பத்துத்தலெ :


இவையெல்லாம் குற்றச்செயல்கள், வெளிப்படும்போது தண்டனைகள் உண்டு எனத் தெரிந்தபின்னும் திட்டமிட்டுச் செய்யும் செயல்களுக்குப் பின்னால் எதிரெதிர்க் கூட்டணிகளின் மறைமுக ஒப்பந்தங்கள் இருக்கவே செய்யும்.மறைமுக ஒப்பந்தங்களைக் கதைப்பின்னலின் ரகசிய முடிச்சுகளாக மாற்றிக் குற்றக்குழு மோதல் ( Gang war )படங்கள் உருவாக்கப் படுகின்றன. ஒவ்வோராண்டும் எடுக்கப்படும் இருபத்திச் சொச்சம் குற்றக்குழு மோதல் படங்களில் ஒன்றாகவே அண்மையில் வந்த ‘பத்துத்தல’ யும் கணிக்கப்பட வேண்டிய படம்.

வளர்ச்சியடையும் பெருநகரப்பின்னணியில் செயல்படும் குற்றக்குழுக்களை இயக்கும் தாதாக்களை,நகரத்தின் மையத்திலிருந்து எல்லாவகையிலும் ஒதுக்கப்படும் விளிம்பு மனிதர்களின் துயர் துடைப்பவர்களாக - காட்பாதர்களாக - நாயகன்களாகக் காட்டும் இவ்வகைப்படங்களின் வணிக வெற்றிச் சூத்திரங்களில் ஒரு பொதுத்தன்மை உண்டு. குறிப்பான வெளிகளில் நடக்கும் நிகழ்வுகள் இவை என்பதான காட்சிப்படுத்துதல்களே அப்பொதுத்தன்மை. அப்பொதுத்தன்மைக்குள் அறியப்பட்ட மனிதர்களின் சாயல்கொண்ட பெயர்கள், வாழ்க்கை நிகழ்வுகள் போன்றனவற்றைக் காட்சிப்படுத்திக் கூடுதல் நம்பகத்தன்மையை உண்டாக்குவார்கள். மணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ படத்தின் காட்சிவெளி பம்பாய் நகரத்தின் புறநகர்ப்பகுதிகள். அதில் கமல்ஹாசன் ஏற்ற வேலுநாயக்கர் பாத்திரம் தமிழ்நாட்டிலிருந்து போய் அங்கு செயல்பட்ட வரதராஜமுதலியாரின் அறியப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டிருந்தது.
*****
கன்யாகுமரி மாவட்டம் என்ற குறிப்பான வெளியில் பாத்திரங்களை உருவாக்கிக் காட்டியுள்ள பத்துத்தல அதை மட்டுமே செய்துள்ளது. அம்மாவட்டத்தில் கடலோர மணல்குவாரிகள், மலைப் பாறைகளை உடைத்து விற்கும் கல்குவாரிகள் எனக் காட்சிப்படுத்தினாலும் மையப்பாத்திரமான ஏஜேஆரோ, அவரது குடும்பப்பாத்திரங்களோ அம்மாவட்ட அரசியல்வாதிகளைக் கொஞ்சமும் நினைவூட்டாமல் கற்பனையாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கற்பனைக் கதைப்பின்னல் வழியாக மாவட்டப் பின்னணி என்ற அடையாளத்தைத் தவறவிட்டு மாநில அரசியலின் அதிகாரப்போட்டி என்ற கதைப்பின்னலுக்குள் நகர்ந்துள்ளது. முதல்வராக முயலும் இந்த அதிகாரப் போட்டி, தமிழ்நாட்டு அரசியலில் எப்போதும் நடக்காத கற்பனையாக இருப்பதால் மொத்தக் கதைப்பின்னலும் நம்பத் தகுந்த கதைப்பின்னலாக அமைந்து பார்வையாளர்களை விலக்கிவிடும் வேலையைச் செய்திருக்கிறது.
 
இதற்குப் பதிலாக மாவட்ட அளவில் நடக்கும் கட்சி அரசியல் நகர்வுகளை நினைவூட்டி, அதிகாரத்தின் பாதை கொலைகளின் பாதை எனக் காட்டியிருந்தால் நம்பத்தக்கதான சினிமாவாக ஆகியிருக்கும். குற்றக் குழுக்கள் செய்யும் சட்டமீறல்கள், விதிமீறல்கள் போன்றன தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திற்கு மட்டும் உரியன அல்ல. அதேபோல் ஆளும் -எதிர்கட்சிகளுக்குள் நடக்கும் அதிகாரப்போட்டிக்குப் பின்னால் இருக்கும் சாதியப் பகைமைகளையும் கோடிகாட்டியிருந்தால் கூடுதல் நம்பகத்தன்மை ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.
 
இதையெல்லாம் செய்யாமல், “நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லெ” என்ற நாயகன் படத்தின் ஒற்றைவரிச் சொல்லாடல் போல, ‘நல்லதுசெய்யக் கெட்ட முகம் ஒன்னு தேவைன்னா அந்த முகம் எனது முகமாகவே இருக்கட்டும்’ என்ற ஒற்றை வரிச்சொல்லாடல் - அடிக்கருத்து மேல் நாயகனின் நகல்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற படங்கள் தொடர்ந்து தமிழில் வந்து கொண்டிருக்கின்றன. 

