திறனாய்வு அணுகுமுறைகள் என்ன செய்கின்றன

பனுவல், வாசிப்பு,  திறனாய்வுப்பார்வை, திறன்கள், உள்ளடக்கக் கூறுகள், வடிவக்கூறுகள், வெளிப்பாட்டுநிலை, விளக்கங்கள், விவாதங்கள், முடிவுகள், வழிகாட்டல்கள், கலைஞர்களை உருவாக்குதல், மனிதத்தன்னிலைகளை மாற்றுதல் எனத் திறனாய்வு அணுகுமுறைகளுக்கு ஒரு சங்கிலித்தொடர் வினைகள் இருக்கின்றன. இத்தொடர் வினைகளைப் பின்வரும் திறனாய்வு அணுகுமுறைகள்: 

மார்க்சியத்திறனாய்வு
அமைப்பியல் திறனாய்வு
பெண்ணியத்திறனாய்வு
தலித்தியத்திறனாய்வு
பின் காலனியத்திறனாய்வு
எவ்வாறு கையாளுகின்றன என்பதை மட்டும் இங்கே விளக்கலாம்.

மார்க்சியத்திறனாய்வு 
திறனாய்வுக்குரிய கலை இலக்கியப்பிரதியை என்னவாகப் பார்க்கிறது என்பதைக் கொண்டு ஒரு திறனாய்வு அணுகுமுறை உறுதி செய்யலாம். அப்படிப்பார்ப்பதற்கு ஒவ்வொரு அணுகுமுறையும் சில முறையியல்களைப் பின்பற்றிப் பிரதிகளுக்குள்ளிருந்து தகவல்களைக் கண்டறிந்து பிரித்தும் தொகுத்தும் நிரல்படுத்தியும் வைக்கின்றன. மார்க்சியத் திறனாய்வு அணுகுமுறை கலை இலக்கியப் பிரதியின் உள்ளடக்கத்தையும் அதற்குள் கிடைக்கும் தகவல்களையும் அதனை உருவாக்கித் தரும் ஆசிரிரையும் இரண்டாகப் பிரித்துக்காட்டி விவாதங்களை உருவாக்குவதை முதன்மையான வேலையாக நினைக்கிறது. 

ஒருபிரதியில் வெளிப்படுவன (வெளிப்படை அல்லது மேல்தளம்) இவை எனவும், அடியில் மறைந்திருப்பன (உள்ளோட்டம் அல்லது மறைப்பு) இவை எனவும் பிரித்துக்காட்டுவதைச் செய்யும் இத்திறனாய்வு அணுகுமுறை, வெளிப்படையாகத் தெரிவன மேற்கட்டுமானத்தின் கூறுகள் எனச் சொல்கிறது. அக்கூறுகள் தனிமனிதர்களின் அன்றாட நடவடிக்கைகளையும் அவற்றிற்குப் பின்னிருக்கும் மன விருப்பங்களையும் சொல்வனவாக இருக்கும். உண்பது, உறங்குவது, வேலை செய்வது போன்றவற்றைப் பேசுவதில் தொடங்கிக் காதல், காமம், குடும்ப அமைப்பு உருவாக்கம் என வெளிப்படும். தனிமனிதர்களின் அகம் சார்ந்த நுண்ணலகு நிறுவனங்களின் உறுப்பினர்களாக அமையும் பிரதிகளில் இலக்கியங்களில் இவ்வெளிப்பாடு கூடுதலாக இருக்கும். இதற்கு மாறாக மனிதர்களைப் பேரலகு நிறுவனங்களின் உறுப்பினர்களாகக் காட்டும் பிரதிகளில் -தனிமனிதர்கள் குடும்ப உறுப்பினரல்லாத மற்றவர்களோடு கொள்ளும் உறவுகளாக வெளிப்படும் பிரதிகளில் கருவிகளைக் கையாள்வதில் தொடங்கித் தேச உருவாக்கம் வரை நீளும்.

