணிகளைக் குறிப்பிடும் பொழுது அவன் வெட்டிய குளத்தின் பெயர் தவறாது இடம் பெறுதலைக் காணலாம்.24

உற்பத்தி பங்கிடப்பட்ட பொழுது மானியநிலங்களில் ஒரு பகுதி விளைச்சல், அணைகள் கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் அளிக்கப்பட்டது என்பதற்குரிய செய்திகளும் இலக்கியங்களும் உள்ளன (அட்டவணை - II). ஆறு, குளம் போன்ற நீர்ப்பாசன இடங்கள் தனியொருவருக்கு உடைமைகளாக இருந்தனவல்ல. அனைவரும் பயன்படுத்தும் வகையில் அவை பொதுவாகவே இருந்தன இதனை,

‘ஆறுகுளந் தோப்பு மணிநியமஞ் சத்திரமும்

கூறு வழித்தாறு நிழற்கோட்டமுடன் - மாறுமன

வேசி சபை நீர்ப்பந்தல் வேந்தன் மடமயிலே

காசினிக்குளே பொதுவாங் காண்’.

(த.தி.காசு., II, U 43)என்ற தனிப்பாடல் வழி அறியலாம்.

தொழில்கள்:

நாயக்கர்கால இலக்கியங்களிலும் பிறவரலாற்றுச் சான்றுகளிலும் வேளாண்மை பற்றிய தகவல்கள் கிடைக்குமளவிற்கு வேறுவகையான தொழில்கள் பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. நாயக்கர் காலத்திற்கு முந்திய காலத்திலிருந்தே கரும்பிலிருந்து சாறு பிழிவதையும், அதனைப் பாகாகக் காய்ச்சுவதையும் காணமுடிகிறது. நாயக்கர்கால இலக்கியங்களும் இதனைத் தெரிவிக்கின்றன (கட.புரா.87, திருநல்.புரா.92). கரும்பு உற்பத்தியையும் பாகு காய்ச்சுவதையும் இணைத்தே இலக்கியங்கள் கூறுவதைக் கொண்டு கரும்பு ஒரு ஆலைத் தொழிற்பொருளாக அக்காலங்களில் இருந்தது என்று கூறலாம். இதனோடு பருத்தி ஆலைகளும் எண்ணெய் இறக்கும் ஆலைகளும் நாயக்கர் காலத்தில் இருந்துள்ளன. துணிவகைகளையும் எண்ணெய் உபயோகிக்கும் செயல்களையும் இலக்கியங்கள் தருகின்றன (திருவர. கல. 69; மீனா. குறம்.24) இலக்கியங்கள் தவிர பிற வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டு, அக்காலத்தில் பருத்தித் தொழிலும் எண்ணெய் எடுத்தலும் இருந்ததாக எம்.சிவானந்தம் குறிப்பிடுகின்றார். அதுவும் கூட கிராம அளவில், அக்கிராமத்தில் உள்ள குடும்பங்களின் தேவைக்கேற்ப மட்டுமே நடந்தது எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.25

ஆலைத்தொழில்கள் தவிர கைவினைத்தொழில்கள் சிலவற்றைப் பற்றிய குறிப்புக்களும் இலக்கியங்களில் கிடைக்கின்றன. கைத்தொழிலாளர்கள் மரம், உலோகம் முதலியவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டுள்ளனர். இரும்பு போன்ற உலோகங்களை உருக்கிக் கொழு, மண்வெட்டி போன்ற விவசாயக் கருவிகளைச் செய்தவர்கள் கொல்லர்கள் எனப்பட்டனர் (மா.பள்.ப.சா, திருவா.கோ.287). மரங்களைக் கொண்டு கலப்பை, ஏர்க்கால் முதலான உழவுக் கருவிகளைச் செய்தவர்கள் தச்சர்கள் எனப்பட்டனர். இவர்கள் ஆசாரிகள் எனவும் அழைக்கப்பட்டனர் (வை.பள்.152). பொன்னினால் ஆபரணங்கள் செய்தவனைத் தட்டான் என்கிறது தனிப்பாடல் ஒன்று (த.தி.காசு.,பதி.ப.278). கம்மியன் உலோகங்களால் பாவைகள் செய்துள்ளான் (கூள.காத.110). இவர்களோடு கண்ணாளன் என்பவனும் குறிக்கப் படுகிறான். ஆனால் இவன் என்ன தொழில் செய்தான் என்ற குறிப்பு இல்லை. கைத்தொழில் செய்யும் கொல்லன், தச்சன், தட்டான், கம்மியன் , கண்ணாளன் முதலான இவ்வைந்து சாதியினரும் அடங்கிய குழுவை விசுவகன்மர் எனக் கூறுகிறது மாந்தைப்பள். இக்குழுவிற்குப் பொதுவான மானிய நிலம் இருந்ததாகவும் அந்நூல் குறிப்பிடுகின்றது.அத்தோடு வேளாண்மைக்கருவிகள் செய்தமைக்காக ஒவ்வொரு பண்ணையிலிருந்தும் இவர்கள் குறிப்பிட்ட அளவு, விளைச்சலில் பங்கு பெற்றனர் என்பதற்கான சான்றுகளும் உள்ளன (அட்டவணை - V.).

