நண்பகல் நேரத்து மயக்கம்: காணாமல் போனவனும் காணாமல் போய்க்கொண்டிருப்பவனும்
கலைத்தன்மைச் சினிமா என்னும் தனித்துவம்
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தனது சினிமாக்களை, குறிப்பான சூழல் என்ற அடிப்படையில் மற்றவர்களின் சினிமாவிலிருந்து வேறுபடுத்துகின்றார் எனத் தோன்றுகிறது. அதனாலேயே அவரது சினிமாக்களை நடப்பியல் வகை சினிமாவின் சட்டகங்களுக்குள் வைத்துப் பேசமுடிவதில்லை. தனித்தனியாகப் பார்த்தால், நிகழ்கால வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையே அவரது சினிமாக்கள் காட்சிப்படுத்தியுள்ளன என்று தோன்றும். ஆனால் அவையெல்லாம் எல்லாருடைய வாழ்க்கையிலும், ஒவ்வொரு வெளியிலும் நடக்கக்கூடியன என்று உறுதியாகக் கூறமுடியாது. நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக நடக்கும் வாய்ப்புகள் கொண்ட காட்சிகள் தான். அதே நேரம் ஒட்டுமொத்தமாக இது சாத்தியமா? என்ற வினாவைப் பெரிய வினாவாக எழுப்பிக் கொண்டே இருக்கும் படமாகப் பார்வையாளர்கள் முன்னால் விரித்து நகர்த்திக்கொண்டே இருக்கிறது.
கலைத்தன்மை கூடிய ஒரு சினிமா,வணிக வெற்றியை நோக்கமாகக் கொண்ட சினிமாக்களிலிருந்து பலநிலைகளில் வேறுபாடுகள் கொண்டதாக இருக்கும். அவற்றுள் முதன்மையான வேறுபாடாக இருப்பது இந்தப்பொதுத்தன்மையைக் கைவிடுவது என நினைக்கிறேன். ஒரு சினிமாவில் அனைத்துத் தரப்புப் பார்வையாளர்களுக்கும் விருப்பமான கூறுகள் இடம்பெறவேண்டும் என நினைக்காமல், அந்தச் சினிமாவுக்கான இலக்குப் பார்வையாளர்கள் யார்? என்பதை முடிவு செய்துகொண்டு அவர்களை நோக்கித் தனது படத்தை முன்வைப்பதைக் கலைத்தன்மை கூடிய பட இயக்குநர்கள் விரும்புகிறார்கள். இலக்குப் பார்வையாளர்களோடு உரையாடுவது என்பதை, அவர்களின் எண்ணங்களோடும் சிந்தனைத் தளத்தோடும் உரையாடல் செய்வதாகப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த நோக்கத்திலேயே அதன் இயக்குநர் கதைப்பின்னலையும், காட்சிகளையும் நடிப்புமுறையையும் காமிராக்கோணங்களையும் இசைக்கோலங்களையும் தெரிவுசெய்கிறார்கள். கலைத்தன்மைச் சினிமாவின் இயக்குநர்கள் எல்லா இடங்களிலும்,எல்லாச் சூழலும் நடக்கும் சாத்தியங்கள் கொண்ட காட்சிக் கோர்வைகளின் தொகுப்பாகச் சினிமாவை உருவாக்குவதில்லை. வெளி, காலம் இரண்டையும் உள்ளடக்கிய குறிப்பான சூழலில் மட்டுமே இப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் நடக்கக்கூடியன என்பதாக உருவாக்கித் தொகுத்துத் தருகிறார்கள். தொகுப்பதில் கூட ஒரு நேர்கோட்டுத்தன்மை உருவாகி விடுவதைத் தவிர்க்க நினைக்கிறார்கள்.