இந்தவெளிப்பாடுகள் எல்லாவற்றின் அடியோட்டமாக இருப்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் உற்பத்திமுறையும், உறவுகளும் பங்கீடும், பங்கீட்டில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுமே எனக் கருதுவது மார்க்சியம். இதனை அப்படியே ஏற்றுச் செய்யப்பட்ட திறனாய்வுக் கட்டுரைகளைத் தமிழில் வாசிக்க வேண்டுமென்றால் கோ.கேசவனின் மண்ணும் மனித உறவுகளும் நூலின் கட்டுரைகளை வாசிக்கலாம். அவரின் பள்ளு இலக்கியம் – ஒரு சமூகவியல் பார்வை என்ற நூலும்கூட அதே முறையியலையும் அணுகுமுறையையும் கொண்டதுதான்.

மார்க்சியத்தை உள்வாங்கிய இலக்கியத்திறனாய்வு அணுகுமுறை பின்பற்றும் இரண்டாவது பார்வையாகச் சொல்வது வர்க்கப்பார்வையின் கோணம் ஆகும் . பனுவல்களின் உள்ளே மறைந்திருக்கும் பேசுபொருள்கள் 
பெரும்பாலும் வர்க்கப்போராட்டம், சமூகவளர்ச்சியின் காரணிகள், ஒருவகை உற்பத்தி உறவிலிருந்து இன்னொருவகை உற்பத்தி உறவிற்கு நகரும் நிலையைச் சொல்வதாக இருக்கும் என்ற கருதுகோளை ஏற்றுக்கொண்ட கோணமாகும். மார்க்ஸும் எங்கல்ஸும் நிலவுடைமையிலிருந்து இயந்திர முதலாளித்துவத்திற்கு நகர்தலின் இயங்கியலை விளக்கியதைக் கொண்டு ஐரோப்பிய மார்க்சியத் திறனாய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை எழுதினர். ஐரோப்பிய இலக்கியங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் பேசியதைப் பின்பற்றிப் பல மொழிகளிலும் மார்க்சியத் திறனாய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளனர். தமிழில் இவ்வகைப் பார்வையிலிருந்து எழுதப்பெற்ற நூலாகத் தொ.மு.சி. ரகுநாதனின் இளங்கோவடிகள் யார் என்னும் நூலைச் சொல்லலாம். இந்திய தேசியப்போராட்டமும் அதற்குள் இருந்த மிதவாத, தீவிரவாதக் கருத்தியல்களுமே பாரதி என்னும் கவிஞனைப் புரட்சிகரக் கருத்துகளைப் பேசிய எழுதிய கவிஞனாக ஆக்கியது எனஆதாரங்களோடு பேசும் பாரதி : காலமும் கருத்தும் என்ற அவரது நூலையும் இன்னொரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம் 
இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், கல்கி போன்றவர்களின் புனைகதைகளுக்குள் இருந்த வர்க்கச் சார்பையும் அவ்வர்க்க அழகியல் கூறுகளையும் எடுத்துக் காட்டி விவாதித்த தி.சு.நடராசன், எஸ்.தோதாத்ரி போன்றவர்களின் கட்டுரைகளை வாசித்தால் இந்தப் போக்கை விரிவாகப் புரிந்துகொள்ளமுடியும்


ž ஒருமொழியில் தோன்றும் இலக்கியவகைமையை அந்தக் காலகட்டத்து உற்பத்திமுறை மற்றும் உறவுகளின் சிக்கலோடு இணைத்துவைத்துப் பேசுவது மார்க்சியத்திறனாய்வின் மூன்றாவது போக்கு.நாவல் இலக்கியத்தை நடுத்தரவர்க்கத்தின் தோற்றத்தோடு இணைத்துப் பேசும் ஐயான் வாட்டின் நிலைபாட்டை அப்படியே ஏற்றுக் க. கைலாசபதி தமிழ்நாவல் இலக்கியம் என்னும் நூலை எழுதியுள்ளதை நினைவில் கொள்ளலாம். கா.சிவத்தம்பியின் இலக்கணமும் சமூக உறவுகளும், சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் என்னும் அ.மார்க்சின் நூலைக் கூறலாம். துன்பியல் நாடகங்களை மன்னராட்சியின் அல்லது நிலப்பிரபுக்களின் வீழ்ச்சியோடு இணைத்துப்பேசுவதும், கதைப்பாடல்களைக் கிராமப்புற, வளர்ச்சியடையாத நகர்ப்புற உழைக்கும் வர்க்க இலக்கிய வகைமையாகக் காண்பதும் இப்போக்கின்வெளிப்பாடுகளே. நா.வானமாமாலையின் கதைப்பாடல்களும் சமூகமும் என்ற நூலின் கட்டுரைகள் இத்தகையன

