மாஜிதாவின் பர்தா:பண்பாட்டுச் சிக்கலை எழுதிய புனைவு
பர்தா - கவனத்தை ஈர்க்கும் தலைப்பு.
வெளிவந்துள்ள சூழலில் இந்தக் கவனம் கிடைத்திருக்கிறது.
ஒரு பெயர்ச்சொல்லோ வினைச்சொல்லோ அதன் பயன்பாட்டில் குறிப்பிட்ட காலகட்டத்தில் கவனத்தை ஈர்க்கும் சொல்லாக மாறுவதற்குச் சூழலும் அதன் காரணிகளும் பின்னணியாக இருந்துள்ளன. அந்தச் சூழல் வரலாற்றுச் சூழலாக இருக்கலாம்; பண்பாட்டுச் சூழலாக இருக்கலாம். இன்னதென்று விளக்கமுடியாத நெருக்கடியாகவும் இருக்கலாம். பர்தா என்ற சொல் கவனம் பெற்ற சொல்லாக மாறியதில் எல்லாக் காரணங்களும் இருக்கின்றன. அதே காரணங்கள் மாஜிதா எழுதியுள்ள நாவலையும் கவனப்படுத்தியிருக்கிறது.
குழந்தைப் பிறப்பின்போது அறியப்படும் பாலடையாளத்தின் வேறுபாட்டைக் கவனத்துடன் பரிசீலனை செய்து வளர்த்தெடுப்பதில் வாழ்க்கை வட்டச் சடங்குகள் பெரும்பங்கு வகிக்கின்றன. பிறந்த குழந்தையின் நிர்வாண உடலை மூடுவதற்கான முதல் ஆடைத் தேர்வுதொடங்கி பெண்xஆண் வேறுபாடுகள் உருவாக்கப்படுகின்றன; நிலைநிறுத்தப்பட்டுள்ளன. பிறப்பு முதல் இறப்புவரை தொடரும் வாழ்க்கை வட்டச் சடங்குகளின் வேறுபாட்டால் சமயங்கள் ஒன்றையொன்று வேறுபடுத்திக்கொள்கின்றன. அவ்வேறுபாடுகளின் பின்னால் நம்பிக்கைகள் மறைந்துநிற்கின்றன. ஆண் உடலுக்கான வாழ்க்கை வட்டச் சடங்குகளும் பெண்ணுடலுக்கான வாழ்க்கை வட்டச்சடங்குகளும் வெவ்வேறானவை. ஒரே சமய நம்பிக்கை கொண்ட கூட்டத்திலும் கூடச் சடங்குகளின் வேறுபாட்டால் உட்பிரிவுகளின் வேறுபாடு அறியப்படுகின்றன.
ஒரு காலத்து நம்பிக்கைகளும் சடங்குகளும் காலமாற்றத்துக்கேற்ப வடிவமாற்றமும் வெளிப்பாட்டுநிலை மாற்றமும் பெற்றுக்கொள்ளும் நிலையில் மரபின் தொடர்ச்சியாக நிலைபெறுகின்றன. இந்நிலையைத் தாராளவாதப்போக்கு என்கிறோம். மாறாமல் நிலைநிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில் அவை அடிப்படைவாதக் கருத்தியல்கள் என விளக்கப்படுகின்றன.