திருவிளையாடற்புராணத்தில் ‘குடிமைத்தச்சன்’ (மதுரை . 423) என்றொரு சொற்றொடர் காணப்படுகிறது. இது, ‘ஒரு குடிக்குச் சொந்தமான தச்சன்’ என்று பொருள்படும். இவர்கள் ஒரு பண்ணைக்கு - நிலச்சுவான்தாருக்கு வழிவழியாகத் தொழில் செய்யக் கடமைப் பட்டவர்கள் எனலாம். இதனை உறுதி செய்யும் விதமாக வரலாற்றறிஞர் இராம்சரன் சர்மாவின் பின்வரும் கூற்று அமைந்துள்ளது. ‘‘ கைவினைஞர்கள் அவர்கள் வாழ்ந்த கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ, அங்கு இருந்த உள்ளூர் வாடிக்கை யாளர்கள் அல்லது எஜமானர்களுக்குத் தடையின்றிப் பணிபுரிந்திடத் தம்மை இணைத்திட வேண்டியதாயிற்று. மானிய தாரர்களுக்குக் கிராமங்களை அளித்த போது இயல்பாக அக்கிராமத்தைச் சார்ந்தவர்களான கை வினைஞர்களும் மான்யதாரருடைய ஆணையினை நிறைவேற்றுமாறு கட்டுக் கொள்ளப் பட்டனர்’’. இக்கூற்றுக்கு அரணாக, அக்காலங்களில் நிலவிய படைமானிய -நிலமானிய முறைகளையே அவர் காரணமாகக் கூறுகிறார்.26

மேற்கூறிய தொழில்களேயன்றி, ஏனைய சிறு தொழில்கள் பற்றிய குறிப்புக்கள் நாயக்கர் கால இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. ஆயினும், துப்பாக்கி, கத்தி, அம்பு, சக்கரம், வேல், வளைதடி, கைவெடி போன்ற ஆயுதங்களைக் கந்தசாமிக்காதல் என்ற நூல் குறிக்கின்றது (கண்.87-89). இக்குறிப்பினை மறைமுக ஆதாரமாகக் கொண்டு, ஆயுதங்கள் தயாரிக்கும் தொழில் அக்காலத்தில் நடைபெற்றிருக்கக் கூடும் என்று கருத இடமுண்டு. துப்பாக்கி வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாகிக் கொண்டிருந்ததா - இங்கேயே தயாரிக்கவும் தொடங்கப் பட்டிருந்ததா என்பது மேலும் ஆய்வுக்குரியது.

வணிகம்:

நாயக்கர்கால இலக்கியங்களில் கைவினைத்தொழில்கள் பற்றிய குறிப்புக்களை விடவும் வணிகம் பற்றிய குறிப்புக்கள் சற்று அதிகமாகக் கிடைக்கின்றன. வணிகர்கள் யார்? என்னவகையான பொருட்கள் வணிகப் பொருட்களாய் இருந்தன; அவர்களின் வணிகப் பண்புகள் எவை என்பன போன்ற வினாக்களுக்கு விடைகள் இலக்கியங்களில் கிடைக்கின்றன. ஆயின் வெளிநாட்டு வணிகம் பற்றிய குறிப்புக்களோ, நாட்டின் முக்கிய உற்பத்தியான வேளாண்மை உற்பத்தியோடு, வணிகத்திற்கு இருந்த உறவு நிலையையோ, வணிகர்களின் வளர்ச்சிக்கு அரசின் ஆதரவு நிலை பற்றிய செய்திகளையோ இலக்கியங்கள் நேரிடையாகத் தரவில்லை. இலக்கியங்களில் கிடைக்கும் வணிகம் பற்றிய குறிப்புகளைப் பிற வரலாற்றுச் சான்றுகளின் துணையோடு ஆய்வு செய்யும் பொழுது இவைகளுக்கான விடைகள் கிடைக்கின்றன.

வணிகம் செய்தவர்களை வணிகர், வைசியர் என்ற சொற்களால் இலக்கியங்கள் பொதுவாகக் குறிப்பிடுகின்றன. மேலும் இவர்கள் நகரத்தார் (வாட். உலா.115), செட்டியார் (மூவ.விற., கண். 173-174 ராம.அம்.ப.47: வ.3, கூள.விற., கண்.745) முதலான சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப் படுகின்றனர். செட்டியார்களின் உட்பிரிவுகளாக இக்காலத்தில் கருதப்படும் சேடர், சேணியர் பற்றிய குறிப்புக்களும் காணப்படுகின்றன (கந்.காத., கண். 93-96) இப்பெயர்கள் அனைத்துமே தம்மளவில் ஒரு குழுவினரைக் குறிக்கின்றனவாகவே உள்ளன. வணிகர்களின் வணிகப் பொருட் களாகச் சந்தனம், கஸ்தூரி, அணிகலன்கள், யானைத்தந்தம், மணிகள், மருந்துப் பொருட்கள் (திருச்செந். தல, 160), சுக்கு, வெங்காயம், வெந்தயம், சீரகம், பெருங்காயம், (த.தி.காசு 1 ப. 249), முதலியன கூறப்படுகின்றன.