மறதி –மரணம் –மறு உயிர்ப்பு: படத்தின் கருத்தியல் சொல்லாடல்கள்
மறதி மனிதர்களின் பொதுவான குணம் அல்லது வினைப்பாடுகளுள் ஒன்று. செயலின் தொடர்ச்சியில் ஏற்படும் தடை என்பதாக மறதி விளக்கப்படுகிறது. அந்த விளக்கத்தை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டு மறதியை அதன் போக்கில் கடந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சிறுகணப்பொழுதில் - நொடிக்கணக்கில், நிமிடக்கணக்கில் ஏற்படும் மறதிகளைச் சந்தித்த நிகழ்வுகளை இன்னொருவரிடம் சொல்லும்போது சுவாரசியம் ஏற்படுவதுமுண்டு. ஏறவேண்டிய பேருந்தில் ஏறாமல் திசைமாறிப்போன பயண அனுபவங்களையும், பெறவேண்டிய/ தரவேண்டிய தொகைக்குப் பதிலாக அதிகமாகவும் குறைவாகவும் கைமாறிய அனுபவங்களையும், சின்னத் தடுமாற்றத்தில் அறிமுகம் இல்லாதவர்களின் தோள்களைப் பற்றி அசடு வழிந்த கணவன் -மனைவி/ காதலி போன்ற காட்சிகளும் நினைவில் வருகின்றன; திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன; இலக்கியங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சூழலில் தன்னை மறத்தல் என்பதை மருத்துவ அறிவியல் ஒரு வியாதியாக வகைப்படுத்திக் காட்டும். மனநல மருத்துவத்தின் பகுதியாகப் பேசப்பட்டுச் சிகிச்சை முறைகளையும் பரிந்துரைக்கும். மறதியின் மையமாக இருப்பது மனம் என்பதுவரை அல்லது எண்ணங்களாக இருப்பது வரை ஏற்கத்தக்கனவாக இருக்கிறது. மனத்தின் பகுதியாக இல்லாமல் மறதி உடலின் பகுதியாக அறியப்படும் நிலையில் போதிய விளக்கத்தை மருத்துவ அறிவியல் தருவதில்லை. பருண்மையான தனது உடலை மறத்தல் நடக்குமா? என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிப்பதுண்டு. சாதாரணப்புரிதலில் ஏமாற்று என்று விளக்கம் சொல்லவும் கூடும்.
மறதியின் தொடர்ச்சியைப் போலவே மரணம், மறுபிறப்பு போன்ற கருத்தாக்கங்களைச் சமய நூல்கள் விளக்குகின்றன. உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு என்ற குறளுக்குப் பின்னால் இருக்கும் கருத்தியல் இவ்வகைப்பட்டதாகவே இருக்கும். ஒரே பிறவியில் சிறிய இடைவெளியில் ஏற்கெனவே அறியப்பட்ட உடலுக்குள் இருக்கும் உயிர் பிரிந்து போய்விட்டுத் திரும்பவும் வருதல் பற்றிய நிகழ்வுகளைப் பேசும்போது நிகழ்கால மனிதர்களின் மனம் ஏற்பதில்லை. அதிலும் ஓர் உடலுக்குள் இன்னொரு உடலுக்குரிய உயிர் நுழைந்து செயல்படும் நிகழ்வை மருத்துவம் மறுதலிக்கிறது. அதையும் நோயாகவே கருதுகிறது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளைச் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் இயல்பாக நினைக்கின்றன. பேய் பிடித்தல், ஆவி ஏறுதல், சாமியாடுதல் போன்றனவற்றைக் கிராமத்து வாழ்க்கையில் அதீத நிகழ்வுகளாகக் கருதி ஏற்றுக்கொண்டு கடப்பதைப் பார்க்கிறோம். இதனையே மாந்திரீகம், தாந்திரிகம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்கள் அற்புத நிகழ்வுகளாக முன்வைக்கிறார்கள். கூடுவிட்டுக் கூடு பாய்ந்து காலத்திற்குள்ளாகப் பயணம் செய்து திரும்ப முடியும் என்று விளக்கி நம்பச்செய்கின்றனர்.