வெவ்வேறு கடவுள் நம்பிக்கை, வழிபாட்டு முறைகள், புண்ணியதலங்கள் போன்றவற்றால் வேறுபட்டு நிற்கும் சமயநெறிகள், அவற்றைப் பின்பற்றும் மனிதர்கள் தங்களின் அடையாளங்களைப் பேணவேண்டும் என வலியுறுத்துகின்றன. ஆனால் வளர்ந்துவரும் தாராளவாத மனநிலை, “சமய நம்பிக்கைகளும் பின்பற்றலும் அந்தரங்க வெளிக்குரியவை; ஆகவே அந்தரங்க வெளியில் மட்டும் வேறுபடுத்திக் காட்டிக் கொண்டால் போதுமானது” என வலியுறுத்துகின்றன. ஆனால் அடிப்படைவாத நிலைப்பாடு கொண்டவர்கள் ஒவ்வொரு நிலையிலும் தங்களின் சமய அடையாளங்களை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும் என்கின்றனர். வீடு, தெருக்கள், வழிபடும் இடங்கள் என வாழிட வெளிகளிலும், உண்ணும் உணவிலும் வேறுபாடுகள் இருக்கின்றன; அவற்றைக் கைவிடக்கூடாது என்று வலியுறுத்தும் அடிப்படைவாதம் உடுத்தும் உடையில் காட்டவேண்டிய வேறுபாட்டையும் வலியுறுத்துகின்றது. அந்த வலியுறுத்தலில், ஆண் உடல்களை மறைக்க உதவும் ஆடைகளுக்கான நெருக்கடிகளைவிடப் பெண்கள் தங்கள் உடல்களை மறைக்கப் பயன்படுத்தும் ஆடைகளுக்குக் கட்டாயங்களும் வலியுறுத்தல்களும் அதிகம். இதனைப் புத்தொளிக்காலம் தொடங்கி ஐரோப்பியர் விவாதப்பொருளாக்கியுள்ளனர். இந்த விவாதங்கள், தாராளவாதப் போக்கிற்கும் அடிப்படைவாதப் போக்கிற்கும் இடையேயான நிகழ்காலத்தின் முதன்மையான முரண்பாடு. இம்முதன்மையான முரண்பாட்டில் மாஜிதாவின் ‘பர்தா’ இசுலாமிய அடிப்படைவாதத்தின் பக்கம் நிற்காமல், தாராளவாத நிலைபாட்டிலிருந்து எழுதப் பெற்றுள்ள நாவலாக அடையாளப்படுத்திக்கொண்டுள்ளது. அந்த வகையில் கவனிக்கத்தக்க நாவலாகவும் விவாதிக்கவேண்டிய நாவலாகவும் ஆகிறது. அதே நேரம் முழுமையாக அடிப்படைவாதத்தை எதிர்ப்பதாக இல்லாமல், அதற்குள் இருக்கும் அடையாள அரசியல் நோக்கையும் முன்வைத்துள்ளது என்ற வகையில் கூடுதல் கவனத்திற்குரியதாக மாறியிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
********
22 இயல்களை 120 பக்கத்திற்குள் எழுதி முடிக்கப்பட்டுள்ள பர்தாவின் கதை சொல்லும் முறை, ஒரு பெண்ணின் தன்வரலாற்றைச் சொல்லும் நேர்கோட்டு வடிவம் என்பதை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். சுரையா என்ற பெண்ணின் கதையை கிழக்கிலங்கையின் கிராமப்புறம், தலைநகர் கொழும்பு, இங்கிலாந்தின் லண்டன் என மூன்று வெளிகளில் நகர்த்திக் கதை சொல்லப்பட்டுள்ளது. இம்மூன்று வெளிகளிலும் சொல்லப்படும் கதைக்குள் முதல் பகுதியின் சொல்முறைக்கும் பின்னிரு பகுதியின் சொல்முறைக்கும் நிகழ்வுகளை வடிவமைத்திருக்கும் தன்மையில் வேறுபாடுகள் உள்ளன. கிராமிய வாழ்வின் பின்னணிகளும் அக்கிராமத்து நடைமுறைகள், உறவுகள் சார்ந்த சித்திரிப்புகளும் அவற்றுக்குள் செயல்படும் ஆண்களின் மேலாதிக்க மனப்பாங்கும் ஒரு சிறுமியின் போக்கில் ஏற்படுத்தும் கேள்விகளும் அதற்கு மேல் மூர்க்கமாக எதிர்த்து நிற்காமல் அடங்கிவிடும் இயல்பும் என நகர்த்தப்பெற்றுள்ளன. குடும்ப அமைப்புக்குள் பெண்களின் பாடுகளும் இடமும் இரண்டாம் நிலையில் இருப்பதோடு, ஆண்களின் வன்முறையான மனநிலையை ஏற்று நகரவேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதும் அவளது பார்வையிலேயே சொல்லப்பட்டுள்ளன. அதே நேரம் அவளுக்குக் கிடைக்கின்ற சலுகைகள், உரிமைகள் ஆகியனவற்றின் பின்னே அவளது படிப்பும், படிப்பின் மீது அவளது தந்தைக்கு இருக்கும் ஈர்ப்பும் பிடிமானமும் கவனமாக உணர்த்தப்பட்டுள்ளன.