இலக்கியங்களில் கூறப்படும் இவ்வணிகப் பொருட்களில் பெரும்பாலான மக்களின் உணவுப் பொருட்களோடு தொடர்புடையனவாகவும், சிறுபான்மை ஆடம்பரப் பொருட் களாகவும் உள்ளன. இவை தவிர துணிவகைகளையும் கடல்பொருட்களான முத்து, சங்கு முதலியனவற்றையும் வணிகப் பொருட்களாக வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இவை, பெரும்பாலும் வெளிநாட்டு வணிகப் பொருட்களாக இருந்துள்ளன.நாயக்கர்கால மக்கள் வெளிநாட்டுப் பொருட்களைப் போர்த்துக்கீசியர் களிடமிருந்தும், டச்சுக்காரர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிடும் சத்தியநாதய்யர், அக்காலத்தில் வெளிநாட்டுப் பொருட்கள் அதிகம் தேவைப் பட்டிருக்க வில்லையென்றே கருதுகின்றார். கி.பி.1699 - இல் எழுதப்பட்ட மார்டின் பாதிரியின் கடிதத்தை மேற்கோள் காட்டி, மக்களின் தேவை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்பட்டது எனக் கூறுவதோடு, வெளிநாட்டு வணிகத்திற்குத் தேவையான கப்பல்கள், நாயக்கர்களிடம் அதிகம் இன்மையால் அதனை அவர்கள் ஆதரிக்கவில்லை எனவும் எழுதுகின்றார்.27 ஆனால், ஆங்கிலேயர்கள் தமிழகத்தோடு வணிக உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட பின்னர், வெளிநாட்டு வணிகமும் சிறப்பான நிலையிலேயே இருந்துள்ளதாகத் தெரிகிறது. கி.பி. 1650 - 1750 வரையிலான வணிகத்தின் நிலைகளைப் பற்றி எழுதியுள்ள எஸ்.அரசரத்தினம், (S. Arasaratnam, Aspect on the role and activities of South Indian Merchants c.1650 - 1750) தமிழகத்தில் நடந்த வியாபார ஒப்பந்தங்களாகப் பலவற்றைக் குறிப்பிடுகின்றார்.

பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் சென்னையில் முக்கிய வியாபாரப் பிரமுகர்களாகப் பெரி திம்மண்ணாவும், காசி வீரண்ணாவும் இருந்துள்ளனர். இவர்களிருவரும் ஆங்கிலேய வியாபாரிகளுக்குத் துணி வியாபாரம் செய்தவர்களில் முக்கியமானவர்கள். அதே நூற்றாண்டின் இறுதியில் செக்கசெரப்பா என்பவர் பல வியாபாரக் குழுக்களின் தலைவராகக் குறிப்பிடப் படுகின்றார். இன்னொரு முக்கியப் பிரமுகர் சுங்குராமர் எனச் சுருக்கமாகக் கூறப்படும் சுங்குராமச் செட்டி, இவரது வியாபாரம் எந்த மாவட்டத்திலும் யாராலும் தடை செய்யப் படாமல் நடந்துள்ளது. கி.பி. 1704 - ஆம் ஆண்டளவில் ஆங்கிலேயரோடு பெரிய அளவில் துணி வியாபாரத்திற்காக ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் இவரும் இவரது பங்குதாரர்களுமே. இந்தத் தகவல்களை யெல்லாம் தரும் எஸ்.அரசரத்தினம், அக்கால வணிகம் யார் கையிலிருந்தது என்பதையும் குறிப்பிடுகின்றார். ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை புரிந்த கம்பெனியினர் உள்நாட்டு வணிகத்தோடு உறவு கொள்வதற்காக இங்கிருந்த கோமட்டிகள் என்றும் செட்டிகள் என்றும் கூறப்படும் சாதியினரோடு பெருமளவில் உறவு கொண்டனர். இந்தச் சாதியினரோடு பிராமணர்கள், முதலியார்கள், பிள்ளை, ரெட்டி, நாயுடு போன்ற சாதியினரில் சிலரும் வணிகத்தில் ஈடுபட்டனர். மீன் வியாபாரத்திலும் முத்து வியாபாரத்திலும் தென்கோடித் தமிழகத்தில் முஸ்லீம் களும் கிறித்துவப் பரதவர்களும் ஈடுபட்டிருந்த தாகவும் எழுதுகின்றார். 28

பெரிய அளவில் நடைபெற்ற இத்தகைய வியாபார ஒப்பந்தங்கள், வியாபார முறைகள், பிரமுகர்கள் பற்றியெல்லாம் இலக்கியங்களில் குறிப்புக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இலக்கியத்தின் நோக்கமும் தன்மைகளும் வேறானவை. அந்தப் போக்கிலேயே அவை சமுதாயத்தின் நிகழ்வுகளைக் கோடிகாட்டும் . அதன் நோக்குநிலை, சார்பு நிலை, வெளிப்படுத்தும் தகவல்கள் முதலானவற்றிலிருந்து தான் தேவையான குறிப்புக்களைப் பெற்றுப் பயன்படுத்த வேண்டும்.வணிகர்களின் குணங்களாகக் கடல் கடந்தும் வணிகம் செய்வர்; பணம் வருமிடத்தையும், வராத இடத்தையும் அறிந்து பணத்தைப் பெருக்கும் இயல்பினர்; விலை மலிவான சரக்குகளை வாங்கி விற்பதோடு அதன் வரவு - செலவுக் கணக்குகளை யாரிடமும் தெரிவிக்காதவர்கள்; கருமித்தனமானவர்கள். வட்டி வாங்குவதையும் தொழிலாகக் கொண்டவர்கள் எனச் சதக நூல்கள் பலவும் வணிகர்களின் செயல்களைச் சித்திரி¤க்கின்றன.

