திராவிட மாதிரி: முன்னெடுக்கப்படும் பண்பாட்டு நகர்வுகள்


தேர்தல் காலத்தில் அரசியல் கட்சி ஒன்றினால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் பெரும்பாலும் ஒட்டுமொத்தப் பரப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முன்வைக்கப்படும். தேசியக் கட்சிகள் தேசத்தைப் பெரும்பரப்பாகக் கணக்கில் வைத்துப் பேசுகின்றன. மாநிலக்கட்சிகள் மாநிலத்தின் எல்லைகளையே தனது பெரும்பரப்பாக்கி வாக்குறுதிகளை முன்வைக்கின்றன. தேர்தலுக்குப் பின் ஆட்சியதிகாரத்திற்கு வரும் நிலையில், பெரும்பரப்புக்கும் சென்றுசேரும் வாக்குறுதிகளை ‘நிறைவேற்றிக் காட்டினோம்’ எனச் சொல்வதற்காக முன்னுரிமை அளிக்கின்றன. அத்தகைய நிறைவேற்றங்களே அந்தக் கட்சிக்கு வாக்குவங்கியைத் தக்க வைக்க உதவும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றிய ‘மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்’ என்னும் திட்டம் அப்படியானதொரு திட்டம்.
நிகழ்கால மக்களாட்சி முறையில் எந்தக் கட்சி ஆட்சிப்பொறுப்பேற்றாலும், மக்கள் நல அரசாங்கத்தை நடத்துவதாகக்காட்டிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் வாக்குவங்கி அரசியலைக் கைவிட்டு விலக முடியாது. வெகுமக்கள் தளத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் போய்ச்சேரும் வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தும் அரசுகளே மக்கள் நல அரசுகள் எனக் கணிக்கப்படும். அதே நேரம் தேர்தல் கால வாக்குறுதிகளைத் தாண்டிய லட்சியங்களையும் நினைத்துப்பார்க்க வேண்டியது தேவையும் இருக்கிறது. அதுவும் தனது தொடக்கக் காலத்திலிருந்தே லட்சியங்களை முன்வைத்த பண்பாட்டரசியலை முன்வைத்த தி.மு.க. போன்ற கட்சிக்குப் பண்பாட்டுத்தள நடவடிக்கைகள் தவிர்க்கமுடியாதவை. அண்மைக்காலத்தில் இந்த அரசு முன்னெடுக்கும் கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் லட்சியவாத நோக்கம் கொண்டவை என்பதில் கருத்துவேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை.

திரு.மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் (2021, மே மாதம் 7) நிறைவடையவுள்ளன. அவரது ஆட்சிக்காலம் தொடங்கியபோது மென்மையாக ஒலிக்கத் தொடங்கிய ஒரு சொற்கோவை ‘திராவிட மாடல்’ தமிழும் ஆங்கிலமும் கலந்த இருபெயரொட்டுச் சொல்லான அதனைத் திராவிட மாதிரி எனத் தமிழில் சொல்வதில் சிக்கல் எதுவும் இல்லை. திராவிட மாதிரி என்பதில் அரசியல் பொருளாதாரத்தளமும் சமூகப்பண்பாட்டுத்தளமும் இணை நேர்கோடுகள். இரண்டும் ஒரே வேகத்திலும் பயணிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ளது அக்கட்சி;இப்போதும் இருக்கிறது. அதன் காரணமாகவே திராவிட மாதிரி என்ற சொல்லாட்சி வலிமையாக உச்சரிக்கப்படுகிறது. அதற்கு மாற்றான கருத்தியல்கள் வலிமைபெற்றுவரும் இப்போதைய சூழலில் இன்னும் வலிமையாக வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. அதனைக் கடந்த ஓராண்டில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மேற்கொள்ளும் பண்பாட்டு நடவடிக்கைகள் அடையாளங்காட்ட முயல்கின்றன. அதன் அவற்றின் இயங்குநிலைகளை விவரிக்கும் இக்கட்டுரை. அந்நடவடிக்கைகள் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களை விளக்குவதோடு எழுப்பப்படும் விமரிசனங்களின் பின்னணியையும் விவாதிக்கிறது. சில விமரிசனக்குறிப்புகளையும் முன்வைக்கிறது.