இந்த உணர்தலோடும் நகர்வுகளோடும் சேர்ந்து பெண்கள் உடுத்தும் ஆடைகளின் வண்ணங்கள், வடிவங்கள் சார்ந்த வலியுறுத்தல்கள் நிகழ்கின்றன. அவர்களின் வாழிடம் சார்ந்து ஏற்படும் மாற்றங்களாக இல்லாமல், பணியின் பொருட்டு வெளிநாடுகளுக்குப் போய்வரும் ஆண்களின் வழியாக இவையெல்லாம் இசுலாமிய அடையாளங்கள்; அதைப் பின்பற்றுவதே இசுலாமியர்களாக இருப்பதின் கடமை என்பதுபோல நம்பவைக்கப்படுவதற்குள் வெவ்வெறு பின்னணியில் இருப்பவர்களின் எதிர்ப்புக்குரல்களையும் நாவல் பதிவுசெய்துகொண்டே வருகிறது. ஒரே மொழி, ஒரே பணியிடம், ஒரே ஊர் என வாழ்பவர்களில் இசுலாமியப் பெண்களுக்கு மட்டும் இந்தக் கட்டுப்பாடுகள் ஏன் என்ற கேள்வியை எழுப்பும் காட்சிகள் நாவலில் பொருத்தமாகவே உருவாக்கப்பட்டுள்ளன. அக்காட்சிகளிலும் உரையாடல்களிலும் வெளிப்படும் கோபமும் எரிச்சலும் தனிநபர்கள் மீதான எரிச்சலாகவும் அவர்களைப் பின்னின்று இயக்கும் உள்ளூர் அமைப்புகளின் மீதான கோபமாகவும் வெளிப்படுவதும் பொருத்தமாக உள்ளன. இலங்கையில் வாழும் இசுலாமியப்பெண்களின் மீது வளைகுடா நாட்டு ஆடைகள் திணிக்கப்படும் நடைமுறையைத் தர்க்கரீதியாகவும் இயலாமையோடும் சொல்லிச்செல்கிறது நாவல்.
இசுலாமியர்கள் அதிகம் வாழும் கிழக்கிலங்கைப் பகுதியை விட்டு வெளியேறும் காலம் வரை நாவல் தரும் வாசிப்பனுவம் தடைகளற்ற இயல்புநவிற்சித்தன்மையோடு நகர்ந்துள்ளது.ஒவ்வொரு இயலிலும் உண்டாக்கப்பட்டுள்ள சின்னச்சின்ன நிகழ்வுகளுக்கு ஒரு தொடக்கம், முரண், அதற்கொரு உச்சநிலை, அதன் தொடர்ச்சியில் ஒரு நகர்வு எனக் கச்சிதமான வடிவமைப்பைக்கொண்டுள்ளது. லண்டனுக்குப் போய்விட்டுத் திரும்பிவந்து கிராமத்து வெளியில் ‘எல்லாமே மாறிப்போய்விட்டதே? மகிழ்ச்சியான கிராமிய எல்லைக்குள்ளான தர்க்காவை வழிபடும் வழிபாட்டு முறை காணாமல் போய்க்கொண்டிருக்கிறதே” என்ற தவிப்போடு அலையும் போதும்கூட இயல்பான போக்காகவே எழுதப்பட்டுள்ளது. இப்படி எழுதப்படுவதற்குக் காரணம் முழுமையான அனுபவங்களைச் சித்திரித்தல் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்தத் தன்மை கொழும்பு என்னும் பெருநகர வெளிக்குள் நுழைந்தவுடன் தொடரப்படவில்லை. பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் வேறுபட்ட மொழிப்பின்னணி உருவாக்கும் சிக்கல்களைத் தாண்டி, இசுலாமியப்பெண்களைக் கட்டுப்படுத்தும் மாணவர் அமைப்பின் கட்டுப்பாட்டை அவள் சந்திப்பதும், அதனை மீறத்துடிப்பதுமான முரண்பாடுகள் போதிய அளவு எழுதப்படவில்லை . ஆடைசார்ந்த விருப்பம் மட்டுமல்லாமல் வாகனம் ஓட்டுவதில் இருந்த ஆர்வம், அதற்கு எதிரான மனநிலை கொண்ட இர்பானோடு கொண்ட தொடர்பும் உறவும் மனதிற்குள் பெரும் கேள்வியாக உருவெடுக்கக் கூடிய ஒன்று. அவனோடு ஏற்படும் காதலைத் தொடர்வதில் அவனிடம் ஊடாடும் அடிப்படைவாத ஆதரவு எழுப்பியிருக்கக் கூடிய மனப்போராட்டம் நாவலில் போதிய அளவுஇடம்பெறவே இல்லை. காதலுக்காகவும் திருமணத்திற்காகவும் யார் விட்டுக்கொடுத்தார்கள் என்பதைச் சொல்லாமல் நாவல் தாவிச்சென்றுள்ளது.