கலை, இலக்கியப் பனுவல்களைக் குறிப்பிட்ட காலகட்டத்துச்  சமூகத்தின் நுகர்பொருளாகக் கருதி விமரிசிப்பது நான்காவது போக்கு. இதுவே பின்னர் மார்க்சியத்திறனாய்வின் பகுதியிலிருந்து பிரிந்து பண்பாட்டுப் பொருள்முதல்வாதம் என்பதாக மாறியது. பண்பாட்டுப் பொருள்முதல்வாதம் இலக்கியப்பிரதியையும் இலக்கியமல்லாத பிரதிகளையும் ஒன்றாகவே – நுகர்பொருளாகவே கருதும் நிலைப்பாடு கொண்டது. வெகுமக்கள் கலை, தீவிரமான கலை என்ற பாகுபாடுகளை நிராகரிப்பது இதன் வெளிப்பாடு

ஓர் இலக்கியப்பனுவலை அரசியல் பிரதியாக மட்டுமே வாசிப்பது ஐந்தாவது போக்கு. ஒவ்வொரு இலக்கிய வடிவமும் வெளிப்பாடுகளும் அரசியல் சூழலால் தீர்மானிக்கப்படுகின்றன என்ற கருதுகோளின்மேல் உருவாகும் இந்தப் பார்வை நடப்பியல் போக்கை மாற்றத்தை விரும்பாதவர்களின் பாணியாகச் சொல்லும். உணர்ச்சிப்பாடல்கள், முன்மொழிவுக் கவிதைகள் போன்றன சமூகத்தை அதன் இயல்பை ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கம் கொண்டன எனப் பேசுவது இதன் தன்மை.

மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள் வர்க்க மோதல்களின் பிரதிநிதித்துவம் மற்றும் இலக்கியத்தின் ஊடாக வர்க்க வேறுபாடுகளை வலுவூட்டுவதை மையமாகக் கொண்டுள்ளன. மார்க்சியக் கோட்பாட்டாளர்கள் இலக்கியப் பகுப்பாய்வை மரபான நுட்பங்களோடுதான் பயன்படுத்துகின்றனர், அதே நேரம் இலக்கியத்தின் சமூக மற்றும் அரசியல் அர்த்தங்களுக்கு நிறைவான அழகியல் அக்கறைகளை பயன்படுத்த வேண்டுமெனவும் விரும்புகின்றனர். மார்க்சிச தத்துவவாதி பெரும்பாலும் முதலாளித்துவ சமூகங்களில் காணப்படும் பொருளாதார சமநிலைகளை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின்பால் பரிவுகொண்ட ஆசிரியர்களுக்குத் தங்கள் ஆதரவைக் காட்டுபவர்களாக இருக்கின்றனர்.

மார்க்சியத்திறனாய்வு, எப்போதும் இலக்கியக் கோட்பாடுகள் பொருளாதார உற்பத்தி மற்றும் இலக்கியங்களுக்கிடையிலான உறவைப் புரிந்து கொள்ளும் புதிய வழிகளை முன்வைத்துக் கொண்டே இருக்கின்றது. கலாச்சார உற்பத்தி. சமூகம் மற்றும் வரலாற்றின் மீதான மார்க்சியப் பகுப்பாய்வு இலக்கியம், தத்துவம் மற்றும் நடைமுறை விமர்சனங்கள் ஆகியவற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை நாம் மறுக்க முடியாது, குறிப்பாக "புதிய வரலாற்றுவாதம்" மற்றும் "பண்பாட்டுப் பொருள்முதல்வாதம்" ஆகியவற்றின் வரவுக்குப் பின், வரலாற்றுச் சட்டகவாதம் முதன்மையாக இல்லாமல், இலக்கிய வடிவத்திற்கும் சமூகத்தின் இயங்கியலுக்குமான புரிதலைக் குறிப்பாகப் பேசுவதில் பங்களிப்பு செய்துள்ளது.