பெரும் வணிகதத்தில் ஈடுபட்ட சாதியினருள் முக்கியமானவர்களாகக் குறிப்பிடப்படும் செட்டிகளை இலக்கியங்களை வட்டி வாங்குபவர்களாகவும் நகை போன்ற விலைமதிப்புள்ள பொருட்களை அடகு பிடிப்பவர் களாகவும் சித்திரிப்பது குறிப்பிடத்தக்க ஒன்று (கள.விற., கண். 258 - 259; 744, 746). அத்தோடு, செட்டியார்கள் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்த செய்திகளையும் இலக்கியங்களில் காணமுடிகின்றது. செட்டியார்களிடம் வாங்கிய கடனுக்காக விளைச்சலில் ஒரு பகுதியை அளந்ததாகப் பள்ளு நூல் ஒன்று கூறுகிறது (பட்.பிர. 139). இன்னொரு பள்ளு நூலோ, கடனுக்காகப் பண்ணை மாடுகளை அனுப்பிய செய்தியைத் தெரிவிக்கின்றது. ‘ நல்லெண்ணச் செட்டிக்கு மாட்டை - பதினெட்டு கௌ¢ளைக்குக் கொடுத்தான்’ என்று வையாபுரிப்பள்ளு அதனைத் தெரிவிக்கின்றது (115: 1-3).

வணிகத்தின் வளர்நிலையும் வேளாண்மையின் தளர்நிலையும்:

தமிழக வரலாற்றில் ஏறத்தாழப் பத்து நூற்றாண்டுக் காலம் சமூகத் தலைமை வகித்தவர்களாக வேளாண்மையில் ஈடுபட்டவர்கள் இருந்தனர். வேளாண்மைத் தொழிலுக்குப் பாதகம் ஏற்படாதவாறு நீர்ப்பாசனம் முதலான வசதிகளைத் தரும் நிலையில் மன்னர்களும் இருந்தனர். வேளாண்மைத் தொழில் செம்மையாக நடைபெறுவதற்குத் தேவையான கடன்களைக் கூட வேளாண்மையோடு தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொள்ளும் வசதிகள் இருந்தன. பிற்காலச் சோழர்காலக் கோயில்கள் வங்கிகளின் செயல்பாடுகளையுடையனவாக இருந்ததை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.29

இந்த நிலைமைகள் அனைத்தும் நாயக்கராட்சியின் தொடக்க காலத்தில் இருந்தனவா? இல்லையா? என்ற வினாவிற்கு விடைகூறுவது கடினம். ஆனால், நாயக்கராட்சியின் பிற்காலத்தில் கி.பி.17 - ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18 - ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்நிலைமைகள் மாறி விட்டன. நாட்டில் பஞ்சமும் வறட்சியும் வேளாண்மைச் சிதைவிற்குள்ளாக்கியதை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர்.

“பஞ்சமும் வறட்சியும் நாட்டில் அடிக்கடி ஏற்பட்டதோடு மக்களில் பெரும்பகுதியை அழித்தன. அதற்கு இரையானவர்களுக்கு எவ்வித நிவாரணமும் உதவியும் அளிக்கப் பட வில்லை” என்று கு.ராஜய்யன் குறிப்பிடுகின்றார்.30 இத்தகைய பஞ்சங்கள் கி.பி.1622 தொடங்கி, கி.பி. 1770 வரை ஏறத்தாழப் பதினான்குமுறை ஏற்பட்டதாக ஒரு பட்டியல் கூறுகிறது.31 இப்பஞ்சங்களின் தன்மைகள் இலக்கியங்களிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ‘ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டி லேநெல்லும் ஒக்கவிற்கும் கார்தட்டிய பஞ்ச காலத்தி(ல்)’ எனத் தனிப் பாடல் ஒன்றும் (த.தி. கா கூ.ப. 226), ‘பாரியென வாயிரம் பேர்க் கன்னதானங் கொடுக்கும் பலனைப் பார்க்க நேரிடும் பஞ்சந்தனிலே யெவ்வளவோ கிலுங் கொடுத்தா னீதியாகு (ம்)’எனத் தண்டலையார் சதகமும் (48: 2 - 3) பஞ்சங்களைச் சித்திரிக்கின்றன. இப்பஞ்சங்களின் விளைவாக மக்களின் இடப்பெயர்ச்சியும், கூட்டங்கூட்டமாக இறந்து போனதும் நடந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. 32 இத்தகைய பெரும் பஞ்சங்களாலும் வறட்சியாலும் வேளாண்மை சீர்குலைவுற்றது என்பதோடு அக்கால வரி வசூல் முறைகளும் வேளாண்மையைச் சிதைத்தன எனக் கூறலாம்.

விசய நகர ஆட்சிக்காலத்தில் இருந்ததாக டி.வி. மகாலிங்கம் குறிப்பிடும் 33 நான்குவிதமான வரிவசூல் முறைகள் 18 -ஆம் நூற்றாண்டின் இறுதிவரை தொடர்ந்துள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனி யின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் (Rise and Fall of East Indian Company) என்ற நூலையெழுதிய ராமகிருஷ்ணமுகர்ஜி அந்த நான்குவிதமான வரிவசூல் முறைகளாகப் பின்வருவனவற்றைக் கூறுகின்றார்:

1. நேரடியான நிலவரி.

2. பண்ணைகளின் வழிவருமானம்

3. ராணுவ சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் மறைமுகமுறை.

4. கிராம அமைப்புக்களின் வழி வசூலிக்கப்படும் வரி..

