இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பத்துத்தலெ :

படம்
இவையெல்லாம் குற்றச்செயல்கள், வெளிப்படும்போது தண்டனைகள் உண்டு எனத் தெரிந்தபின்னும் திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்குப் பின்னால் எதிரெதிர்க் கூட்டணிகளின் மறைமுக ஒப்பந்தங்கள் இருக்கவே செய்யும்.மறைமுக ஒப்பந்தங்களைக் கதைப்பின்னலின் ரகசிய முடிச்சுகளாக மாற்றிக் குற்றக்குழு மோதல் ( Gang war )படங்கள் உருவாக்கப் படுகின்றன. ஒவ்வோராண்டும் எடுக்கப்படும் இருபத்திச் சொச்சம் குற்றக்குழு மோதல் படங்களில் ஒன்றாகவே அண்மையில் வந்த ‘பத்துத்தல’ யும் கணிக்கப்பட வேண்டிய படம்.

இந்திரனுக்கு வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது

படம்
வானம் அமைப்பு முன்னெடுக்கும் நிகழ்வுகள் அடையாள அரசியலோடு தொடர்புடையது.  அடையாள அரசியலுக்கும்  அவைசார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தற்காலிக நோக்கங்கள் மட்டுமே இருக்கும்; இருக்க வேண்டும். எல்லாவகையான அடையாளங்களும் மறைந்து மைய நீரோட்டத்தில் கலக்கும் நாளுக்காகவே உலகம் காத்திருக்கிறது.  அந்த நாளில் மனிதர்களும் மனித மேன்மையும் மட்டுமே மிஞ்சியிருக்கும். இதொரு கனவு தான். என்றாலும் காணவேண்டிய கனவு.

ஆடும் நாற்காலிகள்

படம்
குறுநாவல் மூலம்: ஜெயகாந்தன் நாடக ஆக்கம்: அ.ராமசாமி

புத்தகங்கள் வாங்கிய கதைகள்

சொந்தமான முதல் புத்தகம் சில ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகம் ஒன்று என்னிடம் இருக்கிறது. அவற்றில் இருப்பனவற்றில் பாதி நூல்கள் நான் வாங்கியவை; இன்னொரு பாதி நண்பர்களும் நூலாசிரியர்களும் எனது வாசிப்பின் மீது நம்பிக்கை வைத்துக்கொடுத்தவை. பள்ளிப்படிப்பில் என்னுடைய பெயரெழுதிப் பரிசாகக் கிடைத்த அந்த நூலைத்தான் எனது முதல்நூல் எனச் சொல்லவேண்டும். அண்ணாவிற்குப் பின் முதல்வராக வந்த கலைஞர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் எட்டாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு அறிமுகம் ஆனது. அந்தப் பொதுத்தேர்வுக்கு மாதிரித்தேர்வொன்றைக் கல்வி மாவட்டங்கள் அளவில் நடத்தவேண்டும் என்ற அறிவிப்பை ஏற்று உசிலம்பட்டிக் கல்வி மாவட்ட நடத்தினார். அந்தத் தேர்வில் முதலிடம் பெற்றேன். அதற்காக வழங்கப்பெற்ற பரிசாகக் கிடைத்த அந்த நூலின் பெயர்: பொழுதுபோக்குப் பௌதிகம். நூலாசிரியரின் பெயர் யா.பெரல்மான். வெளியீடு மாஸ்கோவின் ராதுகா பதிப்பகம். மொழிபெயர்ப்பு நூல்.

இடையீடுகள்

  நவீன நாடகங்களும் குடும்பங்களும் இம்மாதக் காலச்சுவடுவில் தலையங்கத்தைத் தொடர்ந்து ”பிம்பம்- அதிகாரம் -அத்துமீறல்” எனத் தலைப்பிட்டு அரவிந்தன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ’இதுதான் உங்கள் நுண்ணுணர்வா?’எனக்கேள்வியோடு கூடிய கட்டுரை ஒன்றைச் செந்தூரன் எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து ”அதிர்ச்சி- குழப்பம்- அவமானம்” என்ற தலைப்பில் மணல் மகுடி நாடகக்குழுவில் இணைந்து செயல்பட்டவர்களின் வாக்குமூலங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் நாடகப்பட்டறைகளை நடத்தியும் நாடகங்களை இயக்கியும் செயல்பட்டுவரும் பார்த்திபராஜா மீதொரு பாலியல் குற்றச்சாட்டுக் கூறும் பெயரிலிக் கடிதமும் உள்ளன. இவற்றில் விவரிக்கப்பட்டுள்ளவை இரண்டு மையங்களை விவாதப்படுத்தியுள்ளன. முதல் மையம், இப்பிரச்சினையை வெளிக்கொண்டு வரக்காரணமாக இருந்த எழுத்தாளர் கோணங்கியின் ஒரு பால் உறவு விருப்பம் தொடர்பானவை. தொகுக்கப்பட்டுள்ள வாக்குமூலங்கள் ஒவ்வொன்றும் அவரது செயல்பாடுகளும் அணுகுமுறைகளும் பாலியல் விருப்பம் சார்ந்ததாக - அவர்களுக்கு விருப்பமில்லாத நிலையில் அவர் தங்கள் உடலை அதற்காக அணுகினார் என்பதாகக் குற்றம் சாட்டுகின்றன. இவ்வகைக் குற்ற