கர்மம், மறுபிறப்பு போன்றனவற்றை முன்வைக்கும் சமய அறிவுச் சொல்லாடல்களும் இதனை விவாதிக்கின்றன. இயல்பான மரணங்கள், இயல்பற்ற மரணங்கள் (அகால மரணம்) என மரணங்களை விவாதிக்கும் நிலையில் இயல்பற்ற மரணத்திற்குப் பிறகு உயிர் அல்லது ஆன்மா இங்கேயே ஆவியாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பது நம்பிக்கையின் ஓரடையாளம். அது தனக்கான உடலைத் தேடிக் கண்டுபிடித்து அவ்வப்போது நுழைந்து வெளியேறும் என்பது அதன் நீட்சி. அத்தகைய நிகழ்வுகளுக்குக் குறிப்பான காலச்சூழல் இருப்பதாகவும் கருதுகிறார்கள். நட்ட நடுச்சாமம் உகந்த காலமாக நம்பிக்கை கொண்டவர்களால் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. அதற்கிணையாக இல்லையென்றாலும் உச்சிப்பொழுது வேலை -நண்பகல் நேரமும் ஆவிகள், பேய்கள், சாமிகள், ஆன்மாக்களுக்குரிய நேரம் என்பதும் நம்பிக்கை தான். ஆவிகள் உலாவும் நேரமாக நண்பகல் நேரமும் இருக்கிறது. ஆழ்ந்த உறக்கம் அல்லது மயக்க நிலையில் ஓருவரது உடல் மறதி நிலையில் இருக்கும். அந்த மறதி நிலையில் இன்னொரு உயிர்/ ஆன்மா அதற்குள் நுழைந்து ஏற்கெனவே இருக்கும் உயிரை/ ஆன்மாவை இடம்பெயர்த்துவிட்டுக் குடியேறிக்கொள்ளும். பெல்லிசேரியின் சினிமா –நண்பகல் நேரத்தைத் தெரிவு செய்துள்ளது. அதனாலேயே பேய்ப்படமாகப் பார்க்கப்படுவதிலிருந்து தப்பித்திருக்கிறது. நள்ளிரவு நேரத்தைத் தேர்வுசெய்திருந்தால் பேய்ப்படமாகப் பார்க்கப்பட்டிருக்கும்.
******
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தனது குடும்பத்தைவிட்டுப் பிரிந்து போனவரின் கதி என்ன என்பதை முடிவுசெய்யாமல் இருக்கும் குடும்பம் அது. காணாமல் போனவர் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையை அவர்கள் தொலைக்காமல் இருக்கிறார்கள். 24 மணி நேரமும் தொலைக் காட்சி வசனங்களையும் பாடல்களையும் கேட்டுக்கொண்டே மகன் நினைவைத் தக்கவைக்கும் கண் பார்வையற்ற அம்மாவின் நம்பிக்கை முழுமையானது. தனக்கடுத்துக் குடும்ப பாரத்தைச் சுமக்கவேண்டிய மகன் இப்படித் தவிக்கவிட்டுவிட்டுப் போய்விட்டானே என ஏக்கத்தோடு திண்ணையில் அமர்ந்திருக்கும் தந்தையின் நம்பிக்கை முழுமையானதல்ல; ஆனால் வரமாட்டான் என்று அவர் முடிவும் செய்துவிடவில்லை. பணிவோடு உணவு பரிமாறி, உடைகளை எடுத்துக் கொடுத்துக் கணவனைப் பார்த்துக்கொண்ட மனைவி. அவளைத் தவிக்கவிட்டுவிட்டுப் பிரிந்து போவதற்குத் தனது புருசனுக்கு என்ன காரணம் இருந்திருக்கும்? என்பதையே நினைத்துக் கொண்டிருக்கும் அவளுக்குள் இருப்பது குழப்பம் மட்டும் அல்ல; திரும்புவார் என்ற எதிர்பார்ப்பும்.
இம்மூவருக்குள்ளும் இருப்பது காணாமல் போனவனின் உடல் அல்ல. அவனது மனம், அவனது குரல், அவனது பரிவு, அவனது அன்பு, காதல் . இதற்கு மாறாக அதையெல்லாம் முழுமையாகப் பெற்றுக் கொள்ளாத மகளிடம் வெளிப்படுவது நம்பிக்கையின்மை. குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பைக் கைவிட்டுவிட்டுக் காணாமல் போனவர் திரும்பப் போவதில்லை என்ற தீர்க்கமான முடிவு அவனது உறவினரான சகோதரனுக்கு இருக்கிறது. ஊராருக்கு காணாமல் போனவன்; போனவன் தான்.
ஆனால் காணாமல் தொலைந்து போகவில்லை; காணாமல் போனவன் இல்லாமல் ஆகிவிட்டான். ஆனால் ஆவியாக மாறி அந்தக் கிராமத்தின் எல்லையில் சுத்திக் கொண்டிருந்தான். ஒரு நண்பகல் நேரத்தில் இன்னொருவனின் உடலில் புகுந்து தனது வீட்டிற்கு வந்து பழைய காரியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்டுத் திரும்பிப் போய்விடுகிறான்.
