தமிழச்சியின் கவி உலகம்
.jpg)
அவரவர்க்கான மழைத்துளிகளும் அவரவர்க்கான கவிதைகளும் . முன்னுரை கல்லூரி ஒன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராகவும் , அரங்கவியல் செயல் பாட்டாளருமாக அறியப் பட்டிருந்த கவி தமிழச்சியின் முதல் தொகுதியான எஞ்சோட்டுப் பெண் பெறாத கவனத்தை அவரது இரண்டாவது தொகுதியான வனப்பேச்சி பெற்றுள்ளது. மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸின் தயாரிப்பான எஞ்சோட்டுப் பெண் மிகுந்த கவனத்துடன் அதிகப் பணச் செலவிலும் தயாரித்து வெளியிடப் பட்ட கவிதைத் தொகுப்புகளுள் ஒன்று. நூலாக்கத்தில் முதல் தொகுப்பிற்குச் செலுத்திய கவனத்தில் பாதி தான் வனப்பேச்சிக்கு இருந்திருக்கும். என்றாலும் முதல் தொகுதியை விடவும் இரண்டாவது தொகுதி கூடுதலான விமரிசன மேடைகளையும் வாசகக் கவனத்தையும் மதிப்புரைகளையும் பெற்றது.