திராவிட மாதிரி: சில புரிதல்கள்

திராவிட மாதிரி என்பதின் ஒட்டுமொத்த அடையாளமாகச் சுட்டப்படும் சொல்லாடல் ‘சமூகநீதி’ சமூக நீதி என்னும் சொல்லாடலுக்குள் பொருளியல் தளம், அரசியல் அதிகார நகர்வு, சமூக இணைக்கம்,பண்பாட்டு நடவடிக்கை போன்ற முதன்மையான கூறுகள் இருக்கின்றன. ஊராட்சி மன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரையிலான அனைத்து நிர்வாக அமைப்புகளுக்குமான தேர்தலை முறைப்படி நடத்தி, மக்களின் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்வதின் வழியாக அரசியல் நகர்வைச் சாத்தியமாக்க முடியும் என நினைக்கிறது திராவிட மாதிரி. இந்திய நாட்டிற்கான அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதைக் கைவிடக்கூடாது என நினைக்கிறது. அதே நேரம் தேவைப்பட்டால் காலத்திற்கேற்பப் புதிய இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அறிமுகம் செய்யவும் தயாராக இருக்கிறது. ஊராட்சி அமைப்புகளில் பெண்களுக்குக் கூடுதல் இட ஒதுக்கீடு என்பது அதன் வெளிப்பாடே.

பொருளியல் தளச்செயல்பாட்டில் திராவிட மாதிரி பின்பற்றும் கொள்கை பங்கீட்டை முதன்மைப்படுத்திச் சிந்திக்கும் கொள்கையாகும். மாநிலப் பொருளியல் வளத்திலும் அரசின் வருமானத்திலும் அனைவருக்குமான பங்கு கிடைக்கும் பொருளியல் மாதிரியைப் பின்பற்றுகிறது. இக்கொள்கையை அக்கட்சியின் முதல் ஆட்சிக்காலத்திலிருந்து விலகாமல் பின்பற்றி வருகிறது. இது வர்க்க வேறுபாட்டை ஒழித்து உற்பத்தி உறவுகளைப் பொதுவுடைமையாக்கும் சோசலிசக் கட்டுமானம் போன்றதல்ல. அதற்கு மாறாகச் சமூகத்தின் அனைத்துப்பிரிவினரும் அவரவர் திறமைக்கேற்ப உற்பத்தியுறவுகளில் பங்கெடுக்கும் ஒருவகைக் கலப்புப்பொருளியில் உறவுநிலை. மூலதனத்திரட்டலையும் உற்பத்தியையும் முதன்மைப் படுத்திச் சிந்திப்பதில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிதி அமைச்சர்கள் ஒவ்வோராண்டும் அளிக்கும் நிதிநிலை அறிக்கையில் அரசின் வருவாயை விரிவாகப் பேசுவதற்குப் பதிலாகப் பங்கீட்டை விரிவாக முன்வைப்பதைக் கவனித்தவர்களுக்கு இது புரிந்திருக்கும். ஒருவிதத்தில் ஒன்றிய அரசின் பொருளியல் நடவடிக்கைக்கேற்ப ஒத்துப்போகும் நடைமுறையே.

அரசிற்கான வருவாய் என்பது வரிவாய் மட்டுமே. அதனை அளிக்கும் மூலதனமும் உற்பத்திச் சாதனங்களும் அரசின் வசம் இல்லாமல், தனியார் வசமே இருக்கலாம். அதுவே சுணக்கமற்ற உற்பத்திக்கு ஏதுவான நடைமுறை எனத் திராவிட மாதிரியும் கருதுகிறது. [இடையில் இந்திராகாந்தி காலத்தில் முன்வைக்கப்பட்ட நாட்டுடைமையாக்கப் போக்கை அப்போதைய திராவிட முன்னேற்றக் கழக அரசு பின்பற்றியது என்பதும் இங்கே நினைக்கவேண்டிய ஒன்றே] . தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என உலகப்பொருளியல் உற்பத்தியுறவுச் சூழல் மாறிய நிலையில் நாட்டுடைமையாக்கும் போக்கையும், பொதுத்துறைகளை உருவாக்கி வளர்த்தெடுக்கும் நடைமுறைகளையும் கைவிட்டுவிட்டு ஒன்றிய அரசின் பெரும்போக்கோடு இணைந்தே பயணிக்கிறது. ஆனால், நிதிப்பங்கீட்டிலும் சமூகநலத் திட்டங்கள், சேவைப்பணிகளுக்கு நிதியொதுக்கீடு போன்றவற்றில் பெருத்த வேறுபாடுகள் கொண்டதாக இருக்கிறது திராவிட மாதிரி.