ஹங்கேரிநாட்டைச் சேர்ந்த மார்க்சியக் கோட்பாட்டாளர் ஜார்ஜ் லுக்காஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திற்கும் இலக்கிய வடிவங்களின் தோற்றத்திற்குமுள்ள உறவை விளக்குவதில் பங்களித்தார். நடப்பியல் நாவல் மற்றும் வரலாற்று நாவலின் தோற்றக்காரணிகள் குறித்த அவரது கருத்துகள் முக்கியமானவை. வால்டர் பெஞ்சமின் அழகியல் மற்றும் கலைப் பொருட்களை உற்பத்தியாகப் பார்க்கும் பார்வையை மறுபரிசீலனை செய்யவேண்டுமெனக் கூறினார். 

மார்க் ஹொர்க்ஹெய்மர், தியோடோர் அடோர்னோ மற்றும் ஹெர்பர்ட் மார்குஸ் போன்ற பிராங்போர்ட் மார்க்சியப்பள்ளியைச் சேர்ந்தவர்கள், தங்களின் அமெரிக்கக் குடியேற்றத்துக்குப் பின் அமெரிக்காவின் கல்விப்புலப்பார்வையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்களிப்பு செய்தனர். மார்க்சியத்திறனாய்வுப் பார்வையைப் பண்பாட்டுக் கோட்பாடு என மாற்றிய அவர்கள், வெகுமக்கள் பண்பாட்டை உருவாக்கும் அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்துவதற்கான கோட்பாட்டை முன்வைத்தனர். ஐரோப்பாவின் உயர்ந்த கலாச்சார பாரம்பரியத்திற்கும் முதலாளித்துவ சமூகங்களால் ஆளப்படுவதின் கருவியாக உற்பத்தி செய்யப்படும் வெகுமக்கள் பண்பாட்டிற்குமிடையேயான வேறுபாட்டை இவர்களின்"விமர்சனக் கோட்பாடு" விவரித்தது.

வெகுமக்கள் பண்பாட்டு வடிவங்களான-ஜாஸ், ஹாலிவுட் திரைப்படம், விளம்பரம், தொழிற்சாலை மற்றும் பணியிடத்தின் கட்டமைப்பின் பிரதிபலிப்பு ஆகியவற்றைக் கவனப்படுத்தி ஆய்வுசெய்யவேண்டுமெனத் தூண்டின. முன்னேறிய முதலாளித்துவ சமூகங்களில் படைப்பாற்றல் மற்றும் கலாச்சார உற்பத்தி எப்பொழுதும் ஒரு பொருளாதார அமைப்புமுறையின் பொழுதுபோக்கு தேவைகளால் இணைக்கப்பட்டன. ஆனால் உணர்ச்சித் தூண்டுதல் மற்றும் அடையாளத்தை உருவாக்கி அளிக்கும் வெகுமக்கள் கலைக்கூறுகள் அனைத்துத்தரப்பின் வெளிபாட்டையும் முன்வைக்கின்றனர் என்றனர்.

பிராங்பேர்ட் பள்ளியின் முதன்மையான பங்களிப்பாளர் ரேமண்ட் வில்லியம்ஸ் மற்றும் டெர்ரி ஈகிள்டன் இவ்விருவரும் பிரிட்டானியர்கள். இவர்களோடு அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிராங்க் லாண்ட்ரிச்சியா மற்றும் ஃப்ரெட்ரிக் ஜேம்சன் ஆகியோரின் பங்களிப்பும் முக்கியமானவை. ரெய்மண்ட் வில்லியம்ஸ் கிரேட் பிரிட்டனில் தோன்றிய புதிய இடது அரசியல் இயக்கம் மற்றும் "கலாச்சார பொருள்சார்வாதம்" மற்றும் கலாச்சார ஆய்வுகள் இயக்கம் ஆகியவற்றோடு தொடர்புடையவர்..