இந்தியாவில் வணிக முக்கியத்துவம் வாய்ந்த முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கான காரணங்களை ஆய்வு செய்யும் வி.ஐ. பாவ்லோவ் (V.I. Pavlov) என்பவரும், விவசாயிகளிடமிருந்து நிலவரி மட்டுமின்றிப் பலவகையான வரிவசூல்கள் இருந்தன எனக் கூறுகின்றார். பணமாகவும், தொழிலாளர் உழைப்பாகவும், சேவையாகவும் நன்கொடையாகவும் லெவியாகவும் அரசாங்கத்திற்கு உதவ வேண்டிய பொறுப்பு நிலவுடமையாளர்களுக்கு இருந்தது என அவர் கூறுகின்றார். அத்தகைய உதவிகளைக் கணக்கிட்டால், அவர்களின் விளைச்சலில் பாதியாகவோ, மூன்றில் ஒரு பங்காகவோ இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.34 இயற்கை காரணமாக ஏற்பட்ட பஞ்சத்தினாலும் ஆட்சியாளர்களின் கடுமையான வரிவசூலிப்பினாலும் வேளாண்மையாளரின் பொருளாதார நிலை பின் தங்கிவிட்டது. சிதைந்துவிட்டது - என்று கருதலாம். இவ்வாறு சிதைந்து போன வேளாண்மையாளர்கள், கடுமையான பாதிப்புக்குள்ளாயினர். இந்நிலையில், வேளாண்மைக்கு உதவக் கூடிய -உற்பத்திப் பெருக்கத்தில் அக்கறை காட்டக்கூடிய -மைய அமைப்பு முறை எதுவும் இல்லை. 

 ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட அளவு வருமானத்தைத் தன்பங்காகப் பெற்றுக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளும் நிலையிலேயே நாயக்க அரசர்கள் இருந்தனர். நாயக்கர்களின் முன்னோடிகளான விசயநகரப் பேரரசர்கள் ஏற்படுத்திய ‘அமரநாயக’ முறையும். நாயக்கர்கள் ஏற்படுத்திய ‘‘பாளையக்கார முறை’யும் மேல்நிலையில் மாநில ஆட்சி முறைகள் போல் தோன்றினாலும் உண்மையில் அவை,வரிவசூலிப்பதற்கான அமைப்புமுறை (Revenue System) களாகவே இருந்தன. இம்முறையின்படித் திட்டவட்டத்திற்கு உட்பட்ட வரிகளைத் தான் பாளையக்காரன், மக்களிடம் வசூலிக்க வேண்டும் என்ற மைய அரசின் கட்டுப்பாடும் இல்லை. மைய அரசிற்குச் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட அளவைச் செலுத்திவிடும் பாளையக்காரர்கள், உழவர்களிடமும் பொதுமக்களிடமும் தங்கள் விருப்பம் போல வரிவசூலித்தனர். வேளாண்மை உற்பத்திக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளையும் பஞ்சகாலத்தில் நிவாரணங்களையும் அளிக்க வேண்டிய அரசாங்கமே அதற்கு மாறாகக் கடுமையான வரிகளை வசூலித்த நிலையில் வேளாண்மையாளர்கள் புதிய உதவிகளை நாட வேண்டிய தேவைகள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் வளர்ச்சி நிலையில் இருந்த வணிகர்களின் தயவை நாட வேண்டிய நிலைமை வேளாண்மை செய்தவர்களுக்கு ஏற்பட்டது.

வேளாண் - வணிக முரண்பாடுகள்:

வணிகர்களின் தயவை நாடவேண்டிய நிலைமை வேளாளர்களுக்கு ஏற்பட்டது உண்மையென்றாலும், தங்களின் சமூகத்தலைமையைத் திரும்பப்பெற விரும்பியும், வணிகர்களின் வளர்ச்சியை விரும்பாத நிலையிலும் வணிகர்களோடு முரண்பட்டும் நின்றனர். அதன் காரணமாக வணிகர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புவதிலும் ஈடுபட்டனர். அத்தோடு தங்களின் பழம்பெருமைகளைப் பேசித் தலைமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் முயற்சி செய்தனர். இதன் வெளிப்பாடுகள் இலக்கியம், மொழியுணர்வு, இனவுணர்வு, சமயச்சார்பு போன் ற தளங்களில் வெளிப்படையாகத் தெரிந்தன.

வேளாளர்களின் வணிக எதிர்ப்புக் கருத்துக்களைப் பரப்புவதிலும் வேளாளர் புகழ் பாடுவதிலும் முழுமையாக ஈடுபட்ட புலவர்களாக, சதக நூல்களைப் பாடியவர்களைக் குறிப்பிட வேண்டும்.

அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் எனத் தம்காலச் சமூகத்தை நான்கு பிரிவுகளாகப் பகுத்துக்கொண்டு அவற்றின் கடமைகள், பண்புகள், பெருமைகள் பற்றிப் பேசும் சதக நூல்கள் அந்தணர்களையும் (அற.சத.55; கயி.சத.3), வேளாளர்களையும் (தொண்.சத.7; கயி.சத.6; கும.சத.16) பலபடப்பாராட்டுகின்றன.

‘நீள்மழை பொழிந்திடுவதும்,

நிலமது செழிப்பதும், அரசர் செங்கோல்புரியும்

நிலையும் மாதவர் செய்தவமும்

மறையோர்களாலேயே விளங்கும்; இவ்வுலகத்தின்

மானிடத் தெய்வம் இவர்காண்’

என அந்தணர்களின் பெருமைகளை எடுத்துரைக்கின்றது குமரேச சதகம் (2). ஆனால் வேளாளர் பெருமைகளைப் பாடும் அறப்பளீசுர சதகமோ (84)

‘யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்

இயற்றி நல்லேர் பெறுவதும்,

இராசிய பாரஞ் செய்து முடி மன்னர் வெற்றிகொண்

டென்றும் நல்லேர் பெறுவதும்,

வசனாதி தப்பாது தனதானியந்தேடி

வசியர் நல்லேர் பெறுவதும்

மற்றுமுள பேரெலாம் மிடியென்றிடாததிக

வளமை பெற்றேர் பெறுவதும்

திசைதோறும் உள்ள பல தேவலாயம் பூசை

செய்யுநல்லேர் பெறுவதும்

சீர்கொண்ட பைங்குவளை மாலைபுனை வேளாளர்

செய்யும் மேழிப் பெருமைகாண்’

என்று சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் வாழ வேளாளர்களே காரணம் என்று கூறித் தன் வேளாள ஆதரவை வெளிப்படுத்துகின்றது.