திராவிட/தமிழ்தேசிய முதலாளிகளின் உற்பத்தித் தொழில்கள் வழியாகத் தமிழக அரசின் வருமானத்தைப் பெருக்கித் தமிழ்நாட்டிற்குத் தேவையான உள்கட்டுமானங்களைச் செய்து கொள்வதும், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, நலிவுற்றவர்களுக்குக் குடியிருப்பு, குறைந்த விலையில் மின்சாரம், குடிநீர் போன்ற சேவைப்பணிகளை விரிவுபடுத்துவதும் அரசின் பணிகளாக முன்னெடுக்கப்படுகின்றன.

பண்பாட்டுத் தளத்தின் செயல்பாடுகள்

சாதிப்பிளவுகள் சார்ந்த ஒடுக்குமுறையும் சுரண்டலும் நிலவிய காலகட்டத்தில் அதனை விரிவாகப் பேசப் பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் பொருளியல் விவகாரங்களைப் பேசியதே இல்லை. அவரது முதன்மையான பரப்புரைகள் சமயத்தையும் கடவுளர்களையும் காரணம் காட்டி உருவாக்கப்பட்ட கருத்தியல்களை அம்பலமாக்குவதிலேயே இருந்தன. ஆனால் அரசியல் கட்சியாகத் திராவிட முன்னேற்றக்கழகம் உருவாக்கப்பட்ட தொடக்கம் (1949, செப்டம்பர்,7) முதலே தனது செயல்பாடுகளைப் பொருளாதாரத்தளத்தையும் பண்பாட்டுத் தளத்தையும் சமநிலையில் கருதும் இயக்கமாக மாற்றிக்கொண்டது. ஆட்சியதிகாரத்தை நோக்கிய பயணத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் தலைமைப்பொறுப்பாளர்களின் பரப்புரைகளிலும் முன்வைப்புகளிலும் அரசியல் பொருளாதாரத்திற்கிணையாகவே பண்பாட்டு நகர்வுகளையும் முன்வைத்தனர் என்பது அதன் கடந்தகால வரலாறு.

தேர்தல் அரசியல் வழியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் அரசு 1967 மார்ச், 3 இல் பொறுப்பேற்றது. பொறுப்பேற்றவுடன் அதன் முதலமைச்சராகத் தேர்வுசெய்யப்பெற்ற சி.என். அண்ணாதுரை கையெழுத்துப்போட்டு அறிவிப்புச் செய்தவற்றில் ஒன்று பண்பாட்டுத் தளத்தை நினைவூட்டியது; இன்னொன்று மக்களின் அன்றாட வாழ்வுக்கான பொருளியல் நடவடிக்கையை முதன்மைப்படுத்தியது என்பதை நினைவுபடுத்திக்கொண்டால் அது புரியும். அதுவரை சென்னை மாகாணம் என அழைக்கப்பட்ட பெயரைத் தமிழ்நாடு என மாற்றும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அது மொழிசார்ந்த அடையாளத்தோடு தொடர்புடையது.

அவரைத் தொடர்ந்து முதல்வரான கலைஞர் மு.கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் வாக்குவங்கி சார்ந்த பல நலத்திட்டங்களையும் மானிய உதவிகளையும் அளித்தார். வண்ணத்தொலைக்காட்சி வழங்குதல் போன்ற பரப்புநிலைத் திட்டங்களையும் அறிவிப்புச் செய்தார். ஆனால் அதே அளவுக்குப் பண்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். தமிழ்மொழி, பண்பாடு வளர்க்க அமைப்புகளை நிறுவினார். தமிழ்நாட்டின் வாய்மொழிக்கலைகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் சென்னை சங்கமம்(2008) என்னும் பெருநிகழ்வை ஆண்டுதோறும் நடத்துவோம் என்றார். அதே மேடையில் இனிவரும் ஒவ்வொரு தை முதல் நாளைத் தமிழர் புத்தாண்டு நாள் எனக் கொண்டாடுவோம் எனவும் அறிவிப்புச் செய்தார். சில ஆண்டுகள் கழித்து 2011 இல் தமிழைச் செம்மொழியாக்குவோம் என அறிவிப்புச் செய்து நிறைவேற்றிக்காட்டினார். எழுத்தாளர்கள், கலைஞர்களை அங்கீகரிக்கும் விருதுகளை வழங்கும் பொறுப்பைக் கலை பண்பாட்டுத்துறையின் இயல் இசை நாடகமன்றத்திற்கும் தமிழ் வளர்ச்சித்துறைக்கும் வழங்கினார். தனது சொந்தப்பணத்தைக் கொண்டு புத்தகச் சந்தையின் தொடக்க நாளில் கலைஞர் செம்மொழி விருதுகளையும், செம்மொழி நிறுவனத்தில் குறள் பீட விருதுகளையும் வழங்கச் செய்தார். இவையெல்லாம் பண்பாட்டுக்கொள்கை சார்ந்த நடவடிக்கைகள். இதன் மூலம் பெரிய வாக்கு வங்கிகள் கிடைத்துவிடப்போவதில்லை. ஆனால் அவை உண்டாக்கும் தாக்கம் ஆழமானவை. அவ்வகையான இலக்குகள் கொண்ட பண்பாட்டு நடவடிக்கைகளைத் திரு மு.க.ஸ்டாலினின் திராவிட மாதிரி அரசு வேறுவிதமாக நிகழ்த்திக்காட்டுகிறது.