அந்த முரண்பாட்டிற்குள் நுழைந்து நிகழ்வுகளை விரிக்காமல் வெளியேறியிருக்கிறார் நாவலாசிரியர் என்பதை முக்கியமான குறை என்றே நினைக்கிறேன். இசுலாமியப் பெண்கள் அல்லாத மாணவிகளின் இயல்புகளோடு தன்னை நிறுத்தித் தானே விசாரித்துக்கொள்ளும் வாய்ப்புகளும் சுரையாவுக்கு உண்டு. உயர்கல்வியின் பொருட்டுப் பெருநகரவெளியில் – பல்கலைக்கழக வளாகத்தில் கிடைத்திருக்கக் கூடிய சுதந்திர உணர்வையும் மகிழ்ச்சியையும் தடுக்கும் பண்பாட்டு ஆடையாக இருந்த பர்தாவையும் அதன் ஆதரவு அமைப்பான மஜ்லீஸ் போன்ற இசுலாமிய மாணவர் அமைப்புகளையும் குறித்துக் கடும் கோபம் இருந்த நிலையில் எப்படித்தாண்டிக் கடந்தாள் என்ற விசாரணைக்குள் நாவல் நுழையவில்லை.
கொழும்பு பல்கலைக்கழக வெளியில் எழுதப்படவேண்டிய நிகழ்வுகள் எழுதப்படவில்லை என்பதைக் குறையாகச் சொல்லும் அளவிற்கு லண்டனை நிகழ்வு வெளியாகக் கொண்ட பகுதியைச் சொல்லமுடியாது. ஆனால் தாராளவாதக் கருத்தியலையும் பெண்ணுரிமைச் சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகப் பாவனை செய்யும் ஐரோப்பிய நாடுகளில் உருவான அடிப்படைவாதப் போக்கொன்றை நாவலுக்குள் விவாதப்படுத்தும் வாய்ப்பு கைவிடப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். தேச எல்லைகளைக் கடந்து வெள்ளையர்களை ஏற்றுக்கொள்ளும் ஐரோப்பியர்கள் ஆசியர்களையும் வளைகுடா நாட்டு இசுலாமியர்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. நிறபேதம் காட்டுவதன் வழியாகவும் இனத்துவேசம் பேசுவதின் வழியாகவும் ஐரோப்பிய மையச் சிந்தனை கொண்டவர்களாக மாறிச் சில பத்தாண்டுகள் ஆகியுள்ளன. கடும் உடல் உழைப்பைத் தரத்தயாராக இருந்தவரை இவர்களை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய மனநிலை மெல்லமெல்ல மாறி வெறுப்பு நிலைக்கு நகர்ந்துள்ளது. அதன் வெளிப்பாடான நிகழ்வொன்றையே நாவல் உச்சநிலைக்காட்சியாக வைத்துள்ளது. என்றாலும் இசுலாமிய விரோத மனப்பான்மையின் வரலாற்றுப் பின்னணியைக் காட்டும் கூடுதல் நிகழ்வுகளை நாவலில் இடம்பெறச் செய்திருக்கலாம்.