புற உலகத்து மனிதர்கள், ஒரு மனிதனை உடலாக மட்டுமே அறிந்துகொள்கிறார்கள்; பழகுகிறார்கள். ஆனால் நெருங்கிய/ அகத்தை அறிந்த மனிதர்கள் உடலாக மட்டுமல்லாமல் மனதாகவும் அறிந்துகொள்கிறார்கள். மனத்தின் வெளிப்பாட்டை உணர்த்தும் கருவி மொழியாக இருக்கிறது. கிறித்தவ மதச் சடங்குகளிலும் கடவுள் கொள்கையிலும் நம்பிக்கை கொண்ட மலையாளியான ஜேம்ஸின் உடலுக்குள் புகுந்துகொண்ட சுந்தரத்தின் ஆவி வெளிப்பட்டது உள்ளூர் தெய்வங்களை வணங்கும் ஒரு தமிழ் ஆளாக. உடல் மொழியாலும் குரல்மொழியாலும் நிரப்பப்பட்ட ஜேம்ஸின் உடலை சுந்தரமாக மாறி ‘நான் சுந்தரம்; இதுதான் என் ஊரு’ என்கிறான். வந்திருக்கும் உடல் ஜேம்ஸின் உடல் என்றபோதிலும் சுந்தரத்தின் அம்மை, அப்பா, மனைவி ஆகியோர் சுந்தரமே வந்திருப்பதாக உணர்கிறார்கள்.
மறதி, மரணம், ஆன்மா,கூடுவிட்டுக் கூடுபாயும் நம்பிக்கை என்பதான சொல்லாடல்களின் மேல் உருவாக்கப்பட்டுள்ள நண்பகல் நேரத்து மயக்கம் சினிமா, விரிக்கப்பட்டுள்ள காட்சிகள் வழியாக நிகழ்காலச் சினிமாவாக – நவீன சினிமாவாகத் தன்னை முன்வைக்கிறது. கேரளக்கிராமம் ஒன்றிலிருந்து தமிழ்நாட்டின் வேளாங்கன்னிக்குப் பக்திப் பயணம் மேற்கொள்ளும் குடும்பங்களின் இடை நிற்றலில் தொடங்கும் காலைக்காட்சியும் நண்பகல் பயணமும் நகைச்சுவையான உரையாடல்கள் வழியாக விரிக்கப்பட்டுள்ளன. படத்தின் தொடக்க நிலைக்காட்சிகளில் சிடுக்குகளோ, சிக்கல்களோ இல்லை. பயணச் சத்திரம் ஒன்றில் தங்குதல், பயணத்தைத் தொடங்குதலில் தாமதம் ஏற்படுத்தும் ஜேம்ஸின் விலகலான மனநிலை, இடைநிற்றலில் மற்றவர்களோடு இணைந்தும் விலகியும் பேசும் அவனது போக்கு என்பதைக் கொண்டு அவனது உடலுக்கு நடக்கப்போகும் விசித்திரம் முன்னறிவிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் தூங்கும்போது அவன் மட்டும் விழித்திருப்பதும் குழம்புவதுமான மனநிலையில் இறங்கி நடக்கத் தொடங்குகிறான். பேருந்திலிருந்து இறங்கிக் கிராமத்து மண் சாலையில் இறங்கும்போது அவன் முழுமையாகச் சுந்தரமாக மாறுகிறான். ஜேம்ஸின் உடல் மொழியும் மலையாளப் பேச்சுமொழியும் வெளியேறிக்கொள்ள, சுந்தரத்தின் உடல்மொழியும் தமிழ்ப்பேச்சுமொழியும் நிரம்பிக்கொள்கின்றன. வருவது சுந்தரம் தான் என்பதை உணர்ந்து கொண்டனவாக அக்கிராமத்தின் விலங்குகளும் பறவைகளும் இருந்தன என்பதைக் காட்டுவதின் வழியாக இயக்குநர் உணர்த்துகிறார். மின்சாரக்கம்பங்களில் –கம்பிகள் அமர்ந்திருக்கும் காகம் அவனை அந்நியனாக நினைத்துக் கூவவில்லை;நாய்கள் குரைக்கவில்லை; சுந்தரத்தின் வீட்டு மாடுகள் மிரளவில்லை. பறவைகளும் மிருகங்களும் ஆவியையும் ஆன்மாவையும் அறிந்துகொள்ளும் சக்தி கொண்டவை என்பதும் கிராமப்புற நம்பிக்கைகள் சார்ந்தவையே.