ஆட்சியிலிருந்துள்ள இரண்டு ஆண்டுகளில் முதல் ஆண்டு முழுவதும் கோவிட் -19 காலமாக அமைந்துவிட்டது. அக்கால கட்டத்தில் பண்பாட்டு வெளியில் நடக்கவேண்டிய பெருநிகழ்வுகளும் சிறுநிகழ்வுகளும் முடங்கிக் கிடந்தன. அதற்குப் பின் கடந்த ஓராண்டுக் காலத்தில் இந்த அரசின் பண்பாட்டுப் பெருநிகழ்வுகள் வேகம் பிடித்துள்ளன. குறிப்பாக நதிகளின் பெயர்களைக் கொண்டு நடத்தப்பெற்றுள்ள ஐந்து இலக்கியத்திருவிழாக்கள், மாவட்டம் தோறும் நடந்துகொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சிகள், புதியன விரும்பு என்ற பெயரில் நடத்தப்பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் பயிலரங்கு. ஆகிய மூன்று பெரும் நிகழ்வுகள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நிகழ்வுகள்.

புத்தகக் கண்காட்சிகள்

1977 தொடங்கிச் சென்னையில் நடந்துவந்த பெரும் நிகழ்வான ‘சென்னை புத்தகக் கண்காட்சி’ கடந்த ஓராண்டாக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன. புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அமைப்பான பபாசி (BAPASI)யின் முதன்மை நோக்கமான புத்தக விற்பனைக்கு அதிக வாய்ப்பு இல்லை என்ற போதிலும் புத்தகக் கண்காட்சியைச் சென்னையில் மட்டுமல்லாமல், மாவட்டங்கள் தோறும் நட த்தவேண்டும் என்ற பொறுப்பை அரசுத்துறைகள் எடுத்துக்கொண்டுள்ளன. தமிழக அரசின் நூலகத்துறையும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நிர்வாகங்களும் தரும் ஆதரவே இப்பரப்பலைச் சாதித்திருக்கின்றன. இதன் மூலம் அந்தந்த ஆண்டில் பதிப்பிக்கப்பெற்ற நூலைச் சில மாத இடைவெளியில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் புத்தக வாசிப்பாளர்கள் அடைந்திருக்கிறார்கள். அத்துடன் அந்த ஆண்டு வந்த ஒரு நூலை அதே ஆண்டின் இறுதிக்குள் தங்கள் நூலகங்களுக்கு வாங்கிச் சேர்க்கும் வாய்ப்பைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்கள் பெற்றுள்ளன. இவை புத்தக விற்பனை சார்ந்த நகர்வுகள். இவையல்லாமல் ஒவ்வொரு நாளும் நடக்கும் கலை, இலக்கியம், வாசிப்பு சார்ந்த திறன் வளர்ப்பு நிகழ்வுகளும் போட்டிகளும் இளையோர்களிடம் விழிப்புணர்வை உருவாக்குகின்றன. இவ்விழிப்புணர்வை ஊட்டுவதில் ஈடுபடும் தன்னார்வலர்களின் முயற்சியால் கலை இலக்கிய ஆளுமைகளுக்குப் பொதுமக்களோடு தொடர்புகள் ஏற்படுகின்றன. தாங்கள் கவனிக்கப்படுகிறோம் என்ற தன்னுணர்வு கலைச்செயல்பாட்டாளர்களுக்குத் தொடர்ந்து செயல்படும் மனநிலையை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

