நாயக்கர் காலத்தில் தமிழுணர்வு

தமிழக வரலாற்றைக் கவனித்தால் தமிழ் உணர்வு, தமிழ்ப்பற்று என்ற வடிவங்களில் தமிழ்மொழி சமூகத்தன்மை பெற்று, சில காலங்களில் உயர்ந்த குரலிலும், சிலபோது தாழ்ந்த குரலிலும் ஒலித்து வந்துள்ளது என்பதை உணர முடிகின்றது. தமிழகத்தில் கி.பி. 1529 இல் தொடங்கி 1732இல் முடிவுற்ற காலப்பகுதியில் ஆட்சியாளர்களாக இருந்த நாயக்கர்களின் காலத்தில் எழுதப்பட்ட தமிழுணர்வின் அரசியல், சமூக, பொருளாதாரக் காரணங்களை ஆய்வு செய்வதன் மூலம், இத்தகைய குரல்களின் நோக்கத்தினையும் விளைவுகளையும் கண்டறிய முடியும். இந்நோக்கத்திற்கு அக்கால இலக்கியங்கள் தவிர்ந்த பிறவரலாற்று மூலங்களும் உதவக் கூடும் என்றாலும் பண்பாட்டுத்துறைகளில் ஏற்படும் நிகழ்வுகளை இலக்கியம் தற்போக்கில் படம் பிடிக்கக் கூடிய கருவியாக இருந்து வந்துள்ளது என்பது உண்மை.