கலை ஆக்கலின் திறன்கள்
முந்திய பெல்லிசேரியின் படங்களிலிருந்து நண்பகல் நேரத்து மயக்கம் பெரிய மாற்றம் ஒன்றைக் கொண்டுள்ளது. பொதுவாகக் கலைச்சினிமா இயக்குநர்கள் ஒவ்வொரு படத்திற்கும் வெவ்வேறு வடிவங்களைத் தேர்வுசெய்வார்கள். சொல்முறை மூலமாக – பயன்படுத்தும் நடிப்பு முறை மூலமாக –உண்டாக்கும் குறியீடுகள், படிமங்கள் வழியாக என ஒவ்வொன்றிலும் ஒரு சோதனையைச் செய்து பார்ப்பதுண்டு. குறியீட்டுப் பாத்திரம், குறியீட்டு நடிப்பு, அபத்த வெளிப்பாட்டுப் படிமங்கள், தூரப்படுத்தும் காமிராக்கோணங்கள் போன்றவற்றைப் பயன்படுத்திய இயக்குநர் இப்படத்தில் முழுமையும் நேர்கோட்டில் கதையைச் சொல்லியிருக்கிறார். காட்சிகளில் இடம்பெறும் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள நடிகர்களை நடப்பியல் தன்மையோடு நடிக்க வைத்துள்ளார். இருதளங்களில் பிளவுகொண்ட பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள நடிகர்கள் ஒவ்வொருவரும் பாத்திரங்களின் இயல்பில் விலகாமல் வெளிப்பட்டுள்ளனர். அதன் வழியாகப் பார்வையாளர்களுக்கு இருவித உணர்வுகளும் மாறிமாறிக் கலவையாகத் தரப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் தேர்ந்த நடிப்பை இதற்கு முன்பும் பார்த்து ரசித்திருக்கிறோம். இதில் முழுமையாகத் தங்களை வெளிப்படுத்த முயன்றுள்ளனர். குறைவான நேரமே வந்துபோகிறவர்கள்கூட நடிப்பில் குறைவைக்கவில்லை
நடுத்தரவர்க்க வாழ்க்கைக்குள் இருக்கும் குடும்பங்களின் புனிதச் சுற்றுலாவில் இருக்க வாய்ப்புள்ள நகைச்சுவைக் காட்சிகளோடு தொடங்கும்போது உருவாக்கப்படுவது ஒருவித அங்கதம் கலந்த நகைச்சுவை உணர்வு. அவ்வுணர்வு இடையில் நிறுத்தப்பட்ட பேருந்திலிருந்து ஜேம்ஸ் காணாமல் போய்விட்டார் என்ற நிலையில் உருவாவது தவிப்பும் எரிச்சலுமான உணர்வுகள். ஜேம்ஸின் மனைவிக்கும் பிள்ளைக்கும் கூட எரிச்சலோடு கூடிய தவிப்புதான் வெளிப்படுகிறது. பக்கத்துக்கிராமத்திற்குள் ஜேம்ஸ் இருக்கிறான் என்ற நிலையில் தவிப்பு தீர்கிறது. ஆனால் அவர் வேறொரு ஆளாகத் திரிகிறான் என்ற நிலையில் திகைப்பும் குழப்பமும் உருவாகிறது. மற்றவர்களுக்குச் சுற்றுலாப் பயணம் என்னாகும் என்ற குழப்பம். ஜேம்ஸின் மனைவிக்கும் பிள்ளைக்கும் வாழ்க்கை என்ன ஆகும் என்ற தீர்க்கமுடியாத சிக்கலை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற தவிப்பு. இந்த மனவோட்டங்களும் உணர்வுக்கலவைகளும் கண்முன்னே ஒருவன் காணாமல் போய்க்கொண்டிருப்பதைச் சந்திக்கும் மனிதர்களின் பரிதாபமான கையறு நிலை.