இது 1960 களில் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் தற்காலப் பண்பாட்டு ஆய்வுகளுக்கான மையத்தை உருவாக்கியது. ஜேம்சன் ஒரு மாறுபட்ட தத்துவவாதி ஆவார், இது மார்க்சியக் கலாச்சாரம் பற்றிய தத்துவார்த்தத்திற்கும், கோட்பாட்டிற்குமான புரிதலை விரிவுபடுத்தியவர். பின்நவீனத்துவத்தின் முன்னணி நபர்களில் ஒருவராகவும் விளங்கினார். நுகர்வோர் கலாச்சாரம், கட்டிடக்கலை, திரைப்படம், இலக்கியம் எனப் பலவற்றைக் குறித்து ஜேம்சனின் எழுத்து வேலைகள் இருந்தன. ஜேம்சனின் எழுத்துகள் முதலாளித்துவத்தின் கட்டமைப்பு அம்சங்களைப் பற்றி ஆராய்ந்ததோடு எல்லாவற்றையும் நுகர்வோரின் பண்டமாகப் பார்க்கும் பார்வையை அது உருவாக்கியது

அமைப்பியல்வாதத் திறனாய்வு 

1.அமைப்பியல் வாதத்திறனாய்வு பெரும்பாலும் இலக்கியவகைகளின்- குறிப்பாக உரைநடையில் எழுதப்பெற்ற பிரதிகளுக்குள் இருக்கும் எடுத்துரைப்பு முறையைப் பகுப்பாய்வு செய்கிறது. அப்பகுப்பாய்வுக்கு அப்பிரதிக்குள் இருக்கும் அமைப்புகளையே கவனத்துக்குரியதாக நினைக்கிறது. எடுத்துக்காட்டாக

· குறிப்பிட்ட வகையான இலக்கிய வகைமையின் மரபுகள் எவ்வகை அமைப்புடையது என்பதைக் கவனிக்கிறது. அல்லது

· ஒரு பிரதிக்குள் இருக்கும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் அல்லது சிலவகைப்பட்ட அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்புகளைக் கவனிக்கிறது. அல்லது

· அப்பிரதிக்குள் மறைந்திருக்கும் பொதுநிலைப்பட்ட எடுத்துரைப்பு மாதிரியைக் கண்டுபிடித்துச் சொல்கிறது. அல்லது ஒரு எடுத்துரைப்பு மையமான நோக்கம் சிலவகையான அமைப்புகளையோ, தொன்மக் கட்டமைப்பையோ எவ்வாறு திருப்பத் திருப்பச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது என்பதைக் கவனிக்கிறது.


2. நவீன மொழியியல் மனிதர்களின் கருவியாக இருக்கும் மொழியில் எப்போதும் இணை எதிர்வுகள் உருவாக்கப்படுகின்றன எனக்குறிப்பிட்டுள்ளது. அந்த இணையெதிர்வுகளே ஒருவித அமைப்புகளை உருவாக்குகின்றன என்பதும் அதன் கண்டுபிடிப்பு. மொழியின் ஆகச் சிறிய வடிவமான உருபன்கள் எப்போதும் இணையுருபன்களின் வழியே அமைப்புகளை உருவாக்குகின்றன என்பதை லெவிஸ்ட்ராஸ் தனது முக்கியக் கண்டுபிடித்துச் சொல்லியதிலிருந்து இந்த இணையெதிர்வுக் கட்டமைப்பு மூலம் இலக்கியத்தை விளக்கம் சொல்லும் திறனாய்வு அணுகுமுறை கவனம் பெற்றது.


3. அமைப்பியல் வாதத்திறனாய்வு எல்லாவகையான பிரதிகளுக்குள்ளும் பண்பாடுகளுக்குள்ளும் குறிப்பிட்ட வகையான அமைப்புகளும் போக்குகளும் கருத்துநிலையை உருவாக்குகின்றன என நம்புகிறது. பழைமையான தொன்மங்கள் முதல் இக்கால சலவைப் பவுடர் தயாரிப்பு வரைக் காணலாம் என நம்பும் அவர்கள் ஒவ்வொரு அமைப்பும் அதன் மூலத்தைக் காட்டும் அமைப்பின் குறிகளைக் கொண்டிருக்கும் என்றும், அதனைக் கண்டுபிடிப்பதன் மூலம் விமரிசனத் தளத்தை உருவாக்க வேண்டும் என நம்புகின்றனர்.