மதம், மொழி, நிறம், வர்க்கம் எனவேறுபாடுகளை முன்வைத்து மனிதர்களை ஒதுக்கும் வாழ்க்கை முறையைக் கைவிட்டு மெல்லமெல்ல எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும் மனிதநேய வாழ்நிலை நோக்கி நகர்ந்த ஐரோப்பிய வாழ்வில் உருவான இனவேறுபாடு சார்ந்த அடிப்படைவாத நிகழ்வுகளைத் தனது நாவலுக்குள் இடம்பெறச் செய்திருந்தால், மாஜிதாவின் நாவலுக்கு நிகழ்கால உலகப்பார்வை ஒன்று கிடைத்திருக்கும். அதைத் தவறவிட்டிருக்கிறார். அதற்குள் நுழையாமல் தடுத்தது பர்தா என்ற ஒற்றைப் பரிமாணத்தை மட்டும் பேசினால் போதும் என்று நினைத்ததே காரணம் என்று தோன்றுகிறது. அதே நேரம், ஐரோப்பாவில் தோன்றியுள்ள அடிப்படைவாதப் போக்கினால் தான் பூங்காவில் ஏற்பட்ட அவமதிப்பிற்குப் பின்னும் தனது அடையாளமான ‘பர்தா’வைக் கைவிடத் தயாரில்லை என்பதாகக் காட்டியுள்ளார் என்றும் தோன்றுகிறது. அந்த நிலையில் பர்தா, அரசியல் அடையாளத்தின் குறியீடாக மாறியிருக்கிறது.
*******
பர்தா, புர்க்கா, ஹபாயா, ஹிஜாப் என ஒலிக்கும் சொற்கள் தமிழ்ச் சொற்கள் அல்ல. ஆனால் தமிழ் பேசும் இசுலாமியர்கள் வாழ்க்கையின் பகுதியாக மாறிக்கொண்டிருக்கும் சொற்கள். ஒரு கூட்டத்தின் வாழ்க்கைப் பகுதியாக மாறும் நிகழ்வுகள் மெல்லமெல்லப் பண்பாட்டு அடையாளங்களா க மாறுகின்றன. பண்பாட்டு அடையாளங்கள் சமயநம்பிக்கைகளாகவும் சடங்குகளில் பின்பற்ற வேண்டிய விதிகளாகவும் மாறிவிடும் நிலையில் சமயநெறிகளாக ஏற்கப்படுகின்றன. சமயநிறுவனங்கள் வலியுறுத்தும் இத்தகைய நடைமுறைகள் தனிமனிதர்களின் சுதந்திரத்திற்கும் விடுதலை உணர்வுக்கும் பெருந்தடைக்கற்களாக இருக்கின்றன என்று விமரிசனத்தை எதிர் கொள்கின்றன. பர்தா இசுலாமியப் பெண்களின் நடைமுறை வாழ்க்கையில் பெருந்தடைகளை ஏற்படுத்தும் ஆடை என்பதை மாஜிதா போன்று இசுலாமியச் சமயவெளிக்குள் இருப்பவர்கள் சொல்லும்போது அதற்குரிய பொருத்தத்தை மறுக்க முடியாது. அதே நேரம் குறிப்பிட்ட சூழலில் – நாட்டில் – ஆட்சியதிகாரமும் பெரும்பான்மைப் பண்பாடும் தரும் நெருக்கடியான சூழலில் அதே ஆடைகள் தங்களின் தனியடையாளத்தைத் தக்கவைப்பதற்கான போராட்டக்கருவியாக ஆகும் என்பதும் நிகழ்கால உண்மை.
இந்திய இசுலாமிய மாணவிகளுக்கு ஹிஜாப் அணியத் தடை என்றொரு சட்டம் வந்தபோது உருவான எதிர்ப்புணர்வையும் போராட்டங்களையும் இப்போது நினைத்துக்கொண்டால் இது புரியவரும். ஒரே ஆடை அடிமைத்தனத்தின் அடையாளமாகவும், எதிர்ப்புணர்வின் ஆயுதமாகவும் இருப்பது நமது காலத்தின் சுவையான முரண். பின் நவீனத்துவம் இத்தகைய சுவையான முரண்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அதனை உள்வாங்கி எழுதும் எழுத்துகள் நமது காலத்தின் எழுத்துகளாகக் கொண்டாடப்படும்.
*********
விவாதப்பொருள் சார்ந்து கவனம்பெற்றுள்ள பர்தா, நாவலின் வடிவம் மற்றும் சொல்முறைமை சார்ந்து முழுமையாக இல்லை என்பதைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. பொதுவாகப் பிரச்சினையைப் பேசும் நாவல்களில் இத்தகைய குறைகள் இருக்கவே செய்யும். வடிவ நேர்த்தி கொண்ட சிறுகதைகளை எழுதிய மாஜிதாவுக்கு இது முதல் நாவல் ;இனி எழுதும் நாவல்களில் இந்தச் சிக்கல்கள் உருவாகக் கூடாது என்பதால் சுட்டிக்காட்டல் தவறில்லை.

கருத்துகள்