அந்தணர்களும் வேளாளர்களும் பிற்காலச் சோழர் காலத்திலிருந்தே வேளாண்மை யோடு தொடர்புடையவர்கள் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இவ்வேளாண்மைக்கு அரசனின் ஆதரவும் தேவையெனக் கருதிய சதக நூல்புலவர்கள், அரசனும், அரசு நிர்வாக முறையும் கடுமையான வரிவிதிப்பின் மூலம் வேளாண்மைக்கு உதவாதநிலையில் இருந்தபோதிலும், அவனிடம் எதிர்ப்புத் தன்மையை மேற்கொள்ளவில்லை. அதே நேரத்தில் ஆதரவு நிலையையும் மேற்கொள்ளாது. ஏழைகளிடம் குறைவாக வரிவசூலிக்க வேண்டும் ; குறுமன்னர்களிடம் சீரான உறவு கொள்ள வேண்டும்; சாதிமுறைமையின் படி அதற்கேற்ப மரியாதை செய்ய வேண்டும் என அரசனிடம் விருப்பநிலையில் வேண்டுகோள் விடுக்கின்றன.

ஆனால் வணிகர்களைப் பற்றி இதே சதகநூல்கள் பேசும் போது, அவர்களை வெறுப்புடனும் எரிச்சலுடனும் பார்க்கின்றன. தமிழகம் தவிரக் கடல் கடந்து பிறநாடுகளிலும் சென்று வணிகம் புரிவர்; பணம் வருமிடத்தையும் வராத இடத்தையும் அறிந்து ஒன்று நூறாகப் பெருக்குவர்; விலை மலிவான சரக்குகளையே வாங்கி விற்பர்; வரவு - செலவு கணக்குகளை யாரிடமும் தெரிவிக்க மாட்டார்கள்; இலாபமே நோக்கமாகக் கொள்வர்; காசு வீணிற் செலவிட மாட்டார்; நாணயமானவராக இருந்தாலும் பந்துசனமாக இருந்தாலும் கடன் கொடுக்க மாட்டார்கள் என்று சதகங்கள்பலவாறு சித்திரிக்கின்றன (கும.சத.4; கயி.சத.5). இதில் உள்ள கேலியும் கிண்டலும் வணிகர்பாலுள்ள வெறுப்பை வெளிப்படுத்துவனவே என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. இங்ஙனம் வேளாளர்களும், அவர்களின் நலனில் அக்கறை கொண்ட புலவர்களும் வணிகர்களிடம் எதிர்ப்பு நிலையை மேற்கொண்ட போதிலும் வணிகர்களின் வளர்ச்சி நிலை தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்நிலைமை சமுதாயவியல் கூறும் இயக்க விதிகளுக்குப் புறம்பான ஒன்றல்ல; நிலவுடைமையமைப்பை அடுத்து வணிக முக்கியத்துவம் கொண்ட முதலாளிய அமைப்பு முறை எழுவதன் போக்கில் இவை நிகழக் கூடியவையே.

சமூகநலப் பொருளாதாரம்:

நாயக்கர் கால நிலமானியப் பொருளாதாரம், பாளையப்பட்டுக்களைப் பராமரிப்பது, மைய அரசின் தலைவன் - அரசன் வேண்டும் பொழுது படையுதவி செய்வது என்று படைமானிய அடிப்படையில் இயங்கியது என்றாலும், சமூகம் முழுமைக்கும் பொதுவான சில திட்டங்களுக்கும் வேளாண்மை உற்பத்தி பயன்பட்டதை அறிகின்றோம்.கோயில் பூசைகள், விழாக்கள், அந்தணர் பாதுகாப்பு, கலைகள் ஆதரவு என்பன சில குழுக்களுக்கு மட்டுமே பயன்படும் என்றாலும், இவையெல்லாம் சமூகம் முழுமைக்கும் தேவையானவை என்ற கருத்து, அக்காலத்தில் நிலவியுள்ளது. இவை தவிர அணைகள் கட்டுவது, பராமரிப்பு, குளங்கள் ஏற்படுத்துவது, கால்வாய்கள் உண்டாக்குவது, மண்டபங்கள் கட்டுவது, சத்திரங்கள் உண்டாக்கி அதன் மூலம் உணவு வழங்குவது என்பனவும் அக்காலத்தில் அரசின் பொறுப்பில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