ரோலண்ட் பார்த் என்னும் பின் அமைப்பியல் சிந்தனையாளர் பிரதிக்குள் செயல்படும் ஐவகையான குழுக்குறிகளை அடையாளப்படுத்தியுள்ளார். அவை வருமாறு.

வினைசார் குழுக்குறி (The Proairetic code): பிரதிக்குள் வினைகள் நடைபெறுவதைச் சுட்டும் குழுக்குறிகளை உருவாக்கும் உருபன்களின் அமைப்பு மூலம் இதனை உணரலாம்.( கப்பல் நடுக்கடலின் நட்ட நடுராத்திரியில் பயணம் செய்கிறது. திரும்பவும் அது பயணத்தைத் தொடங்கியது)
அறிதல்சார் குழுக்குறி (The Hermeneutic code) பிரதிக்குள் வெளிப்படும் வினாக்கள் அல்லது ஐயங்கள் வழி மறைபொருளின் ரகசியத்தன்மை உருவாக்கப்படும். அந்த ரகசியத்தைக் கண்டறிய வேண்டி எடுத்துரைப்புப் பாதையும் அமைப்பும் உருவாக்கப்படும். (வீட்டுக் கதவைத் தட்டும்போது மாதாகோயிலின் மணி அடித்தது ஏனென்று திரும்பிப் பார்த்தான் என்ற வாக்கியத்தின் தொடர்ச்சியாக வாசகன் அந்த வீட்டில் யார் வசிக்கிறார்கள், அவர்களுக்கும் கோயில் மணிக்கும் என்ன தொடர்பு என்பதான கேள்விகளும் ஆர்வமும் உண்டாகும்).

பண்பாட்டுக் குழுக்குறி (The Cultural code) பிரதியைத் தாண்டிய ஒரு தகவலைக் கொண்டதாக அமையும் வாக்கியம் வழி உருவாக்கப்படும் எண்ண ஓட்டங்கள்.

உள்ளர்த்தம்சார் குழுக்குறி (The Semic code) பிரதி சொல்ல நினைக்கும் ஆழ்நிலைக் கருத்தோடு தொடர்புடைய குழுக்குறி(The Symbolic cod )

[Barry Peter, “Beginning Theory-An Introduction to Literary and Cultural theory” First Indian edition, 1999,Manchester University Press, Manchester and Newyork (1995)

பெண்ணியத்திறனாய்வு 

1.பெண்களால் எழுதப்பட்ட பனுவல்களைக் கண்டுபிடித்து அவற்றின் நோக்கத்திற்கேற்ப வகைப்படுத்த வேண்டியது பற்றி மறுபரிசீலனை செய்யும். 

2.பனுவல்களில் வெளிப்படும் பெண்களின் அனுபவங்களை மறுமதிப்பீடு செய்யும் 

3.பெண்களாலும் ஆண்களாலும் எழுதப்பட்ட இலக்கியப் பனுவல்களில் இடம்பெறும் பெண்பாத்திரங்களை ஆய்வுக்குட் படுத்தும் 

4.இதுவரை எழுதப்பட்டபிரதிகளில் இடம் பெற்றுள்ள பெண்பாத்திரங்கள்,' இயல்பானவர்களாக'[ nature]' குறையுடையவர் களாக' [lack]' மற்றவர்களாக' [other] சித்திரிக்கப்பட்டிருப்பதின் காரணங்களைக் கண்டறியும் கேள்விக்குட்படுத்தும். 

5.நடப்பு வாழ்க்கைக்கும், பனுவலில் காட்டப்படும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகப் பனுவலைக் கட்டுடைத்து, அதனை அரசியல் பிரதியாக முன்வைத்து, அதில் செயல்படும் தந்தைவழி ஆணாதிக்க அதிகார நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டும். 