இலக்கியத் திருவிழாக்கள்

இலக்கிய அறிமுகம், இலக்கியவாசிப்பு, இலக்கியவிவாதங்கள் என்பனவும் கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை சென்னையை மையமிட்டே நடந்துவந்தன. குறிப்பாகச் சிறுபத்திரிகைகளின் செயல்பாடாக இருந்து வந்தன. அதனை மாற்றியிருக்கின்றன இப்போது நடத்தப்படும் இலக்கியத்திருவிழாக்கள். இலக்கிய ஆக்கம், விமர்சனம் போன்றனவற்றைச் சிறுகுழுவுக்குள் –உள்வட்டத்திற்குள் நடக்கும் அறிவுச்செயல்பாடு எனக் காட்ட நினைத்த போக்கே தமிழின் சிறுபத்திரிகை மரபு. அதற்குள் செயல்பட்ட ஒவ்வொன்றும் ஒருவிதக் குறுங்குழுவாதத் தன்மை கொண்டவைகளாகவே விளங்கின. ஒவ்வொரு குழுவும் அதன் கருத்துப்படி -கொள்கைப்படி கலை, இலக்கியச்செயல்பாட்டில் ஈடுபடும் எழுத்தாளர்களை மட்டும் அங்கீகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டன. இவ்வகைச் சொல்லாடல்கள் பரந்துபட்ட மக்களுக்கு அந்நியமானவைகளாக இருந்துவந்தன. இதனை மாற்றும் நோக்கத்தில் பொதுத்தளத்தை உருவாக்கிப் பல்வேறு குழுக்களும் பங்கேற்று விவாதிக்கும் நிகழ்வுகளாக இலக்கிய விழாக்களின் அமைப்பு வடிவமைக்கப்பட்டு நிகழ்த்திக்காட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு மாவட்டங்களை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து அந்தந்தப் பகுதி எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட இலக்கியத்திருவிழாக்களுக்கு பொருநை, சிறுவாணி, காவேரி, வைகை என நதிகளின் பெயர்களை இணைத்த நிலையில் அவற்றிற்கு வட்டாரத்தன்மை உண்டானது என்பதை மறுப்பதற்கில்லை. அதனாலேயே சில எதிர்மறைப் பேச்சுகளும் உருவாகியிருக்கின்றன. இதனைக் களைந்துவிடுதல் முடியாத ஒன்றல்ல. விரிவான விவாதங்கள், திட்டமிடல்கள் வழியாக அதனைச் சரிசெய்யமுடியும். தொடர்ச்சியாக ஒவ்வோராண்டும் நடக்கும் நிலையில் எதிர்காலத்தில் பல அதிர்வுகளையும் நேர்மறை விளைவுகளையும் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

புதியன விரும்பு

தமிழ்நாட்டின் அனைத்துப்பரப்பிற்கும் கலை, இலக்கியச் செயல்பாடுகள், நூல்கள் வாசிப்புப் பண்பாடு போன்றவற்றை எடுத்துச் செல்லும் நோக்கங்கள் கொண்ட புத்தகக் கண்காட்சி, இலக்கியத் திருவிழா ஆகியனவற்றைவிடவும் காத்திறமான தாக்கத்தைச் செய்யும் நிகழ்வொன்றைக் கடந்த (2022)மேமாதம் பள்ளிக்கல்வித்துறை நடத்தியது. நீலகிரி மலைத்தலங்களில் நடத்தப்பெற்ற ‘புதியன விரும்பு’ பயிலரங்கு இந்த அரசின் முக்கியமான முன்னெடுப்பு. திருச்சி எஸ்.ஆர்.வி.பள்ளி, தனது மாணாக்கர்களுக்காகத் தனது பள்ளி அளவில் ஆண்டுதோறும் நடத்திய ஒரு சிறுநிகழ்வைத் தமிழக மாணவர்கள் அனைவருக்குமான ஒன்றாக மாற்றிய நிகழ்வாகப் புதியன விரும்பு அமைந்தது.

பள்ளிக்கல்வியில் கடைசி ஆண்டில் – 12 ஆம் வகுப்பில் நுழையப்போகும் 1200 அரசுப்பள்ளி மாணாக்கர்களைத் தெரிவுசெய்து ஐந்து நாட்கள் பயிலரங்கை நடத்தியது பள்ளிக்கல்வித்துறை. காலை அமர்வுகளில் நமது காலத்து விழுமியங்களையும், வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான நடைமுறைகளையும் மாணவர்களுக்குத் தரும் உரைகள் இடம் பெற்றன. தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கவிகள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், சூழலியாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் பங்கேற்ற அமர்வுகளுக்குப் பின்னர் பிற்பகல் அமர்வுகளில் கலை, இலக்கியப்பயிற்சிகள் தரப்பட்டன. மாணாக்கர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஓவியம், சிற்பம், நாடகம், கவிதை, கதை எனப் படைப்பாக்கச் செயல்பாடுகளில் தனித்திறன் பயிற்சியளிப்புகளில் நுழைந்தனர். இவ்வகைப் பயிலரங்குகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்திட வேண்டும். கடந்த ஆண்டு 1200 மாணாக்கர்கள் என்ற எண்ணிக்கையில் இருந்ததை ஒவ்வோராண்டும் இரட்டிப்பாக்கி, வெவ்வேறு இடங்களில் நடத்திட வேண்டும். இளம் பருவத்தில் கல்வி மட்டுமல்லாமல், சமூகப்புரிதலும், சமூகநடப்பில் பங்கேற்கவேண்டும் என்ற ஆர்வமும் விதைக்கப்படுதலும் பொதுமனிதர்களை உருவாக்கும். அதேபோல் உண்டாக்கப்படும் கலை, இலக்கிய ஆர்வங்கள் தனித்துவமான மனிதர்களாக அவர்களை மாற்றும். இவ்வகை முன்னெடுப்பில் திராவிட முன்னேற்றக்கழகம் உச்சரிக்கும் ‘திராவிட மாதிரி’யின் நடைமுறைகள் அடியாழத்தில் செயல்படுகின்றன. இங்குள்ள எவையும் யாருக்கும் வழங்கப்படக்கூடாதவை என்ற ஒதுக்கல் மனப்பான்மை விலக்கப்பட்டு, எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வாய்ப்புகளுண்டு என்பது உறுதி செய்யப்படுகிறது.