பொதுத்திட்டங்களுள் புலவர்களின் மனதை மிகவும் கவர்ந்ததாக - அவர்களால் பல சூழ்நிலையில் குறிப்பிடுவதாக உள்ளது. ‘சத்திரங்கள் - அதன் மூலம் உணவு வழங்கல்’ என்னும் திட்டமாகும். இதன் செயல்பாடுகளை அறிவதன் மூலம் பிற பொதுத்திட்டங்களின் நடைமுறைகளையும் அறிந்து கொள்ளலாம். நாட்டில் வறட்சி ஏற்படுகின்ற பொழுது கஞ்சித்தொட்டி வைத்தல், அன்னதான மண்டபம் அமைத்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது அண்மைக்காலங்களிலும் நடைபெறும் செயல்களாகும். நாயக்கர் காலச்சத்திரங்களும் அத்தகைய திட்டங்களில் ஒன்றாகவே இருந்துள்ளது. சத்திரம் என்ற அமைப்பு விசயநகர, நாயக்க அரசர்கள் காலத்தில் காணப்பட்டாலும் அது வேறொரு வடிவில் பிற்காலச் சோழர்கள் காலத்திலேயே இருந்துள்ளது. விசயநகர ஆட்சியின் தொடக்கத்திலேயே சத்திரம் என்ற அமைப்பு தோன்றிவிட்டது. கி.பி. 15 - ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவர் சத்திரம் பற்றிப் பேசுகின்றார். ‘கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான் தன் சத்திரம் பற்றிக் காளமேகமும் ‘உடன் கொணர்ந்த நாகதேவன் ஊண் பற்றிக் கி.பி. 17 - ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த அந்தக்கவி வீரராகவ முதலியாரும் பாடுகின்றனர்.35

சத்திரங்கள் அரசு உதவியினால் நடைபெற்றன என்பதற்கோ அல்லது நேரடியாக அரசனால் - அரசு அதிகாரிகள் மூலம் நிர்வாகம் செய்யப்பட்டன என்பதற்கோ போதிய சான்றுகள் இல்லை. பாளையக்கார முறையின் படி, நிலங்களை மானியமாகப் பெற்ற சமய நிறுவனங்களும் மானியதாரர்களும் நிலவரியாக விளைச்சலில் ஒரு பகுதியைக் கொடுத்து விட, அந்த வருமானத்தின் உதவியால் சத்திரம் நிர்வகிக்கப் பட்டதாகத் தெரிகிறது. சத்திரம் மட்டுமன்றி, அணைகள், குளங்கள், கால்வாய்கள் முதலான அனைத்துப் பொதுத் திட்டங்களும் இந்த முறையிலேயே அரசின் உதவியைப் பெற்றன. விளைச்சலிலிருந்து பொதுத் திட்டங்கள் பங்கு பெற்ற செய்திகளைப் பல இலக்கியங்கள் தருகின்றன. (மு.பள்.139; மா.பள்.88, 89; வை.பள்.91, 199; பட்.பிர.25, 139; சமு.விலா.2; கூள.விற.க. 957).

வட்டாரத்தலைவர்களான பாளையக்காரர்களின் பணிகளைக் குறிப்பிடும் பல இலக்கியங்களும் அவர்கள் சமூக நலத்திட்டங்கள் பலவற்றைச் செய்ததாகக் குறிப்பிடுகின்றன. வடகரைப் பகுதித் தலைவன் செய்த பணியாக மண்டபம், அம்பலம், மடைப்பள்ளி, பூங்காவனம், தெப்பக்குளம் முதலானவற்றை அமைத்ததாகச் சங்கரலிங்க உலா கூறுகிறது (கண்.289-301). சிவகங்கைப் பகுதித் தலைவன் கால்வாய், குளம், பொய்கை, புனற்பந்தல், நந்தவனம், பூசோலை மடம் முதலான திட்டங்களைச் செயல படுத்தியுள்ளான் (மான்விடு கன்.153 - 163).ஆலயப் பரிபாலனத்திற்கும் அன்னசத்ரப் பரிபாலனத்திற்கும் கட்டளைகள் வழங்கப் பட்டதாக சந்திரகலாமஞ்சரி (சங்.உலா. பின்னிணைப்பு) கூறுகிறது. கமலாயச் சிறப்பு (51, 101) குற்றாலக்குறவஞ்சி (93, 131) புலவராற்றுப்படை (கண்.315 - 321), அரிச்சந்திரபுராணம் (நகர்ச்சிறப்பு 2), கூடற்புராணம் (86) முதலான பல நூல்களும் அரசன் அல்லது பாளையக்காரன் பொறுப்பில் பொதுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கான குறிப்புக்களைத் தருகின்றன.

நாயக்கர்கள் ஏற்படுத்திய பாளையக்கார முறையும், பாளையக்காரனுக்குக் கீழிருந்த ஆயங்கார முறையும் பொதுத்திட்டங்கள் செயல்பட உதவியாக இருந்தன. உழவர்களின் விளைச்சலிலிருந்து மானியங்கள் நேரடியாகப் பிரிக்கப்பட்டு, இத்திட்டங்களின் செயல்பாடுகளைக் கவனிப்பதற்குரியவர் களிடம் ஒப்படைக்கப் பட்டள்ளது. அப்படிக் கவனிப்பதற்கென்று பிற திட்டங்களுக்கு அதிகாரிகள் அல்லது நிர்வாகிகள் இருந்தார்களா என்பது பற்றிக் குறிப்புக்கள் இல்லை. ஆனால் சத்திர நிர்வாகிகள் இருந்துள்ளனர். காளமேகப் புலவரால் கேலி செய்யப்படும் ‘‘நாகைக்காத்தான்’ என்பவனும், அந்தகக் கவியால் கேலி செய்யப்படும் ‘நாகதேவன்’ என்பவனும் இத்தகைய நிர்வாகிகளே. பெயர் குறித்துச் சொல்லப் படும் இவ்விரு சத்திர நிர்வாகிகள் மட்டுமின்றிப் பொதுவாக அரசின் பொதுத்திட்டங்களை மேற்பார்வையிடுபவர்கள், அரசு ஊழியர்கள் போன்றோர் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்று புலவர்கள் தங்கள் பாடல்களில் குற்றஞ் சாட்டியுள்ளனர். சத்திரங்களில் மட்டரகமான உணவு வழங்கப் பட்டதாகக் கூறும் அந்தகக்கவி, ‘கல்லும் நெல்லும் கலந்த சோறு; வாடிப்போன கத்திரிக்காய்; அதில் உப்பில்லை; அதில் ஈக்கள் விழுந்து கிடந்தன’ என நாகதேவன் பொறுப்பிலிருந்த சத்திரம் பற்றிய சித்திரத்தைத் தருகிறார் (த.தி.கழகம், I, ப.34). காளமேகப் புலவரோ,