கவிதைகள் : வாசித்தவிதங்கள்

தேவதச்சனின் சலனச் சித்திரங்கள் தமிழில் எழுதும் கவிகள் ஒவ்வொருவரின் கவிதையியலை - வெளிப்பாட்டு முறையை அறிந்து வாசிக்கத் தொடங்கிவிட்டால், அவர்களின் புதிய கவிதைகள் வரும்போது வாசிக்காமல் தவிர்க்கமுடியாது. எப்போதும் கவிதைக்குள் தன்னை - தன்னிலையைச் சொல்லுமிடத்தில் வைத்துக் கொண்டு முன்னே இருக்கும் எல்லாவற்றையும் காட்சிப்பொருளாக்குவது தேவதச்சனின் கவிதைப்பாங்கு. அக்காட்சிப்பொருட்களுக்குள் உயிருள்ளனவும் உண்டு; உயிரற்றனவும் இடம்பெறுவதுண்டு. மனிதர்களும் இடம்பெறுவார்கள்; மனிதர்கள் அல்லாத உயிரினங்களும் இடம்பெறுவதுண்டு. முதன்மையாக அவர் தனது சொற்களால் செய்து காட்டுவது காட்சியின் வரைபடம். வரையப்படும் அக்காட்சிக்குள் நிலையாக நின்றுகொண்டிருக்கும் இருப்பைவிடவும், அசைவுகளோடு கூடிய - நகர்வுத்தன்மை பொருட்களை நிரப்பிக் காட்டுவார். அவ்வாறு நிரப்பப்பட்ட காட்சியை விரிப்பதின் நோக்கம், அதன் மீதான கவிதைசொல்லியின் பார்வைக்கோணத்தை - மனச்சாய்வைச் சொல்லி விட்டு ஒதுங்கிக்கொள்வதாக இருக்கும். ஒதுங்கிக் கொண்டபின் எழும் உணர்வலைகள் கவியிடமிருந்தும், கவியால் உருவாக்கப்பட்ட கவிதை சொல்லியிடமிருந்தும் விலகிக் கவிதையை வாசிப்பவர்கள

இந்தியத்தன்மை கொண்ட முதலாளியப்புரட்சி

படம்
வணிகக் குழுமங்கள் முதலாளியக் கட்டமைப்பில் அரசைப் பயன்படுத்திக் கொள்வதுதான் அடிப்படை இயங்குமுறை. விடுதலைக்குப் பின்னான இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய முதலாளிகள் அடையாளங்காணப்பட்டு அப்போதைய ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் உதவி அளித்தன. உதவிகள் நேரடி மானியங்களாகவும் மறைமுக வரிச்சலுகைகளாகவும் இருந்தன.

இரட்சிப்பின் உடலாக மாற்றப்படும் சீலியின் சரீரம்

படம்
நடப்பு வாழ்க்கை உருவாக்கி அளிக்கும் சிக்கல்களும் முரண்பாடுகளும் கேள்விகளாக நிற்கும்போது விசாரணைகள் தொடங்குகின்றன. அவற்றிற்கான விடைகளைச் சொந்த வாழ்விலிருந்தும், சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையிலிருந்தும் கண்டடைந்து அவற்றின் போக்கில் விளக்கம் ஒன்றை முன்வைக்கும் கதைகள் அனுபவவாதப் புனைவுகளாக அடையாளம் பெற்றுக்கொள்கின்றன. அதே முரணையும் சிக்கலையும் கொண்ட முடிச்சுகளும் வகைமாதிரிகளும் தொன்மங்களிலும் வரலாற்றிலும் கிடைக்கின்றபோது அதன் சாயலில் புனைவுகள் உருவாக்கப்படுவதும் உண்டு. புனைகதைக்குள் இடம்பெறும் பாத்திரப்பெயரோ, நிகழ்வுப் பெயரோ,அடிக்கருத்தை முன்வைக்கும் சொற்கூட்டமோ, உரையாடலின் வீச்சோ அந்தக் குறிப்பிட்ட தொன்மநிகழ்வையோ, வரலாற்று நிகழ்வையோ நினைவுபடுத்திக் கதையை அதன் போக்கில் வாசிக்கச் செய்துவிடும்.