கலை, இலக்கிய ஆர்வம், ஈடுபாடு என்பன ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவினருக்கு மட்டும் கிடைக்கும் வாய்ப்பாக இருந்த நிலையை மாற்றி அனைத்துப்பிரிவினருக்கும் கிடைக்கச் செய்யும் ‘சமூகநீதிப்பரவல்’ இவ்வகையான பயிலரங்குகளிலும் இலக்கியத் திருவிழாக்களிலும் சாத்தியமாகியிருக்கின்றன. இந்த ஆண்டு நடந்த சென்னை, பொருநை, சிறுவாணி, காவிரி, வைகை இலக்கியத்திருவிழாக்களில் 250 பேருக்கும் அதிகமானோர் தாங்கள் இயங்கும் கலை, இலக்கியத் தளங்களோடு பொதுப்பரப்பில் அறிமுகமாகியுள்ளனர். அரசு விழாக்களின் பங்கேற்பாளர்கள் என்ற அளவில் தினசரிகளும் காட்சி ஊடகங்களும் அவர்களின் பெயர்களையும் உருவங்களையும் எடுத்துச்சென்றுள்ளன; பரவலாக்கியுள்ளன. முந்திய காலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தன இவையெல்லாம்.

விமரிசனங்களும் விவாதங்களும்

அரசு நடத்தும் பண்பாட்டு நடவடிக்கைகளில் ஒவ்வொருவரும் பங்கெடுக்கவேண்டும் என்ற விருப்பமும் ஆர்வமும் எல்லாரிடத்திலும் வெளிப்படுவதைக் காணமுடிகின்ற அதே நேரம், பல விமரிசனங்கள் எழுந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தங்கள் இருப்பையும் மனக்குமுறலையும் ஒதுக்கப்பட்டுவிட்டோம் என்ற தவிப்பையும் சொல்வதற்கு முன்பு வாய்ப்புகள் குறைவு. இப்போது அதனை உடனடியாக வெளிப்படுத்தும் வாய்ப்பைச் சமூக ஊடகங்கள் உருவாக்கித்தந்துள்ளன. அதனால் விமரிசனங்களும் விவாதங்களும் உடனடியாக வந்துவிடுகின்றன.

குறிப்பிட்ட ஒரு கருத்தியலில் இயங்கும் இலக்கியவாதிகள் அதிகம் வாய்ப்புப்பெறுகின்றனர் என்ற குமுறல்கள் இலக்கிய விழாக்களின்-புத்தகக்காட்சிகளின் தொடக்க நாட்களில் கேட்டன. அதிகாரிகளோடு இணைந்து செயல்பட்ட ஆலோசனைக் குழுக்கள் மீது ஐயங்கள் எழுப்பப்பட்டன. நீண்டகாலமாகக் குறிப்பிட்ட இலக்கிய வகையில் செயல்பட்டவர்கள், குறிப்பிட்ட நிலப்பகுதியோடு தொடர்புடையவர்கள் தங்கள் பகுதிப் பண்பாட்டு நிகழ்வுகளில்- புத்தகக் கண்காட்சி அரங்குகளுக்கும் இலக்கியத் திருவிழாக்களுக்கும் அழைக்கப்படாத நிலையில் அரசின் மீது நம்பிக்கையிழப்பதையும் விமரிசிப்பதையும் பிழையாகச் சொல்லவேண்டியதில்லை. அதேபோல் கலை, இலக்கியச் செயல்பாட்டை நுண்ணியல் நோக்கோடு கவனித்து உரையாற்றாத – அவற்றிற்குத் தொடர்பில்லாத பேச்சாளர்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்ற கோபமும் வெளிப்பட்டுள்ளன. இந்த ஓராண்டில் எழுந்த விமரிசனங்களையும் விவாதங்களையும் தொகுத்து விவாதிப்பதன் மூலம் அடுத்த ஆண்டுகளில் இவற்றைச் சரிசெய்ய முடியும்.