காணாமல் போய்க்கொண்டிருக்கும் ஒருமனிதன், காணாமல் போன ஒரு மனிதனாகத் தோன்றும்போது கிடைக்கும் ஆசுவாசம், ஐயம், திகைப்பு, மிரட்சி, நடைமுறையில் இதுபோன்ற நடப்புகளால் ஏமாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன என்பதையிட்டு உண்டாகும் கலவரம் என அந்தக் குடும்பமும் ஊரும் சந்திக்கும் உணர்வுகளும் மனவோட்டங்களும் தனியாக உருவாக்கப்பட்டுள்ளன. தனித்தனியான மனவோட்டங்களை ஒரு கட்டத்தில் இணைநிலையாக மாறிமாறிக் காட்டிப் பார்வையாளர்களை அதற்குள் ஈர்த்துக்கொள்கிறது படம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் மலையாளம் பேசும் மனிதர்களோடும் தமிழ் பேசும் மனிதர்களோடும் விலகலின்றி அந்தக் கிராமத்திற்குள் அலையவேண்டும் என்பதைத் தனது படமாக்கலின் நுட்பமாக வைத்துள்ளார் இயக்குநர் பெல்லிசேரி. அந்த இடத்தில் தனது படத்தை நடப்பியல் படத்திலிருந்து மாயநடப்பியல் படமாக மாற்றிவிடுகிறார்.
காட்சிக்கோர்வை xஇசைக்கோர்வை
பசுமையான இயற்கைப் பின்னணி கொண்ட கேரளக் கிராமத்து மனிதன் ஒருவன்,வெக்கையும் புழுதியும் நிரம்பிய தமிழ்நாட்டுக் கிராமத்தைத் தனது கிராமமாக நினைக்கத் தொடங்கிக் கலந்து - காணாமல் போகும் ஆச்சரியம் என்பதற்குள் ஓர் எதிர்வு இருக்கிறது. மனைவியின் கால்வலிக்குத் தைலம் தேய்த்துவிட்டுத் தூக்கிக் கொண்டு போகக்கூடத் தயாராக இருக்கும் கணவன், அவளை மறந்துவிட வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்வி இருக்கிறது. அதன் மறுதலையாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் போன சுந்தரம் பற்றி எந்தத் தகவலும் இதுவரை இல்லை என்ற உறுதி இருக்கிறது. அவனது குடும்பத்தைப் பராமரிக்கும் வேலையை ஏற்றுக்கொண்ட சகோதர உறவுகளின் தீர்மானமான நிலை இருக்கிறது. இவையெல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காட்சிகளில் தோன்றும் தேர்ந்த நடிகர்களும் நடிகைகளும் இயல்பான உடல்மொழியாலும் குரலாலும் உண்மையான நடப்புகளே இக்காட்சிகள் என்ற தோற்றத்தை உண்டாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அக்காட்சிகளுக்குப் பின்னால் உருவாக்கப்பட்டுள்ள சத்தங்களும் ஓசைகளும் அவற்றோடு பொருந்தாமல் விலக்கலை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றன. இது இயக்குநரே திட்டமிட்டு உருவாக்கும் தூரப்படுத்தும் உத்தி.
நம்பத்தக்க உணர்வுகளைக் காட்சிப்படுத்திக்கொண்டே இருக்கும் காமிராவின் வேலைக்கு எதிராகப் பின்னணி இசை அக்காட்சிகளின் மீது விலகலை ஏற்படுத்திக்கொண்டே இருப்பது ஏன் என்று கேள்வியைப் பார்வையாளர்களிடம் எழுப்ப நினைத்துள்ளார் இயக்குநர். அவ்விலகல் வழியாக காட்சிகள் உருவாக்கும் வாழ்க்கையின் மீதும், வாழ்வதாக நம்பிக்கை கொண்டிருக்கும் மனிதர்களின் நம்பிக்கைகள் மீதும் அபத்தத்தை உண்டாக்குகிறார். அபத்தத்தை உண்டாக்க இயக்குநர் தேர்வு செய்துள்ள சங்கதிகள் அவரது கலையியல் பார்வைக்கும் செய்நேர்த்திக்கும் சிறப்பான இடத்தை அளித்துள்ளன. மிகையுணர்ச்சியோடு நடிகர்கள் பாத்திரமாக மாறிக் கொண்டிருக்கும்போது