இத்தகைய படங்களுக்கு உள்ளூர் அரசியலிலிருந்து உலக அரசியல் வரை எல்லாமே புனைவுதான்; கற்பனைதான். ரத்தங்கொப்பளிக்கும் வன்முறைக் காட்சிகளை வேடிக்கை பார்க்கும் மனிதக்கும்பலாகப் பார்வையாளர்களை மாற்றும் நோக்கம் கொண்ட சினிமாக்காரர்கள், அளவுக்கதிகமான சண்டைக்காட்சிகளால் படத்தை நிரப்புகிறார்கள். ஊழலும் விதிமீறல்களும் சாதாரணமானவை எனக் கடந்துசெல்லத்தூண்டுகிறார்கள். காட்சித் தொடர்ச்சியில் எந்தவிதத்திலும் பொருந்தாத குழுப்பாடல்களில் மரபுக்கலைகளின் ஆட்ட அசைவுகள், ஆடையாபரணங்கள் போன்றவற்றைத் திணிக்கிறார்கள். பார்வையாளர்கள் இவற்றைத் தனித்தனியாகத் தொலைக்காட்சிகளிலும் யூ ட்யூப்புகளிலும் பார்த்துவிட்டு ஒட்டுமொத்தப் படத்தைப் புறக்கணிக்கிறார்கள்.

ஒரு சினிமா உருவாக்கும் நம்பகத்தன்மை என்பது படத்திற்குள் உருவாக்கப்படும் இடத்தோடும் காலத்தோடும் தொடர்புடையது.பத்துத்தலையில் காலப்பின்னணியால் உருவாக்கிய நம்பகத்தன்மையை இடப்பின்னணி கெடுத்துவிடுகிறது
********
பத்துத்தலை ராவணன் என்பது ஒரு நீண்டகாலத் தொன்மம். ராமாயணத்தின் எதிர்ப்பாத்திரம். அதனைத் தமிழ்நாடு எப்படி உள்வாங்கியது என்பதற்கு ஒரு மாற்று வரலாறு இருக்கிறது. ராமனைக் கொண்டாடும் இந்தியப் பெருமிதங்களுக்கு மாறாக ராவணனைக் கொண்டாடும் தமிழ்ப் பெருமிதம், ராவண காவியம் எழுதிப் பேசிய மாற்று வரலாறு உண்டு. கம்பரசத்தையும் நீதிதேவன் மயக்கத்தையும் உருவாக்கிய திராவிட இயக்கப் பார்வை முன்வைத்த ஆளுமை ராவணன். திராவிட இயக்கம் உருவாக்கிய ராவணன் மட்டுமல்லாமல் இடதுசாரிகளும் ராவணனை நேர்மறைத்தன்மையோடு அணுகுகியிருக்கிறார்கள். ஜீவாவின் வழிவந்த கவிஞர் பரிணாமன் எழுதிய புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று இப்படித்தொடங்கும்:

”பத்துத்தலெ ராவணனெ ஒத்தத்தலெ ராமன் வென்றான்
மொத்தத்தலெ வீரம் வேணும் சொடலை மாடா.. அந்த
வித்தைகளெ கத்துக்காமெ சத்தியத்தெ ஒத்துக்காமெ
கத்தினா போனதெல்லாம் கெடைக்குமாடா சொடலை மாடா...”
 
முழுப்பாடலையும் இப்போது கூட ‘யூ ட்யூப்’ தொகுப்புக்குள் கேட்கலாம் கோட்டைச்சாமி பாடிய நாட்டுப்புறப் பாடலாக உள்ளது(பின்னூட்டத்தில் இணைப்பு உள்ளது).
 
ராவணனின் பத்துத்தலைகளின் ஆகக் கூடிய சக்தியை எதிர்மறைத் தன்மையிலிருந்து நேர்மறைத் தன்மையில் மாற்றி நிலைநிறுத்த நினைத்திருந்தால் இயக்குநர் படத்திற்குள் இரண்டு மூன்று அடுக்குகளை உருவாக்கியிருக்க வேண்டும். கர்ணன் தொன்மத்தைத் தளபதியாக்கிய மணிரத்னம் அதைச் செய்திருப்பார். அதற்கு இப்படத்தில் கவி.மனுஷ்யபுத்திரனை நடிக்க வைத்ததற்குப் பதிலாகத் திரைக்கதையாக்கத்தில் வேலை செய்யச் சொல்லியிருக்கலாம். நல்ல பாடல்களையும் வசனத்தையும் எழுதி வாங்கியிருக்கலாம். அவர் நடித்திருக்கிறார் என்பதற்காகவே இணையவெளிக்கு வந்தவுடன் பார்த்தேன்.

-------------------------------------------------------------------------------------------------------

https://www.youtube.com/watch?v=zLMTyB9I_tI&ab_channel=Nattupurapattu

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாயக்கர் கால இலக்கியங்கள் சமுதாய வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்வதற்கான முன் தேவைகள்

நாயக்கர் காலம். இயல்.2.பொருளாதார நிலைகளும் உறவுகளும்

மேல்நோக்கியும் கீழ்நோக்கியும்