கலை, இலக்கியச் செயல்பாட்டாளர்களின் தகவல் களஞ்சியங்களை மாவட்ட அளவில் உருவாக்குவது, அவர்களின் சிறப்புத்துறைகளை அடையாளப்படுத்திக் காட்டுவது போன்றவற்றைப் பேச்சாக மாற்றவேண்டும். அத்தகைய பட்டியல்களும் தரவுகளும் அரசு நிகழ்வுகளுக்கு மட்டுமே பயன்படுவதாக அமையாது. தனியார் அமைப்புகளும் கல்வி நிறுவனங்களும் ஏற்பாடு செய்து நடத்தும் நிகழ்வுகளுக்கும் பயன்படும். அத்தோடு ஒவ்வொரு நிகழ்விலும் உள்வாங்கும் நோக்கம் கொண்ட ஆலோசனைக்குழுக்களை உருவாக்குவது விழாக்குழுவினரின் பொறுப்பாக அமையவேண்டும்.

மறுபரிசீலனை.

பண்பாட்டு நிகழ்வுகளில் இருந்த குளறுபடிகள், விடுபடல்கள், பாகுபாடுகள் போன்றவற்றிற்காக அரசையும் பொறுப்பேற்று நடத்திய அமைப்பாளர்களையும் நோக்கி வைக்கப்பட்ட விமரிசனங்களிலும் விவாதங்களிலும் முழுமையாகச் சரியான பார்வைகள் வெளிப்பட்டன என்றும் சொல்ல முடியாது. யார் எழுத்தாளர்? எது சீரிய எழுத்து என்பதைத் தீர்மானிக்கும் கறாரான வரையறைகள் நம்மிடம் இல்லை. அப்படி உருவாக்க நினைப்பதுகூடத் தேவையில்லை. காலந்தோறும் மாற்றம் அடையும் வரையறைகளே புதியன படைக்கும் வாய்ப்பை உருவாக்கும். கறாரான வரையறைகள் தேங்கிப்போகவே வழிவகுக்கும்.

சென்னை இலக்கியத்திருவிழா என நகரின் பெயரில் முதல் இலக்கியவிழாவைத் தொடங்கிய அரசு, அடுத்தடுத்த விழாக்களுக்கு ஆறுகளின் பெயரைச் சூட்டியது நிர்வாக வசதிக்கான ஒரு பிரிப்பே என்றே நான் கருதினேன். அப்படியில்லாமல் அந்த வட்டாரத்து ஆளுமைகள் மட்டுமே அழைக்கப்படவேண்டும் எனக்கருதவேண்டியதில்லை. ஒருவரை இந்த வட்டாரம் என்ற வரையறை செய்வதில் எதனை அடிப்படையாகக் கொள்வது என்பதும் சிக்கலானது. பிறந்த ஊரின் அடிப்படையிலா? இப்போது வாழும் இடத்தின் அடிப்படையிலா? எழுத்தில் வெளிப்படும் நிலவெளிப்பின்னணியைக் கொண்டா? என்பதில் முடிவுகள் எட்ட முடியாது. நீண்டகாலமாக ஒரு வட்டாரத்தில் வாழ்பவரை அவ்வட்டாரத்து ஆள் இல்லை என ஒதுக்குவதின் மூலம் அவருக்குள் குற்றவுணர்வையும் தனிமையுணர்வையும் இலக்கியத்தின் பெயரால் உண்டாக்க வேண்டியதில்லை