6.இலக்கியத்திலும், சமூகத்திலும் பெண்களின் இயல்புகளை அல்லது இயல்பான பெண்களின் குணம் என்று காட்டப் பயன்படும் மொழியின் பாத்திரத்தைக் கண்டறிதல். 

7.உயிரியல் ரீதியாகவும் சமுகவியல் ரீதியாகவும் பெண்கள்,ஆண்களிலிருந்து வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மை இயல்பான உண்மையா.?அல்லது கட்டமைக்கப்பட்ட உண்மையா என்பதைக் கேள்வியாக எழுப்பி ஆய்வு செய்தல். 

8.பெண்ணிய மொழி என்பது பெண்மையைக் கொண்டாடுவதாக இருக்கும் என்பதும், அப்படிக் கொண்டாடுவது, ஆண்களுக்கும் தேவையாக இருப்பது என்பதையும் கேள்விக்குள்ளாக்குவது. 

9.ஆண் அடையாளம், பெண் அடையாளம் என்பதிற்குள் செயற்படும் சாராம்சம், குறியீடுகளை உளவியல் பகுப்பாய்வுக் குட்படுத்துவது. 

10. கறுப்பின அல்லது ஓரினப் பெண் எழுத்தில் அவர்களின் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது நிருபிக்கப் பட்டபின் வந்துள்ள ஆசிரியரின் சாவு என்னும் சொல்லாடலும் நிலைபாடுகளும் கட்டமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை என்ற கோணத்தில் ஆய்வு செய்தல். 

11.இலக்கிய விளக்கம் தரும் பொதுப்போக்குப் பார்வை அல்லது நடுநிலைப்பார்வை என்பவற்றில் இருந்து விலகி சரியான,உறுதியான கருத்தியல் அடிப்படைகளை உருவாக்குதல். 

[Barry Peter, “Beginning Theory-An Introduction to Literary and Cultural theory” First Indian edition, 1999,Manchester University Press, Manchester and Newyork (1995) 

தலித் திறனாய்வு 

1.இலக்கியத்திலும், சமூகத்திலும் தலித்களின் இயல்புகளை அல்லது இயல்பான தலித்களின் குணம் என்று காட்டப் பயன்படும் மொழியின் பாத்திரத்தைக் கண்டறிதல். 

2.சமுகவியல் ரீதியாக தலித்துகள் உள்வாங்கப்பட்டவர்களாக இருக்கிறார்களாக வெளித்தள்ளப்பட்ட வேறுபட்டவர்களாக இருக்கிறார்களா என்பதை விசாரிக்கும். இப்படி இருப்பது உண்மையா?அல்லது கட்டமைக்கப்பட்ட உண்மையா என்பதைக் கேள்வியாக எழுப்பி ஆய்வு செய்தல். 

3.தலித்துகளுக்கான மொழியொன்றைக் கண்டுபிடித்துக் கொண்டாடுவதாக இருக்கும் என்பதும், அப்படிக் கொண்டாடுவதன் தேவை என்ன என்பதை விளக்கும். 

4.தலித் அடையாளம் என்பதிற்குள் செயற்படும் சாராம்சம், குறியீடுகளை உளவியல் பகுப்பாய்வுக் குட்படுத்துவது. 

5.இலக்கிய விளக்கம் தரும் பொதுப்போக்குப் பார்வை அல்லது நடுநிலைப்பார்வை என்பவற்றில் இருந்து விலகி சரியான,உறுதியான கருத்தியல் அடிப்படைகளை உருவாக்குதல். 

6.தலித்களால் எழுதப்பட்ட பனுவல்களைக் கண்டுபிடித்து அவற்றின் நோக்கத்திற்கேற்ப வகைப்படுத்த வேண்டியது பற்றி மறுபரிசீலனை செய்யும். 

7.பனுவல்களில் வெளிப்படும் தலித்களின் அனுபவங்களை மறுமதிப்பீடு செய்யும் 

8.தலித் அல்லாதவர்களால் எழுதப்பட்ட இலக்கியப் பனுவல்களில் இடம்பெறும் தலித் பாத்திரங்களை ஆய்வுக்குட் படுத்தும் 

9.இதுவரை எழுதப்பட்டபிரதிகளில் இடம் பெற்றுள்ள தலித் பாத்திரங்கள்,'இயல்பானவர்களாக'[ nature]' குறையுடையவர்களாக' [lack]' மற்றவர்களாக' [other]சித்திரிக்கப்பட்டிருப்பதின் காரணங்களைக் கண்டறியும் கேள்விக்குட்படுத்தும். 