‘கத்துங்கடல் சூழ்நாகைக் காத்தான்றன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போதில் அரிசிவரும் குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளிஎழும்’

எனக் கிண்டலாகக் கூறுகிறார்.36 இப்பாடல்களிலெல்லாம் புலவர்களின் கண்டிப்பு - கேலி - சத்திரப் பொறுப்பாளர்களை நோக்கியே உள்ளது. சத்திரங்கள் ஏற்படுத்திய பாளையக் காரர்களையோ அரசர்களையோ நோக்கியதாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது. எனவே இவற்றைச் சமூக நலத் திட்டங்கள் எனப் புலவர்கள் ஏற்றிருந்தனர் எனக் கூறலாம். அவர்களின் விமரிசனம் அரசனையும் பாளையக்காரனையும் நோக்கியதாக இல்லையென்றாலும் அதனை ஏற்படுத்தியவர்கள் என்ற அளவில், அது செம்மையாக நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. எனவே புலவர்களின் குற்றச்சாட்டிற்கு அவர்களும் பொறுப்பானவர்களே எனலாம்.

குறிப்புக்கள்

1.லியென்டியெவ், எல்; அரசியல் பொருளாதாரச் சுருக்கம்’, ப. 13.

2. ஆர். சத்தியநாதய்யர், டி. பாலசுப்பிரமணியன், ‘இந்திய வரலாறு ; இரண்டாம் பாகம்’ பக். 264 - 265.

3. R. Sathyanatha Aiyar, ‘Histroy of the Nayaks of Madura’, pp. 41- 44.

4. பாளையப்பட்டுக்கள் வரலாறு - II , ப.10.

5. D. 3255, No.2 on p.95, No. 3 on p.102, No.66 on p.224, No.67 on p.225, No. 24 on p.12.

6. தொ. பரமசிவன் Y. Subbarayalu (Ed.) ‘Historia’ Vol. I, p.141.

7. மு. ராகவய்யங்கார், ‘சேதுநாடுந் தமிழும், ப.9.

8. No. 7 on p.113.

9. No. 10 on p.114.

10. No. 3 on p.62.

11. அ.செங்கோட்டுப்பள்ளு, 135, (மேற்கோள்). கோ. கேசவன், ‘பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை’ , ப.86.

12. கட்டிமகிபன் பள்ளு, (மேற்கோள்) கோ. கேசவன், முந்நூல், ப..85.

13. இப்பிரிப்பிற்கு ந.வீ. செயராமன், ‘ பள்ளு இலக்கியம்’ என்ற நூலில் தரும் பாட்டுடைத் தலைவர், நூலின் சமயச் சார்பு, நூல் எழுந்த களப்பகுதி பற்றிய தகவல்கள் உதவுகின்றன.

14. தி.வை. சதாசிவபண்டாரத்தார், ‘ பிற்காலச் சோழர் வரலாறு’, பக்.547 - 548

Noboru Karashima, ‘South Indian History and Society’, P.27

15. ந.வீ. செயராமன், ‘பள்ளு இலக்கியம்’. ப. 54

16. பாளையப்பட்டுக்களின் வலராறு - I, ப.31.

17. மேலது, III, ப. 33.

18. ந.வீ. செயராமன், முந்நூல், பக். 159 - 161.

19. மேலது.

20. கே.கே.பிள்ளை, ‘தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்’, பக். 182 - 198.

21. M. Sivanandham, ‘Social History of Tamils Under Vijayanagar’, p. 18

22. தி.வை.சதாசிவ பண்டாரத்தார், முந்நூல், பக். 552 - 559.

23. R. Sathyanatha Aiyar, op.cit., pp. 365 - 366.

24. A. Krishnaswami,’The Tamil Country under Vijayanagar, pp. 104 - 108.

25. பாளையப்பட்டுக்களின் வரலாறு

26. M. Sivanandham, op.cit., pp. 191 - 192.

27. இராம்சரன் சர்மா, ‘இடைக்காலத்தின் முற்பகுதியில் இந்தியாவில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்’ , ப. 9.

28. R. Sathayanatha Aiyar, op.cit., pp. 191 - 192.

29. S. Arasaratnam, ‘Aspect on the Role and activities of South Indian Merchants c. 1650 - 1750,

Proceedings of the First International Tamil Conference Seminar of Tamil Studies, Vol. I.

30. B.K. Pandeya, ‘The Temple as Depository and Lender’, Temple Economy under Colas, pp. 103 - 122.

31. கு. ராஜய்யன், ‘ தமிழக வரலாறு 1565 - 1967, ப. 56.

32. கோ. கேசவன், முந்நூல், ப.94.

33. முந்நூல், பக். 41 - 45.

34. T.V. Mahalingam, ‘South Indian Polity’, p. 182.

35. V.I. Pavlov. ‘Historical Premises for India’s Transition to Capitalism’. p.33.

36. தனிப்பாடல் திரட்டு, கழக வெளியீடு, முதல் பாகம், ப.67, 34.

37. மேலது , ப. 67.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

அயல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள்

இலக்கியவியலும் தொல்காப்பியப் பொருள் கூறலும்