புதுச்சேரிக்குப் போய் 30 ஆண்டுகள் வாழ்ந்த நிலையிலும் கி.ராஜநாராயணன் கடைசிவரை ‘கரிசல்’ எழுத்தாளராகவே அடையாளப்படுத்தப்பட்டார். அதே கால அளவு கோவையில் வாழும் நாஞ்சில் நாடன் கோவை எழுத்தாளர் ஆக அடையாளம் பெறவில்லை. தனது எழுத்துக்காலம் முழுவதும் சென்னையிலேயே வாழும் வண்ணநிலவன், தாமிரபரணி மனிதர்களையே எழுதிக்கொண்டிருக்கிறார். அரசுப்பணி காரணமாகத் தமிழ்நாட்டைத் தாண்டி வாழ நேர்ந்த சுப்ரபாரதி மணியனும் பாவண்ணனும் வண்ணதாசனும் அவரவர் பிறப்புசார்ந்த நிலவெளியையே அதிகம் எழுதுகின்றனர். இந்த நிலையில் ஒருவரை எந்த வட்டாரத்தோடு அடையாளப்படுத்துவது? என்பது பெரிய கேள்வி. அத்தோடு இவர்கள் எழுத்துக்களில் வரும் இடங்களும், அதன் மூலம் அக்கதாபாத்திரங்களின் புற அடையாளங்களும் பேச்சு மொழியும் மட்டுமே வட்டார இலக்கியத்திற்கானதாக இருக்கின்றன. அவர்கள் விவாதிக்கும் இலக்கியப் பொருண்மைகள் வட்டார எல்லைகளைத்தாண்டியவை என்பதைக் கவனிக்க வேண்டும். வட்டாரப் பின்புலத்தில் தேசிய/ உலக இலக்கிய அடையாளங்களை உருவாக்கும் தமிழ் எழுத்தாள ஆளுமைகளைச் சிறிய பரப்பிற்குள் அடைத்துவிடும் தவறைச் செய்துவிடக்கூடாது.

இலக்கியவடிவங்கள் எல்லாவற்றிலும் குறிப்பிட்ட வட்டார அடையாளத்தைக் கண்டு பிடித்துவிட முடியாது என்பதையும் கவனித்தில் கொள்ளவேண்டும். கருப்பொருள் சார்ந்து உருவாகும் வெளிகள் தேவைப்படாத நாடகத்தில் வட்டாரத்தன்மையைத் தேடுவது வீண் வேலை. நவீனக் கவிதை வடிவம் கூடப் பெரும்பாலும் இட அடையாளம் துறந்த ஒன்றாகவே இருக்கின்றன.அதேபோல் இலக்கியத்திறனாய்வு, பண்பாட்டு ஆய்வுகள், இலக்கிய வரலாற்றுருவாக்கம் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை ஒரு வட்டாரத்தில் பொருத்திப் பேசுவது தவறானது. வட்டாரப் பார்வை நமது கலை இலக்கியப்பார்வைகளைக் குறுக்கிவிடக்கூடாது. விசாலப்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக வட்டாரப்பார்வையோடு இயங்கத்தொடங்கும் ஒரு கலை, இலக்கியவாதி மெல்லமெல்லக் குறுகித் தனது ஊர், தெரு,வீடு எனப் பேசத்தொடங்கும் நிலையில் சாதி மத அடையாளங்களைப் பெருமிதமாகப் பேசும் ஆபத்தைச் சந்திக்கும் ஆபத்தை நெருங்கிவிடுவான். தமிழில் அப்படி ஆனவர்களின் பட்டியலைக் கூடத் தரலாம். 1970களுக்குப் பிறகுக் கல்விப்புலத்தில் பரவலாகச் செய்யப்பட்ட நாட்டார் ஆய்வுகளும் பண்பாட்டு ஆய்வுகளும் இனவரைவியல் ஆய்வுகளும் கூட இத்தகைய பார்வைகளை உருவாக்கியிருக்கின்றன. ஒரு மனிதனின் இருப்பு என்பது சொந்த நிலத்தில் கால்பதித்துக்கொண்டு எல்லாவகை வேறுபாடுகளையும் – பால், சமயம், இனம், மொழி, தேசம் – என எல்லா வேறுபாடுகளையும் கடந்து செல்லும் எத்தணிப்புகளைக் கொண்டதாக இருக்கவேண்டும்.

முடிவாக..

மேலே சொன்ன புரிதலோடு திராவிட மாதிரியைக் கவனத்துடன் பின்பற்றுகிறது திராவிட முன்னேற்றக்கழக அரசு. அதன் பண்பாட்டு நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் இந்தப்பார்வை வெளிப்படுகிறது. அவை வரவேற்கத்தக்கவை. அதே நேரம் நடைமுறைகளில் சில குறைபாடுகள் இருக்கின்றன. மேலும் மேலும் கவனமான திட்டமிடல்களுடன் முன்னெடுக்கப்படும்போது அவை களையப்படும் வாய்ப்புகள் உருவாகும். திறந்த மனத்துடன் செயல்படும் அமைப்பாளர்கள் மட்டுமல்லாமல் பங்கேற்கும் கலை, இலக்கியவாதிகளுக்கும் புரிதலும் நிதானமும் தேவை.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்