10.நடப்பு வாழ்க்கைக்கும், பனுவலில் காட்டப்படும் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகப் பனுவலைக் கட்டுடைத்து, அதனை அரசியல் பிரதியாக முன்வைத்து, அதில் செயல்படும் சாதியதிகாரப்படிநிலையை சுட்டிக் காட்டும். 

பின் காலனிய விமரிசனம் 

1. மேற்கத்திய இலக்கிய வகைமைகள்சார்ந்து முன்வைக்கப்பட்ட இலக்கியத்தின் பொதுத்தன்மைகளைப் பின்- காலனிய விமரிசனம் நிராகரிக்கிறது. அதன் தொடர்ச்சியாக இனம் மற்றும் மொழி சார்ந்து உருவாக்கப்படும் தேச எல்லைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் இயங்கும் பண்பாடு மற்றும் வாழ்நிலைமைகளைக் கவனத்தோடு பார்ப்பதற்கான உலகப்பார்வை சர்வதேச இலக்கியப் பொதுப் பார்வைக்கு இல்லை என்பதைத் தேடிக் கண்டுபிடித்துச் சொல்ல முயலும். 

2. உலகப் பொதுத்தன்மையை மறுதலிக்கும் பணியில் முழுமையை அடைவதற்காக மற்ற பண்பாடுகள் என்பதை உருவாக்கி அதன் மாதிரிகளைக் கட்டியெழுப்பிப் பிரதிநிதித்துவப் படுத்திக் காட்டும். 

3. ஏகாதிபத்தியமும் காலனியாதிக்க நாடுகளும் தங்களின் மேலாண்மையைத் தக்க வைக்கும் நோக்கத்தோடு அந்த நாட்டு இலக்கிய வகைகளை எவ்வாறு கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைத்தார்கள் என்பதையும், அதில் அவர்களின் குரூரமான மனம் எவ்வாறு செயல்பட்டது என்பதையும் எடுத்துக்காட்டும் 

4. குறிப்பிடத் தக்க படைப்புகளுக்குள் வெளிப்படும் பண்பாட்டு வேறுபாடுகள், பன்முகத்தன்மை ஆகியவற்றை அடையாளப்படுத்தி அவை எவ்வாறு படைப்பாக ஆக்கப்பட்டுள்ளது என்பதை வெளிக்கொணர முயற்சி செய்யும் 

5. தனிமனிதர்களுக்குள்ளும் குழுமங்களுக்குள்ளும் காணப்பட்ட பண்பாட்டுப் பன்மைத்துவத்தையும் ஊடிளையாகக் கலந்து நிற்கும் ஏற்பு நிலையையும் கண்டறிந்து அவற்றைக் கொண்டாடும் பணியைப் பின் காலனித்துவ விமரிசனம் மேற்கொள்ளும். எடுத்துக்காட்டாக காலனியாதிக்கம் ஒற்றைத் தன்மையான பள்ளிக் கல்விமுறையைத் திணித்ததற்கு மாறாக ஆதிக்கத்திற்கு முன்பிருந்த நேரத்தில் இருந்த உள்ளூர் மற்றும் வாய்மொழி மரபுக் கல்வி மற்றும் கலைகளைக் கொண்டாடுவது) 

6. பின் காலனிய இலக்கியங்களுக்கு ஏற்ற பார்வைக் கோணத்தை உருவாக்கிப் பயன்படுத்திட முயலும். அதில் முக்கிய கூறுகளாக விளிம்புநிலையை, பன்முகத்தன்மையை, கண்டுகொள்ளப்படாத மற்றமையை எடுத்துக் காட்டிப் பேசுவதோடு அவற்றுக்குள் இருக்கும் வன்மையான மாற்றங்களின் பலத்தையும் முன் வைக்கும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்