ஒலிக்கும் பழைய தமிழ்ச்சினிமாக்களின் உரையாடல்களும் பாடல்வரிகளும் உண்டாக்குவது ஒருவித எள்ளலும் அங்கதமுமான நகைச்சுவை உணர்வு. அதன் வழியாகவே பார்வையாளர்கள் அக்காட்சியிலிருந்து விலக்கப்பட்டு, அதனை குறித்து யோசிக்கும்படி தூண்டப்படுகிறார்கள். பார்வையாளர்களின் சிந்தனைக்கு எதையுமே தராத பொழுதுபோக்குக் குப்பைகளே தமிழ்ச் சினிமாக்கள் என்ற பொதுவான விமரிசனப்பார்வையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நினைக்கத் தக்க அளவுக்கு வாழ்க்கை என்றால் என்ன? அதன் சிடுக்குகளுக்குள் சிக்கிய மனிதன் எப்படி வெளிப்பட்டான், மரணம் என்றால் என்ன? அதனை எதிர்கொள்ளும்போது மனிதர்கள் மேற்கொள்ளும் மனவோட்டங்கள் எப்படி இருக்கும்? கடவுள், குற்றம், தண்டனை போன்றனவெல்லாம் எங்கே இருக்கிறது? மனத்திற்குள்ளேயே இருக்கின்றனவா? வெளியிலா? என்பன போன்ற கேள்விகளைக் கரடுமுரடான தொலைக்காட்சி அலறலோடு காட்சிகளின் பின்னணி இசையாக ஆக்கியிருப்பது இயக்குநரின் தேர்வு. அதற்காக மொத்தத் தமிழ்ச்சினிமா பரப்புக்குள்ளும் தேடியிருக்கிறார்கள் இயக்குநரும் வசனம் எழுதியவரும். காமிராவின் காட்சிப்படுத்தலோடு பார்வையாளர்கள் ஒன்றிவிடக் கூடாது என்பதற்குப் பலவித உத்திகள் கலைத்தன்மை கொண்ட சினிமாக்கள் பயன்படுத்தியுள்ளன. நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் இயக்குநர், இசைக்கோலங்களின் மிகையால் அதனைச் செய்திருக்கிறார்; பாராட்டுகள்.
கலைத்தன்மை உருவாக்கங்கள்
பொதுவாகப் பேசுவதற்குப் பதிலாகக் குறிப்பாகப் பேசுவதைக் கலைத்தன்மை சினிமாக்கள் முக்கியமான வேறுபாடாகக் கொள்கின்றன என்று தொடக்கத்தில் சொல்லியிருக்கிறேன். அதல்லாமல் நாயகத்தனம் - வில்லத்தனம் என்பதை முக்கியமான எதிர்வாகக் கலைத்தன்மைப் படங்கள் கருதுவதில்லை. அக்குணங்கள் கொண்ட மனிதர்கள் தனித்தனியாக இருப்பதாகக் கருதாத நிலையில் அவ்வகை எதிர்வுகளை முன்வைப்பதில்லை. அதே நேரம் எதிர்வுகளையே உருவாக்குவதில்லை என்று உறுதியாக இருப்பதும் இல்லை. எதிர்வுகள் இல்லாமல் இந்த உலகத்தின் இருப்பையும் நடப்பையும் புரிந்துகொள்ள இயலாது. அதனால் ஒரு சினிமாவுக்குத் தேவையான எதிர்வுகளை உருவாக்கி விசாரணை நடத்துவதைக் கலைத்தன்மைப் படங்கள் மறுதலிப்பதில்லை. நண்பகல் நேரத்து மயக்கம் அதன் கட்டமைப்புக்குள் வெளிப்படையான சில எதிர்வுகளை வைத்திருக்கிறது. சில மறைமுக எதிர்வுகளையும் கொண்டிருக்கிறது. படம் உருவாக்கியுள்ள முதன்மையான எதிர்வு காணாமல் போனவனும், காணாமல் போய்க் கொண்டிருப்பவனும் உருவாக்கும் மனத்தவிப்புகள். காணாமல் போனவன் என்னும் கடந்த காலத்தவிப்பையும், காணாமல் போய்க்கொண்டிருப்பவன் உருவாக்கும் நிகழ்காலத் தவிப்பையும் ஒருசேரக் காட்சிப்படுத்தியதில் பார்வையாளர்களை வென்றிருக்கிறார் இயக்குநர் பெல்லிசேரி. இந்தத் தவிப்பின் ஊடாக இந்தியச் சமயங்கள் முன்வைக்கும் சமயம் சார்ந்த தத்துவ விசாரணையின் ஓரடுக்கை விவாதிக்க முயன்றுள்ளார். பார்க்கவேண்டிய படம். பார்த்து விவாதிக்கவேண்டிய படம்.

கருத்துகள்