திராவிட மாதிரி: முன்னெடுக்கப்படும் பண்பாட்டு நகர்வுகள்

படம்
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சி ஒன்றினால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒட்டுமொத்தப் பரப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முன்வைக்கப்படும். தேசியக் கட்சிகள் தேசத்தைப் பெரும்பரப்பாகக் கணக்கில் வைத்துப் பேசுகின்றன. மாநிலக்கட்சிகள் மாநிலத்தின் எல்லைகளையே தனது பெரும்பரப்பாக்கி வாக்குறுதிகளை முன்வைக்கின்றன. தேர்தலுக்குப் பின் ஆட்சியதிகாரத்திற்கு வரும் நிலையில், பெரும்பரப்புக்கும் சென்றுசேரும் வாக்குறுதிகளை ‘நிறைவேற்றிக் காட்டினோம்’ எனச் சொல்வதற்காக முன்னுரிமை அளிக்கின்றன. அத்தகைய நிறைவேற்றங்களே அந்தக் கட்சிக்கு வாக்குவங்கியைத் தக்க வைக்க உதவும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றிய ‘மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்’ என்னும் திட்டம் அப்படியானதொரு திட்டம்.

மாஜிதாவின் பர்தா:பண்பாட்டுச் சிக்கலை எழுதிய புனைவு

படம்
பர்தா - கவனத்தை ஈர்க்கும் தலைப்பு. வெளிவந்துள்ள சூழலில் இந்தக் கவனம் கிடைத்திருக்கிறது. ஒரு பெயர்ச்சொல்லோ வினைச்சொல்லோ அதன் பயன்பாட்டில் குறிப்பிட்ட காலகட்டத்தில் கவனத்தை ஈர்க்கும் சொல்லாக மாறுவதற்குச் சூழலும் அதன் காரணிகளும் பின்னணியாக இருந்துள்ளன. அந்தச் சூழல் வரலாற்றுச் சூழலாக இருக்கலாம்; பண்பாட்டுச் சூழலாக இருக்கலாம். இன்னதென்று விளக்கமுடியாத நெருக்கடியாகவும் இருக்கலாம். பர்தா என்ற சொல் கவனம் பெற்ற சொல்லாக மாறியதில் எல்லாக் காரணங்களும் இருக்கின்றன. அதே காரணங்கள் மாஜிதா எழுதியுள்ள நாவலையும் கவனப்படுத்தியிருக்கிறது.

நண்பகல் நேரத்து மயக்கம்: காணாமல் போனவனும் காணாமல் போய்க்கொண்டிருப்பவனும்

படம்
கலைத்தன்மைச் சினிமா என்னும் தனித்துவம் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தனது சினிமாக்களை, குறிப்பான சூழல் என்ற அடிப்படையில் மற்றவர்களின் சினிமாவிலிருந்து வேறுபடுத்துகின்றார் எனத் தோன்றுகிறது. அதனாலேயே அவரது சினிமாக்களை நடப்பியல் வகை சினிமாவின் சட்டகங்களுக்குள் வைத்துப் பேசமுடிவதில்லை. தனித்தனியாகப் பார்த்தால், நிகழ்கால வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையே அவரது சினிமாக்கள் காட்சிப்படுத்தியுள்ளன என்று தோன்றும். ஆனால் அவையெல்லாம் எல்லாருடைய வாழ்க்கையிலும், ஒவ்வொரு வெளியிலும் நடக்கக்கூடியன என்று உறுதியாகக் கூறமுடியாது. நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக நடக்கும் வாய்ப்புகள் கொண்ட காட்சிகள் தான். அதே நேரம் ஒட்டுமொத்தமாக இது சாத்தியமா? என்ற வினாவைப் பெரிய வினாவாக எழுப்பிக் கொண்டே இருக்கும் படமாகப் பார்வையாளர்கள் முன்னால் விரித்து நகர்த்திக்கொண்டே இருக்கிறது.